30 Jul 2020

கேட்கிறதெ தர்றேன்னு சொல்லாம எப்படி வந்தே?

செய்யு - 521

            ஒவ்வொரு தவா சுப்பு வாத்தியார் வடவாதி போயிட்டு வர்றப்பயும் வெங்கு ரொம்ப ஆசையோட வந்து கேக்கும், "எப்போ மாப்ள பாக்க வர்றச் சொல்லிருக்காங்க?"ன்னு. இப்பவும் அப்பிடித்தாம் சுப்பு வாத்தியாரு வர்ற வரைக்கும் காத்திருந்துக் கேட்டுச்சு. சுப்பு வாத்தியாரு ரொம்ப கலக்கமா சொன்னாரு, "நம்ம வூட்டுக்குப் பொண்ண பாக்க வாந்தாவோளா? பணத்தெ பாக்க வந்தாவோளான்னு தெரியலயே?"ன்னாரு.
            "ன்னான்னு தெளிவா சொல்லுங்க!"ன்னுச்சு வெங்கு. சுப்பு வாத்தியாரு பொண்ணு பாக்க வந்த பெற்பாடுதாங் வெங்குவோட கொஞ்சம் சகஜமா பேச ஆரம்பிச்சிருந்தாரு. ஒரு வழியா பொண்டாட்டி விருப்பப்படியே கலியாணத்த பொண்ணுக்குப் பண்ணி விட்டுப்புடலாங்ற முடிவுக்கு வந்த பெற்பாடு மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்குறதுல அர்த்தமில்லன்னு கேட்டதுக்கு எல்லாம் பதிலச் சொன்னாரு. "கலியாணச் சிலவுக்கு அஞ்சு லட்சமா, ஆறு லட்சமான்னு தெரியல. ஓம் மாமன் ஒண்ணு சொல்லுது, மாமனோட மருமவ்வே ஒண்ணு சொல்லுது. அதெ ஒத்துக்கிட்டா மாப்ள பாக்க போவலாம்ன்னு!" ரொம்ப எரிச்சலோட சொன்னாரு  சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கு நீஞ்ஞ ன்னா சொன்னீங்க?"ன்னுச்சு வெங்கு.
            "வூட்டுல ஒங்கிட்டெ, மவ்வேங்கிட்டெ கலந்துக்கிட்டுத்தாம் சொல்லணும்ன்னு சொல்லிட்டு வந்துட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெப்படி நீஞ்ஞ அப்பிடிச் சொல்லிட்டு வாரலாம்?"ன்னுச்சு கோவமா வெங்கு.
            "வெறெப்படிச் சொல்லணும்னு எதிர்பாக்குறே?"ன்னு சுப்பு வாத்தியாரும் பதிலுக்குக் கோவமா கேட்டாரு.
            "பத்து லட்சமாவே இருந்துட்டுப் போவுது. கலியாணச் சிலவுக்குத்தான கேக்குறாங்க. கொடுக்குறேம்ன்னு சொல்லிட்டு என்னிக்கு மாப்ளப் பாக்க வர்றதுன்னு கேட்டுட்டு வர்ற வேண்டியத்தானே? இப்பிடி வூட்டுல போயிக் கலந்துட்டுச் சொல்றேம்ன்னு சொன்னாக்கா பொண்ணு வூடு நம்மளப் பத்தி என்னத்தெ நெனைச்சுப்பாங்க?"ன்னுச்சு வெங்கு.
            "பத்து லட்சத்துக்கு எத்தனெ சுழின்னு தெரியுமா ஒமக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துத் தெரியாது நமக்கு. அதோட மதிப்புத் தெரியும் நமக்கு!"ன்னுச்சு வெங்கு.
            "தெரிஞ்சுமா இப்பிடிக் கேக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ண வுட பணந்தாம் முக்கியமா மனுஷா ஒமக்கு?"ன்னுச்சு வெங்கு.      
            "பொண்ணும் முக்கியந்தாம். பணமும் முக்கியந்தாம். பணத்தெ வுட பொண்ணு முக்கியம். இன்னும் மாப்புள பாத்தாவல. மூர்த்தோல எழுதியாவுல. கலியாணங் கூட நடக்கல. அதுக்குள்ளேயே பணம் பணம்ன்னு ன்னா பாடு படுத்துறவேம் நாளைக்கிக் கலியாணம் ஆயி பணம் பணம்ன்னு பிடுங்கி எடுத்தாம்ன்னா எஞ்ஞ வெச்சிருக்கே பணத்தெ? பணத்தெ நீயென்ன அச்சடிச்சா வெச்சிருக்கே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யிப்பிடிக் கோவப்பட்டா நாம்ம என்னத்தெ சொல்றது? இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்கத்தானே கலியாணத்தெ பண்ணி வுடுறாங்க. அந்தக் கலியாணத்தெ பண்ணி வுடுற சிலவெ கையில கொடுங்கங்ற மாதிரிக்கிக் கேட்டுருக்கும்ங்க!"ன்னுச்சு வெங்கு.
            "செரி கலியாணச் சிலவெ கேக்கட்டும். கலியாணச் சிலவுக்கு எம்மாம் ஆவும்? அதெ சொல்லு மொதல்ல! கலியாணச் சிலவுக்கு எம்மாம் ஆவும்ன்னே தெரியாமலேயே பேசிட்டு நிக்கக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நமக்குத் தெரியும். டாக்கடர்ன்னா கூட கொறைச்சலு ஆவும்ன்னுத்தாம் எம் மவளெ ஒரு கட்டெ அடிக்குற ஆளுக்குத் தள்ளி வுடப் பாக்குறே நீயி!"ன்னு ஆரம்பிச்சிடுச்சு வெங்கு.
            "ந்தாரு பேசுறதெ ஒழுங்க பேசு. பொண்ணு படிக்கிறதுக்குக் காசியக் கணக்குப் பாக்காம சிலவு பண்ணி படிக்க வெச்சிருக்கேம். பொண்ணு படிச்சிருக்குறப் படிப்புக்கு, இப்போ இவ்வேம் கேக்குற ஆறு லட்சத்துக்கு இன்னொரு நாலு லட்சம் போட்டேம்ன்னா வெச்சுக்கோ பத்து லட்சத்தக் கொடுத்து ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியோடத்துல வேலையே வாங்கிக் கொடுத்துப் புடுவேம். பொண்ணு வேலையில இருக்குன்னு தெரிஞ்சா பைசா காசில்லாம் கட்டிக்கிட வூட்டுல ஆயிரம் மாப்ள வந்து நிப்பாம் பாத்துக்கோ! வெவரம் புரியாம பேசிட்டு நிக்காதே! நமக்குக் கெட்டக் கோவமா வந்துப்புடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ணுக்கு வேலைய வாங்கிக் கொடுத்துப்புட்டு சம்பாத்தியம் யில்லாத ஒருத்தனெ பாத்துக் கட்டி வைக்கப் போறீயா மனுஷா நீயி?"ன்னுச்சு வெங்கு.
            "பொண்ணு வேலையில இருக்குன்னாவே வேலையில இருக்குற ஒருத்தம்தாம் வருவாம். அப்பிடி வேலையில யில்லாதவனெ கேட்டாலும் பரவாயில்ல, குடும்பத்துல ஒருத்தரு சம்பாதிச்சா போதும். அதாங் அப்போ பொண்ணு சம்பாதிக்குல்லா. அதெ வெச்சு நல்ல வெதமா இருந்துட்டுப் போயிடலாம். இப்போ நாம்ம யில்லயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            இவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்குறதுல ஊடால பூந்து என்னத்தெ பேசுறதுன்னு புரியாம விகடுவும், ஆயியும், செய்யுவும் கொழம்பிப் போயி நின்னாங்க. ஏன்னா வார்த்தைகள அந்த வேகத்துல ஒருத்தருக்கொருத்தரு மாத்தி மாத்திப் பேசிட்டே யாரும் உள்ளார பூந்த பேசாத அளவுக்கு வுட்டுக்கிட்டெ இருந்தாங்க ரண்டு பேரும். புயல் வேகத்துல வார்த்தைக பறந்துட்டு இருந்துச்சு.
            "மொத்தத்துல நம்ம பொண்ணு ஒரு டாக்கடர்ருக்குக் கலியாணத்தெ ஆயிப் போவக் கூடாது! அதானே ஒம் முடிவு மனுஷா! நடத்து, ஒம்மோட நாடகத்தெ நடத்து. நீயி நெனைக்குறபடியே எவனுக்காச்சும் கலியாணத்தெ பண்ணிக் கொடு. என்னத்தெ வாணாலும் பண்ணிட்டுப் போ. நல்ல எடம்ன்னா காசி பணம் கூட கொடுத்துதாங் செஞ்சாவணும். ஏப்ப சாப்பன்னத்தாம் பைசா காசி சிலவில்லாம பண்ணி வுடலாம். அதாங் ஒங் கணக்கு. நமக்குப் புரிஞ்சிப் போயிடுச்சு. நீயி ஒண்ணும் சொல்ல வாணாம். எம் பொண்ண ந்நல்ல எடத்துல கலியாணத்தெ பண்ணிக் கொடுக்கணும்ன்னு நாம்ம நெனைச்சிருக்கவே கூடாது. அத்து எந் தப்பு. அவ்வே எப்பிடியாச்சியும் போவட்டும். எந்தக் குட்டிச்சுவாரட்டும் போவட்டும். நமக்கென்ன? இந்த ஆளு பண்ணுறதெ பண்ணடும். ஆடுறதெ ஆடட்டும். பொட்டச்சிக்கு எந்த வூட்டுல எந்த ஆம்பளெ மதிப்புக் கொடுத்திருக்கானுவோ? இந்த ஆளு மதிப்பெ கொடுக்குறதுக்கு!"ன்னு வெங்கு பாட்டுக்குப் பொரிஞ்சு தள்ள ஆரம்ப்பிச்சிட்டுது. அப்பத்தாம் பேச்சோட பேச்சா அதோட கண்ணுக்கு மவ்வேம் விகடு படுறாம். இருந்த ஆத்திரத்துல எல்லாம் மறந்துப் போனது போல இருந்து வெங்கு, இப்போ அவனெ பாத்ததும் அவனெ இழுத்துப் பேச ஆரம்பிச்சிடுச்சு.
            "அப்பனுக்கு ஏத்த புள்ளீயா நிக்குறாம் பாரு. இம்மாம் நடந்துட்டு இருக்கு. நாம்ம பணத்தெத் தர்றேம். தங்காச்சிக் கலியாணத்த நடத்துங்கன்னு சொல்றான்னா பாரு ஆயி ஒம் புருஷன்? எல்லாம் சுயநலமாத்தாம் இருக்கு. நாம்மத்தாம் பொண்ண வெச்சிட்டு ஏமாந்துப் போயி நிக்கேம்!"ன்னுச்சு வெங்கு.
            "அவ்வேம் ன்னத்த பண்ணுவாம்? சம்பாதிக்குற காசிய முழுசும் நம்மகிட்டெ கொடுத்துட்டு இருக்காம். அவனெ போயி பேசலன்னு எகிறிக் குதிக்குறீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பேங்குல ஒரு லோனப் போட்டுத் தர்றேம்ன்னு ஒரு வார்த்தெ வருதா பாருய்யா மனுஷா? ஏம் தங்காச்சிக்கு ஒரு லோனப் போட்டுத் தந்தா கொறைஞ்சாப் போயிடுவாங்? பங்குச் சந்தென்னு ஓடிட்டுக் கெடந்தானே! குஞ்சுக் கவுண்டர்ன்னு ஒருத்தரு இருந்தாரே! அவருகிட்டெ கைமாத்தா கேட்டா கொடுக்கமலா போயிடுவாரு! இவ்வேம் கேட்டான்னா லட்ச லட்சமா கொண்டாந்து கொடுக்க ஆளிருக்காங்கன்னு நமக்குத் தெரியும். இந்தப் பயெ கேக்க மாட்டாம். மனசு இருந்தா செய்யலாங். அவனுக்கு ஒரு பொண்ணு இருக்குல்லா. குடும்பம் ஆயிடுச்சுல்லா. இனுமே நம்ம குடும்பத்தெ பாக்கணும், நாம்ம இனுமே எதுக்குச் செய்யணும்ன்னு நெனைக்கிறாம்?"ன்னுச்சு வெங்கு.
            "என்னங்க யத்தெ இப்பிடிப் பேசுறாங்க? நாம்ம வேணும்ன்னா நம்ம நகையெ தர்றேம். பேங்குல அடவு வெச்சி அதுல வர்ற பணத்தெ கொடுங்க!"ன்னுச்சு ஆயி விகடுகிட்டெ.
            சுப்பு வாத்தியாருக்குக் கடுமையான கோவம் வந்திடுச்சு. "இந்தாரு நீயி பேசுறது கொஞ்சம் கூட மொறையில்ல. கண்ண கட்டிக்கிட்டு பாழுங் கெணத்துல விழுவுறாப்புல நடந்துக்கிறே. ஒம் மவ்வெனப் பத்தித் தெரியாது ஒமக்கு? பைசா காசி கடன் வாங்குறதுன்னா பிடிக்காத பயெ அவ்வேம். பல்ல கடிச்சிக்கிட்டுப் பட்டினி கெடந்தாலும் கெடப்பாம். அவனெ போயி கடனெ வாங்கச் சொல்றே? நாம்ம நம்ம வாழ்க்கையில கடனெ ஒடனெ வாங்கிக் கஷ்டப்பட்டது போதாதுன்னு இப்போ அவனெ வேற கடனெ வாங்கு, நகையெ அடவு வையுன்னு சொல்லிட்டு இருக்கீயா? தலைமொறைக்கும் கடனெ வாங்குறது தொடரணும்னு நெனைக்குதீயா? இதல்லாம் நல்லா யில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஊருல ஒலகத்துல யிப்போ யாரு கடன வாங்காம இருக்காங்க. எல்லாம் கடன்ல்லத்தாம் ஓடிட்டு இருக்கு. ஒரு வூட்ட கட்ட, கலியாணத் தேவையப் பாக்க கடன ஒடன வாங்குறதுல ஒண்ணும் தப்பு யில்ல!"ன்னுச்சு வெங்கு.
            "நம்ம தகுதிக்கு எதெயும் செஞ்சுகிட்டா கடன ஒடன வாங்க வேண்டியதில்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம இப்பிடியே இருக்கணும். இதுக்கு மேல மின்னேறக் கூடாதுன்னே நெனைச்சா நாம்ம என்னத்தெ சொல்றது? பொண்ணாச்சியும் டாக்கடரு பொண்டாட்டிங்ற பேத்தோட மின்னேத்தமா இருந்தா ன்னா கொறைஞ்சா போயிடப் போவுது? நம்ம வூட்டுப் பொண்ணுக்காக செய்யாம யாருக்குச் செய்யப் போறேம்? இந்தப் பாருடாம்பீ! தங்காச்சிக்குக் கலியாணத்தெ நல்ல வெதமா பண்ணிக் கொடு. பின்னாடி சொத்து பத்துன்னும் ஒரு பைசா காசிய அவளுக்குக் கொடுக்க வாணாம். யம்மா ன்னா பொண்ணுப் பக்கமாவே பேசிட்டு இருக்குன்னு நெனைக்காதே. இன்னிக்கு நாம்ம சொல்றதுதாங். எல்லா சொத்தும் ஒமக்குத்தாங். அவ்வே கலியாணத்தெ இன்னும் லட்சம் லட்சமா ஆனாலும் கணக்குப் பாக்காதே! அப்பங்காரரு பேச்சக் கேட்டு யோஜனெ பண்ணாதே. பண்ணி முடிச்சி வுட்டுப்புடு!"ன்னுச்சு வெங்கு.
            "நமக்கு இந்தக் கலியாணமே வாணாம்மா! நம்மள வுட்டுப்புடுங்க. நாம்ம மேக்கொண்டு படிக்கணும்ன்னு ஆசெ படுறேம். நம்மளப் படிக்க வுடுங்க!"ன்னா செய்யு.
            "யய்யோ கலியாணப் பொண்ணு இப்பிடில்லாம் கலியாணம் வாணாம்ன்னுல்லாம் பேயக் கூடாது!"ன்னு வெங்கு ஓடிப் போயி செய்யுவோட வாயப் பொத்துனுச்சு.
            "வுடும்மா! நம்மள பேச வுடும்மா!"ன்னு செய்யு வெங்குவோட கைய தட்டி வுட்டா.
            "எலே கலியாணப் பொண்ணு பேயக் கூடாத வார்த்தையெல்லாம் பேசுதுடா! இதுக்குத்தாங் ஒரு புள்ளையப் பெத்தேனா? ஒரு அப்பங்காரனா ஒரு ஆளும் இதெ கேட்டுட்டு நிக்குதா?"ன்னு வெங்கு அழுவ ஆரம்பிச்சிடுச்சு.
            ஒட்டுமொத்த சனமும் உணர்ச்சிவசப்பட்டு வெடிசுப் போற நெலையில இருந்துச்சுங்க. வெங்கு அப்பிடியான ஒரு நெலைய உண்டு பண்ணிடுச்சு. விகடு பேசுனாம். "நாம்ம பாங்கியில லோனப் போட்டு தர்றேம்மா! ஒமக்கு இந்த எடந்தாம் பிடிச்சிருக்குன்னா ன்னா சிலவு ஆனாலும் பண்ணிடலாங்!"ன்னாம்.
            "எலே பாங்கியில ஆறு லட்சத்துக்குக் கடனெ போட்டீன்னா கட்டி முடிக்கிறப்போ கணக்குப் பாத்தா எட்டு ஒம்போது லட்சம் வந்து நிக்கும்டா. மாசச் சம்பளத்துல பாதிய அத்து முழுங்கிடும்டா! யோஜனெ பண்ணி நெதானமா பேசு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நாளைக்கு தங்காச்சிக்கு ஒரு நல்ல எடம் வந்தது நாம்ம கை கொடுக்காததால நின்னதுன்னு ஒரு பேச்சு வந்தா அதெ தாங்குற சக்தி நம்மட மனசுக்கு யில்லப்பா!"ன்னாம் விகடு.
            "மொத்த கலியாணச் சிலவுக்கான கணக்குத் தெரியாமா பேசுறடா நீயி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்த வூடு ஒண்ணுத்தெ தவுர மித்த எல்லாத்தையும் வித்துப் புடலாம்ப்பா!"ன்னாம் விகடு.
            "அப்பிடில்லாம் போயி குருட்டுத்தனமா வுழுவ முடியா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒங்கப்பன் இப்பிடித்தாம்டா ஆவுற கதெய ஆவ வுட மாட்டாம். யோஜனென்னு யோஜனென்னு நிப்பாம். இப்பிடி யோஜனெ பண்ணிப் பண்ணித்தாங் இன்னும் ந்நல்லா வர்றதெ வர முடியாம அடிச்சிட்டு இருக்காம். இதுல ன்னா யோஜனெ பண்ண வேண்டிது கெடக்குன்னு யய்யோ சாமி நமக்குப் புரியலீயே?"ன்னுச்சு வெங்கு படு மோசமா.
            "மாமா! யத்தெ விரும்புறாப்புலயே கலியாணத்த முடிச்சிடலாம் மாமா! பொண்ணுன்னா கூட கொறைச்சலு சிலவு ஆவும்தாம் மாமா! நாம்ம வாணாலும் எஞ்ஞ வூட்டுல அஞ்ஞ சொல்லி பணத்துக்குக் கொஞ்சம் ஏற்பாடு பண்ணலாம்!"ன்னுச்சு ஆயி.
            சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் பெருமூச்செ வுடுறதுக்கு எடுத்துக்கிட்டாரு. "வாணாம்! அஞ்ஞல்லாம் கேக்க வாணாம். நாமளே சமாளிப்பேம். யிப்போ வூட்டுல எல்லாம் ஒத்து வந்து நாம்ம ஒரு ஆளு குறுக்க நிக்குறாப்புலல்லா இருக்கு. நமக்கும் நாளைக்கு இத்து ஒரு பேச்சாவும்ன்னு யோஜனையா இருக்கு. நம்மால  கலியாணம் நின்னதா பேரு ஆன்னா அதெ தாங்குற சக்தி நமக்குல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யாரும் மனத்தாங்கலு பட்டுக்கிட்டு எம் பொண்ணுக்குக் கலியாணத்தப் பண்ணி வுட வாணாம்?"ன்னுச்சு வெங்கு.
            "மனத்தாங்கல்லாம் யில்ல. நம்ம குடும்ப நெலைய அனுசரிச்சி ஒருத்தருக்கொருத்தரு பேசிக்கிடுறதாங். நாளைக்கு யோஜனெ பண்ணாம போயி வுழுந்துட்டதாவும் யாரும் நெனைச்சிடக் கூடாதுல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதுக்கு.
            "நீயி ஏம்மா யிப்பிடி இருக்கே?"ன்னா செய்யு.
            "நீயி வாய மூடு! நமக்குத் தெரியும்! பொண்ணப் பெத்தவளுக்குத் தெரியாதா? எஞ்ஞ கொடுக்கணும்? எப்பிடிக் கலியாணத்தப் பண்ணி வைக்கணும்ன்னு?"ன்னுச்சு வெங்கு.
            இப்பிடியா பேச்சு ஒரு வழியா கலியாணத்துக்கான பணத்தெ எப்பிடியோ பெரட்டிக் கொடுக்குறதா ஒருத்தருக்கொருத்தரு உணர்ச்சிவசப்பட்டுப் பேசி ஒரு முடிவுல வந்து நின்னுச்சு.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...