25 Apr 2021

அதது பக்கம் அதது இருக்கட்டும்

அதது பக்கம் அதது இருக்கட்டும்

வாய் ஏன் மெளனம் ஆகிறதோ

மனநலக் கோளாறா உடல்நலக் கோளாறா

பேசாமல் இருப்பது நல்லதல்ல

பேசுதல் தவிர்க்க முடியாதது

நாக்கு மென்மையாகப் பேசியிருக்க வேண்டும்

சற்று வன்மையைக் கையாண்டதால்

சமநிலைபடுத்த முடியாமல் தவிக்கலாம்

நாக்கு மட்டும் என்னதான் செய்ய முடியும்

எல்லாம் இறுதியில் தலையில் வந்து விழுகிறது

நாக்கின் வழியே வழிகிறது

பல விசயங்களுக்கு நாக்குப் பொறுப்பேற்பது போலப் பேசுகிறது

அப்படிப் பேசக் கூடாது

வழுக்கினாற் போல் அன்றோ பேச வேண்டும்

நிறையவும் பேசக் கூடாது

உத்திரவாதம் அளிக்கும் தொனியிலும் பேசக் கூடாது

ஆம் இப்படித்தான் இருக்கிறது உலகம் என்று

எல்லாவற்றையும் ஆமோதிக்கும் வகையில் பேசுவது நல்லது

இயலவில்லை என்பதை இயலவில்லை என்று

சொல்லி விடுவதால் மாறி விடுமா என்ன

எதுவும் மாறப் போவதில்லை

அப்படியேத்தான் இருக்கப் போகின்றன

ஆகவே அது போன்றவைகளுக்குக் காத்திருக்கிறது

நாக்கு உச்சகட்ட மனவிரக்தியை அடைகிறது

அதுபோன்ற மனஉளைச்சலை நாக்கு அடைந்ததில்லை

முடியவில்லை என்றால் சொல்லி விடுங்கள்

கை கழுவி விடலாம் என்று நாக்கு பேசுகிறது

அவர் நம்பிக்கையாகப் பேசினார்

ஏமாற்றுபவர்கள் எவ்வளவு நம்பிக்கையாகப் பேசுகிறார்கள்

அப்படிப் பேசுவதால் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது

அந்த அளவுக்கு மனதளவில் குன்றிப் போகிறது

அதற்கு எதிராக எதுவும் சொல்ல முடியாத நிலையை அடைகிறது

விரக்தியும் சலிப்பும் எதிர்மறையாகச் செல்லத் தூண்டுகின்றன

ஆனால் அவ்வாறு செல்லக் கூடாது என மனம் தடுக்கிறது

விரக்தி அடையும் போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்த வாழ்க்கையில் விரக்தி இல்லாத இடம் ஏது

சலிப்பு இல்லாத செயல் ஏது

தடைகளும், எதிர்ப்புகளும் இல்லாத நிகழ்வு ஏது

விரக்தி தோன்றினால் அது பாட்டுக்குத் தோன்றட்டும்

சலிப்புத் தோன்றினால் அது பாட்டுக்குத் தோன்றட்டும்

தடைகளும், எதிர்ப்புகளும் உண்டானால் அது பாட்டுக்கு உண்டாகட்டும்

அவைகள் இயற்கையாகவே உள்ளவை

அவைகள் ஏதோ புதிதாகத் தோன்றுவது போல ஒரு கற்பிதம்

இவைகள் எல்லாம் வசதிக்குதானேயன்றி

அடுத்தவர்களுக்கான உபதேசம் எதுவும் இதில் இல்லை.

வெறுப்பை நெஞ்சில் சுமப்பது விபரீதங்களை உருவாக்குகிறது

யாரை இந்தக் காலத்தில் திருத்த முடிகிறது

எதையும் தீவிரமாக அணுக வேண்டியதில்லை

எல்லாமே பிரச்சனைகளாக இருக்கின்றன

அது சரி பிரச்சனைகள் இல்லாதது எது

வாழ்வில் எல்லாமே பிரச்சனைகள்

பிரச்சனைகள் இயற்கையானது

பிரச்சனையை நீக்க நினைப்பது பிரச்சனையாக மாறுகிறது

அது பாட்டுக்கு அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்

இது பாட்டுக்கு இது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்

அதது பாட்டுக்கு அதது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...