கௌரவம் (சிறுகதை)
-
விகடபாரதி
மனுஷனுக்குக்
கௌரவம்தான் முக்கியம். ராமசாமி அடிக்கடி சொல்லும் வாசகம். மனிதர் அப்படித்தான் இன்னவரை
வாழ்ந்து கொண்டிருக்கிறார். கருகருவென்று நாவல் பழ நிறம், கலையான முகம், கணீரென்ற பேச்சு,
தீர்க்கமான வாதம் என்றால் அதுதான் ராமசாமி.
திருமுல்லைவாயில்
கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே ஆள் ராமசாமிதான். விவசாயம் என்றால்
விவசாயம் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர். வேறு உபதொழில்கள் எதுவும் கிடையாது. விவசாய
கிராமத்தில் விவசாயம் பலருக்கும் பக்க வாத்தியமாக ஆன போதும் ராமசாமி அதை இன்னும் விடாப்பிடியாக
முக்கிய வாத்தியமாகவே வாசித்துக் கொண்டிருக்கிறார்.
ராமசாமியின்
சகபாடி பாண்டிமுத்து நிலத்தை விற்று விட்டு டவுனில் ப்ளாட் வாங்கிப் போட்டு விட்டார்.
விவசாயமெல்லாம் நம்ம காலத்தோடு போகட்டும். டவுன்ல ப்ளாட்டை வாங்கிப் போட்டு, காம்ப்ளக்ஸைக்
கட்டிப் போட்டா வாடகைக்கு வாடகையும் ஆச்சு, சொத்துக்கும் சொத்துமாச்சு, ரேட்டுக்கு
ரேட்டும் ஆச்சு. இருபது வருஷசத்துக்கு மின்னாடி மச்சினன் சதுர அடி நாற்பது ரூபாய்ன்னு
வாங்கிப் போட்ட எடம் இன்னிக்கு ஆயிரத்து எண்ணூறுக்குப் போவுது தெரியுமா என்று சகபாடி
திருவாசகம் பாடிக் கொண்டுதான் இருக்கிறார். ராமசாமிக்கு நாலு காணி நிலத்தை விற்கும்
மனசு வராமல் இருப்பதற்கு விவசாயம் அவரது கௌரவப் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருப்பதற்கு
அது மட்டுமே பிரதான காரணமாக இருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்பது
அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
ராமசாமியின்
மனைவி சீதாலெட்சுமி செக்க செவேல் என்று இருப்பார். இந்த நவ்வாப் பழத்துக்கு அந்தச்
செர்ரிப் பழத்தை எவ்வம்டா சோடி சேர்த்தது என்று ஊரே கிண்டல் அடிக்கும். கருப்பும் சிவப்பும்
சேர்ந்து தமிழ்நாட்டை ஆண்டதைப் போல, கருப்பும் சிவப்புமாகச் சேர்ந்து ஊரை ஆளும் அற்புத
சோடி. ஊரில் ஆதர்ச சோடி என்றால் அது அவர்கள் இருவரும்தான். ஆனாலும் காலங்கள் உருண்டோட
சந்தர்ப்ப வசத்தாலோ, சங்கட வசத்தாலோ சீதாலெட்சுமிக்கு ராமசாமி மேல் மனத்தாங்கல் அதிகமாகிக்
கொண்டே போனது.
ஊருல
அவனவனும் புள்ளைங்களுக்கு டவுன்ல எடத்தை வாங்கிப் போட்டுச் சொத்து சேர்த்து வைக்க இந்த
மனுஷன் மட்டும் இப்படி இருக்காரே என்பதுதான் சீதாலெட்சுமியின் மனத்தாங்கலுக்குக் காரணம்.
சீதாலெட்சுமி என்ன சொன்னாலும் கேட்கும் ராமசாமி இந்த ஓரு விசயத்தில் மட்டும் சரிதாம்டி
பார்ப்போம் என்று சொன்னாரே தவிர, பிடி கொடுத்தபாடில்லை. ராமசாமிக்கு ஒரு குணம் உண்டு.
சொன்னால் செய்து விடுவார். சரிதாம்டி பார்ப்போம் என்றால் அதைச் செய்ய முடியாது என்பது
அவர் பாணியிலான அர்த்தம்.
இன்னும்
பரம்பரையாக இருந்து வரும் நாட்டு ஓடு போட்ட வீட்டில்தான் வாசம். தெருவில் இருந்த அத்தனை
வீடுகளும் மச்சு வீடுகளாகி விட்டன. சீதாலெட்சுமிக்கு அதுவும் தாங்கல். அதையும் சொல்லி
சொல்லி பார்த்தார்.
இந்த
ஊர்ல நேத்து வந்தவன், முந்தா நேத்து வந்தவனெல்லாம் மச்சு வீடு கட்டிப் போட்டானுங்க.
இந்த ஊர்லேயே பரம்பரையா இருக்கோம்ங்ற வெட்டிக் கௌரவத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல.
இந்த ஊரே மாறுனாலும் இந்த ஒத்தை வீடு மட்டும் மாறாது போலருக்கு. சீதாலெட்சுமி தினந்தோறும்
பாராயணம் செய்து பார்த்தார்.
இப்படி
ஒரு வீட்டை, இப்படி ஓர் அமைப்பை இனிமே எந்தக் காலத்திலாவது எவனாச்சும் கட்டிப்புட முடியுமா?
எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்துல கட்டுனதுடி. அதெ இன்னும் புதுமை கொழையாம எப்படி
வெச்சுருக்கேன் பாரு. இதெயெல்லாம் வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்தான்னா வெச்சுக்கோ,
அப்படியே பேர்த்து எடுத்துட்டுப் போயி அங்க மியூசியத்துல வெச்சுக்கிறதுக்கு லட்சம்
கோடி கொடுப்பான். நிலை கதவு ஒவ்வொண்ணுத்தையும் பாரு. இந்த மாதிரி தைக்க இப்போ எவன்
இருக்கான் சொல்லு என்பார் ராமசாமி.
இந்த
வெட்டி பந்தா வீணா போன குண்டானுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல என்று சமீப காலமாகத்தான்
சீதாலெட்சுமியின் வாய் ராமசாமிக்கு எதிராக நீண்டது. இப்படி திடீரெனக் கிளம்பிய எதிர்ப்பேச்சில்
அவருக்கு உள்ளூர வருத்தம் இருந்தது.
ராமசாமி
சீதாலெட்சுமி தம்பதிக்கு ஒரே மகன். இவர்களின் பெயர் ராமன் சீதா என்று அமைந்த பேர் பொருத்தத்தைப்
பார்த்து மகனுக்கு குகன் என்று பெயர் வைத்த புராணக் கதையைத் தாண்டி ராமசாமியின் தாத்தாவின்
பெயரும் குகன் என்பதுதான் கேள்விப்படுபவர்கள் ஆச்சரியப்படும் செய்தி. மகனையும் தன்னைப்
போல விவசாயியாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்று பேராசை ராமசாமிக்கு. அந்த ஆசைக்குக்
குறுக்காகப் பையனை டாக்டராக்க வேண்டும், இன்ஜினியராக்க வேண்டும் என்றெல்லாம் சீதாலெட்சுமி
குறுக்கே நின்றதில்லை. மகன் குகன்தான் விவசாய நிலம் பக்கமே எட்டிப் பார்க்காமல் அரையும்
குறையுமாகப் படித்து எப்படியோ பாலிடெக்னிக்கில் சேர்ந்து இன்வெர்ட்டர், யுபிஎஸ் அமைத்துக்
கொடுப்பது, கண்காணிப்பு கேமிரா பொருத்திக் கொடுப்பது என்று வியாபாரத்தை ஆரம்பித்துத்
திருவாரூர் பக்கம் போனவன்தான், ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் வீட்டுக்கு வருவான்.
தீபாவளி, பொங்கல் என்றால் வீட்டில் பார்க்கலாம். மற்றபடி மகன் என்ன பண்ணுகிறான், ஏது
பண்ணுகிறான் என்றால், ஏதோ கரண்ட் போனா கரண்ட் கொடுக்குமாமுல்ல, வூட்டுல கேமிரா வெச்சு
வூட்டுல இருக்குறவங்க வூட்டைப் பார்க்குறாங்களாமுல்ல அதெ பண்ணிட்டுத் திரியுறான் பய.
ஏதோ கண்ட காவாளிகளோட சுத்தாம ஏதோ பொறுப்பா பார்த்துட்டு நாலு காசு சம்பாதிக்கிறானுன்னு
நானும் அவனெ கண்டுக்கல என்பார் ராமசாமி.
வாழ்க்கையில்
எல்லாமும் நல்லபடியாகவா போய்க் கொண்டிருக்கிறது? ராமசாமி மனசொடிந்து போகும் ஒரு நாள்
வந்தது. மகன் குகன் வியாபாரத்தை விரிவு பண்ண வேண்டும் என்று நின்றான். பெரிசு பண்ணணும்ன்னா
பண்ணு, அதுக்கு ஏம்டா எங்கிட்டெ வந்து நிற்கிறே என்றார் ராமசாமி. பணம் என்றான் மகன்.
அதாம் இவ்ளோ நாளு சம்பாதிச்சில்லே என்றார் ராமசாமி. அது பத்தாது என்றான் மகன்.
என்ன
பத்தாது? நீ பண்ற யேவாரமெல்லாம் காலத்துக்கும் நிக்குமாடா? விவசாயம் இருக்கே, காலத்துக்கும்
இதுதாம்டா நிக்கும். பண்ணதெல்லாம் போதும். எல்லாத்தையும் விட்டுட்டு வா. நாலு காணி
நெலம் நாலு தலைமுறைக்கும் தூக்கி நிப்பாட்டும் என்றார் ராமசாமி.
அதற்கு
மேல் ராமசாமியோடு மல்லுக்கட்ட மனமில்லாமல் மகன் சீதாலெட்சுமியிடம் போய் பத்து நிமிஷம்
பேசினவன் வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்திக் கொண்டு அந்த வருஷத்துப் பொங்கலுக்கு
வராமல் போன போது ராமசாமி உடைந்து உருக்குலைந்து போனார். ஆள் பார்ப்பதற்கு சுகர் கண்டு
இளைத்தது போல ஆகி விட்டார். எவ்வளவோ வாழ்க்கையில் தாங்கியிருக்கிறார். அவரால் பொங்கலுக்குக்
கூட மகன் வராமல் போனதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் ராமசாமிக்கு மனதில்
என்ன தோன்றியதோ அரைக்காணி நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மூன்றரை காணி நிலத்தை விற்றுக்
கொண்டு போய் மகன் கையில் கொடுத்தார்.
மகன்
வியாபாரத்தை விரிவு பண்ண கேட்டதாகத்தான் ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தார் ராமசாமி.
அவர் பணம் கொடுத்து ஆறு மாதங்கள் கழித்த பின் மீண்டும் வீடு கட்ட தேவையென்று பணத்துக்காக
வந்து நின்றபோதுதான் அப்பன் கொடுத்த காசில் பிள்ளை ப்ளாட் வாங்கிப் போட்ட விசயமே அவருக்குத்
தெரிய வந்தது.
இதுக்கு
மேல எங்கிட்டெ என்ன இருக்கு? எங்கிட்டெ ரெண்டு கிட்னியும் ஒம்மாகிட்டெ ரெண்டு கிட்னியும்
இருக்கு. வேணும்னா அறுத்துக்கிட்டுப் போயி வித்து காசைத் தேத்திக்கோ என்றார் ராமசாமி
தாளிக்கப்படும் கடுகைப் போல.
என்னவோ
எம் பேர்ல டவுன்ல எடம் வாங்கிப் போட்ட மாரில்ல பேசுறீயளே? அம்மா பேர்லத்தான் வாங்கிருக்கேன்
என்றான் மகன்.
எவ்வேம்கிட்டேடா
காது குத்துறே? நெலம் கிரயம் பண்ணா ரீஸ்தர் பண்ணணும்ங்றது கூட தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டுப்
பேசுறீயா? எலேய் என்னடா நெனைச்சுக்கிட்டு இருக்கே? ஒங்கப்பன் என்ன கிறுக்கு முண்டம்ன்னே
முடிவு பண்ணீட்டியோ? என்றார் ராமசாமி.
சீதாலெட்சுமி
ஓடி வந்து, ஐயோ என்னை மன்னிச்சிடுங்க என்று ராமசாமியின் காலில் விழுந்தார். ராமசாமிக்கு
விசயம் தெளிவாகத் தொடங்கியது. மகன் மேல் ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும், கல்யாணம் கட்டி
வந்த நாளிலிருந்து பொண்டாட்டிக்காக புடவை துணி மணி தவிர, பொட்டுத் தங்கம் கூட வாங்கித்
தராதது நினைவுக்கு வந்தது. பரவாயில்லை, நாம்ம பண்ணாட்டாலும் மவனாவது அவ்வே பேருல எடத்தை
வாங்கிப் போட்ருக்கான் என்று மறுப்பக்கம் ஆத்திரத்திலும் கொஞ்சம் பெருமிதமாக இருந்தது.
விவசாய
நெலத்தை வித்துப்புட்டு டவுன்ல எடம் வாங்கணும்ன்னு சொன்னா ஒத்துக்கிட மாட்டீங்கன்னுத்தான்
யேவாரத்தை விரிவு பண்ணணும்ன்னு வாங்கி இப்படிப் பண்ணது. நம்ம பாண்டிமுத்து அண்ணன்தான்
எடம் பார்த்து எல்லாம் முடிச்சது. இப்போ அந்த எடத்துலத்தான் பங்களா மாரி வீடு கட்டணும்ங்றான்.
வீடு கூட சீதாலெட்சுமி பேலஸ்ங்றான் மவன் என்றார் சீதாலெட்சுமி.
ஏய்
சீத்தாலட்சுமி! எல்லாம் கூட்டுக் களவாணிங்களா? நீ கேட்டு, நான் பார்ப்போம்ன்னு சொன்னது
இந்த ஒரு விசயந்தாம். அதெயும் காவாளித்தனமாக செஞ்சுப் போட்டீங்க இல்ல. எதாச்சும் பண்ணுங்க.
இந்தப் பயெதான் யேவாரம் பண்ணானேன்னு. அதுல சேத்த காசெல்லாம் என்னவாச்சாம்? அதெ வெச்சு
கட்டிப் போட வேண்டித்தானே சீத்தாலட்சுமி பேலஸை. அதுக்கு ஏம் எங் காலே நக்கிட்டு நிக்கிறான்?
ராமசாமி ரொம்பவே காட்டமாகப் பேசினார்.
யேவாரத்துல
சம்பாதிச்ச எண்பது லட்ச ரூபாய்ல வேலையெல்லாம் ஆயிட்டு இருக்குது. இன்னும் நாப்பது லட்ச
ரூவா இருந்ததாத்தான் வேலை முடியுமாம். நாம்ம இந்தக் கிராமத்துல இருந்து இனுமே என்னா
பண்ணா போறோம்? அதாங் இந்த வீட்டையும் அந்த அரைக்காணியும் நெலத்தையும் வித்துப்புட்டு
மவனோடயே திருவாரூருக்குப் போவோம் என்றார் சீதலெட்சுமி.
பரம்பரை
வீட்டை விற்கலாம். மறுபடியும் அப்படி ஒரு வீட்டைக் கட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது.
ராமசாமி யோசித்தார். மனுஷனுக்குக் கௌரவம்தான் முக்கியமா என்ற கேள்வி திரும்ப திரும்ப
மனதுக்குள் ரிப்பீட் மோட் அடித்துக் கொண்டிருந்தது.
இரண்டு
நாட்களாக எதுவும் பேசாமல் இருந்தார் ராமசாமி. சீதாலெட்சுமி பேசுமாறு அழுது பார்த்தார்,
காலில் விழுந்து கெஞ்சி பார்த்தார். ஐந்தாவது நாள் வீட்டையும் நிலத்தையும் அடமானம்
வைத்து நாற்பது லட்சத்தைப் புரட்டிக் கொடுத்தார் ராமசாமி.
புதுமனை
புகுவிழாவோடு கல்யாணமுமாகப் பத்திரிகையை அச்சடித்துக் கொண்டு வந்து நின்றான் மகன்.
திருவாரூர் சுபரத்னா ஜூவல்லரியின் உரிமையாளர்
கோவிந்தராஜூவின் மகள் சுபரத்னாவைக் கல்யாணம் செய்வதாகப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து
கொண்டார் ராமசாமி. சீதாலெட்சுமிக்கு எல்லாவற்றிலும் பரிபூரண சம்மதம் இருந்தது. அவருக்கு
முன்பே விசயம் தெரிந்திருந்தது ராமசாமிக்குத் தெரியாமல் இருந்தது. ராமசாமிக்குப் பேச்சு
நின்று போயிருந்தது போயிருந்ததாகவே இருந்தது. யாருடனும் எதுவும் பேச முடியாது என்பதில்
பிடிவாதமாக இருந்தார். பாண்டிமுத்து கூட சமாதானம் செய்து பார்த்தார். சீதாலெட்சுமிக்கு
அழுது அழுது கண்கள் வற்றிப் போனதுதான் மிச்சம். அப்பன் பேசாதது குறித்து மகனுக்கும்
எந்த லஜ்ஜையும் இல்லாமல் காலமும் நாட்களும் மாதங்களுமாக உருண்டோடிக் கொண்டிருந்தது.
பேத்தி யோகரத்னா பிறந்த பிறகு கோவிந்தராஜூ விதித்த நிபந்தனையின்
பேரில் அவரது மகளைத் திருமணம் செய்து கொள்ள மகன் பேலஸ் வீடு கட்டியதும், தற்போது அவர்
சொல்வதன் பேரில் தஞ்சாவூரில் நகைக்கடை தொடங்க அங்கேயே குடியேறப் போவதும் மெல்ல மெல்லதான்
சீதாலெட்சுமிக்குத் தெரிந்தது. இவ்ளோ வெவரமா காய் நகர்த்திருக்கானே மவன் என்ற லேசான
கார்ப்புணர்வும் வந்தது. மனதுக்குள் கார்ப்பு வந்த பிறகு கேட்காமல் இருக்க முடியுமா?
இவ்ளோ பெரிய வீட்டுல நாங்க ரெண்டு பேரு மட்டும் எப்படிடா இருக்குறது?
என்றார் சீதாலெட்சுமி.
யம்மா வீட்டை வாடவைக்கும் விட முடியாது. சும்மாவும் போட முடியாது.
அதுக்காக இங்க நான் இருந்தா அங்க பிசினஸை டெவலப் பண்ணவும் முடியாது. அஞ்சு வருசம் பல்லைக்
கடிச்சிட்டு இருங்க. அங்க பிசினஸை டெவலப் பண்ணிட்டா இங்க வந்துடுவேன். இங்க அடிக்கடி
வந்துட்டுப் போயிட்டுதான் இருப்பேன் என்றான் மகன்.
நாங்களும் ஒங் கூடவே அங்க வந்திடறோம்டா என்றார் சீதாலெட்சுமி.
புரியாம பேசாதேம்மா. இம்மாம் பெரிய வீட்டுல இருக்க கசக்குதா
என்றான் மகன்.
முதன் முதலாக சீதலெட்சுமிக்கு அந்த வீட்டில் இருக்க கசக்கத்தான்
செய்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் மவனும் மருமவளும் பேத்தியும் கிளம்பிப் போய் வெறிச்சோடியிருந்த
நாளில் ராமசாமி, சீத்தாலட்சுமி என்றார்.
சீதாலெட்சுமிக்கு நின்று போன உலகம் சுற்றுவது போல இருந்தது.
ராமசாமியின் அருகில் வந்து நின்றார்.
நீங்க பேசிட்டீங்கத்தானே, எம் பேர்ர சொல்லிக் கூப்புட்டீங்கத்தானே
என்றார் நடப்பதை நம்ப முடியாமல் சீதாலெட்சுமி ஒரு குழந்தையைப் போல.
எடமும் வீடும் ஒம் பேர்லத்தானே இருக்குது. கௌம்பு என்றார் ராமசாமி.
நான்கு கோடி ரூபாய் வீட்டை மூன்று கோடிக்கு விற்று முடித்து
அடமானத்தில் இருந்த கிராமத்து வீட்டையும் அரைக்காணி நிலத்தையும் மீட்டவர் மிச்ச பணம்
முழுவதையும் தன் பெயரில் பிக்சட் டெபாசிட் பண்ணிக் கொண்டு, திருமுல்லைவாயில் கிராமத்து
வீட்டில் நடுக்கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவர் மனுஷனுக்குக் கௌரவம்தான் முக்கியம்
என்றார். அவர் காலடியில் வந்தமர்ந்த சீதாலெட்சுமி அவர் கால்களைக் கட்டிக் கொண்டபடி
வாஸ்தவம்தான் என்றார்.
*****