29 Sept 2020

விவசாய இதழ்களின் மிகை மதிப்பீடுகள்

விவசாய இதழ்களின் மிகை மதிப்பீடுகள்

            தமிழில் குறிப்பிடத்தக்க சில விவசாய இதழ்கள் வெளிவருகின்றன. பெயர் சொல்லித்தான் அந்த இதழ்களின் பெயர்களை அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் அந்த இதழ்கள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும். விவசாயத்திற்கென தனி இதழ்கள் வருவது ஆரோக்கியமான ஒன்று என்பதன் அடிப்படையில் அது ஒரு வகையில் மெத்த மகிழ்ச்சி தருவதுதான். நாளிதழ்களும் வாரத்தின் ஒரு நாளில் விவசாயத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்குகின்றன. நாளிதழ்களில் வரும் செய்திகள் பெரும்பாலும் விவசாயத்துக்கான ஆலோசனைகள், வழிகாட்டு முறைகள் என்பதோடு முடிந்து விடுகின்றன. விவசாயத்திற்கான தனி இதழ்களின் கட்டுரைகள், நேர்காணல்கள் போன்றவை அதீத விவசாய ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்தால் படித்த அடுத்த நொடியே விவசாயியாக மாறினாலன்றி ஜென்ம சாபல்யம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து விடுவீர்கள்.

            விவசாய இதழ்களின் நேர்காணல்களைப் படித்தால் நாட்டில் மருத்துவம், பொறியியல் என்று எவரும் படிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு வருமானம் கொட்டுவதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை அந்நேர்காணல்கள் உருவாக்குகின்றன. அவ்வளவு வருமானம் வந்தால் விவசாயத்தை வெறுத்தொதுக்கி ஏன் விவசாயிகள் நகர்ப்புற கூலித்தொழிலாளிகளாக உருமாறுகிறார்கள்? தன்னையே வெறுத்து ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? நம்பிக்கையும், ஆர்வமும் தரக்கூடிய நேர்கணால்கள் என்றாலும் அதில் ஓர் உண்மைத்தன்மை வேண்டாமா? இப்படித்தான் மிகைப்படுத்தி வெளியிடப்படும் சினிமா செய்திகளைப் போல விவசாயச் செய்திகளையும் வெளியிடுவதா?

            பெரும்பாலும் விவசாய இதழ்களில் நேர்காணல் செய்யப்படும் விவசாயிகளைப் பார்த்தால் பின்வரும் பொதுவான கூறுகளைக் கண்டறியலாம். 1. அந்தச் சாதனை விவசாயிகள் யாரும் முழுநேர விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள். 2. அந்த விவசாயிகள் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். 3. பகுதி நேரமாகவோ, பொழுது போக்காகவோ விவசாயம் செய்பவர்களாக இருப்பார்கள். 4. நிலத்தில் இறங்கிப் பாடுபடாதவர்களாக இருப்பார்கள். 5. இயற்கை வேளாண்மை செய்வதாகச் சொல்வார்கள். 6. அவர்களது பொருளாதார நிலையை வைத்துப் பார்த்தால் விவசாய வருமானம் அவர்களுக்கு உபரி வருமானமாக இருக்கும். 7. அவர்கள் பெரும்பாலும் சமூக, அரசியல் செல்வாக்கு மிகுந்த மனிதர்களாக இருப்பார்கள்.

            மேற்கண்ட நிலையிலிருந்து விவசாயம் செய்வதற்கும், நிலத்தில் இறங்கிப் பாடுபட்டு விவசாயம் செய்வதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. நிலத்தில் இறங்கிப் பாடுபடும் தொண்ணூறு விழுக்காடு விவசாயிகள் இந்த விவசாய இதழ்களைப் படிப்பவர்களாகவே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான நேரமும் இருக்காது. நிலத்தில் இறங்கிப் பாடுபடவும், அடுத்தடுத்த விவசாய வேலைகளைக் குடும்பத்தோடும், ஆட்களோடும் சேர்ந்து பார்ப்பதற்கே நேரம் போதாது. ஒரு சில மாடுகள் வளர்த்தாலே போதும், அதனைப் பராமரித்துப் பார்ப்பதற்கே நாள் முழுவதையும் செலவிடும் படியாக இருக்கும். விவசாய இதழ்களில் நேர்காணல் செய்யப்படும் விவசாயிகள் பராமரிக்கும் துல்லிய கணக்கு வழக்குகளை அவர்களால் பராமரிக்க முடியாது. குத்துமதிப்பாகத்தான் கணக்குகளைச் சொல்வார்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் எவ்வளவு மிஞ்சும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

            விவசாய இதழ்களில் நேர்காணல் செய்யப்படும் விவசாயிகள் மிகச் சரியாக, மிகச் சரியான விலையில், சில நேரங்களில் கூடுதலான விலையிலும் விவசாயப் பண்டங்களை விற்பனை செய்து விற்றுமுதல் காண்கிறார்கள். நடைமுறையில் ஒரு விவசாயிக்கு அது சாத்தியமே கிடையாது. அவர் வியாபாரிகளை நம்பியே இருக்கிறார். அவரிடம் கடன் வாங்கி அவரிடமே விளைவித்த பண்டங்களை அரைகுறையுமான விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். அரசு சார்ந்த கொள்முதல் நிலையங்களில் நேரிடும் காத்திருப்புகள், தர நிர்ணயிப்புகள் மற்றும் பணத்தைப் பெறுவதற்கான கால தாமதங்களால் பெரும்பாலான விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளையோ அல்லது வட்டிக் கடைக்காரர்களையோ நம்பித்தான் விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாய வங்கிக் கடன்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நேரடி விவசாயக் கடனை விட, தங்க நகையை அடமானமாக வைத்துத் தரும் விவசாயக் கடனில்தான் அதீத ஆர்வம் காட்டுவார்கள்.

            விவசாயத்தில் இவ்வளவு நடைமுறைச் சிரமங்கள் இருக்கையில் அவற்றைக் கண்டுணர்ந்து இந்த விவசாய இதழ்கள் எழுதுவதாக இல்லை. பலமுறை இந்த விவசாய இதழ்களைப் படிக்கும் போது அவ்விதழ்கள் விவசாய இதழ்களா? அல்லது தன்னம்பிக்கை மேம்பாட்டு இதழ்களா? என்ற வினாவை உங்களால் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. தன்னம்பிக்கை மேம்பாட்டு இதழ்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக இயற்கைநிலை போலி வாதங்களைக் கைக்கொள்வன. கிட்டதட்ட அதே பாணியில்தான் இந்த விவசாய இதழ்களும் இயற்கைநிலை போலிகளை அதிகம் கைக்கொள்கின்றன. அப்படி ஒரு வாதத்தைக் கைக்கொள்வதால்தான் அதிக இளைஞர்களை விவசாயத்தை நோக்கி ஈர்க்க முடியும் எனும் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் பற்றிய வினாவுக்கு அந்த வாதம் என்ன பதிலைச் சொல்ல முடியும்.

            அநேகமாக இந்தப் பத்தியானது விவசாய இதழ்களைக் குறை கூறும் நோக்கோடு எழுதப்பட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. விவசாயத்தின் உண்மையான பிரச்சனைகளை அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் வெளியிடுவதை நோக்கி விவசாய இதழ்கள் வர வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்படுவதே. நடைமுறையில் விவசாயிகளின் சாதனைக் கதைகளை விட சோகக் கதைகளே அதிகம் என்பதே எதார்த்தம். விவசாயம் குறித்த நம்பிக்கையை உருவாக்குவதாகக் கற்பிதம் செய்து கொண்டு, மிகை மதிப்பீடுகளை உருவாக்குவதை விட்டு விட்டு எதார்த்தத்தை நோக்கி விவசாய இதழ்கள் எப்போது வரப் போகின்றனவோ? அதுவரை இந்த விவசாய இதழ்கள் பேசும் விவசாயம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட விவசாயமாகவே இருக்கும். பரவலான விவசாயத்தைப் பற்றிப் பேசியதாக அமைய முடியாது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...