மதுபானக் கடைகள் இல்லாத ஒரு வட்டாரத்தைக் காட்டுங்கள்!
வட்டாரம் என்ற சொல் ஒரு சிலருக்குப்
புரியாமல் இருக்கலாம். தாலுக்கா என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் ஒரு வட்டாரம்
என்பது 10 லிருந்து 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். அதற்குள் குறைந்தபட்சம்
ஒன்றிலிருந்து அதிகபட்சம் ஐம்பது மதுபானக் கடைகளாவது இருக்கும்.
எனது கணக்குச் சரியாக இருக்குமானால்
ஐந்து கிராமங்களுக்குச் சராசரியாக ஒரு மதுபானக்கடைகள் இருக்கலாம். ஒரு மதுபானக் கடையில்
பத்துக் கிராமங்களுக்குச் சமமான மக்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
தமிழ் மக்களின் ஆரோக்கியத்தை
இந்த மதுபானக்கடைகள் மென்மேலும் குடிக்க வைத்து அழித்து விட்டன. மதுவைத் தண்ணீரைப்
போல அருந்தும் ஒரு தலைமுறை உருவாகி விட்டது.
காலை வேளையில் அருந்தும்
தேநீரைப் போல மதுபானம் அருந்தும் பழக்கம் பலரிடம் பரவி விட்டது. குடிகாரர்கள் என்ற
நிலையில் இருந்து பலர் குடிநோயாளிகளாகி விட்டனர்.
பெண்களிடம் பகல் நேரத்தில்
தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பழக்கமும் ஆண்களிடம் பகல் நேரத்தில் மதுபானம் அருந்தும்
பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகின்றது.
பணம் சம்பாதிப்பதை மது அருந்துவதற்கான
ஓர் அங்கீகாரமாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும்
மதுபானக் கடையில் கொண்டு போய் கொட்டுகின்றனர்.
இப்போது தமிழக மக்களுக்கு
ஒரு வேலையைத் துவக்க வேண்டும் என்றால் இயந்திரத்திற்குப் போடும் எரிபொருள் போல மதுபானம்
தேவைப்படுகிறது. தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றால் அவ்வபோது எரிபொருள்
போல மதுபானத்தை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. வேலை முடிந்த பிறகும் அவர்களுக்கு
மதுபானம் தேவைப்படுகிறது.
இயக்கத்தை நிறுத்தி விட்ட
ஓர் இயந்திரத்திற்கு எரிபொருள் தேவையில்லை என்றாலும் இந்த மனிதர்களுக்கு இயங்கினாலும்
இயங்கா விட்டாலும் எப்போதும் மதுபானம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மதுபானம் தமிழகத்தைப்
பீடித்திருக்கும் நிரந்தர தொற்றுநோயாகிக் கொண்டிருக்கிறது.
*****
No comments:
Post a Comment