30 Jun 2020

ஓலை எழுத வர்ரேன்னு ஓலையில போனவன்!

செய்யு - 492

            பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா குடும்பத்துக்கு சித்துவீரன் மூத்த மருமவங்றதால அதோட செல்வாங்கு அங்க அதிகம். சித்துவீரனோட செல்வாக்கு அங்க அதிகமா இருக்குறதுக்கு அது மட்டும் காரணமில்லெ. கட்டிக்கொடுத்த சுந்தரிப் பொண்ணு வூட்டுல வந்து உக்காந்துடக் கூடாதேங்ற கவலையும் இன்னொரு காரணம். இன்னும் ஒரு பொண்ண கட்டிக் கொடுக்க வேண்டிய நெலையில, கட்டிக்கொடுத்த பொண்ணு வாழாவெட்டியா வந்து உக்காந்துப்புட்டா அந்த நெலமைய நெனைச்சுப் பாக்கவே பாக்குக்கோட்டை சனங்களுக்கு பயங்கரமா இருந்துச்சு. கட்டுனப் பொண்டாட்டிக்கு இன்னொருத்தங் கூட தொடர்பு இருக்குங்றதெ தெரிஞ்சிக்கிட்டு ஒருத்தன் ஒரு பொண்ண சகிச்சிக்கிட்டு வாழ்றதெ பெரிய தியாகமா நெனைச்சதுங்க பாக்குக்கோட்டை சனங்க. அப்படிப்பட்ட ஒரு தியாகியா சித்துவீரன் இருந்த காரணத்தால பாக்குக்கோட்டை குடும்பத்தைப் பொருத்த மட்டுல சித்துவீரன் எடுக்குறதாங் முடிவு, சித்துவீரன் வைக்குறதாங் சட்டம். 
            ராசாமணி தாத்தாவுக்கும், சரசு ஆத்தாவுக்கும் தெரிஞ்சே சுந்தரிக்கு நாலு தடவைக்கு மேல அபார்ஷன் ஆயிருக்கு. அதுல லாலு மாமா வந்து நின்னு லட்சுமாங்குடியில பண்ணி வுட்டது மூணு. சுந்தரிக்குப் பொறந்த புள்ளைங்க ரண்டு. ஆம்பளப் புள்ளெ ஒண்ணு, பொம்பள புள்ளெ ஒண்ணு. ஆன அபார்ஷனுக்குக் கணக்கு இல்ல. ராசாமணி தாத்தாவ கேட்டா அது ஒரு கணக்குச் சொல்லும். லாலு மாமாவ கேட்டா அது ஒரு கணக்குச் சொல்லும். சரசு ஆத்தா வேற ஒரு கணக்கச் சொல்லும். சித்துவீரங்கிட்டெ கேட்டா தெளிவா இருக்குறப்போ ஒரு கணக்கு வரும், டாஸ்மாக்குச் சரக்கச் குடிச்சப் பிற்பாடு வேறொரு கணக்கு வரும். சுந்தரிக்கிட்டெ கேட்டா அப்பிடி எதுவுமெ கெடையாதுன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணாத கொறைக்குச் சொல்லும். மொத்தத்துல உண்மையான கணக்குங்றது யாருக்குத் தெரியுங்றது யாருக்குமே தெரியாது.
            முன்பெல்லாம் சுந்தரிக்கு அபார்ஷன் ஆவுறப்போ வூட்டுல இருக்குற அண்டா, குண்டான்னு ஒவ்வொண்ணு அடகுக்குப் போயி அரைப்பவுனு நகையாவோ, இருவதாயிரம் முப்பதாயிரம் ரொக்கமாவோ சித்துவீரன் கைமாறும். அப்பிடிப் பண்ணித்தாம் சித்துவீரனெ திருப்தி பண்ண முடியும். பாலாமணி வேலைக்குப் போன பிற்பாடு அடகுக்குப் போறது இல்லாமப் போச்சு. ஆனா பாலாமணி கிளினிக்கிலயும், மருந்துலயும் சம்பாதிச்ச காசு அடகு வைக்குறதுக்குப் பதில சித்துவீரனோட வூட்டுக்கு அடிச்சிக்கிட்டுப் போனுச்சு. கடைசியா ரண்டு வருஷத்துக்கு மின்னாடி சுந்தரிக்கு அபார்ஷன் ஆனப்போ ஒஸ்தியான வெலைக்கு ஒரு பிரிட்ஜையும், ஒரு வாஷிங் மெஷினையும் வாங்கிக் கொடுத்து சித்துவீரனெ சமாதானம் பண்ணுச்சு பாலாமணி. வெளியில பாக்குறப்போ மச்சாங்கார்ரேன் மச்சானுக்குப் பிரியமா செய்யுற மாதிரி தெரியும். சுந்தரி சொல்லுறப்பவும் அப்பிடித்தாம் சொல்லும், "எம்மட யண்ணேன் வேலைக்குப் போயி மொத மாசத்துச் சம்பளத்துல வாங்கிக் கொடுத்தது!"ன்னு. ரொம்ப நெருங்குன சொந்தப் பந்தங்களுக்கு மட்டுந்தாம் டாக்கடரு மச்சங்கார்ரேன் ஒரு அடிமையப் போல ஏம் கட்டெ அடிக்கிற மச்சாங்கார்ரேம் மின்னாடி இப்பிடியெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு நிக்குறாங்றது தெரியும்.
            கொஞ்சம் ஒடம்பு கனக்காம மட்டும் இருந்திருந்தா பிந்துவையும் தனக்குக் கட்டி வையின்னு சித்துவீரன் சொல்லிருந்தாலும் ஆச்சரியப்பட்டு இருக்குறதுக்கு எடமில்லே. ஒடம்பு கனமோ, தன்னோட இயலாதத்தனமோ சித்துவீரனுக்கு பிந்துவ பிடிக்காம போயிடுச்சு. அந்த வகையில குண்டா இருந்தது பிந்துவுக்குச் சவுகரியமா போயிடுச்சு. கலியாணம் ஆவாம இருக்குறத மட்டுந்தாம் அசெளகரியமா போயிடுச்சு.
            சித்துவீரனோட இயலாத தன்மைன்னா நடமாட்டத்துக்கான ஒடம்பும் முடியாத ஒடம்பு, படுக்கையிலயும் முடியாத ஒடம்பு. வெளிநாட்டுல இருந்தப்பவே அவனவனும் ரகசியமா தொடுப்ப வெச்சிக்கிட்டு அலைஞ்சப்போ அப்பிடி அலைஞ்சு கெத்து முடியாத ஏக்கம் சித்துவீரனுக்கு. எந்தக் கதையா இருந்தாலும் அதெ வெளியில சொல்லிப்புடலாம். இந்தக் கதையெ எப்பிடி வெளியில சொல்ல முடியும்? அதால தானொரு சுத்தமான  ஒழுக்கமுள்ள மனுஷன்னும், கலியாணம் கட்டிட்டுப் போற பொண்டாட்டி ஒருத்தியைத்தாம் கையால தொடுவேம்ன்னு கித்தாப்புப் பேசிட்டுத் திரிஞ்ச ஆளு. ஒருத்தனுக்கு ஒருத்திங்றதுதாங் தன்னோட கொள்கைன்னு அந்தக் கொள்கைக்குக் கொள்கைப் பிரச்சார ஆளாவும் இருந்துச்சு சித்துவீரன். அத்தோட நேரம் அந்தக் கொள்கைப்படி அத்து அப்பிடி இருந்தாலும், அத்துக் கட்டிட்டு வந்த சுந்தரியால அப்பிடி அந்தக் கொள்கைப்படி இருக்க முடியாதது ஒரு பெருஞ் சோகம்.
            ஒல்லியான ஆளுக்கு மட்டும் சுகர்ரோ, பிரஷரோ வாரக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி வந்தாலும் நாப்பது வயசுக்குள்ளார வாரக் கூடாதுன்னும் சொல்லுவாங்க. சித்துவீரனுக்கு ரண்டுமே நாப்பது வயசுக்குள்ள வந்துடுச்சு. படுக்கையில படுத்தா என்னிக்காவதுதாம் தண்டு கெளம்புது. மித்த நாள்கள்ல சுருண்டுக்கிடுது. தண்டு கெளம்புற நாளு சுந்தரிக்கு மூணு நாளுக்கான வெலக்கா இருக்கும். சித்துவீரனுக்குக் கலியாணம் ஆவுறதுக்கு மின்னாடியே அப்பிடித்தாம் இருந்துச்சு. அதெ யோசனையா கெடந்து வெளியில பொண்ணு கட்டி மானம் போயிடக் கூடாது, ‍அதெ நேரத்துல கொஞ்சம் வசதியான எடத்துல பொண்ண எடுத்து விசயம் வெளியில கசிஞ்சிடக் கூடாதுன்னு கனகச்சிதமா கணக்குப் பண்ணித்தாம் சுந்தரியக் கட்டுனது சித்துவீரன். அத்து பாக்குக்கோட்டை குடும்பத்துக்கும் அப்போ வசதியா போச்சுது, சித்துவீரனுக்கும் ஒரு வசதியாப் போச்சுது. அதுல சித்துவீரன் எதிர்பாக்காம நடந்ததுன்னா சுந்தரிக்கு ஆதிகேசவனோட இருந்த காதல்தாம். காதல்ல என்னா நல்லக் காதல், கள்ளக் காதல்ன்னு ரண்டு புள்ளைகளப் பெத்த பெற்பாடும் இன்னும் அந்தக் காதல காபந்து பண்ணி வெச்சிட்டு இருக்கு சுந்தரிங்றது ஊரு ஒலகத்துல ஒரு சிலருக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அந்த விசயத்துல சுந்தரியப் பொருத்தமட்டுல காதல்ங்றது அழியுறதில்ல, அத்தோட அத்து யாரு நெனைச்சாலும் அழிக்க முடியாத ஒண்ணுத்தாம்.
            நெலமெ இப்பிடி இருந்தப்போ சுந்தரி தன்னோட தங்காச்சிக்காகக் கண்ண கசக்கிட்டு இருந்தப்போ சித்துவீரனுக்கு அத்து ஒரு நல்ல சந்தர்ப்பமா பட்டுச்சு. இந்த நேரத்துல பொண்டாட்டிய இந்த விசயத்துல திருப்தி பண்ணா சரியா வந்துப்புடுவான்னு ஒரு கணக்கெ போட்டுச்சு. கொட்டாப்புலியூர்ல பீரோ வாங்கப் போறப்போ தொடர்பு உண்டான சலபதிராசனெ சித்துவீரனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. சித்துவீரன் சலபதிராசனப் பாத்தா போதும், ஒடனே சலபதிராசன் சித்துவீரனெ கடைக்கு அழைச்சிட்டுப் போயி டீத்தண்ணியையும், போண்டாவையும் வாங்கிக் கொடுக்குறாப்புல டாஸ்மாக்குக்கு அழைச்சிட்டுப் போயி குவார்ட்டரையும், சிக்கன் பகோடாவையும் வாங்கிக் கொடுக்குறதுதாங் வேல. சலபதிராசனுக்கு திருவாரூரு விளமல்ல வூடு, ப்ளாட்டுப் பாத்துக் கொடுக்குறதோடு, கலியாணத்துக்கு வேண்டிய பீரோ, கட்டிலு, சாப்பாட்டு மேசைன்னு வாங்கிக் கொடுக்குற வேல. தரகு வேலைன்னாலும் சடசடன்னு அதுல முன்னுக்கு வந்த ஆளு. யாரு எந்த வெலைக்குக் கேட்டாலும் அந்த வெலைக்கு எடமோ, பொருளோ சலபதிராசங்கிட்டெ தயாரு நெலையில இருக்கும். அதுதாங் சலபதிராசனோட சிறப்பே.

            சித்துவீரன் சமயத்துல பாக்குக்கோட்டையிலேந்து வாங்கி வந்து தாஞ் செஞ்சு வைச்சாப்புல வெச்சிருக்குற பீரோலு கட்டிலு வெலைக்குப் போவலைன்னா சலபதிராசனத்தாம் பிடிக்குறது. சித்துவீரன் சொன்ன வெலைக்கு பீரோலையும் கட்டிலையும் வாங்கிகிட்டு அதெ வுட கூட விக்குறது சலபதிராசனுக்கு கை வந்த கலை. பொதுவா கட்டிலு பீரோங்றது கெராமத்துல ஒரு வெலைக்கு விக்கும்ன்னா டவுன்ல வேற ஒரு ‍வெலைக்கு விக்கும். ஆளு பாத்து விக்குறதுல இருக்கு சூட்சமம். கவர்மெண்ட் வேலை பாக்குற அசாமியோ, யேவாரத்துல இருக்குற அசாமியோன்னா காசு கூட போனாலும் பரவாயில்ல, வேல தரமா இருக்கணும்பாம். சாதா ஆசாமின்னா சரக்குத் தரமா இல்லாட்டியும் பரவாயில்ல காசுக்கு கட்டுபடியா ஆன போதும்பாம்.
            சலபதிராசங்கிட்டெ வாடிக்கை பண்ணுற ஆளுங்க பலரும் கவர்மெண்டு வேலையிலயும், யேவாரத்துலயும் இருக்குற அசாமிங்க. அவங்களோட கொணப்பாடு அறிஞ்சு பேசிப்புட்டா போதும் ஆயுசுக்கும் அந்த ஆளுகிட்டெ சாமாஞ் செட்ட வாங்குனாத்தாம் திருப்திபடும் அவங்களுக்கு. அத்தோட யாருகிட்டெ சாமாஞ் செட்டோ பொருளோ வாங்குறோமோ அவுங்களோட ராசிக் கணக்கையும் பாக்குமுங்க அந்த மாதிரி ஆளுங்க. அந்த வெதத்துலயும் சலபதிராசனுக்கு யோகந்தாம். சலபதிராசனங்கிட்டெ எடமும், பொருளும் தரகு பண்ணி வாங்குன ஆளுங்க எல்லாம ஏறுமுகத்துல கொழிச்சதுங்க. அதால எந்தப் பொருளையும் தள்ளி வுடுறதுல செருமமெ கெடையாது சலபதிராசனுக்கு. செருமம்ன்னா பொருளு பத்தலைங்றதுதாம்.
            சமயத்துல சித்துவீரன் சலபதிராசங்கிட்டெ சல்லிசா பீரோ, கட்டில வாங்கியாந்து வித்துப்புட்டு பெறவு நெதானமா பணத்தெ கொடுத்திருக்கு. முப்பதினாயிரம்ன்னு ஒத்துக்கிட்டு வாங்கிட்டுப் போன பொருளுக்கு இருபத்து எட்டுனத்தாயிரத்தக் கொடுத்தாலும் சலபதிராசன் ஒண்ணும் சொல்லுறதில்ல. இவ்வளவு அநியாயத்துக்கு நல்லவனா இருக்குற ஒருத்தனெ தன்னோட வாழ்நாள்ல பாக்கவே இல்லேங்றது சித்துவீரனோட நெனைப்பு. இப்படிப்பட்ட ஒருத்தன் மச்சாங்கார்ரான வந்தா பலவெதத்துல ஒதவியா இருக்கும்ற நெனைப்புல சித்துவீரன் சலபதிராசனெ தன்னோட கொழுந்தியா பிந்துவுக்குக் கோத்து விடப் பாத்துச்சு.
            அதுக்கு சலபதிராசன் ஒத்துக்கிடறாப்புல ஒரு சூழ்நெலையும் அமைஞ்சுச்சு. சலபதிராசன் கண்டபடிக்கு பைக்குல அலைஞ்சதுல மூலநோயி வந்துப் போச்சு. அத்து என்னவோ யாருகிட்டெ சிசிச்சை பண்ணியும் சரியாவாம போனதுல இந்த சேதி தெரிஞ்ச சித்துவீரன் சலபதிராசனெ பாக்குக்கோட்டை பாலாமணி கிளினிக்குக்குக் கொண்டு போச்சுது. பாலாமணி பாத்த வைத்தியத்துல இருவது நாள்ல கொணம் கண்டுச்சு சலபதிராசனுக்கு. அத்தோட சலபதிராசனுக்கு பைக்குலயே அலையுறதால இடுப்பு டிஸ்க்கு கொஞ்சம் நகர்ந்து இருந்ததாவும் அதெ ஆபரேஷன் பண்ணணும்னு இங்கிலீஷ் டாக்கடருங்க சொன்னதையும் அந்த நேரத்துல எடுத்து விட்டுச்சு சலபதிராசன். அதுக்கு எதுக்கு ஆபரேஷன்னு பாலாமணி அதையும் ஆயுர்வேத மருந்துலயும், எண்ணெய்லயும் ஆறு மாசத்துல கொணம் பண்ணி வுட்டுச்சு. என்னா ஒண்ணு காசியத்தாம் ஒண்ணுக்கு நூத்தா கறந்து எடுத்துப்புடுச்சு பாலாமணி. பணத்தெ கறந்து எடுத்தாலும் கொணம் கண்டதுல சலபதிராசனுக்கு சந்தோஷம் தாங்கல. அத்தோட சலபதிராசனோட அப்பங்காரரு, அம்மாக்காரின்னு ஆளுக்கொரு வெயாதி கழுத்துவலி, முதுகுவலின்னு. அதுக்கும் பாலாமணிதாம் வைத்தியம்.
            இப்படிப்பட்ட நெலையிலத்தாம் சித்துவீரன் சலபதிராசனெ பிடிச்சுப் போட்டுச்சு. சலபதிராசனுக்கும் பாலாமணி மச்சாங்காரனா வாரதால மிச்சமாவப் போற வைத்தியக் கணக்குல கவனம் போச்சுது. இப்பயும் பாலாமணிகிட்டெ மருந்து வாங்கிச் சாப்புடலன்னா சலபதிராசனுக்கு இடுப்பு வலியோ, முதுகுவலியோ கண்டுடுது. அதுக்கே மாசத்துக்கு மூவாயிரத்துச் சில்லரை செலவானுச்சு. மொத்தக் குடும்பத்துக்கும் பாத்தா மருந்துக்கு ஆவுற பத்தாயிரம் சில்லரை மிச்சமான்னா வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருவதினாயிரம்லா மிச்சமாவுதுன்னு பிந்துவ கட்டிக்கிட சம்மதிச்சிது சலபதிராசன்.
            சித்துவீரன், "பொண்ணுதாங் கொஞ்சம் குண்டு!"ன்னு சொன்னப்ப கூட, "இப்போ இருக்குற பொண்ணுங்க கலியாணம் ஆன பெற்பாடு குண்டாத்தானே ஆவப் போவுதுங்க. அதெ யாரு தடுக்க முடியும் சொல்லு? ன்னா ஒண்ணு கலியாணம் ஆயி குண்டு ஆவுறதுக்கு மின்னாடி குண்டே ஆயியே கலியாணம் கட்டிட்டு வாரப் போவுது. அம்மாம்தானே வித்தியாசம்!"ன்னுச்சு சலபதிராசன். அந்தப் பதிலெ கேட்டதும் சித்துவீரன்குச் சந்தோஷம்ன்னா சந்தோஷம். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கா கொறைதாம்.
            இதெ பத்தி சித்துவீரன் மொதல்ல சுந்தரிக்கிட்ட சொன்னப்போ சுந்தரிக்கும் தாங்க முடியாத சந்தோஷம். சுந்தரி இந்த விசயத்தப் பத்தி சரசு ஆத்தாகிட்டெ சொன்னப்போ சரசு ஆத்தாவுக்கும் தாங்க முடியாத சந்தோஷம். சரசு ஆத்தா இந்த விசயத்தப் பத்தி ராசாமணி தாத்தாகிட்டெ சொன்னப்போ அதுக்கும் தாங்க முடியாத சந்தோஷம். ராசாமணி தாத்தா இந்த விசயத்தப் பத்தி பாலாமணிகிட்டெ சொன்னப்போ பெரிசா சந்தோஷம் ஏதுமில்லன்னாலும் எப்படியோ கலியாணம் ஆயி தங்காச்சி போன செரித்தாம்ன்னு ஒரு நெனைப்பு. அத்தோட தங்காச்சிக்கு மாப்புள்ளகார்ரேம்ங்றவெம் சித்துவீரன் சொல்லி வுட்டதுங்ற சேதி தெரிஞ்சதுமே யாரும் மறுப்பு ஏதும் சொல்லல.
            சலபதிராசன் வூட்டுலேந்தும் பாக்குக்கோட்டை சிங்கப்பூரு காலனிக்குப் போயி பொண்ணப் பாத்தாங்க. திருப்திதாம் அவுங்களுக்கு. பாக்குக்கோட்டையிலேந்தும் சனங்க சலபதிராசன் வூட்டுக்குப் போயி பாத்தாங்க. பாக்குக்கோட்டை சனங்களுக்கும் திருப்தித்தாம். பின்னெ இருக்காதே என்னா! கீழே ஒரு வூடு, மேல மாடியில ரண்டு வூடு வாடகைக்குன்னு வூடு இருக்கு. வூட்டைச் சுத்தி இன்னும் நாலு வூட்டக் கட்டிப் போடலாங்ற அளவுக்கு எடம் வேற. ப்ளாட்டு வாங்கி விக்குறதலயும், சாமாஞ் செட்டுகள வாங்கி விக்குறதுலயும் சலபதிராசனுக்கு கை நெறைய காசு பொரளுதுன்னு தெரிஞ்ச ஒடனேயே ராசாமணி தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லாச்சு. அத்தோட சலபதிராசன் ஒத்தப் புள்ளெ. மாமானாரு மாமியாரு ஒடம்புக்கு வேற முடியாம இன்னிக்கோ நாளைக்கோன்னு கெடக்குறாங்க. நாளைக்கே போயிச் சேந்தாலும் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே. ஒடம்பு முடியாத மாமானாரு மாமியாருங்றதால மாமியாரு தொல்லைங்றது அறவே இருக்காதுன்னு பல வெதத்துல சலபதிராசன் மாப்புள்ளையா வாரது பாக்குக்கோட்டை சனங்களுக்குத் திருப்திப்பட்டுப் போச்சு. ராசாமணி தாத்தா தனக்குத் தெரிஞ்ச வகையில அரையும் கொறையுமா சாதகத்தெ பாத்ததுல பொருத்தமும் திருபதிப்பாடா இருந்துச்சு. மாப்புள்ளையப் பாத்த அன்னிக்கு ஒரு தேதிய நிச்சயம் பண்ணி முகூர்த்தஓலைக்கு ஏற்பாடு ஆயிடுச்சு.
            முகூர்த்த ஓலை பாக்குக்கோட்டையில சிங்கப்பூரு காலனி வூட்டுலயே பண்ணிப்புடலாமுன்னு ஏற்பாடெல்லாம் பெரமாதமா பண்ணி வூட்டுக்கு மின்னாடி பெரிய பந்தல்லாம் போட்டு சகசோதியா வேலை நடந்துகிட்டு இருந்துச்சு. சித்துவீரன்தான் எல்லா வேலையையும் மின்னாடி நின்னுப் பாத்துச்சு. பந்தல் போடுறதிலேந்து, சமையலுக்கு ஆளுகள வடவாதியிலேந்து அழைச்சாந்துப் போனது வரைக்கும் எல்லாம் சித்துவீரனோட ஏற்பாடு.
            "நாம்ம ஒரு ஆளு மூத்த மருமவ்வேன்னு இஞ்ஞ இல்லன்னா இந்தக் குடும்பம் என்ன கதிக்கு ஆளாவுறது? அவ்வேம் மச்சாங்காரனெ டாக்கடருக்குப் படிக்க வெச்சு ஆளாக்கி, இப்போ கொழுந்தியாளுக்குத் தாட்டிட்டுப் போன கலியாணத்தெ முகூர்த்தோல வரைக்கும் கொண்டாந்து நிப்பாட்டி, யப்பப்பா இந்தக் குடும்பத்துக்கு ஒழைச்ச ஒழைப்பென்ன? பட்ட பாடென்ன?"ன்னு சித்துவீரன் பாட்டுக்கு அவித்து விட்டுக்கிட்டு இருந்துச்சு.
            முகூர்த்தோலைக்கு லாலு மாமா, முருகு மாமா, சங்கு, ஆனந்தன் வரைக்கும் எல்லாரும் ஆஜரு. பக்கத்துப் பக்கத்து வூட்டு சனங்களும் வந்து குமிஞ்சிட்டுங்க. நேரம் வேற நெருங்கிட்டு இருந்துச்சு. சரியான நேரத்துக்கு வார வேண்டிய மாப்புள்ள வூட்டுச் சனங்க மட்டும் வாரல.
            "ன்னடா இத்து நேரம் கடந்துட்டுப் போவுது? எலே சித்துவீரா மாப்புள்ள வூட்டுச் சனங்களுக்கு போன போட்டுக் கேளுடா?"ன்னு உசுப்பி வுட்டுச்சு லாலு மாமா. சரித்தாம்ன்னு சித்துவீரன் தங்கிட்டெ இருந்த செல்போன்ல அழைச்சிக் கேட்டாக்கா செல்போன்ல அழுகைச் சத்தந்தாம் கேக்குது. ஒரு வழியா அழுகைச் சத்தம் நின்னு சேதியச் சொன்னதுல, வேன்ல கெளம்பி வர வழியில சலபதிராசனுக்கு மாரடைப்பு வந்து உசுரு பிரிஞ்சிப் போச்சுங்றது தெரிஞ்சிது. முகூர்த்‍தோலைக்குப் பண்ணுன சாப்பாடெல்லாம் ஆறிப் போயி வீணாப் போறதுக்குள்ள எதாச்சிம் காப்பகமா பாத்துக் கொடுத்துப்புடுவோம்ன்னு கொண்டு போயி அதெ கொடுத்துப்புட்டு, சித்துவீரனும், பாலாமணியும் சலபதிராசனோட சாவுக் காரியத்துக்குப் போயிட்டு வந்ததோட செரி. இந்தத் தகவல் வேற ஊரு ஒலகத்துக்குத் தெரிஞ்சிப் போயி பிந்துவ வந்துப் பாத்துட்டு பொண்ண பிடிக்கலைன்னு சொன்ன நெலமெ மாறி, வந்துப் பாக்காமலே பொண்ணு வாணாம்ன்னு பாக்குற மாப்புள்ள பயக்காரனெல்லாம்‍ சொல்ல ஆரம்பிச்சிட்டாம்.
            இப்பிடித்தாம் ஆளாளுக்கு பிந்துவுக்கு மாப்புள்ள பாத்து அலுத்துப் போயிருந்ததுங்க சனங்க ஒவ்வொண்ணும்.
*****


29 Jun 2020

பார்த்தவன் பார்க்காம போறான்!

செய்யு - 491

            லாலு மாமா வந்து பொண்ணு கேட்டுட்டப் பெறவு முடிவெடுத்து அதுக்கு ஒரு பதிலச் சொல்ல வேண்டிய நெலை உண்டாயிடுச்சு. ஒண்ணு பொண்ணு உண்டுன்னு சொல்லணும், யில்லாட்டி யில்லன்னு சொல்லணும். பிந்துவுக்கு மாப்புள்ளப் பாத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவமா இருந்துச்சு. ஒட்டுமொத்த குடும்பமே சேர்ந்து ஆளாளுக்குப் பொண்ணு பாத்துச்சுங்க பிந்துவுக்கு. அப்பிடிப் போயி பாத்த எடமெல்லாம் நசுங்குன சொம்பா திரும்பி வர்ற வேண்டியதா இருந்துச்சு.
            பிந்துவுக்கு மாப்புளப் பாத்த கதையச் சொன்னா ரொம்ப வேடிக்கையும் வினோதமாவும் இருக்கும். அண்ணங்கார்ரேம் கவர்மெண்டு டாக்கடர்ரா இருக்கானேன்னு அதெ நெனைச்சித்தாம் சங்கதியக் கேள்விப்பட்டுப் பொண்ண பாக்க வந்தானுவோ நெறையப் பேருங்க. வந்தவனுவோ மொதல்ல வூட்டைப் பாத்தானுவோ. வூடு டாக்கடரு வூடு மாதிரியே இல்லன்னு மொதல்ல கொறையச் சொல்லிட்டு மொதல்ல பாக்க வந்தவனுவோ ஓடுனானுவோ. அப்போ பாக்குக்கோட்டை மதுக்கடி முக்கத்துல ரண்டாயிர ரூவா வாடகையில இருந்துச்சுங்க பாக்குக்கோட்டை சனங்க. டாக்கடர்ர இருந்துகிட்டு மாசத்துக்கு அறுபதினாயிரம், எழுபதினாயிரம் சம்பளத்த வாங்கிக்கிட்டு இப்பிடியா ஒரு வூட்டுலயா குடியிருப்பானுவோ மனுஷங்கன்னு பொண்ணு பாக்க வந்தவனுங்களுக்கு ஒரு நெனைப்பு. பொண்ண கட்டிக் கொடுக்குறதுக்காக அண்ணங்கார்ரேம் கவர்மெண்டு டாக்கடருன்னு பொய்ய அவுத்து வுடுறானுவோ போலருக்குன்னு சந்தேகப்பட்டுக்கிட்டு அவனுவோ ஓடுனானுவோ. அத்து பாலாமணி கவர்மெண்டு டாக்கடர்ர ஆன ஆரம்ப கால கட்டம். சென்னைப் பட்டணத்துல அரும்பாக்கத்துக் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில வேலைக்குப் போயி ஆறெழு மாசம் ஆயிருக்கும்.
            சென்னைப் பட்டணத்துல ஒரு அறைய எடுத்துத் தங்கிக்கிட்டு அங்கேயிருந்து வேலைக்குப் போயிட்டு இருந்துச்சு பாலாமணி. வாரத்துல வெள்ளிக்கெழமெ போறந்தா மொத வேலையா கெளம்பி பாக்குக்கோட்டைக்கு வந்துப்புடும். குடும்பத்துச் சனங்களப் பாக்க அம்புட்டு பாசமான்னு கேட்டீங்கன்னா, அத்து பாக்குக்கோட்டை பெரிய பஜாரு தெருவுல வெச்சிருந்த கிளினிக்க வந்துப் பாக்க. வேலை கெடைச்சதுக்குப் பெறவு பாக்குக்கோட்டையில வாடிக்கையா தங்கிட்ட வைத்தியம் பாக்குறவங்கள வுட்டுப்புடக் கூடாதுன்னு வாரம் முடிஞ்சா பாக்குக்கோட்டை வர்றது அதுக்கு வேல.
            பாலாமணிகிட்டெ கொழந்தை பொறக்கணும்னு வர்ற ஆளுங்க நெறைய. ஒரு காலத்துல வண்டி வண்டியா கொழந்தைப் பெத்துக்கிட்ட சனங்க, இப்போ ஒத்தக் கொழந்தையப் பெத்துக்கவே வண்டி வண்டியா ஏறி அலைய வேண்டியதா இருந்ததால பாலாமணி காட்டுல மழையா இருந்துச்சு. கொழந்தைப் பெத்துக்கணும் வர்றவங்களுக்கு முடிஞ்சா வைத்தியம் மூலமா கொழந்தைப் பெத்துக்க வைக்கிறது, இல்லன்னா ஒரு கொழந்தைய வெல பேசி வாங்கி வுடுறதுன்னு ரண்டு வெதமா அந்த ஆளுகளுக்கு வேல பண்ணிட்டு இருந்துச்சு பாலாமணி. வைத்தியம் பண்ணாலும் காசி, புள்ளய வெலை பேசி வுட்டாலும் காசின்னு அதுல ரண்டு வெதமாவும் பாலாமணிக்கு வருமானம் பொரண்டுச்சு. அடுத்ததா மூட்டுவலி, இடுப்பு வலி, ஒடம்புவலின்னு வர்ற ஆளுங்க நெறைய. அவுங்களுக்குக் காய்ச்சுன எண்ணெதாம் மருந்து. அந்த எண்ணெய்கள இப்போ பாலாமணியே காய்ச்ச ஆரம்பிச்சதால அதுலயும் நல்ல காசிப் பொரண்டுச்சு. ஆயிரம் ருவா செலவு பண்ணி மருந்தையோ, எண்ணெயையோ காய்ச்சுனா அத்தெ பத்தாயிரம் ரூவாயிக்கு வித்துப்புடலாம். அந்த மருந்துக்கு பாலாமணி வைக்குறதாங் வெல. ஒடம்பு முடியாம வந்து நிக்குறவேம் வெலையில பேரத்தப் பேசாம சொன்ன காசிக்கு வாங்கிட்டுப் போயிட்டே இருந்தாம்.
            சனி, ஞாயித்து ரண்டு நாள்லயும் பகல்ல கிளினிக்கப் பாத்தா, ராத்திரி முழுக்க வூட்டுச் சமையல்கட்டுல எண்ணெய்யக் காய்ச்சுறதுதாம் வேல பாலாமணிக்கு. விடிய விடிய காய்ச்சுற எண்ணெய்க்கு சரசு ஆத்தாவும், பிந்துவும் தொணை இருக்கணும். பாலாமணி பாக்குக்கோட்டை வந்தா வூட்டுல இருக்குற ரண்டு பொம்பளைக்கும் ராத்தூக்கம் ரண்டு நாளைக்குப் போயிடும். "இவ்வேம் ஏம்தாம் பாக்குக்கோட்டைக்கு வர்றாம்? வந்து இப்பிடி உசுர எடுக்குறாம்? இந்தப் பயெ ரண்டு நாளுக்கு வந்து இருந்துட்டு வந்து வாங்குற வேலைக்கு நாம்ம மித்த அஞ்சு நாளும் ரெஸ்ட்டு எடுக்கணும் போலருக்கு!"ன்னு சரசு ஆத்தா வெளிப்படையாவே சொல்லிப்புடுச்சு.
            "தூக்கத்தப் பாத்தீன்னா காசிய எப்போ பொரட்டுறது? பொண்ண எப்பிடிக் கொடுக்குறது?"ன்னு கேக்கும் பாலாமணி.
            "ஆம்மாம் சுந்தரிய காசிப் பணத்தெ வெச்சிக்கிட்டா கட்டிக் கொடுத்தேம்? யில்ல நீயி டாக்கடரு ஆயித்தாம் கட்டிக் கொடுப்பேன்னு வெச்சிருந்தேமா? அதது தலையில என்னத்தெ எழுதிருக்கோ அதுபடிக்கு ஆவுது. இனுமேலா இவளுக்குன்னு ஒருத்தம் பொறக்கப் போறாம்? பொறந்தவேம் வந்தச் சேர வேண்டியதுதாங் பாக்கி. என்னவோ இவ்வேம் டாக்கடராயித்தாம் பொண்ணையே கலியாணத்த பண்ணிக் கொடுக்கப் போறதா நெனைக்குறாம்!"ன்னு சரசு ஆத்தா முணுமுணுத்துக்கும்.
            சென்னைப் பட்டணத்துலேந்து வர்றப்போ ச்சும்மா வாராது பாலாமணி. அந்த வாரம் முழுக்கப் போட்டுக்கிட்ட துணிமணிகளெ ஒரு பெரிய டிராவல் பேக்குல கொண்டாந்துடும். ராத்திரி எண்ணெய்யக் காய்ச்சுறதுல ரண்டு பொம்பளைகளும் தொணைக்கு நின்னுப்புட்டு, பகலு பொழுது பூரா வூட்டுச் சமையலையும் பாத்துக்கிட்டு அத்தனெ துணிமணிகளையும் தொவைச்சு, காய வெச்சு, இஸ்திரி போட்டு வெச்சுப்புடணும். திரும்ப அதெ டிராவல் பேக்குல அழுக்கா வந்து துணிக தொவைச்சு மடிச்சு போவும். மொத்ததுல பொம்பளை ரண்டு பேத்துக்கும் பாலாமணி ஊருக்கு வந்தா போதும் பெண்டு நிமுந்துடும். பாலாமணி இப்பிடி படுத்துறப் பாட்டப் பாத்து சீக்கிரமே கலியாணம் ஆயிப் போன தேவலாம் போல ஆயிடுச்சு பிந்துவுக்கு. வர்ற மாப்புளக்காரந்தாம் ஒருத்தனும் அமைய மாட்டேங்றாம்.

            பாக்குக்கோட்டையில இருந்து கிளினிக்கப் போட்டு நெறைய பேர்ர சேத்து வெச்சிருந்துச்சு பாலாமணி. அதால பாக்குக்கோட்டைக்கு வந்து இருக்குற சனி, ஞாயிறுன்னு ரண்டு நாள்ல வைத்தியம் பாத்து முடிக்கிறதெ செருமங்ற அளவுக்குக் கூட்டமா இருந்துச்சு. அதால ஒரு வாரம் பாக்குக்கோட்டைக்கு வர்ற முடியாம இருந்தாலும் பாலாமணிக்கு எதையோ இழந்தாப்புல ஆயிடும்.  பாக்குக்கோட்டைக்கும், சென்னைப் பட்டணத்துக்கும் வந்துப் போறதே பேரலைச்சலா இருக்கும். அதுக்கே வந்துட்டுப் போற நாளு, போயி சேர்ற நாளுன்னு ரண்டு நாளு பேயாம கெடந்தாத்தாம் ஒடம்பு ஒடம்பா இருக்கும். பஸ்ல பன்னெண்டு மணி நேரம் வந்துட்டு, பன்னெண்டு நேரம் போறதுல ஒடம்பு சூடு கண்டு போயிடும். கண்ணுல்லாம் சமயத்துல பொங்கிப் போயிடும். அது எதெ பத்தியும் பாலாமணி கண்டுக்கிடறதில்ல. ஒடம்புக்கு எது கண்டாலும் டாக்கடர்ரா இருக்கறதால ஒடனே ஒரு மாத்திரைதாம். ஒடம்பு பாவம் என்ன பண்ணும்? அந்த மாத்திரைய வாங்கிக்கிட்டுச் சொன்னா சொன்னபடிக்குக் கேக்கும்.
            சென்னைப் பட்டணத்துல பாலாமணிக்குக் காலையில வேலைக்குப் போனா மூணு மணி வாக்குல அறைக்கு வந்துப்புடலாம். அதுக்கு மேல ச்சும்மா இருக்குற நேரத்த எதுக்கு வுடணும்னு பாக்குக்கோட்டையில கிளினிக்க போட்டது போல அரும்பாக்கத்துல மாடி மேல ஒரு எடத்தப் பிடிச்சி அங்க ஒரு கிளினிக்கப் போட்டுச்சு. கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு தங்கிட்டெ வைத்தியம் பண்ண வர்ற ஆளுங்களப் பாத்து வெச்சிக்கிறது. கொஞ்சம் காசி செலவு பண்ண வசதியான ஆளுங்கன்னு தெரிஞ்சா போதும் அவுங்கள வளைச்சிப் பிடிச்சிக்கிறது. கிளினிக்குக்கு வந்தா நல்ல வெதமா வைத்தியம் பாத்து பண்ணி வுடலாம்ன்னு ஒரு வார்த்தையே அப்பிடியே அடிச்சி விடுறது. இம்மாம் கூட்டத்துல என்னத்தெ பாத்து சரியா வைத்தியம் பண்ண முடியுதுன்னு அதுக்குத் தகுந்தாப்புல மொகத்த பரிதாபமா வெச்சுக்கிறது. அதெ பாத்துட்டு வைத்தியம் பண்ண வந்து ஆளு எப்பிடியே வியாதி கொணம் கண்டா போதும்ன்னு கிளினிக்குக்கு வருவாம். அவனெ வெச்செ அவனோட ஒறவுக்காரன், அக்கம்பக்கத்து வூட்டுக்காரன்னு ஆளுகளப் பிடிக்கிறது. அப்படி வர்ற ஒறவுக்காரன், பக்கத்து வூட்டுக் காரனெ வெச்சு ஒறவுக்காரனோட ஒறவுக்காரன், பக்கத்து வூட்டுக்காரனோட பக்கத்து வூட்டுக்காரன்னு வரிசையா பிடிக்கிறது. இப்பிடிச் சென்னைப் பட்டணத்துலயும் ஆளுகளப் பிடிச்சிட்டு இருந்துச்சு பாலாமணிக்கு.
            கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலேந்து மூணு மணிக்கு அறைக்கு வந்தா ஒரு மணி நேரம் படுத்துக் கெடந்தா, அடுத்த ஒரு மணி நேரத்துல ஆயுர்வேதம் சம்பந்தமா எதையாச்சிம் எழுதுறது. எழுதுனதை பத்திரிகைக்கு அனுப்பி வுடுறதுன்னு ஒரு வேல. அதுல எதாச்சிம் வருமானம் வருதான்னு பாக்குறது. அத்தோட ஆயுர்வேதம் சம்பந்தமா புத்தகம் எழுதுறது. நரைத்த முடி வெளுப்பாக ஆயிரம் ஆயிர்வேத வழிமுறைகள், குண்டாக இருப்போர் இளைக்க நூறு ஆயுர்வேத மருத்துவ முறைகள், குழந்தைப் பேறுக்கு ஆயுர்வேதம் சொல்லும் ரகசிய முறைகள்ன்னு எதாச்சிம் தலைப்புல எழுதி புத்தகத்தப் போட்டு அதெ கிளினிக்குக்கு வர்ற ஆளுங்களுக்கு மருந்துகளோடு சேர்த்து விற்பனை பண்ணுறதுன்னு அதலுயும் ஒரு வருமானம் பாக்குறது. இப்பிடி எழுதிக்கிட்டெ இருந்து, அஞ்சு மணி ஆச்சுன்னா கிளினிக்குக்குக் கெளம்பிடறது. அங்கப் போனா வைத்தியம் பண்ண வர்றவங்களப் பாத்துட்டு அறைக்குத் திரும்ப ராத்திரி பத்து மணியும் ஆவும், பதினோரு மணியும் ஆவும். இப்படியா பாலாமணிக்கு கவர்மெண்டு சம்பளம் ஒண்ணு, சென்னைப் பட்டணத்துக் கிளினிக் வருமானம் ரண்டு, பாக்குக்கோட்டை கிளினிக்க வருமானம் மூணு, செஞ்சு விக்குற மருந்து எண்ணெய்கள வருமானம் நாலுன்னு நாலு வெதமான வழிகள்ல நாலா வெதமான வருமானம் வந்துக்கிட்டு இருந்துச்சு.
            சென்னைப் பட்டணத்துல அறைக்கு ஒரு வாடகெ, அங்க வெச்சிருக்குற கிளினிக்குக்கு ஒரு வாடகெ, இங்க பாக்குக்கோட்டையில வூட்டுக்கு ஒரு வாடகெ, பாக்குக்கோட்டை கிளினிக்கு ஒரு வாடகென்னு நாலு வாடகையால்ல கொடுக்க வேண்டிக் கெடக்குன்னு பாலாமணி நெனைச்சதால மதுக்கடி முக்குல ரண்டாயிரம் வாடகையில இருந்த வூடே போதும்ன்னு ஆரம்பத்துல நெனைச்சிடுச்சு.  அப்போ அதுக்கு வாடகெ காசிய பதினோராயிரம் சொச்சம் வந்துச்சு. அத்தோட சென்னைப் பட்டணத்துலேந்து வந்துட்டுப் போவ அத்து ஒவ்வொரு தவாவுக்கும் ஆயிரம் ரூவாய்ன்னு மாசத்துக்கு நாலாயிரம் ஆயிடுச்சு. காசிய சம்பாதிக்கிறதுல எவ்ளோ கவனமோ, அதெ அளவுக்கு காசியச் செலவு பண்ணுறதுலயும் கவனமா இருந்துச்சு பாலாமணி. இப்போ வாடகை வூடு சரியில்லாமத்தாம் தங்காச்சியப் பொண்ணு பாக்க வர்றவேம் ஓடிப் போறாம்ன்னு நெனைச்சு மதுக்கடி முக்குலேந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துல இருந்த சிங்கப்பூர் காலனியில ஆறாயிரத்து ரூவா வாடகைக்கு ஒரு வூட்டைப் பிடிச்சது. தங்காச்சிக்குக் கலியாணம் ஆவுற வரைக்கும் அந்த வூட்டுல இருக்குறது. பெறவு கலியாணம் ஆயிட்டா ராசாமணி தாத்தாவையும், சரசு ஆத்தாவையும் பழையபடிக்கு மதுக்கடி முக்கு வூட்டுக்கெ அனுப்பிப்புடுறதுன்னு திட்டம் பாலாமணிக்கு.
            சிங்கப்பூரு காலனி வூடு நல்ல பெரிய வூடு. வூட்டுக்கு மின்னாடி பெரிய பொழக்கமான எடம். சுத்திலும் இருந்தவங்க பெரிய பெரிய வேலையில இருந்தவங்களா வேற இருந்தாங்க. அந்த எடத்துல இருக்குறதே பாலாமணிக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. அத்தோட மதுக்கடி முக்கு வூட்டுல இருந்ததெ வுட இந்த வூட்டுல மருந்து, எண்ணெய் காய்ச்சுறதெல்லாம் ரொம்ப வசதியா இருந்துச்சு. எடப்பொழக்கந்தாம் அதுக்குக் காரணம். சமையக்கட்டெ கூடத்தைப் போல ஒரு பெரிய அறையா இருந்துச்சு. வசதியா இருந்தாலும் அதுல ஒரு சின்ன பெரச்சனையும் உண்டாயிடுச்சு. மதுக்குடி முக்குல இருந்த சனங்க யாரும் மருந்து காய்ச்சுறப்பையே, எண்ணெய்யைக் காய்ச்சுறப்போ நாறுதுன்னு முகத்தெ சுளிச்சிக்கிட்டது கெடையாது. சிங்கப்பூரு காலனியில இருந்த சனங்க அப்பிடியிலல். மொகத்தச் சுளிச்சிக்கிட்டாங்க. பக்கத்து வூடுகளோட மொகச்சுளிப்போடு ரொம்ப நாளு அந்த எடத்துல இருக்க முடியாதுங்றதால, அந்த வூட்டுல இருந்த சனங்களுக்கு எல்லாம் சத்து மாத்திரை, தலைமுடி நல்லா வளர்றதுக்குன்ன எண்ணெ, தொலு மினுமினுப்புக்கான மாத்திரைன்னு எதாச்சிம் ஆளெ பாத்து தள்ளி வுட்டதுல அந்தச் சனங்க மருந்துக் காய்ச்சுற நாத்தத்தெ பொறுத்துக்கிட ஆரம்பிச்சிட்டாங்க. இப்பிடி ஆளுகளெ சமாளிக்குறதலய பாலாமணி கில்லாடியா இருந்துச்சு.
            சிங்கப்பூரு காலனி வந்த பெற்பாடு ராசாமணி தாத்தா தன்னோட தோதுல ஒரு சாதகத்தப் பாத்து ஒரு மாப்புள்ள பையனக் கொண்டாந்தாரு. ராசாமணி தாத்தா சோசியக்காரரா அவதாரம் எடுத்து நடந்த மொத நல்ல காரியம்ன்னா அதாங். அந்த நல்ல காரியமும் கை கூடல. வந்துப் பாத்தவேம் பொண்ணோட சரீரத்தப் பாத்து ஓடுனவந்தாம் திரும்பி வாரல. வூடு சரியில்லன்னா அதெ சரி பண்ணியாச்சு, ஒடம்பு கனம்தாம் பெரச்சனைன்னா அதெயும் சரி பண்ணிப்புடுவோம்ன்னு பாலாமணி அதுக்கு என்னென்னவோ மருந்துகளக் காய்ச்சிக் கொடுத்துப் பாத்துச்சு. ஒண்ணும் வேலைக்கு ஆவல. அந்த மருந்துகள உக்காந்துக் காய்ச்சுனதுல சரசு ஆத்தாவும், பாலாமணியும் எளைச்சுப் போனதுதாம் மிச்சம், பிந்து அது பாட்டுக்குப் பெருத்துக்கிட்டே போனுச்சு. ஊருல யாரு யாருக்கோ மருந்துக் கொடுத்து கொணப்படுத்துற தன்னால தன்னோட தங்காச்சியோட பெரச்சனைக்கு மருந்து கொடுத்து கொணம் பண்ண முடியலன்னு அது ஒரு கவலெ பாலாமணிக்கு.  
            சரசு ஆத்தாவும் அங்க இங்கன்னு வெசாரிச்சு ஒரு மாப்புள்ளப் பையன கொண்டாந்துச்சு. வந்துப் பாத்தவேம் பொண்ணு ஒல்லியா இருந்தா கட்டிப்பேம், குண்டா இருக்குறதால அம்பது பவுனு போட்டா கட்டிக்கிறதா சொன்னாம். செரின்னு அங்கன இங்கனன்னு கடன ஒடன வாங்கி, அம்பது பவுனப் போட்டு கட்டி வெச்சிக் கதையெ முடிச்சிப்புடலாம்ன்னுப் பாத்து அவ்வேங்கிட்டெ என்ன வேல பாக்குறேன்னு கேட்டா, வேல யில்லாம ச்சும்மா இருக்குறதாவும், கலியாண ஆவுற நேரம் நல்ல நேரமா இருந்தா வேல கெடைச்சிடும்ன்னு சொன்னாம் பாருங்க, பாலாமணிக்கு வந்தக் கோவத்துல, "ஓடிப் போயிடுடா மொதல்ல. இல்லாட்டி எதாச்சிம் மருந்தெ கொடுத்தெ கொன்னுப்புடுவேம்!"ன்னு சத்தம் போட்டதுல தெறிச்சி ஓடுனவந்தாம்.
            இப்படியா பொண்ணு பாக்குற எடத்துலயே பிந்துவுக்கு எல்லாம் முடிஞ்சதே தவுர மேக்கொண்டு தொடரல. இந்தச் சங்கதிய எல்லாம் கேள்விப்பட்டு தங்காச்சிக்குக் கலியாணம் ஆவலங்ற கவலெ வடவாதியில இருந்த சுந்தரிக்கு வந்துடுச்சு. பொண்டாட்டியோட கவலையப் பாத்துட்டு புருஷங்கார்ரேம் ச்சும்மா இருக்க முடியுமா? சித்துவீரனும் பிந்துவுக்காக ஒரு மாப்புள்ளையப் பாத்துச்சு. மருமவ்வேன் பாக்குற மாப்புள்ளையாவது பொண்ணுக்கு அமைஞ்சிடணும்ன்னு சரசு ஆத்தா வேண்டாத தெய்வமில்லே.
*****


27 Jun 2020

வருமானத்தப் பாக்குற உலகம்!

செய்யு - 490

            லாலு மாமாவோட மவ்வேன் வேலன் இருக்காம்ல அவ்வேம் சூரத்ல யெம்டி படிப்ப முடிச்சதும், கவலய அதிகம் பண்ணுறாப்புல, நம்மால கிளினிக்குலாம் போட முடியாதுன்னுட்டாம். இம்மாம் படிப்பெ படிச்சுப்புட்டு வூட்டுலயா உக்காந்திருக்கப் போறாம்? அவனுக்காக இருந்த சொத்தையல்லாம் ஊர்லேந்து வித்துப்புட்டு வந்து தஞ்சாவூர்ல இப்போ அனாதியாக் கெடந்தா, இப்போ யாருத்தாம் தனக்குத் தொணென்னு லாலு மாமாவுக்குக் கண்ணு கலங்காத கொறை. கிட்டதட்ட மவ்வேன் படிப்புக்காக லாலு மாமா பாதிச் சொத்த அழிச்சிருந்துச்சு. பாதிச் சொத்து அழிஞ்சிருந்தா என்னா? அந்தப் படிப்ப வெச்சு வர்ற வருமானத்துல பத்து மடங்கச் சொத்தச் சேத்துப்புடலாங்ற நம்பிக்கெ. இப்போ அந்த நம்பிக்கையில மண்ணள்ளிப் போடுறாப்புலல்லா சொல்றாம் மவ்வேன்னு நெலைகொழைஞ்சுப் போயிடுச்சு லாலு மாமா.
            "கிளினிக்கப் போட மாட்டேம்ன்னு சொன்னா அதுக்கு வேலைக்குப் போறதில்லன்னு அர்த்தமில்லே, படிச்சப் படிப்புக்கு நெறைய ஆராய்ச்சில்லா பண்ணணும். அதுக்கு ஏத்தாப்புல புரபஸரா பாடஞ் சொல்லிக்கிட்டு சம்பாத்தியத்துக்கு ஒரு வழியப் பண்ணிக்கிட்டு, புரபஸராவே இருந்துகிட்டு ஆராய்ச்சிகள பண்ணணுங்றதுன்னு அர்த்தம்!"ன்னு அப்பங்காரனுக்கு ஒரு பதிலெச் சொன்னாம் வேலன்.
            இப்போ உள்ள புள்ளைங்கள பெத்தவங்க நெனைப்புக்குக் கொண்டு வாரதுங்றது கொஞ்சம் கடிசான காரியந்தாம். புள்ளைங்களப் பத்திப் பெத்தவங்களுக்குன்னு ஒரு பார்வே இருந்தா, அவுங்களுக்கு அவுங்களப் பத்தி வேறொரு பார்வெ இருக்கு. ரெண்டு பார்வையும் ரண்டு கண்ணுலேந்து ஒத்தப் பார்வையா இருக்குறதில்ல. ரண்டும் ரெண்டு திக்குல பாத்தா அந்தப் பார்வைய வெளங்கிக்கிற மூளைக் கொழம்பிப் போவாதா? அப்பிடித்தாம் ஆச்சு லாலு மாமாவுக்கு. என்னத்தாம் அறிவெ வளத்துக்குறேம், பிடிச்சதப் படிக்கிறேம்ன்னு படிச்சாலும் சம்பாத்தியத்தத் தரலன்ன அத்து என்ன படிப்புங்ற நெனைப்புள்ள ஆளுல்லா லாலு மாமா. வேலனுக்கு சம்பாத்தியம் பெரிசா தெரியல. மெம்மெல ஆராய்ச்சிப் பண்ணிப் படிச்சிட்டுப் போறதுதாங் பெரிசா தெரிஞ்சுச்சு.
            லாலு மாமா வேலனெ நேரா நிப்பாட்டிக் கேட்டே புட்டாரு.  "புரபஸரா போவணும்னு நிக்குதீயேடா? சம்பளம் எம்மாம்டா வரும் மாசத்துக்கு?"ன்னு.
            "ன்னா மாசம் இருபதினாயிரம் தருவாம்! அதுக்கு மேலயா தர்றப் போறாம்?"ன்னுச்சு வேலன் அலட்சியமா.
            மாசம் இருபதினாயிரம்ன்னு சொன்னதும் லாலு மாமாவுக்கு மனசு துண்டு துண்டா போறாப்பு இருந்துச்சு. நாம்ம வாத்தியார்ரா நின்னு கெட்டது பத்தாதுன்னு இவ்வேம் வேற வாத்தியார்ரா நிக்கணும்னு நிக்குறானா? அதுக்கு எதுக்கு இவ்வேம் டாக்கடருக்குப் பெரிய படிப்பெல்லாம் படிச்சாம்? பேயாம வாத்தியாருக்கே படிச்சித் தொலைச்சிருக்கலாமே! டவுன்ல நாலு வூட்டக் கட்டி வுட்டு மாசத்துக்கு வாடகெ ஒரு வூட்டுக்கு ஐயாயிரத்து ரூவாயின்னு சொன்னாலும் கூட இருபதினாயிரம் ரூவாய நோவாம, கொள்ளாம ஒரு வருஷத்துல நாலு வூட்டையும் கட்டிப் போட்டு மறுவருஷத்துலேந்து சம்பாதிக்கலாமே! இந்தப் பய என்னான்னா எட்டு ஒம்போது வருஷத்துக்கு மேல படிச்சிப்புட்டு மாசத்துக்கு இருபதினாயிரந்தாம் சம்பாதிக்கிலாங்றானேன்னு லாலு மாமாவுக்கு மனத்தாங்கலா போயிடுச்சு.
            படிக்காம கெடக்குறவனெல்லாம் மாசத்துக்கு பாஞ்சாயிரம், இருவதினாயிரம்ன்னு சம்பாதிக்கிறப்போ, அத்தனெ வருஷம் படிச்சிப்புட்டு படிச்சவனும் இருவதினாயிரம்ந்தாம் சம்பளம்ன்னா எப்பிடின்னு அதெ லாலு மாமாவோட மனசால ஏத்துக்கிட முடியல. ஒண்ணுமே முதலீடெ போடாம ஒடம்ப மூலதனமா வெச்சி ஒழைக்கிறவனெ நாளுக்கு முந்நூறு, நானூறுன்னு சம்பாதிச்சா மவ்வேன் இத்தனெ வருஷ படிப்ப முதலீடா வெச்சு இம்மாம்தாம் சம்பாதிக்க முடியும்னு சொல்றானேங்ற ஆத்தாம தாங்க முடியல லாலு மாமாவுக்கு.
            லாலு மாமாவுக்கு மனசுல வேற ஒரு கணக்கும் ஓட ஆரம்பிச்சிது. மாசத்துக்கு இருவதினாயிரம்ன்னா, வருஷத்துக்கு ரண்டு லட்சத்து நாற்பதினாயிரம். வேலனெ படிக்க வெச்ச கணக்குல பியெயெம்மஸ், யெம்டின்னு படிப்புச் செலவுக்கு மட்டும் இருவத்து அஞ்சு லட்ச ரூபாய்க்கு மேல. மித்த சாப்பாட்டுச் செலவு, உடுப்புக்கான செலவு, தங்குன எடத்துக்கான செலவு, வாங்குன புத்தகத்துக்கான செலவு, போயிட்டு வந்ததுக்கான செலவெல்லாம் அது தனி. எப்படியும் எல்லாத்தியும் சேர்த்தா முப்பது லட்சத்து ரூவாய நெருங்குனுச்சு. அதெ அப்பிடியே வருஷத்துக்கு பத்து சதவீத வட்டித் தர்ற பேங்குல போட்டுருந்தாவே மாசத்துக்கு மூணு லட்சத்து ரூவாயத் தருவாம். இவ்வேம் என்ன அதுக்கும் அறுபதினாயிரம் கம்மியா வருஷத்துக்கு ரண்டு லட்சத்து நாப்பதுனாயிரந்தாம் கெடைக்கும்ன்னு சொல்றாம்ன்னு நெனைச்சுச்சு லாலு மாமா.
            படிக்காமலே ச்சும்மா அந்தக் காசிய வெச்சிருந்தாவே அம்மாம் சம்பாதிச்சுப் போட்டுடும்ன்னா, அம்மாம் காசிய செலவு பண்ணிப் படிச்சவேம் அந்த அளவுக்காவது காசிய எடுக்க வேண்டாமாங்ற வெசனக் கடுப்பு வந்துடுச்சு லாலு மாமாவுக்கு. பேசாம வேலனெ வாத்தியாரு வேலைக்காவது படிக்க வெச்சு காசியக் கொடுத்தாவது மேனேஜ்மெண்டு பள்ளியோடத்துல வேல வாங்கியிருந்தாலாச்சும் சம்பளம் அதெ வுட அதிகமால்ல கெடைக்கும்ன்னு நொடிக்கு நொடி பலவெதமா சொழண்டு சுத்துது லாலு மாமாவுக்குச் சிந்தனெ.
            வாத்தியாரு வேல கூட வாணாம். ஒரு பள்ளியோடத்தக் கட்டிப் போட்டு இந்தப் பயலெ பள்ளியோடத்தப் பாத்துக்கிடச் சொல்லிருந்தாவே வருஷத்துக்கு லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்ன்னா, இந்தப் பயெ வருஷத்துக்கே ரண்டரை லட்சங் கூட வருமானம் வாராத வேலையப் பத்திச் சொல்றானேன்னு வெத வெதமா கவலெ லாலு மாமாவுக்கு.
            வாத்தியாரு வூட்டுப் பயலுவோ எவ்வேம் இப்போ வாத்தியார்ரா இருக்காம்? எல்லாம் டாக்கடருங்களாத்தானே போறாம்ன்னு நெனைச்சு டாக்கடரு படிப்புக்கு, அதுவும் அதெ வுட மேப்படிப்புள்ள டாக்கடருக்குப் படிக்க வெச்சா மாசம் இருபதினாயிரம்தாம் வருமானம்ன்னு கேள்விப்பட்டதும் வெறுத்துப் போச்சுது லாலு மாமாவுக்கு. நல்ல வேளையா இஞ்சினியரு வேலைக்குப் படிக்க வைக்காம போனதெ நெனைச்சு ஒரு வகையில ஆறுதலு பட்டுக்கிடுச்சு லாலு மாமா. அதெ படிக்க வெச்சிருந்தா ரண்டாயிரம் ரூவாயிக்குக் கணக்கெழுதப் போறேம்னு சொல்லிட்டு உக்காந்தாலும் உக்காந்துடுவாம் தம் மவ்வேன்னு நெனைச்சப்பவே லாலு மாமாவுக்குச் சிரிப்பு வந்துடுச்சு. ஒரு நேரம் புள்ளைகள நெனைக்குறப்ப கடுசா இருந்தாலும், மறுநேரம் அதெ கொஞ்சம் மாத்தி நெனைக்குறப்போ சிரிப்பாணித் தாங்க முடியுறதில்ல.

            அதுக்காகவெல்லாம் வுட்டுட முடியுமான்னு, வேலங்கிட்டெ, "எலெ பேயாம நீயி பாலாமணிப் பயெ கவர்மெண்டு டாக்கடர்ர போறதக்கு மின்னாடி கிளினிக்கப் போட்டு சம்பாதிச்ச மாதிரிக்கிச் சம்பாத்தியத்தப் பண்ணுடா. கவர்மெண்டு பரீட்செ வந்தா அதுக்கும் எழுது. வேல கெடைச்சா வேல. இல்லாட்டி கிளினிக்குப் பாட்டுக்கு கிளினிக்குப் போயிட்டு இருக்கட்டும்டா!"ன்னு கொஞ்சம் எளகுனாப்புல மறுக்கா சொல்லிப் பாத்துச்சு லாலு மாமா.
            "நாம்ம படிச்சப் படிப்புக்கு கிளினிக் போட்டுல்லாம் வேல பாக்க முடியாது. இத்து எம்மாம் பெரிய படிப்புத் தெரியுமா? படிப்புக்கு ஏத்த மாதிரித்தாம் வேல பாக்க முடியும். விருப்பம்ன்னா சொல்லு. இல்லாட்டி வூட்டுலயே இருந்துடறேம்! ஒமக்குத்தாம் மாசம் ஆன்னா ரண்டு பென்சன்லா வருது. அதெ வெச்சுப் பாத்துக்கிட்டா போச்சு. ரண்டு பென்சன்ன வாங்கி அனுபவிக்காமவே போயிடக் கூடாது பாரு! நாமளும் ஒமக்குத் தொணையா தஞ்சார்லயே இருந்தாப்புலயும் ஆயிடும். நமக்கும் மனசுக்கு ஒவ்வாம ஒரு வேல பாக்காம இருந்தாப்புலயும் ஆயிடும்!"ன்னு வேலன் சொல்லப் போவ, லாலு மாமா செரித்தாம்ன்னு வேலனோட போக்குக்கே வுட்டுப்புடுச்சு.
            இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு ஆசெ, மவனெ நல்லா வருமானம் பாக்குற வேலையாப் பாத்து அனுப்பி வுட்டுப்புடுணும்ன்னு. அதுக்காக ஆயுர்வேதத்துல சோப்பு தயாரிக்கிற கம்பெனிக, பற்பொடி தயாரிக்கிற கம்பெனிக, ஆயுர்வேத எண்ணெய்க தயாரிக்கிற கம்பெனிக வேலைக்குத் தேவைன்னு தெனசரித் தாள்ல வெளம்பரம் கொடுத்தா போதும் லாலு மாமா, மவனெ கேக்காமா அந்த வேலைக்கு எழுதிப் போட்டு வுட்டுடும். கம்பெனியில அழைப்புக் கடிதம் வந்தா அன்னிக்கு அப்பாருக்கும் மவனுக்கும் சண்டெ கலை கட்டும். அந்த வேலைக்குப் போவணும்ன்னு லாலு மாமா ஒத்தக் கால்ல நிக்கும். அந்த வேலைக்குல்லாம் போவ மாட்டேம்ன்னு வேலன் ஒத்தக் கால்ல நிப்பாம். எவ்வளவு நேரந்தாம் ரெண்டு பேரும் ஒத்தக் கால்ல நிக்க முடியும். யாராச்சிம் ஒருத்தராவது ஒரு கால்ல எறக்கி வெச்சித்தானே ஆவணும்.
            எந்தக் காலத்துல புள்ளைங்க எறங்கி வந்திருக்குங்க? அதுவும் ஒத்த ஆம்பளெ புள்ளைன்னு செல்லாம வளக்குற ஆம்பளெ புள்ளைங்க ஒரு காலத்துலயும் எறங்கி வரவே வாரதுல்ல. பெத்தவங்கத்தாம் எறங்கி வார்ற வேண்டியிருக்கு. லாலு மாமா எறங்கி வந்துச்சு. "ஒம்ம நெனைப்புப்படி என்னத்ததாம் பண்ணப் போறே?"ன்னு கேட்டுச்சு லாலு மாமா.
            "நாம்ம படிச்ச சூரத்து காலேஜ்ல எழுதிப் போட்ருக்கேம்ப்பா! அஞ்ஞயே புரபஸரா வேல கெடைச்சாப் போயிடுவேம்!"ன்னாம் வேலன்.
            "அடப் பாவிப் பயெ மவனே! ஒன்னயப் பாக்கணும்னு நெனைச்சா கூட நாம்ம சூரத்துல்லடா ரயிலேறி வாரணும். இருக்குற ஒடம்புக்கும், ஆயிருக்குற வயசுக்கும் அதெல்லாம் இனுமெ முடியுமாடா? தஞ்சார்லயே பார்றேம்டா!"ன்னுச்சு லாலு மாமா.
            "ஆங் தஞ்சார்ல எவ்வேம் அம்மாம் பெரிய காலேஜ்ஜ ஆயுர்வேதத்துக்குக் கட்டி வெச்சிருக்காம்? மெட்ராஸ்ல சென்னப் பட்டணத்துலயே ஒண்ணுத்தாம் இருக்கு!"ன்னாம் வேலன்.
            "ஏம்டா யப்போ சென்னைப் பட்டணத்துக் காலேஜூக்காவது எழுதிப் போடுடா மவனே!"ன்னுச்சு லாலு மாமா. எல்லா விசயத்துலயும் அப்பங்காரரு சொல்ல தாட்டிக்கிட்டே போவக் கூடாதுன்னு, இந்த ஒரு விசயத்துலயாவது அப்பங்காரரு சொல்லக் கேப்போம்ன்னு நெனைச்சு வேலன் மெட்ராஸ்ல இருந்த ஆயுர்வேத காலேஜூக்கு எழுதிப் போட்டதுல அங்க புரபஸர் வேல கெடைச்சிது. இந்த ஒரு விசயத்துலயாவத அப்பன் சொல்ல கேட்டானே மவன்னு லாலு மாமாவுக்குச் சந்தோஷம். அத்தோட வாரா வாரம் தஞ்சாருக்கு வந்துட்டுப் போவணும்ன்னு சொன்னுச்சு லாலு மாமா. ஒரு ரண்டு மாசம் அந்தப் படிக்கு வந்துட்டப் போன வேலனுக்கு அதுக்குப் பெறவு அலுத்துப் போச்சுது. எப்பயாவது நெனைச்சா வர்றது. வார்ற முடியாமப் போறப்ப அப்பங்காரரே மெட்ராஸூக்கு வாரச் சொல்லுறதுன்னு வேலன் நடந்துக்க ஆரம்பிச்சாம்.
            மவனுக்குப் படிப்பு முடிஞ்சி, திருப்தியோ இல்லையோ ஒரு வேலைக்கும் போயாச்சு. வயசும் ஆயாச்சு. மவனுக்கு ஒரு கதைய கட்டி வுடணும்ங்ற நெனைப்பு உண்டான பெற்பாடு, லாலு மாமா மவனுக்குப் பொண்ணத் தேட ஆரம்பிச்சிது.
            பொண்ணு தேடுனா இப்போல்லாம் சாதகத்தோட மாப்புள்ளையோட மாச வருமானம், படிப்பு, உடன்பொறப்புகளோட எண்ணிக்கை, அதுல கலியாணம் ஆனவங்க எத்தனெ பேரு, கலியாணம் ஆவாதவங்க எத்தனெ பேருன்னு அந்த வெவரத்தையெல்லாம் சேத்துல்லா கொடுக்க வேண்டிக் கெடக்கு. அந்தக் கதிக்கு வெவரத்தைக் கொடுத்ததுல சாதகப் பொருத்தம் அமைஞ்ச பெற்பாடு, உடன்பொறந்தவங்களுக்குல்லாம் கலியாணம் ஆனதால அத்து பரவாயில்ல, இவ்வேம் ஒருத்தந்தாம் ஆம்பளெ புள்ளங்றதால அதுவும் பரவாயில்ல, மாப்புள்ளயோட படிப்பப் பாத்தா பரவாயில்ல, வருமானத்தப் பாத்தா அதுத்தாம் கொஞ்சம் இடிக்கிதுன்னு நெறைய பொண்ணு வூட்டுக்கார்ரேம் தாட்டி வுடுறாம்.
            லாலு மாமாவுக்கு டாக்கடரு படிப்பு படிச்ச மவனுக்கு கெளரவமான பெரியக் குடும்பத்துல பொண்ண எடுக்கணும்ன்னு ஆசெ. அப்பிடி லாலு மாமா எதிர்பாக்குற குடும்பத்துல பொண்ண வெச்சிருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் மாப்புள்ளயோட மாசாந்திர வருமானம் கூடுதலா இருக்கணும்ன்னு ஆசெ. இந்த ரண்டு ஆசைகளும் ஒத்து வாராத காரணத்தால லாலு மாமா மவ்வேம் சாதகத்த வெச்சிக்கிட்டு ஆளா பறக்குறாப்புல ஆயிடுச்சு. எவ்வளவு எடந்தாம் அலைஞ்சுப் பாக்குறதுன்னு லாலு மாமாவே வெறுத்துப் போச்சு ஒரு கட்டத்துல. ஒரு சில எடங்க ஒத்து வந்து மாப்புள்ளையப் பாத்தவனுங்க மாப்புள இந்த வயசுக்கே அம்மாம் குண்டா இருந்தா நாப்பது வயசுக்கு வெடிச்சேப் போயிடுவாம் போலருக்கேன்னு வேண்டாம்ன்னு கைய கழுவிட்டுப் போயிட்டாம். வேலன் பன்னெண்டாவது படிக்குற வரைக்கும் ஒல்லிப்பிச்சானத்தாம் இருந்தாம். என்னிக்கு டாக்கடருக்குப் படிக்கப் போறேம்ன்னு படிக்கப் போனான்னோ அன்னிய தேதியிலேந்து பெருக்க ஆரம்பிச்சவந்தாம். வடக்கு தெக்கான வளர்ச்சி நின்னுப் போயி கெழக்கு மேற்கா வளர்றாப்புல ஊதிப் போவ ஆரம்பிச்சாம். அப்பிடியே அப்பன், ஆயி ஒடம்புக்கு வந்துட்டு இருக்காம் வேலன்னு ஒறவுக்கார சனங்க பேச ஆரம்பிச்சதுங்க வேலனோட ஒடம்பப் பாத்துட்டு.
            அப்பத்தாம் லாலு மாமாவுக்கு ஒரு யோசனெ. கையில வெண்ணெய்ய வெச்சுக்கிட்டு, ஏம் நெய்யிக்கு அலையணும்ன்னு. தங்காச்சிப் பொண்ணு பிந்துவ வேலனுக்குக் கேட்டுப் பாத்தா என்னான்னு ஒரு யோசனெ. ஒறவு மொறையிலயும் சரியா வருது. தங்காச்சிப் பொண்ணே மருமவளா வாரதால பிற்காலத்துல ஒரு பெரச்சனையும் வாராது. படிப்பும் ரண்டு பேத்துக்கும் இருக்கு. அத்தோட ஒடம்பும் ரண்டு பேத்துக்கும் ஒண்ணா நிக்க வெச்சுப் பாத்தா பொருத்தப்பாட போயிடும். பிந்துவுக்கும் மாப்புள பாத்து அமைய மாட்டேங்குது. வேலனுக்கும் பொண்ணுப் பாத்து அமைய மாட்டேங்குது. ஆக எல்லா வெசயத்துலயும் ஏதோ ஒரு பொருந்தம் பொருந்தி வாரதால இத்து சரியா இருக்கும்னு நெனைச்சு அந்த நெனைப்பு ருசு பட்டதும் ஒடனே பாக்குக்கோட்டைக்கு வண்டியப் பிடிச்சி போயி எறங்கி சரசு ஆத்தாகிட்டெ பேசுனுச்சு லாலு மாமா. சரசு ஆத்தா ராசாமணி தாத்தாகிட்டெ பேசுனுச்சு. ராசாமணி தாத்தா பாலாமணிகிட்டே பேசுனுச்சு. பாலாமணி சித்துவீரன்கிட்டெ பேசுனுச்சு. இத்து ஒரு சொழற்சி. இந்த மொறையிலத்தாம் முடிவு பாக்குக்கோட்டையில வந்தாவும்.
*****


26 Jun 2020

அதன் பெயர் கொரோனா!

அதன் பெயர் கொரோனா!

போகிறப் போக்கைப் பார்த்தால் நாம் கொரோனாவைக் கையாளுகிறோமா? கொரோனா நம்மைக் கையாள்கிறதா? என்று குழப்பமாக இருக்கிறது.
*****
நாட்டில் இரண்டு விசயங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. 1. கொரோனா, 2. பெட்ரோல் டீசல் விலை.
*****
ஜூன் 21, 2020 இல் சூரிய கிரகணத்துக்குப் பிறகு கொரோனோ அழிந்து விடுமென்ற வாட்ஸாப் தகவல் தெரியுமா என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள். இந்தக் தகவல் கொரோனாவுக்குத் தெரியுமா என்று கேட்பதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது நம் சமூகத்திடம்?
*****
கொரோனா காலத்திலும் நான்கு பாலியல் வன்கொடுமை செய்திகள் இல்லாமல் இல்லை. கொரோனா அந்த வன்கொடுமையாளர்களை வன்கொடுமை செய்வதாகட்டும்!
*****
அமெரிக்கா ஒரு விசித்திரமான தேசம்தான். கொரோனா காலத்திலும் அதைப் பொருட்படுத்தாமல் நிறவெறிக்கு எதிராக ஒரு கருப்பின மனிதரின் சாவுக்காக நீதி கேட்டுக் கூட்டமாகக் கூடிப் போராடுகிறார்கள். நமது தேசமும் ஒரு வித்தியாசமான தேசம்தான். எத்தனையோ புலம் பெயர் தொழிலாளர்களின் சாவைச் சர்வ சாதாரணமாக கடந்து கொண்டு கூட்டம் கூட்டமாக ஊரடங்களில் பொருட்கள் வாங்கி போராடிக் கொண்டிருக்கிறோம். ஆண்டவன் அநேகமாக நமது தேசத்துக்கு அதிகமாக மனிதர்களையும், அமெரிக்க தேசத்துக்கு அதிமாக மனிதநேயத்தையும் கொடுத்திருக்க வேண்டும்!
*****
தமிழகத்துக்கு ஓர் ஆபத்து என்றால் திரையிலிருந்து குதித்து வந்து கதாநாயகர்கள்தான் இத்தனை ஆண்டுகளாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். முதன் முறையாக கொரோனா காலத்தில் தமிழகத்துக்கு உண்டான ஆபத்தைப் பார்த்து திரையரங்கங்கள் மூடப்பட்டு இருக்கிறது. திரையிலிருந்து குதித்து வர்ற வேண்டிய கதாநாயகர்களுக்கு அதனால் மிகப்பெரிய தடங்கல் உண்டாகியிருக்கிறது.
*****

மருந்து விக்குற காசுல வியாதியா வரப் போவுது?

செய்யு - 489

            பாக்குக்கோட்டை சரசு ஆத்தா தன்னோட ரண்டாவது பொண்ணு பிந்துவுக்கு மாப்புள்ள தேடிட்டுக் கெடந்துச்சு. ராசாமணி தாத்தா சோசியக்கார்ர இருந்தும் மாப்புள்ளைக்காக அலைஞ்சிட்டுக் கெடந்தாரு. என்னடா இத்து? சோசியக்காரனுக்கே தம் பொண்ணுக்கு மாப்புள்ள எங்ஙன இருக்கான்னு தெரியாம தேடி அலைஞ்சிட்டுக் கெடக்கானேன்னு ஊர்ல அத்து ஒரு பேச்சு. மவ்வேன் பாலாமணிக்கு இதால வயசு ஆயிட்டே போவுதுன்னு சரசு ஆத்தாவுக்குக் கவலெ. "நீயி ஒரு கலியாணத்தெ பண்ணித் தொலைடா! தங்காச்சிக்குக் கூட பெறவு பண்ணிக்கிடலாம்!"ன்னு சொல்லிப் பாத்துச்சு சரசு ஆத்தா. பாலாமணி கேக்குறாப்புல இல்ல. "தங்காச்சிக்குக் கலியாணத்தெ பண்ணிட்டுத்தாம் பண்ணுவேம்!"ன்னு ஏக பிடிவாதம். பாலாமணி ஆயுர்வேத டாக்கடருக்குப் படிச்சி கவர்மெண்டு பரீட்டை எழுதி கவர்மெண்டு டாக்கடர்ரா ஆயிருந்துச்சு. அதால பாலாமணிக்குப் பொண்ணு கொடுக்குறதுக்கு நான் நீயின்னு போட்டி. இருந்தாலும் வயசு முப்பத்து நாலோ என்னமோ ஆயிருந்துச்சு. "இவ்வேம் தங்காச்சிக்கு மாப்புள்ளயப் பாத்து கலியாணத்த முடிக்கிறதுக்குள்ள வயசு நாப்பதுக்கு மேல ஆயிடும் போலருக்கே! அவ்வேம் மூத்தவள தேடி வந்து கட்டிக்கிட்டாம் எஞ்ஞ அண்ணம் மவ்வேம். இவளெ நாமளே தொரத்தி வுட்டாலும் எவனும் கட்டிக்கிட மாட்டாம் போலருக்கே!"ன்னு சரசு ஆத்தாவுக்கு எந்நேரமும் பொலம்பல்தாம்.
            பிந்து பாக்குக்கோட்டையில இருந்தாலும் அங்கயிருந்து ஆர்குடி கமலாம்பாள் தாயார் கல்லூரியிலத்தாம் பியேவும், பியெட்டும் முடிச்சிது. ஆளு கொஞ்சம் குண்டு. சரீர கனம் சாஸ்தியா இருந்துச்சு. அதுல வந்துப் பாக்குற மாப்புள்ளைக எல்லாம் சாதகப் பொருத்தம் இருந்தாலும், ஒடம்பு பெருக்கமா இருக்கேன்னு வேணாம்னு போயிட்டாம். அதுல உண்டான மனக்கொறையில பிந்து சரியா சாப்புடுறது இல்ல. என்னத்தத்தாம் சாப்புடாம கெடந்தாலும் ஒடம்பு கொறைஞ்ச பாடா தெரியல. செரின்னு அண்ணங்கார்ரேம் பாலாமணி டாக்கடரல்லா இருக்காம்ன்னு அவ்வேங்கிட்டெ மருந்த வாங்கிச் சாப்புட்டாலும் அந்த மருந்துக்கும் ஒடம்பு எறக்கம் கொடுக்க மாட்டேங்குது. அதுக்காக முயற்சிய வுட்டுப்புட முடியுமான்னு எந்நேரத்துக்கும் டயட்டுல இருக்கேமுன்னும், ஒடம்பு எளைக்க மருந்துகளச் சாப்புடுறேம்ன்னும் இருந்துச்சு பிந்து.
            எந்தப் படிப்பா இருந்தாலும் இந்தக் காலத்துல படிச்சி முடிச்சு ஒடனே வேலைக்குப் போறதுங்றது அபூர்வம்தாம். பாலாமணி படிச்சி முடிச்சிக் கொஞ்ச காலம் வரைக்கும் அதாச்சி, கவர்மெண்டு வேல வர்ற வரைக்கும் பாக்குக்கோட்டையில தனியா ஒரு கிளினிக்கப் போட்டு வைத்தியம் பாத்துக்கிட்டுக் கெடந்துச்சு. பாக்குக்கோட்டையில மெயினான எடமா பெரிய பஜார் தெருவுல கினினிக். பாக்குக்கோட்டை டவுன்லேந்து எங்கயிருந்து பாத்தாலும் அதுதாங் டவுனுக்கு மையம். தங்காச்சி மவ்வேன் கிளினிக்கப் போட்டுட்டு உக்காந்திருக்கானே லாலு மாமா பாலாமணிட்ட போறதுமா, வர்றதுமா இருந்துச்சு.
            லாலு மாமாவுக்கு ஒடம்பு பெருத்த ஒடம்பு. இப்போ ரிட்டையர்டு ஆயி கெடந்ததுல சரீரம் ரொம்ப கனத்தச் சரீரமா ஆயிடுச்சு. சரீரம் கனத்தா சொல்லவா வேணும்? சர்க்கரையோ, ரத்தக் கொதிப்போ வரலீயே தவுர, கழுத்து வலியும், தோள்பட்டெ வலியும் தானா வந்துடுச்சு. அந்த வலியால, தங்காச்சி மவ்வென் கிளினிக்குக்கு ஆள பிடிச்சி விடுறது ஒரு பக்கம்ன்னாலும் நாமளே ஒரு ஆளா போவோம்னு போவ ஆரம்பிச்சிதுதாம் லாலு மாமா.
            இப்பிடி வலிக்கு ஆயுர்வேதத்துல தங்காச்சி மவ்வேம்கிட்டெ பாத்துக்கிட்டாலும், இங்கிலீஷ் வைத்தியத்தையும் பாத்துக்கிடும். அத்தோட மருந்து கடைக்குப் போயி இன்னயின்ன மாதிரி வலின்னு சொல்லி அதுவாவே வேற மருந்துகள வாங்கிப் போட்டுக்கும். அத்தோட அதுக்கு தெரிஞ்ச கைவைத்திய மொறைகள வேற பாத்துக்கும். இப்பிடி நாலு வெதமான வைத்திய முறைகளால தன்னோட கழுத்துவலி, தோள்பட்டை வலிகளப் போக்கிக்கிறதா அதுக்கு ஒரு நம்பிக்கெ.
            ஒவ்வொரு தவா லாலு மாமா பாலாமணியோட பாக்குக்கோட்டை கிளினிக்குப் போறப்பல்லாம் பாலாமணிய அந்தக் கேள்விய மட்டும் கேக்காம வாராது. "இந்தக் காலத்துல நம்ம நாட்டு வைத்திய மொறைகளுக்கு என்னத்தெ பெரிய மதிப்பு இருக்குடா? நீயி இந்தப் படிப்பெ படிக்குறதப் பாத்துட்டு நாமளும் வேலன் பயல இதுக்குப் படிக்க வெச்சாச்சு. நீயாவது பியெயெம்மஸோடு முடிச்சிக்கிட்டுக் கிளினிக்கப் போட்டுட்டே. அவ்வேம் என்னவோ சூரத்துல போயி மேக்கொண்டு யெம்டி படிக்கணும்னு போயிட்டாம். ஒன்னயப் போல அவனும் ஒரு கிளினிக்கப் போட்டுட்டு உக்காந்திருந்தாம்ன்னா தேவல. பொண்டாட்டிப் போயிச் சேந்துட்ட கடெசீக் காலத்துல நாம்ம தஞ்சார்ல ஒரு காலும், பாக்குக்கோட்டையில ஒரு காலும், இன்னொரு காலு இருந்தா திருச்சி ஈஸ்வரி வூட்டுல ஒரு கால்ன்னும், அதுக்கு மேல இன்னொரு காலு இருந்தா குயிலி வூட்டுக்கு மெட்ராஸூ சென்னைப் பட்டணத்துல ஒரு கால்ன்னும் கெடந்து அலைய வேண்டிதா இருக்கு. அத்துச் செரி வேலன் பயெ படிச்சிட்டுப் போறானே! பொழைச்சுக்கவானா?" இப்பிடிக் கேக்காம லாலு மாமா பாலாமணி கிளினிக்குலேந்து திரும்புனதில்ல.
            "வெவரம் தெரிஞ்சவங்க, பொறுமையா நோயி கொணம் கண்டாலும் பரவாயில்லன்னு நெனைக்குறவங்க ஆயுர்வேதத்துக்கு வர்றாங்க. இங்க வந்துட்டவங்க பெறவு வேற வைத்திய மொறைக்குப் போவ மாட்டாங்க மாமா. நாம்மத்தாம் இதோட மகத்துவம் புரியாம நிக்கேம். கேராளவுல அப்பிடிக் கெடையாது. அங்ஙன புல்லாவே ஆயுர்வேதந்தாம். இங்ஙன ஓட்டமில்லன்னாலும் அங்ஙனப் போயி ஒரு கிளினிக்கப் போட்டா போதும். காசிய அள்ளிப் புடலாம். இதெப் போல ஒரு அருமையான வைத்திய மொறை எதுவும் கெடையாது மாமா. மனுஷனோட ஆத்மாவுக்குப் பண்ணுற வைத்திய மொற. ஆன்னா ன்னா ஒண்ணு, ஆயுர்வேதங்றது கொஞ்சம் காசு பிடிக்குற வைத்திய மொற!"ன்னு அதுக்கு பதிலெச் சொல்லும் பாலாமணி.

            லாலு மாமாவுக்கு அந்தப் பதிலு பிடிக்காததெப் போல, "என்னத்தெ சொல்லு! இங்கிலீஷ் டாக்கடருன்னா சீட்டெழுதிக் கொடுத்தான்னா, ஊசியப் போட்டான்னா எட்றா பீஸூ அம்பதுனான்னா, ஒரு நாளைக்கி நூத்துப் பேர்ர பாத்து கட்டிப்புட மாட்டான்னா கல்லாவா? அத்து இத்துல முடியாதுதானேடா!"ன்னு கேக்கும்
            "இதுலயும் அப்பிடில்லாம் சம்பாதிக்க முடியும். சொல்லப் போனா அதெ வுட தாண்டியே சம்பாதிக்க முடியும். ன்னா ஒண்ணு இங்ஙன டாக்கடருக்கான காசு நூத்து ரூவாயின்னா மருந்துக்கான காசு ஐநூத்து ஆயிரம்ன்னு எகிறிடும். அதால மொதல்ல வர்றப்போ கொஞ்சம் யோஜனையெ பண்ணுமுங்க சனங்க. கொணம் கண்டுப்புட்டா பெறவு இந்த மொறைய வுட்டு வெலகாதுங் மாமா. அத்தோட மருந்தையும் நாம்மதானே கேரளாவுலேந்து வார வெச்சு வெச்சிருக்கேம். அதுக்கு வெல போட்டுக் கொடுக்குறதும் நாம்மத்தானே. அதுல ஒரு கமிஷன் இருக்கு. ஆயிரத்து ரூவாய்க்கு மருந்தெ போட்டா அதுல கமிஷன் காசியே நானூத்துக்கு மேல. பெறவு வைத்தியக் காசு நூத்து ரூவா. ஒரு நாளைக்கி நாலு கேஸூ வசமா சிக்குனா போதும்!"ன்னு அதுக்குப் பதிலச் சொல்லும் பாலாமணி.
            "சனங்களுக்கு பட்டுன்னு ஊசியா போட்டா, மருந்தக் கொடுத்தா ஒடனே கொணங் காணணும். அத்து அந்த வைத்தியலத்துலத்தாம் சாத்தியம்டா. அதுக்கு மயங்கியே சனங்க திரும்ப திரும்ப வாரும். இந்த வைத்திய மொறையில அப்பிடி வாருமாடா சனங்க? பேசுதீயேடா ன்னாவோ பெரிசா?"ன்னு லாலு மாமா பாலாமணிய வுடாது.
            "அதுல பாத்தீன்னா மாமா சில ஆளுங்களப் பாத்துப்பேம். அவுங்ககிட்டெ ஒங்களப் பாத்தா ரொம்ப கஷ்டப்படுற ஆளெப் போல தெரியுதும்பேம். ஒடனே அவுங்களுக்கு மொகத்துல ஒரு சிரிப்பாணி காங்கும் பாரு. ஒடனே மருந்துக்கு மட்டும் காசியக் கொடுங்க. வைத்தியத்துக்குக் காசிய வாணாம்பேம். அடடா இப்பிடி எலவசமா இந்தக் காலத்துல எவ்வேம் வைத்தியம் பாப்பாம்ன்னு நெனைச்சிக்கிட்டு அதுக்காவே மறுக்கா வாரும் பாரு மாமா! நாம்ம மருந்துல அடிக்கிற காசி அதுகளுக்குத் தெரியாது. இப்பிடி நேக்கா பாத்தா இங்கிலீஷ் டாக்கடர்ர தாண்டி இதுல சம்பாதிக்கலாம் மாமா! ஒரு தவா நம்மகிட்டெ வந்தவனெ நூறு தவா வர வைக்கலாம்!"ங்கும் பாலாமணி.
            இப்பிடி ஆரம்பிக்கிற பேச்சு ஒரு மாமாங்கத்துக்கு நீளும். இங்கிலீஷ் டாக்கடருன்னா நொடிக்கு ஒருத்தம் வந்து நிப்பாம். ஆயுர்வேத டாக்கடருக்கு நோயாளி வர்ற வரைக்கும் டாக்கடருக்குப் பொழுது போவாது. சமயத்துல படையெடுத்து வந்தாலும் நோயாளிங்க வரும், இல்லன்னா ஒரு நாளுக்கு ஒருத்தம் கூட வார மாட்டாம். யாரும் வாராத சந்தர்ப்பங்கள்ல லாலு மாமாவும், பாலாமணியும் பேசிட்டே இருக்குமுங்க. அப்பிடி பேசிட்டு இருந்தப்பத்தாம்,
            "என்னவோ போ! நீயி தெறமையா ஒரு கிளினிக்க வெச்சி உக்காந்துப்புட்டே. அவ்வேம் வேலனப் பாரு, இன்னும் படிக்கணும்னு நிக்கிறாம். இதுல மேக்கொண்டு படிச்சி என்னத்தெ ஆவப் போவுதுன்னு தெரியல!"ன்னு சோகமா சொன்னுச்சு லாலு மாமா.
            "நாந்தாம் அவனெ தஞ்சார்ல கிளினிக்கப் போடச் சொன்னேம்ல. போட்டாம்ன்னா ரண்டு கிளினிக்கும் சேத்து மருந்து எடுத்தோம்ன்னா இன்னும் காசியப் பாக்கலாம். அவனெ கொண்டு போயி ஏம் மாமா மேப்படிப்புக்குச் சேத்து வுட்டே? ஒனக்கென்ன? ஒனக்கொரு பென்ஷன் காசு. அத்தெ செத்துப் போயி அதோட பேமிலி பென்ஷன் காசுன்னு ரண்டு காசுல்ல பூந்து வெளையாடுது. வர்ற காசிய என்னத்தெ பண்ணுறதுன்னு தெரியாம பயல படிக்க வெச்சிக்கிட்டு வெளையாடிட்டு இருக்கே! ஒழைச்சு வர்ற காசியா ன்னா? ஒழைக்காமல ரண்டு கைக்கும் ரண்டு காசி!"ன்னுச்சு பாலாமணி.
            "நமக்கென்னடா தெரியும்! மேப்படிப்புச் சம்பந்தமா வெசாரிக்கிறதுக்குச் சூரத் போவணும்ன்னாம்! செரி வெசாரிக்கத்தானே போவணும்ங்றாம்னு நெனைச்சி அழைச்சிட்டுப் போனேம். அழைச்சிட்டுப் போனா அங்ஙனப் போயி வெசாரிச்சுப்புட்டு மேப்படிப்புல சேத்து வுட்டாத்தாம் போச்சுன்னு அங்ஙகனயே உக்காந்துப்புட்டாம். அத்து எடம் நாலாவது மாடியோ, அஞ்சாவது மாடியோ தெரியல. ஒவ்வொரு மாடியுமே ஒரு ஒலகத்தெ போல பெரிசு இருக்கு எப்பிடி உள்ள பூந்தேம் அந்த எடத்துக்கு வந்தேம்ன்னே தெரியல. ரொம்ப பெரிய ஆஸ்பத்திரிடா. செரி அந்தப் பயல வுட்டுப்புட்டு நாமளாவது தப்பிச்சு வந்துப்புடலாம்னு பாத்தா வெளியில வாரதுக்கு வழியும் தெரியுல ஒண்ணும் தெரியல. செரி எப்பிடியோ வெளியில வந்தாலும் எங்கன பூந்து எப்பிடி வந்து ஊரு வந்து சேர்றதுன்னு புடிபடாம போச்சு. கட்டடம்ன்னா கட்டடம் அம்மாம் கட்டடம்டா. எப்பிடித்தாம் கட்டித் தொலைச்சானுவோளே? பணத்தையும் அம்புட்டுக் கட்ட வெச்சிப்புட்டானுவோ. நமக்கு அந்த எடத்தெ வுட்டு வெளியில வாரதுன்னா சாமானியமில்ல பாத்துக்கோ!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதாங் செரின்னு சேத்துட்டீயாக்கும்?"ன்னுச்சு பாலாமணி.
            "வேற வழி! சேந்துத் தொலைஞ்சுக்கோன்னு மடியில கட்டியிருந்த இருவதாயிரத்தெ எடுத்து வுட்டேம். அது பத்தலன்னு சொன்னதும் மூணு ஏடியெம் கார்டுல்லா வெச்சிருக்கேம். அதெ வெச்சி மிஷின்ல இழுத்து பணத்தெ கட்டிக்கடான்னு சொன்னேம். கட்டிட்டு வந்து லட்சத்துக்கு மேல கணக்குச் சொன்னாம் பாரு! அன்னிக்கே மாரடைப்பு வந்துப் போயிச் சேந்திருக்க வேண்டிய ஆளு. என்னவோ பொழைச்சது போன சென்மத்துப் புண்ணியம். லட்சத்தி இருவதினாயிரம் கட்டுனதா ஞாபவம். ஆறு மாசம் ஆன்னா போதும். பணம்ன்னு வந்து நிக்காம். ஒத்து ரூவா, ரட்ட ரூவா எல்லாம் கெடையாது. எல்லாம் லட்ச ரூவாத்தாம். அப்பிடி லச்ச லச்சமா கட்டி என்னத்தெ படிச்சி, என்னத்தெ சம்பாதிக்கப் போறாம்ன்னு தெரியல. இதுல போட்டா சாக்கியோ பாக்கியோ என்னவோ அந்த ஜட்டி, பனியனத்தாம் போடுவேம்ன்னு அறுவது ரூவா எம்பது ரூவா ஆவுற காசிக்கு, எரநூத்து ரூவா, முந்நூத்து ரூவான்னு செலவப் பண்ணிட்டு வேற நிக்காம். ஒத்தப் புள்ளத்தானே. காசியச் சேத்து வெச்சு என்னத்தப் பண்ணப் போறேம்ன்னு வுட்டுப்புட்டேம். அந்தப் பயலுக்காகத்தானே வேற்குடிய வுட்டுப்புட்டு கிளினிக்கு வைக்க தோதா இருக்கும்ன்னு தஞ்சார்ல வந்துக் கெடக்கேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "மேக்கொண்டு ன்னா பண்ணுறதா உத்தேசம்?"ன்னுச்சு பாலாமணி.
            "படிப்ப முடிச்சதும் தஞ்சார்ல கிளினிக்க போட வேண்டியதுதாங். ஒன்னயத் தாண்டி படிச்சிருக்கிறதால பீஸூ கூட போட்டு வாங்குனா கோடுப்பானுங்களா?"ன்னுச்சு லாலு மாமா.
            "கிழிச்சாம் போ! விடிய விடிய கதெயக் கேட்டு ராமனுக்குச் சீத்தே சித்தாப்பாங்றே? நாமளே ஓசிக்கி வைத்தியம் பண்ணுறதா சொல்லி மருந்துல்ல வெச்சில்லா அடிச்சிட்டு இருக்கேம். மருந்துல ந்நல்ல காசிங்றதால இப்போ செல மருந்துகள நாமளே தயாரிச்சிட்டு இருக்கேம். மூட்டுவலிக்கு எண்ணெ, கழுத்துவலிக்கு எண்ணெ, முதுகுவலிக்கு எண்ணெ, தலைவலிக்கு எண்ணென்னு அனைத்து வலிக்கும் எண்ணெய், எலும்பு முறிவுக்கு எண்ணென்னு எல்லாம் எண்ணெய் தயாரிப்புத்தாம் போ. என்னய வெச்சு எண்ணெயப் பிழிஞ்சியும், காய்ச்சியும் பணத்தெ எடுத்துட்டு இருக்கேம். இப்போ வைத்தியம் பண்ண வார்றானுவோளோ இல்லியோ எண்ணெய்ய வாங்குறதுக்குன்னு ஓரு கூட்டமே வர்றாம். இந்த மருந்து தயாரிப்பே இப்பிடியே விரிவு பண்ணிட்டுப் போனா துட்டு ந்நல்லா பொரளும் போலருக்கு மாமா! அதாங் கேரளக்கார்ரேம் ந்நல்லா சம்பாதிக்கிறாம். கருவாட்டு வித்த காசி நாறவா போவுதுங்ற மாதிரிக்கி, மருந்து வித்த காசி வெயாதியா தர்றப் போவுது?"ன்னு சொல்லிச் சிரிச்சுச்சு அப்போ பாலாமணி.
            "எப்பிடியோ பொழைச்சிக்கிட்டா சரித்தாம்டா!"ன்னு அதுக்குப் பதிலுக்குச் சிரிச்சுச்சு லாலு மாமா. லாலு மாமா வெளியில சிரிச்சிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள மவனெ நெனைச்சி ஒரு கவலெ இருந்துச்சு.
*****


25 Jun 2020

அந்துப் போன உறவு!

செய்யு - 488

            சுப்பு வாத்தியாரு பொண்ண கொடுக்கலங்ற ஆத்திரம் சின்னவருக்கு. அதெ நேரத்துல பயணத்துலேந்து கலியாணம்னு நெனைச்சி வர்ற மவன் ஏங்கி நின்னுப்புடக் கூடாதுன்னு, அதுக்கு எதாச்சிம் ஒரு பொண்ண பாத்து நெனைச்சது நெனைச்சபடிக்கிக் கலியாணத்த முடிச்சி சுப்பு வாத்தியாரு மூக்கெ ஒடைக்கணுங்ற வெறி வந்துடுச்சு சின்னவருக்கு. இதுவரைக்கும் சொந்தத்துல கொடுக்குறதுக்கு என்னத்தெ சாதகத்தப் பாக்குறதுன்னு இருந்த சின்னவரு, தாசு அத்தானோட சாதகத்தத் தூக்கிட்டு மஞ்சப் பையோட கெளம்பிட்டாரு. தங் கண்ணுலேந்து ஊரு ஒலகத்துல இருக்குற எந்த பொண்ணும் விடுபட்டுடக் கூடாதுங்ற அளவுக்கு கண்ணுல வெளக்கெண்ணெய்ய விட்டுக்கிட்டு அலைஞ்சாரு. போவாத ஊரில்ல, பாக்காத பொண்ணுல்லங்ற அளவுக்கு அலைஞ்சாரு. அவரு ‍அலையுற வேகத்துக்குப் பத்து புள்ளைக்கு பொண்ணு பாத்து முடிச்சிடுவாரு போல இருந்துச்சு.
            தாசு அத்தான் ஊருக்கு வந்து சேர்றதுக்கு பாஞ்சு நாளு இருந்துச்சு. அந்தப் பாஞ்சு நாளு இடைவெளியில நெய்ப்பேருல ஒரு பொண்ணு, விளாமுத்தூர்ல ஒரு பொண்ணு, சம்மட்டிக்குடிகாட்டுல ஒரு பொண்ணு, கீழமணலியில ஒரு பொண்ணுன்னு ஒண்ணுக்கு நாலா சாதகப் பொருத்தத்துக்கு ஏத்தாப்புல பொண்ணுகளப் பாத்து வெச்சாரு. தாசு அத்தான் வந்த ஒடனே நாலு பொண்ணுகளோட படத்தையும் காட்டுறது. எந்தப் பொண்ண அதுக்குப் புடிக்குதுன்னு சொல்லுதோ, அந்தப் பொண்ண போயி பாக்க வைக்கிறது. பொண்ண பாத்ததும் தாசு அத்தானுக்குப் பொண்ண பிடிச்சிருந்தா பொண்ணு வூட்டுலேந்து ஒரு பொட்டுத் தங்கம் போடாட்டியும் கலியாணத்தெ முடிச்சி சுப்பு வாத்தியாரு மின்னாடி தான் யாருங்றதெ காட்டணும்னு நின்னாரு சின்னவரு.
            தாசு அத்தானுக்குச் செய்யுவ கட்டிக்கிட முடியலங்றதுல தாங்க முடியாத வருத்தம். வேற வழியில்லாம அப்பங்காரரு காட்டுன பொண்ணுகளோட படத்தைப் பாத்து நாலு பொண்ணுகளையும் போயிப் பாத்துச்சு. அதுல நெய்ப்பேரு பொண்ணப் போயி பாத்ததுல அதுக்குப் பிடிச்சிருந்துச்சு. நெய்ப்பேரு பொண்ணோட அப்பங்காரரும் பொண்ணுக்கு நல்ல எடமா ரொம்ப நாளா தேடி அலுத்துப் போயிருந்தாரு.  அவரு கவர்மெண்டு பஸ்ல ஓட்டுநரா ஓடிட்டு இருந்தாரு. தாசு அத்தானப் பத்தி, வெளிநாட்டு வேல, சம்பளம் பத்தில்லாம் தெரிஞ்சதும் அவருக்கு மாப்புள்ளையப் பிடிச்சிப் போச்சு. ஒரு மாசத்துலயே கலியாணத்தெ வெச்சி முடிச்சிப்புடுவோம்ன்னு நின்னாரு அவரு. பெறவென்ன அட்றா பத்திரிகைய, கட்றா தாலிங்ற அளவுக்கு வேல மலமலன்னு நடக்க ஆரம்பிச்சுது. தாசு அத்தான் ஊருக்கு வந்த நாள்லேர்ந்து சரியா ஒரு மாசத்துல கலியாணத்துக்கான தேதிய நிச்சயம் பண்ணாங்க.
            சின்னவரும், பொண்ணோட அப்பங்காரருமா பத்திரிகைய எல்லாத்தையும் ஒரே நாள்ல அச்சாபீஸ்ல உக்காந்து அடிச்சி முடிச்சி  அடுத்த நாளே அவுங்கவங்க குல தெய்வத்துக்கு வெச்சுட்டு சொந்தப் பந்தங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. சின்னவரு உஞ்ஞினி அய்யனாருக்கு மொத பத்திரிகையை வெச்சிட்டுப்புட்டு, அதுக்கு அடுத்த நாள்லேந்து சொந்தப் பந்தங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. கலியாணத்துக்கு பத்து நாளு இருக்குறதுக்கு மின்னாடியே ஒருத்தரு பாக்கியில்லாம எல்லாத்துக்கும் பத்திரிகையக் கொடுத்து முடிச்சாரு. ஆன்னா, அதுல மச்சாங்கார்ரேங்ற மொறைக்குச் சுப்பு வாத்தியாருக்குக் கொடுக்க வேண்டிய பத்திரிகை மட்டுந்தாம் பாக்கியிருந்துச்சு. அதுக்கு மின்னாடி பொண்ணோட வூட்டுலேந்து கூட மாப்புள்ளையோட தாய்மாமேங்றதால சுப்பு வாத்தியாருக்கு நேர்ல வந்து பத்திரிகையை மொறையா வெச்சுட்டுப் போனாரு பொண்ணோட அப்பங்காரரு.
            சின்னவரு வூட்டுலேந்து மொறையா வர வேண்டிய பத்திரிகைய, சென்னைப் பட்டணத்துலேந்து கார்த்தேசு அத்தானும், நீலதாட்சி அத்தாச்சியும் கலியாணத்துக்காக மூணு நாளைக்கி மின்னாடி வந்தப்போ அவுங்ககிட்டெ கொடுத்து சுப்பு வாத்தியாருக்கு வைக்க வெச்சாரு சின்னவரு. பத்திரிகையக் கொண்டாந்து வெச்ச கார்த்தேசு அத்தான் சுப்பு வாத்தியாருகிட்டெ, "யப்பா வரலேன்னு எத்துவும் நெனைச்சிக்க வாணாம் மாமா! அதுக்கு கலியாணச் சோலி அம்புட்டுக் கெடக்கு! அதாங் வர முடியல. ஒத்த ஆளா இஞ்ஞ வேலங்குடியில கெடந்து செருமப்பட்டுப் போச்சு. அதாலத்தாம் நம்மள அனுப்பி வுட்டுச்சு!"ன்னு. கூட வந்த நீலதாட்சி அத்தாச்சியும், "யப்பா! தாய்மாமேங்ற மொறையில நீஞ்ஞ வந்துத்தாம் கலியாணத்தெ நடத்திக் கொடுக்கணும். அவுங்க பெரியவங்க குடும்பத்துலேந்தும் யாரும் வார மாட்டாங்க, விருத்தியூர்லேந்தும் யாரும் வார மாட்டேங்ற நெலையில அத்தை வூட்டுச் சொந்தம்ன்னா அத்து நீஞ்ஞ மட்டுந்தாம். நீஞ்ஞ அவசியம் கல்லாணத்துக்கு மொத நாளே வந்து நின்னு கலியாணத்தெ நல்லபடியா முடிச்சிக் கொடுக்கணும்!  எலே யம்பீ! விகடு நீந்தாம் எல்லாத்தையும் அழைச்சாந்து வந்து சேரணும். அத்து ஒம் பொறுப்பு!"ன்னுச்சு.
            சொந்தபந்தங்க சொல்றபடியா நடக்க முடியுது? யில்ல நடத்த முடியுது? விகடுவால தாசு அத்தானோட கலியாணத்துக்கு குடும்பத்துல எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு அழைச்சிட்டுப் போவ முடியல. சின்னவரோ, ரசா அத்தையோ வந்து பத்திரிகைய வைக்காத காரணத்தால சுப்பு வாத்தியாரு கலியாணத்துக்கு வார முடியாதுன்னுட்டாரு. விகடுவையும், ஆயியையும் மட்டும்தாம் அனுப்ப முடியும்னாரு. "அவரு சின்னத்தாம் மவனையும், மருமவளையும் அனுப்பித்தானே பத்திரிகெ வெச்சாரு. நாமளும் மவனையும், மருமவளையும் மட்டும் அனுப்பி வைக்கிறேம்!"ன்னு அதுக்கு ஒரு காரணத்தையும் சொன்னாரு.

            தாசு அத்தான் கலியாணத்துக்குப் போவுறதுக்கு மின்னாடி இன்னொரு வார்த்தையும் சொன்னாரு சுப்பு வாத்தியாரு, "கலியாணத்துக்குப் போனமா, தாலியக் கட்டுனதும் வந்தோமான்னு இருக்கோணும்டாம்பீ! அநாவசியமா அங்ஙன நிக்கக் கூடாது. செய்மொறையிலாம் நெறைய செஞ்சாச்சு. ஐயாயிரத்து பணத்தெ மட்டும் செய்வினையா மாப்புள வூட்டுப் பக்கமும், ஆயிரத்து ரூவாய பொண்ணு வூட்டுப் பக்கமும் எழுதிட்டு வந்துப்புடு. கலியாணத்துல சாப்புடாம எங்காச்சிம் கெளப்புக் கடையா பாத்துச் சாப்புட்டு வந்தாக் கூட சந்தோஷந்தாம்! அங்க நின்னு சாப்புடணும்னு அவசியமில்லே! ஏம் அந்த வூட்டுச் சாப்பாடு நமக்கு?"ன்னு சொல்லி அனுப்புனாரு. அவர்ர என்னத்தெ சொல்லியும் விகடுவால சமானதானத்தப் படுத்த முடியல. புருஷங்காரரு வாரம தாம் மட்டும் என்னத்தெ வாரதுன்னு வெங்குவும் வார முடியாதுன்னு சொல்லிப்புடுச்சு.
            தாசு அத்தானோட கலியாணம் திருவாரூர்ல கீழ வீதியில இருந்த விசாலாட்சி மண்டபத்துல நடந்துச்சு. விகடுவும், ஆயியும் ரண்டு பேரு மட்டும் கலியாணத்துக்குப் போனா, ரசா அத்தை அதெ பாத்துப்புட்டு அழுகாச்சிய வைக்குது. "நம்மள கட்டிக்கிட்டவேம்தாம் பிடிவாதக்காரனா இருக்காம்ன்னா, எந் தம்பியும் அப்பிடியே இருக்கானே! இத்தனெ நாளும் யில்லாத பிடிவாதம் இப்போ எப்பிடி வந்துச்சு? நாமாளவது கூட போயி பத்திரிகைய வைக்கலாம்னு நெனைச்சா ஒஞ்ஞ மாமங்கார்ரேம் வுட மாட்டேங்றாம். கலியாண நேரத்துல குடும்பத்துல ஒருத்தருக்கொருத்தரு ஏறுக்கு மாறாவா நிக்க முடியும்? இத்தனெ நாளும் ஒம் மாமன் பண்ணாதத என்னத்தெ புதுசா பண்ணிப்புட்டாரு? இப்போ என்னவோ அவரு புதுசா என்னத்தையோ செய்யுறதா நெனைச்சிட்டு இருக்கானே எந் யம்பீ! இதல்லாம் வழக்கந்தானே. கலியாணங் காட்சி முடியட்டும் ஒரு நாளு வந்தாத்தாம் அவ்வேம் ஒங்கப்பம் சரிபெட்டு வருவாம்!"ன்னுச்சு ரசா அத்தை.
            விகடுவுக்கும், ஆயிக்கும் இத்த பாக்க தர்மசங்கடமா போயிடுச்சு. எதெ சொல்லி ஆறுதல் பண்ண நெனைச்சாலும், அந்த ஆறுதல் வார்த்தையிலேந்து புலம்பலும், ஆத்தாமையும் அது பாட்டுக்குக் கதெ கதாய கெளம்பி வருது. "வாராதவங்கள நெனைச்சி ஆத்தாமையால அலமலந்துப் போறதுக்கு வந்தவங்கள நெனைச்சி மனசெ ஆத்திக்கிட்டா ன்னா?"ன்னு கேட்டா, "வந்த நீங்கத்தாம் மொத நாளு ராத்திரியே வந்தாத்தாம் ன்னா? கலியாண நேரத்துக்கு தலையக் காட்டிப்புட்டுப் போறாப்புல வார்றீங்களே?"ன்னு அதுக்கும் ஒரு அழுகாச்சிய வைக்குது ரசா அத்தை. எந்தப் பக்கம் அடியெடுத்து வெச்சாலும் அந்த எடம் பொதைகுழியப் போல அழுந்திகிட்டு வாங்குனா எந்த தெசையில காலடி எடுத்து வைக்குறதுன்னு கொழப்பமா, யோஜனையப் பண்ணிக்கிட்டு அதுக்குப் பெறவு விகடுவும் செரி, ஆயியும் செரி ஒரு வார்த்தெ பேசல. எதெச் சொன்னாலும் சரித்தாம் சரித்தாம்ங்ற மாதிரிக்கி தலைய ஆட்டுறதோட நிறுத்திக்கிட்டாங்க.
            அந்தக் கதிக்கு ஆளாளுக்கு ஒரு கதெய வெச்சா எப்படா கலியாணம் நடந்து முடியும்னு ஆயிடுச்சு ரண்டு பேத்துக்கும். ஒரு வழியா சரிதாம்ன்னு கலியாணத்துல தாலி கட்டி முடிஞ்சு, நாகவல்லி முகூர்த்தமும் முடிஞ்சி, கெளம்பி ஓடுன்னா போதும்ன்னு விகடுவும் ஆயியும் நைசா கெளம்புன்னா கார்த்தேசு அத்தான் வந்து விகடுவெ பிடிச்சிக்கிட்டு. "சாப்புடாம போவாத மாப்ளே!"ன்னு சொல்லி கையப் பிடிச்சாந்து ரண்டு பேத்தையும் பந்தியில உக்கார வெச்சுப்புட்டு.
            அதுக்கு மேல திமிறிக்கிட்டா போவ முடியும்னு ரெண்டு பேரும் கலியாணச் சாப்பாட்ட சாப்புட்டுட்டுக் கெளம்புலாம்னு பாத்தா நீலதாட்சி அத்தாச்சி வுட மாட்டேங்குது. அவசியம் வூடு வரைக்கும் வந்துட்டுத்தாம் போவணும்னு நிக்குது. கலியாண மண்பத்துக்கு வந்துப்புட்டு வூட்டுக்கு வந்து கையி நனைக்காம எப்பிடிப் போவலாம்ன்னு நீலதாட்சி அத்தாச்சி அது ஒரு கேள்விய வைக்குது. அத்தோட கலியாண மண்டபத்துல அதுக்கு மேல நிக்கவும் முடியல. ஒறவுக்கார சனங்க ஒவ்வொண்ணும் ஏம் சுப்பு வாத்தியாரும் வெங்குவும் வாரல? ஏம் அவரு தம் பொண்ண தாசு அத்தானுக்குக் கொடுக்கல?ன்னு பிய்ச்சிப் புடுங்கி எடுக்குதுங்க. இந்தக் கேள்விக்குல்லாம் கலியாண மண்டபத்துல நின்னு எப்பிடிப் பதிலெச் சொல்றது? எதாச்சிம் பதிலெச் சொல்லிப் போவ, அத்து ச்சும்மா இருக்குற சனங்க வாயிக்கு அவலப் போட்டு மெல்லக் கொடுத்தாப்புல ஆயிட்டுன்னா என்னத்தெ பண்ணுறதுன்னு அது வேற ரண்டு பேத்துக்கும் கொழப்பமா இருக்கு.
            இருக்குற சூழ்நெலையில, இதுலேந்து எப்பிடி தப்பிச்சு வாரதுன்னு தெரியாம, பக்கத்துலயே கலியாணம் ஒண்ணுல கலந்துக்கிட வேண்டிருக்கிறதாவும், அதுல கலந்துகிட்டு ஒடனடியா திரும்பி வந்துப்புடுறதாவும் ஒரு பொய்ய அவித்து வுட்டு, சொல்லிட்டு எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி ஏறி வந்தவங்கத்தாம் விகடுவும், ஆயியும். ஏம்டா இந்தக் கலியாணத்துக்குப் போனோம்னு ஆச்சுது ரண்டு பேத்துக்கும், ஒலக்கை சும்மாத்தானே கெடக்குதுன்னு ச்சும்மா இருந்தவன் வாயில வெச்சு இடிச்ச கதையா. அதொட சின்னவரு வூட்டோட சம்பந்தம் அந்துப் போனாப்புல ஆயிடுச்சு. தங் குடும்பத்துலேந்து ரசா அத்தையக் கொடுத்து சுப்பு வாத்தியாருக்கு சின்னவரோட உண்டான ஒறவு, இப்போ தன்னோட பொண்ண கொடுக்காததால இல்லாமப் போச்சு.
            பொண்ணு மாப்புள அழைப்புக்குப் பிற்பாடு சம்பந்தம் கலக்குறதுக்கான கறி விருந்துக்கு கார்த்தேசு அத்தானும், தாசு அத்தானும் போன் பண்ணிக் கூப்புட்டுப் பாத்துச்சுங்க. அதுக்குல்லாம் போவக் கூடாதுங்றதுல சுப்பு வாத்தியாரு உறுதியா நின்னுப்புட்டாரு. நல்ல வேளையா அதுக்குப் போவச் சொல்லாம இருந்தார்ன்னு விகடுவுக்கும், ‍ஆயிக்கும் பெருமூச்சு வுடாத கொறைத்தாம். கலியாணத்துக்குப் போயி பல பேத்தோட வாயிய சமாளிக்க முடியாம திரும்புனவங்களுக்கு, கறி விருந்துக்குப் போவச் சொன்னா எப்பிடி இருந்திருக்கும்? என்னவோ அதுக்குப் போவாததுதாங் கடெசிங்ற மாதிரிக்கி, சுப்பு வாத்தியாருக்கும், சின்னவரு குடும்பத்துக்கும் இருந்த ஓட்டமும் அத்தோட நின்னுப் போச்சு.
            சுப்பு வாத்தியாரு தாசு அத்தானோட கலியாணத்துக்குப் போவலங்ற சேதியக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்ட முக்கியமான ஆளுன்னா அத்து சந்தானம் அத்தான்தான். அத்து தாசு அத்தானோட கலியாணம் முடிஞ்ச அன்னிய ராத்திரியே சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சி ஒரு மணி நேரத்துக்கு மேல பேசுனுச்சு. "ந்நல்ல வேளையா பொண்ணக் கொடுத்து நொம்பலப் படாம போனே மாமா! அவ்வேம் ஒறவால யப்பா பட்ட பாடு போதும். யப்பா உசுரு சீக்கரமே போனதுக்கு அவ்வனுவோ பண்ண பில்லி சூனியமும் ஒரு காரணந்தாம். அந்தப் பயலுகளுக்குப் பிடிக்காம போயிட்டா சொந்தக்காரனுவோன்னு கூட பாக்க மாட்டானுவோ. எதிரியப் போல நெனைச்சி சகல வெதத்துலும் பழிய வாங்க ஆரம்பிச்சிடுவானுவோ. நல்ல வேள எந்தச் சாமி செஞ்ச புண்ணியமோ தப்பிச்சிட்டே மாமா! நாமளும் வேண்டாத தெய்வமில்லே, மாமா மனசு மாறி பொண்ணுக் கொடுத்துடக் கூடாதுன்னு!" அப்பிடினுச்சு சந்தானம் அத்தான்.
            "நமக்குப் பொண்ணு கேட்ட காலத்துலயே பிடிக்கலம்பீ! மொகம் முறிஞ்சாப்புல ஆயிடக் கூடாதுன்னு நாமளும் குறிப்புக் காட்டுறாப்புல தள்ளித் தள்ளிப் பாத்தேம். புரிஞ்சிக்கிடுறாப்புல தெரியல. திருமருகல்லேந்து ஒரு நல்ல மாப்புளப் பையனா பாத்தேம். ஒஞ்ஞ அத்தையால தாட்டிக்கிட்டுப் போயிடுச்சு. ல்லன்னா இந்நேரத்துக்கு சின்னவரு கலியாணத்த முடிக்கிறதுக்கு மின்னாடி பொண்ணுக்குக் கலியாணத்தெ கட்டி வுட்டுப்புட்டு கடமெ முடிஞ்சுதுடான்னு உக்காந்திருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதல்லாம் கவலப்படாத மாமா! ந்நல்ல எடமா அமையும். நாமளும் பாக்குறேம் நல்ல எடமா. நீயிப் பாத்து ந்நல்ல எடமா அமைஞ்சாலும் செரித்தாம், நாம்ம பாத்து அமைஞ்சாலும் செரித்தாம். கலியாணத்தெ முடிச்சுப்புடலாம். இந்தக் காலத்துல பயலுகளுக்குத்தாம் பொண்ண தேடி கட்டி வைக்குறது செருமமா இருக்கு. பொண்ணுக்கு மாப்புள்ளயப் பாக்குறது ஒண்ணும் செருமமில்ல. நாளைக்கே கலியாணம்னாலும் பயலுக கட்டிக்கிட துடியா நிக்குறானுவோ!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அடுத்த கதையா சந்தானம் அத்தான் சொன்ன வாய் முகூர்த்தத்துக்கு ஏத்தாப்புல அடுத்தடுத்த சம்பவங்க நடக்க ஆரம்பிச்சுது.
*****


வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...