செய்யு - 520
சுப்பு வாத்தியாரு சித்துவீரன் வூட்டுக்குப்
போனா சுந்தரி அது பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடுச்சு. சித்துவீரன் எதுவும் பேசல.
"வாஞ்ஞ! வாஞ்ஞ!"ன்னு சொன்னதோட செரி. பேசுறத மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.
"யப்பா போன் பண்ணுச்சு. நீஞ்ஞ போன்
பண்ணி பேசுனதா சொன்னுச்சு. அதுக்கும் செய்யுவக் கட்டி வைக்கணும்னுத்தாங் ஆசெ. பேத்திய
கட்டி வெச்சிட்டா அதோட கடெசீக் காலத்துக்க நல்லதுல்லா. தாத்தான்னு நல்ல வெதமா பாத்துக்கிடுமில்லா.
அதுலயல்லாம் ஒண்ணும் பெரச்சனெ யில்ல. ஆன்னா, தங்காச்சி பிந்து இருக்கா யில்லே, அவ்வே
கலியாணத்துக்கு நெரம்ப செலவானதுல அதெ சமாளிக்க முடியாம தடுமாறுதுங்க அஞ்ஞ பாக்குக்கோட்டையில.
யிப்போ யாரு மாப்புள வூட்டுல கலியாணத்தப் பண்ணுறா? எல்லாம் பொண்ணு வூட்டுலதானே பண்ணி
வுடுறாங்க. அப்பிடி கலியாணத்தெ பண்ணி வுட்டா தேவலாம்ன்னு ஒரு நெனைப்பு. நீஞ்ஞ எதாச்சும்
நெனைச்சுப்புடுவீங்களோன்னு அது ஒரு யோஜனெ. யிப்போ கலியாணத்தப் பண்ணுற நெலையிலயும்
யில்ல, கலியாணத்த வுடுற நெலையிலயும் யில்லன்னு யம்மா கூட சொன்னுச்சு. பாவம் எஞ்ஞ குடும்பத்துல
அஞ்ஞ ரொம்ப செருமப்படுறாங்க. இவுங்க கொடுத்து ஒதவலாமான்னா இவுங்க கதெதாங் ஒஞ்ஞளுக்குத்
தெரியும். இவுங்களுக்கே அவுங்க அஞ்ஞயிருந்ததாங் ஒதவிக்கிட்டு இருக்காங்க. அதெ யாருகிட்டெ
சொல்றது? எப்பிடிச் சொல்றதுன்னு ரொம்பவே தடுமாறிட்டுக் கெடக்குறாங்க. யண்ணனும் ஒண்ணுத்தையும்
சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம கொழம்பிப் போயி நிக்குது! தங்காச்சிக் கலியாணம்
முடிஞ்சி ஏழெட்டு மாசங் கூட ஆவலல்ல. தங்காச்சிக் கலியாணத்துக்கு வாங்குன சிலவே அடைச்சிப்புட்டா
பெறவு அதுக்கு சிலவு ஒண்ணும் யில்ல. சம்பாதிக்குறது எல்லாம் அத்தோட குடும்பத்துக்குத்தாம்.
இப்போ இருக்குற இந்த நெலமைய எப்பிடிச் சமாளிக்குறதுன்னு புரியாம தவிக்குதுங்க எல்லாம்
அஞ்ஞ!"ன்னுச்சு சுந்தரி.
"சம்பந்தம்ன்னு ஆவப் போற நாம்ம,
ஒருத்தொருக்கொருத்தரு செருமத்தப் பகிர்ந்துக்குறதுல ன்னா இருக்கு? கலியாணத்தெ நாம்ம
பண்ணி வுடுறதுல ஒண்ணும் அட்டியில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யண்ணன் கொஞ்சம் பெருந் தோதுல பாக்கும்.
நமக்கு அந்த மாதிரிக்குச் செஞ்சு பழக்கமிருக்காது!"ன்னுச்சு சுந்தரி.
"பிந்துக் கலியாணத்துல பாத்தேம்.
அத்து மாதிரிக்கி நாம்ம திருவாரூர்லயே பெரிய மண்டபத்துல பாத்துச் செஞ்சி வுட்டுப்புடலாம்!
என்ன வெதமா கலியாணம் பண்ணணுமோ அந்த வெதமா பண்ணிப்புடலாம். சாப்பாடுல்லா பத்து கறி
வாணும்ன்னாலும் போட்டுப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யண்ணன் ரொம்ப வித்தியாசமா அதெ பத்தி
கனவு கண்டுகிட்டு இருக்கு. நாம்ம அதெ ஈடு பண்ணுறாப்புல பண்ணுறதுன்னா செருமம்!"ன்னுச்சு
சுந்தரி.
சுப்பு வாத்தியாருக்கு ஒரு நிமிஷம் ஒலகமே
நின்னு சுத்துறாப்புல இருந்துச்சு. மாமானாருக்கும், மாமியாருக்கும் பிடிக்காத மருமவளா
இருக்குற சுந்தரி பேசுறதெ பாக்குறப்போ எல்லாம் முன்கூட்டியே கலந்துகிட்டு, காக்க வெச்சு
கழுத்தறுக்குறாப்புல பேசுறாப்புல பட்டுச்சு சுப்பு வாத்தியாருக்கு. அவருக்கு மனசுக்குள்ள
ஏகப்பட்டு கடுப்பு உண்டானுச்சு. கோயில்ல தாலியக் கட்டிட்டு எளிமையா பண்ணாலும் அதுவும்
கலியாணந்தாம், ரீஸ்தரு ஆபீஸ்ல செலவே யில்லாம பண்ணிக்கிட்டாலும் அதுவும் கலியாணந்தாம்,
ஒண்ணுத்துக்கும் வழியே யில்லன்னு நாலு பேத்த வெச்சுக்கிட்டு ஒரு மஞ்சள கயித்துல கட்டி
அதெ கட்டி வுட்டாலும் அதுவும் கலியாணந்தாம், கோடி கோடியா செலவ பண்ணி ஊரு ஒலகத்துக்கே
சாப்பாட்ட போட்டுப் பண்ணாலும் அதுவும் கலியாணந்தாம். என்னவோ கலியாணமே பண்ணாத, செய்யாத
ஆளெ போலல்லா நெனைச்சிட்டுப் பேசுது இந்தப் பொண்ணுன்னு மனசுக்குள்ள ஆயிரமாயிரம் நெனைப்பு
ஓட ஆரம்பிச்சிது சுப்பு வாத்தியாருக்கு. நாம்ம ன்னா கலியாணமே பண்ணதா ஆளான்னு மனசு அப்பிடியே
கொந்தளிச்சுப் போச்சு அவருக்கு. என்னவோ ஊரு ஒலகத்துல பண்ணாத அதிசயக் கலியாணத்த பண்ணுறாப்புலல்லா
பேசுதேன்னு நெனைச்சிக்கிட்டு, அதெயெல்லாம் மனசுக்குள்ள அடக்கிக்கிட்டு, "நாம்ம
என்னத்தெ பண்ணணுங்றதெ கொஞ்சம் தெளிவு பண்ணா செளரியமா இருக்கும்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"நீஞ்ஞ எதுவும் தப்பா நெனைச்சிக்கிட
கூடாது. யண்ணன் அதெயெல்லாம் கேக்கக் கூடாதுன்னுத்தாங் சொன்னிச்சு. இருந்தாலும் நமக்கு
மனசு கேக்கல. பாவம் கலியாணம் வேறல்லா தள்ளிட்டுப் போவுது. அதால சொல்றேம்! தப்பா நெனைக்கலன்னா
சொல்லுங்க சொல்றேம்!"ன்னுச்சு சுந்தரி.
சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள என்னத்தெ
சொல்லப் போவுதுங்ற பொறி தட்டுனுச்சு. இருந்தாலும் அதெ வர்ற வார்த்தையால கேட்டாத்தானே
சுத்தப்பட்டு வரும்ன்னு நெனைச்சுக்கிட்டு, "ஒரே ஒறவுக்காரவுங்க நாம்ம. நமக்குள்ள
தப்பா நெனைக்குறதுக்கு ன்னா இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதாங் அவுங்க கூட இதெப் பத்தி பேயாம
உக்காந்திருக்காங்க!"ன்னு சித்துவீரன காட்டிட்டு சுந்தரி சொன்னுச்சு, "கலியாணச்
சிலவா ஒரு ஆறு லட்சத்தெ கையில கொடுத்துப்புட்டீங்கன்னா கலியாணத்தெ யண்ணன் நெனைக்குறாப்புல
திருப்தியா பண்ணிப்புடும். ஒஞ்ஞளுக்கும் கலியாண சோலின்னு எந்த மெனக்கெடும் யில்ல பாருங்க!
சொமையில்லாம் கலியாணத்துக்கு வந்தேமா முடிச்சேமான்னு போயிடலாம்! இப்போ காலத்துல
கலியாணத் தேவையச் செஞ்சு முடிக்குறதுதானே பெரும்பாடா இருக்கு. அதெ அந்தப் பாட்ட செருமத்த
யண்ணனும் யப்பாவும் பாத்துக்கிடும்!"ன்னுச்சு சுந்தரி.
சுப்பு வாத்தியாருக்குத் திரும்ப திரும்ப
தூக்கி வாரிப் போட்டுச்சு. என்னடா இது? மாமனாரு அஞ்சு லட்சம்ன்னா, மருமவ ஆறு லட்சம்ன்னு
அஞ்சு வெடிகுண்டுக்குப் பதிலா, ஆறு வெடிகுண்டெ தூக்கிப் போடுறான்னு. சுப்பு வாத்தியாருக்கு
முழி பிதுங்கி வெளியில வர்றாத கொறையா போயிடுச்சு. என்ன கருமெத்த இதுக்குப் பதிலா
சொல்றதுன்னு கதி கலங்கிப் போயிட்டாரு.
ஒரு நிமிஷம் ஒரு பெருத்த மெளனம் அந்த எடத்துல
உக்காந்திருந்துச்சு.
"நாமளும் கலியாணம் பண்ணி வுடுற பொண்ணுக்குன்னு
கலியாணம் பண்ணுறப்ப பண்றதுதாங். பெறவு பொண்ணுங்ற வெசயத்துல பெரிசா சொத்துப் பத்து
பாகம்ன்னு சிலவு கெடையாது. கலியாணங்றது ஒது தவா பண்றதுதாங். ஒஞ்ஞ குடும்பத்துக்கும்
அஞ்ஞ கடெசீத் தேவ. எஞ்ஞ குடும்பத்துக்கும் அஞ்ஞ கடெசீத் தேவ. நல்ல வெதமா செஞ்சா ரண்டுக்
குடும்பத்துக்கும் நல்லதுதானே. யண்ணனோட கலியாணக் கணக்குப்படி கலியாணச் சிலவு பன்னெண்டு
லட்சம். அதுல ஆறு லட்சத்தெ அத்து போட்டுக்கும். பொண்ணு வூட்டுச் சார்பா ஆறு லட்சத்தெத்தாங்
அத்து எதிர்பாக்குது. நீஞ்ஞ எதுவும் தப்பா நெனைச்சிக்கிட கூடாது!"ன்னு தொடந்தாப்புல
பேசுனுச்சு சுந்தரி.
அதெ கேட்டதும் இன்னும் சுப்பு வாத்தியாருக்கு
தல சுத்தி தரையில விழுவாத கொறையா இருந்துச்சு. நக நட்டு, கட்டிலு, பீரோ, பண்டம் பாத்திரம்,
கலியாணச் செலவுன்னே மொத்தத்தையும் பத்து லட்சத்துக்குள்ள முடிச்சிப்புடலாம். இவனுக
என்னான்னா கலியாணச் சிலவெ மட்டும் பன்னெண்டு லட்சம்ன்னு புருடா வுடுறானுவோளேன்னு நெனைச்சிக்கிட்டாரு.
அதெ வெளியில சொல்லிக்கிடாம, "நாம்ம வூட்டுல மவ்வேங்கிட்டெயும், வூட்டுலயும் ஒரு
வார்ததெ கலந்துக்கிட்டு வந்துச் சொல்லிடுறேம்! நாம்ம ரிட்டையர்டு ஆயி ச்சும்மா உக்காந்திருக்க
ஆளு. நாம்ம ஒத்த ஆளா முடிவெ பண்ணிட்டதா நாளைக்குக் குடும்பத்துல யாரும் நெனைச்சிப்புடக்
கூடாதுல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு, ரொம்ப யோசனையா வார்த்தைகளப் பொறுக்கிப்
போட்டு.
"அதெல்லாம் ஒண்ணும் அவ்சரமில்ல. வூட்டுல
ந்நல்லா கலந்துக்கிட்டு வந்தே சொல்லுங்க. யண்ணணுக்குச் செய்யுவக் கட்டுறதுல இஷ்டம்ன்னா
இஷ்டம். செய்யுவுக்கும் யண்ணனப் பிடிச்சிருக்கும்ன்னு நெனைக்கிறேம். மனசு பிடிச்சிப்
போன ரண்டு பேத்தையும் நாமல்லாம் இருந்து சேத்து வெச்சிப்புடணும். ஊரு ஒலகம் மெச்சுறாப்புல
கலியாணத்தையும் செஞ்சி வுட்டுப்புடணும். செருமம், சிலவுன்னு ஆயிரம் இருந்தாலும் அதெ
நாம்ம செஞ்சு வுட்டுத்தாம் ஆவணும். எல்லாம் பெரியவங்க ஒஞ்ஞ கையிலத்தாம் இருக்கு!"ன்னுச்சு
சுந்தரி.
நல்லாத்தாம் பேசுறேடியம்மான்னு வாயடைச்சுப்
போயிட்டாரு சுப்பு வாத்தியாரு. மருமவளுக்கும், மாமியாளுக்கும் ஒத்து வரலன்னாலும்,
இந்த பேச்சு வெசயத்துல மட்டும் எப்பிடி ஒத்துப் போவுதுன்னு ஆராய்ச்சியே பண்ணுற அளவுக்குப்
போயிடுச்சு சுப்பு வாத்தியாரோட மனசு. இருந்தாலும் அதெ வெளிக்காட்டிக்கிடாம,
"பெறவு நாம்ம கெளம்புறேம். கலந்துகிட்டு வந்து ந்நல்ல சேதியா சொல்றேம்!"ன்னாரு.
அவரு கெளம்புறப்போ, சித்துவீரன் சொன்னுச்சு,
"கட்டிலு பீரோவுல எந்தக் கொறையும் இல்லாம தேக்கச் சட்டம், தேக்கம் பலவையிலத்தாம்
பண்ணணும். சிலவெ பாத்துட்டு இதுல கம்பீரத்த விட்டுப்புடப் படாது! வேற சட்டம், பலவையில
செஞ்சுப்புடலாம்ன்னு யோஜனெ வந்துப்புடப்படாது!"ன்னு.
"யம்பீ சொல்லிட்டப் பெறவு, அதெ நாமளும்
ஒதுக்கிட்டப் பெறவு அதெ மாத்த முடியுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெ சொல்லுங்க!"ன்னுச்சு சித்துவீரன்.
ஒவ்வொரு தவாவும் இங்க வடவாதி வந்துட்டுப் போறப்போ கொஞ்சம் இடிஞ்சாப்புலத்தாம் கெளம்புறாரு
சுப்பு வாத்தியாரு. அதுவும் இந்த தவா அத்து கொஞ்சம் ரொம்பவே அதிகம்.
*****
No comments:
Post a Comment