பித்துப் புடிச்சாப்புல நடந்துக்குறா!
செய்யு - 579
ராத்திரிச் சாப்பாட்ட முடிச்சதும் கூடத்துக்கு
அடுத்தாப்புல இருக்குற அறையில சுப்பு வாத்தியாரு, வெங்கு, விகடு, ஆயி, செய்யுன்னு எல்லாரும்
உக்காந்தாங்க. சுப்பு வாத்தியாரு பேச ஆரம்பிச்சாரு.
"கலியாணத்துக்குப் பெறவு ன்னா ஏதுன்னு
எதையும் நாம்ம ஒங்கிட்டெ வெசாரிக்கல. ந்நல்லாத்தாம் இருப்பீங்கன்னு ஒரு நெனைப்பு. தாலிபெருக்கிப்
போடுறப்ப வந்தப்பயும் எதுவும் கேட்டுக்கிடல. புருஷன் பொண்டாட்டிக்குள்ள செலது இருக்குறது
வாஸ்தவந்தாம். அத்து ஒலையக் கொதிக்கப் போடுறப்ப ஆரம்பிச்சி ஒலை கொதிச்சு முடியுறதுக்குள்ள
அடங்கிடும்ன்னு சொல்லுவாங்க. காலப்போக்குல எதுக்கும் சண்டெ போட்டோம்ங்றதெ மறந்துப்
போறதுதாங் குடும்ப வாழ்க்கையே. அதால அதுல நாம்ம சம்பந்தப்பட்டுக்கிட விரும்பல. யிப்போ
ஒடம்பெல்லாம் இளைச்சி வார்றதப் பாக்குறப்போ நமக்கும் சில விசயங்கள்ல சந்தேகமாப் போவுது.
எதாச்சும் மனத்தாங்கால யிருந்தா அதெப் பத்திச் சொல்லு. அதெப் பத்தி பேசி வுடலாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
அதெ கேட்டுட்டுச் செய்யு பேசாம இருந்தா.
"எதாச்சும் யிருந்தா சொல்லு! யப்பாத்தானே கேக்குறாங்க. யிங்க யாரு இருக்கா? யப்பா,
நாம்ம, யண்ணன், யண்ணித்தானே இருக்குறது. எத்து மனசுல இருந்தாலும் சொல்லிப்புடு. மனசுல
உள்ளதெ கொட்டுனாவே எல்லாம் ஆறிடும்!"ன்னுச்சு வெங்கு.
அதுக்கும் செய்யு ஒண்ணும் சொல்லல. பேசாமத்தாம்
யிருந்தா. அவ்வேகிட்டெயிருந்து ஒரு விம்மல் மட்டுமே வந்துச்சு.
"நீயி எதுவுஞ் சொல்லாம இருக்குறதால
நாம்ம கேள்விப்பட்ட ஒரு வெசயத்த மட்டும் நீந்தாம் ன்னா ஏதுன்னு வெளங்க வைக்கணும்?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ஒண்ணுமில்லப்பா! நீஞ்ஞ சொல்றதுதாங்
செரி! கொஞ்ச நாளான்னா எல்லாஞ் செரியாயிடும்ன்னு நெனைக்கிறேம்!"ன்னா செய்யு.
"யப்போ ஏத்தோ இருக்குதுன்னு அர்த்தம்.
அதெ சொல்லணும்ன்னு தோணுனா சொல்லு. ஒடனே சொல்லணும்ன்னு அவ்சரம் ஏதுமில்லே. நாளைக்கிக்
கூட சொல்லலாம். நாலு நாளு கழிச்சிக் கூட சொல்லலாம். ஆன்னா எதா இருந்தாலும் சொல்லிப்புடு.
அதெ சொன்னாத்தாம் எதாச்சிம் பண்ணி வுட முடியும். ஒனக்கும் மனசு கொஞ்சம் பாரம் எறங்குனாப்புல
இருக்கும். நாம்ம அறிஞ்ச ஒரு விசயத்தெ மட்டும் சொல்லிப்புடுறேம். இன்னிக்கு ஒங் வூட்டுக்கார்ரேம்
போன அடிச்சிருக்காம் யண்ணனுக்கு. நீயி ஏதோ சிநேகிதி ஒருத்திக்குப் பணம் கொடுக்கச்
சொன்னதாவும் அதெ கொடுத்ததப் பத்தியும் பேசியிருக்காம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ச்சேய் மட்டமான மனுஷம்!"ன்னா
செய்யு. அவ்வே திடுதிப்புன்னு ஏம் அப்பிடிச் சொல்றான்னு சுப்பு வாத்தியாருக்குக் கொழப்பமா
இருந்துச்சு. "நீயிக் கொடுக்கச் சொன்னதாவும் அதாலத்தாம் கொடுத்ததாவும் இதுல
ன்னா மட்டம், ஒசத்தி வந்திருக்குன்னு புரியலயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
ஒரு ரண்டு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெகைச்சிப்
போயிருந்தா செய்யு. பெறவுதாம் வாயெடுத்தா. "ஒரத்தநாட்டுல போதும்பொண்ணு இருக்குல்லா
யப்பா! அதோட தங்காச்சி நர்சிங் படிக்கிறா. அதுக்குப் பணம் கட்டணும் அவ்சரமா. கட்டலன்னா
காலேஜூக்குப் போவ முடியாதுன்னு சொன்னிச்சு. ஒம் மூலமா ஏதும் வாய்ப்பு இருந்தா பண்ணிக்
கொடு. எம்மாம் சீக்கிரமா பணத்தெ போரட்டித் தர்ற முடியுமோ அம்மாம் சீக்கிரமா பொரட்டித்
தர்றதாவும் சொன்னிச்சு. இதெ அப்பிடியே நாம்ம அவுககிட்டெ சொன்னதுதாம்ப்பா! நம்ம கொடுன்னும்
சொல்ல. கொடுக்க வாணாம்ன்னு சொல்லல. காலையில இதெ கேட்டுப்புட்டு ஆஸ்பிட்டல் போனவுக.
மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தவுக நாம்ம உதவிப் பண்ணணும்ன்னாக. இந்த மாதிரிக்கிப்
புண்ணியம்லாம் கெடைக்காதுன்னாக. செரி அப்பிடின்னா பண்ணுங்கன்னு சொன்னேம்! நடந்தது
இதாங். அதுக்குப் பெறவு பணத்தெ எப்பிடி கொடுக்குறதுன்னு கேட்டு பாங்கியோட நம்பர்ர
வாங்கித் தர்ற சொன்னாக. நாம்ம வாங்கிக் கொடுத்தேம். அம்புட்டுதாம் நாம்ம செஞ்சது.
அன்னிக்கே பணத்தெ அனுப்பியிருப்பாகப் போலருக்கு. நாம்ம செஞ்ச தப்பே போதும்பொண்ணு
போன்ல நம்மகிட்டெ கேட்டதெ அவுககிட்டெ சொன்னதுதாம். நாம்ம சொல்லிருக்கக் கூடாதுன்னு
பெறவுதாம் தெரிஞ்சிக்கிட்டெம்.
"அன்னிக்கு ராத்திரி எங்கிட்டெ செரியா
பேசல. பொரண்டு பொரண்டு படுத்துகிட்டெ இருந்தாக. கட்டில்ல படுக்காம வெறுந்தரையில படுத்தாக.
ஏம் இப்பிடி கீழே படுக்குதீயேன்னு கேட்டேம். இத்து ஒங்கப்பம் செஞ்சுக் கொடுத்து கட்டில்லா.
அதுல ஏம் நாம்ம படுக்கணும்? நீயே படுத்துக்கன்னாக. ஏம் இப்பிடி பேச்சு திடுதிப்புன்னு
மாறுதுன்னு நமக்குப் புரியல. பணத்தெ அனுப்பு வரைக்கும் ஒழுங்க இருந்தா மனுஷம் அதெ அனுப்புன
பெற்பாடுதாம் மாறியிருக்கிறதெ நாம்ம புரிஞ்சிக்கிட்டெம். அவுக மனசு கொடுக்கறதா, வாணாமான்னு
அலைபாய்ஞ்சிக்கிட்டு இருந்திருக்கும் போல. நாம்ம சொல்லிட்டதால கெளரவத்துக்கு கொடுதிருக்குமோ
என்னவோ! அப்பிடி ஒரு மனசு இருந்தா நம்மால முடியாதுன்னு சொல்ல வாண்டித்தானேப்பா.
"கொடுக்குறதெ கொடுத்துப்புட்டு
ஏம் ஒதுங்கிப் போவணும்? நமக்குப் புரிஞ்சிட்டுது. பெரச்சனைக்கு இதாங் காரணம்ன்னு.
நமக்கு என்னத்தெ சொல்றதுன்னே புரியல. செரின்னு நாமளும் கீழே எறங்கி அவுக கூடயே படுத்தேம்.
அவுக தள்ளிப் படுத்தாக. நாமளும் தள்ளிப் படுத்தப்போ அவுக எழும்பி கதவெ தொறந்துகிட்டு
வெளியில போனாக. திடீர்ன்னு வெளியில போனதும் கூடத்துல படுத்திருந்த தோலாமணி முழிச்சிக்கிட்டாம்.
ஏம்ண்ணே திடீர்ன்னுன்னாம் அவ்வேம். அவுக மூஞ்சியே
கடுகடுன்ன இருந்துச்சு.
"செரியில்லப்பா ஒம் யண்ணின்னாக அவுக.
நமக்குக் கோவம் வந்துட்டுப்பா. சம்பந்தமே யில்லாத மூணாவது மனுஷங்கிட்டெப் போயி சரியில்ல
அது இதுன்னு சொன்னா கோவம் வர்றத்தானேப்பா செய்யும். நமக்கு அழுகை அழுகையா வந்துச்சு.
நாம்ம அழுவுறதெப் பாத்து தோலாமணி அவுககிட்டெப் பேசுனாம். யிப்படி ஒரு யண்ணி கெடைக்க
கொடுத்து வெச்சிருக்கணும்ன்னாம். அதுக்கு நீந்தாம்டா மெச்சிக்கிடணும்ன்னு சொன்னாக
அவுக. அப்பத்தாம்பா நமக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்து நாம்ம வாணும்ன்னா யப்பாகிட்டெ சொல்லி
பணத்தெ வாங்கித் தந்துபுடறேம், அவுக மெதுவா அஞ்ஞயிருந்து பணத்தெ வாங்கிப்பாகன்னு சொன்னேம்.
அதாம்ப்பா சொன்னேம். வேறெதும் சொல்லல.
"பெறவு எதுக்குடி நம்மள கலியாணம்
பண்ணிக்கிட்டெ? ஒம் யப்பங்கிட்டெ பணம் இருக்குற கொழுப்பா? அம்புட்டு பணம் யிருந்தா
வூட்டோட ஒரு புருஷனையும் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டித்தானே? எதுக்கு நம்மள கட்டி
வெச்சாராம்? இந்தாரு இந்த வெசயத்தெ வெளியில சொல்லிட்டு இருந்தே. கெட்ட கோவம் வந்துபபுடும்
நமக்கு. ஒதவி செய்யுறதெ ஒருபோதும் வெளியில சொல்லிக் காட்டக் கூடாது. நமக்கு அத்து
பிடிக்காது. அப்பிடி இப்பிடின்னு சொன்னாக. அப்பிடிச் சொன்னதும் நாம்ம கேட்டேம், பெறவு
எதுக்கு கோவப்படுறீயேன்னு? அதுக்கு நாம்ம ஒண்ணும் கோவப்படல. நீந்தாம் கோவப்படுத்துறேன்னாம்க.
"யண்ணம் இப்பிடித்தாம் ஒதவி பண்ணுவாப்புல,
அதெப் பத்தில்லாம் மனசுல வெச்சிக்கிட மாட்டாவோ, நீஞ்ஞ அதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிடாம
போயிப் படுங்க யண்ணின்னாம் தோலாமணி. செரின்னு நாம்ம உள்ளார வந்துட்டேம். அவுக நெடு
நேரமா உள்ளார வரல்ல! தோலாமணிகிட்டெ ரொம்ப நேரமா பேசிட்டெ இருந்தாக. ஒரு மணி நேரத்துக்கு
மேல ஆயிருக்கும். நாம்ம மொல்லாமா வெளியில வந்து உள்ளார வாங்கன்னேம். நம்மளப் பேயாமப்
போயி படுங்கன்னாக. நமக்குத் தூக்கமே பிடிக்கல. ரொம்ப நேரமா வாரலப்பா. நமக்கு நல்லா
ஞாபவம் இருக்கு. மூணு மணி வரைக்கும் முழிச்சிட்டுத்தாம் இருந்தேம். வருவாக வருவாகன்னா
வாரல. அதுக்குப் பெறவு எப்போ கண்ணசந்தன்னு தெரியலப்பா. ந்நல்லா தூங்கிட்டேம். விடிஞ்சிப்
பாத்தா மணி ஆறரை ஆயிருந்துச்சு. வெளியில வந்துப் பாத்தேம். ஆள காங்கல. தோலாமணிய எழுப்பி
வுட்டுக் கேட்டேம். நாலு மணி வரைக்கும் பேசிட்டு இருந்ததாவும், அப்பிடியே இஞ்ஞயே படுத்ததாவும்
சொன்னாம். அதுக்குப் பெறவு அவனும் தூங்கிட்டதாவும், யண்ணன் எஞ்ஞப் போனுச்சுன்ன தெரியலன்னு
சொன்னாம்.
"நாம்ம ஒடனே அவுக நம்பருக்குப் போன
அடிச்சேம். எடுக்க மாட்டேன்னுட்டாக. நாலு தடவைக்கு மேல அடிச்சிருப்பேம். எடுக்கல. பெறவு
தோலாமணி அடிச்சதுக்குத்தாம் எடுத்தாக. எடுத்து ஆஸ்பிட்டலு போயிட்டதா சொன்னாக. வழக்கமா
ஏழு மணிக்குல்லாத்தாம் கெளம்புவாக. எத்தனெ மணிக்குக் கெளம்புனாக? எப்போ போனாகன்னு
தெரியல. நமக்கு அழுகெ அழுகெயா வந்துடுச்சுப்பா. நாம்ம அழுவுறதப் பாத்துட்டுத் தோலாமணி
ஆஸ்பிட்டலுக்கு ஓடுனாம். அஞ்ஞப் போயி பேசிட்டு வந்து யண்ணம் காலச் சாப்பாட்டுக்கு
வந்துடுவாக சமைச்சி வையுங்கன்னாம். நாமளும் அதெ கேட்டுப்புட்டுச் சந்தோஷமா செஞ்சி
வெச்சேம்ப்பா. ஒம்போது மணி இருக்கும். வந்தாக.
"கடையிலயே சாப்புட்டுப்புட்டதா சொன்னாக.
நமக்கு வெறுத்துப் போச்சுப்பா. அதுலேந்து நம்மகிட்டெ ஒத்த வார்த்தெ பேசுறதில்லப்பா.
வூட்டுலயும் சாப்புடுறது இல்ல. ஓட்டல்லத்தாம் சாப்புடுறது. அன்னிலேந்து நாம்ம சாப்புடவே
யில்லப்பா. அதெ பத்தியும் கண்டுக்கிடறது யில்ல. தோலாமணித்தாம்ப்பா அழுது அழுது சொல்லிப்
பாத்தாம். நாம்ம சாப்புடாம பிடிவாதமா இருக்குறதெப் பாத்து ஆத்தாவுக்குப் போன அடிச்சாம்.
ஆத்தா கெளம்பி வந்துச்சு பாக்குக்கோட்டையிலேந்து. என்னா ஏதுன்னு வெசாரிச்சிது. யாத்தா
வந்ததும் தனியா நம்மள அழைச்சிட்டுப் போயி எதையும் சொல்லப்படாதுன்னாக. செரின்னு நாமளும்
ஒண்ணுஞ் சொல்லாம யப்பா யம்மா ஞாபவமா இருக்குறதா சொன்னேம். செரின்னு யாத்தாதாம்பா
நம்மள சாப்புட வெச்சது. மூணு நாளு கொலபட்டின்னிப்பா. அதெப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்கிடலப்பா
அவுக. அதுக்குப் பெறவுத்தாம்பா யாத்தா நம்மள அழைச்சாந்துச்சு. இஞ்ஞ கொண்டாந்து வுட்டுச்சு.
இதாம்ப்பா நடந்தது!"ன்னு சொல்லி முடிச்சா செய்யு.
"இதான்னே? இத்து ஒண்ணும் பெரிய பெரச்சனெ
யில்ல. இதுக்குப் போயா சாப்புடாம கெடப்பாக. நாம்ம இஞ்ஞ மாப்ளே பாக்குக்கோட்டைக்கு
வர்றப்போ யண்ணனையும் அழைச்சிட்டுப் போயி ஒரத்தநாட்டுலேந்து அவுக வூட்டுல வந்து பணத்தெ
கொடுத்துப்புட்டதா சொல்லிக் கொடுத்துப்புடுதேம். பெறவு மொல்லாமா நாம்ம ஒரத்தநாடுப்
போயி சேதி இன்னதுன்னு சொல்லி அவுககிட்டெயிருந்து தோதுபட்டப்போ பணத்தெ வாங்கிக்கிடலாம்.
இதுக்குப் போயா மனசெ போட்டு ஒழட்டிப்பாக. மனசுக்குள்ள சஞ்சலம் யில்லாம போயி படு.
ந்நல்லா சாப்புடு. நாம்ம கூட என்னவோ ஏதோ பெரிய வெவகாரமா இருக்கும்ன்னு நெனைச்சேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"யப்யோ இத்து பெரிய வெவகாரம் யில்லியா
யப்பா?"ன்னா செய்யு.
"இதல்லாம் ஒண்ணுமில்ல! குடும்பத்துல
யிப்பிடி நடக்குறதுதாங். ஆம்பளைக்கு பொம்பளக் கேக்கறப்போ அதெ செஞ்சிப்புடணுங்ற வீராப்பும்
இறுமாப்பும் இருக்கும். அதுக்காக செஞ்சிருப்பாம் போல ஒம்மட வூட்டுக்கார்ரேம். செஞ்சதெ
செஞ்சிப்புட்டு பெறவு யோசிச்சிருப்பாம் இந்த பணம் வாராதா? வாருமான்னு? ஒரு வேள வாராமப்
போயிட்டா ன்னத்தா பண்ணுறதுங்ற நெனைப்பு மனசுக்குள்ள வந்திருக்கும். அதுல ன்னா பண்ணுறது?
ஏது பண்ணுறதுன்னு தெரியாம இந்த மாதிரிக்கி நடந்துட்டு இருக்காம். இதெ சரி பண்ணிப்புடலாம்.
இருந்தாலும் ஒரு விசயத்தெ நீயி புரிஞ்சிக்கிடணும். அவ்வேம் மூலமா இனுமே யாருக்கும்
எந்த ஒதவியையும் பண்ணிப்புட வாணாம். இதுவே கடெசீயா இருக்கட்டும்! இத்து ஒனக்கு ஒரு
புத்திக் கொள்முதல்ன்னு நெனைச்சுக்கோ. ஏத்தோ ஒரு பெரிய ஆபத்து பின்னாடி வர்றதுக்கு
மின்னாடி இப்பிடி சின்னதா ஒரு வெசயம் நடந்துச்சுன்னு நெனைச்சுக்கோ. பணங்காசி சம்பந்தமா
இனுமே நீயும் எதுவும் கேக்காதே. எதையும் சொல்லாதே. அதெல்லாம் ஆம்பளைகப் போக்குன்னு
வுட்டுப்புடு! இதுக்குப் போயி ஏம் கொழப்பிட்டுக் கெடந்தே? போன்னப் போட்டு யின்ன
மாதிரி விசயம்ன்னு சொல்லிருந்தா நாம்ம எப்பிடி இருக்கணும், ன்னா ஏதுன்னு சொல்லிருப்பம்லா!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"செரிப்பா! ஆன்னா அவுக இதெப் பத்தி
யாருட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாவுளேன்னுத்தாம் யாருகிட்டெயும் இதுவரைக்கும்
சொல்லலப்பா! யிப்போ நீஞ்ஞ கேட்டதால்ல சொல்றாப்புல ஆயிடுச்சு. இதால வேறெதுவும் பெரச்சன
வாரதுல்லா?"ன்னா செய்யு கேட்டப்பத்தாம் விகடுவுக்குப் பகீர்ன்னு இருந்துச்சு.
"இஞ்ஞ நீயிச் சொன்னது அஞ்ஞ எப்பிடித்
தெரியும்? ஏம் சம்பந்தம் யில்லாம நீயி பயப்படுறே? நாம்ம இதெப் போயி யாருட்டெ சொல்லப்
போறேம்?"ன்னாம் விகடு.
"ல்லண்ணே! இந்த மாதிரி விசயம்லாம்
பத்தி துருவி துருவி ஆய்வாக அவுக. நாம்ம ஒஞ்ஞகிட்டெ சொன்னதெ எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாக!"ன்னு
அழுதா செய்யு.
"சொன்னவாசித்தானே செய்யு மனசுலேந்து
பாரம் எறங்குனுச்சு! நம்ம வூட்டுல யாரு இதெப் பத்தி சொல்லுவா?"ன்னா ஆயி.
"யில்லண்ணி! ஒஞ்ஞளுக்குத் தெரியாது.
அவுக எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாக. நாம்ம இஞ்ஞ சொன்னதெ!"ன்னா செய்யு.
"கண்டுபிடிச்சா பிடிச்சிட்டுப் போவட்டும்.
ஆமாம் நாம்ம கேட்டுத்தாம் சொன்னதா சொல்லிப்பேம்! அதெப் பத்தி நீயி யோஜிக்காதே. ஏன்னா
அப்பிடியும் நீயி கவலெப்பட அவ்சியம் யில்ல. யண்ணங்கிட்டெ அவ்வேம் போனப் போட்டுச்
சொல்லிருக்காம். அது வாயிலத்தாம் நாம்ம தெரிஞ்சிக்கிட்டேங்றதெ நாம்ம சொல்லிப்பேம்.
நீயி சம்பந்தமில்லாம கொழப்பிக்கிடாதே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஆமாம்ப்பா! அப்பிடிச் சொல்லிக்கிடலாம்ல
யப்பா! நம்மகிட்டெ இதெப் பத்தி யாருட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு அவுகத்தானே
யப்பா யண்ணங்கிட்டெ இதெச் சொன்னது. யப்போ மொதல்ல அவுகத்தாம் சொன்னாக. நாம்ம மொதல்ல
சொல்லலப்பா!"ன்னா செய்யு.
"ன்னாங்க இவ்வே யிப்பிடி பேசுறா?
நமக்குப் பயமால்ல யிருக்கு!"ன்னுச்சு வெங்கு.
"கொஞ்சம் மனசு பயந்திருக்கு. பயந்த
கொணம்தாம். ரண்டு நாளுக்கு நல்லா சாப்புட்டு தூங்கி எழும்புனா செரியா ஆயிடும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அதாங் பொழுதேனைக்கும் தூங்குறாளே!
ஏதோ மாத்திரையல்லாம் கொடுத்திருக்காம் வேற. அதெப் போட்டாவே தூக்கம் வர்றதா சொல்லுதா!
அதெ வேற பயந்துகிட்டுச் சாப்புட்டுட்டு கெடக்குறா. மருந்துகள குடிச்சிட்டுக் கெடக்கறா.
என்னத்தெ சொல்றதுன்னே தெரியல. என்னவோ புருஷங்கார்ரேம் பக்கத்துல நின்னு பாத்துட்டு
நிக்குறாப்புலயே பித்துப் பிடிச்சாப்புல நடந்துக்கிறா. நாமளும் ஒண்ணுத்தையும் சொல்ல
வாணாம்ன்னுத்தாம் நெனைக்கிறேம். இவ்வே பண்ணுறதப் பாக்குறப்போ எதெ சொல்லாம இருக்குறது?
எதெ சொல்லுறதுன்னே ஒண்ணும் புரிய மாட்டேங்குது!"ன்னுச்சு வெங்கு.
இதென்னடா புதுசு புதுசா ஒவ்வொண்ணா வந்துக்
குதிக்குதுன்னே யோசிக்க ஆரம்பிச்சாம் விகடு.
"அதல்லாம் ஒண்ணுமில்ல போ! போயி
எல்லாம் படுங்க. தூங்கி எழும்புனா எல்லாம் செரியாயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
எல்லாமும் வெவ்வேறு வெதமான யோசனைகளோட படுக்கப் போனுச்சுங்க.
*****
No comments:
Post a Comment