30 Sept 2020

ஒண்ணு சேத்துப்புடுவோம்!

ஒண்ணு சேத்துப்புடுவோம்!

செய்யு - 581

            விகடு எல்லாத்தோடயும் பேசிட்டு இருக்கறப்போ ராசாமணி தாத்தா போன அடிச்சாரு. அந்த நேரத்துல எதிர்பாக்காத அழைப்பு. சுப்பு வாத்தியார்கிட்டெ ராசாமணி தாத்தா கூப்புடுறதெப் பத்திச் சொன்னாம். சுப்பு வாத்தியாரு ஒரு பார்வெ பாத்துட்டு, "நீயே பேசு. வார்த்தைய வுட்டுப்புடாம பதனமா பேசு! யிப்போ நாம்ம பேசல!"ன்னாரு. விகடு போனுல பச்ச பொத்தான அழுத்திட்டுப் பேசுனாம். எப்பிடி ஆரம்பிக்கிறதுங்ற கொழப்பமில்லாம,             "செளரியமா இருக்கீயளா தாத்தா?"ன்னுத்தாம் விகடு ஆரம்பிச்சாம்.

            "இந்தாருடா! நாம்ம கேள்விப்படுற சங்கதியில்லாம் ந்நல்லா யில்ல யாமாம். அஞ்ஞ வடவாதியில ஆனந்தம் பயெ, அதாங் சங்குவோட தம்பீ இருக்காம்ல அவ்வேம் அடிச்சிப்புடுவேம், வெட்டிப்புடுவேம்ன்னு பேசிட்டு நிக்காம். நாம்மத்தாம் போனப் போட்ட சித்தெ அமைதியா இருடான்னு சொல்லிட்டு இருக்கேம். செரித்தாம் போடான்னு அவ்வேம் ஒருத்தனெ வுட்டாவே வூடு தாங்காதுப் பாத்துக்கோ! ன்னடா நெனைச்சிக்கிட்டு இருக்கே? அப்பங்கிட்டெப் போன கொடு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அப்பங்காரரு பேசக்கூடிய மனநிலையில யில்லங்றது புரிஞ்சது விகடுவுக்கு. ரொம்ப சாமர்த்தியமா, "யப்பா! வெளியில போயிருக்கு தாத்தா!"ன்னாம்.

            "வந்தோன்ன சொல்லிப்புடு. நமக்குச் செல வெவகாரங்கப் பிடிக்காதுன்னு. செரிபட்டா பாப்பேம். ல்லன்னா வெச்சிக்கோ யப்பனும் மவனுமா வந்து போட்ட பவுனையும், பணத்தையும் வாங்கிட்டுத் துண்டக் காணும், துணியக் காணும்ன்னு ஓடிட்டே யிருங்க! அநாவசிய உறுமல் நமக்குப் பிடிக்காது பாத்துக்கோ!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "யிப்போ ன்னா ஆச்சுன்னு தாத்தா யிப்பிடி பேசிட்டு இருக்கீயே? தாத்தால வயசுல மூத்தது. நல்லது கெட்டதெ தாத்தாத்தாம் எடுத்துச் சொல்லணும்!"ன்னாம் விகடு.

            "இந்தப் பேச்செல்லாம் நம்மகிட்டெ பேசாதே யாமா? நீஞ்ஞ எதெப் பண்ணாலும் பயந்துப்புடுவேம்ன்னு நெனைச்சியா? ஊர்ர கூட்டிட்டா மெரண்டுடுவேம்ன்னு நெனைச்சியா? இந்தாருடா நாம்ம அந்தக் காலத்துலேந்தே ரெளடிக. ஏத்தோ சித்தெ செரியா இருக்கலாம்ன்னு நெனைச்சா வுட மாட்டீயே போலருக்கே. பாக்குக்கோட்டையில வந்த வெசாரிச்சிப் பாரு. இருவது வருஷத்துக்கு மின்னாடி நாம்ம எப்பிடின்னு? அருவாள தூக்குனேம்ன்னா ரத்தம் பாக்காம திரும்ப மாட்டேம். கத்தின்னு எடுத்தா நாலு கொடல குத்திச் செருவுனாத்தாம் வேகம் அடங்கும். அப்பிடில்லாம் யிருந்த ஆளு. எதுக்கு நமக்கு இந்த ரத்தம், ரெளடித்தனம்ன்னு ஒதுங்குனதுதாம். யிப்பவும் அந்த ரத்தம் ஓடிட்டுத்தாம் இருக்கு. எப்ப வாணாம்ன்னாலும் உள்ளுக்குள்ள ஓடிட்டு இருக்குறது வெளியில தலையக் காட்டலாம் பாத்துக்கோ! ஏதோ சாதவம் நாம்ம யிப்படி இருக்கணும்ன்னு போவ, அப்பிடியே செரித்தாம்ன்னு எல்லாத்தையும் போட்டுப்புட்டு, யின்னிக்கு சாதவக்காரனா நிக்குதேம். அதுக்காக பழசெல்லாம் மறந்துப்புட்டேன்னு நெனைச்சிப்புடாதே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அத்து ரொம்ப எகிறியடிச்சுப் பேசுறாப்புல பட்டுச்சு விகடுவுக்கு. கொஞ்சம் ஒரு தட்டு தட்டுனாத்தாம் செரிபட்டு வருன்னு தோண விகடு பேச ஆரம்பிச்சாம்.

            "ஏம் ஒமக்கு என்னாச்சி தாத்தா? ஏம் சம்பந்தம் சம்பந்தம் யில்லாமப் பேசிட்டு இருக்கே நீயி? இஞ்ஞ ஒண்ணும் நடக்கல. எல்லாம் ஒழுங்காத்தாம் இருக்கு. நீந்தாம் குவார்ட்டர்ர ஊத்திட்டோ, கஞ்சாவ அடிச்சிக்கிட்டோ பேசுறதா படுது. அப்பிடி யிருந்தா காலையில தெளிச்சாப்புல பேசு. யில்லன்னா நீயி பேசுற பேச்சையெல்லாம் ரிகார்ட்டு பண்ணுறாப்புலத்தாம் போன வெச்சிருக்கேம். இதெ அப்பிடியே கொண்டு போயி எங்க கொடுக்கணுமோ அங்க கொடுக்குறதுக்கு நேரமாவாது! போவ வேண்டிய எடத்துக்கு இந்நேரத்துக்குப் போயிருந்தா இந்தப் பேச்சு வந்திருக்காது!"ன்னாம் விகடு. அப்பத்தாம் ராசாமணி தாத்தா சுதாரிச்சிக்கிட்டு. போலீஸ் வரையில போகலன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கொழைஞ்சிப் பேச ஆரம்பிச்சது.

            "எலே பேராண்டி! என்னத்தடா பேசுதே? ஏத்தோ அஞ்ஞ பெரச்சனைன்னு கேள்விப்பட்டேம்! அதாங் பேசுனேம்! அஞ்ஞ நீஞ்ஞளும், அந்த ஆனந்தெம் பயலும் அடிச்சிட்டு நின்னா நல்லாவா இருக்கும்? பெரியவுக நாம்மத்தானே பேசி செரிபண்ணி வுடணும்! நாம்மத்தாம் அந்தப் பயலெ பேயாம இருடான்னேம். நாம்ம ல்லன்னா வெச்சுக்கோ இந்நேரத்துக்கு அருவாளா தூக்கிட்டு வந்து வூட்டுக்கு மின்னாடி நின்னுருப்பாம் பாத்துக்கோ!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அதுக்குப் பெறவு அதோட பேசுற மொறையில கொஞ்சம் மாத்தம் உண்டானுச்சு. மெரட்டுற தோரணை மாறி கெஞ்சுற தொரணை வந்துச்சு. பேசுற பேச்சு ரொம்ப சிறுபுள்ளத்தனமா இருக்குறதா பட்டுச்சு விகடுவுக்கு. இந்தப் பயலையெல்லாம் நம்பி எப்பிடி சாதவத்தெ பாக்க வர்றானுவோன்னு எரிச்சல் வேற வந்துச்சு.

            "இஞ்ஞ பெரச்சனைன்னா இஞ்ஞ வந்து பேசணும். அஞ்ஞ போன்ல வெச்சிக்கிட்டு சவடாலு வுடக் கூடாது. இஞ்ஞ ன்னா பெரச்சனெங்றது இஞ்ஞ இருக்குற நமக்குத் தெரியுமா? அஞ்ஞ இருக்குற ஒமக்குத் தெரியுமா? பெரச்சனைன்னா அத்தோட சம்பந்தப்பட்டவங்கிட்டெ பேசணும். நீயா ஒண்ணுத்தெ கற்பனெ பண்ணிட்டு, யாரோ சொன்னதெ வெச்சில்லாம் பேயக் கூடாது பாத்துக்கோ! யிப்போ இஞ்ஞ ன்னா பெரச்சனெ சொல்லு?"ன்னாம் விகடு.

            "ல்லடா பேராண்டி! மனசு பொறுக்காம பேசிட்டேம். ஒண்ணுத்தையும் நெனைச்சிக்கடாதடா! நமக்கு அப்பையிலேந்து எதெயும் மனசுல வெச்சுக்கத் தெரியாது. பட்டுன்னு பேசிப்புடுவேம். ஆன்னா மனசுல ஒண்ணும் இருக்காது. வெள்ளந்தியான ஆளுடா பேராண்டி!"ன்னு ரொம்பவே எறங்கி வந்துச்சு ராசாமணி தாத்தா.

            "எல்லாத்தையும் வுட மனசு அதிகமா கொதிக்க வேண்டியது நமக்குத்தாம். நாமளே பேயாம அமைதியா இருக்கேம். ச்சும்மா கெடக்க வேண்டியதெல்லாம் ஏஞ் சத்தம் போடுதுன்னு புரியலையே? எல்லாத்தையும் அப்பிடியே வுடு. அதது என்னென்ன நடக்குணுமோ அத்து நடக்கும்! எல்லாத்தையும் நாம்ம பாத்துக்கிறேம். இத்து கூட நாமளா பேசல. அதுவா வருது!"ன்னாம் விகடு.

            "யில்லடா பேராண்டி! யிப்போ நீயிப் பேசப் பேச மனசு நமக்கு தெளிவாவுது. இத்துப் படியே எல்லாத்தையும் குடும்பத்துல தெளிவு பண்ணி வுடு. அஞ்ஞ சென்னைப் பட்டணத்துலந்து ஒம் மச்சாங்கார்ரேம் போன அடிச்சி தவிச்சிப் போயிட்டாம். அவ்வேம் பேசுறதெப் பாத்து நமக்கே ஒரு மாதிரியாப் போயிடுச்சு. அதாங் ஒடனே யாத்தாவ அஞ்ஞ அனுப்பிட்டு ஒனக்குப் போன அடிச்சேம்! ஒம் மச்சாங்காரனுக்கும் போன அடிச்சிக் கொஞ்சம் பேசுடா! நம்மள சரி பண்ணி வுட்டாப்புல அவனெயும் சித்தெ சரி பண்ணி வுடு. இனுமே நம்ம காலம்லாம் முடிஞ்சிப் போச்சு. ஒஞ்ஞ காலந்தாம். நீஞ்ஞ நின்னு பாத்துக்கிட வேண்டியதுதாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "யிப்பவா? ராத்திரி தூங்கி முழிக்கட்டும். காலங் காத்தால பேசுறேம்! கிளினிக்குல வேற இருந்து திரும்பி அசந்துப் போயி கெடப்பாப்புல!"ன்னாம் விகடு.

            "யில்லடா பேராண்டி! நீயி அடிச்சிப் பேசு. அவ்வேம் ரொம்ப தவிப்பா இருக்காம்! நீந்தாம் இதெப் பாத்துச் செய்யணும்! யின்னிக்கு கிளின்குல்லாம் போவல! வூட்டுலத்தாம் கெடக்காம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "செரி வெச்சிட்டு நிம்மதியா படுத்துத் தூங்கு தாத்தா! நாம்ம பெறவு பேசுறேம்!"ன்னு சொல்லிட்டுப் போன வெச்சாம். பக்கத்துல நின்னுட்டு இருந்த சுப்பு வாத்தியாருகிட்டெ பாலாமணிக்குப் போன அடிக்கச் சொன்னதெப் பத்திச் சொன்னாம். "செரி பேசுடாம்பீ! யாரோட மனநெல எப்பிடி இருக்குதுன்ன இந்த நேரத்துல தெரிஞ்சிக்கிறது நல்லதுதாங். சூதானமா பேசு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            விகடு பாலாமணிக்குப் போன போட்டாம். போட்ட அடுத்த நொடியே போன எடுத்தாம். "செய்யு அஞ்ஞ எப்பிடி இருக்கா மச்சாம்! சேதியக் கேட்டு நமக்குக் கையும் ஓடல. காலும் ஓடல. யிப்பிடி பண்ணிப்பான்னு நாம்ம நெனைக்கல. நம்மால இஞ்ஞ இருக்க முடியல. ஒடனே கெளம்பி வந்து பாக்கணும் போல இருக்கு. மச்சாம் நம்மள எதுவும் தப்பா நெனைச்சிப்புடக் கூடாது. நாம்ம நடந்ததெ எல்லாத்தையும் சொல்லிருக்கேம்!"ன்னாம் பாலாமணி. அவ்வேம் பேசுறதெ கேக்கக் கேக்க விகடுவுக்கு இப்போ பாவமா இருந்துச்சு.

            "ஒண்ணும் பயப்படுற மாதிரிக்கி யில்ல. சரியான நேரத்துல பாத்து கதவெ ஒடைச்சி உள்ளார பூந்துட்டதால பெரச்சனெ யில்ல. உசுரு தப்புனுச்சு. யிருந்தாலும் இந்த பண வெசயத்தப் பத்தி நீஞ்ஞ யாருகிட்டெயும் சொல்லிருக்க வாணாம். யாத்தாகிட்டெ ஏஞ் சொன்னீயே?"ன்னாம் விகடு.

            "அதாங் நாம்ம பண்ண தப்பு மச்சாம்! யம்மா ஏத்தோ பேசிருக்கும் போல. அவளும் நமக்குப் போன் மேல போன் பண்ணிப் பாத்திருக்கா. நாம்மத்தாம் மச்சாம் எடுக்கல. மனசுக்குள்ள ஒரு கோவந்தாம். தப்புத்தாம் மச்சாம். ஆன்னா நாம்ம யிப்பிடி ஆவும்ன்னு எதிர்பாக்கல. யிப்பிடி ஆவும்ன்னு தெரிஞ்சிருந்தா நாம்ம அவளெ அஞ்ஞ அனுப்பிருக்கவே சம்மதம் பட்டிருக்க மாட்டேம்!"ன்னாம் பாலாமணி.

            "யிப்போ எதுக்கு நீஞ்ஞ பதட்டப்படுதீயே! வூட்டுல நாமல்லாம் இருக்குறப்போ ஒண்ணும் தப்பா நடந்துப்புடாது. இனுமே ஒஞ்ஞ குடும்ப விசயத்தெ ஒஞ்ஞளுக்குள்ள வெச்சுக்கிடுங்க. அதெப் பத்தி வெளியில யாருட்டயும் சொல்லாதீயே. நம்மளயும் சேத்துததாங் சொல்றேம். நீஞ்ஞ பதட்டம் யில்லாம தூங்குங்க. ஒண்ணுக்கு ஒண்ணு தப்பா ஆயிட வுட்டுட மாட்டேம்!"ன்னாம் விகடு.

            "தெரியும் மச்சாம்! யிருந்தாலும் நாம்ம வந்துப் பாத்துட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும்!"ன்னாம் பாலாமணி.

            "யிப்போ வாணாம் மச்சாம்! தெருவுல வூட்டுல கொஞ்சம் ஆத்திரமாத்தாம் இருப்பாங்க. ஒஞ்ஞள ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிப்புடுவாவோ! பெறவு ஒஞ்ஞளுக்கும் சங்கட்டம். நமக்கும் சங்கட்டம் பாருங்க!"ன்னாம் விகடு.

            "இந்த ராத்திரி நாம்ம எப்பிடித் தூங்கப் போறெம்ன்னு தெரியல. சத்தியமா சொல்றேம், இந்த ராத்திரி மட்டுமில்ல, இனி வாரக் கூடிய ராத்திரியும் நாம்ம நிம்மதியா தூங்கப் போறதில்ல. இவ்ளோ கோழைத்தனமா செய்யு இருப்பான்னு நாம்ம நெனைக்கல மச்சாம். பேசுறப்பத்தாம் ரொம்ப தெகிரியமானவளாப் பேசுதா. மனசுக்குள்ள தெகிரியம் கொஞ்சம் கூட பத்தாது மச்சாம். அவளெ தெகிரியம் பண்ணணும். இத்துப் புரியாம இத்தனெ நாளு இருந்துட்டேம். இனுமே அவ்வேதாம் நமக்கு ஒலகம். அவளெ சரிபண்ணிக் கொண்டாரதுதாம் நமக்கு முழு நேர வேல!"ன்னாம் பாலாமணி.

            "ஒஞ்ஞளோட பேச்சக் கேக்குறப்போ சந்தோஷமா இருக்கு மச்சாம்! போதும்ன்னு நெனைக்குறேம் பேசுனது. படுங்க பேசிப்பேம்!"ன்னாம் விகடு. இந்தப் பேச்சையெல்லாம் கேக்குறாப்புல விகடு ஸ்பீக்கர்லப் போட்டுத்தாம் பேசுனாம்.

            எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு இருந்துகிட்டு, "ஒண்ணும் பெரிசா பெரச்சனெ இருக்குறாப்புல தெரியல. செய்யுதாம் மன தெகிரியம் யில்லாம் செஞ்சுப்புட்டதா நமக்குப் படுதுடாம்பீ! அவ்சரப்பட்டு இதுல எந்த முடிவையும் எடுத்துப்புட கூடாது. பொறுமெ முக்கியம். கொஞ்சம் காலம் தள்ளட்டும். அதாங் செரி. நாளைக்கு நாம்ம ஒரு ஏடாகூட முடிவெடுத்து அதால வெவகாரம் ஆயிடுச்சுனன், பெற்பாடு செய்யுவே வந்துக் கேப்பா, நாம்மத்தாம் தெரியத்தனமா பண்ணிட்டெம், பெரியவங்க நீஞ்ஞப் பாத்து நல்லதா பண்ணி வுடக் கூடாதான்னு? அதுக்கு எடம் இருக்கக் கூடாது! அதுக்குத் தகுந்தாப்புல பேசணும்டா மவனே! நீயென்னடா நெனைக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கும் அப்பிடித்தாம்ப்பா கொஞ்சம் கொஞ்சம் தோணுது. யிருந்தாலும் முழுசா பிடிபட மாட்டேங்குதுப்பா. பெரியவங்க நீஞ்ஞத்தாம் இதுல தகுந்தாப்புல முடிவெ சொல்லணும். நீஞ்ஞ அறிஞ்சு இந்த மாதிரிக்கில்லாம் செல சம்பவங்க நடந்திருக்கும். அதுல நடந்ததெ வெச்சித்தாம் நீஞ்ஞத்தாம் முடிவு பண்ணணும்ப்பா!"ன்னாம் விகடு.

            "பொம்பளப் புள்ளீயோ கொஞ்சம் உணர்ச்சிவசத்தாம் படும்ங்க. கொஞ்சம் அவ்சரப் புத்தியும் உண்டுத்தாம். ஒரு கொழந்தெ குட்டின்னா ஆனாக்கா கொஞ்சம் நெதானத்துக்கு வந்துப்புடும்ங்க. அதுவரைக்கும் கொஞ்சம் நாமல்லாம் பாத்துத்தாம் பண்ணி வுடணும். கொஞ்சம நஞ்சமா செஞ்சி கலியாணத்தெ கட்டி வுட்டுருக்கேம். அதெ நெனைச்சுப் பாத்தாலே போதுமடாம்பீ! இம்மாம் செஞ்ச யப்பனும் யண்ணணும் பத்தாயிர காசிய மூஞ்சில தூக்கி எறிஞ்சிப்புட மாட்டாங்களான்னு ஒந் தங்காச்சிக்குச் சொயமா தோணியிருக்கணும்! ன்னா பொண்ணுடாம்பீ இத்து? அப்பிடியே முடியாட்டியும் போனத்தாம் ன்னா? அதுக்காக யிப்பிடியா பொடவையில தொங்க நிப்பா? பத்தாயிரம் காசிய நாளைக்கிச் சம்பாதிச்சிப்புடலாம். உசுர எஞ்ஞடா போயிச் சம்பாதிக்கிறது? மொதல்ல புத்தி அப்பிடில்லடா வேல செய்யணும்? குடியா முழுவிப் போயிட்டு யிப்போ! மனசு ரொம்ப பெலகீனமா இருக்கடாம்பீ அதுக்கு. அதுக்குத் தகுந்தாப்புல பேச்சுத் தொணைக்கு அஞ்ஞ ஆளில்லாம ஒத்ததையா கெடந்து, இதையே நெனைச்சி நெனைச்சி கொமைஞ்சுப் போயிருக்கும் போலருக்கு. அதாங் யிப்பிடி மெலிஞ்சிப் போயிடுச்சு. நாம்ம நெனைச்சது ன்னான்னா கலியாணம் ஆன சோடிங்க. சந்தோஷமா இருக்குறதுக்கு அதுதாங் செரின்னு நெனைச்சதுதாங். அதாம் தப்பாப் போச்சு. யில்லன்னா யம்மாவ கூட அஞ்ஞ கொஞ்ச நாளிக்குத் தங்கச் சொல்லிட்டு வந்திருக்கலாம். அத்து கூட சொன்னிச்சு தங்கிட்டு வார்றேம்ன்னு. நாம்மத்தாம் வாண்டாம்ன்னுட்டேம். கலியாணம் ஆன ஒடனே மாமியார்ரக் கொண்டு போயி வுட்டு வூட்டோட மாப்புள்ளையா ஆக்க நெனைக்கிறதா நாலு பேத்துச் சொல்லிடப்படாதுன்னு பாத்தேம். எல்லாமே தப்பாப் போயிடுச்சுடா மவனே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒண்ணும் தப்பில்லப்பா! இப்பயும் செரி பண்ணிப்புடலாம்!"ன்னாம் விகடு.

            "ஆமாம்! இதெப் பத்தி வெளியில எதையும் சொல்லிக்கிட வாணாம். சொந்தத்துல ஆளாளுக்குத் தெரிஞ்சா சுத்தப்படாது. யிப்போ இருக்குற நெலமையில ஆளாளுக்கு ஒண்ணுத்தெ சொல்லி களைச்சி வுட்டுப்புடுவாங்க. காதுங் காதும் வெச்சது மாதிரிக்கி இதெ பேசி முடிச்சிப்புடணும். கொஞ்ச காலம் ஆனாக்கா பெறவு எல்லாம் மறந்துப் போயிடும். மனசுலயே யிப்பிடி ஒரு சம்பவம் நடந்தது இருக்காது. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆயிடும்ங்க. அது வரைக்கும் பொறுமையாத்தாம் இருந்தாவணும். ரண்டையும் ஒண்ணு சேத்துப்புடுறதுதாங் நல்லதுன்னு படுதுடாம்பீ! இத்துல ஒம் மனசுல எத்துவும் யிருந்தாலும் சொல்லிப்புடு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்குச் சட்டுன்னு ஒரு முடிவுக்கு வார முடியலப்பா. யிருந்தாலும் நீஞ்ஞ யப்படி நெனைச்சா, அதுதாங் தோதுப்படும்ன்னு முடிவெ பண்ணா, யப்படியே பண்ணிப்புடலம்ப்பா!"ன்னாம் விகடு.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...