31 Jul 2020

பேத்தெடுத்த ஒரசல்!

செய்யு - 522

            பணம் பல வேலைகள வேகமா செய்ய ‍வைக்கும். பணத்தெ கொடுத்தா இந்த பூமி சுத்துற வேகத்தெ இன்னும் கூட வேகமாக்கிச் சுத்தும். அப்படி ஒரு சக்தி பணத்துக்கு இருக்கு. ஒரு கல்யாண ஏற்பாட்டுல சம்மதச் சங்கிலின்னு செய்யுவோட கலியாண ஏற்பாட்டப் பத்தி ஒம்போது வளையத்தப் பாத்தோம் இல்லியா! அதோட பத்தாவது வளையத்தப் பத்தி நாம்ம பாக்கலீயே! அந்தப் பத்தாவது வளையம் பணந்தாம். மித்த ஒம்போது வளையங்க இல்லாம போனாலும் இந்தப் பத்தாவது வளையம் ஒண்ணு இருந்தா போதும் பத்து வளையங்களுக்குச் சமானமா அது வேலையச் செய்யும். தெரியாமலா பணம் பத்தும் செய்யும்ன்னு அந்தக் காலத்துலயே சொல்லி வைச்சாங்க!
            மறுநாளே காலங் காத்தாலயே சுப்பு வாத்தியாரு முருகு மாமா வூட்டுக்கும், சித்துவீரன் வூட்டுக்கும் படையெடுத்தாரு. சுப்பு வாத்தியாரு கலியாணச் சிலவுக்குன்னு தனியா ஆறு லட்சத்தெ தர்றதா சொன்னதும் அடுத்தடுத்த வேலைக விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சிது. அவரு அந்தத் தகவலெ சொல்லி முடிச்ச அன்னிக்கு ராத்திரியே ராசாமணி தாத்தா போன அடிச்சிது. "ன்னா மாப்ளே செளக்கியமா?"ன்னு ஆரம்பிச்சி, "மாப்ளே! எதுவும் தப்பா நெனைச்சுக்காதீயே! நெலமெ அப்பிடி ஆயிடுச்சு. ஒஞ்ஞளப் பத்தித் தெரியாதா? என்னிக்கு வர்றீயே மாப்புள்ளயப் பாக்க?"ன்னு கேட்டுப்புட்டு, "அடுத்த ஞாயித்துக் கெழமெ பயலுக்கு லீவுதாங். அன்னிக்கே வந்துப்புடுதீயளா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா. "பெரியவங்க ஒஞ்ஞ முடிவுதாங் மாமா!"ன்னு‍ சொன்னதொட நிறுத்திக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. "அப்பிடின்னா, அடுத்த ஞாயித்துக் கெழமையிலயே மாப்புள்ளய வந்துப் பாத்துப் புடுங்க, தாமசம் வாணாம்! மேக்கொண்டு ஆவ வேண்டிய காரியத்தெயும் பாத்துப்புடலாம்!"ன்னு சொன்னுச்சு ராசாமணி தாத்தா.
            மாப்புள பாக்குறதுக்கு தன் பக்கத்துச் சொந்தங்கள அழைக்கணுமேன்னு சுப்பு வாத்தியாரு இது சம்பந்தமா மொதல்ல விருத்தியூரு போனாரு. அங்க பத்மா பெரிம்மா, செயராமு பெரிப்பா, பரசு அண்ணன், முத்து அண்ணன், நரசு அண்ணன் எல்லாத்துக்கிட்டேயும் இந்த மாதிரிக்கி விசயம்ன்னு சொன்னாரு. அடுத்ததா கோவில்பெருமாள் போயி நாது மாமா, நாகு அத்தைகிட்டெயும் சொன்னாரு. அப்பிடியே வேலங்குடி போயி ரண்டு அக்காமாருக வூட்டுக்கும் சொல்லிட்டு வந்தாரு. அத்தோட வாழ்க்கப்பட்டு, சிப்பூரு, தேன்காடு, பாகூரு, கொல்லம்பட்டின்னு இருக்குற ஒறவுக்கார சனங்க ஒருத்தரு பாக்கியில்லாம எல்லாத்துக்கும் சொல்லிருந்தாரு. இந்த வெசயத்த நேர்ல பாத்துச் சொல்லிட்டு வர்றதுக்கு நாலு நாளு அலைஞ்சிட்டுக் கெடந்தாரு சுப்பு வாத்தியாரு.
            மாப்புள பாக்கப் போற அன்னிக்கு சுப்பு வாத்தியாரு குடும்பத்துலேந்து அஞ்சு டிக்கெட்டுக, விருத்தியூரு வகையிலேந்து பத்து டிக்கெட்டுக, கோவில்பெருமாலேந்து மாமா, அத்தென்னு ரண்டு டிக்கெட்டுக, வேலங்குடியிலேந்து குமாரு அத்தான், அத்தாச்சின்னு ரண்டு டிக்கெட்டுக, வாழ்க்கப்பட்டு பெரிம்மா, சிப்பூரு பெரிம்மா, பெரிப்பா, சித்தி, சித்தப்பா, தேன்காடு சித்தி, பாகூரு சித்தி, சித்தப்பா, கொல்லம்பட்டியிலேந்து விகடுவோட மாமனாரு, மாமியாரு, கிராமத்துலேந்து பத்து டிக்கெட்டுகன்னு அப்பிடியே போறப்ப முருகு மாமா, நீலு அத்தெ, சித்துவீரன் குடும்பத்து டிக்கெட்டுகன்னு நாப்பதுக்கு மேல இருந்துச்சு சனங்க. வேலங்குடி சின்னவரு வூட்டுலேந்து சொல்லி விட்டும் யாரும் வாரல. சுப்பு வாத்தியாரு மாப்புள்ள பாக்கப் போறதுக்குன்னே ரண்டு வேன் பிடிச்சிருந்தாரு. 
            சுப்பு வாத்தியாரும், ராசாமணி தாத்தாவும் போன்ல பேசிக்கிட்ட படி பத்து மணிக்கு மேல பதினொண்ணரைக்குள்ள மாப்புளப் பாத்து முடிச்சிட்டு கெளம்புறதுங்றது திட்டம். அதுக்காக பத்து மணி வாக்குல பாக்குக்கோட்டை போறதுன்னு திட்டம் பண்ணி வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கேத்தாப்புல ஒறவுக்காரவுங்ககிட்டெ சொல்லி மொத நாளு ராத்திரியே வந்துச் சேந்திடுறாப்புல சேதிய சொல்லியிருந்தாரு. அதுப்படி சனங்களும் வந்துச் சேந்திருந்துச்சுங்க. சுப்பு வாத்தியாரு வூடு அந்த ராத்திரி செக சோதியா இருந்துச்சு. வந்து சேந்திருந்த சனங்க எல்லாம் ஒண்ணொண்ணும் வெத வெதமா கேள்விக் கேட்டுச்சுங்க. எல்லாத்துக்கும் பதிலெ சொன்னாரு சுப்பு வாத்தியாரு.
            ஆன்னா யாருகிட்டெயும் போடப் போற பவுனு, சீரு சனத்தி, கலியாணச் சிலவுக்கான காசியப் பத்தி முங்கூட்டி நடந்த மாபெரும் பேச்சு வார்த்தையப் பத்தி எதுவும் மூச்சு வுடல. அதெயெல்லாம் அதுக்கு மேலத்தாம் பேசி முடிவு பண்ணுவாங்கன்னு சனங்களும் நெனைச்சிக்கிட்டுங்க. இப்படி ஒருத்தரையொருத்தரு பாத்த சந்தோஷத்துல சனங்க பேசி முடிச்சி தூங்க ஆரம்பிச்சப்போ ராத்திரி ஒரு மணிக்கு மேல இருக்கும். அதுக்கு மேல தூங்கி காலாங்காத்தால எழும்பி எல்லா சனங்களும் ஆறு மணி வாக்குல கெளம்புறாப்புல சுப்பு வாத்தியாரு பம்பரமா சொழண்டாரு. அவருக்கு வேலங்குடி பெரியவரோட ஞாபவந்தாம் வந்துச்சு. ஒவ்வொரு கலியாணத்துலயும் அவரு பட்ட மெனக்கெட இப்போ நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. ஒறவுக்கார சனங்க,‍ கெளம்பி வர்ற, தெரு சனங்க உட்பட எல்லாத்துக்கும் ஏழு மணிக்குள்ளேயே, வூட்டுலயே சாப்பாட்ட முடிச்சி ஏழரைக்குள்ள வேனுக்குள்ள ஏத்திப்புட்டாரு. இதுக்காகவே வெங்குவும், ஆயியும் நாலு மணியிலேந்து பொங்கலும் சட்டினியும், இட்டிலியும் சாம்பாரும் தயார்ர பண்ணி காப்பியப் போட்டு வெச்சிருந்துச்சுங்க.
            எல்லாத்தையும் கெளப்பி வேன்ல ஏத்தி, வேன் கெளம்புறப்போ சரியா ஏழரை மணி. வேனுங்க ரெண்டும் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணுப் போனுச்சு. வேனு கூத்தாநல்லூரு போற வரைக்கும் எந்தப் பெரச்சனையும் இல்ல. கூத்தாநல்லூரு கடைத்தெருக்குள்ள போனப்பத்தாங் ஒரு பெரச்சனெ உண்டானுச்சு. ரொம்ப குறுகலான அந்த ரோட்டுல போறப்போ எதுத்தாப்புல பஸ்ஸூ வந்துச்சு. சுப்பு வாத்தியாரு அதெ பாத்த ஒடனே "ஓரங்கட்டிக்கிட்டு, பஸ்ஸூ போன பெற்பாடு போவலாம்!"ன்னு சொல்லி முடிக்கல. "அதெல்லாம் பாத்துக்கிடலாம் சார்!"ன்னு வேன் டிரைவர் சொல்லிட்டு, வேனும் பஸ்ஸூம் சைடு போட்டுகிட்டுப் போவ, பஸ்ஸூம் வேனும் ஒண்ணோட ஒண்ணு ஒரச வேனோட சன்னலுக்கு வெளியில போற கம்பியும், பஸ்ஸோட சன்னலுக்கு வெளியில போற கம்பியும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு நல்லா மாட்டிக்கிடுச்சு. வேனும் நின்னுடுச்சு. பஸ்ஸூம் நின்னுடுச்சு.
            மேக்கொண்டு வேனையோ, பஸ்ஸையோ நவுத்துன்னா கம்பி பேத்துட்டு வந்துடுங்ற நெலமெ. மின்னாடி வந்த வேனுக்கு இந்தக் கதெ. பின்னாடி வந்த வேனு பாதுகாப்பா பின்னாடியே ஓரமா நின்னுடுச்சு. கூத்தாநல்லூரு ரோட்டுல இது ஒரு பெரச்சனெ. செல எடங்கள்ல ரோடு ரொம்ப குறுகலா ரண்டு பக்கமும் கடைகளா இருக்கும். அந்த மாதிரியான எடத்துல பஸ்ஸூம், வேனும் மாறிப் போவ முடியாது. பின்னாடி வந்து ஓரமா எடம் இருக்குற எடமா பாத்து நிறுத்திக்கிட்டு எதாச்சும் ஒண்ணு போன பெற்பாடுதாங் மத்த வாகனம் போவணும். அப்பிடிப் போவாம கொஞ்சம் அவசரப்பட்டதுல ரண்டும் நல்லா மாட்டிக்கிடுச்சு. பஸ்ஸையோ வேனையோ நவுத்துனா கம்பியோட மேக்கொண்டு வாகனங்களோட வேற பட்டையும் பேந்துட்டு வந்துடுமோங்ற மாதிரி நெலமெ. இருந்தாலும் வண்டிய எடுத்தாவனுவுமே. வேனுக்கும் பஸ்ஸூக்கும் ரண்டு பக்கமும் வாகனங்க சேர்ற ஆரம்பிச்சி பெரிய நெரிசலா ஆவ ஆரம்பிச்சி ஒவ்வொரு வண்டிக்காரனும் ஹாரன வெச்சிட்டு ச்சும்மா இல்லாம பாம் பாம், பீம் பீம்ன்னு அடிச்சிட்டு இருக்காம். சத்தம்ன்னா சத்தம் தாங்க முடியாத சத்தம். வண்டிய விட்டு செல பேரு எறங்கி வந்து வாகனத்த சீக்கிரமா எடுங்கன்னு வேற சத்தம் கொடுக்குறாம்.

            பஸ்ஸ நவுத்துடான்னா பஸ்ஸூக்கார்ரேம் நவுத்த மாட்டேங்றாம். பஸ்லேருந்து ஒரு பட்டை பேந்தாலும் அதுக்கான காசிய நாம்மத்தாம் கொடுக்கணுங்றாம் அவ்வேம். வேனுக்கார டிரைவர்ர நீயாச்சும் நவுத்துன்னா அவனும் நவுத்த மாட்டேங்றாம். வேன்லேந்து எதாச்சிம் ஒரு பட்டெ பேந்தா நாம்மத்தாம் மொதலாளிக்குப் பதிலெச் சொல்லணும்ங்றாம். பஸ்ஸூல டிரைவரும், கண்டக்டரும் எறங்கி வர்ற, வேனுக்கார டிரைவரு எறங்கிப் போக ரண்டு பேத்துக்கும் வாய் சண்டையா ஆரம்பிச்சது கை கலப்பா மாறிடும் போல ஆயிடுச்சு. வெங்குவுக்கு மனசெல்லாம் நடுங்குது, இதென்னடா நல்ல காரியம் அதுவுமா கெளம்பிப் போறப்ப இப்பிடி அபசகுனம் மாதிரின்னு. சுப்பு வாத்தியாரு, விகடு, பரசு அண்ணன், முத்து அண்ணன், நரசு அண்ணன், ஊருக்கார பெரிசுங்க எல்லாம் எறங்கி ரண்டு பக்கத்தையும் சமாதானம் பண்ணப் பாக்குதுங்க. சமாதானம் ஆவுறாப்புல தெரியல.
            பஸ்ஸூக்காரவுக, வேனுக்காரவுக எல்லாம் சேந்துகிட்டு வம்படியா போலீஸ் வந்ததாம் ஆச்சுன்னு பிடிவாதமா நிக்குறாங்க. சுப்பு வாத்தியாரு கெஞ்சுற நெலைமைக்கு வந்துட்டாரு. "யய்யா! மாப்புள பாக்கப் போறேம். இந்த நேரத்துல போலீஸ் அது இதுன்னா சுத்தப்பட்டு வாராது. நேரத்துக்குப் போயாவணும். ஸ்டேசன்ல போயி நின்னுகிட்டு இருக்க முடியா. மொதல்ல வண்டிய சூதானமா அந்தாண்ட எடுங்க. பத்து மணிக்குள்ளார நாஞ்ஞ பாக்குக்கோட்டைக்குப் போயாவணும்!"ங்றாரு. அவரோட நெலமையப் பாத்து ஒரு வழியா கொஞ்சம் எறங்கி வந்த பஸ்ஸூகாரவுகளும், வேனுகார டிரைவரும், வேன்ல இருந்த சனங்களையெல்லாம் எறக்கி விட்டுப்புட்டு, ரண்டையும் மின்ன பின்ன நகர்த்தி எடுத்தா வேன்லேந்து கம்பி பேந்துட்டு அந்தாண்ட போயி விழுவுது. பஸ்லேந்து ஒரு தகரப்பட்டை பேந்துட்டு அந்தாண்ட போயி விழுவுது.
            இப்போ, வேனையும் பஸ்ஸையும் அந்தாண்ட நவுத்துனா பஸ்ஸூகாரவுக வேன ஓரங்கட்டி பேந்து விழுந்த தகரப்பட்டைக்குக் காசிய கொடுத்துட்டு வண்டிய அந்தாண்ட எடுடான்னுட்டாங்க. வேனுக்கார டிரைவரு, "பைசா காசியக் கொடுக்க முடியாது! வேணும்ன்னா போலீஸ்காரவுகள கூப்ட்டு வா! பஞ்சாயத்தெ வெச்சிக்கிடலாம்!"ங்றாம்.
            பஸ்ஸூகார டிரைவரு, "நாம்ம போயி டிப்போல தண்டம் அழுவ முடியாது. ஆயிரத்து எரநூத்து எடுத்து வெச்சிட்டு மறுவேல பாரு!"ங்றாம்.
            "நாம்ம வாங்குற சம்பளமே அம்மாம் வாராது. அதெ எடுத்து வெச்சிப்புட்டு நாம்ம ன்னா வெறுங்கையோட வூட்டுக்குப் போறதா? நமக்கும் வண்டியில கம்பிப் போயிருக்கு. அதுக்கு ரண்டாயிரத்தெ எடுத்து வையி!"ன்னு வேனுக்கார்ர டிரைவரும் நிக்குறாம்.
            சுப்பு வாத்தியாரு பாத்தாரு பையிலேந்து ஆயிரத்து எரநூத்து ரூவாய எடுத்து பஸ்ஸூகாரவுக மின்னாடி வெச்சாரு. வேனுக்காரரப் பாத்து, "ஒஞ்ஞள நாம்ம பெறவு கவனிக்கிறேம்! மொதல்ல வண்டியக் கெளப்புங்க!"ன்னு கையெடுத்துக் கும்பிட்டாரு. ஒடனே வேனுக்கார்ர டிரைவரு, "அப்பிடில்லாம் விட முடியாது!"ன்னு பக்கத்துல ஒரு கடையில ஒரு டிம்மித்தாளெ வாங்கி அதுல இன்னயின்ன மாதிரி சங்கதின்னு எழுதி பஸ்ஸூகாரவுகக் கையெழுத்துப் போடணும்ன்னு நிக்குறாம். சுப்பு வாத்தியாரு, "அதெல்லாம் வாணாம், வண்டிய எடுத்துட்டு கெளம்புவேம்!"ங்றாரு மறுபடியும் கையெடுத்துக் கும்புட்டு. பஸ்ஸுக்கார டிரைவரும், கண்டக்டரும் கையெழுத்துப் போட்டுத் தர்றாம வண்டிய எடுக்க முடியாதுன்னு வேனுக்கார்ரேம் பிடிவாதம் பண்ணா, ஒரு வழியா சுப்பு வாத்தியாரோட பரிதாபமான மொகத்தப் பாத்து, கடெசீயா பஸ்ஸூகாரவுக ஒத்துக்கிட வேல முடிஞ்சது.
            கெளம்புறப்போ வேனுக்கார டிரைவரு சொல்றாம், "இப்பிடில்லாம் இருக்காதீங்க சார்! இந்த மாதிரிக ஆளுகளெ நம்ப முடியாது. ஆயிரத்து எரநூத்த வாங்கி இவனுங்க பாக்கெட்டுலப் போட்டுக்கிட்டெ டிப்போல கட்ட மாட்டானுக. அதுக்குத்தாம் நாம்ம எழுதி வாங்கிக்கிறது. நாளைக்கி டிப்போவுக்குப் போயி வெசாரிப்பேம்ல!"ன்னாம். "அதல்லாம் ஒண்ணும் வேணாம்பீ! வண்டிய எடுங்க. பத்து மணிக்குள்ளார பாக்குக்கோட்டைக்குப் போயி ஆவணும்! யிப்பவே மணி எட்டெ முக்காலு ஆயிட்டு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. அவரோட ஒடம்பெல்லாம் தொப்பரையா வெயர்வையில நனைஞ்சி இருக்கு.
            "ஒரு அரை மணி நேரந்தாம் வெரயமா போச்சு. சொன்னா சொன்னபடிக்கி கொண்டு போயி நிறுத்துறேம் சார்!"ன்னாம் வேனுக்கார டிரைவரு. "அதுக்காக வேகமா போவ வாணாம். கொஞ்சம் அரை மணி நேரம் தாமசம் ஆனாலும் பரவாயில்ல. நெதானமாவே போங்க! மறுக்கா இதெ போல எஞ்ஞனாச்சும் நிறுத்துன்னாப்புல ஆயிடுச்சுன்னா வேகமா போனதுக்கே அர்த்தம் யில்லா ஆயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. "சொன்னா சொன்னபடிக்கு நிறுத்துறேம் சார்! ஒண்ணும் பயப்படாதீங்க! இனுமே அப்பிடில்லாம் ஆவாது சார்! பஸ்ஸூக்காரனுக்கு அந்தாண்ட ந்நல்லா எடம் கெடக்கு சார்! அதெ பாக்கமா நம்மப் பக்கம் ஒடைச்சித் திருப்பிட்டாம்! தப்பு நம்ம மேல கெடையா சார்! பஸ்ஸூக்கார்ரேம் மேல!"ன்னாரு வேன்கார்ர டிரைவரு.
            இப்போ வேன்லேந்து எறங்குன சனங்க ஏறிக்க மொத வேனு பொறப்படுது. அதுலயும் ஒரு சங்கதி என்னான்னு கேட்டீங்கன்னா, வேன இப்பிடி ஓரங் கட்டுனதுல அங்கங்க எறங்கி நின்ன சனங்க, கொஞ்சம் பேச்ச வார்த்தையில நேரமானதப் பாத்துட்டு, அதுகப் பாட்டுக்கு டீத்தண்ணிய குடிக்க கடையெத் தேடிப் போயிடுச்சுங்க. இந்தப் பெரச்சனைத் தீக்குறதுல நின்ன சுப்பு வாத்தியாரும் மித்தவங்களும் அதெ கவனிக்கல. பெறவு அவிங்கள வேற ஒவ்வொருத்தரு அங்ஙன இங்ஙன தேடிக் கொண்டாந்து வேனுக்குள்ள ஏத்துறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும். அதுக்குப் பின்னாடி பாதுகாப்பா ஓரமா நின்ன ரண்டாவது வேனு பின்தொடருது.
            சுப்பு வாத்தியாருக்கு ஒரு நெனைப்பு, பொண்ணு பாக்க பாக்குக்கோட்டை சனங்க வந்த மாதிரிக்கி நாமளும் பதினொண்ணரை மணிக்குத்தாங் போயிச் சேருவோமோன்னு. அவருக்குப் பாக்குக்கோட்டைக்குப் போயி சேர்ற வரைக்கும் படபடப்பும், பரபரப்பும் அடங்கல. நல்ல வேளையா சுப்பு வாத்தியாரு நெனைச்சது போல நேரம் கடக்கல. அவரு மொத நாளே மாப்புள்ள பாக்கப் போறதுக்கான சாமாஞ் செட்டுக, பூவு, பழம்ன்னு எல்லாத்தையும் வாங்கி வெச்சிருந்தாரு. அதால சாமாஞ் செட்டுக வாங்கணும்ன்னு வேனை எங்கயும் நிறுத்த வேண்டிய அவசியமில்லாமப் போச்சுது. எடையில வேனும் பஸ்ஸூம் ஒரசி நின்ன அந்த ஒரு எடத்த தவுர எந்த எடத்துலயும் நிக்காம வேனுக ரண்டும் வெரசா போயிட்டே இருந்துச்சுங்க. ஒம்போதரைக்கெல்லாம் போயிச் சேந்துப்புடலாம்ன்னு நெனைச்சது மட்டுந்தாம் கொஞ்சம் தாமசமாயிருந்துச்சு.
            மிங்கூட்டியே கெளம்புனதால, எடையில வேனும் பஸ்ஸூம் ஒரசி அதுல நேரமானாலும் பத்தே காலுக்கெல்லாம் வேன் பாக்குக்கோட்டையில நோழைஞ்சி சிங்கப்பூரு காலனி ராசாமணி தாத்தா வூட்டுக்கு மின்னாடி நின்னுச்சு. இப்படியா அதகள ரணகளப்பட்டு, சின்னா பின்னப்பட்டு மாப்புளப் பாக்க சனங்கள கொண்டு போயி பாக்குக்கோட்டையில காலடி எடுத்து வெச்சாரு சுப்பு வாத்தியாரு. அப்பதாங் அவரு மனசுக்குள்ள கொஞ்சம் நிம்மதி வந்துச் சேந்துச்சு. அங்க காலடி எடுத்து வெச்சதுந்தாம் வெங்குவுக்கும் போனாப்புல இருந்த உசுரு திரும்ப வந்தாப்புல இருந்துச்சு. "ந்நல்ல வேள நாம்ம கும்புடுற உஞ்சினி அய்யனாரு நம்மள கைவுடல!"ன்னுச்சு வெங்கு.
            "ஒரு நல்ல காரியத்துக்குப் போறப்ப அப்பிடி இப்பிடின்னுத்தாங் செலது நடக்கும். அதெ பத்தியா நெனைச்சிக்கிட்டு கவலபட்டுக்கிட்டு இருக்குறது? எல்லாம் திஷ்டியா இருக்கும். இப்போ கழிஞ்சதுன்னு நெனைச்சுக்கோ!"ன்னுச்சு விருத்தியூரு பத்மா பெரிம்மா.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...