30 Sept 2020

மாற்ற முடியாது என்பது மாறாத தத்துவம்

மாற்ற முடியாது என்பது மாறாத தத்துவம்

            "தங்கள் மனதின் எந்த ஒரு பகுதியையும் யாரும் மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை. அதற்கு மாறாக மற்றவர்களையே மாற்ற நினைக்கிறார்கள். அதன் காரணமாக பல நேரங்களில் சொல்லப்படுகின்ற அற்புதமான கருத்துகளும், சரியான தீர்வுகளும் எடுத்துக் கொள்ளப்படாமலே குப்பைக்குச் சென்று விடுகின்றன." எஸ்.கே. தன் நாட்குறிப்பின் ஒரு பகுதியை எழுதி முடித்து ஓர் ஆழ்ந்த பெருமூச்சை விட்டுக் கொண்டார்.

            கடந்த பத்தாண்டுகளாக எம்.கே.யுடன் தனது நட்பை நினைத்துப் பார்த்தார். எம்.கே.யுடன் நட்பு கொண்ட நாளிலிருந்து எஸ்.கே. மிகப்பெரும் மன உளைச்சலைச் சந்தித்து வருகிறார். அது இன்றும் தொடர்கதையாக இருக்கிறது. இனி எப்போதும் தொடர்கதையாக இருக்க போகிறது. எம்.கே. தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பவராய், எஸ்.கே.வைப் பற்றியோ, எஸ்.கே.வுடன் தனக்கு ஒரு நட்பு உருவாகி இருப்பதைப் பற்றியோ கடைசி வரை யோசிக்க மறுத்தார். அவரால் அப்படி யோசிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒருவருடன் எப்படித் தனக்கு ஒரு நட்பு உருவானது என்பதை நினைக்க எஸ்.கே.வுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்றோ ஒரு நாள் உடைந்திருக்க வேண்டிய நட்பு எப்படி உடையாமல் போனதோ என்பதை எஸ்.கே.வால் யூகிக்க முடியவில்லை. பிரபஞ்ச சக்திகளுள் ஏதோ ஒன்றுதான் தங்களுடைய நட்பை உடைய விடாமல் காத்து வருகிறது என்ற நம்பிக்கைக்கு எஸ்.கே. வர வேண்டியதாக இருந்தது.

            எம்.கே.வின் சுபாவத்தில் சாதாரண ஒன்றை கூட மிகைப்படுத்தி அதற்காக பெரிதாகக் கவலைப்படும் போக்கால் எஸ்.கே.வை நாளுக்கு நாள் கொன்றார். எம்.கே.வின் மனநிலையின் சிறு துரும்பின் அசைவுக்கும் எஸ்.கே. உத்திரத்தால் அடிபட வேண்டியதாக இருந்தது. அவரின் அந்த மிக மோசமான மனநிலையை மாற்ற முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அதை மாற்ற முயன்று தோற்றுப் போனார் எஸ்.கே. அந்த மனநிலையை அவரது மிகப் பாதுக்காப்பான சொத்தைப் போல நினைத்து அதை விட மறுத்தார் எம்.கே. காலப்போக்கில் அது வளர்ந்து வளர்ந்து அவரது சுபாவமான பிறகு எஸ்.கே. மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானார். சமயங்களில் அதிகபட்ச விரக்திக்கும் ஆளானார்.

            ஒரு விசயம் மட்டும் எஸ்.கே.வுக்குப் புரிந்தது, யாரையும் மாற்ற முடியாது என்பது மட்டும். ஏனென்றால் அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அதாவது பகுதிப்பட்ட மனம். அதிலிருந்து வெளியே வந்து யோசிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அவர்கள் அப்பிடித்தான். அவர்களின் போக்கில்தான் போவார்கள். யாரையும் குறை சொல்வதற்கில்லை. அவர்கள் மனதால் இழுத்துச் செல்லப்படும் எந்திரங்களைப் போல்தான். மனம் இடும் கட்டளைக்கு ஏற்றாற் போல் செயல்பட்டுக் கொண்டு அதுதான் சரி என்பது போல வினையாற்றுவார்கள். இதை புரிந்து கொண்ட பிறகுதான் எஸ்.கே. தன் நாட்குறிப்பை எடுத்து நீங்கள் ஆரம்பத்தில் படித்ததை எழுதினார். மேலும் எஸ்.கே. தன் நாட்குறிப்பில் எழுதலானார்,

            "புரிய வைப்பதற்கோ, உணர வைப்பதற்கோ ஆன மனநிலை என்பது மிகப் பெரியது. வெகு சில மனிர்களாலே அந்த புரிதல் மற்றும் உணர்தல் என்ற நிலையில் ஊடுருவிப் பார்க்க முடியும். பல மனிதர்களுக்கு அது சாத்தியமே இல்லாதது. அதனால் நான் சொல்வதை நிறைய பேர் புரிந்து கொள்வதே இல்லை என்று வருத்தப்படுவது ஒரு வகை முட்டாள்தனம்தான். அவர்கள் புரிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ மறுக்கிறார்கள் என்பது இல்லை, அவர்களால் அஃது முடியாது என்பதுதான். முடியாது என்ற ஒன்றை, இயலாது என்ற ஒன்றை யார்தான் முயன்று பார்க்க செய்வார்கள்? விசயம் அதுதான். சில விசயங்களில் மாற்ற முடியாது என்பது மாறாத தத்துவம்."

*****

ஒண்ணு சேத்துப்புடுவோம்!

ஒண்ணு சேத்துப்புடுவோம்!

செய்யு - 581

            விகடு எல்லாத்தோடயும் பேசிட்டு இருக்கறப்போ ராசாமணி தாத்தா போன அடிச்சாரு. அந்த நேரத்துல எதிர்பாக்காத அழைப்பு. சுப்பு வாத்தியார்கிட்டெ ராசாமணி தாத்தா கூப்புடுறதெப் பத்திச் சொன்னாம். சுப்பு வாத்தியாரு ஒரு பார்வெ பாத்துட்டு, "நீயே பேசு. வார்த்தைய வுட்டுப்புடாம பதனமா பேசு! யிப்போ நாம்ம பேசல!"ன்னாரு. விகடு போனுல பச்ச பொத்தான அழுத்திட்டுப் பேசுனாம். எப்பிடி ஆரம்பிக்கிறதுங்ற கொழப்பமில்லாம,             "செளரியமா இருக்கீயளா தாத்தா?"ன்னுத்தாம் விகடு ஆரம்பிச்சாம்.

            "இந்தாருடா! நாம்ம கேள்விப்படுற சங்கதியில்லாம் ந்நல்லா யில்ல யாமாம். அஞ்ஞ வடவாதியில ஆனந்தம் பயெ, அதாங் சங்குவோட தம்பீ இருக்காம்ல அவ்வேம் அடிச்சிப்புடுவேம், வெட்டிப்புடுவேம்ன்னு பேசிட்டு நிக்காம். நாம்மத்தாம் போனப் போட்ட சித்தெ அமைதியா இருடான்னு சொல்லிட்டு இருக்கேம். செரித்தாம் போடான்னு அவ்வேம் ஒருத்தனெ வுட்டாவே வூடு தாங்காதுப் பாத்துக்கோ! ன்னடா நெனைச்சிக்கிட்டு இருக்கே? அப்பங்கிட்டெப் போன கொடு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அப்பங்காரரு பேசக்கூடிய மனநிலையில யில்லங்றது புரிஞ்சது விகடுவுக்கு. ரொம்ப சாமர்த்தியமா, "யப்பா! வெளியில போயிருக்கு தாத்தா!"ன்னாம்.

            "வந்தோன்ன சொல்லிப்புடு. நமக்குச் செல வெவகாரங்கப் பிடிக்காதுன்னு. செரிபட்டா பாப்பேம். ல்லன்னா வெச்சிக்கோ யப்பனும் மவனுமா வந்து போட்ட பவுனையும், பணத்தையும் வாங்கிட்டுத் துண்டக் காணும், துணியக் காணும்ன்னு ஓடிட்டே யிருங்க! அநாவசிய உறுமல் நமக்குப் பிடிக்காது பாத்துக்கோ!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "யிப்போ ன்னா ஆச்சுன்னு தாத்தா யிப்பிடி பேசிட்டு இருக்கீயே? தாத்தால வயசுல மூத்தது. நல்லது கெட்டதெ தாத்தாத்தாம் எடுத்துச் சொல்லணும்!"ன்னாம் விகடு.

            "இந்தப் பேச்செல்லாம் நம்மகிட்டெ பேசாதே யாமா? நீஞ்ஞ எதெப் பண்ணாலும் பயந்துப்புடுவேம்ன்னு நெனைச்சியா? ஊர்ர கூட்டிட்டா மெரண்டுடுவேம்ன்னு நெனைச்சியா? இந்தாருடா நாம்ம அந்தக் காலத்துலேந்தே ரெளடிக. ஏத்தோ சித்தெ செரியா இருக்கலாம்ன்னு நெனைச்சா வுட மாட்டீயே போலருக்கே. பாக்குக்கோட்டையில வந்த வெசாரிச்சிப் பாரு. இருவது வருஷத்துக்கு மின்னாடி நாம்ம எப்பிடின்னு? அருவாள தூக்குனேம்ன்னா ரத்தம் பாக்காம திரும்ப மாட்டேம். கத்தின்னு எடுத்தா நாலு கொடல குத்திச் செருவுனாத்தாம் வேகம் அடங்கும். அப்பிடில்லாம் யிருந்த ஆளு. எதுக்கு நமக்கு இந்த ரத்தம், ரெளடித்தனம்ன்னு ஒதுங்குனதுதாம். யிப்பவும் அந்த ரத்தம் ஓடிட்டுத்தாம் இருக்கு. எப்ப வாணாம்ன்னாலும் உள்ளுக்குள்ள ஓடிட்டு இருக்குறது வெளியில தலையக் காட்டலாம் பாத்துக்கோ! ஏதோ சாதவம் நாம்ம யிப்படி இருக்கணும்ன்னு போவ, அப்பிடியே செரித்தாம்ன்னு எல்லாத்தையும் போட்டுப்புட்டு, யின்னிக்கு சாதவக்காரனா நிக்குதேம். அதுக்காக பழசெல்லாம் மறந்துப்புட்டேன்னு நெனைச்சிப்புடாதே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அத்து ரொம்ப எகிறியடிச்சுப் பேசுறாப்புல பட்டுச்சு விகடுவுக்கு. கொஞ்சம் ஒரு தட்டு தட்டுனாத்தாம் செரிபட்டு வருன்னு தோண விகடு பேச ஆரம்பிச்சாம்.

            "ஏம் ஒமக்கு என்னாச்சி தாத்தா? ஏம் சம்பந்தம் சம்பந்தம் யில்லாமப் பேசிட்டு இருக்கே நீயி? இஞ்ஞ ஒண்ணும் நடக்கல. எல்லாம் ஒழுங்காத்தாம் இருக்கு. நீந்தாம் குவார்ட்டர்ர ஊத்திட்டோ, கஞ்சாவ அடிச்சிக்கிட்டோ பேசுறதா படுது. அப்பிடி யிருந்தா காலையில தெளிச்சாப்புல பேசு. யில்லன்னா நீயி பேசுற பேச்சையெல்லாம் ரிகார்ட்டு பண்ணுறாப்புலத்தாம் போன வெச்சிருக்கேம். இதெ அப்பிடியே கொண்டு போயி எங்க கொடுக்கணுமோ அங்க கொடுக்குறதுக்கு நேரமாவாது! போவ வேண்டிய எடத்துக்கு இந்நேரத்துக்குப் போயிருந்தா இந்தப் பேச்சு வந்திருக்காது!"ன்னாம் விகடு. அப்பத்தாம் ராசாமணி தாத்தா சுதாரிச்சிக்கிட்டு. போலீஸ் வரையில போகலன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கொழைஞ்சிப் பேச ஆரம்பிச்சது.

            "எலே பேராண்டி! என்னத்தடா பேசுதே? ஏத்தோ அஞ்ஞ பெரச்சனைன்னு கேள்விப்பட்டேம்! அதாங் பேசுனேம்! அஞ்ஞ நீஞ்ஞளும், அந்த ஆனந்தெம் பயலும் அடிச்சிட்டு நின்னா நல்லாவா இருக்கும்? பெரியவுக நாம்மத்தானே பேசி செரிபண்ணி வுடணும்! நாம்மத்தாம் அந்தப் பயலெ பேயாம இருடான்னேம். நாம்ம ல்லன்னா வெச்சுக்கோ இந்நேரத்துக்கு அருவாளா தூக்கிட்டு வந்து வூட்டுக்கு மின்னாடி நின்னுருப்பாம் பாத்துக்கோ!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அதுக்குப் பெறவு அதோட பேசுற மொறையில கொஞ்சம் மாத்தம் உண்டானுச்சு. மெரட்டுற தோரணை மாறி கெஞ்சுற தொரணை வந்துச்சு. பேசுற பேச்சு ரொம்ப சிறுபுள்ளத்தனமா இருக்குறதா பட்டுச்சு விகடுவுக்கு. இந்தப் பயலையெல்லாம் நம்பி எப்பிடி சாதவத்தெ பாக்க வர்றானுவோன்னு எரிச்சல் வேற வந்துச்சு.

            "இஞ்ஞ பெரச்சனைன்னா இஞ்ஞ வந்து பேசணும். அஞ்ஞ போன்ல வெச்சிக்கிட்டு சவடாலு வுடக் கூடாது. இஞ்ஞ ன்னா பெரச்சனெங்றது இஞ்ஞ இருக்குற நமக்குத் தெரியுமா? அஞ்ஞ இருக்குற ஒமக்குத் தெரியுமா? பெரச்சனைன்னா அத்தோட சம்பந்தப்பட்டவங்கிட்டெ பேசணும். நீயா ஒண்ணுத்தெ கற்பனெ பண்ணிட்டு, யாரோ சொன்னதெ வெச்சில்லாம் பேயக் கூடாது பாத்துக்கோ! யிப்போ இஞ்ஞ ன்னா பெரச்சனெ சொல்லு?"ன்னாம் விகடு.

            "ல்லடா பேராண்டி! மனசு பொறுக்காம பேசிட்டேம். ஒண்ணுத்தையும் நெனைச்சிக்கடாதடா! நமக்கு அப்பையிலேந்து எதெயும் மனசுல வெச்சுக்கத் தெரியாது. பட்டுன்னு பேசிப்புடுவேம். ஆன்னா மனசுல ஒண்ணும் இருக்காது. வெள்ளந்தியான ஆளுடா பேராண்டி!"ன்னு ரொம்பவே எறங்கி வந்துச்சு ராசாமணி தாத்தா.

            "எல்லாத்தையும் வுட மனசு அதிகமா கொதிக்க வேண்டியது நமக்குத்தாம். நாமளே பேயாம அமைதியா இருக்கேம். ச்சும்மா கெடக்க வேண்டியதெல்லாம் ஏஞ் சத்தம் போடுதுன்னு புரியலையே? எல்லாத்தையும் அப்பிடியே வுடு. அதது என்னென்ன நடக்குணுமோ அத்து நடக்கும்! எல்லாத்தையும் நாம்ம பாத்துக்கிறேம். இத்து கூட நாமளா பேசல. அதுவா வருது!"ன்னாம் விகடு.

            "யில்லடா பேராண்டி! யிப்போ நீயிப் பேசப் பேச மனசு நமக்கு தெளிவாவுது. இத்துப் படியே எல்லாத்தையும் குடும்பத்துல தெளிவு பண்ணி வுடு. அஞ்ஞ சென்னைப் பட்டணத்துலந்து ஒம் மச்சாங்கார்ரேம் போன அடிச்சி தவிச்சிப் போயிட்டாம். அவ்வேம் பேசுறதெப் பாத்து நமக்கே ஒரு மாதிரியாப் போயிடுச்சு. அதாங் ஒடனே யாத்தாவ அஞ்ஞ அனுப்பிட்டு ஒனக்குப் போன அடிச்சேம்! ஒம் மச்சாங்காரனுக்கும் போன அடிச்சிக் கொஞ்சம் பேசுடா! நம்மள சரி பண்ணி வுட்டாப்புல அவனெயும் சித்தெ சரி பண்ணி வுடு. இனுமே நம்ம காலம்லாம் முடிஞ்சிப் போச்சு. ஒஞ்ஞ காலந்தாம். நீஞ்ஞ நின்னு பாத்துக்கிட வேண்டியதுதாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "யிப்பவா? ராத்திரி தூங்கி முழிக்கட்டும். காலங் காத்தால பேசுறேம்! கிளினிக்குல வேற இருந்து திரும்பி அசந்துப் போயி கெடப்பாப்புல!"ன்னாம் விகடு.

            "யில்லடா பேராண்டி! நீயி அடிச்சிப் பேசு. அவ்வேம் ரொம்ப தவிப்பா இருக்காம்! நீந்தாம் இதெப் பாத்துச் செய்யணும்! யின்னிக்கு கிளின்குல்லாம் போவல! வூட்டுலத்தாம் கெடக்காம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "செரி வெச்சிட்டு நிம்மதியா படுத்துத் தூங்கு தாத்தா! நாம்ம பெறவு பேசுறேம்!"ன்னு சொல்லிட்டுப் போன வெச்சாம். பக்கத்துல நின்னுட்டு இருந்த சுப்பு வாத்தியாருகிட்டெ பாலாமணிக்குப் போன அடிக்கச் சொன்னதெப் பத்திச் சொன்னாம். "செரி பேசுடாம்பீ! யாரோட மனநெல எப்பிடி இருக்குதுன்ன இந்த நேரத்துல தெரிஞ்சிக்கிறது நல்லதுதாங். சூதானமா பேசு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            விகடு பாலாமணிக்குப் போன போட்டாம். போட்ட அடுத்த நொடியே போன எடுத்தாம். "செய்யு அஞ்ஞ எப்பிடி இருக்கா மச்சாம்! சேதியக் கேட்டு நமக்குக் கையும் ஓடல. காலும் ஓடல. யிப்பிடி பண்ணிப்பான்னு நாம்ம நெனைக்கல. நம்மால இஞ்ஞ இருக்க முடியல. ஒடனே கெளம்பி வந்து பாக்கணும் போல இருக்கு. மச்சாம் நம்மள எதுவும் தப்பா நெனைச்சிப்புடக் கூடாது. நாம்ம நடந்ததெ எல்லாத்தையும் சொல்லிருக்கேம்!"ன்னாம் பாலாமணி. அவ்வேம் பேசுறதெ கேக்கக் கேக்க விகடுவுக்கு இப்போ பாவமா இருந்துச்சு.

            "ஒண்ணும் பயப்படுற மாதிரிக்கி யில்ல. சரியான நேரத்துல பாத்து கதவெ ஒடைச்சி உள்ளார பூந்துட்டதால பெரச்சனெ யில்ல. உசுரு தப்புனுச்சு. யிருந்தாலும் இந்த பண வெசயத்தப் பத்தி நீஞ்ஞ யாருகிட்டெயும் சொல்லிருக்க வாணாம். யாத்தாகிட்டெ ஏஞ் சொன்னீயே?"ன்னாம் விகடு.

            "அதாங் நாம்ம பண்ண தப்பு மச்சாம்! யம்மா ஏத்தோ பேசிருக்கும் போல. அவளும் நமக்குப் போன் மேல போன் பண்ணிப் பாத்திருக்கா. நாம்மத்தாம் மச்சாம் எடுக்கல. மனசுக்குள்ள ஒரு கோவந்தாம். தப்புத்தாம் மச்சாம். ஆன்னா நாம்ம யிப்பிடி ஆவும்ன்னு எதிர்பாக்கல. யிப்பிடி ஆவும்ன்னு தெரிஞ்சிருந்தா நாம்ம அவளெ அஞ்ஞ அனுப்பிருக்கவே சம்மதம் பட்டிருக்க மாட்டேம்!"ன்னாம் பாலாமணி.

            "யிப்போ எதுக்கு நீஞ்ஞ பதட்டப்படுதீயே! வூட்டுல நாமல்லாம் இருக்குறப்போ ஒண்ணும் தப்பா நடந்துப்புடாது. இனுமே ஒஞ்ஞ குடும்ப விசயத்தெ ஒஞ்ஞளுக்குள்ள வெச்சுக்கிடுங்க. அதெப் பத்தி வெளியில யாருட்டயும் சொல்லாதீயே. நம்மளயும் சேத்துததாங் சொல்றேம். நீஞ்ஞ பதட்டம் யில்லாம தூங்குங்க. ஒண்ணுக்கு ஒண்ணு தப்பா ஆயிட வுட்டுட மாட்டேம்!"ன்னாம் விகடு.

            "தெரியும் மச்சாம்! யிருந்தாலும் நாம்ம வந்துப் பாத்துட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும்!"ன்னாம் பாலாமணி.

            "யிப்போ வாணாம் மச்சாம்! தெருவுல வூட்டுல கொஞ்சம் ஆத்திரமாத்தாம் இருப்பாங்க. ஒஞ்ஞள ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிப்புடுவாவோ! பெறவு ஒஞ்ஞளுக்கும் சங்கட்டம். நமக்கும் சங்கட்டம் பாருங்க!"ன்னாம் விகடு.

            "இந்த ராத்திரி நாம்ம எப்பிடித் தூங்கப் போறெம்ன்னு தெரியல. சத்தியமா சொல்றேம், இந்த ராத்திரி மட்டுமில்ல, இனி வாரக் கூடிய ராத்திரியும் நாம்ம நிம்மதியா தூங்கப் போறதில்ல. இவ்ளோ கோழைத்தனமா செய்யு இருப்பான்னு நாம்ம நெனைக்கல மச்சாம். பேசுறப்பத்தாம் ரொம்ப தெகிரியமானவளாப் பேசுதா. மனசுக்குள்ள தெகிரியம் கொஞ்சம் கூட பத்தாது மச்சாம். அவளெ தெகிரியம் பண்ணணும். இத்துப் புரியாம இத்தனெ நாளு இருந்துட்டேம். இனுமே அவ்வேதாம் நமக்கு ஒலகம். அவளெ சரிபண்ணிக் கொண்டாரதுதாம் நமக்கு முழு நேர வேல!"ன்னாம் பாலாமணி.

            "ஒஞ்ஞளோட பேச்சக் கேக்குறப்போ சந்தோஷமா இருக்கு மச்சாம்! போதும்ன்னு நெனைக்குறேம் பேசுனது. படுங்க பேசிப்பேம்!"ன்னாம் விகடு. இந்தப் பேச்சையெல்லாம் கேக்குறாப்புல விகடு ஸ்பீக்கர்லப் போட்டுத்தாம் பேசுனாம்.

            எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு இருந்துகிட்டு, "ஒண்ணும் பெரிசா பெரச்சனெ இருக்குறாப்புல தெரியல. செய்யுதாம் மன தெகிரியம் யில்லாம் செஞ்சுப்புட்டதா நமக்குப் படுதுடாம்பீ! அவ்சரப்பட்டு இதுல எந்த முடிவையும் எடுத்துப்புட கூடாது. பொறுமெ முக்கியம். கொஞ்சம் காலம் தள்ளட்டும். அதாங் செரி. நாளைக்கு நாம்ம ஒரு ஏடாகூட முடிவெடுத்து அதால வெவகாரம் ஆயிடுச்சுனன், பெற்பாடு செய்யுவே வந்துக் கேப்பா, நாம்மத்தாம் தெரியத்தனமா பண்ணிட்டெம், பெரியவங்க நீஞ்ஞப் பாத்து நல்லதா பண்ணி வுடக் கூடாதான்னு? அதுக்கு எடம் இருக்கக் கூடாது! அதுக்குத் தகுந்தாப்புல பேசணும்டா மவனே! நீயென்னடா நெனைக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கும் அப்பிடித்தாம்ப்பா கொஞ்சம் கொஞ்சம் தோணுது. யிருந்தாலும் முழுசா பிடிபட மாட்டேங்குதுப்பா. பெரியவங்க நீஞ்ஞத்தாம் இதுல தகுந்தாப்புல முடிவெ சொல்லணும். நீஞ்ஞ அறிஞ்சு இந்த மாதிரிக்கில்லாம் செல சம்பவங்க நடந்திருக்கும். அதுல நடந்ததெ வெச்சித்தாம் நீஞ்ஞத்தாம் முடிவு பண்ணணும்ப்பா!"ன்னாம் விகடு.

            "பொம்பளப் புள்ளீயோ கொஞ்சம் உணர்ச்சிவசத்தாம் படும்ங்க. கொஞ்சம் அவ்சரப் புத்தியும் உண்டுத்தாம். ஒரு கொழந்தெ குட்டின்னா ஆனாக்கா கொஞ்சம் நெதானத்துக்கு வந்துப்புடும்ங்க. அதுவரைக்கும் கொஞ்சம் நாமல்லாம் பாத்துத்தாம் பண்ணி வுடணும். கொஞ்சம நஞ்சமா செஞ்சி கலியாணத்தெ கட்டி வுட்டுருக்கேம். அதெ நெனைச்சுப் பாத்தாலே போதுமடாம்பீ! இம்மாம் செஞ்ச யப்பனும் யண்ணணும் பத்தாயிர காசிய மூஞ்சில தூக்கி எறிஞ்சிப்புட மாட்டாங்களான்னு ஒந் தங்காச்சிக்குச் சொயமா தோணியிருக்கணும்! ன்னா பொண்ணுடாம்பீ இத்து? அப்பிடியே முடியாட்டியும் போனத்தாம் ன்னா? அதுக்காக யிப்பிடியா பொடவையில தொங்க நிப்பா? பத்தாயிரம் காசிய நாளைக்கிச் சம்பாதிச்சிப்புடலாம். உசுர எஞ்ஞடா போயிச் சம்பாதிக்கிறது? மொதல்ல புத்தி அப்பிடில்லடா வேல செய்யணும்? குடியா முழுவிப் போயிட்டு யிப்போ! மனசு ரொம்ப பெலகீனமா இருக்கடாம்பீ அதுக்கு. அதுக்குத் தகுந்தாப்புல பேச்சுத் தொணைக்கு அஞ்ஞ ஆளில்லாம ஒத்ததையா கெடந்து, இதையே நெனைச்சி நெனைச்சி கொமைஞ்சுப் போயிருக்கும் போலருக்கு. அதாங் யிப்பிடி மெலிஞ்சிப் போயிடுச்சு. நாம்ம நெனைச்சது ன்னான்னா கலியாணம் ஆன சோடிங்க. சந்தோஷமா இருக்குறதுக்கு அதுதாங் செரின்னு நெனைச்சதுதாங். அதாம் தப்பாப் போச்சு. யில்லன்னா யம்மாவ கூட அஞ்ஞ கொஞ்ச நாளிக்குத் தங்கச் சொல்லிட்டு வந்திருக்கலாம். அத்து கூட சொன்னிச்சு தங்கிட்டு வார்றேம்ன்னு. நாம்மத்தாம் வாண்டாம்ன்னுட்டேம். கலியாணம் ஆன ஒடனே மாமியார்ரக் கொண்டு போயி வுட்டு வூட்டோட மாப்புள்ளையா ஆக்க நெனைக்கிறதா நாலு பேத்துச் சொல்லிடப்படாதுன்னு பாத்தேம். எல்லாமே தப்பாப் போயிடுச்சுடா மவனே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒண்ணும் தப்பில்லப்பா! இப்பயும் செரி பண்ணிப்புடலாம்!"ன்னாம் விகடு.

            "ஆமாம்! இதெப் பத்தி வெளியில எதையும் சொல்லிக்கிட வாணாம். சொந்தத்துல ஆளாளுக்குத் தெரிஞ்சா சுத்தப்படாது. யிப்போ இருக்குற நெலமையில ஆளாளுக்கு ஒண்ணுத்தெ சொல்லி களைச்சி வுட்டுப்புடுவாங்க. காதுங் காதும் வெச்சது மாதிரிக்கி இதெ பேசி முடிச்சிப்புடணும். கொஞ்ச காலம் ஆனாக்கா பெறவு எல்லாம் மறந்துப் போயிடும். மனசுலயே யிப்பிடி ஒரு சம்பவம் நடந்தது இருக்காது. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆயிடும்ங்க. அது வரைக்கும் பொறுமையாத்தாம் இருந்தாவணும். ரண்டையும் ஒண்ணு சேத்துப்புடுறதுதாங் நல்லதுன்னு படுதுடாம்பீ! இத்துல ஒம் மனசுல எத்துவும் யிருந்தாலும் சொல்லிப்புடு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்குச் சட்டுன்னு ஒரு முடிவுக்கு வார முடியலப்பா. யிருந்தாலும் நீஞ்ஞ யப்படி நெனைச்சா, அதுதாங் தோதுப்படும்ன்னு முடிவெ பண்ணா, யப்படியே பண்ணிப்புடலம்ப்பா!"ன்னாம் விகடு.

*****

புடவையில கட்டிக்கிட்ட தூக்கு!

புடவையில கட்டிக்கிட்ட தூக்கு!

செய்யு - 580

            ஆர்குடி ஏயியிவோ ஆபிஸூக்குப் போயி வெவரத்தச் சொல்லிட்டு, சொசைட்டியில போயி ஐனவரி மாசத்துக்குச் சம்பளம் போடுறதுலேந்து தவணைத் தொகையைப் பிடிக்கச் சொல்லி கேட்டுக்கிட்டாம் விகடு. தவணைத் தொகைத் தள்ளிப் போறது நல்லதில்லன்னும், ஒடனே பிடிக்கிறதுதாங் நல்லதுன்னும் சொசைட்டியில சொன்னாங்க. இந்த மாசத்துல இருக்குற பணத்தேவையைச் சொல்லி பரவாயில்லன்னாம் விகடு. இந்தச் சோலிகள முடிச்சிட்டு டிவியெஸ்ல அவ்வேம் வீடு திரும்புனப்போ வூட்டுக்கு மின்னாடி கூட்டமா இருந்துச்சு. சனங்க வர்றதும் போறதுமா இருந்துச்சுங்க. விகடுவுக்கு அதெப் பாக்க அதிசயமா இருந்துச்சு. வூடெ வித்தியாசமா தெரியுறதா நெனைச்சாம். சரியா அந்த நேரத்துல வந்த தம்மேந்தி ஆத்தா, உடம்பெல்லாம் நடுங்கி, வாயெல்லாம் கொழறி, "போ! போயி தங்காச்சியப் பாரு!"ன்னுச்சு விகடுவெப் பாத்து.

            "ஏம்? என்னாச்சு?"ன்னாம் விகடு.

            "உள்ளாரப் போ! ஒமக்கே தெரியும். மனசெ கலங்க வுடப் படாதுய்யா! வெளியில நின்னுப் பேசப்படாது!"ன்னு கொரலு நடுங்க சொல்லிட்டு தம்மேந்தி ஆத்தா கெளம்பிப் போச்சு. விகடு கூடத்துல நோழைஞ்சாம். அவ்வேம் நொழைஞ்சதும் ஆயி வெளியில வந்து அவனெ பிடிச்சிக்கிட்டு அழுதா.

            "ஏம்டி எதுக்காக அழவுறே?"ன்னாம் விகடு ஒண்ணும் புரியாம.

            "செய்யு பண்ணதெக் கேட்டீயளா? ஏம் அத்து இப்பிடிப் பண்ணுச்சு?"ன்னா ஆயி.

            "ன்னாத்தா பண்ணதுன்னு சொன்னாத்தானே தெரியும்? தம்மேந்தி யாத்தா கூட புரியாம ஏதோ சொன்னிச்சு!"ன்னாம் விகடு.

            "செய்யு தூக்கு மாட்டிக்கிட்டுங்க!"ன்னா ஆயி. அதெ கேட்டதும் விகடுவுக்கு ஒரு கணம் ஒலகமே சொழலாம நின்னது போல இருந்துச்சு. உள்ளுக்கும் வெளிக்குமா ஓடிட்டு இருக்குற மூச்சுக் காத்து நின்னுடும் போல இருந்துச்சு. அவ்வேம் அதிர்ச்சியப் புரிஞ்சிக்கிட்டதும், "யிப்போ நல்லாத்தாம் இருக்கு. சித்த நேரம் தாமசம் ஆயிருந்தாலும் மோசம் போயிருக்குமுங்க! கடெசீ ரூமுலத்தாம் உக்காந்திருக்கு!"ன்னா ஆயி.

            விகடு கெளம்பிக் கடெசீ ரூமுக்குப் போனாம். செய்யு கட்டில்ல உக்காந்திருந்தா. பக்கத்துல வெங்கு அழுதுகிட்டெ உக்காந்திருச்சு. விகடுவப் பாத்ததும் அதோட அழுகெ அதிகமாயிடுச்சு. "பாருடாம்பீ! பொத்திப் பொத்தி வளத்து, பாத்துப் பாத்து கலியாணம் பண்ணி வுட்டா, ன்னாத்தா பண்ணப் பாத்திருக்கா?"ன்னுச்சு வெங்கு. விகடு செய்யுவோட பக்கத்துல உக்காந்தாம். அவனுக்கு இதயம் ரொம்ப வேகமா துடிக்கிறாப்புல இருந்துச்சு. அதெ வெளிக்காட்டிக்காம, "எப்போ நடந்துச்சு?"ன்னாம் விகடு.

            "மூணு மணி இருக்கும்டா. மத்தியானம் செரியா சாப்புட மாட்டேம்ன்னுட்டா. செரித்தாம் துணிக கொஞ்சம் கெடக்கேன்னு தொவைச்சிப் போட போனேம். போன பெறவுதாம் சவுக்காரத்தெ எடுத்துட்டுப் போவாம போனது ஞாபவம் வந்துச்சு. செரித்தாம்ன்னு எடுத்துட்டு வாரலாம்ன்னு ரூமுக்கு வந்தேம். வந்தா கதவுச் சாத்தி இருக்கு. கதவெத் தொறடிங்றேம். கதவு தாழ்ப்பாளு போட்டிருக்கு. செரித்தான் என்னான்னு சன்னலு வழியாப் பாத்தா பொடவையக் காத்தாடியிலப் போட்டு கழுத்துல சுருக்கப் போட்டிருந்தா. ஒடனே நாம்ம சத்தத்தெப் போட சனங்க வந்து கூடுனுச்சுங்க. ராசகுருதாம் ஓடியாந்து கதவெ ஒடைச்சித் தொறந்தாம். கொஞ்சம் தாமசம் ஆயிருந்தாலும் உசுரு போயிருக்கும்டா. யாரு பண்ண புண்ணியமோ பொழைச்சது பெரும் பொழைப்புடா!"ன்னுச்சு வெங்கு அழுதுகிட்டெ.

            "ஏம்ப்பா யிப்பிடி பண்ணே?"ன்னாம் விகடு செய்யுவப் பாத்து.

            "யப்பாவுக்குப் பொண்ணா, ஒனக்குத் தங்காச்சியாவே நம்ம வூட்டுலயேப் போயிச் சேந்துடலாம்ன்னு பாத்தேம் ண்ணே!"ன்னா செய்யு கொரலு தழுதழுக்க.

            "அதாங் ஏம்ன்னு கேக்குறேம்?"ன்னாம் விகடு.

            "யாத்தா பதினோரு மணி யிருக்கும். போனு பண்ணிச்சுண்ணே. அவுக பணம் கொடுத்த வெவகாரத்தெ யாத்தாகிட்டெ சொல்லிருப்பாகப் போலருக்கு. யாத்தா போன் பண்ணி, எங்கேருந்து வந்துச்சுடி ஒமக்கு அம்மாம் துணிவுன்னுச்சு. நாம்ம நடந்ததெ எல்லாத்தையும் சொன்னேம். யாத்தா எதையும் கேக்கல. இனுமே ஒன்னய வாழ வைக்குறதா? வேண்டாமாங்றதெ அவ்வேந்தாம் முடிவு பண்ணணும். நாம்ம ஒண்ணுத்துக்கும் பண்ணுறதக்கில்லன்னுச்சு. அதாங் யண்ணே இஞ்ஞ வாழாவெட்டியா இருக்குறதுக்கு ஒரே அடியா போயிச் சேந்துப்புடலாம்ன்னு முடிவெ பண்ணிட்டேம்!"ன்னா செய்யு.

            "நாம்ம இதெப் பத்தி நேத்தி ராத்திரிக்கிப் பேசிட்டுத்தானே படுத்தேம். பெறவு எதுக்கு இதெப் பத்தி கொழப்பிக்கிட்டெ?"ன்னாம் விகடு.

            "யில்லண்ணே! யாத்தா அப்பிடித்தாம் சொன்னிச்சு. வாழ்க்கையே போனுச்சுங்றாப்புல! அதெ இனுமே யாராலயும் செரி பண்ண முடியாதுன்னும், அவுக ஒரு முடிவு எடுத்துட்டா எடுத்ததுதாம்ன்னும் சொன்னுச்சு. நாம்ம சொல்ற எதெயும் ஏத்துக்கிடலண்ணே! நம்மள மன்னிச்சிடுங்கன்னு கெஞ்சுனேம் யண்ணே! அதெ கேட்டுக்கவே யில்லண்ணே! அதுக்குப் பெறவுதாண்ணே மனசு ஒடைஞ்சிப் போயி இப்பிடிப் பண்ணிட்டேம்!"ன்னா செய்யு. அவ்வே கொரலு சுத்தமா ஒடைஞ்சிப் போயிருந்துச்சு.

            சுப்பு வாத்தியாரும் அந்நேரமாப் பாத்து உள்ளார வந்தாரு. "யிப்ப ஒண்ணுஞ் சொல்லாதடாம்பீ! மனசு செரியில்ல அதுக்கு!"ன்னாரு.

            "ஒண்ணும் சொல்லலப்பா! ச்சும்மா நடந்ததெ கேட்டுக்கிட்டுத்தாம் இருக்கேம்!"ன்னாம் விகடு.

            அந்த நேரமாப் பாத்து எப்போ வந்தானோ, எப்பிடி வந்தானோ தெரியல. சுந்தரியோட மவ்வேம் வீட்டுக்குள்ளார வந்து கடைசி ரூமுக்கு உள்ளார வந்தாம்.

            அவனெப் பாக்க பாக்க வெங்குவுக்கு ஆத்திரமா வந்துச்சு. விகடுதாம் எதெயும் பேசிட வாணாம்ன்னு கண்ண காமிச்சிக்கிட்டு, "வாடாம்பீ! ன்னா விசயம்?"ன்னாம். "கோயிலுக்குப் போயிட்டு வந்த பெரசாதம்! வூட்டுல கொடுத்துட்டு வாரச் சொன்னாங்க. அதாங் வந்தேம்!"ன்னாம். சொல்லிட்டு எல்லாத்தையும் சுத்திலும் ஒரு பார்வையெப் பாத்துக்கிட்டாம். அதெ கொடுத்துட்டு ஒடனே கெளம்புனாம் அவ்வேம். அவனெ நிறுத்தி விகடு, "இருடாம்பீ! டீத்தண்ணியச் சாப்புட்டுப் போவலாம்!"ன்னாம்.

            "யில்ல யம்மா கொடுத்துட்டு ஒடனே வாரச் சொன்னிச்சு!"ன்னாம் சுந்தரியோட மவ்வேம்.

            "எப்பிடிடாம்பீ வந்தே?"ன்னாம் விகடு.

            "சைக்கிள்லத்தாம்!"ன்னாம் சுந்தரியோட மவ்வேம். சொல்லிட்டு மேக்கொண்டு எந்தப் பதிலையும் எதிர்பாக்காம அவ்வேம் பாட்டுக்கு வெளியில ஓடி சைக்கிள எடுத்துட்டு கெளம்பிட்டாம்.

            "பாருடாம்பீ! ஒரு விடுத்தான வுட்டு வேவு பாக்க வுட்டுருக்கிறதெ. இந்த அநியாயம் எங்காச்சும் நடக்குமா? அவனெ அப்பிடியே செவுட்டு இழுப்பா இழுத்து சொவத்துல வெச்சி நசுக்காம பேசி அனுப்பி வுடுறீயே?"ன்னுச்சு வெங்கு பொங்கி வந்த அழுகைய அடக்க முடியாம.

            "யிப்ப எதுவும் பண்ணுறதுக்கில்லம்மா! வெசயம் யிப்பவும் முழுசா வெளியில வந்துட்டதா தெரியல. இன்னுமும் சில விசயங்க தொக்கி நிக்குறாப்புலாத்தாம் நமக்குப் படுது! முழுசா எல்லாம் தெரியட்டும். பெறவு முடிவெப் பண்ணிக்கிடலாம்!"ன்னாம் விகடு.

            "யிப்போ ன்னா பண்ணுறது? தங்காச்சிய வுட்டு அந்தாண்ட இந்தாண்ட போவாதே. பக்கத்துலயே யிரு. பாத்துக்கிடலாம்!"ன்னாம் விகடு.

            "ஒனக்குப் பதற்றமோ, படபடப்போ, தங்காச்சிக்கு யிப்பிடி ஆயிடுச்சுன்னு எதுவுமே யில்லியாடா?"ன்னுச்சு வெங்கு.

            "இருக்குத்தாம். அதெ காட்டிக்கிறதுக்கு இத்து நேரமில்ல!"ன்னு சொல்லிட்டு விகடு அந்தாண்ட வந்தாம். சுப்பு வாத்தியாரு விகடுவோட சேந்து வெளியில வந்தாரு. "யிப்போ ன்னடாம்பீ பண்ணுறது?"ன்னாரு.

            "இந்த வெவகாரத்துக்குப் பணந்தாம் காரணம்ன்னா, யில்ல யாத்தா பேசுனதுதாம் காரணம்ன்னா செரி பண்ணிடலாம். வேற எதாச்சும் காரணம்ன்னா அதெத்தாம் செரி பண்ண முடியாது!"ன்னாம் விகடு.

            "வேற எதாச்சிம் காரணம்ன்னா, நமக்குப் புரியலையேடாம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பேசுறப்ப தங்காச்சியக் கவனீச்சிங்களா? இதுக்கு என்னவோ அதுவா ஒரு காரணத்தெ சொல்றாப்புலத்தாம் படுது. வேற யின்னும் எதோ காரணம் இருக்கும்ன்னு மனசுக்குப் படுது. நெசமான காரணம் வேறன்னுத்தாம் தோணுது. என்னானும் நம்மாலயும் கண்டுபிடிக்க முடியல. அதாங்ப்பா! கொஞ்சம் பொறுக்கலாம்ன்னு நெனைக்குறேம்!"ன்னாம் விகடு.

            இதுக்கு அடுத்ததா ஒரு சங்கதியா, அதுக்குள்ள பக்கத்து வூட்டு அய்யாவு சைக்கிள எடுத்துக்கிட்டு வேக வேகமா மிதிச்சிக்கிட்டு முருகு மாமாவோட வூட்டுக்குப் போயிருக்கு. போயி இந்த மாதிரிக்கிச் சங்கதின்னு சொல்லி, வந்து என்னா ஏதுன்னு பாருங்கன்னும் சொல்லிருக்கு. அப்போ முருகு மாமா சொல்லிருக்கு, "அவுங்களா வந்து சொல்லட்டும். கேட்பேம். நாம்மளா போயி கேக்கவும் முடியாது, வெசாரிக்கவும் முடியாது!"ன்னு. இந்தச் சம்பவத்தெ கேள்விப்பட்டதும் விகடுவுக்கு அய்யாவு மேலயும், முருகு மாமா மேலயும் கோவம் கோவமா வந்துச்சு.

            ஒரு வூட்டுல இப்பிடி ஒரு சங்கதின்னா ஊர்ல இப்பிடித்தாம் ஆளாளுக்கு மனசுல தோணுனபடியெல்லாம் எதாச்சம் பண்ணுவாங்க. அவுங்க நல்லது பண்ணுறதா நெனைச்சிப் பண்ணுறாங்களோ? கெட்டதெ பண்ணணும்ன்னு நெனைச்சிப் பண்ணுறாங்களோ? அதெ கண்டுபிடிக்க முடியாது. எதாச்சும் பண்ணலன்னா அவுங்களால தூங்க முடியாதுங்றது மட்டும் நிச்சயம். இந்தச் சம்பவத்துக்குப் பெறவு தெருவுலேந்து ஒவ்வொரு சனமா வந்து விசாரிக்க ஆரம்பிச்சதுங்க. நெசமான காரணம் என்னான்னு தெரியாதப்போ, எல்லாத்துக்கு என்ன காரணத்தெ சொல்றதுன்னுத்தாம் கொழப்பமா இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு ஏதோ செய்மொறையில கொறைய வெச்சிட்டாரு, அதாலத்தாம் பொண்ண கொண்டாந்து வுட்டு, அத்து தூக்குப் போட்டுக்கிட்டதா வூட்டுக்கு வந்த பக்குவமா வெசாரிச்சுக்கிட்டு ஆறுதல் சொன்னவங்க வெளியிலப் போனதும் பேசிக்கிட்டாங்க. நடந்த சம்பவத்தப் பாக்குறப்போ இதுல தூக்குப் போட்டுக்கிறதுக்கு ன்னா இருக்குதுன்னு விகடுவுக்கும் கொழப்பமாத்தாம் இருந்துச்சு. வேற ஏதோ இதுல வெவகாரம் இருக்கும்ன்னு தோணுச்சு அவனுக்கு. இதெப் பத்தி யாருகிட்‍டெ வெசாரிக்கிறதுன்னு யோசனையா இருந்தாம்.

            ஒரு நிமிஷ நேரம் சவுக்காரம் எடுக்கணும்ன்னு யம்மா வாராமப் போயிருந்தா தங்காச்சியோட நெலமெ என்னா ஆயிருக்கும்ன்னு நெனைக்க விகடுவுக்கு வேதனையா வேற இருந்துச்சு. ஒரு டாக்கடர்ரா இருக்குற மச்சாங்கார்ரேம் இந்த மாதிரிக்கி ஆளாளுகிட்டெ கோள் சொல்லுறாப்புல நடந்துக்கிறதெ நெனைச்சு அவனுக்கு எரிச்சலாவும் வந்துச்சு. நம்மகிட்டெயே பேசுறப்பவே அப்பிடித்தாம் பேசுனாம் என்னவோ ஊருல கோள் சோல்றதுக்குன்னே இருக்குற பொட்டச்சிகப் பத்த வைக்கிறதெப் போல நைசா. நெசமாலுமே அவ்வேம் பேச ஆரம்பிச்சா கோள் சொல்றதுக்குன்னே இருக்குற பொட்டச்சிக்கப் பேசுறாப்புலத்தாம் நுணுக்கி நுணுக்கி ஒவ்வொண்ணுத்துலயும் கொறையப் பாக்குறாம். அவ்வேம் கொணப்பாடே கொழப்பமாத்தாம் இருக்குன்னு நெனைச்சாம் விகடு.

            அன்னிக்கு ராத்திரி முழுக்க இதெப் பத்திதாம் பேச்சு நடந்துச்சு. மேக்கொண்டு என்னத்தெ பண்ணுறது? செய்யுவக் கொண்டுப் போயி வாழ வைக்குறதா? வூட்டுலயே வெச்சிக்கிறதா?ன்னு. ஆளாளுக்கு என்னத்தெ பேசுனாலும் ஒரு முடிவுக்கு வர முடியல. வெங்கு இனுமே மவளெ அங்க அனுப்பக் கூடாதுன்னு நின்னுச்சு. செய்யுவும் இனுமே அங்கப் போவ மாட்டேம்ன்னு அழுதா. ஆயிக்கும் அங்க அனுப்ப இஷ்டமில்லே. சுப்பு வாத்தியாருக்குக் கலியாணத்தக் கட்டி மூணு மாசத்துக்குள்ள இப்பிடின்னா என்னத்தெ முடிவு எடுக்குறதுன்னு கொழப்பமா இருந்துச்சு. அவரு பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டதெ வேற வெதமாவும் பாத்தாரு. ஒரு வேள பொண்ணு செத்துப் போயிருந்தா வூட்டோட நெலமெ என்னாவுதுன்னு நெனைச்சாரு. பெறவு இந்த வூட்டுல மனுஷன் இருக்குறது எப்பிடி? இந்த வூட்டு வித்துப்புடறதுன்னாலும் வாங்குறவன் யாரு?ன்ன பலவெதமா நெனைச்சி கலங்குனாரு.

            எல்லா கடமையையும் முடிச்சிட்டதா நெனைச்சு நின்ன மனுசருக்கு இப்பிடிப் பொண்ணு வந்து நின்னு, இந்த மாதிரிக்கி ஒரு காரியத்தெ பண்ணா எப்பிடித்தாம் இருக்கும்? பக்கு பக்குன்னுத்தாம் இருந்துச்சு அவருக்கு. தூக்கு மாட்டிக்கிட்ட பொடவையைக் கொண்டுப் போயி கொல்லைக் கடைசியில எரிச்சிருந்தாரு அவரு. அத்தோட அந்தக் கடைசீ ரூம்ல மேல இருந்த காத்தாடியக் கழட்டி அந்தக் கம்பியையும் வளைச்சி வுட்டுருந்தாரு.

*****

29 Sept 2020

விவசாய இதழ்களின் மிகை மதிப்பீடுகள்

விவசாய இதழ்களின் மிகை மதிப்பீடுகள்

            தமிழில் குறிப்பிடத்தக்க சில விவசாய இதழ்கள் வெளிவருகின்றன. பெயர் சொல்லித்தான் அந்த இதழ்களின் பெயர்களை அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் அந்த இதழ்கள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும். விவசாயத்திற்கென தனி இதழ்கள் வருவது ஆரோக்கியமான ஒன்று என்பதன் அடிப்படையில் அது ஒரு வகையில் மெத்த மகிழ்ச்சி தருவதுதான். நாளிதழ்களும் வாரத்தின் ஒரு நாளில் விவசாயத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்குகின்றன. நாளிதழ்களில் வரும் செய்திகள் பெரும்பாலும் விவசாயத்துக்கான ஆலோசனைகள், வழிகாட்டு முறைகள் என்பதோடு முடிந்து விடுகின்றன. விவசாயத்திற்கான தனி இதழ்களின் கட்டுரைகள், நேர்காணல்கள் போன்றவை அதீத விவசாய ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்தால் படித்த அடுத்த நொடியே விவசாயியாக மாறினாலன்றி ஜென்ம சாபல்யம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து விடுவீர்கள்.

            விவசாய இதழ்களின் நேர்காணல்களைப் படித்தால் நாட்டில் மருத்துவம், பொறியியல் என்று எவரும் படிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு வருமானம் கொட்டுவதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை அந்நேர்காணல்கள் உருவாக்குகின்றன. அவ்வளவு வருமானம் வந்தால் விவசாயத்தை வெறுத்தொதுக்கி ஏன் விவசாயிகள் நகர்ப்புற கூலித்தொழிலாளிகளாக உருமாறுகிறார்கள்? தன்னையே வெறுத்து ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? நம்பிக்கையும், ஆர்வமும் தரக்கூடிய நேர்கணால்கள் என்றாலும் அதில் ஓர் உண்மைத்தன்மை வேண்டாமா? இப்படித்தான் மிகைப்படுத்தி வெளியிடப்படும் சினிமா செய்திகளைப் போல விவசாயச் செய்திகளையும் வெளியிடுவதா?

            பெரும்பாலும் விவசாய இதழ்களில் நேர்காணல் செய்யப்படும் விவசாயிகளைப் பார்த்தால் பின்வரும் பொதுவான கூறுகளைக் கண்டறியலாம். 1. அந்தச் சாதனை விவசாயிகள் யாரும் முழுநேர விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள். 2. அந்த விவசாயிகள் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். 3. பகுதி நேரமாகவோ, பொழுது போக்காகவோ விவசாயம் செய்பவர்களாக இருப்பார்கள். 4. நிலத்தில் இறங்கிப் பாடுபடாதவர்களாக இருப்பார்கள். 5. இயற்கை வேளாண்மை செய்வதாகச் சொல்வார்கள். 6. அவர்களது பொருளாதார நிலையை வைத்துப் பார்த்தால் விவசாய வருமானம் அவர்களுக்கு உபரி வருமானமாக இருக்கும். 7. அவர்கள் பெரும்பாலும் சமூக, அரசியல் செல்வாக்கு மிகுந்த மனிதர்களாக இருப்பார்கள்.

            மேற்கண்ட நிலையிலிருந்து விவசாயம் செய்வதற்கும், நிலத்தில் இறங்கிப் பாடுபட்டு விவசாயம் செய்வதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. நிலத்தில் இறங்கிப் பாடுபடும் தொண்ணூறு விழுக்காடு விவசாயிகள் இந்த விவசாய இதழ்களைப் படிப்பவர்களாகவே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான நேரமும் இருக்காது. நிலத்தில் இறங்கிப் பாடுபடவும், அடுத்தடுத்த விவசாய வேலைகளைக் குடும்பத்தோடும், ஆட்களோடும் சேர்ந்து பார்ப்பதற்கே நேரம் போதாது. ஒரு சில மாடுகள் வளர்த்தாலே போதும், அதனைப் பராமரித்துப் பார்ப்பதற்கே நாள் முழுவதையும் செலவிடும் படியாக இருக்கும். விவசாய இதழ்களில் நேர்காணல் செய்யப்படும் விவசாயிகள் பராமரிக்கும் துல்லிய கணக்கு வழக்குகளை அவர்களால் பராமரிக்க முடியாது. குத்துமதிப்பாகத்தான் கணக்குகளைச் சொல்வார்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் எவ்வளவு மிஞ்சும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

            விவசாய இதழ்களில் நேர்காணல் செய்யப்படும் விவசாயிகள் மிகச் சரியாக, மிகச் சரியான விலையில், சில நேரங்களில் கூடுதலான விலையிலும் விவசாயப் பண்டங்களை விற்பனை செய்து விற்றுமுதல் காண்கிறார்கள். நடைமுறையில் ஒரு விவசாயிக்கு அது சாத்தியமே கிடையாது. அவர் வியாபாரிகளை நம்பியே இருக்கிறார். அவரிடம் கடன் வாங்கி அவரிடமே விளைவித்த பண்டங்களை அரைகுறையுமான விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். அரசு சார்ந்த கொள்முதல் நிலையங்களில் நேரிடும் காத்திருப்புகள், தர நிர்ணயிப்புகள் மற்றும் பணத்தைப் பெறுவதற்கான கால தாமதங்களால் பெரும்பாலான விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளையோ அல்லது வட்டிக் கடைக்காரர்களையோ நம்பித்தான் விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாய வங்கிக் கடன்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நேரடி விவசாயக் கடனை விட, தங்க நகையை அடமானமாக வைத்துத் தரும் விவசாயக் கடனில்தான் அதீத ஆர்வம் காட்டுவார்கள்.

            விவசாயத்தில் இவ்வளவு நடைமுறைச் சிரமங்கள் இருக்கையில் அவற்றைக் கண்டுணர்ந்து இந்த விவசாய இதழ்கள் எழுதுவதாக இல்லை. பலமுறை இந்த விவசாய இதழ்களைப் படிக்கும் போது அவ்விதழ்கள் விவசாய இதழ்களா? அல்லது தன்னம்பிக்கை மேம்பாட்டு இதழ்களா? என்ற வினாவை உங்களால் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. தன்னம்பிக்கை மேம்பாட்டு இதழ்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக இயற்கைநிலை போலி வாதங்களைக் கைக்கொள்வன. கிட்டதட்ட அதே பாணியில்தான் இந்த விவசாய இதழ்களும் இயற்கைநிலை போலிகளை அதிகம் கைக்கொள்கின்றன. அப்படி ஒரு வாதத்தைக் கைக்கொள்வதால்தான் அதிக இளைஞர்களை விவசாயத்தை நோக்கி ஈர்க்க முடியும் எனும் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் பற்றிய வினாவுக்கு அந்த வாதம் என்ன பதிலைச் சொல்ல முடியும்.

            அநேகமாக இந்தப் பத்தியானது விவசாய இதழ்களைக் குறை கூறும் நோக்கோடு எழுதப்பட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. விவசாயத்தின் உண்மையான பிரச்சனைகளை அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் வெளியிடுவதை நோக்கி விவசாய இதழ்கள் வர வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்படுவதே. நடைமுறையில் விவசாயிகளின் சாதனைக் கதைகளை விட சோகக் கதைகளே அதிகம் என்பதே எதார்த்தம். விவசாயம் குறித்த நம்பிக்கையை உருவாக்குவதாகக் கற்பிதம் செய்து கொண்டு, மிகை மதிப்பீடுகளை உருவாக்குவதை விட்டு விட்டு எதார்த்தத்தை நோக்கி விவசாய இதழ்கள் எப்போது வரப் போகின்றனவோ? அதுவரை இந்த விவசாய இதழ்கள் பேசும் விவசாயம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட விவசாயமாகவே இருக்கும். பரவலான விவசாயத்தைப் பற்றிப் பேசியதாக அமைய முடியாது.

*****

28 Sept 2020

பித்துப் புடிச்சாப்புல நடந்துக்குறா!

பித்துப் புடிச்சாப்புல நடந்துக்குறா!

செய்யு - 579

            ராத்திரிச் சாப்பாட்ட முடிச்சதும் கூடத்துக்கு அடுத்தாப்புல இருக்குற அறையில சுப்பு வாத்தியாரு, வெங்கு, விகடு, ஆயி, செய்யுன்னு எல்லாரும் உக்காந்தாங்க. சுப்பு வாத்தியாரு பேச ஆரம்பிச்சாரு.

            "கலியாணத்துக்குப் பெறவு ன்னா ஏதுன்னு எதையும் நாம்ம ஒங்கிட்டெ வெசாரிக்கல. ந்நல்லாத்தாம் இருப்பீங்கன்னு ஒரு நெனைப்பு. தாலிபெருக்கிப் போடுறப்ப வந்தப்பயும் எதுவும் கேட்டுக்கிடல. புருஷன் பொண்டாட்டிக்குள்ள செலது இருக்குறது வாஸ்தவந்தாம். அத்து ஒலையக் கொதிக்கப் போடுறப்ப ஆரம்பிச்சி ஒலை கொதிச்சு முடியுறதுக்குள்ள அடங்கிடும்ன்னு சொல்லுவாங்க. காலப்போக்குல எதுக்கும் சண்டெ போட்டோம்ங்றதெ மறந்துப் போறதுதாங் குடும்ப வாழ்க்கையே. அதால அதுல நாம்ம சம்பந்தப்பட்டுக்கிட விரும்பல. யிப்போ ஒடம்பெல்லாம் இளைச்சி வார்றதப் பாக்குறப்போ நமக்கும் சில விசயங்கள்ல சந்தேகமாப் போவுது. எதாச்சும் மனத்தாங்கால யிருந்தா அதெப் பத்திச் சொல்லு. அதெப் பத்தி பேசி வுடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            அதெ கேட்டுட்டுச் செய்யு பேசாம இருந்தா. "எதாச்சும் யிருந்தா சொல்லு! யப்பாத்தானே கேக்குறாங்க. யிங்க யாரு இருக்கா? யப்பா, நாம்ம, யண்ணன், யண்ணித்தானே இருக்குறது. எத்து மனசுல இருந்தாலும் சொல்லிப்புடு. மனசுல உள்ளதெ கொட்டுனாவே எல்லாம் ஆறிடும்!"ன்னுச்சு வெங்கு.

            அதுக்கும் செய்யு ஒண்ணும் சொல்லல. பேசாமத்தாம் யிருந்தா. அவ்வேகிட்டெயிருந்து ஒரு விம்மல் மட்டுமே வந்துச்சு.

            "நீயி எதுவுஞ் சொல்லாம இருக்குறதால நாம்ம கேள்விப்பட்ட ஒரு வெசயத்த மட்டும் நீந்தாம் ன்னா ஏதுன்னு வெளங்க வைக்கணும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒண்ணுமில்லப்பா! நீஞ்ஞ சொல்றதுதாங் செரி! கொஞ்ச நாளான்னா எல்லாஞ் செரியாயிடும்ன்னு நெனைக்கிறேம்!"ன்னா செய்யு.

            "யப்போ ஏத்தோ இருக்குதுன்னு அர்த்தம். அதெ சொல்லணும்ன்னு தோணுனா சொல்லு. ஒடனே சொல்லணும்ன்னு அவ்சரம் ஏதுமில்லே. நாளைக்கிக் கூட சொல்லலாம். நாலு நாளு கழிச்சிக் கூட சொல்லலாம். ஆன்னா எதா இருந்தாலும் சொல்லிப்புடு. அதெ சொன்னாத்தாம் எதாச்சிம் பண்ணி வுட முடியும். ஒனக்கும் மனசு கொஞ்சம் பாரம் எறங்குனாப்புல இருக்கும். நாம்ம அறிஞ்ச ஒரு விசயத்தெ மட்டும் சொல்லிப்புடுறேம். இன்னிக்கு ஒங் வூட்டுக்கார்ரேம் போன அடிச்சிருக்காம் யண்ணனுக்கு. நீயி ஏதோ சிநேகிதி ஒருத்திக்குப் பணம் கொடுக்கச் சொன்னதாவும் அதெ கொடுத்ததப் பத்தியும் பேசியிருக்காம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ச்சேய் மட்டமான மனுஷம்!"ன்னா செய்யு. அவ்வே திடுதிப்புன்னு ஏம் அப்பிடிச் சொல்றான்னு சுப்பு வாத்தியாருக்குக் கொழப்பமா இருந்துச்சு. "நீயிக் கொடுக்கச் சொன்னதாவும் அதாலத்தாம் கொடுத்ததாவும் இதுல ன்னா மட்டம், ஒசத்தி வந்திருக்குன்னு புரியலயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            ஒரு ரண்டு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெகைச்சிப் போயிருந்தா செய்யு. பெறவுதாம் வாயெடுத்தா. "ஒரத்தநாட்டுல போதும்பொண்ணு இருக்குல்லா யப்பா! அதோட தங்காச்சி நர்சிங் படிக்கிறா. அதுக்குப் பணம் கட்டணும் அவ்சரமா. கட்டலன்னா காலேஜூக்குப் போவ முடியாதுன்னு சொன்னிச்சு. ஒம் மூலமா ஏதும் வாய்ப்பு இருந்தா பண்ணிக் கொடு. எம்மாம் சீக்கிரமா பணத்தெ போரட்டித் தர்ற முடியுமோ அம்மாம் சீக்கிரமா பொரட்டித் தர்றதாவும் சொன்னிச்சு. இதெ அப்பிடியே நாம்ம அவுககிட்டெ சொன்னதுதாம்ப்பா! நம்ம கொடுன்னும் சொல்ல. கொடுக்க வாணாம்ன்னு சொல்லல. காலையில இதெ கேட்டுப்புட்டு ஆஸ்பிட்டல் போனவுக. மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தவுக நாம்ம உதவிப் பண்ணணும்ன்னாக. இந்த மாதிரிக்கிப் புண்ணியம்லாம் கெடைக்காதுன்னாக. செரி அப்பிடின்னா பண்ணுங்கன்னு சொன்னேம்! நடந்தது இதாங். அதுக்குப் பெறவு பணத்தெ எப்பிடி கொடுக்குறதுன்னு கேட்டு பாங்கியோட நம்பர்ர வாங்கித் தர்ற சொன்னாக. நாம்ம வாங்கிக் கொடுத்தேம். அம்புட்டுதாம் நாம்ம செஞ்சது. அன்னிக்கே பணத்தெ அனுப்பியிருப்பாகப்‍ போலருக்கு. நாம்ம செஞ்ச தப்பே போதும்பொண்ணு போன்ல நம்மகிட்டெ கேட்டதெ அவுககிட்டெ சொன்னதுதாம். நாம்ம சொல்லிருக்கக் கூடாதுன்னு பெறவுதாம் தெரிஞ்சிக்கிட்டெம்.

            "அன்னிக்கு ராத்திரி எங்கிட்டெ செரியா பேசல. பொரண்டு பொரண்டு படுத்துகிட்டெ இருந்தாக. கட்டில்ல படுக்காம வெறுந்தரையில படுத்தாக. ஏம் இப்பிடி கீழே படுக்குதீயேன்னு கேட்டேம். இத்து ஒங்கப்பம் செஞ்சுக் கொடுத்து கட்டில்லா. அதுல ஏம் நாம்ம படுக்கணும்? நீயே படுத்துக்கன்னாக. ஏம் இப்பிடி பேச்சு திடுதிப்புன்னு மாறுதுன்னு நமக்குப் புரியல. பணத்தெ அனுப்பு வரைக்கும் ஒழுங்க இருந்தா மனுஷம் அதெ அனுப்புன பெற்பாடுதாம் மாறியிருக்கிறதெ நாம்ம புரிஞ்சிக்கிட்டெம். அவுக மனசு கொடுக்கறதா, வாணாமான்னு அலைபாய்ஞ்சிக்கிட்டு இருந்திருக்கும் போல. நாம்ம சொல்லிட்டதால கெளரவத்துக்கு கொடுதிருக்குமோ என்னவோ! அப்பிடி ஒரு மனசு இருந்தா நம்மால முடியாதுன்னு சொல்ல வாண்டித்தானேப்பா.

            "கொடுக்குறதெ கொடுத்துப்புட்டு ஏம் ஒதுங்கிப் போவணும்? நமக்குப் புரிஞ்சிட்டுது. பெரச்சனைக்கு இதாங் காரணம்ன்னு. நமக்கு என்னத்தெ சொல்றதுன்னே புரியல. செரின்னு நாமளும் கீழே எறங்கி அவுக கூடயே படுத்தேம். அவுக தள்ளிப் படுத்தாக. நாமளும் தள்ளிப் படுத்தப்போ அவுக எழும்பி கதவெ தொறந்துகிட்டு வெளியில போனாக. திடீர்ன்னு வெளியில போனதும் கூடத்துல படுத்திருந்த தோலாமணி முழிச்சிக்கிட்டாம். ஏம்ண்ணே திடீர்ன்னுன்னாம் அவ்வேம்.  அவுக மூஞ்சியே கடுகடுன்ன இருந்துச்சு.

            "செரியில்லப்பா ஒம் யண்ணின்னாக அவுக. நமக்குக் கோவம் வந்துட்டுப்பா. சம்பந்தமே யில்லாத மூணாவது மனுஷங்கிட்டெப் போயி சரியில்ல அது இதுன்னு சொன்னா கோவம் வர்றத்தானேப்பா செய்யும். நமக்கு அழுகை அழுகையா வந்துச்சு. நாம்ம அழுவுறதெப் பாத்து தோலாமணி அவுககிட்டெப் பேசுனாம். யிப்படி ஒரு யண்ணி கெடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்ன்னாம். அதுக்கு நீந்தாம்டா மெச்சிக்கிடணும்ன்னு சொன்னாக அவுக. அப்பத்தாம்பா நமக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்து நாம்ம வாணும்ன்னா யப்பாகிட்டெ சொல்லி பணத்தெ வாங்கித் தந்துபுடறேம், அவுக மெதுவா அஞ்ஞயிருந்து பணத்தெ வாங்கிப்பாகன்னு சொன்னேம். அதாம்ப்பா சொன்னேம். வேறெதும் சொல்லல.

            "பெறவு எதுக்குடி நம்மள கலியாணம் பண்ணிக்கிட்டெ? ஒம் யப்பங்கிட்டெ பணம் இருக்குற கொழுப்பா? அம்புட்டு பணம் யிருந்தா வூட்டோட ஒரு புருஷனையும் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டித்தானே? எதுக்கு நம்மள கட்டி வெச்சாராம்? இந்தாரு இந்த வெசயத்தெ வெளியில சொல்லிட்டு இருந்தே. கெட்ட கோவம் வந்துபபுடும் நமக்கு. ஒதவி செய்யுறதெ ஒருபோதும் வெளியில சொல்லிக் காட்டக் கூடாது. நமக்கு அத்து பிடிக்காது. அப்பிடி இப்பிடின்னு சொன்னாக. அப்பிடிச் சொன்னதும் நாம்ம கேட்டேம், பெறவு எதுக்கு கோவப்படுறீயேன்னு? அதுக்கு நாம்ம ஒண்ணும் கோவப்படல. நீந்தாம் கோவப்படுத்துறேன்னாம்க.

            "யண்ணம் இப்பிடித்தாம் ஒதவி பண்ணுவாப்புல, அதெப் பத்தில்லாம் மனசுல வெச்சிக்கிட மாட்டாவோ, நீஞ்ஞ அதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிடாம போயிப் படுங்க யண்ணின்னாம் தோலாமணி. செரின்னு நாம்ம உள்ளார வந்துட்டேம். அவுக நெடு நேரமா உள்ளார வரல்ல! தோலாமணிகிட்டெ ‍ரொம்ப நேரமா பேசிட்டெ இருந்தாக. ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். நாம்ம மொல்லாமா வெளியில வந்து உள்ளார வாங்கன்னேம். நம்மளப் பேயாமப் போயி படுங்கன்னாக. நமக்குத் தூக்கமே பிடிக்கல. ரொம்ப நேரமா வாரலப்பா. நமக்கு நல்லா ஞாபவம் இருக்கு. மூணு மணி வரைக்கும் முழிச்சிட்டுத்தாம் இருந்தேம். வருவாக வருவாகன்னா வாரல. அதுக்குப் பெறவு எப்போ கண்ணசந்தன்னு தெரியலப்பா. ந்நல்லா தூங்கிட்டேம். விடிஞ்சிப் பாத்தா மணி ஆறரை ஆயிருந்துச்சு. வெளியில வந்துப் பாத்தேம். ஆள காங்கல. தோலாமணிய எழுப்பி வுட்டுக் கேட்டேம். நாலு மணி வரைக்கும் பேசிட்டு இருந்ததாவும், அப்பிடியே இஞ்ஞயே படுத்ததாவும் சொன்னாம். அதுக்குப் பெறவு அவனும் தூங்கிட்டதாவும், யண்ணன் எஞ்ஞப் போனுச்சுன்ன தெரியலன்னு சொன்னாம்.

            "நாம்ம ஒடனே அவுக நம்பருக்குப் போன அடிச்சேம். எடுக்க மாட்டேன்னுட்டாக. நாலு தடவைக்கு மேல அடிச்சிருப்பேம். எடுக்கல. பெறவு தோலாமணி அடிச்சதுக்குத்தாம் எடுத்தாக. எடுத்து ஆஸ்பிட்டலு போயிட்டதா சொன்னாக. வழக்கமா ஏழு மணிக்குல்லாத்தாம் கெளம்புவாக. எத்தனெ மணிக்குக் கெளம்புனாக? எப்போ போனாகன்னு தெரியல. நமக்கு அழுகெ அழுகெயா வந்துடுச்சுப்பா. நாம்ம அழுவுறதப் பாத்துட்டுத் தோலாமணி ஆஸ்பிட்டலுக்கு ஓடுனாம். அஞ்ஞப் போயி பேசிட்டு வந்து யண்ணம் காலச் சாப்பாட்டுக்கு வந்துடுவாக சமைச்சி வையுங்கன்னாம். நாமளும் அதெ கேட்டுப்புட்டுச் சந்தோஷமா செஞ்சி வெச்சேம்ப்பா. ஒம்போது மணி இருக்கும். வந்தாக.

            "கடையிலயே சாப்புட்டுப்புட்டதா சொன்னாக. நமக்கு வெறுத்துப் போச்சுப்பா. அதுலேந்து நம்மகிட்டெ ஒத்த வார்த்தெ பேசுறதில்லப்பா. வூட்டுலயும் சாப்புடுறது இல்ல. ஓட்டல்லத்தாம் சாப்புடுறது. அன்னிலேந்து நாம்ம சாப்புடவே யில்லப்பா. அதெ பத்தியும் கண்டுக்கிடறது யில்ல. தோலாமணித்தாம்ப்பா அழுது அழுது சொல்லிப் பாத்தாம். நாம்ம சாப்புடாம பிடிவாதமா இருக்குறதெப் பாத்து ஆத்தாவுக்குப் போன அடிச்சாம். ஆத்தா கெளம்பி வந்துச்சு பாக்குக்கோட்டையிலேந்து. என்னா ஏதுன்னு வெசாரிச்சிது. யாத்தா வந்ததும் தனியா நம்மள அழைச்சிட்டுப் போயி எதையும் சொல்லப்படாதுன்னாக. செரின்னு நாமளும் ஒண்ணுஞ் சொல்லாம யப்பா யம்மா ஞாபவமா இருக்குறதா சொன்னேம். செரின்னு யாத்தாதாம்பா நம்மள சாப்புட வெச்சது. மூணு நாளு கொலபட்டின்னிப்பா. அதெப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்கிடலப்பா அவுக. அதுக்குப் பெறவுத்தாம்பா யாத்தா நம்மள அழைச்சாந்துச்சு. இஞ்ஞ கொண்டாந்து வுட்டுச்சு. இதாம்ப்பா நடந்தது!"ன்னு சொல்லி முடிச்சா செய்யு.

            "இதான்னே? இத்து ஒண்ணும் பெரிய பெரச்சனெ யில்ல. இதுக்குப் போயா சாப்புடாம கெடப்பாக. நாம்ம இஞ்ஞ மாப்ளே பாக்குக்கோட்டைக்கு வர்றப்போ யண்ணனையும் அழைச்சிட்டுப் போயி ஒரத்தநாட்டுலேந்து அவுக வூட்டுல வந்து பணத்தெ கொடுத்துப்புட்டதா சொல்லிக் கொடுத்துப்புடுதேம். பெறவு மொல்லாமா நாம்ம ஒரத்தநாடுப் போயி சேதி இன்னதுன்னு சொல்லி அவுககிட்டெயிருந்து தோதுபட்டப்போ பணத்தெ வாங்கிக்கிடலாம். இதுக்குப் போயா மனசெ போட்டு ஒழட்டிப்பாக. மனசுக்குள்ள சஞ்சலம் யில்லாம போயி படு. ந்நல்லா சாப்புடு. நாம்ம கூட என்னவோ ஏதோ பெரிய வெவகாரமா இருக்கும்ன்னு நெனைச்சேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்யோ இத்து பெரிய வெவகாரம் யில்லியா யப்பா?"ன்னா செய்யு.

            "இதல்லாம் ஒண்ணுமில்ல! குடும்பத்துல யிப்பிடி நடக்குறதுதாங். ஆம்பளைக்கு பொம்பளக் கேக்கறப்போ அதெ செஞ்சிப்புடணுங்ற வீராப்பும் இறுமாப்பும் இருக்கும். அதுக்காக செஞ்சிருப்பாம் போல ஒம்மட வூட்டுக்கார்ரேம். செஞ்சதெ செஞ்சிப்புட்டு பெறவு யோசிச்சிருப்பாம் இந்த பணம் வாராதா? வாருமான்னு? ஒரு வேள வாராமப் போயிட்டா ன்னத்தா பண்ணுறதுங்ற நெனைப்பு மனசுக்குள்ள வந்திருக்கும். அதுல ன்னா பண்ணுறது? ஏது பண்ணுறதுன்னு தெரியாம இந்த மாதிரிக்கி நடந்துட்டு இருக்காம். ‍இதெ சரி பண்ணிப்புடலாம். இருந்தாலும் ஒரு விசயத்தெ நீயி புரிஞ்சிக்கிடணும். அவ்வேம் மூலமா இனுமே யாருக்கும் எந்த ஒதவியையும் பண்ணிப்புட வாணாம். இதுவே கடெசீயா இருக்கட்டும்! இத்து ஒனக்கு ஒரு புத்திக் கொள்முதல்ன்னு நெனைச்சுக்கோ. ஏத்தோ ஒரு பெரிய ஆபத்து பின்னாடி வர்றதுக்கு மின்னாடி இப்பிடி சின்னதா ஒரு வெசயம் நடந்துச்சுன்னு நெனைச்சுக்கோ. பணங்காசி சம்பந்தமா இனுமே நீயும் எதுவும் கேக்காதே. எதையும் சொல்லாதே. அதெல்லாம் ஆம்பளைகப் போக்குன்னு வுட்டுப்புடு! இதுக்குப் போயி ஏம் கொழப்பிட்டுக் கெடந்தே? போன்னப் போட்டு யின்ன மாதிரி விசயம்ன்னு சொல்லிருந்தா நாம்ம எப்பிடி இருக்கணும், ன்னா ஏதுன்னு சொல்லிருப்பம்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரிப்பா! ஆன்னா அவுக இதெப் பத்தி யாருட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாவுளேன்னுத்தாம் யாருகிட்டெயும் இதுவரைக்கும் சொல்லலப்பா! யிப்போ நீஞ்ஞ கேட்டதால்ல சொல்றாப்புல ஆயிடுச்சு. இதால வேறெதுவும் பெரச்சன வாரதுல்லா?"ன்னா செய்யு கேட்டப்பத்தாம் விகடுவுக்குப் பகீர்ன்னு இருந்துச்சு.

            "இஞ்ஞ நீயிச் சொன்னது அஞ்ஞ எப்பிடித் தெரியும்? ஏம் சம்பந்தம் யில்லாம நீயி பயப்படுறே? நாம்ம இதெப் போயி யாருட்டெ சொல்லப் போறேம்?"ன்னாம் விகடு.

            "ல்லண்ணே! இந்த மாதிரி விசயம்லாம் பத்தி துருவி துருவி ஆய்வாக அவுக. நாம்ம ஒஞ்ஞகிட்டெ சொன்னதெ எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாக!"ன்னு அழுதா செய்யு.

            "சொன்னவாசித்தானே செய்யு மனசுலேந்து பாரம் எறங்குனுச்சு! நம்ம வூட்டுல யாரு இதெப் பத்தி சொல்லுவா?"ன்னா ஆயி.

            "யில்லண்ணி! ஒஞ்ஞளுக்குத் தெரியாது. அவுக எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாக. நாம்ம இஞ்ஞ சொன்னதெ!"ன்னா செய்யு.

            "கண்டுபிடிச்சா பிடிச்சிட்டுப் போவட்டும். ஆமாம் நாம்ம கேட்டுத்தாம் சொன்னதா சொல்லிப்பேம்! அதெப் பத்தி நீயி யோஜிக்காதே. ஏன்னா அப்பிடியும் நீயி கவலெப்பட அவ்சியம் யில்ல. யண்ணங்கிட்டெ அவ்வேம் போனப் போட்டுச் சொல்லிருக்காம். அது வாயிலத்தாம் நாம்ம தெரிஞ்சிக்கிட்டேங்றதெ நாம்ம சொல்லிப்பேம். நீயி சம்பந்தமில்லாம கொழப்பிக்கிடாதே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆமாம்ப்பா! அப்பிடிச் சொல்லிக்கிடலாம்ல யப்பா! நம்மகிட்டெ இதெப் பத்தி யாருட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு அவுகத்தானே யப்பா யண்ணங்கிட்டெ இதெச் சொன்னது. யப்போ மொதல்ல அவுகத்தாம் சொன்னாக. நாம்ம மொதல்ல சொல்லலப்பா!"ன்னா செய்யு.

            "ன்னாங்க இவ்வே யிப்பிடி பேசுறா? நமக்குப் பயமால்ல யிருக்கு!"ன்னுச்சு வெங்கு.

            "கொஞ்சம் மனசு பயந்திருக்கு. பயந்த கொணம்தாம். ரண்டு நாளுக்கு நல்லா சாப்புட்டு தூங்கி எழும்புனா செரியா ஆயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதாங் பொழுதேனைக்கும் தூங்குறாளே! ஏதோ மாத்திரையல்லாம் கொடுத்திருக்காம் வேற. அதெப் போட்டாவே தூக்கம் வர்றதா சொல்லுதா! அதெ வேற பயந்துகிட்டுச் சாப்புட்டுட்டு கெடக்குறா. மருந்துகள குடிச்சிட்டுக் கெடக்கறா. என்னத்தெ சொல்றதுன்னே தெரியல. என்னவோ புருஷங்கார்ரேம் பக்கத்துல நின்னு பாத்துட்டு நிக்குறாப்புலயே பித்துப் பிடிச்சாப்புல நடந்துக்கிறா. நாமளும் ஒண்ணுத்தையும் சொல்ல வாணாம்ன்னுத்தாம் நெனைக்கிறேம். இவ்வே பண்ணுறதப் பாக்குறப்போ எதெ சொல்லாம இருக்குறது? எதெ சொல்லுறதுன்னே ஒண்ணும் புரிய மாட்டேங்குது!"ன்னுச்சு வெங்கு.

            இதென்னடா புதுசு புதுசா ஒவ்வொண்ணா வந்துக் குதிக்குதுன்னே யோசிக்க ஆரம்பிச்சாம் விகடு.

            "அதல்லாம் ஒண்ணுமில்ல போ! போயி எல்லாம் படுங்க. தூங்கி எழும்புனா எல்லாம் செரியாயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. எல்லாமும் வெவ்வேறு வெதமான யோசனைகளோட படுக்கப் போனுச்சுங்க.

*****


மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...