30 Sept 2020

புடவையில கட்டிக்கிட்ட தூக்கு!

புடவையில கட்டிக்கிட்ட தூக்கு!

செய்யு - 580

            ஆர்குடி ஏயியிவோ ஆபிஸூக்குப் போயி வெவரத்தச் சொல்லிட்டு, சொசைட்டியில போயி ஐனவரி மாசத்துக்குச் சம்பளம் போடுறதுலேந்து தவணைத் தொகையைப் பிடிக்கச் சொல்லி கேட்டுக்கிட்டாம் விகடு. தவணைத் தொகைத் தள்ளிப் போறது நல்லதில்லன்னும், ஒடனே பிடிக்கிறதுதாங் நல்லதுன்னும் சொசைட்டியில சொன்னாங்க. இந்த மாசத்துல இருக்குற பணத்தேவையைச் சொல்லி பரவாயில்லன்னாம் விகடு. இந்தச் சோலிகள முடிச்சிட்டு டிவியெஸ்ல அவ்வேம் வீடு திரும்புனப்போ வூட்டுக்கு மின்னாடி கூட்டமா இருந்துச்சு. சனங்க வர்றதும் போறதுமா இருந்துச்சுங்க. விகடுவுக்கு அதெப் பாக்க அதிசயமா இருந்துச்சு. வூடெ வித்தியாசமா தெரியுறதா நெனைச்சாம். சரியா அந்த நேரத்துல வந்த தம்மேந்தி ஆத்தா, உடம்பெல்லாம் நடுங்கி, வாயெல்லாம் கொழறி, "போ! போயி தங்காச்சியப் பாரு!"ன்னுச்சு விகடுவெப் பாத்து.

            "ஏம்? என்னாச்சு?"ன்னாம் விகடு.

            "உள்ளாரப் போ! ஒமக்கே தெரியும். மனசெ கலங்க வுடப் படாதுய்யா! வெளியில நின்னுப் பேசப்படாது!"ன்னு கொரலு நடுங்க சொல்லிட்டு தம்மேந்தி ஆத்தா கெளம்பிப் போச்சு. விகடு கூடத்துல நோழைஞ்சாம். அவ்வேம் நொழைஞ்சதும் ஆயி வெளியில வந்து அவனெ பிடிச்சிக்கிட்டு அழுதா.

            "ஏம்டி எதுக்காக அழவுறே?"ன்னாம் விகடு ஒண்ணும் புரியாம.

            "செய்யு பண்ணதெக் கேட்டீயளா? ஏம் அத்து இப்பிடிப் பண்ணுச்சு?"ன்னா ஆயி.

            "ன்னாத்தா பண்ணதுன்னு சொன்னாத்தானே தெரியும்? தம்மேந்தி யாத்தா கூட புரியாம ஏதோ சொன்னிச்சு!"ன்னாம் விகடு.

            "செய்யு தூக்கு மாட்டிக்கிட்டுங்க!"ன்னா ஆயி. அதெ கேட்டதும் விகடுவுக்கு ஒரு கணம் ஒலகமே சொழலாம நின்னது போல இருந்துச்சு. உள்ளுக்கும் வெளிக்குமா ஓடிட்டு இருக்குற மூச்சுக் காத்து நின்னுடும் போல இருந்துச்சு. அவ்வேம் அதிர்ச்சியப் புரிஞ்சிக்கிட்டதும், "யிப்போ நல்லாத்தாம் இருக்கு. சித்த நேரம் தாமசம் ஆயிருந்தாலும் மோசம் போயிருக்குமுங்க! கடெசீ ரூமுலத்தாம் உக்காந்திருக்கு!"ன்னா ஆயி.

            விகடு கெளம்பிக் கடெசீ ரூமுக்குப் போனாம். செய்யு கட்டில்ல உக்காந்திருந்தா. பக்கத்துல வெங்கு அழுதுகிட்டெ உக்காந்திருச்சு. விகடுவப் பாத்ததும் அதோட அழுகெ அதிகமாயிடுச்சு. "பாருடாம்பீ! பொத்திப் பொத்தி வளத்து, பாத்துப் பாத்து கலியாணம் பண்ணி வுட்டா, ன்னாத்தா பண்ணப் பாத்திருக்கா?"ன்னுச்சு வெங்கு. விகடு செய்யுவோட பக்கத்துல உக்காந்தாம். அவனுக்கு இதயம் ரொம்ப வேகமா துடிக்கிறாப்புல இருந்துச்சு. அதெ வெளிக்காட்டிக்காம, "எப்போ நடந்துச்சு?"ன்னாம் விகடு.

            "மூணு மணி இருக்கும்டா. மத்தியானம் செரியா சாப்புட மாட்டேம்ன்னுட்டா. செரித்தாம் துணிக கொஞ்சம் கெடக்கேன்னு தொவைச்சிப் போட போனேம். போன பெறவுதாம் சவுக்காரத்தெ எடுத்துட்டுப் போவாம போனது ஞாபவம் வந்துச்சு. செரித்தாம்ன்னு எடுத்துட்டு வாரலாம்ன்னு ரூமுக்கு வந்தேம். வந்தா கதவுச் சாத்தி இருக்கு. கதவெத் தொறடிங்றேம். கதவு தாழ்ப்பாளு போட்டிருக்கு. செரித்தான் என்னான்னு சன்னலு வழியாப் பாத்தா பொடவையக் காத்தாடியிலப் போட்டு கழுத்துல சுருக்கப் போட்டிருந்தா. ஒடனே நாம்ம சத்தத்தெப் போட சனங்க வந்து கூடுனுச்சுங்க. ராசகுருதாம் ஓடியாந்து கதவெ ஒடைச்சித் தொறந்தாம். கொஞ்சம் தாமசம் ஆயிருந்தாலும் உசுரு போயிருக்கும்டா. யாரு பண்ண புண்ணியமோ பொழைச்சது பெரும் பொழைப்புடா!"ன்னுச்சு வெங்கு அழுதுகிட்டெ.

            "ஏம்ப்பா யிப்பிடி பண்ணே?"ன்னாம் விகடு செய்யுவப் பாத்து.

            "யப்பாவுக்குப் பொண்ணா, ஒனக்குத் தங்காச்சியாவே நம்ம வூட்டுலயேப் போயிச் சேந்துடலாம்ன்னு பாத்தேம் ண்ணே!"ன்னா செய்யு கொரலு தழுதழுக்க.

            "அதாங் ஏம்ன்னு கேக்குறேம்?"ன்னாம் விகடு.

            "யாத்தா பதினோரு மணி யிருக்கும். போனு பண்ணிச்சுண்ணே. அவுக பணம் கொடுத்த வெவகாரத்தெ யாத்தாகிட்டெ சொல்லிருப்பாகப் போலருக்கு. யாத்தா போன் பண்ணி, எங்கேருந்து வந்துச்சுடி ஒமக்கு அம்மாம் துணிவுன்னுச்சு. நாம்ம நடந்ததெ எல்லாத்தையும் சொன்னேம். யாத்தா எதையும் கேக்கல. இனுமே ஒன்னய வாழ வைக்குறதா? வேண்டாமாங்றதெ அவ்வேந்தாம் முடிவு பண்ணணும். நாம்ம ஒண்ணுத்துக்கும் பண்ணுறதக்கில்லன்னுச்சு. அதாங் யண்ணே இஞ்ஞ வாழாவெட்டியா இருக்குறதுக்கு ஒரே அடியா போயிச் சேந்துப்புடலாம்ன்னு முடிவெ பண்ணிட்டேம்!"ன்னா செய்யு.

            "நாம்ம இதெப் பத்தி நேத்தி ராத்திரிக்கிப் பேசிட்டுத்தானே படுத்தேம். பெறவு எதுக்கு இதெப் பத்தி கொழப்பிக்கிட்டெ?"ன்னாம் விகடு.

            "யில்லண்ணே! யாத்தா அப்பிடித்தாம் சொன்னிச்சு. வாழ்க்கையே போனுச்சுங்றாப்புல! அதெ இனுமே யாராலயும் செரி பண்ண முடியாதுன்னும், அவுக ஒரு முடிவு எடுத்துட்டா எடுத்ததுதாம்ன்னும் சொன்னுச்சு. நாம்ம சொல்ற எதெயும் ஏத்துக்கிடலண்ணே! நம்மள மன்னிச்சிடுங்கன்னு கெஞ்சுனேம் யண்ணே! அதெ கேட்டுக்கவே யில்லண்ணே! அதுக்குப் பெறவுதாண்ணே மனசு ஒடைஞ்சிப் போயி இப்பிடிப் பண்ணிட்டேம்!"ன்னா செய்யு. அவ்வே கொரலு சுத்தமா ஒடைஞ்சிப் போயிருந்துச்சு.

            சுப்பு வாத்தியாரும் அந்நேரமாப் பாத்து உள்ளார வந்தாரு. "யிப்ப ஒண்ணுஞ் சொல்லாதடாம்பீ! மனசு செரியில்ல அதுக்கு!"ன்னாரு.

            "ஒண்ணும் சொல்லலப்பா! ச்சும்மா நடந்ததெ கேட்டுக்கிட்டுத்தாம் இருக்கேம்!"ன்னாம் விகடு.

            அந்த நேரமாப் பாத்து எப்போ வந்தானோ, எப்பிடி வந்தானோ தெரியல. சுந்தரியோட மவ்வேம் வீட்டுக்குள்ளார வந்து கடைசி ரூமுக்கு உள்ளார வந்தாம்.

            அவனெப் பாக்க பாக்க வெங்குவுக்கு ஆத்திரமா வந்துச்சு. விகடுதாம் எதெயும் பேசிட வாணாம்ன்னு கண்ண காமிச்சிக்கிட்டு, "வாடாம்பீ! ன்னா விசயம்?"ன்னாம். "கோயிலுக்குப் போயிட்டு வந்த பெரசாதம்! வூட்டுல கொடுத்துட்டு வாரச் சொன்னாங்க. அதாங் வந்தேம்!"ன்னாம். சொல்லிட்டு எல்லாத்தையும் சுத்திலும் ஒரு பார்வையெப் பாத்துக்கிட்டாம். அதெ கொடுத்துட்டு ஒடனே கெளம்புனாம் அவ்வேம். அவனெ நிறுத்தி விகடு, "இருடாம்பீ! டீத்தண்ணியச் சாப்புட்டுப் போவலாம்!"ன்னாம்.

            "யில்ல யம்மா கொடுத்துட்டு ஒடனே வாரச் சொன்னிச்சு!"ன்னாம் சுந்தரியோட மவ்வேம்.

            "எப்பிடிடாம்பீ வந்தே?"ன்னாம் விகடு.

            "சைக்கிள்லத்தாம்!"ன்னாம் சுந்தரியோட மவ்வேம். சொல்லிட்டு மேக்கொண்டு எந்தப் பதிலையும் எதிர்பாக்காம அவ்வேம் பாட்டுக்கு வெளியில ஓடி சைக்கிள எடுத்துட்டு கெளம்பிட்டாம்.

            "பாருடாம்பீ! ஒரு விடுத்தான வுட்டு வேவு பாக்க வுட்டுருக்கிறதெ. இந்த அநியாயம் எங்காச்சும் நடக்குமா? அவனெ அப்பிடியே செவுட்டு இழுப்பா இழுத்து சொவத்துல வெச்சி நசுக்காம பேசி அனுப்பி வுடுறீயே?"ன்னுச்சு வெங்கு பொங்கி வந்த அழுகைய அடக்க முடியாம.

            "யிப்ப எதுவும் பண்ணுறதுக்கில்லம்மா! வெசயம் யிப்பவும் முழுசா வெளியில வந்துட்டதா தெரியல. இன்னுமும் சில விசயங்க தொக்கி நிக்குறாப்புலாத்தாம் நமக்குப் படுது! முழுசா எல்லாம் தெரியட்டும். பெறவு முடிவெப் பண்ணிக்கிடலாம்!"ன்னாம் விகடு.

            "யிப்போ ன்னா பண்ணுறது? தங்காச்சிய வுட்டு அந்தாண்ட இந்தாண்ட போவாதே. பக்கத்துலயே யிரு. பாத்துக்கிடலாம்!"ன்னாம் விகடு.

            "ஒனக்குப் பதற்றமோ, படபடப்போ, தங்காச்சிக்கு யிப்பிடி ஆயிடுச்சுன்னு எதுவுமே யில்லியாடா?"ன்னுச்சு வெங்கு.

            "இருக்குத்தாம். அதெ காட்டிக்கிறதுக்கு இத்து நேரமில்ல!"ன்னு சொல்லிட்டு விகடு அந்தாண்ட வந்தாம். சுப்பு வாத்தியாரு விகடுவோட சேந்து வெளியில வந்தாரு. "யிப்போ ன்னடாம்பீ பண்ணுறது?"ன்னாரு.

            "இந்த வெவகாரத்துக்குப் பணந்தாம் காரணம்ன்னா, யில்ல யாத்தா பேசுனதுதாம் காரணம்ன்னா செரி பண்ணிடலாம். வேற எதாச்சும் காரணம்ன்னா அதெத்தாம் செரி பண்ண முடியாது!"ன்னாம் விகடு.

            "வேற எதாச்சிம் காரணம்ன்னா, நமக்குப் புரியலையேடாம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பேசுறப்ப தங்காச்சியக் கவனீச்சிங்களா? இதுக்கு என்னவோ அதுவா ஒரு காரணத்தெ சொல்றாப்புலத்தாம் படுது. வேற யின்னும் எதோ காரணம் இருக்கும்ன்னு மனசுக்குப் படுது. நெசமான காரணம் வேறன்னுத்தாம் தோணுது. என்னானும் நம்மாலயும் கண்டுபிடிக்க முடியல. அதாங்ப்பா! கொஞ்சம் பொறுக்கலாம்ன்னு நெனைக்குறேம்!"ன்னாம் விகடு.

            இதுக்கு அடுத்ததா ஒரு சங்கதியா, அதுக்குள்ள பக்கத்து வூட்டு அய்யாவு சைக்கிள எடுத்துக்கிட்டு வேக வேகமா மிதிச்சிக்கிட்டு முருகு மாமாவோட வூட்டுக்குப் போயிருக்கு. போயி இந்த மாதிரிக்கிச் சங்கதின்னு சொல்லி, வந்து என்னா ஏதுன்னு பாருங்கன்னும் சொல்லிருக்கு. அப்போ முருகு மாமா சொல்லிருக்கு, "அவுங்களா வந்து சொல்லட்டும். கேட்பேம். நாம்மளா போயி கேக்கவும் முடியாது, வெசாரிக்கவும் முடியாது!"ன்னு. இந்தச் சம்பவத்தெ கேள்விப்பட்டதும் விகடுவுக்கு அய்யாவு மேலயும், முருகு மாமா மேலயும் கோவம் கோவமா வந்துச்சு.

            ஒரு வூட்டுல இப்பிடி ஒரு சங்கதின்னா ஊர்ல இப்பிடித்தாம் ஆளாளுக்கு மனசுல தோணுனபடியெல்லாம் எதாச்சம் பண்ணுவாங்க. அவுங்க நல்லது பண்ணுறதா நெனைச்சிப் பண்ணுறாங்களோ? கெட்டதெ பண்ணணும்ன்னு நெனைச்சிப் பண்ணுறாங்களோ? அதெ கண்டுபிடிக்க முடியாது. எதாச்சும் பண்ணலன்னா அவுங்களால தூங்க முடியாதுங்றது மட்டும் நிச்சயம். இந்தச் சம்பவத்துக்குப் பெறவு தெருவுலேந்து ஒவ்வொரு சனமா வந்து விசாரிக்க ஆரம்பிச்சதுங்க. நெசமான காரணம் என்னான்னு தெரியாதப்போ, எல்லாத்துக்கு என்ன காரணத்தெ சொல்றதுன்னுத்தாம் கொழப்பமா இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு ஏதோ செய்மொறையில கொறைய வெச்சிட்டாரு, அதாலத்தாம் பொண்ண கொண்டாந்து வுட்டு, அத்து தூக்குப் போட்டுக்கிட்டதா வூட்டுக்கு வந்த பக்குவமா வெசாரிச்சுக்கிட்டு ஆறுதல் சொன்னவங்க வெளியிலப் போனதும் பேசிக்கிட்டாங்க. நடந்த சம்பவத்தப் பாக்குறப்போ இதுல தூக்குப் போட்டுக்கிறதுக்கு ன்னா இருக்குதுன்னு விகடுவுக்கும் கொழப்பமாத்தாம் இருந்துச்சு. வேற ஏதோ இதுல வெவகாரம் இருக்கும்ன்னு தோணுச்சு அவனுக்கு. இதெப் பத்தி யாருகிட்‍டெ வெசாரிக்கிறதுன்னு யோசனையா இருந்தாம்.

            ஒரு நிமிஷ நேரம் சவுக்காரம் எடுக்கணும்ன்னு யம்மா வாராமப் போயிருந்தா தங்காச்சியோட நெலமெ என்னா ஆயிருக்கும்ன்னு நெனைக்க விகடுவுக்கு வேதனையா வேற இருந்துச்சு. ஒரு டாக்கடர்ரா இருக்குற மச்சாங்கார்ரேம் இந்த மாதிரிக்கி ஆளாளுகிட்டெ கோள் சொல்லுறாப்புல நடந்துக்கிறதெ நெனைச்சு அவனுக்கு எரிச்சலாவும் வந்துச்சு. நம்மகிட்டெயே பேசுறப்பவே அப்பிடித்தாம் பேசுனாம் என்னவோ ஊருல கோள் சோல்றதுக்குன்னே இருக்குற பொட்டச்சிகப் பத்த வைக்கிறதெப் போல நைசா. நெசமாலுமே அவ்வேம் பேச ஆரம்பிச்சா கோள் சொல்றதுக்குன்னே இருக்குற பொட்டச்சிக்கப் பேசுறாப்புலத்தாம் நுணுக்கி நுணுக்கி ஒவ்வொண்ணுத்துலயும் கொறையப் பாக்குறாம். அவ்வேம் கொணப்பாடே கொழப்பமாத்தாம் இருக்குன்னு நெனைச்சாம் விகடு.

            அன்னிக்கு ராத்திரி முழுக்க இதெப் பத்திதாம் பேச்சு நடந்துச்சு. மேக்கொண்டு என்னத்தெ பண்ணுறது? செய்யுவக் கொண்டுப் போயி வாழ வைக்குறதா? வூட்டுலயே வெச்சிக்கிறதா?ன்னு. ஆளாளுக்கு என்னத்தெ பேசுனாலும் ஒரு முடிவுக்கு வர முடியல. வெங்கு இனுமே மவளெ அங்க அனுப்பக் கூடாதுன்னு நின்னுச்சு. செய்யுவும் இனுமே அங்கப் போவ மாட்டேம்ன்னு அழுதா. ஆயிக்கும் அங்க அனுப்ப இஷ்டமில்லே. சுப்பு வாத்தியாருக்குக் கலியாணத்தக் கட்டி மூணு மாசத்துக்குள்ள இப்பிடின்னா என்னத்தெ முடிவு எடுக்குறதுன்னு கொழப்பமா இருந்துச்சு. அவரு பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டதெ வேற வெதமாவும் பாத்தாரு. ஒரு வேள பொண்ணு செத்துப் போயிருந்தா வூட்டோட நெலமெ என்னாவுதுன்னு நெனைச்சாரு. பெறவு இந்த வூட்டுல மனுஷன் இருக்குறது எப்பிடி? இந்த வூட்டு வித்துப்புடறதுன்னாலும் வாங்குறவன் யாரு?ன்ன பலவெதமா நெனைச்சி கலங்குனாரு.

            எல்லா கடமையையும் முடிச்சிட்டதா நெனைச்சு நின்ன மனுசருக்கு இப்பிடிப் பொண்ணு வந்து நின்னு, இந்த மாதிரிக்கி ஒரு காரியத்தெ பண்ணா எப்பிடித்தாம் இருக்கும்? பக்கு பக்குன்னுத்தாம் இருந்துச்சு அவருக்கு. தூக்கு மாட்டிக்கிட்ட பொடவையைக் கொண்டுப் போயி கொல்லைக் கடைசியில எரிச்சிருந்தாரு அவரு. அத்தோட அந்தக் கடைசீ ரூம்ல மேல இருந்த காத்தாடியக் கழட்டி அந்தக் கம்பியையும் வளைச்சி வுட்டுருந்தாரு.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...