செய்யு - 490
லாலு மாமாவோட மவ்வேன் வேலன் இருக்காம்ல
அவ்வேம் சூரத்ல யெம்டி படிப்ப முடிச்சதும், கவலய அதிகம் பண்ணுறாப்புல, நம்மால கிளினிக்குலாம்
போட முடியாதுன்னுட்டாம். இம்மாம் படிப்பெ படிச்சுப்புட்டு வூட்டுலயா உக்காந்திருக்கப்
போறாம்? அவனுக்காக இருந்த சொத்தையல்லாம் ஊர்லேந்து வித்துப்புட்டு வந்து தஞ்சாவூர்ல
இப்போ அனாதியாக் கெடந்தா, இப்போ யாருத்தாம் தனக்குத் தொணென்னு லாலு மாமாவுக்குக்
கண்ணு கலங்காத கொறை. கிட்டதட்ட மவ்வேன் படிப்புக்காக லாலு மாமா பாதிச் சொத்த அழிச்சிருந்துச்சு.
பாதிச் சொத்து அழிஞ்சிருந்தா என்னா? அந்தப் படிப்ப வெச்சு வர்ற வருமானத்துல பத்து
மடங்கச் சொத்தச் சேத்துப்புடலாங்ற நம்பிக்கெ. இப்போ அந்த நம்பிக்கையில மண்ணள்ளிப்
போடுறாப்புலல்லா சொல்றாம் மவ்வேன்னு நெலைகொழைஞ்சுப் போயிடுச்சு லாலு மாமா.
"கிளினிக்கப் போட மாட்டேம்ன்னு சொன்னா
அதுக்கு வேலைக்குப் போறதில்லன்னு அர்த்தமில்லே, படிச்சப் படிப்புக்கு நெறைய ஆராய்ச்சில்லா
பண்ணணும். அதுக்கு ஏத்தாப்புல புரபஸரா பாடஞ் சொல்லிக்கிட்டு சம்பாத்தியத்துக்கு ஒரு
வழியப் பண்ணிக்கிட்டு, புரபஸராவே இருந்துகிட்டு ஆராய்ச்சிகள பண்ணணுங்றதுன்னு அர்த்தம்!"ன்னு
அப்பங்காரனுக்கு ஒரு பதிலெச் சொன்னாம் வேலன்.
இப்போ உள்ள புள்ளைங்கள பெத்தவங்க நெனைப்புக்குக்
கொண்டு வாரதுங்றது கொஞ்சம் கடிசான காரியந்தாம். புள்ளைங்களப் பத்திப் பெத்தவங்களுக்குன்னு
ஒரு பார்வே இருந்தா, அவுங்களுக்கு அவுங்களப் பத்தி வேறொரு பார்வெ இருக்கு. ரெண்டு
பார்வையும் ரண்டு கண்ணுலேந்து ஒத்தப் பார்வையா இருக்குறதில்ல. ரண்டும் ரெண்டு திக்குல
பாத்தா அந்தப் பார்வைய வெளங்கிக்கிற மூளைக் கொழம்பிப் போவாதா? அப்பிடித்தாம் ஆச்சு
லாலு மாமாவுக்கு. என்னத்தாம் அறிவெ வளத்துக்குறேம், பிடிச்சதப் படிக்கிறேம்ன்னு படிச்சாலும்
சம்பாத்தியத்தத் தரலன்ன அத்து என்ன படிப்புங்ற நெனைப்புள்ள ஆளுல்லா லாலு மாமா. வேலனுக்கு
சம்பாத்தியம் பெரிசா தெரியல. மெம்மெல ஆராய்ச்சிப் பண்ணிப் படிச்சிட்டுப் போறதுதாங்
பெரிசா தெரிஞ்சுச்சு.
லாலு மாமா வேலனெ நேரா நிப்பாட்டிக் கேட்டே
புட்டாரு. "புரபஸரா போவணும்னு நிக்குதீயேடா?
சம்பளம் எம்மாம்டா வரும் மாசத்துக்கு?"ன்னு.
"ன்னா மாசம் இருபதினாயிரம் தருவாம்!
அதுக்கு மேலயா தர்றப் போறாம்?"ன்னுச்சு வேலன் அலட்சியமா.
மாசம் இருபதினாயிரம்ன்னு சொன்னதும் லாலு
மாமாவுக்கு மனசு துண்டு துண்டா போறாப்பு இருந்துச்சு. நாம்ம வாத்தியார்ரா நின்னு கெட்டது
பத்தாதுன்னு இவ்வேம் வேற வாத்தியார்ரா நிக்கணும்னு நிக்குறானா? அதுக்கு எதுக்கு இவ்வேம்
டாக்கடருக்குப் பெரிய படிப்பெல்லாம் படிச்சாம்? பேயாம வாத்தியாருக்கே படிச்சித் தொலைச்சிருக்கலாமே!
டவுன்ல நாலு வூட்டக் கட்டி வுட்டு மாசத்துக்கு வாடகெ ஒரு வூட்டுக்கு ஐயாயிரத்து ரூவாயின்னு
சொன்னாலும் கூட இருபதினாயிரம் ரூவாய நோவாம, கொள்ளாம ஒரு வருஷத்துல நாலு வூட்டையும்
கட்டிப் போட்டு மறுவருஷத்துலேந்து சம்பாதிக்கலாமே! இந்தப் பய என்னான்னா எட்டு ஒம்போது
வருஷத்துக்கு மேல படிச்சிப்புட்டு மாசத்துக்கு இருபதினாயிரந்தாம் சம்பாதிக்கிலாங்றானேன்னு
லாலு மாமாவுக்கு மனத்தாங்கலா போயிடுச்சு.
படிக்காம கெடக்குறவனெல்லாம் மாசத்துக்கு
பாஞ்சாயிரம், இருவதினாயிரம்ன்னு சம்பாதிக்கிறப்போ, அத்தனெ வருஷம் படிச்சிப்புட்டு
படிச்சவனும் இருவதினாயிரம்ந்தாம் சம்பளம்ன்னா எப்பிடின்னு அதெ லாலு மாமாவோட மனசால
ஏத்துக்கிட முடியல. ஒண்ணுமே முதலீடெ போடாம ஒடம்ப மூலதனமா வெச்சி ஒழைக்கிறவனெ நாளுக்கு
முந்நூறு, நானூறுன்னு சம்பாதிச்சா மவ்வேன் இத்தனெ வருஷ படிப்ப முதலீடா வெச்சு இம்மாம்தாம்
சம்பாதிக்க முடியும்னு சொல்றானேங்ற ஆத்தாம தாங்க முடியல லாலு மாமாவுக்கு.
லாலு மாமாவுக்கு மனசுல வேற ஒரு கணக்கும்
ஓட ஆரம்பிச்சிது. மாசத்துக்கு இருவதினாயிரம்ன்னா, வருஷத்துக்கு ரண்டு லட்சத்து நாற்பதினாயிரம்.
வேலனெ படிக்க வெச்ச கணக்குல பியெயெம்மஸ், யெம்டின்னு படிப்புச் செலவுக்கு மட்டும் இருவத்து
அஞ்சு லட்ச ரூபாய்க்கு மேல. மித்த சாப்பாட்டுச் செலவு, உடுப்புக்கான செலவு, தங்குன
எடத்துக்கான செலவு, வாங்குன புத்தகத்துக்கான செலவு, போயிட்டு வந்ததுக்கான செலவெல்லாம்
அது தனி. எப்படியும் எல்லாத்தியும் சேர்த்தா முப்பது லட்சத்து ரூவாய நெருங்குனுச்சு.
அதெ அப்பிடியே வருஷத்துக்கு பத்து சதவீத வட்டித் தர்ற பேங்குல போட்டுருந்தாவே மாசத்துக்கு
மூணு லட்சத்து ரூவாயத் தருவாம். இவ்வேம் என்ன அதுக்கும் அறுபதினாயிரம் கம்மியா வருஷத்துக்கு
ரண்டு லட்சத்து நாப்பதுனாயிரந்தாம் கெடைக்கும்ன்னு சொல்றாம்ன்னு நெனைச்சுச்சு லாலு
மாமா.
படிக்காமலே ச்சும்மா அந்தக் காசிய வெச்சிருந்தாவே
அம்மாம் சம்பாதிச்சுப் போட்டுடும்ன்னா, அம்மாம் காசிய செலவு பண்ணிப் படிச்சவேம் அந்த
அளவுக்காவது காசிய எடுக்க வேண்டாமாங்ற வெசனக் கடுப்பு வந்துடுச்சு லாலு மாமாவுக்கு.
பேசாம வேலனெ வாத்தியாரு வேலைக்காவது படிக்க வெச்சு காசியக் கொடுத்தாவது மேனேஜ்மெண்டு
பள்ளியோடத்துல வேல வாங்கியிருந்தாலாச்சும் சம்பளம் அதெ வுட அதிகமால்ல கெடைக்கும்ன்னு
நொடிக்கு நொடி பலவெதமா சொழண்டு சுத்துது லாலு மாமாவுக்குச் சிந்தனெ.
வாத்தியாரு வேல கூட வாணாம். ஒரு பள்ளியோடத்தக்
கட்டிப் போட்டு இந்தப் பயலெ பள்ளியோடத்தப் பாத்துக்கிடச் சொல்லிருந்தாவே வருஷத்துக்கு
லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்ன்னா, இந்தப் பயெ வருஷத்துக்கே ரண்டரை லட்சங் கூட வருமானம்
வாராத வேலையப் பத்திச் சொல்றானேன்னு வெத வெதமா கவலெ லாலு மாமாவுக்கு.
வாத்தியாரு வூட்டுப் பயலுவோ எவ்வேம் இப்போ
வாத்தியார்ரா இருக்காம்? எல்லாம் டாக்கடருங்களாத்தானே போறாம்ன்னு நெனைச்சு டாக்கடரு
படிப்புக்கு, அதுவும் அதெ வுட மேப்படிப்புள்ள டாக்கடருக்குப் படிக்க வெச்சா மாசம் இருபதினாயிரம்தாம்
வருமானம்ன்னு கேள்விப்பட்டதும் வெறுத்துப் போச்சுது லாலு மாமாவுக்கு. நல்ல வேளையா
இஞ்சினியரு வேலைக்குப் படிக்க வைக்காம போனதெ நெனைச்சு ஒரு வகையில ஆறுதலு பட்டுக்கிடுச்சு
லாலு மாமா. அதெ படிக்க வெச்சிருந்தா ரண்டாயிரம் ரூவாயிக்குக் கணக்கெழுதப் போறேம்னு
சொல்லிட்டு உக்காந்தாலும் உக்காந்துடுவாம் தம் மவ்வேன்னு நெனைச்சப்பவே லாலு மாமாவுக்குச்
சிரிப்பு வந்துடுச்சு. ஒரு நேரம் புள்ளைகள நெனைக்குறப்ப கடுசா இருந்தாலும், மறுநேரம்
அதெ கொஞ்சம் மாத்தி நெனைக்குறப்போ சிரிப்பாணித் தாங்க முடியுறதில்ல.
அதுக்காகவெல்லாம் வுட்டுட முடியுமான்னு,
வேலங்கிட்டெ, "எலெ பேயாம நீயி பாலாமணிப் பயெ கவர்மெண்டு டாக்கடர்ர போறதக்கு மின்னாடி
கிளினிக்கப் போட்டு சம்பாதிச்ச மாதிரிக்கிச் சம்பாத்தியத்தப் பண்ணுடா. கவர்மெண்டு
பரீட்செ வந்தா அதுக்கும் எழுது. வேல கெடைச்சா வேல. இல்லாட்டி கிளினிக்குப் பாட்டுக்கு
கிளினிக்குப் போயிட்டு இருக்கட்டும்டா!"ன்னு கொஞ்சம் எளகுனாப்புல மறுக்கா சொல்லிப்
பாத்துச்சு லாலு மாமா.
"நாம்ம படிச்சப் படிப்புக்கு கிளினிக்
போட்டுல்லாம் வேல பாக்க முடியாது. இத்து எம்மாம் பெரிய படிப்புத் தெரியுமா? படிப்புக்கு
ஏத்த மாதிரித்தாம் வேல பாக்க முடியும். விருப்பம்ன்னா சொல்லு. இல்லாட்டி வூட்டுலயே
இருந்துடறேம்! ஒமக்குத்தாம் மாசம் ஆன்னா ரண்டு பென்சன்லா வருது. அதெ வெச்சுப் பாத்துக்கிட்டா
போச்சு. ரண்டு பென்சன்ன வாங்கி அனுபவிக்காமவே போயிடக் கூடாது பாரு! நாமளும் ஒமக்குத்
தொணையா தஞ்சார்லயே இருந்தாப்புலயும் ஆயிடும். நமக்கும் மனசுக்கு ஒவ்வாம ஒரு வேல பாக்காம
இருந்தாப்புலயும் ஆயிடும்!"ன்னு வேலன் சொல்லப் போவ, லாலு மாமா செரித்தாம்ன்னு
வேலனோட போக்குக்கே வுட்டுப்புடுச்சு.
இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு ஆசெ, மவனெ
நல்லா வருமானம் பாக்குற வேலையாப் பாத்து அனுப்பி வுட்டுப்புடுணும்ன்னு. அதுக்காக ஆயுர்வேதத்துல
சோப்பு தயாரிக்கிற கம்பெனிக, பற்பொடி தயாரிக்கிற கம்பெனிக, ஆயுர்வேத எண்ணெய்க தயாரிக்கிற
கம்பெனிக வேலைக்குத் தேவைன்னு தெனசரித் தாள்ல வெளம்பரம் கொடுத்தா போதும் லாலு மாமா,
மவனெ கேக்காமா அந்த வேலைக்கு எழுதிப் போட்டு வுட்டுடும். கம்பெனியில அழைப்புக் கடிதம்
வந்தா அன்னிக்கு அப்பாருக்கும் மவனுக்கும் சண்டெ கலை கட்டும். அந்த வேலைக்குப் போவணும்ன்னு
லாலு மாமா ஒத்தக் கால்ல நிக்கும். அந்த வேலைக்குல்லாம் போவ மாட்டேம்ன்னு வேலன் ஒத்தக்
கால்ல நிப்பாம். எவ்வளவு நேரந்தாம் ரெண்டு பேரும் ஒத்தக் கால்ல நிக்க முடியும். யாராச்சிம்
ஒருத்தராவது ஒரு கால்ல எறக்கி வெச்சித்தானே ஆவணும்.
எந்தக் காலத்துல புள்ளைங்க எறங்கி வந்திருக்குங்க?
அதுவும் ஒத்த ஆம்பளெ புள்ளைன்னு செல்லாம வளக்குற ஆம்பளெ புள்ளைங்க ஒரு காலத்துலயும்
எறங்கி வரவே வாரதுல்ல. பெத்தவங்கத்தாம் எறங்கி வார்ற வேண்டியிருக்கு. லாலு மாமா எறங்கி
வந்துச்சு. "ஒம்ம நெனைப்புப்படி என்னத்ததாம் பண்ணப் போறே?"ன்னு கேட்டுச்சு
லாலு மாமா.
"நாம்ம படிச்ச சூரத்து காலேஜ்ல எழுதிப்
போட்ருக்கேம்ப்பா! அஞ்ஞயே புரபஸரா வேல கெடைச்சாப் போயிடுவேம்!"ன்னாம் வேலன்.
"அடப் பாவிப் பயெ மவனே! ஒன்னயப் பாக்கணும்னு
நெனைச்சா கூட நாம்ம சூரத்துல்லடா ரயிலேறி வாரணும். இருக்குற ஒடம்புக்கும், ஆயிருக்குற
வயசுக்கும் அதெல்லாம் இனுமெ முடியுமாடா? தஞ்சார்லயே பார்றேம்டா!"ன்னுச்சு லாலு
மாமா.
"ஆங் தஞ்சார்ல எவ்வேம் அம்மாம் பெரிய
காலேஜ்ஜ ஆயுர்வேதத்துக்குக் கட்டி வெச்சிருக்காம்? மெட்ராஸ்ல சென்னப் பட்டணத்துலயே
ஒண்ணுத்தாம் இருக்கு!"ன்னாம் வேலன்.
"ஏம்டா யப்போ சென்னைப் பட்டணத்துக்
காலேஜூக்காவது எழுதிப் போடுடா மவனே!"ன்னுச்சு லாலு மாமா. எல்லா விசயத்துலயும்
அப்பங்காரரு சொல்ல தாட்டிக்கிட்டே போவக் கூடாதுன்னு, இந்த ஒரு விசயத்துலயாவது அப்பங்காரரு
சொல்லக் கேப்போம்ன்னு நெனைச்சு வேலன் மெட்ராஸ்ல இருந்த ஆயுர்வேத காலேஜூக்கு எழுதிப்
போட்டதுல அங்க புரபஸர் வேல கெடைச்சிது. இந்த ஒரு விசயத்துலயாவத அப்பன் சொல்ல கேட்டானே
மவன்னு லாலு மாமாவுக்குச் சந்தோஷம். அத்தோட வாரா வாரம் தஞ்சாருக்கு வந்துட்டுப் போவணும்ன்னு
சொன்னுச்சு லாலு மாமா. ஒரு ரண்டு மாசம் அந்தப் படிக்கு வந்துட்டப் போன வேலனுக்கு
அதுக்குப் பெறவு அலுத்துப் போச்சுது. எப்பயாவது நெனைச்சா வர்றது. வார்ற முடியாமப்
போறப்ப அப்பங்காரரே மெட்ராஸூக்கு வாரச் சொல்லுறதுன்னு வேலன் நடந்துக்க ஆரம்பிச்சாம்.
மவனுக்குப் படிப்பு முடிஞ்சி, திருப்தியோ
இல்லையோ ஒரு வேலைக்கும் போயாச்சு. வயசும் ஆயாச்சு. மவனுக்கு ஒரு கதைய கட்டி வுடணும்ங்ற
நெனைப்பு உண்டான பெற்பாடு, லாலு மாமா மவனுக்குப் பொண்ணத் தேட ஆரம்பிச்சிது.
பொண்ணு தேடுனா இப்போல்லாம் சாதகத்தோட
மாப்புள்ளையோட மாச வருமானம், படிப்பு, உடன்பொறப்புகளோட எண்ணிக்கை, அதுல கலியாணம்
ஆனவங்க எத்தனெ பேரு, கலியாணம் ஆவாதவங்க எத்தனெ பேருன்னு அந்த வெவரத்தையெல்லாம் சேத்துல்லா
கொடுக்க வேண்டிக் கெடக்கு. அந்தக் கதிக்கு வெவரத்தைக் கொடுத்ததுல சாதகப் பொருத்தம்
அமைஞ்ச பெற்பாடு, உடன்பொறந்தவங்களுக்குல்லாம் கலியாணம் ஆனதால அத்து பரவாயில்ல, இவ்வேம்
ஒருத்தந்தாம் ஆம்பளெ புள்ளங்றதால அதுவும் பரவாயில்ல, மாப்புள்ளயோட படிப்பப் பாத்தா
பரவாயில்ல, வருமானத்தப் பாத்தா அதுத்தாம் கொஞ்சம் இடிக்கிதுன்னு நெறைய பொண்ணு வூட்டுக்கார்ரேம்
தாட்டி வுடுறாம்.
லாலு மாமாவுக்கு டாக்கடரு படிப்பு படிச்ச
மவனுக்கு கெளரவமான பெரியக் குடும்பத்துல பொண்ண எடுக்கணும்ன்னு ஆசெ. அப்பிடி லாலு மாமா
எதிர்பாக்குற குடும்பத்துல பொண்ண வெச்சிருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் மாப்புள்ளயோட
மாசாந்திர வருமானம் கூடுதலா இருக்கணும்ன்னு ஆசெ. இந்த ரண்டு ஆசைகளும் ஒத்து வாராத காரணத்தால
லாலு மாமா மவ்வேம் சாதகத்த வெச்சிக்கிட்டு ஆளா பறக்குறாப்புல ஆயிடுச்சு. எவ்வளவு எடந்தாம்
அலைஞ்சுப் பாக்குறதுன்னு லாலு மாமாவே வெறுத்துப் போச்சு ஒரு கட்டத்துல. ஒரு சில எடங்க
ஒத்து வந்து மாப்புள்ளையப் பாத்தவனுங்க மாப்புள இந்த வயசுக்கே அம்மாம் குண்டா இருந்தா
நாப்பது வயசுக்கு வெடிச்சேப் போயிடுவாம் போலருக்கேன்னு வேண்டாம்ன்னு கைய கழுவிட்டுப்
போயிட்டாம். வேலன் பன்னெண்டாவது படிக்குற வரைக்கும் ஒல்லிப்பிச்சானத்தாம் இருந்தாம்.
என்னிக்கு டாக்கடருக்குப் படிக்கப் போறேம்ன்னு படிக்கப் போனான்னோ அன்னிய தேதியிலேந்து
பெருக்க ஆரம்பிச்சவந்தாம். வடக்கு தெக்கான வளர்ச்சி நின்னுப் போயி கெழக்கு மேற்கா
வளர்றாப்புல ஊதிப் போவ ஆரம்பிச்சாம். அப்பிடியே அப்பன், ஆயி ஒடம்புக்கு வந்துட்டு
இருக்காம் வேலன்னு ஒறவுக்கார சனங்க பேச ஆரம்பிச்சதுங்க வேலனோட ஒடம்பப் பாத்துட்டு.
அப்பத்தாம் லாலு மாமாவுக்கு ஒரு யோசனெ.
கையில வெண்ணெய்ய வெச்சுக்கிட்டு, ஏம் நெய்யிக்கு அலையணும்ன்னு. தங்காச்சிப் பொண்ணு
பிந்துவ வேலனுக்குக் கேட்டுப் பாத்தா என்னான்னு ஒரு யோசனெ. ஒறவு மொறையிலயும் சரியா
வருது. தங்காச்சிப் பொண்ணே மருமவளா வாரதால பிற்காலத்துல ஒரு பெரச்சனையும் வாராது.
படிப்பும் ரண்டு பேத்துக்கும் இருக்கு. அத்தோட ஒடம்பும் ரண்டு பேத்துக்கும் ஒண்ணா
நிக்க வெச்சுப் பாத்தா பொருத்தப்பாட போயிடும். பிந்துவுக்கும் மாப்புள பாத்து அமைய
மாட்டேங்குது. வேலனுக்கும் பொண்ணுப் பாத்து அமைய மாட்டேங்குது. ஆக எல்லா வெசயத்துலயும்
ஏதோ ஒரு பொருந்தம் பொருந்தி வாரதால இத்து சரியா இருக்கும்னு நெனைச்சு அந்த நெனைப்பு
ருசு பட்டதும் ஒடனே பாக்குக்கோட்டைக்கு வண்டியப் பிடிச்சி போயி எறங்கி சரசு ஆத்தாகிட்டெ
பேசுனுச்சு லாலு மாமா. சரசு ஆத்தா ராசாமணி தாத்தாகிட்டெ பேசுனுச்சு. ராசாமணி தாத்தா
பாலாமணிகிட்டே பேசுனுச்சு. பாலாமணி சித்துவீரன்கிட்டெ பேசுனுச்சு. இத்து ஒரு சொழற்சி.
இந்த மொறையிலத்தாம் முடிவு பாக்குக்கோட்டையில வந்தாவும்.
*****
No comments:
Post a Comment