ஆச்சரிய உலகில் உறைதல்
மின்விளக்கைப் போட்டால்
சூழ்ந்து கொள்ளும்
தேனீக்களை எதிர்கொண்டே
காலைப் பொழுதில் எழுகிறேன்
வெளிச்சம்
உள்ள வரை நிழல் இருக்கும்
இருளின்
குழந்தையாய்
இருள்
வந்தால் இறந்து விடும்
வெளிச்சத்தை
வீழ்த்திய வீரனாய்
ரோடு
ரோலர்களை ஆச்சரியமாகப் பார்ப்போர்
இன்று
யார் இருக்கிறார்கள்
ஜேசிபிக்களை
அதிசயித்துப் பார்ப்போர்
இன்று
யார் இருக்கிறார்கள்
எல்லாம்
ஒரு காலத்தில்
ஆச்சரியமும்
அதிசயமும் தந்த ஊரிலிருந்து
பிறந்து
வந்த நான்
மண்சாலைகளை
ஆச்சரியமாகப் பார்த்து
அதன்
மீது நடை பயில்கிறேன்
நீரோடும்
நதிகளை ஆச்சரியமாகப் பார்த்து
அதில்
நீந்துகிறேன்
ஆச்சரியங்களின்
அர்த்தங்கள் மாறிப் போயிருக்கும்
உலகில்
காலை
விடிவதையும்
பொழுது
மறைவதையும்
ஒரு
பூ மலர்வதையும்
ஒரு
குழந்தை அழுவதையும் சிரிப்பதையும்
ஆச்சரியமாகப்
பார்த்துக் கொண்டு
அப்படியே
உறைந்து போய் விடுகிறேன்
*****
No comments:
Post a Comment