இந்தக் காலத்திலும் வரிசைகளில் காத்திருந்து
ஏன் வங்கிகளில் பணம் எடுக்கின்றனர் மக்கள்?
சில
மாற்றங்கள் நிகழ்ந்தால் உலகமே எளிதாகி விடும் என்று நினைக்கிறோம். அப்படி ஒன்றும் எதுவும்
எளிதானது போலத் தெரியவில்லை. ஒருவேளை அவை எளிதாகி இருந்தாலும் எரிச்சலாகிக் கொண்டிருக்கின்றன.
உதாரணத்துக்குப்
பணம் எடுப்பதையே எடுத்துக் கொண்டால், இன்னும் வங்கிகளில் வரிசைகளில் நின்று காத்திருந்து
பணம் எடுக்கும் மக்களைப் பார்க்க முடிகிறது. இவ்வளவு தானியங்கிப் பணம் எடுக்கும் (ஏடிஎம்)
பெருகிய காலத்திலா இப்படி என்றால், அங்கும் வரிசையாகப் பணம் எடுக்க நிற்கும் மக்களைக்
காண முடிகிறது. கூகுள்பே, போன்பே, பேடிஎம், இப்போபே என ஏகப்பட்ட பே(ய்)கள் பெருகிய
இந்தக் காலத்திலுமோ மக்கள் இப்படி தானியங்கி இயந்திரம் (ஏடிஎம்) முன் நிற்பார்கள்?
ஏன்
இப்படி என்றால், நாம் பெறும் ஒவ்வொரு வசதிக்கும் ஒரு விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
எல்லாராலும் அந்த விலையைக் கொடுத்த முடியாது. கொடுக்க முடியாதவர்கள் வரிசைகளில் காத்திருந்து
பெறுவதைத்தான் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
நீங்கள்
கூகுள்பே, போன்பே, பேடிஎம், இப்போபே எனப் பே(ய்)களைப் பயன்படுத்த வேண்டும் என்றால்
உங்களிடம் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) வேண்டும். பித்தான் போன்களை வைத்திருக்கும் மக்களால்
இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது. ஓராயிரத்துக்குள் முடிந்து விடும் பித்தான்போன்களின்
விலை. திறன்பேசிகளின் (ஸ்மார்ட்போன்) விலைக்கு உங்களிடம் ஐயாயிரமாவது இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஐயாயிரம் முதலீடு இல்லாமல் உங்களால் அந்தப் பே(ய்)களை உங்களால் பயன்படுத்த
முடியாது.
உங்களிடம்
பற்றுஅட்டை (ஏடிஎம் கார்டு) இருந்தால் அதற்கு வருடா வருடம் நூறோ நூற்று ஐம்பதோ (சில
வங்கிகளில் இருநூறுக்கு மேலும் உண்டு) ஆண்டுக் கட்டணமாக அழுதாக வேண்டும். அத்துடன்
ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் வரும் குறுஞ்செய்திக்கான கட்டணத்துக்கும் படியளந்தாக
வேண்டும். ஐந்து முறை அல்லது பத்து முறை என வங்கிகள் வரையறுத்துள்ள முறைகளுக்கு மேல்
பணம் எடுத்தால் அதற்கான தொகையோடு சரக்கு மற்றும் சேவை வரியையும் (ஜிஎஸ்டி) சேர்த்து
அளக்க வேண்டும்.
இவ்வளவு
செலவு கட்டுபடியாகாது என்று நினைக்கும் மக்கள் வங்கியில் வரிசையாகக் காத்திருந்து பணம்
எடுத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு எவ்வித கூடுதல் முதலீடோ,
பண இழப்போ ஏற்படுவதில்லை. எவரேனும் தங்கள் பணத்தை மோசடி செய்து விடுவார்களோ என்ற பயம்
இன்றி அவர்களின் வங்கிக் கணக்குகளைக் கையாள்வதற்கும் அது உதவியாக இருக்கிறது.
என்ன
காத்திருக்க வேண்டியிருக்கிறது, அதில் நேரம் கழிகின்றது. மற்றபடி கணக்கில் எந்தப் பணமும்
கழிவதில்லை. அது போதாதா?
*****
No comments:
Post a Comment