26 Jun 2020

மருந்து விக்குற காசுல வியாதியா வரப் போவுது?

செய்யு - 489

            பாக்குக்கோட்டை சரசு ஆத்தா தன்னோட ரண்டாவது பொண்ணு பிந்துவுக்கு மாப்புள்ள தேடிட்டுக் கெடந்துச்சு. ராசாமணி தாத்தா சோசியக்கார்ர இருந்தும் மாப்புள்ளைக்காக அலைஞ்சிட்டுக் கெடந்தாரு. என்னடா இத்து? சோசியக்காரனுக்கே தம் பொண்ணுக்கு மாப்புள்ள எங்ஙன இருக்கான்னு தெரியாம தேடி அலைஞ்சிட்டுக் கெடக்கானேன்னு ஊர்ல அத்து ஒரு பேச்சு. மவ்வேன் பாலாமணிக்கு இதால வயசு ஆயிட்டே போவுதுன்னு சரசு ஆத்தாவுக்குக் கவலெ. "நீயி ஒரு கலியாணத்தெ பண்ணித் தொலைடா! தங்காச்சிக்குக் கூட பெறவு பண்ணிக்கிடலாம்!"ன்னு சொல்லிப் பாத்துச்சு சரசு ஆத்தா. பாலாமணி கேக்குறாப்புல இல்ல. "தங்காச்சிக்குக் கலியாணத்தெ பண்ணிட்டுத்தாம் பண்ணுவேம்!"ன்னு ஏக பிடிவாதம். பாலாமணி ஆயுர்வேத டாக்கடருக்குப் படிச்சி கவர்மெண்டு பரீட்டை எழுதி கவர்மெண்டு டாக்கடர்ரா ஆயிருந்துச்சு. அதால பாலாமணிக்குப் பொண்ணு கொடுக்குறதுக்கு நான் நீயின்னு போட்டி. இருந்தாலும் வயசு முப்பத்து நாலோ என்னமோ ஆயிருந்துச்சு. "இவ்வேம் தங்காச்சிக்கு மாப்புள்ளயப் பாத்து கலியாணத்த முடிக்கிறதுக்குள்ள வயசு நாப்பதுக்கு மேல ஆயிடும் போலருக்கே! அவ்வேம் மூத்தவள தேடி வந்து கட்டிக்கிட்டாம் எஞ்ஞ அண்ணம் மவ்வேம். இவளெ நாமளே தொரத்தி வுட்டாலும் எவனும் கட்டிக்கிட மாட்டாம் போலருக்கே!"ன்னு சரசு ஆத்தாவுக்கு எந்நேரமும் பொலம்பல்தாம்.
            பிந்து பாக்குக்கோட்டையில இருந்தாலும் அங்கயிருந்து ஆர்குடி கமலாம்பாள் தாயார் கல்லூரியிலத்தாம் பியேவும், பியெட்டும் முடிச்சிது. ஆளு கொஞ்சம் குண்டு. சரீர கனம் சாஸ்தியா இருந்துச்சு. அதுல வந்துப் பாக்குற மாப்புள்ளைக எல்லாம் சாதகப் பொருத்தம் இருந்தாலும், ஒடம்பு பெருக்கமா இருக்கேன்னு வேணாம்னு போயிட்டாம். அதுல உண்டான மனக்கொறையில பிந்து சரியா சாப்புடுறது இல்ல. என்னத்தத்தாம் சாப்புடாம கெடந்தாலும் ஒடம்பு கொறைஞ்ச பாடா தெரியல. செரின்னு அண்ணங்கார்ரேம் பாலாமணி டாக்கடரல்லா இருக்காம்ன்னு அவ்வேங்கிட்டெ மருந்த வாங்கிச் சாப்புட்டாலும் அந்த மருந்துக்கும் ஒடம்பு எறக்கம் கொடுக்க மாட்டேங்குது. அதுக்காக முயற்சிய வுட்டுப்புட முடியுமான்னு எந்நேரத்துக்கும் டயட்டுல இருக்கேமுன்னும், ஒடம்பு எளைக்க மருந்துகளச் சாப்புடுறேம்ன்னும் இருந்துச்சு பிந்து.
            எந்தப் படிப்பா இருந்தாலும் இந்தக் காலத்துல படிச்சி முடிச்சு ஒடனே வேலைக்குப் போறதுங்றது அபூர்வம்தாம். பாலாமணி படிச்சி முடிச்சிக் கொஞ்ச காலம் வரைக்கும் அதாச்சி, கவர்மெண்டு வேல வர்ற வரைக்கும் பாக்குக்கோட்டையில தனியா ஒரு கிளினிக்கப் போட்டு வைத்தியம் பாத்துக்கிட்டுக் கெடந்துச்சு. பாக்குக்கோட்டையில மெயினான எடமா பெரிய பஜார் தெருவுல கினினிக். பாக்குக்கோட்டை டவுன்லேந்து எங்கயிருந்து பாத்தாலும் அதுதாங் டவுனுக்கு மையம். தங்காச்சி மவ்வேன் கிளினிக்கப் போட்டுட்டு உக்காந்திருக்கானே லாலு மாமா பாலாமணிட்ட போறதுமா, வர்றதுமா இருந்துச்சு.
            லாலு மாமாவுக்கு ஒடம்பு பெருத்த ஒடம்பு. இப்போ ரிட்டையர்டு ஆயி கெடந்ததுல சரீரம் ரொம்ப கனத்தச் சரீரமா ஆயிடுச்சு. சரீரம் கனத்தா சொல்லவா வேணும்? சர்க்கரையோ, ரத்தக் கொதிப்போ வரலீயே தவுர, கழுத்து வலியும், தோள்பட்டெ வலியும் தானா வந்துடுச்சு. அந்த வலியால, தங்காச்சி மவ்வென் கிளினிக்குக்கு ஆள பிடிச்சி விடுறது ஒரு பக்கம்ன்னாலும் நாமளே ஒரு ஆளா போவோம்னு போவ ஆரம்பிச்சிதுதாம் லாலு மாமா.
            இப்பிடி வலிக்கு ஆயுர்வேதத்துல தங்காச்சி மவ்வேம்கிட்டெ பாத்துக்கிட்டாலும், இங்கிலீஷ் வைத்தியத்தையும் பாத்துக்கிடும். அத்தோட மருந்து கடைக்குப் போயி இன்னயின்ன மாதிரி வலின்னு சொல்லி அதுவாவே வேற மருந்துகள வாங்கிப் போட்டுக்கும். அத்தோட அதுக்கு தெரிஞ்ச கைவைத்திய மொறைகள வேற பாத்துக்கும். இப்பிடி நாலு வெதமான வைத்திய முறைகளால தன்னோட கழுத்துவலி, தோள்பட்டை வலிகளப் போக்கிக்கிறதா அதுக்கு ஒரு நம்பிக்கெ.
            ஒவ்வொரு தவா லாலு மாமா பாலாமணியோட பாக்குக்கோட்டை கிளினிக்குப் போறப்பல்லாம் பாலாமணிய அந்தக் கேள்விய மட்டும் கேக்காம வாராது. "இந்தக் காலத்துல நம்ம நாட்டு வைத்திய மொறைகளுக்கு என்னத்தெ பெரிய மதிப்பு இருக்குடா? நீயி இந்தப் படிப்பெ படிக்குறதப் பாத்துட்டு நாமளும் வேலன் பயல இதுக்குப் படிக்க வெச்சாச்சு. நீயாவது பியெயெம்மஸோடு முடிச்சிக்கிட்டுக் கிளினிக்கப் போட்டுட்டே. அவ்வேம் என்னவோ சூரத்துல போயி மேக்கொண்டு யெம்டி படிக்கணும்னு போயிட்டாம். ஒன்னயப் போல அவனும் ஒரு கிளினிக்கப் போட்டுட்டு உக்காந்திருந்தாம்ன்னா தேவல. பொண்டாட்டிப் போயிச் சேந்துட்ட கடெசீக் காலத்துல நாம்ம தஞ்சார்ல ஒரு காலும், பாக்குக்கோட்டையில ஒரு காலும், இன்னொரு காலு இருந்தா திருச்சி ஈஸ்வரி வூட்டுல ஒரு கால்ன்னும், அதுக்கு மேல இன்னொரு காலு இருந்தா குயிலி வூட்டுக்கு மெட்ராஸூ சென்னைப் பட்டணத்துல ஒரு கால்ன்னும் கெடந்து அலைய வேண்டிதா இருக்கு. அத்துச் செரி வேலன் பயெ படிச்சிட்டுப் போறானே! பொழைச்சுக்கவானா?" இப்பிடிக் கேக்காம லாலு மாமா பாலாமணி கிளினிக்குலேந்து திரும்புனதில்ல.
            "வெவரம் தெரிஞ்சவங்க, பொறுமையா நோயி கொணம் கண்டாலும் பரவாயில்லன்னு நெனைக்குறவங்க ஆயுர்வேதத்துக்கு வர்றாங்க. இங்க வந்துட்டவங்க பெறவு வேற வைத்திய மொறைக்குப் போவ மாட்டாங்க மாமா. நாம்மத்தாம் இதோட மகத்துவம் புரியாம நிக்கேம். கேராளவுல அப்பிடிக் கெடையாது. அங்ஙன புல்லாவே ஆயுர்வேதந்தாம். இங்ஙன ஓட்டமில்லன்னாலும் அங்ஙனப் போயி ஒரு கிளினிக்கப் போட்டா போதும். காசிய அள்ளிப் புடலாம். இதெப் போல ஒரு அருமையான வைத்திய மொறை எதுவும் கெடையாது மாமா. மனுஷனோட ஆத்மாவுக்குப் பண்ணுற வைத்திய மொற. ஆன்னா ன்னா ஒண்ணு, ஆயுர்வேதங்றது கொஞ்சம் காசு பிடிக்குற வைத்திய மொற!"ன்னு அதுக்கு பதிலெச் சொல்லும் பாலாமணி.

            லாலு மாமாவுக்கு அந்தப் பதிலு பிடிக்காததெப் போல, "என்னத்தெ சொல்லு! இங்கிலீஷ் டாக்கடருன்னா சீட்டெழுதிக் கொடுத்தான்னா, ஊசியப் போட்டான்னா எட்றா பீஸூ அம்பதுனான்னா, ஒரு நாளைக்கி நூத்துப் பேர்ர பாத்து கட்டிப்புட மாட்டான்னா கல்லாவா? அத்து இத்துல முடியாதுதானேடா!"ன்னு கேக்கும்
            "இதுலயும் அப்பிடில்லாம் சம்பாதிக்க முடியும். சொல்லப் போனா அதெ வுட தாண்டியே சம்பாதிக்க முடியும். ன்னா ஒண்ணு இங்ஙன டாக்கடருக்கான காசு நூத்து ரூவாயின்னா மருந்துக்கான காசு ஐநூத்து ஆயிரம்ன்னு எகிறிடும். அதால மொதல்ல வர்றப்போ கொஞ்சம் யோஜனையெ பண்ணுமுங்க சனங்க. கொணம் கண்டுப்புட்டா பெறவு இந்த மொறைய வுட்டு வெலகாதுங் மாமா. அத்தோட மருந்தையும் நாம்மதானே கேரளாவுலேந்து வார வெச்சு வெச்சிருக்கேம். அதுக்கு வெல போட்டுக் கொடுக்குறதும் நாம்மத்தானே. அதுல ஒரு கமிஷன் இருக்கு. ஆயிரத்து ரூவாய்க்கு மருந்தெ போட்டா அதுல கமிஷன் காசியே நானூத்துக்கு மேல. பெறவு வைத்தியக் காசு நூத்து ரூவா. ஒரு நாளைக்கி நாலு கேஸூ வசமா சிக்குனா போதும்!"ன்னு அதுக்குப் பதிலச் சொல்லும் பாலாமணி.
            "சனங்களுக்கு பட்டுன்னு ஊசியா போட்டா, மருந்தக் கொடுத்தா ஒடனே கொணங் காணணும். அத்து அந்த வைத்தியலத்துலத்தாம் சாத்தியம்டா. அதுக்கு மயங்கியே சனங்க திரும்ப திரும்ப வாரும். இந்த வைத்திய மொறையில அப்பிடி வாருமாடா சனங்க? பேசுதீயேடா ன்னாவோ பெரிசா?"ன்னு லாலு மாமா பாலாமணிய வுடாது.
            "அதுல பாத்தீன்னா மாமா சில ஆளுங்களப் பாத்துப்பேம். அவுங்ககிட்டெ ஒங்களப் பாத்தா ரொம்ப கஷ்டப்படுற ஆளெப் போல தெரியுதும்பேம். ஒடனே அவுங்களுக்கு மொகத்துல ஒரு சிரிப்பாணி காங்கும் பாரு. ஒடனே மருந்துக்கு மட்டும் காசியக் கொடுங்க. வைத்தியத்துக்குக் காசிய வாணாம்பேம். அடடா இப்பிடி எலவசமா இந்தக் காலத்துல எவ்வேம் வைத்தியம் பாப்பாம்ன்னு நெனைச்சிக்கிட்டு அதுக்காவே மறுக்கா வாரும் பாரு மாமா! நாம்ம மருந்துல அடிக்கிற காசி அதுகளுக்குத் தெரியாது. இப்பிடி நேக்கா பாத்தா இங்கிலீஷ் டாக்கடர்ர தாண்டி இதுல சம்பாதிக்கலாம் மாமா! ஒரு தவா நம்மகிட்டெ வந்தவனெ நூறு தவா வர வைக்கலாம்!"ங்கும் பாலாமணி.
            இப்பிடி ஆரம்பிக்கிற பேச்சு ஒரு மாமாங்கத்துக்கு நீளும். இங்கிலீஷ் டாக்கடருன்னா நொடிக்கு ஒருத்தம் வந்து நிப்பாம். ஆயுர்வேத டாக்கடருக்கு நோயாளி வர்ற வரைக்கும் டாக்கடருக்குப் பொழுது போவாது. சமயத்துல படையெடுத்து வந்தாலும் நோயாளிங்க வரும், இல்லன்னா ஒரு நாளுக்கு ஒருத்தம் கூட வார மாட்டாம். யாரும் வாராத சந்தர்ப்பங்கள்ல லாலு மாமாவும், பாலாமணியும் பேசிட்டே இருக்குமுங்க. அப்பிடி பேசிட்டு இருந்தப்பத்தாம்,
            "என்னவோ போ! நீயி தெறமையா ஒரு கிளினிக்க வெச்சி உக்காந்துப்புட்டே. அவ்வேம் வேலனப் பாரு, இன்னும் படிக்கணும்னு நிக்கிறாம். இதுல மேக்கொண்டு படிச்சி என்னத்தெ ஆவப் போவுதுன்னு தெரியல!"ன்னு சோகமா சொன்னுச்சு லாலு மாமா.
            "நாந்தாம் அவனெ தஞ்சார்ல கிளினிக்கப் போடச் சொன்னேம்ல. போட்டாம்ன்னா ரண்டு கிளினிக்கும் சேத்து மருந்து எடுத்தோம்ன்னா இன்னும் காசியப் பாக்கலாம். அவனெ கொண்டு போயி ஏம் மாமா மேப்படிப்புக்குச் சேத்து வுட்டே? ஒனக்கென்ன? ஒனக்கொரு பென்ஷன் காசு. அத்தெ செத்துப் போயி அதோட பேமிலி பென்ஷன் காசுன்னு ரண்டு காசுல்ல பூந்து வெளையாடுது. வர்ற காசிய என்னத்தெ பண்ணுறதுன்னு தெரியாம பயல படிக்க வெச்சிக்கிட்டு வெளையாடிட்டு இருக்கே! ஒழைச்சு வர்ற காசியா ன்னா? ஒழைக்காமல ரண்டு கைக்கும் ரண்டு காசி!"ன்னுச்சு பாலாமணி.
            "நமக்கென்னடா தெரியும்! மேப்படிப்புச் சம்பந்தமா வெசாரிக்கிறதுக்குச் சூரத் போவணும்ன்னாம்! செரி வெசாரிக்கத்தானே போவணும்ங்றாம்னு நெனைச்சி அழைச்சிட்டுப் போனேம். அழைச்சிட்டுப் போனா அங்ஙனப் போயி வெசாரிச்சுப்புட்டு மேப்படிப்புல சேத்து வுட்டாத்தாம் போச்சுன்னு அங்ஙகனயே உக்காந்துப்புட்டாம். அத்து எடம் நாலாவது மாடியோ, அஞ்சாவது மாடியோ தெரியல. ஒவ்வொரு மாடியுமே ஒரு ஒலகத்தெ போல பெரிசு இருக்கு எப்பிடி உள்ள பூந்தேம் அந்த எடத்துக்கு வந்தேம்ன்னே தெரியல. ரொம்ப பெரிய ஆஸ்பத்திரிடா. செரி அந்தப் பயல வுட்டுப்புட்டு நாமளாவது தப்பிச்சு வந்துப்புடலாம்னு பாத்தா வெளியில வாரதுக்கு வழியும் தெரியுல ஒண்ணும் தெரியல. செரி எப்பிடியோ வெளியில வந்தாலும் எங்கன பூந்து எப்பிடி வந்து ஊரு வந்து சேர்றதுன்னு புடிபடாம போச்சு. கட்டடம்ன்னா கட்டடம் அம்மாம் கட்டடம்டா. எப்பிடித்தாம் கட்டித் தொலைச்சானுவோளே? பணத்தையும் அம்புட்டுக் கட்ட வெச்சிப்புட்டானுவோ. நமக்கு அந்த எடத்தெ வுட்டு வெளியில வாரதுன்னா சாமானியமில்ல பாத்துக்கோ!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதாங் செரின்னு சேத்துட்டீயாக்கும்?"ன்னுச்சு பாலாமணி.
            "வேற வழி! சேந்துத் தொலைஞ்சுக்கோன்னு மடியில கட்டியிருந்த இருவதாயிரத்தெ எடுத்து வுட்டேம். அது பத்தலன்னு சொன்னதும் மூணு ஏடியெம் கார்டுல்லா வெச்சிருக்கேம். அதெ வெச்சி மிஷின்ல இழுத்து பணத்தெ கட்டிக்கடான்னு சொன்னேம். கட்டிட்டு வந்து லட்சத்துக்கு மேல கணக்குச் சொன்னாம் பாரு! அன்னிக்கே மாரடைப்பு வந்துப் போயிச் சேந்திருக்க வேண்டிய ஆளு. என்னவோ பொழைச்சது போன சென்மத்துப் புண்ணியம். லட்சத்தி இருவதினாயிரம் கட்டுனதா ஞாபவம். ஆறு மாசம் ஆன்னா போதும். பணம்ன்னு வந்து நிக்காம். ஒத்து ரூவா, ரட்ட ரூவா எல்லாம் கெடையாது. எல்லாம் லட்ச ரூவாத்தாம். அப்பிடி லச்ச லச்சமா கட்டி என்னத்தெ படிச்சி, என்னத்தெ சம்பாதிக்கப் போறாம்ன்னு தெரியல. இதுல போட்டா சாக்கியோ பாக்கியோ என்னவோ அந்த ஜட்டி, பனியனத்தாம் போடுவேம்ன்னு அறுவது ரூவா எம்பது ரூவா ஆவுற காசிக்கு, எரநூத்து ரூவா, முந்நூத்து ரூவான்னு செலவப் பண்ணிட்டு வேற நிக்காம். ஒத்தப் புள்ளத்தானே. காசியச் சேத்து வெச்சு என்னத்தப் பண்ணப் போறேம்ன்னு வுட்டுப்புட்டேம். அந்தப் பயலுக்காகத்தானே வேற்குடிய வுட்டுப்புட்டு கிளினிக்கு வைக்க தோதா இருக்கும்ன்னு தஞ்சார்ல வந்துக் கெடக்கேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "மேக்கொண்டு ன்னா பண்ணுறதா உத்தேசம்?"ன்னுச்சு பாலாமணி.
            "படிப்ப முடிச்சதும் தஞ்சார்ல கிளினிக்க போட வேண்டியதுதாங். ஒன்னயத் தாண்டி படிச்சிருக்கிறதால பீஸூ கூட போட்டு வாங்குனா கோடுப்பானுங்களா?"ன்னுச்சு லாலு மாமா.
            "கிழிச்சாம் போ! விடிய விடிய கதெயக் கேட்டு ராமனுக்குச் சீத்தே சித்தாப்பாங்றே? நாமளே ஓசிக்கி வைத்தியம் பண்ணுறதா சொல்லி மருந்துல்ல வெச்சில்லா அடிச்சிட்டு இருக்கேம். மருந்துல ந்நல்ல காசிங்றதால இப்போ செல மருந்துகள நாமளே தயாரிச்சிட்டு இருக்கேம். மூட்டுவலிக்கு எண்ணெ, கழுத்துவலிக்கு எண்ணெ, முதுகுவலிக்கு எண்ணெ, தலைவலிக்கு எண்ணென்னு அனைத்து வலிக்கும் எண்ணெய், எலும்பு முறிவுக்கு எண்ணென்னு எல்லாம் எண்ணெய் தயாரிப்புத்தாம் போ. என்னய வெச்சு எண்ணெயப் பிழிஞ்சியும், காய்ச்சியும் பணத்தெ எடுத்துட்டு இருக்கேம். இப்போ வைத்தியம் பண்ண வார்றானுவோளோ இல்லியோ எண்ணெய்ய வாங்குறதுக்குன்னு ஓரு கூட்டமே வர்றாம். இந்த மருந்து தயாரிப்பே இப்பிடியே விரிவு பண்ணிட்டுப் போனா துட்டு ந்நல்லா பொரளும் போலருக்கு மாமா! அதாங் கேரளக்கார்ரேம் ந்நல்லா சம்பாதிக்கிறாம். கருவாட்டு வித்த காசி நாறவா போவுதுங்ற மாதிரிக்கி, மருந்து வித்த காசி வெயாதியா தர்றப் போவுது?"ன்னு சொல்லிச் சிரிச்சுச்சு அப்போ பாலாமணி.
            "எப்பிடியோ பொழைச்சிக்கிட்டா சரித்தாம்டா!"ன்னு அதுக்குப் பதிலுக்குச் சிரிச்சுச்சு லாலு மாமா. லாலு மாமா வெளியில சிரிச்சிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள மவனெ நெனைச்சி ஒரு கவலெ இருந்துச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...