பேசாத பேச்சும் பேச நினைத்த பேச்சும்
யாரிடம் ஆயுள் முழுவதும்
பேசவில்லையோ
அவர்களிடம்தான் சாகும் போது
இரண்டு வார்த்தைகள் பேச நினைத்தார்
ஆயுள் முழுவதும் பேசிக் கொண்டிருந்த
நாங்கள் என்ன முட்டாள்களா
என்றால்
சாகும் போது கேட்பதிலிருந்து
எங்களுக்குக் கொஞ்சம் விடுதலை
அவ்வளவுதான்
எட்டு சைகைகள் சம்பந்தமில்லாத
இரண்டு வார்த்தைகள்
அவ்வளவுதான் பேச்சு
அதற்குப் பதினைந்து நிமிடங்கள்
ஆனது
போதும் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்
கொள்ளாதீர்கள் என்று
மாஸ்குக்குள் மூக்கோடு வாயையும்
சிறை வைத்து விட்டார்கள்
பட்டென்று பறிபோய் விடுமோ
மூச்சு என்று
பயந்து போன நர்ஸ்கள்
மின்விசிறி போன்ற கண்கள்
சுற்றிலும் சுழன்றால்
இசிஜி மானிட்டர்கள் சலைன்
பாட்டில்
மருந்துகள் மாத்திரைகள் ரிப்போர்ட்டுகள்
அவ்வளவுதான் தட்டுப்பட்டிருக்க
வேண்டும்
பேச்சு நன்றாக இருந்த போது
மனசு ஒத்துழைக்க முடியாதென்று
இருந்து விட்டது
மனசு ஒத்துழைக்கும் போது
உடம்பு ஒத்துழைக்க முடியாதென்று
இருந்து விட்டது
உடம்புக்கும் மனசுக்கும்
ஒத்துழையாமை போராட்டம்தான்
இந்த வாழ்க்கை போலும்
பாடையில் ஏற்றும் வரை
தாத்தா என்ன பேச நினைத்தார்
என்று
ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தோம்
எதுவும் சொல்லாமல்
பாடையில் படுத்தபடியே இருந்தார்
உயிர் இருந்த வரை
தன் பேச்சுக்கு எந்த வித
மறுபேச்சும் பேச விடாத தாத்தா
*****
No comments:
Post a Comment