31 Jul 2020

கொரோனா கூத்துகள்!

கொரோனா கூத்துகள்!

இந்த கொரோனா காலத்திலும், தமிழகத்தின் உச்சபட்ச நடிகர் ஒருவரின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியைத் தொடர்ந்து எரிச்சலாகி அலைவரிசையை மாற்றினால், "நீ அதுக்கு சரிபட்டு வர மாட்டே!"ங்ற வடிவேலுவின் நகைச்சுவை வருவது எதேச்சையாக நடப்பதா? வேண்டுமென்றே நடப்பதா? என்று புரியவில்லை.
*****
இப்போது அற்புத சுகமளிக்கும் கூட்டம் என்றால் கொரோனாவுக்குத்தான்!
*****
இந்த வாட்ஸாப் காலத்தில் கடிதம் போட முடியாதுதான். அதற்காக இந்த கொரோனா விடுமுறைக்குப் பொழுது போகாமல், எதற்கெடுத்தாலும் தட்டச்சு பண்ண கூட யோசித்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் பேசிப் பேசியே அனுப்பி சொல்கிறார்கள் என்று சொல்வதா? கொல்கிறார்கள் என்று சொல்வதா?
*****
கொரோனா பொதுத்தேர்வையே போடா என்று ஒதுக்கி வைத்து விட்டது. இந்தப் பள்ளிகள் மட்டும் கட்டணத்தை ஒதுக்கி வைப்பதாக இல்லை. திறக்காதப் பள்ளிக்கூடத்துக்குக் கட்டணம் கேட்கும் அதிசயமெல்லாம் நமது கல்வி சிறந்த நாட்டில்தான் நடக்கும்.
*****
கொரோனவுக்கு எதிரான இந்தியக் கட்டமைப்பு என்பது கிராமங்கள்தான். புறநகர் என்ற பெயரில் நிறைய கிராமங்களை அழித்தப் பிறகும் இந்தியாவில் கிராமங்கள் இருக்கிறது என்பது அதிசயம்தான்.
*****
கொரோனா காலத்திலும் ஜோசியம் பார்க்கிறேன், ஜாதகம் பார்க்கிறேன் என்று கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆவ்சம் மனிதர்கள்! கொரோனாவுக்கு முதலில் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்! ஆயுசு கெட்டியா? அற்பாயுளா? என்று.
*****
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தில் இருக்கும் போது சீனாவும், பாகிஸ்தானும் மட்டும் எப்படி படையெடுப்பின் தாக்கத்தில் இருக்கிறதோ? உலகின் புரிந்து கொள்ள முடியாத இரண்டு தேசங்கள்!
*****
சீனாவின் படை வரும் பின்னே, சீனாவின் வைரஸ் வரும் முன்னே!
*****
நான் எந்த சீனப் பொருளையும் சீனாவில் சென்று வாங்கவில்லை. இந்தியாவிலேயே இந்தியப் பணத்தைக் கொடுத்து வாங்கும்படி ஆகி விட்டது.
*****
பாதர்ஸ் டே கொண்டாட வேண்டும் என்ற அப்பாவைத் தேடிக் கொண்டிருந்தவரின் பெயர் கொரோனா.
*****

பேத்தெடுத்த ஒரசல்!

செய்யு - 522

            பணம் பல வேலைகள வேகமா செய்ய ‍வைக்கும். பணத்தெ கொடுத்தா இந்த பூமி சுத்துற வேகத்தெ இன்னும் கூட வேகமாக்கிச் சுத்தும். அப்படி ஒரு சக்தி பணத்துக்கு இருக்கு. ஒரு கல்யாண ஏற்பாட்டுல சம்மதச் சங்கிலின்னு செய்யுவோட கலியாண ஏற்பாட்டப் பத்தி ஒம்போது வளையத்தப் பாத்தோம் இல்லியா! அதோட பத்தாவது வளையத்தப் பத்தி நாம்ம பாக்கலீயே! அந்தப் பத்தாவது வளையம் பணந்தாம். மித்த ஒம்போது வளையங்க இல்லாம போனாலும் இந்தப் பத்தாவது வளையம் ஒண்ணு இருந்தா போதும் பத்து வளையங்களுக்குச் சமானமா அது வேலையச் செய்யும். தெரியாமலா பணம் பத்தும் செய்யும்ன்னு அந்தக் காலத்துலயே சொல்லி வைச்சாங்க!
            மறுநாளே காலங் காத்தாலயே சுப்பு வாத்தியாரு முருகு மாமா வூட்டுக்கும், சித்துவீரன் வூட்டுக்கும் படையெடுத்தாரு. சுப்பு வாத்தியாரு கலியாணச் சிலவுக்குன்னு தனியா ஆறு லட்சத்தெ தர்றதா சொன்னதும் அடுத்தடுத்த வேலைக விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சிது. அவரு அந்தத் தகவலெ சொல்லி முடிச்ச அன்னிக்கு ராத்திரியே ராசாமணி தாத்தா போன அடிச்சிது. "ன்னா மாப்ளே செளக்கியமா?"ன்னு ஆரம்பிச்சி, "மாப்ளே! எதுவும் தப்பா நெனைச்சுக்காதீயே! நெலமெ அப்பிடி ஆயிடுச்சு. ஒஞ்ஞளப் பத்தித் தெரியாதா? என்னிக்கு வர்றீயே மாப்புள்ளயப் பாக்க?"ன்னு கேட்டுப்புட்டு, "அடுத்த ஞாயித்துக் கெழமெ பயலுக்கு லீவுதாங். அன்னிக்கே வந்துப்புடுதீயளா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா. "பெரியவங்க ஒஞ்ஞ முடிவுதாங் மாமா!"ன்னு‍ சொன்னதொட நிறுத்திக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. "அப்பிடின்னா, அடுத்த ஞாயித்துக் கெழமையிலயே மாப்புள்ளய வந்துப் பாத்துப் புடுங்க, தாமசம் வாணாம்! மேக்கொண்டு ஆவ வேண்டிய காரியத்தெயும் பாத்துப்புடலாம்!"ன்னு சொன்னுச்சு ராசாமணி தாத்தா.
            மாப்புள பாக்குறதுக்கு தன் பக்கத்துச் சொந்தங்கள அழைக்கணுமேன்னு சுப்பு வாத்தியாரு இது சம்பந்தமா மொதல்ல விருத்தியூரு போனாரு. அங்க பத்மா பெரிம்மா, செயராமு பெரிப்பா, பரசு அண்ணன், முத்து அண்ணன், நரசு அண்ணன் எல்லாத்துக்கிட்டேயும் இந்த மாதிரிக்கி விசயம்ன்னு சொன்னாரு. அடுத்ததா கோவில்பெருமாள் போயி நாது மாமா, நாகு அத்தைகிட்டெயும் சொன்னாரு. அப்பிடியே வேலங்குடி போயி ரண்டு அக்காமாருக வூட்டுக்கும் சொல்லிட்டு வந்தாரு. அத்தோட வாழ்க்கப்பட்டு, சிப்பூரு, தேன்காடு, பாகூரு, கொல்லம்பட்டின்னு இருக்குற ஒறவுக்கார சனங்க ஒருத்தரு பாக்கியில்லாம எல்லாத்துக்கும் சொல்லிருந்தாரு. இந்த வெசயத்த நேர்ல பாத்துச் சொல்லிட்டு வர்றதுக்கு நாலு நாளு அலைஞ்சிட்டுக் கெடந்தாரு சுப்பு வாத்தியாரு.
            மாப்புள பாக்கப் போற அன்னிக்கு சுப்பு வாத்தியாரு குடும்பத்துலேந்து அஞ்சு டிக்கெட்டுக, விருத்தியூரு வகையிலேந்து பத்து டிக்கெட்டுக, கோவில்பெருமாலேந்து மாமா, அத்தென்னு ரண்டு டிக்கெட்டுக, வேலங்குடியிலேந்து குமாரு அத்தான், அத்தாச்சின்னு ரண்டு டிக்கெட்டுக, வாழ்க்கப்பட்டு பெரிம்மா, சிப்பூரு பெரிம்மா, பெரிப்பா, சித்தி, சித்தப்பா, தேன்காடு சித்தி, பாகூரு சித்தி, சித்தப்பா, கொல்லம்பட்டியிலேந்து விகடுவோட மாமனாரு, மாமியாரு, கிராமத்துலேந்து பத்து டிக்கெட்டுகன்னு அப்பிடியே போறப்ப முருகு மாமா, நீலு அத்தெ, சித்துவீரன் குடும்பத்து டிக்கெட்டுகன்னு நாப்பதுக்கு மேல இருந்துச்சு சனங்க. வேலங்குடி சின்னவரு வூட்டுலேந்து சொல்லி விட்டும் யாரும் வாரல. சுப்பு வாத்தியாரு மாப்புள்ள பாக்கப் போறதுக்குன்னே ரண்டு வேன் பிடிச்சிருந்தாரு. 
            சுப்பு வாத்தியாரும், ராசாமணி தாத்தாவும் போன்ல பேசிக்கிட்ட படி பத்து மணிக்கு மேல பதினொண்ணரைக்குள்ள மாப்புளப் பாத்து முடிச்சிட்டு கெளம்புறதுங்றது திட்டம். அதுக்காக பத்து மணி வாக்குல பாக்குக்கோட்டை போறதுன்னு திட்டம் பண்ணி வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கேத்தாப்புல ஒறவுக்காரவுங்ககிட்டெ சொல்லி மொத நாளு ராத்திரியே வந்துச் சேந்திடுறாப்புல சேதிய சொல்லியிருந்தாரு. அதுப்படி சனங்களும் வந்துச் சேந்திருந்துச்சுங்க. சுப்பு வாத்தியாரு வூடு அந்த ராத்திரி செக சோதியா இருந்துச்சு. வந்து சேந்திருந்த சனங்க எல்லாம் ஒண்ணொண்ணும் வெத வெதமா கேள்விக் கேட்டுச்சுங்க. எல்லாத்துக்கும் பதிலெ சொன்னாரு சுப்பு வாத்தியாரு.
            ஆன்னா யாருகிட்டெயும் போடப் போற பவுனு, சீரு சனத்தி, கலியாணச் சிலவுக்கான காசியப் பத்தி முங்கூட்டி நடந்த மாபெரும் பேச்சு வார்த்தையப் பத்தி எதுவும் மூச்சு வுடல. அதெயெல்லாம் அதுக்கு மேலத்தாம் பேசி முடிவு பண்ணுவாங்கன்னு சனங்களும் நெனைச்சிக்கிட்டுங்க. இப்படி ஒருத்தரையொருத்தரு பாத்த சந்தோஷத்துல சனங்க பேசி முடிச்சி தூங்க ஆரம்பிச்சப்போ ராத்திரி ஒரு மணிக்கு மேல இருக்கும். அதுக்கு மேல தூங்கி காலாங்காத்தால எழும்பி எல்லா சனங்களும் ஆறு மணி வாக்குல கெளம்புறாப்புல சுப்பு வாத்தியாரு பம்பரமா சொழண்டாரு. அவருக்கு வேலங்குடி பெரியவரோட ஞாபவந்தாம் வந்துச்சு. ஒவ்வொரு கலியாணத்துலயும் அவரு பட்ட மெனக்கெட இப்போ நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. ஒறவுக்கார சனங்க,‍ கெளம்பி வர்ற, தெரு சனங்க உட்பட எல்லாத்துக்கும் ஏழு மணிக்குள்ளேயே, வூட்டுலயே சாப்பாட்ட முடிச்சி ஏழரைக்குள்ள வேனுக்குள்ள ஏத்திப்புட்டாரு. இதுக்காகவே வெங்குவும், ஆயியும் நாலு மணியிலேந்து பொங்கலும் சட்டினியும், இட்டிலியும் சாம்பாரும் தயார்ர பண்ணி காப்பியப் போட்டு வெச்சிருந்துச்சுங்க.
            எல்லாத்தையும் கெளப்பி வேன்ல ஏத்தி, வேன் கெளம்புறப்போ சரியா ஏழரை மணி. வேனுங்க ரெண்டும் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணுப் போனுச்சு. வேனு கூத்தாநல்லூரு போற வரைக்கும் எந்தப் பெரச்சனையும் இல்ல. கூத்தாநல்லூரு கடைத்தெருக்குள்ள போனப்பத்தாங் ஒரு பெரச்சனெ உண்டானுச்சு. ரொம்ப குறுகலான அந்த ரோட்டுல போறப்போ எதுத்தாப்புல பஸ்ஸூ வந்துச்சு. சுப்பு வாத்தியாரு அதெ பாத்த ஒடனே "ஓரங்கட்டிக்கிட்டு, பஸ்ஸூ போன பெற்பாடு போவலாம்!"ன்னு சொல்லி முடிக்கல. "அதெல்லாம் பாத்துக்கிடலாம் சார்!"ன்னு வேன் டிரைவர் சொல்லிட்டு, வேனும் பஸ்ஸூம் சைடு போட்டுகிட்டுப் போவ, பஸ்ஸூம் வேனும் ஒண்ணோட ஒண்ணு ஒரச வேனோட சன்னலுக்கு வெளியில போற கம்பியும், பஸ்ஸோட சன்னலுக்கு வெளியில போற கம்பியும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு நல்லா மாட்டிக்கிடுச்சு. வேனும் நின்னுடுச்சு. பஸ்ஸூம் நின்னுடுச்சு.
            மேக்கொண்டு வேனையோ, பஸ்ஸையோ நவுத்துன்னா கம்பி பேத்துட்டு வந்துடுங்ற நெலமெ. மின்னாடி வந்த வேனுக்கு இந்தக் கதெ. பின்னாடி வந்த வேனு பாதுகாப்பா பின்னாடியே ஓரமா நின்னுடுச்சு. கூத்தாநல்லூரு ரோட்டுல இது ஒரு பெரச்சனெ. செல எடங்கள்ல ரோடு ரொம்ப குறுகலா ரண்டு பக்கமும் கடைகளா இருக்கும். அந்த மாதிரியான எடத்துல பஸ்ஸூம், வேனும் மாறிப் போவ முடியாது. பின்னாடி வந்து ஓரமா எடம் இருக்குற எடமா பாத்து நிறுத்திக்கிட்டு எதாச்சும் ஒண்ணு போன பெற்பாடுதாங் மத்த வாகனம் போவணும். அப்பிடிப் போவாம கொஞ்சம் அவசரப்பட்டதுல ரண்டும் நல்லா மாட்டிக்கிடுச்சு. பஸ்ஸையோ வேனையோ நவுத்துனா கம்பியோட மேக்கொண்டு வாகனங்களோட வேற பட்டையும் பேந்துட்டு வந்துடுமோங்ற மாதிரி நெலமெ. இருந்தாலும் வண்டிய எடுத்தாவனுவுமே. வேனுக்கும் பஸ்ஸூக்கும் ரண்டு பக்கமும் வாகனங்க சேர்ற ஆரம்பிச்சி பெரிய நெரிசலா ஆவ ஆரம்பிச்சி ஒவ்வொரு வண்டிக்காரனும் ஹாரன வெச்சிட்டு ச்சும்மா இல்லாம பாம் பாம், பீம் பீம்ன்னு அடிச்சிட்டு இருக்காம். சத்தம்ன்னா சத்தம் தாங்க முடியாத சத்தம். வண்டிய விட்டு செல பேரு எறங்கி வந்து வாகனத்த சீக்கிரமா எடுங்கன்னு வேற சத்தம் கொடுக்குறாம்.

            பஸ்ஸ நவுத்துடான்னா பஸ்ஸூக்கார்ரேம் நவுத்த மாட்டேங்றாம். பஸ்லேருந்து ஒரு பட்டை பேந்தாலும் அதுக்கான காசிய நாம்மத்தாம் கொடுக்கணுங்றாம் அவ்வேம். வேனுக்கார டிரைவர்ர நீயாச்சும் நவுத்துன்னா அவனும் நவுத்த மாட்டேங்றாம். வேன்லேந்து எதாச்சிம் ஒரு பட்டெ பேந்தா நாம்மத்தாம் மொதலாளிக்குப் பதிலெச் சொல்லணும்ங்றாம். பஸ்ஸூல டிரைவரும், கண்டக்டரும் எறங்கி வர்ற, வேனுக்கார டிரைவரு எறங்கிப் போக ரண்டு பேத்துக்கும் வாய் சண்டையா ஆரம்பிச்சது கை கலப்பா மாறிடும் போல ஆயிடுச்சு. வெங்குவுக்கு மனசெல்லாம் நடுங்குது, இதென்னடா நல்ல காரியம் அதுவுமா கெளம்பிப் போறப்ப இப்பிடி அபசகுனம் மாதிரின்னு. சுப்பு வாத்தியாரு, விகடு, பரசு அண்ணன், முத்து அண்ணன், நரசு அண்ணன், ஊருக்கார பெரிசுங்க எல்லாம் எறங்கி ரண்டு பக்கத்தையும் சமாதானம் பண்ணப் பாக்குதுங்க. சமாதானம் ஆவுறாப்புல தெரியல.
            பஸ்ஸூக்காரவுக, வேனுக்காரவுக எல்லாம் சேந்துகிட்டு வம்படியா போலீஸ் வந்ததாம் ஆச்சுன்னு பிடிவாதமா நிக்குறாங்க. சுப்பு வாத்தியாரு கெஞ்சுற நெலைமைக்கு வந்துட்டாரு. "யய்யா! மாப்புள பாக்கப் போறேம். இந்த நேரத்துல போலீஸ் அது இதுன்னா சுத்தப்பட்டு வாராது. நேரத்துக்குப் போயாவணும். ஸ்டேசன்ல போயி நின்னுகிட்டு இருக்க முடியா. மொதல்ல வண்டிய சூதானமா அந்தாண்ட எடுங்க. பத்து மணிக்குள்ளார நாஞ்ஞ பாக்குக்கோட்டைக்குப் போயாவணும்!"ங்றாரு. அவரோட நெலமையப் பாத்து ஒரு வழியா கொஞ்சம் எறங்கி வந்த பஸ்ஸூகாரவுகளும், வேனுகார டிரைவரும், வேன்ல இருந்த சனங்களையெல்லாம் எறக்கி விட்டுப்புட்டு, ரண்டையும் மின்ன பின்ன நகர்த்தி எடுத்தா வேன்லேந்து கம்பி பேந்துட்டு அந்தாண்ட போயி விழுவுது. பஸ்லேந்து ஒரு தகரப்பட்டை பேந்துட்டு அந்தாண்ட போயி விழுவுது.
            இப்போ, வேனையும் பஸ்ஸையும் அந்தாண்ட நவுத்துனா பஸ்ஸூகாரவுக வேன ஓரங்கட்டி பேந்து விழுந்த தகரப்பட்டைக்குக் காசிய கொடுத்துட்டு வண்டிய அந்தாண்ட எடுடான்னுட்டாங்க. வேனுக்கார டிரைவரு, "பைசா காசியக் கொடுக்க முடியாது! வேணும்ன்னா போலீஸ்காரவுகள கூப்ட்டு வா! பஞ்சாயத்தெ வெச்சிக்கிடலாம்!"ங்றாம்.
            பஸ்ஸூகார டிரைவரு, "நாம்ம போயி டிப்போல தண்டம் அழுவ முடியாது. ஆயிரத்து எரநூத்து எடுத்து வெச்சிட்டு மறுவேல பாரு!"ங்றாம்.
            "நாம்ம வாங்குற சம்பளமே அம்மாம் வாராது. அதெ எடுத்து வெச்சிப்புட்டு நாம்ம ன்னா வெறுங்கையோட வூட்டுக்குப் போறதா? நமக்கும் வண்டியில கம்பிப் போயிருக்கு. அதுக்கு ரண்டாயிரத்தெ எடுத்து வையி!"ன்னு வேனுக்கார்ர டிரைவரும் நிக்குறாம்.
            சுப்பு வாத்தியாரு பாத்தாரு பையிலேந்து ஆயிரத்து எரநூத்து ரூவாய எடுத்து பஸ்ஸூகாரவுக மின்னாடி வெச்சாரு. வேனுக்காரரப் பாத்து, "ஒஞ்ஞள நாம்ம பெறவு கவனிக்கிறேம்! மொதல்ல வண்டியக் கெளப்புங்க!"ன்னு கையெடுத்துக் கும்பிட்டாரு. ஒடனே வேனுக்கார்ர டிரைவரு, "அப்பிடில்லாம் விட முடியாது!"ன்னு பக்கத்துல ஒரு கடையில ஒரு டிம்மித்தாளெ வாங்கி அதுல இன்னயின்ன மாதிரி சங்கதின்னு எழுதி பஸ்ஸூகாரவுகக் கையெழுத்துப் போடணும்ன்னு நிக்குறாம். சுப்பு வாத்தியாரு, "அதெல்லாம் வாணாம், வண்டிய எடுத்துட்டு கெளம்புவேம்!"ங்றாரு மறுபடியும் கையெடுத்துக் கும்புட்டு. பஸ்ஸுக்கார டிரைவரும், கண்டக்டரும் கையெழுத்துப் போட்டுத் தர்றாம வண்டிய எடுக்க முடியாதுன்னு வேனுக்கார்ரேம் பிடிவாதம் பண்ணா, ஒரு வழியா சுப்பு வாத்தியாரோட பரிதாபமான மொகத்தப் பாத்து, கடெசீயா பஸ்ஸூகாரவுக ஒத்துக்கிட வேல முடிஞ்சது.
            கெளம்புறப்போ வேனுக்கார டிரைவரு சொல்றாம், "இப்பிடில்லாம் இருக்காதீங்க சார்! இந்த மாதிரிக ஆளுகளெ நம்ப முடியாது. ஆயிரத்து எரநூத்த வாங்கி இவனுங்க பாக்கெட்டுலப் போட்டுக்கிட்டெ டிப்போல கட்ட மாட்டானுக. அதுக்குத்தாம் நாம்ம எழுதி வாங்கிக்கிறது. நாளைக்கி டிப்போவுக்குப் போயி வெசாரிப்பேம்ல!"ன்னாம். "அதல்லாம் ஒண்ணும் வேணாம்பீ! வண்டிய எடுங்க. பத்து மணிக்குள்ளார பாக்குக்கோட்டைக்குப் போயி ஆவணும்! யிப்பவே மணி எட்டெ முக்காலு ஆயிட்டு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. அவரோட ஒடம்பெல்லாம் தொப்பரையா வெயர்வையில நனைஞ்சி இருக்கு.
            "ஒரு அரை மணி நேரந்தாம் வெரயமா போச்சு. சொன்னா சொன்னபடிக்கி கொண்டு போயி நிறுத்துறேம் சார்!"ன்னாம் வேனுக்கார டிரைவரு. "அதுக்காக வேகமா போவ வாணாம். கொஞ்சம் அரை மணி நேரம் தாமசம் ஆனாலும் பரவாயில்ல. நெதானமாவே போங்க! மறுக்கா இதெ போல எஞ்ஞனாச்சும் நிறுத்துன்னாப்புல ஆயிடுச்சுன்னா வேகமா போனதுக்கே அர்த்தம் யில்லா ஆயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. "சொன்னா சொன்னபடிக்கு நிறுத்துறேம் சார்! ஒண்ணும் பயப்படாதீங்க! இனுமே அப்பிடில்லாம் ஆவாது சார்! பஸ்ஸூக்காரனுக்கு அந்தாண்ட ந்நல்லா எடம் கெடக்கு சார்! அதெ பாக்கமா நம்மப் பக்கம் ஒடைச்சித் திருப்பிட்டாம்! தப்பு நம்ம மேல கெடையா சார்! பஸ்ஸூக்கார்ரேம் மேல!"ன்னாரு வேன்கார்ர டிரைவரு.
            இப்போ வேன்லேந்து எறங்குன சனங்க ஏறிக்க மொத வேனு பொறப்படுது. அதுலயும் ஒரு சங்கதி என்னான்னு கேட்டீங்கன்னா, வேன இப்பிடி ஓரங் கட்டுனதுல அங்கங்க எறங்கி நின்ன சனங்க, கொஞ்சம் பேச்ச வார்த்தையில நேரமானதப் பாத்துட்டு, அதுகப் பாட்டுக்கு டீத்தண்ணிய குடிக்க கடையெத் தேடிப் போயிடுச்சுங்க. இந்தப் பெரச்சனைத் தீக்குறதுல நின்ன சுப்பு வாத்தியாரும் மித்தவங்களும் அதெ கவனிக்கல. பெறவு அவிங்கள வேற ஒவ்வொருத்தரு அங்ஙன இங்ஙன தேடிக் கொண்டாந்து வேனுக்குள்ள ஏத்துறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும். அதுக்குப் பின்னாடி பாதுகாப்பா ஓரமா நின்ன ரண்டாவது வேனு பின்தொடருது.
            சுப்பு வாத்தியாருக்கு ஒரு நெனைப்பு, பொண்ணு பாக்க பாக்குக்கோட்டை சனங்க வந்த மாதிரிக்கி நாமளும் பதினொண்ணரை மணிக்குத்தாங் போயிச் சேருவோமோன்னு. அவருக்குப் பாக்குக்கோட்டைக்குப் போயி சேர்ற வரைக்கும் படபடப்பும், பரபரப்பும் அடங்கல. நல்ல வேளையா சுப்பு வாத்தியாரு நெனைச்சது போல நேரம் கடக்கல. அவரு மொத நாளே மாப்புள்ள பாக்கப் போறதுக்கான சாமாஞ் செட்டுக, பூவு, பழம்ன்னு எல்லாத்தையும் வாங்கி வெச்சிருந்தாரு. அதால சாமாஞ் செட்டுக வாங்கணும்ன்னு வேனை எங்கயும் நிறுத்த வேண்டிய அவசியமில்லாமப் போச்சுது. எடையில வேனும் பஸ்ஸூம் ஒரசி நின்ன அந்த ஒரு எடத்த தவுர எந்த எடத்துலயும் நிக்காம வேனுக ரண்டும் வெரசா போயிட்டே இருந்துச்சுங்க. ஒம்போதரைக்கெல்லாம் போயிச் சேந்துப்புடலாம்ன்னு நெனைச்சது மட்டுந்தாம் கொஞ்சம் தாமசமாயிருந்துச்சு.
            மிங்கூட்டியே கெளம்புனதால, எடையில வேனும் பஸ்ஸூம் ஒரசி அதுல நேரமானாலும் பத்தே காலுக்கெல்லாம் வேன் பாக்குக்கோட்டையில நோழைஞ்சி சிங்கப்பூரு காலனி ராசாமணி தாத்தா வூட்டுக்கு மின்னாடி நின்னுச்சு. இப்படியா அதகள ரணகளப்பட்டு, சின்னா பின்னப்பட்டு மாப்புளப் பாக்க சனங்கள கொண்டு போயி பாக்குக்கோட்டையில காலடி எடுத்து வெச்சாரு சுப்பு வாத்தியாரு. அப்பதாங் அவரு மனசுக்குள்ள கொஞ்சம் நிம்மதி வந்துச் சேந்துச்சு. அங்க காலடி எடுத்து வெச்சதுந்தாம் வெங்குவுக்கும் போனாப்புல இருந்த உசுரு திரும்ப வந்தாப்புல இருந்துச்சு. "ந்நல்ல வேள நாம்ம கும்புடுற உஞ்சினி அய்யனாரு நம்மள கைவுடல!"ன்னுச்சு வெங்கு.
            "ஒரு நல்ல காரியத்துக்குப் போறப்ப அப்பிடி இப்பிடின்னுத்தாங் செலது நடக்கும். அதெ பத்தியா நெனைச்சிக்கிட்டு கவலபட்டுக்கிட்டு இருக்குறது? எல்லாம் திஷ்டியா இருக்கும். இப்போ கழிஞ்சதுன்னு நெனைச்சுக்கோ!"ன்னுச்சு விருத்தியூரு பத்மா பெரிம்மா.
*****


30 Jul 2020

சில நாட்களில் பூத்த சிறு மலர்கள்

சில நாட்களில் பூத்த சிறு மலர்கள்

ஒரே ஆறுதல் என்னவென்றால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது என்பதுதான்!
*****
உயிர் எடுப்பதை எவ்விதத்திலும் நியாயம் செய்ய முடியாது. அதை கொரோனா செய்தாலும் சரித்தாம், கோரோனாவின் பெயரைச் சொல்லிக் காவலர்கள் என்று மனிதர்கள் செய்தாலும் சரித்தாம்!
*****
சிறையிலிருந்து விடுதலை ஆகி என்ன செய்ய?
இருப்பதே
சிறையில் இருப்பது போலத்தானே இருக்கிறது!
*****
ஏனுங்க உப்பே இல்லங்றதெ சொல்றது இல்லையாங்றா பொண்டாட்டி. நீ யூடியூப்ல பாத்து செஞ்ச புது டிஷ்ஷோன்னு நெனைச்சிட்டேங்றான் புருஷன். இந்தக் கொழுப்புக்கு உப்பே போடாம செஞ்சதுதான் சரிங்றா பொண்டாட்டி.
*****
என்னா நமக்குக் கொடுத்தாங்கன்னு எதுத்த வீட்டுக்கு நம்ம வீட்டுல நான் சுட்ட நாலு இட்டிலிய அள்ளிக் கொடுத்தீங்கங்றா பொண்டாட்டி. எப்பப் பாத்தாலும் நம்ம வீட்டுக்குத் தொந்தரவு கொடுக்குறவங்களுக்கு அதெ கூட கொடுக்கலன்னா எப்பிடிங்றான் புருஷங்காரன்.
*****
ஆசை ஆசையா குறுவைய வெதைச்சவனுக்கு வரப்புலேந்து தண்ணியும் வர்ற மாட்டேங்குது, வானத்துலேந்து மழையும் வர்ற மாட்டேங்குது. கண்ணுலேந்து தண்ணித்தாம் வருது. அந்தத் தண்ணி வெதைச்ச வெதைக்குப் பத்தவே மாட்டேங்குது.
*****
கார்ப்பரேட் ஆகப் போகிறேன் என்றவர் சாமியாராகிப் போனார்!
*****
டிவாங்கி விடுறதுக்கு, கொரோனாவுக்கு விடுறதுக்குன்னு மனுஷனுக்கு ரெண்டு உசுரா இருக்குது? ஒத்து உசுருதானே இருக்குது. அதுல அடிவாங்கி வுடுறதுக்குன்னே ஒண்ணுக்கு ரண்டா உசுர எடுத்துக்கிட்டா எப்பிடி?
*****
தூக்கி எறியப்படும் முகக்கவசங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் கைகளில் விளையாட்டுப் பொருட்களாகின்றன!
*****
யுஜிசியின் அனுமதி கிடைக்காத காரணத்தால் 2018-2019 இல் பி.எட். சேர்ந்தவர்களின் கட்டணத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்திலிருந்து திருப்பிக் கொடுக்கிறார்கள்! கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார்கள் சரி! கடந்துப் போன ஓராண்டை யார் திருப்பிக் கொடுப்பார்கள்?
*****
எப்போதோ பெய்யும் மழைக்கு எப்போதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது!
*****
கொரோனாவை விட வேகமாகப் பரவுகின்றன அது குறித்த வதந்திகள்.
*****

கேட்கிறதெ தர்றேன்னு சொல்லாம எப்படி வந்தே?

செய்யு - 521

            ஒவ்வொரு தவா சுப்பு வாத்தியார் வடவாதி போயிட்டு வர்றப்பயும் வெங்கு ரொம்ப ஆசையோட வந்து கேக்கும், "எப்போ மாப்ள பாக்க வர்றச் சொல்லிருக்காங்க?"ன்னு. இப்பவும் அப்பிடித்தாம் சுப்பு வாத்தியாரு வர்ற வரைக்கும் காத்திருந்துக் கேட்டுச்சு. சுப்பு வாத்தியாரு ரொம்ப கலக்கமா சொன்னாரு, "நம்ம வூட்டுக்குப் பொண்ண பாக்க வாந்தாவோளா? பணத்தெ பாக்க வந்தாவோளான்னு தெரியலயே?"ன்னாரு.
            "ன்னான்னு தெளிவா சொல்லுங்க!"ன்னுச்சு வெங்கு. சுப்பு வாத்தியாரு பொண்ணு பாக்க வந்த பெற்பாடுதாங் வெங்குவோட கொஞ்சம் சகஜமா பேச ஆரம்பிச்சிருந்தாரு. ஒரு வழியா பொண்டாட்டி விருப்பப்படியே கலியாணத்த பொண்ணுக்குப் பண்ணி விட்டுப்புடலாங்ற முடிவுக்கு வந்த பெற்பாடு மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்குறதுல அர்த்தமில்லன்னு கேட்டதுக்கு எல்லாம் பதிலச் சொன்னாரு. "கலியாணச் சிலவுக்கு அஞ்சு லட்சமா, ஆறு லட்சமான்னு தெரியல. ஓம் மாமன் ஒண்ணு சொல்லுது, மாமனோட மருமவ்வே ஒண்ணு சொல்லுது. அதெ ஒத்துக்கிட்டா மாப்ள பாக்க போவலாம்ன்னு!" ரொம்ப எரிச்சலோட சொன்னாரு  சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கு நீஞ்ஞ ன்னா சொன்னீங்க?"ன்னுச்சு வெங்கு.
            "வூட்டுல ஒங்கிட்டெ, மவ்வேங்கிட்டெ கலந்துக்கிட்டுத்தாம் சொல்லணும்ன்னு சொல்லிட்டு வந்துட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெப்படி நீஞ்ஞ அப்பிடிச் சொல்லிட்டு வாரலாம்?"ன்னுச்சு கோவமா வெங்கு.
            "வெறெப்படிச் சொல்லணும்னு எதிர்பாக்குறே?"ன்னு சுப்பு வாத்தியாரும் பதிலுக்குக் கோவமா கேட்டாரு.
            "பத்து லட்சமாவே இருந்துட்டுப் போவுது. கலியாணச் சிலவுக்குத்தான கேக்குறாங்க. கொடுக்குறேம்ன்னு சொல்லிட்டு என்னிக்கு மாப்ளப் பாக்க வர்றதுன்னு கேட்டுட்டு வர்ற வேண்டியத்தானே? இப்பிடி வூட்டுல போயிக் கலந்துட்டுச் சொல்றேம்ன்னு சொன்னாக்கா பொண்ணு வூடு நம்மளப் பத்தி என்னத்தெ நெனைச்சுப்பாங்க?"ன்னுச்சு வெங்கு.
            "பத்து லட்சத்துக்கு எத்தனெ சுழின்னு தெரியுமா ஒமக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துத் தெரியாது நமக்கு. அதோட மதிப்புத் தெரியும் நமக்கு!"ன்னுச்சு வெங்கு.
            "தெரிஞ்சுமா இப்பிடிக் கேக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ண வுட பணந்தாம் முக்கியமா மனுஷா ஒமக்கு?"ன்னுச்சு வெங்கு.      
            "பொண்ணும் முக்கியந்தாம். பணமும் முக்கியந்தாம். பணத்தெ வுட பொண்ணு முக்கியம். இன்னும் மாப்புள பாத்தாவல. மூர்த்தோல எழுதியாவுல. கலியாணங் கூட நடக்கல. அதுக்குள்ளேயே பணம் பணம்ன்னு ன்னா பாடு படுத்துறவேம் நாளைக்கிக் கலியாணம் ஆயி பணம் பணம்ன்னு பிடுங்கி எடுத்தாம்ன்னா எஞ்ஞ வெச்சிருக்கே பணத்தெ? பணத்தெ நீயென்ன அச்சடிச்சா வெச்சிருக்கே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யிப்பிடிக் கோவப்பட்டா நாம்ம என்னத்தெ சொல்றது? இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்கத்தானே கலியாணத்தெ பண்ணி வுடுறாங்க. அந்தக் கலியாணத்தெ பண்ணி வுடுற சிலவெ கையில கொடுங்கங்ற மாதிரிக்கிக் கேட்டுருக்கும்ங்க!"ன்னுச்சு வெங்கு.
            "செரி கலியாணச் சிலவெ கேக்கட்டும். கலியாணச் சிலவுக்கு எம்மாம் ஆவும்? அதெ சொல்லு மொதல்ல! கலியாணச் சிலவுக்கு எம்மாம் ஆவும்ன்னே தெரியாமலேயே பேசிட்டு நிக்கக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நமக்குத் தெரியும். டாக்கடர்ன்னா கூட கொறைச்சலு ஆவும்ன்னுத்தாம் எம் மவளெ ஒரு கட்டெ அடிக்குற ஆளுக்குத் தள்ளி வுடப் பாக்குறே நீயி!"ன்னு ஆரம்பிச்சிடுச்சு வெங்கு.
            "ந்தாரு பேசுறதெ ஒழுங்க பேசு. பொண்ணு படிக்கிறதுக்குக் காசியக் கணக்குப் பாக்காம சிலவு பண்ணி படிக்க வெச்சிருக்கேம். பொண்ணு படிச்சிருக்குறப் படிப்புக்கு, இப்போ இவ்வேம் கேக்குற ஆறு லட்சத்துக்கு இன்னொரு நாலு லட்சம் போட்டேம்ன்னா வெச்சுக்கோ பத்து லட்சத்தக் கொடுத்து ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியோடத்துல வேலையே வாங்கிக் கொடுத்துப் புடுவேம். பொண்ணு வேலையில இருக்குன்னு தெரிஞ்சா பைசா காசில்லாம் கட்டிக்கிட வூட்டுல ஆயிரம் மாப்ள வந்து நிப்பாம் பாத்துக்கோ! வெவரம் புரியாம பேசிட்டு நிக்காதே! நமக்குக் கெட்டக் கோவமா வந்துப்புடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ணுக்கு வேலைய வாங்கிக் கொடுத்துப்புட்டு சம்பாத்தியம் யில்லாத ஒருத்தனெ பாத்துக் கட்டி வைக்கப் போறீயா மனுஷா நீயி?"ன்னுச்சு வெங்கு.
            "பொண்ணு வேலையில இருக்குன்னாவே வேலையில இருக்குற ஒருத்தம்தாம் வருவாம். அப்பிடி வேலையில யில்லாதவனெ கேட்டாலும் பரவாயில்ல, குடும்பத்துல ஒருத்தரு சம்பாதிச்சா போதும். அதாங் அப்போ பொண்ணு சம்பாதிக்குல்லா. அதெ வெச்சு நல்ல வெதமா இருந்துட்டுப் போயிடலாம். இப்போ நாம்ம யில்லயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            இவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்குறதுல ஊடால பூந்து என்னத்தெ பேசுறதுன்னு புரியாம விகடுவும், ஆயியும், செய்யுவும் கொழம்பிப் போயி நின்னாங்க. ஏன்னா வார்த்தைகள அந்த வேகத்துல ஒருத்தருக்கொருத்தரு மாத்தி மாத்திப் பேசிட்டே யாரும் உள்ளார பூந்த பேசாத அளவுக்கு வுட்டுக்கிட்டெ இருந்தாங்க ரண்டு பேரும். புயல் வேகத்துல வார்த்தைக பறந்துட்டு இருந்துச்சு.
            "மொத்தத்துல நம்ம பொண்ணு ஒரு டாக்கடர்ருக்குக் கலியாணத்தெ ஆயிப் போவக் கூடாது! அதானே ஒம் முடிவு மனுஷா! நடத்து, ஒம்மோட நாடகத்தெ நடத்து. நீயி நெனைக்குறபடியே எவனுக்காச்சும் கலியாணத்தெ பண்ணிக் கொடு. என்னத்தெ வாணாலும் பண்ணிட்டுப் போ. நல்ல எடம்ன்னா காசி பணம் கூட கொடுத்துதாங் செஞ்சாவணும். ஏப்ப சாப்பன்னத்தாம் பைசா காசி சிலவில்லாம பண்ணி வுடலாம். அதாங் ஒங் கணக்கு. நமக்குப் புரிஞ்சிப் போயிடுச்சு. நீயி ஒண்ணும் சொல்ல வாணாம். எம் பொண்ண ந்நல்ல எடத்துல கலியாணத்தெ பண்ணிக் கொடுக்கணும்ன்னு நாம்ம நெனைச்சிருக்கவே கூடாது. அத்து எந் தப்பு. அவ்வே எப்பிடியாச்சியும் போவட்டும். எந்தக் குட்டிச்சுவாரட்டும் போவட்டும். நமக்கென்ன? இந்த ஆளு பண்ணுறதெ பண்ணடும். ஆடுறதெ ஆடட்டும். பொட்டச்சிக்கு எந்த வூட்டுல எந்த ஆம்பளெ மதிப்புக் கொடுத்திருக்கானுவோ? இந்த ஆளு மதிப்பெ கொடுக்குறதுக்கு!"ன்னு வெங்கு பாட்டுக்குப் பொரிஞ்சு தள்ள ஆரம்ப்பிச்சிட்டுது. அப்பத்தாம் பேச்சோட பேச்சா அதோட கண்ணுக்கு மவ்வேம் விகடு படுறாம். இருந்த ஆத்திரத்துல எல்லாம் மறந்துப் போனது போல இருந்து வெங்கு, இப்போ அவனெ பாத்ததும் அவனெ இழுத்துப் பேச ஆரம்பிச்சிடுச்சு.
            "அப்பனுக்கு ஏத்த புள்ளீயா நிக்குறாம் பாரு. இம்மாம் நடந்துட்டு இருக்கு. நாம்ம பணத்தெத் தர்றேம். தங்காச்சிக் கலியாணத்த நடத்துங்கன்னு சொல்றான்னா பாரு ஆயி ஒம் புருஷன்? எல்லாம் சுயநலமாத்தாம் இருக்கு. நாம்மத்தாம் பொண்ண வெச்சிட்டு ஏமாந்துப் போயி நிக்கேம்!"ன்னுச்சு வெங்கு.
            "அவ்வேம் ன்னத்த பண்ணுவாம்? சம்பாதிக்குற காசிய முழுசும் நம்மகிட்டெ கொடுத்துட்டு இருக்காம். அவனெ போயி பேசலன்னு எகிறிக் குதிக்குறீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பேங்குல ஒரு லோனப் போட்டுத் தர்றேம்ன்னு ஒரு வார்த்தெ வருதா பாருய்யா மனுஷா? ஏம் தங்காச்சிக்கு ஒரு லோனப் போட்டுத் தந்தா கொறைஞ்சாப் போயிடுவாங்? பங்குச் சந்தென்னு ஓடிட்டுக் கெடந்தானே! குஞ்சுக் கவுண்டர்ன்னு ஒருத்தரு இருந்தாரே! அவருகிட்டெ கைமாத்தா கேட்டா கொடுக்கமலா போயிடுவாரு! இவ்வேம் கேட்டான்னா லட்ச லட்சமா கொண்டாந்து கொடுக்க ஆளிருக்காங்கன்னு நமக்குத் தெரியும். இந்தப் பயெ கேக்க மாட்டாம். மனசு இருந்தா செய்யலாங். அவனுக்கு ஒரு பொண்ணு இருக்குல்லா. குடும்பம் ஆயிடுச்சுல்லா. இனுமே நம்ம குடும்பத்தெ பாக்கணும், நாம்ம இனுமே எதுக்குச் செய்யணும்ன்னு நெனைக்கிறாம்?"ன்னுச்சு வெங்கு.
            "என்னங்க யத்தெ இப்பிடிப் பேசுறாங்க? நாம்ம வேணும்ன்னா நம்ம நகையெ தர்றேம். பேங்குல அடவு வெச்சி அதுல வர்ற பணத்தெ கொடுங்க!"ன்னுச்சு ஆயி விகடுகிட்டெ.
            சுப்பு வாத்தியாருக்குக் கடுமையான கோவம் வந்திடுச்சு. "இந்தாரு நீயி பேசுறது கொஞ்சம் கூட மொறையில்ல. கண்ண கட்டிக்கிட்டு பாழுங் கெணத்துல விழுவுறாப்புல நடந்துக்கிறே. ஒம் மவ்வெனப் பத்தித் தெரியாது ஒமக்கு? பைசா காசி கடன் வாங்குறதுன்னா பிடிக்காத பயெ அவ்வேம். பல்ல கடிச்சிக்கிட்டுப் பட்டினி கெடந்தாலும் கெடப்பாம். அவனெ போயி கடனெ வாங்கச் சொல்றே? நாம்ம நம்ம வாழ்க்கையில கடனெ ஒடனெ வாங்கிக் கஷ்டப்பட்டது போதாதுன்னு இப்போ அவனெ வேற கடனெ வாங்கு, நகையெ அடவு வையுன்னு சொல்லிட்டு இருக்கீயா? தலைமொறைக்கும் கடனெ வாங்குறது தொடரணும்னு நெனைக்குதீயா? இதல்லாம் நல்லா யில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஊருல ஒலகத்துல யிப்போ யாரு கடன வாங்காம இருக்காங்க. எல்லாம் கடன்ல்லத்தாம் ஓடிட்டு இருக்கு. ஒரு வூட்ட கட்ட, கலியாணத் தேவையப் பாக்க கடன ஒடன வாங்குறதுல ஒண்ணும் தப்பு யில்ல!"ன்னுச்சு வெங்கு.
            "நம்ம தகுதிக்கு எதெயும் செஞ்சுகிட்டா கடன ஒடன வாங்க வேண்டியதில்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம இப்பிடியே இருக்கணும். இதுக்கு மேல மின்னேறக் கூடாதுன்னே நெனைச்சா நாம்ம என்னத்தெ சொல்றது? பொண்ணாச்சியும் டாக்கடரு பொண்டாட்டிங்ற பேத்தோட மின்னேத்தமா இருந்தா ன்னா கொறைஞ்சா போயிடப் போவுது? நம்ம வூட்டுப் பொண்ணுக்காக செய்யாம யாருக்குச் செய்யப் போறேம்? இந்தப் பாருடாம்பீ! தங்காச்சிக்குக் கலியாணத்தெ நல்ல வெதமா பண்ணிக் கொடு. பின்னாடி சொத்து பத்துன்னும் ஒரு பைசா காசிய அவளுக்குக் கொடுக்க வாணாம். யம்மா ன்னா பொண்ணுப் பக்கமாவே பேசிட்டு இருக்குன்னு நெனைக்காதே. இன்னிக்கு நாம்ம சொல்றதுதாங். எல்லா சொத்தும் ஒமக்குத்தாங். அவ்வே கலியாணத்தெ இன்னும் லட்சம் லட்சமா ஆனாலும் கணக்குப் பாக்காதே! அப்பங்காரரு பேச்சக் கேட்டு யோஜனெ பண்ணாதே. பண்ணி முடிச்சி வுட்டுப்புடு!"ன்னுச்சு வெங்கு.
            "நமக்கு இந்தக் கலியாணமே வாணாம்மா! நம்மள வுட்டுப்புடுங்க. நாம்ம மேக்கொண்டு படிக்கணும்ன்னு ஆசெ படுறேம். நம்மளப் படிக்க வுடுங்க!"ன்னா செய்யு.
            "யய்யோ கலியாணப் பொண்ணு இப்பிடில்லாம் கலியாணம் வாணாம்ன்னுல்லாம் பேயக் கூடாது!"ன்னு வெங்கு ஓடிப் போயி செய்யுவோட வாயப் பொத்துனுச்சு.
            "வுடும்மா! நம்மள பேச வுடும்மா!"ன்னு செய்யு வெங்குவோட கைய தட்டி வுட்டா.
            "எலே கலியாணப் பொண்ணு பேயக் கூடாத வார்த்தையெல்லாம் பேசுதுடா! இதுக்குத்தாங் ஒரு புள்ளையப் பெத்தேனா? ஒரு அப்பங்காரனா ஒரு ஆளும் இதெ கேட்டுட்டு நிக்குதா?"ன்னு வெங்கு அழுவ ஆரம்பிச்சிடுச்சு.
            ஒட்டுமொத்த சனமும் உணர்ச்சிவசப்பட்டு வெடிசுப் போற நெலையில இருந்துச்சுங்க. வெங்கு அப்பிடியான ஒரு நெலைய உண்டு பண்ணிடுச்சு. விகடு பேசுனாம். "நாம்ம பாங்கியில லோனப் போட்டு தர்றேம்மா! ஒமக்கு இந்த எடந்தாம் பிடிச்சிருக்குன்னா ன்னா சிலவு ஆனாலும் பண்ணிடலாங்!"ன்னாம்.
            "எலே பாங்கியில ஆறு லட்சத்துக்குக் கடனெ போட்டீன்னா கட்டி முடிக்கிறப்போ கணக்குப் பாத்தா எட்டு ஒம்போது லட்சம் வந்து நிக்கும்டா. மாசச் சம்பளத்துல பாதிய அத்து முழுங்கிடும்டா! யோஜனெ பண்ணி நெதானமா பேசு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நாளைக்கு தங்காச்சிக்கு ஒரு நல்ல எடம் வந்தது நாம்ம கை கொடுக்காததால நின்னதுன்னு ஒரு பேச்சு வந்தா அதெ தாங்குற சக்தி நம்மட மனசுக்கு யில்லப்பா!"ன்னாம் விகடு.
            "மொத்த கலியாணச் சிலவுக்கான கணக்குத் தெரியாமா பேசுறடா நீயி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்த வூடு ஒண்ணுத்தெ தவுர மித்த எல்லாத்தையும் வித்துப் புடலாம்ப்பா!"ன்னாம் விகடு.
            "அப்பிடில்லாம் போயி குருட்டுத்தனமா வுழுவ முடியா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒங்கப்பன் இப்பிடித்தாம்டா ஆவுற கதெய ஆவ வுட மாட்டாம். யோஜனென்னு யோஜனென்னு நிப்பாம். இப்பிடி யோஜனெ பண்ணிப் பண்ணித்தாங் இன்னும் ந்நல்லா வர்றதெ வர முடியாம அடிச்சிட்டு இருக்காம். இதுல ன்னா யோஜனெ பண்ண வேண்டிது கெடக்குன்னு யய்யோ சாமி நமக்குப் புரியலீயே?"ன்னுச்சு வெங்கு படு மோசமா.
            "மாமா! யத்தெ விரும்புறாப்புலயே கலியாணத்த முடிச்சிடலாம் மாமா! பொண்ணுன்னா கூட கொறைச்சலு சிலவு ஆவும்தாம் மாமா! நாம்ம வாணாலும் எஞ்ஞ வூட்டுல அஞ்ஞ சொல்லி பணத்துக்குக் கொஞ்சம் ஏற்பாடு பண்ணலாம்!"ன்னுச்சு ஆயி.
            சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் பெருமூச்செ வுடுறதுக்கு எடுத்துக்கிட்டாரு. "வாணாம்! அஞ்ஞல்லாம் கேக்க வாணாம். நாமளே சமாளிப்பேம். யிப்போ வூட்டுல எல்லாம் ஒத்து வந்து நாம்ம ஒரு ஆளு குறுக்க நிக்குறாப்புலல்லா இருக்கு. நமக்கும் நாளைக்கு இத்து ஒரு பேச்சாவும்ன்னு யோஜனையா இருக்கு. நம்மால  கலியாணம் நின்னதா பேரு ஆன்னா அதெ தாங்குற சக்தி நமக்குல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யாரும் மனத்தாங்கலு பட்டுக்கிட்டு எம் பொண்ணுக்குக் கலியாணத்தப் பண்ணி வுட வாணாம்?"ன்னுச்சு வெங்கு.
            "மனத்தாங்கல்லாம் யில்ல. நம்ம குடும்ப நெலைய அனுசரிச்சி ஒருத்தருக்கொருத்தரு பேசிக்கிடுறதாங். நாளைக்கு யோஜனெ பண்ணாம போயி வுழுந்துட்டதாவும் யாரும் நெனைச்சிடக் கூடாதுல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதுக்கு.
            "நீயி ஏம்மா யிப்பிடி இருக்கே?"ன்னா செய்யு.
            "நீயி வாய மூடு! நமக்குத் தெரியும்! பொண்ணப் பெத்தவளுக்குத் தெரியாதா? எஞ்ஞ கொடுக்கணும்? எப்பிடிக் கலியாணத்தப் பண்ணி வைக்கணும்ன்னு?"ன்னுச்சு வெங்கு.
            இப்பிடியா பேச்சு ஒரு வழியா கலியாணத்துக்கான பணத்தெ எப்பிடியோ பெரட்டிக் கொடுக்குறதா ஒருத்தருக்கொருத்தரு உணர்ச்சிவசப்பட்டுப் பேசி ஒரு முடிவுல வந்து நின்னுச்சு.
*****


29 Jul 2020

அஞ்சு லட்சமல்ல, ஆறு லட்சம்!

செய்யு - 520

            சுப்பு வாத்தியாரு சித்துவீரன் வூட்டுக்குப் போனா சுந்தரி அது பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடுச்சு. சித்துவீரன் எதுவும் பேசல. "வாஞ்ஞ! வாஞ்ஞ!"ன்னு சொன்னதோட செரி. பேசுறத மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.
            "யப்பா போன் பண்ணுச்சு. நீஞ்ஞ போன் பண்ணி பேசுனதா சொன்னுச்சு. அதுக்கும் செய்யுவக் கட்டி வைக்கணும்னுத்தாங் ஆசெ. பேத்திய கட்டி வெச்சிட்டா அதோட கடெசீக் காலத்துக்க நல்லதுல்லா. தாத்தான்னு நல்ல வெதமா பாத்துக்கிடுமில்லா. அதுலயல்லாம் ஒண்ணும் பெரச்சனெ யில்ல. ஆன்னா, தங்காச்சி பிந்து இருக்கா யில்லே, அவ்வே கலியாணத்துக்கு நெரம்ப செலவானதுல அதெ சமாளிக்க முடியாம தடுமாறுதுங்க அஞ்ஞ பாக்குக்கோட்டையில. யிப்போ யாரு மாப்புள வூட்டுல கலியாணத்தப் பண்ணுறா? எல்லாம் பொண்ணு வூட்டுலதானே பண்ணி வுடுறாங்க. அப்பிடி கலியாணத்தெ பண்ணி வுட்டா தேவலாம்ன்னு ஒரு நெனைப்பு. நீஞ்ஞ எதாச்சும் நெனைச்சுப்புடுவீங்களோன்னு அது ஒரு யோஜனெ. யிப்போ கலியாணத்தப் பண்ணுற நெலையிலயும் யில்ல, கலியாணத்த வுடுற நெலையிலயும் யில்லன்னு யம்மா கூட சொன்னுச்சு. பாவம் எஞ்ஞ குடும்பத்துல அஞ்ஞ ரொம்ப செருமப்படுறாங்க. இவுங்க கொடுத்து ஒதவலாமான்னா இவுங்க கதெதாங் ஒஞ்ஞளுக்குத் தெரியும். இவுங்களுக்கே அவுங்க அஞ்ஞயிருந்ததாங் ஒதவிக்கிட்டு இருக்காங்க. அதெ யாருகிட்டெ சொல்றது? எப்பிடிச் சொல்றதுன்னு ரொம்பவே தடுமாறிட்டுக் கெடக்குறாங்க. யண்ணனும் ஒண்ணுத்தையும் சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம கொழம்பிப் போயி நிக்குது! தங்காச்சிக் கலியாணம் முடிஞ்சி ஏழெட்டு மாசங் கூட ஆவலல்ல. தங்காச்சிக் கலியாணத்துக்கு வாங்குன சிலவே அடைச்சிப்புட்டா பெறவு அதுக்கு சிலவு ஒண்ணும் யில்ல. சம்பாதிக்குறது எல்லாம் அத்தோட குடும்பத்துக்குத்தாம். இப்போ இருக்குற இந்த நெலமைய எப்பிடிச் சமாளிக்குறதுன்னு புரியாம தவிக்குதுங்க எல்லாம் அஞ்ஞ!"ன்னுச்சு சுந்தரி.
            "சம்பந்தம்ன்னு ஆவப் போற நாம்ம, ஒருத்தொருக்கொருத்தரு செருமத்தப் பகிர்ந்துக்குறதுல ன்னா இருக்கு? கலியாணத்தெ நாம்ம பண்ணி வுடுறதுல ஒண்ணும் அட்டியில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யண்ணன் கொஞ்சம் பெருந் தோதுல பாக்கும். நமக்கு அந்த மாதிரிக்குச் செஞ்சு பழக்கமிருக்காது!"ன்னுச்சு சுந்தரி.
            "பிந்துக் கலியாணத்துல பாத்தேம். அத்து மாதிரிக்கி நாம்ம திருவாரூர்லயே பெரிய மண்டபத்துல பாத்துச் செஞ்சி வுட்டுப்புடலாம்! என்ன வெதமா கலியாணம் பண்ணணுமோ அந்த வெதமா பண்ணிப்புடலாம். சாப்பாடுல்லா பத்து கறி வாணும்ன்னாலும் போட்டுப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யண்ணன் ரொம்ப வித்தியாசமா அதெ பத்தி கனவு கண்டுகிட்டு இருக்கு. நாம்ம அதெ ஈடு பண்ணுறாப்புல பண்ணுறதுன்னா செருமம்!"ன்னுச்சு சுந்தரி.
            சுப்பு வாத்தியாருக்கு ஒரு நிமிஷம் ஒலகமே நின்னு சுத்துறாப்புல இருந்துச்சு. மாமானாருக்கும், மாமியாருக்கும் பிடிக்காத மருமவளா இருக்குற சுந்தரி பேசுறதெ பாக்குறப்போ எல்லாம் முன்கூட்டியே கலந்துகிட்டு, காக்க வெச்சு கழுத்தறுக்குறாப்புல பேசுறாப்புல பட்டுச்சு சுப்பு வாத்தியாருக்கு. அவருக்கு மனசுக்குள்ள ஏகப்பட்டு கடுப்பு உண்டானுச்சு. கோயில்ல தாலியக் கட்டிட்டு எளிமையா பண்ணாலும் அதுவும் கலியாணந்தாம், ரீஸ்தரு ஆபீஸ்ல செலவே யில்லாம பண்ணிக்கிட்டாலும் அதுவும் கலியாணந்தாம், ஒண்ணுத்துக்கும் வழியே யில்லன்னு நாலு பேத்த வெச்சுக்கிட்டு ஒரு மஞ்சள கயித்துல கட்டி அதெ கட்டி வுட்டாலும் அதுவும் கலியாணந்தாம், கோடி கோடியா செலவ பண்ணி ஊரு ஒலகத்துக்கே சாப்பாட்ட போட்டுப் பண்ணாலும் அதுவும் கலியாணந்தாம். என்னவோ கலியாணமே பண்ணாத, செய்யாத ஆளெ போலல்லா நெனைச்சிட்டுப் பேசுது இந்தப் பொண்ணுன்னு மனசுக்குள்ள ஆயிரமாயிரம் நெனைப்பு ஓட ஆரம்பிச்சிது சுப்பு வாத்தியாருக்கு. நாம்ம ன்னா கலியாணமே பண்ணதா ஆளான்னு மனசு அப்பிடியே கொந்தளிச்சுப் போச்சு அவருக்கு. என்னவோ ஊரு ஒலகத்துல பண்ணாத அதிசயக் கலியாணத்த பண்ணுறாப்புலல்லா பேசுதேன்னு நெனைச்சிக்கிட்டு, அதெயெல்லாம் மனசுக்குள்ள அடக்கிக்கிட்டு, "நாம்ம என்னத்தெ பண்ணணுங்றதெ கொஞ்சம் தெளிவு பண்ணா செளரியமா இருக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞ எதுவும் தப்பா நெனைச்சிக்கிட கூடாது. யண்ணன் அதெயெல்லாம் கேக்கக் கூடாதுன்னுத்தாங் சொன்னிச்சு. இருந்தாலும் நமக்கு மனசு கேக்கல. பாவம் கலியாணம் வேறல்லா தள்ளிட்டுப் போவுது. அதால சொல்றேம்! தப்பா நெனைக்கலன்னா சொல்லுங்க சொல்றேம்!"ன்னுச்சு சுந்தரி.
            சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள என்னத்தெ சொல்லப் போவுதுங்ற பொறி தட்டுனுச்சு. இருந்தாலும் அதெ வர்ற வார்த்தையால கேட்டாத்தானே சுத்தப்பட்டு வரும்ன்னு நெனைச்சுக்கிட்டு, "ஒரே ஒறவுக்காரவுங்க நாம்ம. நமக்குள்ள தப்பா நெனைக்குறதுக்கு ன்னா இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் அவுங்க கூட இதெப் பத்தி பேயாம உக்காந்திருக்காங்க!"ன்னு சித்துவீரன காட்டிட்டு சுந்தரி சொன்னுச்சு, "கலியாணச் சிலவா ஒரு ஆறு லட்சத்தெ கையில கொடுத்துப்புட்டீங்கன்னா கலியாணத்தெ யண்ணன் நெனைக்குறாப்புல திருப்தியா பண்ணிப்புடும். ஒஞ்ஞளுக்கும் கலியாண சோலின்னு எந்த மெனக்கெடும் யில்ல பாருங்க! சொமையில்லாம் கலியாணத்துக்கு வந்தேமா முடிச்சேமான்னு போயிடலாம்! இப்போ காலத்துல கலியாணத் தேவையச் செஞ்சு முடிக்குறதுதானே பெரும்பாடா இருக்கு. அதெ அந்தப் பாட்ட செருமத்த யண்ணனும் யப்பாவும் பாத்துக்கிடும்!"ன்னுச்சு சுந்தரி.
            சுப்பு வாத்தியாருக்குத் திரும்ப திரும்ப தூக்கி வாரிப் போட்டுச்சு. என்னடா இது? மாமனாரு அஞ்சு லட்சம்ன்னா, மருமவ ஆறு லட்சம்ன்னு அஞ்சு வெடிகுண்டுக்குப் பதிலா, ஆறு வெடிகுண்டெ தூக்கிப் போடுறான்னு. சுப்பு வாத்தியாருக்கு முழி பிதுங்கி வெளியில வர்றாத கொறையா போயிடுச்சு. என்ன கருமெத்த இதுக்குப் பதிலா சொல்றதுன்னு கதி கலங்கிப் போயிட்டாரு.
            ஒரு நிமிஷம் ஒரு பெருத்த மெளனம் அந்த எடத்துல உக்காந்திருந்துச்சு.
            "நாமளும் கலியாணம் பண்ணி வுடுற பொண்ணுக்குன்னு கலியாணம் பண்ணுறப்ப பண்றதுதாங். பெறவு பொண்ணுங்ற வெசயத்துல பெரிசா சொத்துப் பத்து பாகம்ன்னு சிலவு கெடையாது. கலியாணங்றது ஒது தவா பண்றதுதாங். ஒஞ்ஞ குடும்பத்துக்கும் அஞ்ஞ கடெசீத் தேவ. எஞ்ஞ குடும்பத்துக்கும் அஞ்ஞ கடெசீத் தேவ. நல்ல வெதமா செஞ்சா ரண்டுக் குடும்பத்துக்கும் நல்லதுதானே. யண்ணனோட கலியாணக் கணக்குப்படி கலியாணச் சிலவு பன்னெண்டு லட்சம். அதுல ஆறு லட்சத்தெ அத்து போட்டுக்கும். பொண்ணு வூட்டுச் சார்பா ஆறு லட்சத்தெத்தாங் அத்து எதிர்பாக்குது. நீஞ்ஞ எதுவும் தப்பா நெனைச்சிக்கிட கூடாது!"ன்னு தொடந்தாப்புல பேசுனுச்சு சுந்தரி.
            அதெ கேட்டதும் இன்னும் சுப்பு வாத்தியாருக்கு தல சுத்தி தரையில விழுவாத கொறையா இருந்துச்சு. நக நட்டு, கட்டிலு, பீரோ, பண்டம் பாத்திரம், கலியாணச் செலவுன்னே மொத்தத்தையும் பத்து லட்சத்துக்குள்ள முடிச்சிப்புடலாம். இவனுக என்னான்னா கலியாணச் சிலவெ மட்டும் பன்னெண்டு லட்சம்ன்னு புருடா வுடுறானுவோளேன்னு நெனைச்சிக்கிட்டாரு. அதெ வெளியில சொல்லிக்கிடாம, "நாம்ம வூட்டுல மவ்வேங்கிட்டெயும், வூட்டுலயும் ஒரு வார்ததெ கலந்துக்கிட்டு வந்துச் சொல்லிடுறேம்! நாம்ம ரிட்டையர்டு ஆயி ச்சும்மா உக்காந்திருக்க ஆளு. நாம்ம ஒத்த ஆளா முடிவெ பண்ணிட்டதா நாளைக்குக் குடும்பத்துல யாரும் நெனைச்சிப்புடக் கூடாதுல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு, ரொம்ப யோசனையா வார்த்தைகளப் பொறுக்கிப் போட்டு.
            "அதெல்லாம் ஒண்ணும் அவ்சரமில்ல. வூட்டுல ந்நல்லா கலந்துக்கிட்டு வந்தே சொல்லுங்க. யண்ணணுக்குச் செய்யுவக் கட்டுறதுல இஷ்டம்ன்னா இஷ்டம். செய்யுவுக்கும் யண்ணனப் பிடிச்சிருக்கும்ன்னு நெனைக்கிறேம். மனசு பிடிச்சிப் போன ரண்டு பேத்தையும் நாமல்லாம் இருந்து சேத்து வெச்சிப்புடணும். ஊரு ஒலகம் மெச்சுறாப்புல கலியாணத்தையும் செஞ்சி வுட்டுப்புடணும். செருமம், சிலவுன்னு ஆயிரம் இருந்தாலும் அதெ நாம்ம செஞ்சு வுட்டுத்தாம் ஆவணும். எல்லாம் பெரியவங்க ஒஞ்ஞ கையிலத்தாம் இருக்கு!"ன்னுச்சு சுந்தரி.
            நல்லாத்தாம் பேசுறேடியம்மான்னு வாயடைச்சுப் போயிட்டாரு சுப்பு வாத்தியாரு. மருமவளுக்கும், மாமியாளுக்கும் ஒத்து வரலன்னாலும், இந்த பேச்சு வெசயத்துல மட்டும் எப்பிடி ஒத்துப் போவுதுன்னு ஆராய்ச்சியே பண்ணுற அளவுக்குப் போயிடுச்சு சுப்பு வாத்தியாரோட மனசு. இருந்தாலும் அதெ வெளிக்காட்டிக்கிடாம, "பெறவு நாம்ம கெளம்புறேம். கலந்துகிட்டு வந்து ந்நல்ல சேதியா சொல்றேம்!"ன்னாரு.
            அவரு கெளம்புறப்போ, சித்துவீரன் சொன்னுச்சு, "கட்டிலு பீரோவுல எந்தக் கொறையும் இல்லாம தேக்கச் சட்டம், தேக்கம் பலவையிலத்தாம் பண்ணணும். சிலவெ பாத்துட்டு இதுல கம்பீரத்த விட்டுப்புடப் படாது! வேற சட்டம், பலவையில செஞ்சுப்புடலாம்ன்னு யோஜனெ வந்துப்புடப்படாது!"ன்னு.
            "யம்பீ சொல்லிட்டப் பெறவு, அதெ நாமளும் ஒதுக்கிட்டப் பெறவு அதெ மாத்த முடியுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ சொல்லுங்க!"ன்னுச்சு சித்துவீரன். ஒவ்வொரு தவாவும் இங்க வடவாதி வந்துட்டுப் போறப்போ கொஞ்சம் இடிஞ்சாப்புலத்தாம் கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு. அதுவும் இந்த தவா அத்து கொஞ்சம் ரொம்பவே அதிகம்.
*****


காமாசோமாக்கள்

காமாசோமாக்கள்

அப்படி - இப்படி எழுதி எவ்வளவு நாளாகி விட்டது? அதற்காக அப்படி - இப்படி என்று எழுதித் தள்ளி விட முடியாது. அதுவாக வர வேண்டும். எப்போதாவது அப்படி - இப்படி அது வருகிறது. அப்படி - இப்படி என்ற எப்போதோ வருவதை எப்போது வருகிறதோ அதை அப்படி - இப்படி என்ற போட்டு வைக்கிறேன். வாசிப்பவர்களும் இதை அப்படி - இப்படி என்று வாசித்துப் பார்க்கலாம். இதில் பெரிதாக விசயம் இருப்பதற்கில்லை. ஒரு பொழுதுபோக்கிற்காக வாசித்துப் பார்க்கலாம். தீவிரத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இதில் விசயமில்லை. காமாசோமாவென்ற விசயங்களும் அவ்வபோது தேவைப்படுகிறது என்று நினைப்பவர்கள் இதை மேற்கொண்டு படிக்கலாம்.
*****
பையில் பேனாவோ பேப்பரோ இல்லை. பென் டிரைவ் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் காப்பி - பேஸ்ட் செய்து தரக் கேட்கிறேன். தீராத மை கொண்ட பேனாவாக, எழுதித் தீராத பேப்பராக பென் டிரைவே இருக்கிறது. ஒரு டெலிட் கொடுத்து எத்தனை முறை காப்பி பேஸ்ட் செய்தாலும் பென் டிரைவும் தீர்ந்து போவதில்லை. காப்பி - பேஸ்ட்டும் தீர்வதில்லை.
*****
பத்திரிகைகளையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. சினிமா விமர்சனங்களில்தான் பத்திரிகைகளின் முக்கியமான பொருள் அடக்கமே அடங்கியிருக்கிறது. பத்திரிகைகள் நினைத்தாலும் சினிமாவைக் கைவிட முடியாது. சினிமாவைக் கொண்டே பத்திரிகைகள் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றன. சினிமாவில் நிகழும் அத்தனை மாற்றங்களும் பத்திரிகைகளிலும் நிகழும். நீங்கள் கூர்ந்து கவனித்தால் பத்திரிகைகளின் முக்கியமான மாற்றம் ஒன்று புரிய வரும். அது, பத்திரிகைகளின் முக்கியமான மாற்றம் என்பது சினிமா விமர்சனத்திலிருந்து ஒரு படி மேலேறி அமேசான், நெட் ப்ளிக்ஸ் என வெப் சீரிஸ்களுக்கான விமர்சனத்துக்கு மாறி இருப்பதுதான்.
*****
படிப்புக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறோம். படிப்புக்கும் அரசியலுக்கும்தான் அதிக சம்பந்தம் இருக்கிறது. நாட்டில் நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுவதாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் நாட்டில் அதிகம் பெருகியதற்கு அரசியல்வாதிகளே மூல காரணம். அரசியல்வாதிகள் பொறுப்பேற்ற மற்றும் அவர்கள் கை வைத்த பல விடயங்கள் Under Performance இல் இருக்கின்றன. அதில் இந்தப் பொறியியல் துறை படிப்பும் உள்ளடக்கம். நிறைய வேலையில்லா பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள். தனுஷ் அதை வைத்து இரண்டு வேலையில்லா பட்டதாரி படங்களையும் உருவாக்கி விட்டார்.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...