25 Jun 2020

அந்துப் போன உறவு!

செய்யு - 488

            சுப்பு வாத்தியாரு பொண்ண கொடுக்கலங்ற ஆத்திரம் சின்னவருக்கு. அதெ நேரத்துல பயணத்துலேந்து கலியாணம்னு நெனைச்சி வர்ற மவன் ஏங்கி நின்னுப்புடக் கூடாதுன்னு, அதுக்கு எதாச்சிம் ஒரு பொண்ண பாத்து நெனைச்சது நெனைச்சபடிக்கிக் கலியாணத்த முடிச்சி சுப்பு வாத்தியாரு மூக்கெ ஒடைக்கணுங்ற வெறி வந்துடுச்சு சின்னவருக்கு. இதுவரைக்கும் சொந்தத்துல கொடுக்குறதுக்கு என்னத்தெ சாதகத்தப் பாக்குறதுன்னு இருந்த சின்னவரு, தாசு அத்தானோட சாதகத்தத் தூக்கிட்டு மஞ்சப் பையோட கெளம்பிட்டாரு. தங் கண்ணுலேந்து ஊரு ஒலகத்துல இருக்குற எந்த பொண்ணும் விடுபட்டுடக் கூடாதுங்ற அளவுக்கு கண்ணுல வெளக்கெண்ணெய்ய விட்டுக்கிட்டு அலைஞ்சாரு. போவாத ஊரில்ல, பாக்காத பொண்ணுல்லங்ற அளவுக்கு அலைஞ்சாரு. அவரு ‍அலையுற வேகத்துக்குப் பத்து புள்ளைக்கு பொண்ணு பாத்து முடிச்சிடுவாரு போல இருந்துச்சு.
            தாசு அத்தான் ஊருக்கு வந்து சேர்றதுக்கு பாஞ்சு நாளு இருந்துச்சு. அந்தப் பாஞ்சு நாளு இடைவெளியில நெய்ப்பேருல ஒரு பொண்ணு, விளாமுத்தூர்ல ஒரு பொண்ணு, சம்மட்டிக்குடிகாட்டுல ஒரு பொண்ணு, கீழமணலியில ஒரு பொண்ணுன்னு ஒண்ணுக்கு நாலா சாதகப் பொருத்தத்துக்கு ஏத்தாப்புல பொண்ணுகளப் பாத்து வெச்சாரு. தாசு அத்தான் வந்த ஒடனே நாலு பொண்ணுகளோட படத்தையும் காட்டுறது. எந்தப் பொண்ண அதுக்குப் புடிக்குதுன்னு சொல்லுதோ, அந்தப் பொண்ண போயி பாக்க வைக்கிறது. பொண்ண பாத்ததும் தாசு அத்தானுக்குப் பொண்ண பிடிச்சிருந்தா பொண்ணு வூட்டுலேந்து ஒரு பொட்டுத் தங்கம் போடாட்டியும் கலியாணத்தெ முடிச்சி சுப்பு வாத்தியாரு மின்னாடி தான் யாருங்றதெ காட்டணும்னு நின்னாரு சின்னவரு.
            தாசு அத்தானுக்குச் செய்யுவ கட்டிக்கிட முடியலங்றதுல தாங்க முடியாத வருத்தம். வேற வழியில்லாம அப்பங்காரரு காட்டுன பொண்ணுகளோட படத்தைப் பாத்து நாலு பொண்ணுகளையும் போயிப் பாத்துச்சு. அதுல நெய்ப்பேரு பொண்ணப் போயி பாத்ததுல அதுக்குப் பிடிச்சிருந்துச்சு. நெய்ப்பேரு பொண்ணோட அப்பங்காரரும் பொண்ணுக்கு நல்ல எடமா ரொம்ப நாளா தேடி அலுத்துப் போயிருந்தாரு.  அவரு கவர்மெண்டு பஸ்ல ஓட்டுநரா ஓடிட்டு இருந்தாரு. தாசு அத்தானப் பத்தி, வெளிநாட்டு வேல, சம்பளம் பத்தில்லாம் தெரிஞ்சதும் அவருக்கு மாப்புள்ளையப் பிடிச்சிப் போச்சு. ஒரு மாசத்துலயே கலியாணத்தெ வெச்சி முடிச்சிப்புடுவோம்ன்னு நின்னாரு அவரு. பெறவென்ன அட்றா பத்திரிகைய, கட்றா தாலிங்ற அளவுக்கு வேல மலமலன்னு நடக்க ஆரம்பிச்சுது. தாசு அத்தான் ஊருக்கு வந்த நாள்லேர்ந்து சரியா ஒரு மாசத்துல கலியாணத்துக்கான தேதிய நிச்சயம் பண்ணாங்க.
            சின்னவரும், பொண்ணோட அப்பங்காரருமா பத்திரிகைய எல்லாத்தையும் ஒரே நாள்ல அச்சாபீஸ்ல உக்காந்து அடிச்சி முடிச்சி  அடுத்த நாளே அவுங்கவங்க குல தெய்வத்துக்கு வெச்சுட்டு சொந்தப் பந்தங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. சின்னவரு உஞ்ஞினி அய்யனாருக்கு மொத பத்திரிகையை வெச்சிட்டுப்புட்டு, அதுக்கு அடுத்த நாள்லேந்து சொந்தப் பந்தங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. கலியாணத்துக்கு பத்து நாளு இருக்குறதுக்கு மின்னாடியே ஒருத்தரு பாக்கியில்லாம எல்லாத்துக்கும் பத்திரிகையக் கொடுத்து முடிச்சாரு. ஆன்னா, அதுல மச்சாங்கார்ரேங்ற மொறைக்குச் சுப்பு வாத்தியாருக்குக் கொடுக்க வேண்டிய பத்திரிகை மட்டுந்தாம் பாக்கியிருந்துச்சு. அதுக்கு மின்னாடி பொண்ணோட வூட்டுலேந்து கூட மாப்புள்ளையோட தாய்மாமேங்றதால சுப்பு வாத்தியாருக்கு நேர்ல வந்து பத்திரிகையை மொறையா வெச்சுட்டுப் போனாரு பொண்ணோட அப்பங்காரரு.
            சின்னவரு வூட்டுலேந்து மொறையா வர வேண்டிய பத்திரிகைய, சென்னைப் பட்டணத்துலேந்து கார்த்தேசு அத்தானும், நீலதாட்சி அத்தாச்சியும் கலியாணத்துக்காக மூணு நாளைக்கி மின்னாடி வந்தப்போ அவுங்ககிட்டெ கொடுத்து சுப்பு வாத்தியாருக்கு வைக்க வெச்சாரு சின்னவரு. பத்திரிகையக் கொண்டாந்து வெச்ச கார்த்தேசு அத்தான் சுப்பு வாத்தியாருகிட்டெ, "யப்பா வரலேன்னு எத்துவும் நெனைச்சிக்க வாணாம் மாமா! அதுக்கு கலியாணச் சோலி அம்புட்டுக் கெடக்கு! அதாங் வர முடியல. ஒத்த ஆளா இஞ்ஞ வேலங்குடியில கெடந்து செருமப்பட்டுப் போச்சு. அதாலத்தாம் நம்மள அனுப்பி வுட்டுச்சு!"ன்னு. கூட வந்த நீலதாட்சி அத்தாச்சியும், "யப்பா! தாய்மாமேங்ற மொறையில நீஞ்ஞ வந்துத்தாம் கலியாணத்தெ நடத்திக் கொடுக்கணும். அவுங்க பெரியவங்க குடும்பத்துலேந்தும் யாரும் வார மாட்டாங்க, விருத்தியூர்லேந்தும் யாரும் வார மாட்டேங்ற நெலையில அத்தை வூட்டுச் சொந்தம்ன்னா அத்து நீஞ்ஞ மட்டுந்தாம். நீஞ்ஞ அவசியம் கல்லாணத்துக்கு மொத நாளே வந்து நின்னு கலியாணத்தெ நல்லபடியா முடிச்சிக் கொடுக்கணும்!  எலே யம்பீ! விகடு நீந்தாம் எல்லாத்தையும் அழைச்சாந்து வந்து சேரணும். அத்து ஒம் பொறுப்பு!"ன்னுச்சு.
            சொந்தபந்தங்க சொல்றபடியா நடக்க முடியுது? யில்ல நடத்த முடியுது? விகடுவால தாசு அத்தானோட கலியாணத்துக்கு குடும்பத்துல எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு அழைச்சிட்டுப் போவ முடியல. சின்னவரோ, ரசா அத்தையோ வந்து பத்திரிகைய வைக்காத காரணத்தால சுப்பு வாத்தியாரு கலியாணத்துக்கு வார முடியாதுன்னுட்டாரு. விகடுவையும், ஆயியையும் மட்டும்தாம் அனுப்ப முடியும்னாரு. "அவரு சின்னத்தாம் மவனையும், மருமவளையும் அனுப்பித்தானே பத்திரிகெ வெச்சாரு. நாமளும் மவனையும், மருமவளையும் மட்டும் அனுப்பி வைக்கிறேம்!"ன்னு அதுக்கு ஒரு காரணத்தையும் சொன்னாரு.

            தாசு அத்தான் கலியாணத்துக்குப் போவுறதுக்கு மின்னாடி இன்னொரு வார்த்தையும் சொன்னாரு சுப்பு வாத்தியாரு, "கலியாணத்துக்குப் போனமா, தாலியக் கட்டுனதும் வந்தோமான்னு இருக்கோணும்டாம்பீ! அநாவசியமா அங்ஙன நிக்கக் கூடாது. செய்மொறையிலாம் நெறைய செஞ்சாச்சு. ஐயாயிரத்து பணத்தெ மட்டும் செய்வினையா மாப்புள வூட்டுப் பக்கமும், ஆயிரத்து ரூவாய பொண்ணு வூட்டுப் பக்கமும் எழுதிட்டு வந்துப்புடு. கலியாணத்துல சாப்புடாம எங்காச்சிம் கெளப்புக் கடையா பாத்துச் சாப்புட்டு வந்தாக் கூட சந்தோஷந்தாம்! அங்க நின்னு சாப்புடணும்னு அவசியமில்லே! ஏம் அந்த வூட்டுச் சாப்பாடு நமக்கு?"ன்னு சொல்லி அனுப்புனாரு. அவர்ர என்னத்தெ சொல்லியும் விகடுவால சமானதானத்தப் படுத்த முடியல. புருஷங்காரரு வாரம தாம் மட்டும் என்னத்தெ வாரதுன்னு வெங்குவும் வார முடியாதுன்னு சொல்லிப்புடுச்சு.
            தாசு அத்தானோட கலியாணம் திருவாரூர்ல கீழ வீதியில இருந்த விசாலாட்சி மண்டபத்துல நடந்துச்சு. விகடுவும், ஆயியும் ரண்டு பேரு மட்டும் கலியாணத்துக்குப் போனா, ரசா அத்தை அதெ பாத்துப்புட்டு அழுகாச்சிய வைக்குது. "நம்மள கட்டிக்கிட்டவேம்தாம் பிடிவாதக்காரனா இருக்காம்ன்னா, எந் தம்பியும் அப்பிடியே இருக்கானே! இத்தனெ நாளும் யில்லாத பிடிவாதம் இப்போ எப்பிடி வந்துச்சு? நாமாளவது கூட போயி பத்திரிகைய வைக்கலாம்னு நெனைச்சா ஒஞ்ஞ மாமங்கார்ரேம் வுட மாட்டேங்றாம். கலியாண நேரத்துல குடும்பத்துல ஒருத்தருக்கொருத்தரு ஏறுக்கு மாறாவா நிக்க முடியும்? இத்தனெ நாளும் ஒம் மாமன் பண்ணாதத என்னத்தெ புதுசா பண்ணிப்புட்டாரு? இப்போ என்னவோ அவரு புதுசா என்னத்தையோ செய்யுறதா நெனைச்சிட்டு இருக்கானே எந் யம்பீ! இதல்லாம் வழக்கந்தானே. கலியாணங் காட்சி முடியட்டும் ஒரு நாளு வந்தாத்தாம் அவ்வேம் ஒங்கப்பம் சரிபெட்டு வருவாம்!"ன்னுச்சு ரசா அத்தை.
            விகடுவுக்கும், ஆயிக்கும் இத்த பாக்க தர்மசங்கடமா போயிடுச்சு. எதெ சொல்லி ஆறுதல் பண்ண நெனைச்சாலும், அந்த ஆறுதல் வார்த்தையிலேந்து புலம்பலும், ஆத்தாமையும் அது பாட்டுக்குக் கதெ கதாய கெளம்பி வருது. "வாராதவங்கள நெனைச்சி ஆத்தாமையால அலமலந்துப் போறதுக்கு வந்தவங்கள நெனைச்சி மனசெ ஆத்திக்கிட்டா ன்னா?"ன்னு கேட்டா, "வந்த நீங்கத்தாம் மொத நாளு ராத்திரியே வந்தாத்தாம் ன்னா? கலியாண நேரத்துக்கு தலையக் காட்டிப்புட்டுப் போறாப்புல வார்றீங்களே?"ன்னு அதுக்கும் ஒரு அழுகாச்சிய வைக்குது ரசா அத்தை. எந்தப் பக்கம் அடியெடுத்து வெச்சாலும் அந்த எடம் பொதைகுழியப் போல அழுந்திகிட்டு வாங்குனா எந்த தெசையில காலடி எடுத்து வைக்குறதுன்னு கொழப்பமா, யோஜனையப் பண்ணிக்கிட்டு அதுக்குப் பெறவு விகடுவும் செரி, ஆயியும் செரி ஒரு வார்த்தெ பேசல. எதெச் சொன்னாலும் சரித்தாம் சரித்தாம்ங்ற மாதிரிக்கி தலைய ஆட்டுறதோட நிறுத்திக்கிட்டாங்க.
            அந்தக் கதிக்கு ஆளாளுக்கு ஒரு கதெய வெச்சா எப்படா கலியாணம் நடந்து முடியும்னு ஆயிடுச்சு ரண்டு பேத்துக்கும். ஒரு வழியா சரிதாம்ன்னு கலியாணத்துல தாலி கட்டி முடிஞ்சு, நாகவல்லி முகூர்த்தமும் முடிஞ்சி, கெளம்பி ஓடுன்னா போதும்ன்னு விகடுவும் ஆயியும் நைசா கெளம்புன்னா கார்த்தேசு அத்தான் வந்து விகடுவெ பிடிச்சிக்கிட்டு. "சாப்புடாம போவாத மாப்ளே!"ன்னு சொல்லி கையப் பிடிச்சாந்து ரண்டு பேத்தையும் பந்தியில உக்கார வெச்சுப்புட்டு.
            அதுக்கு மேல திமிறிக்கிட்டா போவ முடியும்னு ரெண்டு பேரும் கலியாணச் சாப்பாட்ட சாப்புட்டுட்டுக் கெளம்புலாம்னு பாத்தா நீலதாட்சி அத்தாச்சி வுட மாட்டேங்குது. அவசியம் வூடு வரைக்கும் வந்துட்டுத்தாம் போவணும்னு நிக்குது. கலியாண மண்பத்துக்கு வந்துப்புட்டு வூட்டுக்கு வந்து கையி நனைக்காம எப்பிடிப் போவலாம்ன்னு நீலதாட்சி அத்தாச்சி அது ஒரு கேள்விய வைக்குது. அத்தோட கலியாண மண்டபத்துல அதுக்கு மேல நிக்கவும் முடியல. ஒறவுக்கார சனங்க ஒவ்வொண்ணும் ஏம் சுப்பு வாத்தியாரும் வெங்குவும் வாரல? ஏம் அவரு தம் பொண்ண தாசு அத்தானுக்குக் கொடுக்கல?ன்னு பிய்ச்சிப் புடுங்கி எடுக்குதுங்க. இந்தக் கேள்விக்குல்லாம் கலியாண மண்டபத்துல நின்னு எப்பிடிப் பதிலெச் சொல்றது? எதாச்சிம் பதிலெச் சொல்லிப் போவ, அத்து ச்சும்மா இருக்குற சனங்க வாயிக்கு அவலப் போட்டு மெல்லக் கொடுத்தாப்புல ஆயிட்டுன்னா என்னத்தெ பண்ணுறதுன்னு அது வேற ரண்டு பேத்துக்கும் கொழப்பமா இருக்கு.
            இருக்குற சூழ்நெலையில, இதுலேந்து எப்பிடி தப்பிச்சு வாரதுன்னு தெரியாம, பக்கத்துலயே கலியாணம் ஒண்ணுல கலந்துக்கிட வேண்டிருக்கிறதாவும், அதுல கலந்துகிட்டு ஒடனடியா திரும்பி வந்துப்புடுறதாவும் ஒரு பொய்ய அவித்து வுட்டு, சொல்லிட்டு எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி ஏறி வந்தவங்கத்தாம் விகடுவும், ஆயியும். ஏம்டா இந்தக் கலியாணத்துக்குப் போனோம்னு ஆச்சுது ரண்டு பேத்துக்கும், ஒலக்கை சும்மாத்தானே கெடக்குதுன்னு ச்சும்மா இருந்தவன் வாயில வெச்சு இடிச்ச கதையா. அதொட சின்னவரு வூட்டோட சம்பந்தம் அந்துப் போனாப்புல ஆயிடுச்சு. தங் குடும்பத்துலேந்து ரசா அத்தையக் கொடுத்து சுப்பு வாத்தியாருக்கு சின்னவரோட உண்டான ஒறவு, இப்போ தன்னோட பொண்ண கொடுக்காததால இல்லாமப் போச்சு.
            பொண்ணு மாப்புள அழைப்புக்குப் பிற்பாடு சம்பந்தம் கலக்குறதுக்கான கறி விருந்துக்கு கார்த்தேசு அத்தானும், தாசு அத்தானும் போன் பண்ணிக் கூப்புட்டுப் பாத்துச்சுங்க. அதுக்குல்லாம் போவக் கூடாதுங்றதுல சுப்பு வாத்தியாரு உறுதியா நின்னுப்புட்டாரு. நல்ல வேளையா அதுக்குப் போவச் சொல்லாம இருந்தார்ன்னு விகடுவுக்கும், ‍ஆயிக்கும் பெருமூச்சு வுடாத கொறைத்தாம். கலியாணத்துக்குப் போயி பல பேத்தோட வாயிய சமாளிக்க முடியாம திரும்புனவங்களுக்கு, கறி விருந்துக்குப் போவச் சொன்னா எப்பிடி இருந்திருக்கும்? என்னவோ அதுக்குப் போவாததுதாங் கடெசிங்ற மாதிரிக்கி, சுப்பு வாத்தியாருக்கும், சின்னவரு குடும்பத்துக்கும் இருந்த ஓட்டமும் அத்தோட நின்னுப் போச்சு.
            சுப்பு வாத்தியாரு தாசு அத்தானோட கலியாணத்துக்குப் போவலங்ற சேதியக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்ட முக்கியமான ஆளுன்னா அத்து சந்தானம் அத்தான்தான். அத்து தாசு அத்தானோட கலியாணம் முடிஞ்ச அன்னிய ராத்திரியே சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சி ஒரு மணி நேரத்துக்கு மேல பேசுனுச்சு. "ந்நல்ல வேளையா பொண்ணக் கொடுத்து நொம்பலப் படாம போனே மாமா! அவ்வேம் ஒறவால யப்பா பட்ட பாடு போதும். யப்பா உசுரு சீக்கரமே போனதுக்கு அவ்வனுவோ பண்ண பில்லி சூனியமும் ஒரு காரணந்தாம். அந்தப் பயலுகளுக்குப் பிடிக்காம போயிட்டா சொந்தக்காரனுவோன்னு கூட பாக்க மாட்டானுவோ. எதிரியப் போல நெனைச்சி சகல வெதத்துலும் பழிய வாங்க ஆரம்பிச்சிடுவானுவோ. நல்ல வேள எந்தச் சாமி செஞ்ச புண்ணியமோ தப்பிச்சிட்டே மாமா! நாமளும் வேண்டாத தெய்வமில்லே, மாமா மனசு மாறி பொண்ணுக் கொடுத்துடக் கூடாதுன்னு!" அப்பிடினுச்சு சந்தானம் அத்தான்.
            "நமக்குப் பொண்ணு கேட்ட காலத்துலயே பிடிக்கலம்பீ! மொகம் முறிஞ்சாப்புல ஆயிடக் கூடாதுன்னு நாமளும் குறிப்புக் காட்டுறாப்புல தள்ளித் தள்ளிப் பாத்தேம். புரிஞ்சிக்கிடுறாப்புல தெரியல. திருமருகல்லேந்து ஒரு நல்ல மாப்புளப் பையனா பாத்தேம். ஒஞ்ஞ அத்தையால தாட்டிக்கிட்டுப் போயிடுச்சு. ல்லன்னா இந்நேரத்துக்கு சின்னவரு கலியாணத்த முடிக்கிறதுக்கு மின்னாடி பொண்ணுக்குக் கலியாணத்தெ கட்டி வுட்டுப்புட்டு கடமெ முடிஞ்சுதுடான்னு உக்காந்திருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதல்லாம் கவலப்படாத மாமா! ந்நல்ல எடமா அமையும். நாமளும் பாக்குறேம் நல்ல எடமா. நீயிப் பாத்து ந்நல்ல எடமா அமைஞ்சாலும் செரித்தாம், நாம்ம பாத்து அமைஞ்சாலும் செரித்தாம். கலியாணத்தெ முடிச்சுப்புடலாம். இந்தக் காலத்துல பயலுகளுக்குத்தாம் பொண்ண தேடி கட்டி வைக்குறது செருமமா இருக்கு. பொண்ணுக்கு மாப்புள்ளயப் பாக்குறது ஒண்ணும் செருமமில்ல. நாளைக்கே கலியாணம்னாலும் பயலுக கட்டிக்கிட துடியா நிக்குறானுவோ!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அடுத்த கதையா சந்தானம் அத்தான் சொன்ன வாய் முகூர்த்தத்துக்கு ஏத்தாப்புல அடுத்தடுத்த சம்பவங்க நடக்க ஆரம்பிச்சுது.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...