சில நாட்களில் பூத்த சிறு மலர்கள்
ஒரே ஆறுதல்
என்னவென்றால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகமாகிக் கொண்டே போகிறது என்பதுதான்!
*****
உயிர் எடுப்பதை
எவ்விதத்திலும் நியாயம் செய்ய முடியாது. அதை கொரோனா செய்தாலும் சரித்தாம், கோரோனாவின்
பெயரைச் சொல்லிக் காவலர்கள் என்று மனிதர்கள் செய்தாலும் சரித்தாம்!
*****
சிறையிலிருந்து
விடுதலை ஆகி என்ன செய்ய?
இருப்பதே
சிறையில்
இருப்பது போலத்தானே இருக்கிறது!
*****
ஏனுங்க உப்பே
இல்லங்றதெ சொல்றது இல்லையாங்றா பொண்டாட்டி. நீ யூடியூப்ல பாத்து செஞ்ச புது டிஷ்ஷோன்னு
நெனைச்சிட்டேங்றான் புருஷன். இந்தக் கொழுப்புக்கு உப்பே போடாம செஞ்சதுதான் சரிங்றா
பொண்டாட்டி.
*****
என்னா நமக்குக்
கொடுத்தாங்கன்னு எதுத்த வீட்டுக்கு நம்ம வீட்டுல நான் சுட்ட நாலு இட்டிலிய அள்ளிக்
கொடுத்தீங்கங்றா பொண்டாட்டி. எப்பப் பாத்தாலும் நம்ம வீட்டுக்குத் தொந்தரவு கொடுக்குறவங்களுக்கு
அதெ கூட கொடுக்கலன்னா எப்பிடிங்றான் புருஷங்காரன்.
*****
ஆசை ஆசையா
குறுவைய வெதைச்சவனுக்கு வரப்புலேந்து தண்ணியும் வர்ற மாட்டேங்குது, வானத்துலேந்து மழையும்
வர்ற மாட்டேங்குது. கண்ணுலேந்து தண்ணித்தாம் வருது. அந்தத் தண்ணி வெதைச்ச வெதைக்குப்
பத்தவே மாட்டேங்குது.
*****
கார்ப்பரேட்
ஆகப் போகிறேன் என்றவர் சாமியாராகிப் போனார்!
*****
அடிவாங்கி விடுறதுக்கு, கொரோனாவுக்கு
விடுறதுக்குன்னு மனுஷனுக்கு ரெண்டு உசுரா இருக்குது? ஒத்து உசுருதானே இருக்குது. அதுல
அடிவாங்கி வுடுறதுக்குன்னே ஒண்ணுக்கு ரண்டா உசுர எடுத்துக்கிட்டா எப்பிடி?
*****
தூக்கி
எறியப்படும் முகக்கவசங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் கைகளில் விளையாட்டுப் பொருட்களாகின்றன!
*****
யுஜிசியின்
அனுமதி கிடைக்காத காரணத்தால் 2018-2019 இல் பி.எட். சேர்ந்தவர்களின் கட்டணத்தைத் தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழத்திலிருந்து திருப்பிக் கொடுக்கிறார்கள்! கட்டணத்தைத் திருப்பிக்
கொடுக்கிறார்கள் சரி! கடந்துப் போன ஓராண்டை யார் திருப்பிக் கொடுப்பார்கள்?
*****
எப்போதோ
பெய்யும் மழைக்கு எப்போதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது!
*****
கொரோனாவை
விட வேகமாகப் பரவுகின்றன அது குறித்த வதந்திகள்.
*****
No comments:
Post a Comment