30 Sept 2020

மாற்ற முடியாது என்பது மாறாத தத்துவம்

மாற்ற முடியாது என்பது மாறாத தத்துவம்

            "தங்கள் மனதின் எந்த ஒரு பகுதியையும் யாரும் மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை. அதற்கு மாறாக மற்றவர்களையே மாற்ற நினைக்கிறார்கள். அதன் காரணமாக பல நேரங்களில் சொல்லப்படுகின்ற அற்புதமான கருத்துகளும், சரியான தீர்வுகளும் எடுத்துக் கொள்ளப்படாமலே குப்பைக்குச் சென்று விடுகின்றன." எஸ்.கே. தன் நாட்குறிப்பின் ஒரு பகுதியை எழுதி முடித்து ஓர் ஆழ்ந்த பெருமூச்சை விட்டுக் கொண்டார்.

            கடந்த பத்தாண்டுகளாக எம்.கே.யுடன் தனது நட்பை நினைத்துப் பார்த்தார். எம்.கே.யுடன் நட்பு கொண்ட நாளிலிருந்து எஸ்.கே. மிகப்பெரும் மன உளைச்சலைச் சந்தித்து வருகிறார். அது இன்றும் தொடர்கதையாக இருக்கிறது. இனி எப்போதும் தொடர்கதையாக இருக்க போகிறது. எம்.கே. தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பவராய், எஸ்.கே.வைப் பற்றியோ, எஸ்.கே.வுடன் தனக்கு ஒரு நட்பு உருவாகி இருப்பதைப் பற்றியோ கடைசி வரை யோசிக்க மறுத்தார். அவரால் அப்படி யோசிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒருவருடன் எப்படித் தனக்கு ஒரு நட்பு உருவானது என்பதை நினைக்க எஸ்.கே.வுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்றோ ஒரு நாள் உடைந்திருக்க வேண்டிய நட்பு எப்படி உடையாமல் போனதோ என்பதை எஸ்.கே.வால் யூகிக்க முடியவில்லை. பிரபஞ்ச சக்திகளுள் ஏதோ ஒன்றுதான் தங்களுடைய நட்பை உடைய விடாமல் காத்து வருகிறது என்ற நம்பிக்கைக்கு எஸ்.கே. வர வேண்டியதாக இருந்தது.

            எம்.கே.வின் சுபாவத்தில் சாதாரண ஒன்றை கூட மிகைப்படுத்தி அதற்காக பெரிதாகக் கவலைப்படும் போக்கால் எஸ்.கே.வை நாளுக்கு நாள் கொன்றார். எம்.கே.வின் மனநிலையின் சிறு துரும்பின் அசைவுக்கும் எஸ்.கே. உத்திரத்தால் அடிபட வேண்டியதாக இருந்தது. அவரின் அந்த மிக மோசமான மனநிலையை மாற்ற முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அதை மாற்ற முயன்று தோற்றுப் போனார் எஸ்.கே. அந்த மனநிலையை அவரது மிகப் பாதுக்காப்பான சொத்தைப் போல நினைத்து அதை விட மறுத்தார் எம்.கே. காலப்போக்கில் அது வளர்ந்து வளர்ந்து அவரது சுபாவமான பிறகு எஸ்.கே. மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானார். சமயங்களில் அதிகபட்ச விரக்திக்கும் ஆளானார்.

            ஒரு விசயம் மட்டும் எஸ்.கே.வுக்குப் புரிந்தது, யாரையும் மாற்ற முடியாது என்பது மட்டும். ஏனென்றால் அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அதாவது பகுதிப்பட்ட மனம். அதிலிருந்து வெளியே வந்து யோசிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அவர்கள் அப்பிடித்தான். அவர்களின் போக்கில்தான் போவார்கள். யாரையும் குறை சொல்வதற்கில்லை. அவர்கள் மனதால் இழுத்துச் செல்லப்படும் எந்திரங்களைப் போல்தான். மனம் இடும் கட்டளைக்கு ஏற்றாற் போல் செயல்பட்டுக் கொண்டு அதுதான் சரி என்பது போல வினையாற்றுவார்கள். இதை புரிந்து கொண்ட பிறகுதான் எஸ்.கே. தன் நாட்குறிப்பை எடுத்து நீங்கள் ஆரம்பத்தில் படித்ததை எழுதினார். மேலும் எஸ்.கே. தன் நாட்குறிப்பில் எழுதலானார்,

            "புரிய வைப்பதற்கோ, உணர வைப்பதற்கோ ஆன மனநிலை என்பது மிகப் பெரியது. வெகு சில மனிர்களாலே அந்த புரிதல் மற்றும் உணர்தல் என்ற நிலையில் ஊடுருவிப் பார்க்க முடியும். பல மனிதர்களுக்கு அது சாத்தியமே இல்லாதது. அதனால் நான் சொல்வதை நிறைய பேர் புரிந்து கொள்வதே இல்லை என்று வருத்தப்படுவது ஒரு வகை முட்டாள்தனம்தான். அவர்கள் புரிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ மறுக்கிறார்கள் என்பது இல்லை, அவர்களால் அஃது முடியாது என்பதுதான். முடியாது என்ற ஒன்றை, இயலாது என்ற ஒன்றை யார்தான் முயன்று பார்க்க செய்வார்கள்? விசயம் அதுதான். சில விசயங்களில் மாற்ற முடியாது என்பது மாறாத தத்துவம்."

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...