30 Apr 2021

மற்றவர்கள் இரண்டாம் பட்சம்


மற்றவர்கள் இரண்டாம் பட்சம்

மிக மென்மையாகப் பேசுவதால்

அது அநியாயம் இல்லை என்கிறார்கள்

மிக மென்மையாக நடந்து கொள்வதால்

அதுவும் அநியாயம் இல்லை என்கிறார்கள்

அநியாயத்துக்கு எதிராக

கடினமாக நடந்து கொள்ளக் கூடாது என்கிறார்கள்

அப்படி நடந்து கொள்ள முயன்றால்

அவர்கள் கடினமாகி

நம்மை மென்மையாக்கி விடுகிறார்கள்

அவர்களுக்கு அவர்களே முதல் பட்சம்

மற்றவர்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்

*****

அறியாமையில் மனம் உறங்குகிறது

எங்கிருந்தோ வரும் அதற்கு என் வணக்கங்கள்

அதன் வேர்கள் என் கண்கள் அறியாதது

அதன் கிளைகள் கண்களுக்குப் பிடிபடாதது

காற்றில் மீட்டும் அதன் இசை

செவிப்புலன்களுக்குக் கேளாதது

நரம்புகள் தித்திக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா

அறியாமையில் வாழ்வது போல்தான் இருக்கிறது

அறியாமை பிடித்திருக்கிறது

அறிந்தே ஏற்றுக் கொண்ட அறியாமை

அறிந்து கொண்ட அறியாமை

அதற்கு மேல் அறிய எதுவுமில்லை

அறியாமையில் மனம் உறங்குகிறது

அமைதி கொள்கிறது

*****

29 Apr 2021

எதிரி மரணிக்கிறார்

எதிரி மரணிக்கிறார்

வெறுப்பது விவேகமாகாது

நீங்கள் வெறுப்பதை

உங்கள் எதிரி விரும்பிச் செய்வார்

ரோஷப்படுவது புத்திசாலித்தனமாகாது

நீங்கள் ரோஷப்படுவதை

உங்கள் எதிரி உங்களின் பலவீனமாக்குவார்

வெறுக்காமல் இருக்கும் போது

எதிரி சோர்ந்து போவார்

ரோஷம் காட்டாமல் இருக்கும் போது

எதிரி மரணித்து விடுகிறார்

*****

அதுவா அதுவேதான்

பணக்காரர்களோடு சமரசம் செய்து கொள்வதை

புத்திசாலிதனம் என்பீர்கள்

புத்திசாலிதனம் என்பது

ஏழைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது

ஆனால் புத்திசாலிதனம் என்பது

சமரசம் செய்து கொள்வது என்று அடித்துச் சொல்வீர்கள்

*****

28 Apr 2021

ஒரு கூடை முட்டாள்தனம்


 ஒரு கூடை முட்டாள்தனம்

உங்களுக்குப் பிடித்த

ஒரு கூடை முட்டாள்தனத்தைப்

பார்சல் பண்ணுங்கள்

இன்னும் பத்து கூடை

முட்டாள்தனத்தை வரிசை கட்டி நிற்கும்

சொன்னால் நம்புவதற்கு கஷ்டம்

அதுதான் நாம்

நாம்தான் அது

*****

குழந்தைகளுக்கு விருப்பமானவை

செயல் முடிந்த பின்

அது குறித்த

தெளிவான எண்ணம் தோன்றும்

எல்லாவற்றிலும் அப்படித்தான்

அனுபவம் பானை உடைந்த பின்

ததும்பும் நீர்

ஓட்டாஞ்சில்லில் தேங்கிக் கிடக்கும்

சிறிதளவு நீரை அள்ளி

ருசி பார்ப்பவர் யார்

உடைந்த பின் பானைக்கான

மதிப்புப் போய் விடும்

ஓட்டாஞ்சில்லுகள் விளையாடும்

குழந்தைகளுக்கு விருப்பமானவை

*****

27 Apr 2021

புயலின் வரைபடம்


 மறத்தலின் நம்பிக்கை

சாவியை மறந்து விட்டு வந்த

தையல் கடை நைனியப்பன்

திரும்ப எடுக்கச் சென்றிருக்கிறார்

சொன்னபடி மறக்காமல்

தைத்து வைத்திருப்பார் என்ற நம்பிக்கை

பூட்டியகடை முன் நிற்கும்

*****

புயலின் வரைபடம்

வரைபடம் போட்டது போலிருக்கிறது

புயலின் கோர தாண்டவம்

வரைபடத்தைக் கிழித்த வரைபடம்

அதன் வேகம்

பிடிக்க முடியாத வேகத்தில்

வரைபடம் பறந்து கொண்டிருக்கிறது

சேதத்தைத் துல்லியமாகக் காட்டும்

வேறொரு வரைபடம் வரையப்பட்டு இருக்கிறது

பறந்து விட்ட வரைபடமும்

வரையப்பட்ட வரைபடமும்

வேறு வேறு என்று யாருக்குத் தெரியும்

*****

26 Apr 2021

புதிய கோடங்கிகள்

புதிய கோடங்கிகள்

தடுமாறுவதற்கான சூழ்நிலைகள்தான் வாழ்வில் நிறைய

நிலை தடுமாறாமல் நிதானமாக இருப்பது ஒரு பெரிய தவம் 

அது பெரிய சாதனையாக கருதப்படாது

அதிர்வை உருவாக்குவதும்

ஆச்சரியப்பட வைப்பதும்தான் சாதனை

சிலவற்றின் ஒரே நன்மை என்னவென்றால்

யாருக்கும் எவ்விதத் தீங்கையும் தராமை

வேண்டுமானால் அதைக் கடைபிடிக்கலாம்

மற்றபடி சாதிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற வழியாக இருக்காது

உப்புச்சப்பற்று உண்பதில்

என்ன பெரிய சுவாரசியம் இருந்து விடப் போகிறது

உடலுக்கு ஆகப் பெரிய நன்மை அதுவென்பதைத் தவிர

*****

பின்னொரு பொழுதில்...

புயலுக்குப் பின்

சென்ற தெருவில்

நாய்கள் எதுவும் குரைக்கவில்லை

*****

25 Apr 2021

அதது பக்கம் அதது இருக்கட்டும்

அதது பக்கம் அதது இருக்கட்டும்

வாய் ஏன் மெளனம் ஆகிறதோ

மனநலக் கோளாறா உடல்நலக் கோளாறா

பேசாமல் இருப்பது நல்லதல்ல

பேசுதல் தவிர்க்க முடியாதது

நாக்கு மென்மையாகப் பேசியிருக்க வேண்டும்

சற்று வன்மையைக் கையாண்டதால்

சமநிலைபடுத்த முடியாமல் தவிக்கலாம்

நாக்கு மட்டும் என்னதான் செய்ய முடியும்

எல்லாம் இறுதியில் தலையில் வந்து விழுகிறது

நாக்கின் வழியே வழிகிறது

பல விசயங்களுக்கு நாக்குப் பொறுப்பேற்பது போலப் பேசுகிறது

அப்படிப் பேசக் கூடாது

வழுக்கினாற் போல் அன்றோ பேச வேண்டும்

நிறையவும் பேசக் கூடாது

உத்திரவாதம் அளிக்கும் தொனியிலும் பேசக் கூடாது

ஆம் இப்படித்தான் இருக்கிறது உலகம் என்று

எல்லாவற்றையும் ஆமோதிக்கும் வகையில் பேசுவது நல்லது

இயலவில்லை என்பதை இயலவில்லை என்று

சொல்லி விடுவதால் மாறி விடுமா என்ன

எதுவும் மாறப் போவதில்லை

அப்படியேத்தான் இருக்கப் போகின்றன

ஆகவே அது போன்றவைகளுக்குக் காத்திருக்கிறது

நாக்கு உச்சகட்ட மனவிரக்தியை அடைகிறது

அதுபோன்ற மனஉளைச்சலை நாக்கு அடைந்ததில்லை

முடியவில்லை என்றால் சொல்லி விடுங்கள்

கை கழுவி விடலாம் என்று நாக்கு பேசுகிறது

அவர் நம்பிக்கையாகப் பேசினார்

ஏமாற்றுபவர்கள் எவ்வளவு நம்பிக்கையாகப் பேசுகிறார்கள்

அப்படிப் பேசுவதால் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது

அந்த அளவுக்கு மனதளவில் குன்றிப் போகிறது

அதற்கு எதிராக எதுவும் சொல்ல முடியாத நிலையை அடைகிறது

விரக்தியும் சலிப்பும் எதிர்மறையாகச் செல்லத் தூண்டுகின்றன

ஆனால் அவ்வாறு செல்லக் கூடாது என மனம் தடுக்கிறது

விரக்தி அடையும் போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்த வாழ்க்கையில் விரக்தி இல்லாத இடம் ஏது

சலிப்பு இல்லாத செயல் ஏது

தடைகளும், எதிர்ப்புகளும் இல்லாத நிகழ்வு ஏது

விரக்தி தோன்றினால் அது பாட்டுக்குத் தோன்றட்டும்

சலிப்புத் தோன்றினால் அது பாட்டுக்குத் தோன்றட்டும்

தடைகளும், எதிர்ப்புகளும் உண்டானால் அது பாட்டுக்கு உண்டாகட்டும்

அவைகள் இயற்கையாகவே உள்ளவை

அவைகள் ஏதோ புதிதாகத் தோன்றுவது போல ஒரு கற்பிதம்

இவைகள் எல்லாம் வசதிக்குதானேயன்றி

அடுத்தவர்களுக்கான உபதேசம் எதுவும் இதில் இல்லை.

வெறுப்பை நெஞ்சில் சுமப்பது விபரீதங்களை உருவாக்குகிறது

யாரை இந்தக் காலத்தில் திருத்த முடிகிறது

எதையும் தீவிரமாக அணுக வேண்டியதில்லை

எல்லாமே பிரச்சனைகளாக இருக்கின்றன

அது சரி பிரச்சனைகள் இல்லாதது எது

வாழ்வில் எல்லாமே பிரச்சனைகள்

பிரச்சனைகள் இயற்கையானது

பிரச்சனையை நீக்க நினைப்பது பிரச்சனையாக மாறுகிறது

அது பாட்டுக்கு அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்

இது பாட்டுக்கு இது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்

அதது பாட்டுக்கு அதது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்

*****

24 Apr 2021

தலைவர் தேவை

தொண்டு

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

மகேசன் தொண்டே மக்கள் தொண்டு

விசாரித்ததில்

தலைவர் பெயர் மகேசன் என்றனர்

****

தலைவர் தேவை

நீங்கள் உங்கள் வீட்டுக்கு

தலைவரைத் தேர்ந்தெடுப்பீர்

அவர் ஊரெல்லாம் சுற்றிக் கொண்டிருப்பார்

நீங்கள் உங்கள் ஊருக்கு

தலைவரைத் தேர்ந்தெடுப்பீர்

அவர் நாடெங்கும் சுற்றிக் கொண்டிருப்பார்

நீங்கள் உங்கள் நாட்டுக்குத்

தலைவரைத் தேர்ந்தெடுப்பீர்

அவர் உலகமெங்கும் சுற்றிக் கொண்டிருப்பார்

பிரபஞ்சமெங்கும் சுற்ற வாய்ப்பு இருந்தால்

உங்கள் உலகுக்கு ஒரு தலைவர் தேவைப்படுவார்

*****

23 Apr 2021

வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம்

வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம்

கருத்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது

அவ்வளவு எளிதான செயலன்று

ஒவ்வொருவருக்கும் அவர்கள் கொண்டுள்ள

கருத்துகளே புரியக் கூடும்

அதைத் தாண்டிப் புரிந்து கொள்வது அவர்களுக்கு ஒரு சவால்

அவர்களுக்கு ஓர் இயலாமை

ஆசைக்கேற்ப விரும்பும் கருத்துகளை

யாரை விரும்புகிறோமோ

அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

என்று எதிர்பார்க்கலாம்

பிரச்சனையை அங்கிருந்து துவக்கலாம்

விரும்புவதால் மட்டுமே

விரும்பும் கருத்துகளை

அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது

அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

என்று எதிர்பார்ப்பதை விட

கருத்துகளை அவர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையை

புரிந்து கொள்ள முற்பட்டால்

அவர் மீது நமக்கோ

நம் மீது அவருக்கோ

விரோதம் பாராட்டாமல்

ஒரு நல்ல நட்பு அல்லது உறவு சாத்தியம்

பள்ளமான இடத்தை நோக்கி தண்ணீர் பாய்வதைப் போல

மனப் போக்கிற்கு ஏற்பவே பேசவும் செயல்படவும்

செய்பவர்கள் அநேகம்

எதுவும் அவர்களது பிழையன்று

மனப்போக்கின் இயல்புகள் பிழைகள்

மாற்றிக் கொள்வது என்பது

அவரவர்க்கே சாத்தியம்

புரிய வைக்க நினைப்பது பகைமையை உருவாக்கலாம்

மென்மையாக எடுத்துச் சொல்வதோடு

நிறுத்திக் கொண்டிருக்கலாம்

வன்மையாக வலியுறுத்த நினைப்பது

மன விரோதத்தை சிருஷ்டிக்கலாம்

இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்டவர்கள் கூட

மாற்றி விட முடியும் நம்பிக்கையில்

நம்பிக்கை இழப்பதான மிச்சத்தை அடைய நேரிடலாம்

இறுதியில் நிகழ்வதை எவர் மாற்ற இயலும்

யாரை மாற்றி இங்கு என்னவாகும்

அவர்கள் மாறித்தான் என்னவாகும்

பொதுவான நோக்கத்தை

எல்லாராலும் உணர்ந்து கொள்ள முடியாது

குறுகிய பார்வை அப்படிப்பட்டது

விரிந்த வானத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் நிறைய பேர்

அது அவர்களுக்குப் பயன்படும் என்பதை

அவர்கள் நம்ப மாட்டார்கள்

பிரசங்கிப்பதும் வலியுறுத்துவதும்

எதிர்மறையான விளைவுகளை உருவாக்கலாம்

அவ்வளவு மோசமான எதிர்மறையான மனநிலைக்கு

எவரும் எப்படியும் வருவது நிகழலாம்

அளவுக்கு அதிகமாக தம் மேல்

நிகழ்த்திக் கொள்ளும் வன்முறையும்

பிறர் மேல் நிகழ்த்தும் வன்முறையும்

எதற்கும் காரணமாகலாம்

நழுவிச் சென்றிருக்க வேண்டியதை

உரசிச் சென்றாகி விட்ட பின்

அடைவதற்குள் ஆயிரம் மன உளைச்சல்கள்

எதுவும் சொல்லும் தரமன்று

எதிலும் உள்ள எளிமையான விசயம்

நிகழும் போது நிகழும்

மெத்தனத்துக்கும் அலட்சியத்துக்கும்

வன்முறைகள் பதிலாக யாரும் காரணமாக வேண்டாம்

ஆசைப்படுவதன் பிரச்சனைகள் எல்லாம் விளையாட்டுகள்

விளையாட்டு எனில் தொடரலாம்

அல்லால் விட்டு விடலாம்

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...