31 Oct 2024

காகிதத்தின் அதிர்ஷ்டம்

காகிதத்தின் அதிர்ஷ்டம்

எல்லாருக்கும் ஆசை

விதவிதமான ஆசைகள்

வேகமாகச் சம்பாதிக்க வேண்டும்

விரைவில் பணக்காரராக வேண்டும்

காரில் செல்ல வேண்டும்

பிறகு விமானத்தில் செல்ல வேண்டும்

விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்

எல்லாருக்கும் பணத்தின் மீது ஆசை

பணத்திற்கு யார் மீதும் ஆசையில்லை

பணத்திற்கு மட்டும் பணத்தின் மீது ஆசையில்லை

ஆசையிருந்தால் கறையான் அரிக்கும் பொழுதில்

கண்டு கொள்ளாமல் இருந்திருக்குமா

கிழிபட்ட போது கதறாமல் இருந்திருக்குமா

செல்லாது என அறிவித்த போது

சும்மா இருந்திருக்குமா

காலம் நேரம் லக்னம் ராசி பார்க்காமல்

கைமாறிக் கொண்டே இருக்குமா

பணமாக அச்சாகும் காகிதத்திற்கு அன்றோ

பணமாகும் அதிர்ஷ்டம் இருக்கிறது

*****

30 Oct 2024

அவர் இவர் எவரும் செய்ய வல்ல ஒன்று

அவர் இவர் எவரும் செய்ய வல்ல ஒன்று

தெரியாததைக் கூகுளில் தேடுகிறோம்

தெரிந்து கொள்ள யூடியூப் பார்க்கிறோம்

நினைத்ததைப் பேஸ்புக்கில் ஷேர் செய்கிறோம்

நிகழ்த்துவதை இன்ஸ்டாவில் பதிவிடுகிறோம்

எப்போதும் பரபரப்பாக இருக்கிறோம்

யார் மற்றவர்களிடம் பேசுகிறோம்

மனதுக்குள் வாய்கிழிய கத்துகிறோம்

எல்லாரும் எல்லாருடனும் அன்பாக இருக்க வேண்டும்

உலகம் அமைதி வழியில் செல்ல வேண்டும்

எல்லாரும் அன்பாக இருந்துவிடுவார்களா

உலகம் அமைதி வழியில் சென்று விடுமா

மாறி நடக்கும் போதும் மாறாமல் இருக்க வேண்டும்

யாரும் அன்பாக இல்லாத போதும்

அன்பாக இருக்க வேண்டும்

உலகம் அமைதியாக இல்லாத போதும்

அமைதியாக இருக்க வேண்டும்

அது ஒன்றே

நீங்கள்

நான்

அவர்

இவர்

ஒவ்வொருவரும்

எவரும் செய்ய வல்லது

*****

29 Oct 2024

1008 பிரச்சனைகளின் முகவரிகள்

1008 பிரச்சனைகளின் முகவரிகள்

பிரச்சனை என்பது இருக்கும்

பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும்

என்று நினைப்பதும் பிரச்சனைதான்

எந்தப் பிரச்சனை இல்லாமல் இருக்கும்

எல்லாவித பிரச்சனைகளும் இருக்கும்

எந்த விதமான பிரச்சனையும் இருக்கக் கூடாது

என்று நினைப்பதோ வேண்டுவதோ மாபெரும் பிரச்சனை

எல்லாரையும் போல நினைக்கலாம்

இணக்கம் இல்லை என்பது பிரச்சனை

இணக்கம் வேண்டும் என்று நினைப்பதும் பிரச்சனைதான்

அதிலேயே யோசித்துக் கொண்டு

அதிலேயே இருந்து விட முடியாது

பிரச்சனைகளை எதிர்கொண்டு

கடந்து கொண்டு இருக்கலாம்

அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கலாம்

பிரச்சனை குறித்த பிரார்த்தனைகளோ

தீர்ந்து விட வேண்டும் என்ற நம்பிக்கைகளோ

காந்த சக்தி போல பிரச்சனைகளை ஈர்த்து விடுகின்றன

எப்போதோ சந்திக்கின்ற வழிபோக்கர்களைப் போல

எதிர்கொண்டு செல்பவர்களுக்கு

பிரச்சனைகளின் விலாசங்கள் மனதில் தங்குவதில்லை

*****

28 Oct 2024

பாதைகளின் சாசுவதங்கள்

பாதைகளின் சாசுவதங்கள்

யாரிடம் எதை நிறுவ

யாரிடம் எதைப் புரிந்து கொள்ளச் செய்ய

இக்கட்டான நேரங்களை எதிர்கொள்ள

ஆற்றுப்படுத்துவதா அறிவுரை சொல்வதா

கருத்துக் கூறுவதா விளக்கம் கேட்பதா

அமைதியாகக் கூறுவதைக் கேட்கின்ற வழியில்

பாதைகள் பயணிக்கத் தொடங்குகின்றன

பேசாமல் இருப்பது பேசுவதை விட

எவ்வளவு வலிமையாக இருக்கிறது

கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதைப் போல

எதிர்கொள்ளாமல் இருப்பது சிறந்த வழியாகிறது

தவறாகப் புரிந்து கொள்வதை

யார் என்ன செய்ய முடியும்

யார் தடுத்து நிறுத்த முடியும்

சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று

எப்படி நிர்ப்பந்தம் செய்ய முடியும்

ஒவ்வொரு புரிதலும் அதற்கான

பிரத்யேகப் பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன

பாதைகளை அடைக்க நினைப்பது தற்காலிகமானது

பயணிக்க விடுவதே சாசுவதமானது

*****

27 Oct 2024

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

ஆசைகள் எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகின்றன

கத்தியின் கூர் முனையின் மேல் இதயத்தை

செஞ்சுடரின் மேல் வெண்பஞ்சை

யாரையும் யாரும் மாற்றுவது ரொம்பவே கஷ்டமானது

மாற்றத்தை உணர்ந்து அவரவர் மாறிக் கொள்வது எளிதானது

அதுவரை அவர்கள் அப்படியே இருப்பது உசிதமானது

உண்மையான அன்பு

ஒருவரின் ஆசைக்குக் குறுக்கே நிற்காது

எப்படியோ ஒவ்வொன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

எதற்காகவும் யாரையும் குறை கூற முடியாது

கனமாகிப் போகின்ற இதயம்

லேசாகத் துடித்து வெடித்துச் சிதறுவது இயற்கையானது

என்றோ ஒரு நாள் வெடிப்பதற்காக

எரிமலையை யார் என்ன செய்ய முடியும்

தலைக்கு மேல் தொங்கும் கத்திகள் போல்

தற்செயல்கள் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழும்

விபத்துகள் எப்போதோ நேரும் என்பதற்காகப்

பயணிக்காமல் இருக்க முடியுமா

வாழ்க்கைப் பயணிகள் மனிதர்கள் என்பது எழுதப்பட்ட விதி

பயணித்துக் கொண்டிருக்க வேண்டும்

என்பது எழுதப்படாத விதி

*****

 

25 Oct 2024

நீரில் வரையும் காற்றின் ஓவியம்

நீரில் வரையும் காற்றின் ஓவியம்

வாழ்ந்து முடித்தப் பிறகு

அர்த்தம் கொடுக்கத் தோன்றுகிறது

நோக்கம் கற்பிக்க ஆசை பிறக்கிறது

உலகிற்கு ஏதோ சொல்ல வேண்டுமென்ற

பரிதவிப்பு தோன்றி விடுகிறது

சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்ட

விருந்தாளியைப் போலாகி விட்ட வாழ்க்கையில்

வாழ்தலே அர்த்தம்

வாழ்தலே நோக்கம்

வாழ்தலே செய்தி

அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று

உரக்க கத்தத் தோன்றுகிறது

அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம் என்று

காற்றில் அசைகின்றன மரங்கள்

வானில் பறக்கின்ற பறவைகள்

நிலத்தில் ஊர்கின்றன புழுக்கள்

நீரில் நீந்துகின்றன மீன்கள்

முகத்தில் வந்து அப்புகின்றது தூசி

சொல்வதற்கு ஏதுமில்லை என்று கைவிரிக்கையில்

கேட்கத் தொடங்குகிறது ஓலம்

*****

23 Oct 2024

நான்கும் கலந்த வாழ்க்கை

நான்கும் கலந்த வாழ்க்கை

இன்பமோ துன்பமோ

இரண்டும் கடக்கத்தான்

இன்பத்திலே இருந்து விடவோ

துன்பத்திலே தோய்ந்து விடவோ

யாரால் முடியும்

மீள்வதற்கு காலமாகிறது என்பதற்காக

மீளவே முடியாது என்பதா என்ன

கஷ்டம் நஷ்டம் வருத்தம் துயரம் இல்லாமல்

எப்படி இருக்கும் வாழ்க்கை

எல்லாவற்றையும் எப்படி எதிர்கொள்கிறோம்

என்பது அன்றோ வாழ்க்கை

வரமோ சாபமோ

இரண்டையும் எதிர்கொள்ளத்தான் போகிறோம்

வரத்தை மட்டும் எதிர்கொள்ள நினைப்பதன்றோ

மனதின் சாபம்

உண்மையின் அடுத்தப் பக்கத்தில்

சாபத்தை எதிர்கொள்வது வரம் என்று எழுதப்பட்டிருக்கிறது

நல்லது கெட்டது

நியாயம் அநியாயம்

நான்கும் கலந்தது வாழ்க்கை

*****

22 Oct 2024

விலக்கிக் கொண்டோடும் அசாத்திய நதி

விலக்கிக் கொண்டோடும் அசாத்திய நதி

காலப் பெருவெளியில் தனக்கான நேரத்தைச்

சாவகாசமாக எடுத்துக் கொண்டு

சீரமைத்துக் கொள்ளப் பார்க்கிறார் பைத்தியக்காரர்

எப்படியோ காரியம் ஆக வேண்டும் என்று

நெருக்கடிகளைக் கொடுத்துப் பார்க்கிறார் காரியக்காரர்

எதிலாவது எப்படியாவது பெயர் வாங்க வேண்டும் என்று

முனைகிறார் உதவாக்கரை என்று பெயரெடுத்தவர்

அடுத்த சாதனைக்குத் தயாராக வேண்டும் என்று

மனச்சோர்வுக்குள் முடங்காமல் இருக்க போராடுகிறார்

சாதனையாளர் என்ற அடைமொழிக்கு நேர்ந்து விட்டவர்

யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும்

யார்தான் அபத்தமான முடிவெடுப்பதைத் தவிர்க்க முடியும்

பலமாக இருப்பதாக நினைக்க முடியாத வகையில்

பலவீனங்களும் இருக்கின்றன

எல்லாவற்றையும் எதிர்கொண்டாக வேண்டும் என்பதோடு

சில நேரங்களும் அடிபடவும் வேண்டியிருக்கும்

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று

எது சரி எது தவறு எல்லாம் ஏதோ ஒன்று

எது எப்படியோ

ஒருவரின் ஆசை நிறைவேறும்

இன்னொருவரின் ஆசை நிராசையாகும்

ஆசைப்படாமல் இருக்க முடியாது என்பதை விட

ஆசையைத் துறந்து விட்டு ஓடி விட முடியாது

இதை செய்து விட்டால் மாறி விடும் என்று நினைப்பதோ

செய்யாமல் விட்டால் மாறாமல் இருந்து விடும் என்று நினைப்பதோ

நினைப்புகளுக்குள் அடங்குவதா சாத்தியங்கள்

நடந்தேறிய காரியங்களுக்காக நன்றி சொல்லவும் நேரிடும்

கண்ணீர் விடவும் வேண்டி வரும் என்பதைப் புரிவதற்குள்

எல்லாம் முடிவுக்கு வந்து அடுத்தது ஆரம்பமாகி விடும்

யாருடைய ஆசைக்கேற்ப யாருடைய காரியங்கள்

எப்படி நிகழும் என்பதோ நிகழாது என்பதோ

கணிப்பிற்குள் அடங்காத சூத்திரங்கள்

*****

21 Oct 2024

வலியின் சுக ராகம்

வலியின் சுக ராகம்

உங்கள் முதல் சந்தோசம்

உங்கள் முதல் துயரமாக மாறினால்

எதைப் பார்த்தாலும் வலி ஏற்படும்

எல்லாவற்றையும் கதையாகக் கேட்டே

தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா

கொஞ்சம் வாழ்ந்துப் பார்க்கும் போதுதான் வலிப்பது உரைக்கும்

நீங்களே உணரும் போதுதான் வலியின் ஆழம் புரியும்

அதன் பிறகு அவை போன்றவற்றைப் பார்க்கும் போதெல்லாம் வலிக்கும்

ஒவ்வொரு சந்திப்பின் போதும் நிறைய பேசத் தொடங்குவீர்கள்

நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்

ஒன்று உங்களுக்குப் புரியுமா

அன்பாக இருப்பது அன்பாக இருப்பதற்குத்தான்

அன்பால் எதையும் சாதிப்பதற்கா என்ன

ஆகவே நாளையை நாளைப் பார்ப்போம்

இன்று இந்த வலியின் சுக ராகத்தைக் கேட்போம்

அதை மீட்டும் அன்புக்குரியவரின் ஆன்மா அதில் ஒளிந்திருக்கிறது

*****

20 Oct 2024

கால கிறுக்கல்கள்

கால கிறுக்கல்கள்

இந்த உலகின் மோசமான மொக்கைப் பிறவி நீயே

ஏனோ என் தூக்கத்தைக் கெடுக்கிறாய்

உறக்க மாத்திரைகளைத் தோற்கடித்து

எதுவுமே நடக்காதது போல

எத்தனை நாட்கள் இப்படி இருக்க முடியும்

சில நாட்களில் முன்னுக்குப் பின் முரணாக

அதீத தூக்கத்தை எதிர்கொள்கிறேன்

வேறு சில நாட்களில் அதீத அழுகையால் நனைந்து போகிறேன்

மனதை மறைக்கும் போதன்றோ சந்தேகப் படுகிறார்கள்

எனக்கோ பாதி சம்பவங்கள் நினைவில்லை

பாதி சம்பவங்களை மறக்க முடியவில்லை

மறப்பதைப் பற்றி நினைப்பதைப் பற்றி கவலையில்லை

வாழ்க்கையை ஓர் ஒழுங்கில் வாழ முடியாது

கொஞ்ச காலத்தை மெல்லமாய் நகர்த்தும் போது

ஒழுங்கற்ற ஒழுங்குக்குள் வந்து விடுகிறேன்

இப்போது கொஞ்சம் பொறாமை கொஞ்சம் பரிதாபம்

இரண்டும் இருக்கிறது உன் மேல்

ஒருவேளை எல்லாவற்றையும் நான் மறந்தால் கவலைப்படக் கூடாது

என்பதற்காகத்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்

நீ இந்த அபத்தங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

அதில்தான் நம் அன்பு இருக்கிறது

ஒன்றைப் புரிந்து கொள்

பகுத்தாராய்வான முடிவுகளை எடுக்க முடியாது

காலம் அதற்கு அனுமதிக்காது

*****

19 Oct 2024

எந்தக் கணத்திலும் ஏதுமில்லை

எந்தக் கணத்திலும் ஏதுமில்லை

இந்தக் கணத்தை மறக்க முடியாததாகச் செய்யப் போகிறீர்களா

ஏன் அப்படி செய்ய வேண்டும்

அது எப்படியோ போகட்டும்

ஏன் இந்தக் கணம் எப்படி இருந்தால் என்ன

அது ஒரு கணம்

அது இஷ்டப்படியோ அல்லது என் இஷ்டப்படியோ

இருந்து விட்டுப் போனால் என்ன

இந்தக் கணத்தையும் என்னையும்

தயவுசெய்து தொடர்பு படுத்தாதீர்கள்

பரிசுத்தங்கள் அசுத்தத்திற்கான வழி

கட்டாயங்கள் மன அழுத்தத்திற்கான பாதை

கானகத்தில் சுத்தமேது அசுத்தமேது எல்லாம் உரங்கள்

காட்டுப்புலிக்கு நீங்கள் இரையாகும் கணத்தில்

காட்டுப்புலிக்கு இரையாகப் போகும்

இன்னொருவர் பிறந்து விடுகிறார்

*****

18 Oct 2024

மன கோபுரங்கள்

மன கோபுரங்கள்

அசலான கேள்வியை எதிர்கொள்ளும் போது

உடைந்து போவீர்கள்

உங்கள் அழுகை உங்கள் பலவீனத்தைக் காட்டலாம்

அநேகமாக உறைந்து போதலும் நடக்கலாம்

உங்கள் மனம் வெடித்துச் சிதறியும் போகலாம்

துண்டு துண்டாகக் கிடக்கும் இதயத்தை

நீங்கள் பொறுக்கிக் கொண்டிருக்கலாம்

எதுவும் நடக்காது என்றும் சொல்ல முடியாது

எது நடக்கும் என்றும் சொல்ல முடியாது

ஒவ்வொன்றும் நடக்கும் போது

நீங்கள் ஒவ்வொரு மாதிரியாக வினையாற்றுவீர்கள்

எல்லா உதவியும் கிடைக்கும் போதும் தோற்றுப் போவீர்கள்

புத்திசாலித்தனமாகச் சிந்தித்துச் செயல்படும் போது

மிகப்பெரும் சறுக்கலை எதிர்கொள்வீர்கள்

என்ன செய்ய முடியும் உங்களால்

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர

ஒரு சிலவற்றிற்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதற்காக

எல்லாவற்றுக்கும் காரணத்தைத் தேடாதீர்கள்

முடங்குவதும் திமிரி எழுவதும் மாறி மாறி நடக்கும்

எல்லாம் துடைத்தெறியப்படும் போது

நீங்கள் புதிதாக முளைத்தெழுவீர்கள்

நம்பிக்கையோ அவநம்பிக்கையோ விசயமல்ல

வெறுமனே இருக்கையில் வெற்றிடத்தில்

பறவையைப் போல சிறகடித்துக் கொண்டிருப்பீர்கள்

எதில் மோதி விழுகிறீர்களோ

அது நீங்கள் எழுப்பிய மனகோபுரங்கள்

*****

17 Oct 2024

நாம் ஏன் நம் பிரச்சனைகளுக்கு நன்றி சொல்லக் கூடாது

நாம் ஏன் நம் பிரச்சனைகளுக்கு நன்றி சொல்லக் கூடாது

ஒரு கட்ட பிரச்சனை முடிவது

அடுத்த கட்ட பிரச்சனையை உண்டாக்கிறது

இதை எப்படி சரி செய்யப் போகிறோம்

சிலரிடம் சொல்லி வைத்திருக்கிறோம் இல்லையா

ஆனால் இது பெரிய பிரச்சனை இல்லை

தீர்வு வரா விட்டாலும் பரவாயில்லை

இது சம்பந்தமாக யாரிடமும் பேசியிருக்கக் கூடாது

அவர்கள் ஏகப்பட்ட திருத்தங்களைச் சொல்கிறார்கள்

 சட்ட விதிகளை நீட்டுகிறார்கள்

அவ்வளவையும் மிகச் சரியாக நிறைவேற்றுவது என்றால்

சில நேரங்களில் நீங்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கலாம்

ஏன் அந்தப் பிரச்சனை இருக்கக் கூடாது

அந்தப் பிரச்சனையோடு நாம் இருக்கக் கூடாதா

நம்மோடு அந்தப் பிரச்சனை இருக்கக் கூடாதா

பிரச்சனைகளைத் தீர்ப்பதினும் பிரச்சனைகளோடு இருந்து விடுவது

நீங்கள் உயிர் வாழ்வதற்கு உத்தமான வழி

நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கும்

பிரச்சனைகளுக்கு இன்றாவது நன்றி சொல்லுங்கள்

*****

16 Oct 2024

வீடுபேறு

வீடுபேறு

அனுமதி பெற்று வீடு கட்டுவது என்றால்

குளவி அனுமதி பெற்றா கூட்டைக் கட்டுகிறது

பாம்பு அனுமதி பெற்றா புற்றைக் கட்டுகிறது

தேனீக்கள் யாருடைய அனுமதியைக் கேட்கின்றன

தூக்கணாங்குருவி யாரைக் கேட்கிறது

முன் அனுமதி பெறாமல் வீட்டைக் கட்டியது குற்றமாகி விட்டது

குளவிக் கூட்டை பாம்புப் புற்றை தேன் கூட்டை குருவிக் கூட்டை

கலைத்தால் கொட்ட வரலாம் கொத்த வரலாம்

மனிதன் கோபம் கொள்ளலாம்

கோபித்துக் கொண்டு மறுகூட்டைக் கட்டாமலா போய் விடுகின்றன

மறுவீட்டைக் கட்டித்தான் ஆக வேண்டும்

இந்த முறை முன் அனுமதி வாங்கி விட வேண்டும்

அதற்கான மன உளைச்சல்களைக்

கால் அலைச்சல்களைத் தாங்கித்தான் ஆக வேண்டும்

இந்தக் குடைசல்கள் வேண்டாம் என்றால்

வாடகை வீட்டில் வாழ்ந்து முடித்துக் கொள்ள வேண்டும்

வாடகை வீடு கட்டுபவர்கள் ஒரே நேரத்தில்

ஒன்பது வீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தெரிந்தவர்கள்

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...