29 Jun 2020

பார்த்தவன் பார்க்காம போறான்!

செய்யு - 491

            லாலு மாமா வந்து பொண்ணு கேட்டுட்டப் பெறவு முடிவெடுத்து அதுக்கு ஒரு பதிலச் சொல்ல வேண்டிய நெலை உண்டாயிடுச்சு. ஒண்ணு பொண்ணு உண்டுன்னு சொல்லணும், யில்லாட்டி யில்லன்னு சொல்லணும். பிந்துவுக்கு மாப்புள்ளப் பாத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவமா இருந்துச்சு. ஒட்டுமொத்த குடும்பமே சேர்ந்து ஆளாளுக்குப் பொண்ணு பாத்துச்சுங்க பிந்துவுக்கு. அப்பிடிப் போயி பாத்த எடமெல்லாம் நசுங்குன சொம்பா திரும்பி வர்ற வேண்டியதா இருந்துச்சு.
            பிந்துவுக்கு மாப்புளப் பாத்த கதையச் சொன்னா ரொம்ப வேடிக்கையும் வினோதமாவும் இருக்கும். அண்ணங்கார்ரேம் கவர்மெண்டு டாக்கடர்ரா இருக்கானேன்னு அதெ நெனைச்சித்தாம் சங்கதியக் கேள்விப்பட்டுப் பொண்ண பாக்க வந்தானுவோ நெறையப் பேருங்க. வந்தவனுவோ மொதல்ல வூட்டைப் பாத்தானுவோ. வூடு டாக்கடரு வூடு மாதிரியே இல்லன்னு மொதல்ல கொறையச் சொல்லிட்டு மொதல்ல பாக்க வந்தவனுவோ ஓடுனானுவோ. அப்போ பாக்குக்கோட்டை மதுக்கடி முக்கத்துல ரண்டாயிர ரூவா வாடகையில இருந்துச்சுங்க பாக்குக்கோட்டை சனங்க. டாக்கடர்ர இருந்துகிட்டு மாசத்துக்கு அறுபதினாயிரம், எழுபதினாயிரம் சம்பளத்த வாங்கிக்கிட்டு இப்பிடியா ஒரு வூட்டுலயா குடியிருப்பானுவோ மனுஷங்கன்னு பொண்ணு பாக்க வந்தவனுங்களுக்கு ஒரு நெனைப்பு. பொண்ண கட்டிக் கொடுக்குறதுக்காக அண்ணங்கார்ரேம் கவர்மெண்டு டாக்கடருன்னு பொய்ய அவுத்து வுடுறானுவோ போலருக்குன்னு சந்தேகப்பட்டுக்கிட்டு அவனுவோ ஓடுனானுவோ. அத்து பாலாமணி கவர்மெண்டு டாக்கடர்ர ஆன ஆரம்ப கால கட்டம். சென்னைப் பட்டணத்துல அரும்பாக்கத்துக் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில வேலைக்குப் போயி ஆறெழு மாசம் ஆயிருக்கும்.
            சென்னைப் பட்டணத்துல ஒரு அறைய எடுத்துத் தங்கிக்கிட்டு அங்கேயிருந்து வேலைக்குப் போயிட்டு இருந்துச்சு பாலாமணி. வாரத்துல வெள்ளிக்கெழமெ போறந்தா மொத வேலையா கெளம்பி பாக்குக்கோட்டைக்கு வந்துப்புடும். குடும்பத்துச் சனங்களப் பாக்க அம்புட்டு பாசமான்னு கேட்டீங்கன்னா, அத்து பாக்குக்கோட்டை பெரிய பஜாரு தெருவுல வெச்சிருந்த கிளினிக்க வந்துப் பாக்க. வேலை கெடைச்சதுக்குப் பெறவு பாக்குக்கோட்டையில வாடிக்கையா தங்கிட்ட வைத்தியம் பாக்குறவங்கள வுட்டுப்புடக் கூடாதுன்னு வாரம் முடிஞ்சா பாக்குக்கோட்டை வர்றது அதுக்கு வேல.
            பாலாமணிகிட்டெ கொழந்தை பொறக்கணும்னு வர்ற ஆளுங்க நெறைய. ஒரு காலத்துல வண்டி வண்டியா கொழந்தைப் பெத்துக்கிட்ட சனங்க, இப்போ ஒத்தக் கொழந்தையப் பெத்துக்கவே வண்டி வண்டியா ஏறி அலைய வேண்டியதா இருந்ததால பாலாமணி காட்டுல மழையா இருந்துச்சு. கொழந்தைப் பெத்துக்கணும் வர்றவங்களுக்கு முடிஞ்சா வைத்தியம் மூலமா கொழந்தைப் பெத்துக்க வைக்கிறது, இல்லன்னா ஒரு கொழந்தைய வெல பேசி வாங்கி வுடுறதுன்னு ரண்டு வெதமா அந்த ஆளுகளுக்கு வேல பண்ணிட்டு இருந்துச்சு பாலாமணி. வைத்தியம் பண்ணாலும் காசி, புள்ளய வெலை பேசி வுட்டாலும் காசின்னு அதுல ரண்டு வெதமாவும் பாலாமணிக்கு வருமானம் பொரண்டுச்சு. அடுத்ததா மூட்டுவலி, இடுப்பு வலி, ஒடம்புவலின்னு வர்ற ஆளுங்க நெறைய. அவுங்களுக்குக் காய்ச்சுன எண்ணெதாம் மருந்து. அந்த எண்ணெய்கள இப்போ பாலாமணியே காய்ச்ச ஆரம்பிச்சதால அதுலயும் நல்ல காசிப் பொரண்டுச்சு. ஆயிரம் ருவா செலவு பண்ணி மருந்தையோ, எண்ணெயையோ காய்ச்சுனா அத்தெ பத்தாயிரம் ரூவாயிக்கு வித்துப்புடலாம். அந்த மருந்துக்கு பாலாமணி வைக்குறதாங் வெல. ஒடம்பு முடியாம வந்து நிக்குறவேம் வெலையில பேரத்தப் பேசாம சொன்ன காசிக்கு வாங்கிட்டுப் போயிட்டே இருந்தாம்.
            சனி, ஞாயித்து ரண்டு நாள்லயும் பகல்ல கிளினிக்கப் பாத்தா, ராத்திரி முழுக்க வூட்டுச் சமையல்கட்டுல எண்ணெய்யக் காய்ச்சுறதுதாம் வேல பாலாமணிக்கு. விடிய விடிய காய்ச்சுற எண்ணெய்க்கு சரசு ஆத்தாவும், பிந்துவும் தொணை இருக்கணும். பாலாமணி பாக்குக்கோட்டை வந்தா வூட்டுல இருக்குற ரண்டு பொம்பளைக்கும் ராத்தூக்கம் ரண்டு நாளைக்குப் போயிடும். "இவ்வேம் ஏம்தாம் பாக்குக்கோட்டைக்கு வர்றாம்? வந்து இப்பிடி உசுர எடுக்குறாம்? இந்தப் பயெ ரண்டு நாளுக்கு வந்து இருந்துட்டு வந்து வாங்குற வேலைக்கு நாம்ம மித்த அஞ்சு நாளும் ரெஸ்ட்டு எடுக்கணும் போலருக்கு!"ன்னு சரசு ஆத்தா வெளிப்படையாவே சொல்லிப்புடுச்சு.
            "தூக்கத்தப் பாத்தீன்னா காசிய எப்போ பொரட்டுறது? பொண்ண எப்பிடிக் கொடுக்குறது?"ன்னு கேக்கும் பாலாமணி.
            "ஆம்மாம் சுந்தரிய காசிப் பணத்தெ வெச்சிக்கிட்டா கட்டிக் கொடுத்தேம்? யில்ல நீயி டாக்கடரு ஆயித்தாம் கட்டிக் கொடுப்பேன்னு வெச்சிருந்தேமா? அதது தலையில என்னத்தெ எழுதிருக்கோ அதுபடிக்கு ஆவுது. இனுமேலா இவளுக்குன்னு ஒருத்தம் பொறக்கப் போறாம்? பொறந்தவேம் வந்தச் சேர வேண்டியதுதாங் பாக்கி. என்னவோ இவ்வேம் டாக்கடராயித்தாம் பொண்ணையே கலியாணத்த பண்ணிக் கொடுக்கப் போறதா நெனைக்குறாம்!"ன்னு சரசு ஆத்தா முணுமுணுத்துக்கும்.
            சென்னைப் பட்டணத்துலேந்து வர்றப்போ ச்சும்மா வாராது பாலாமணி. அந்த வாரம் முழுக்கப் போட்டுக்கிட்ட துணிமணிகளெ ஒரு பெரிய டிராவல் பேக்குல கொண்டாந்துடும். ராத்திரி எண்ணெய்யக் காய்ச்சுறதுல ரண்டு பொம்பளைகளும் தொணைக்கு நின்னுப்புட்டு, பகலு பொழுது பூரா வூட்டுச் சமையலையும் பாத்துக்கிட்டு அத்தனெ துணிமணிகளையும் தொவைச்சு, காய வெச்சு, இஸ்திரி போட்டு வெச்சுப்புடணும். திரும்ப அதெ டிராவல் பேக்குல அழுக்கா வந்து துணிக தொவைச்சு மடிச்சு போவும். மொத்ததுல பொம்பளை ரண்டு பேத்துக்கும் பாலாமணி ஊருக்கு வந்தா போதும் பெண்டு நிமுந்துடும். பாலாமணி இப்பிடி படுத்துறப் பாட்டப் பாத்து சீக்கிரமே கலியாணம் ஆயிப் போன தேவலாம் போல ஆயிடுச்சு பிந்துவுக்கு. வர்ற மாப்புளக்காரந்தாம் ஒருத்தனும் அமைய மாட்டேங்றாம்.

            பாக்குக்கோட்டையில இருந்து கிளினிக்கப் போட்டு நெறைய பேர்ர சேத்து வெச்சிருந்துச்சு பாலாமணி. அதால பாக்குக்கோட்டைக்கு வந்து இருக்குற சனி, ஞாயிறுன்னு ரண்டு நாள்ல வைத்தியம் பாத்து முடிக்கிறதெ செருமங்ற அளவுக்குக் கூட்டமா இருந்துச்சு. அதால ஒரு வாரம் பாக்குக்கோட்டைக்கு வர்ற முடியாம இருந்தாலும் பாலாமணிக்கு எதையோ இழந்தாப்புல ஆயிடும்.  பாக்குக்கோட்டைக்கும், சென்னைப் பட்டணத்துக்கும் வந்துப் போறதே பேரலைச்சலா இருக்கும். அதுக்கே வந்துட்டுப் போற நாளு, போயி சேர்ற நாளுன்னு ரண்டு நாளு பேயாம கெடந்தாத்தாம் ஒடம்பு ஒடம்பா இருக்கும். பஸ்ல பன்னெண்டு மணி நேரம் வந்துட்டு, பன்னெண்டு நேரம் போறதுல ஒடம்பு சூடு கண்டு போயிடும். கண்ணுல்லாம் சமயத்துல பொங்கிப் போயிடும். அது எதெ பத்தியும் பாலாமணி கண்டுக்கிடறதில்ல. ஒடம்புக்கு எது கண்டாலும் டாக்கடர்ரா இருக்கறதால ஒடனே ஒரு மாத்திரைதாம். ஒடம்பு பாவம் என்ன பண்ணும்? அந்த மாத்திரைய வாங்கிக்கிட்டுச் சொன்னா சொன்னபடிக்குக் கேக்கும்.
            சென்னைப் பட்டணத்துல பாலாமணிக்குக் காலையில வேலைக்குப் போனா மூணு மணி வாக்குல அறைக்கு வந்துப்புடலாம். அதுக்கு மேல ச்சும்மா இருக்குற நேரத்த எதுக்கு வுடணும்னு பாக்குக்கோட்டையில கிளினிக்க போட்டது போல அரும்பாக்கத்துல மாடி மேல ஒரு எடத்தப் பிடிச்சி அங்க ஒரு கிளினிக்கப் போட்டுச்சு. கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு தங்கிட்டெ வைத்தியம் பண்ண வர்ற ஆளுங்களப் பாத்து வெச்சிக்கிறது. கொஞ்சம் காசி செலவு பண்ண வசதியான ஆளுங்கன்னு தெரிஞ்சா போதும் அவுங்கள வளைச்சிப் பிடிச்சிக்கிறது. கிளினிக்குக்கு வந்தா நல்ல வெதமா வைத்தியம் பாத்து பண்ணி வுடலாம்ன்னு ஒரு வார்த்தையே அப்பிடியே அடிச்சி விடுறது. இம்மாம் கூட்டத்துல என்னத்தெ பாத்து சரியா வைத்தியம் பண்ண முடியுதுன்னு அதுக்குத் தகுந்தாப்புல மொகத்த பரிதாபமா வெச்சுக்கிறது. அதெ பாத்துட்டு வைத்தியம் பண்ண வந்து ஆளு எப்பிடியே வியாதி கொணம் கண்டா போதும்ன்னு கிளினிக்குக்கு வருவாம். அவனெ வெச்செ அவனோட ஒறவுக்காரன், அக்கம்பக்கத்து வூட்டுக்காரன்னு ஆளுகளப் பிடிக்கிறது. அப்படி வர்ற ஒறவுக்காரன், பக்கத்து வூட்டுக் காரனெ வெச்சு ஒறவுக்காரனோட ஒறவுக்காரன், பக்கத்து வூட்டுக்காரனோட பக்கத்து வூட்டுக்காரன்னு வரிசையா பிடிக்கிறது. இப்பிடிச் சென்னைப் பட்டணத்துலயும் ஆளுகளப் பிடிச்சிட்டு இருந்துச்சு பாலாமணிக்கு.
            கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலேந்து மூணு மணிக்கு அறைக்கு வந்தா ஒரு மணி நேரம் படுத்துக் கெடந்தா, அடுத்த ஒரு மணி நேரத்துல ஆயுர்வேதம் சம்பந்தமா எதையாச்சிம் எழுதுறது. எழுதுனதை பத்திரிகைக்கு அனுப்பி வுடுறதுன்னு ஒரு வேல. அதுல எதாச்சிம் வருமானம் வருதான்னு பாக்குறது. அத்தோட ஆயுர்வேதம் சம்பந்தமா புத்தகம் எழுதுறது. நரைத்த முடி வெளுப்பாக ஆயிரம் ஆயிர்வேத வழிமுறைகள், குண்டாக இருப்போர் இளைக்க நூறு ஆயுர்வேத மருத்துவ முறைகள், குழந்தைப் பேறுக்கு ஆயுர்வேதம் சொல்லும் ரகசிய முறைகள்ன்னு எதாச்சிம் தலைப்புல எழுதி புத்தகத்தப் போட்டு அதெ கிளினிக்குக்கு வர்ற ஆளுங்களுக்கு மருந்துகளோடு சேர்த்து விற்பனை பண்ணுறதுன்னு அதலுயும் ஒரு வருமானம் பாக்குறது. இப்பிடி எழுதிக்கிட்டெ இருந்து, அஞ்சு மணி ஆச்சுன்னா கிளினிக்குக்குக் கெளம்பிடறது. அங்கப் போனா வைத்தியம் பண்ண வர்றவங்களப் பாத்துட்டு அறைக்குத் திரும்ப ராத்திரி பத்து மணியும் ஆவும், பதினோரு மணியும் ஆவும். இப்படியா பாலாமணிக்கு கவர்மெண்டு சம்பளம் ஒண்ணு, சென்னைப் பட்டணத்துக் கிளினிக் வருமானம் ரண்டு, பாக்குக்கோட்டை கிளினிக்க வருமானம் மூணு, செஞ்சு விக்குற மருந்து எண்ணெய்கள வருமானம் நாலுன்னு நாலு வெதமான வழிகள்ல நாலா வெதமான வருமானம் வந்துக்கிட்டு இருந்துச்சு.
            சென்னைப் பட்டணத்துல அறைக்கு ஒரு வாடகெ, அங்க வெச்சிருக்குற கிளினிக்குக்கு ஒரு வாடகெ, இங்க பாக்குக்கோட்டையில வூட்டுக்கு ஒரு வாடகெ, பாக்குக்கோட்டை கிளினிக்கு ஒரு வாடகென்னு நாலு வாடகையால்ல கொடுக்க வேண்டிக் கெடக்குன்னு பாலாமணி நெனைச்சதால மதுக்கடி முக்குல ரண்டாயிரம் வாடகையில இருந்த வூடே போதும்ன்னு ஆரம்பத்துல நெனைச்சிடுச்சு.  அப்போ அதுக்கு வாடகெ காசிய பதினோராயிரம் சொச்சம் வந்துச்சு. அத்தோட சென்னைப் பட்டணத்துலேந்து வந்துட்டுப் போவ அத்து ஒவ்வொரு தவாவுக்கும் ஆயிரம் ரூவாய்ன்னு மாசத்துக்கு நாலாயிரம் ஆயிடுச்சு. காசிய சம்பாதிக்கிறதுல எவ்ளோ கவனமோ, அதெ அளவுக்கு காசியச் செலவு பண்ணுறதுலயும் கவனமா இருந்துச்சு பாலாமணி. இப்போ வாடகை வூடு சரியில்லாமத்தாம் தங்காச்சியப் பொண்ணு பாக்க வர்றவேம் ஓடிப் போறாம்ன்னு நெனைச்சு மதுக்கடி முக்குலேந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துல இருந்த சிங்கப்பூர் காலனியில ஆறாயிரத்து ரூவா வாடகைக்கு ஒரு வூட்டைப் பிடிச்சது. தங்காச்சிக்குக் கலியாணம் ஆவுற வரைக்கும் அந்த வூட்டுல இருக்குறது. பெறவு கலியாணம் ஆயிட்டா ராசாமணி தாத்தாவையும், சரசு ஆத்தாவையும் பழையபடிக்கு மதுக்கடி முக்கு வூட்டுக்கெ அனுப்பிப்புடுறதுன்னு திட்டம் பாலாமணிக்கு.
            சிங்கப்பூரு காலனி வூடு நல்ல பெரிய வூடு. வூட்டுக்கு மின்னாடி பெரிய பொழக்கமான எடம். சுத்திலும் இருந்தவங்க பெரிய பெரிய வேலையில இருந்தவங்களா வேற இருந்தாங்க. அந்த எடத்துல இருக்குறதே பாலாமணிக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. அத்தோட மதுக்கடி முக்கு வூட்டுல இருந்ததெ வுட இந்த வூட்டுல மருந்து, எண்ணெய் காய்ச்சுறதெல்லாம் ரொம்ப வசதியா இருந்துச்சு. எடப்பொழக்கந்தாம் அதுக்குக் காரணம். சமையக்கட்டெ கூடத்தைப் போல ஒரு பெரிய அறையா இருந்துச்சு. வசதியா இருந்தாலும் அதுல ஒரு சின்ன பெரச்சனையும் உண்டாயிடுச்சு. மதுக்குடி முக்குல இருந்த சனங்க யாரும் மருந்து காய்ச்சுறப்பையே, எண்ணெய்யைக் காய்ச்சுறப்போ நாறுதுன்னு முகத்தெ சுளிச்சிக்கிட்டது கெடையாது. சிங்கப்பூரு காலனியில இருந்த சனங்க அப்பிடியிலல். மொகத்தச் சுளிச்சிக்கிட்டாங்க. பக்கத்து வூடுகளோட மொகச்சுளிப்போடு ரொம்ப நாளு அந்த எடத்துல இருக்க முடியாதுங்றதால, அந்த வூட்டுல இருந்த சனங்களுக்கு எல்லாம் சத்து மாத்திரை, தலைமுடி நல்லா வளர்றதுக்குன்ன எண்ணெ, தொலு மினுமினுப்புக்கான மாத்திரைன்னு எதாச்சிம் ஆளெ பாத்து தள்ளி வுட்டதுல அந்தச் சனங்க மருந்துக் காய்ச்சுற நாத்தத்தெ பொறுத்துக்கிட ஆரம்பிச்சிட்டாங்க. இப்பிடி ஆளுகளெ சமாளிக்குறதலய பாலாமணி கில்லாடியா இருந்துச்சு.
            சிங்கப்பூரு காலனி வந்த பெற்பாடு ராசாமணி தாத்தா தன்னோட தோதுல ஒரு சாதகத்தப் பாத்து ஒரு மாப்புள்ள பையனக் கொண்டாந்தாரு. ராசாமணி தாத்தா சோசியக்காரரா அவதாரம் எடுத்து நடந்த மொத நல்ல காரியம்ன்னா அதாங். அந்த நல்ல காரியமும் கை கூடல. வந்துப் பாத்தவேம் பொண்ணோட சரீரத்தப் பாத்து ஓடுனவந்தாம் திரும்பி வாரல. வூடு சரியில்லன்னா அதெ சரி பண்ணியாச்சு, ஒடம்பு கனம்தாம் பெரச்சனைன்னா அதெயும் சரி பண்ணிப்புடுவோம்ன்னு பாலாமணி அதுக்கு என்னென்னவோ மருந்துகளக் காய்ச்சிக் கொடுத்துப் பாத்துச்சு. ஒண்ணும் வேலைக்கு ஆவல. அந்த மருந்துகள உக்காந்துக் காய்ச்சுனதுல சரசு ஆத்தாவும், பாலாமணியும் எளைச்சுப் போனதுதாம் மிச்சம், பிந்து அது பாட்டுக்குப் பெருத்துக்கிட்டே போனுச்சு. ஊருல யாரு யாருக்கோ மருந்துக் கொடுத்து கொணப்படுத்துற தன்னால தன்னோட தங்காச்சியோட பெரச்சனைக்கு மருந்து கொடுத்து கொணம் பண்ண முடியலன்னு அது ஒரு கவலெ பாலாமணிக்கு.  
            சரசு ஆத்தாவும் அங்க இங்கன்னு வெசாரிச்சு ஒரு மாப்புள்ளப் பையன கொண்டாந்துச்சு. வந்துப் பாத்தவேம் பொண்ணு ஒல்லியா இருந்தா கட்டிப்பேம், குண்டா இருக்குறதால அம்பது பவுனு போட்டா கட்டிக்கிறதா சொன்னாம். செரின்னு அங்கன இங்கனன்னு கடன ஒடன வாங்கி, அம்பது பவுனப் போட்டு கட்டி வெச்சிக் கதையெ முடிச்சிப்புடலாம்ன்னுப் பாத்து அவ்வேங்கிட்டெ என்ன வேல பாக்குறேன்னு கேட்டா, வேல யில்லாம ச்சும்மா இருக்குறதாவும், கலியாண ஆவுற நேரம் நல்ல நேரமா இருந்தா வேல கெடைச்சிடும்ன்னு சொன்னாம் பாருங்க, பாலாமணிக்கு வந்தக் கோவத்துல, "ஓடிப் போயிடுடா மொதல்ல. இல்லாட்டி எதாச்சிம் மருந்தெ கொடுத்தெ கொன்னுப்புடுவேம்!"ன்னு சத்தம் போட்டதுல தெறிச்சி ஓடுனவந்தாம்.
            இப்படியா பொண்ணு பாக்குற எடத்துலயே பிந்துவுக்கு எல்லாம் முடிஞ்சதே தவுர மேக்கொண்டு தொடரல. இந்தச் சங்கதிய எல்லாம் கேள்விப்பட்டு தங்காச்சிக்குக் கலியாணம் ஆவலங்ற கவலெ வடவாதியில இருந்த சுந்தரிக்கு வந்துடுச்சு. பொண்டாட்டியோட கவலையப் பாத்துட்டு புருஷங்கார்ரேம் ச்சும்மா இருக்க முடியுமா? சித்துவீரனும் பிந்துவுக்காக ஒரு மாப்புள்ளையப் பாத்துச்சு. மருமவ்வேன் பாக்குற மாப்புள்ளையாவது பொண்ணுக்கு அமைஞ்சிடணும்ன்னு சரசு ஆத்தா வேண்டாத தெய்வமில்லே.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...