30 Jun 2020

ஓலை எழுத வர்ரேன்னு ஓலையில போனவன்!

செய்யு - 492

            பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா குடும்பத்துக்கு சித்துவீரன் மூத்த மருமவங்றதால அதோட செல்வாங்கு அங்க அதிகம். சித்துவீரனோட செல்வாக்கு அங்க அதிகமா இருக்குறதுக்கு அது மட்டும் காரணமில்லெ. கட்டிக்கொடுத்த சுந்தரிப் பொண்ணு வூட்டுல வந்து உக்காந்துடக் கூடாதேங்ற கவலையும் இன்னொரு காரணம். இன்னும் ஒரு பொண்ண கட்டிக் கொடுக்க வேண்டிய நெலையில, கட்டிக்கொடுத்த பொண்ணு வாழாவெட்டியா வந்து உக்காந்துப்புட்டா அந்த நெலமைய நெனைச்சுப் பாக்கவே பாக்குக்கோட்டை சனங்களுக்கு பயங்கரமா இருந்துச்சு. கட்டுனப் பொண்டாட்டிக்கு இன்னொருத்தங் கூட தொடர்பு இருக்குங்றதெ தெரிஞ்சிக்கிட்டு ஒருத்தன் ஒரு பொண்ண சகிச்சிக்கிட்டு வாழ்றதெ பெரிய தியாகமா நெனைச்சதுங்க பாக்குக்கோட்டை சனங்க. அப்படிப்பட்ட ஒரு தியாகியா சித்துவீரன் இருந்த காரணத்தால பாக்குக்கோட்டை குடும்பத்தைப் பொருத்த மட்டுல சித்துவீரன் எடுக்குறதாங் முடிவு, சித்துவீரன் வைக்குறதாங் சட்டம். 
            ராசாமணி தாத்தாவுக்கும், சரசு ஆத்தாவுக்கும் தெரிஞ்சே சுந்தரிக்கு நாலு தடவைக்கு மேல அபார்ஷன் ஆயிருக்கு. அதுல லாலு மாமா வந்து நின்னு லட்சுமாங்குடியில பண்ணி வுட்டது மூணு. சுந்தரிக்குப் பொறந்த புள்ளைங்க ரண்டு. ஆம்பளப் புள்ளெ ஒண்ணு, பொம்பள புள்ளெ ஒண்ணு. ஆன அபார்ஷனுக்குக் கணக்கு இல்ல. ராசாமணி தாத்தாவ கேட்டா அது ஒரு கணக்குச் சொல்லும். லாலு மாமாவ கேட்டா அது ஒரு கணக்குச் சொல்லும். சரசு ஆத்தா வேற ஒரு கணக்கச் சொல்லும். சித்துவீரங்கிட்டெ கேட்டா தெளிவா இருக்குறப்போ ஒரு கணக்கு வரும், டாஸ்மாக்குச் சரக்கச் குடிச்சப் பிற்பாடு வேறொரு கணக்கு வரும். சுந்தரிக்கிட்டெ கேட்டா அப்பிடி எதுவுமெ கெடையாதுன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணாத கொறைக்குச் சொல்லும். மொத்தத்துல உண்மையான கணக்குங்றது யாருக்குத் தெரியுங்றது யாருக்குமே தெரியாது.
            முன்பெல்லாம் சுந்தரிக்கு அபார்ஷன் ஆவுறப்போ வூட்டுல இருக்குற அண்டா, குண்டான்னு ஒவ்வொண்ணு அடகுக்குப் போயி அரைப்பவுனு நகையாவோ, இருவதாயிரம் முப்பதாயிரம் ரொக்கமாவோ சித்துவீரன் கைமாறும். அப்பிடிப் பண்ணித்தாம் சித்துவீரனெ திருப்தி பண்ண முடியும். பாலாமணி வேலைக்குப் போன பிற்பாடு அடகுக்குப் போறது இல்லாமப் போச்சு. ஆனா பாலாமணி கிளினிக்கிலயும், மருந்துலயும் சம்பாதிச்ச காசு அடகு வைக்குறதுக்குப் பதில சித்துவீரனோட வூட்டுக்கு அடிச்சிக்கிட்டுப் போனுச்சு. கடைசியா ரண்டு வருஷத்துக்கு மின்னாடி சுந்தரிக்கு அபார்ஷன் ஆனப்போ ஒஸ்தியான வெலைக்கு ஒரு பிரிட்ஜையும், ஒரு வாஷிங் மெஷினையும் வாங்கிக் கொடுத்து சித்துவீரனெ சமாதானம் பண்ணுச்சு பாலாமணி. வெளியில பாக்குறப்போ மச்சாங்கார்ரேன் மச்சானுக்குப் பிரியமா செய்யுற மாதிரி தெரியும். சுந்தரி சொல்லுறப்பவும் அப்பிடித்தாம் சொல்லும், "எம்மட யண்ணேன் வேலைக்குப் போயி மொத மாசத்துச் சம்பளத்துல வாங்கிக் கொடுத்தது!"ன்னு. ரொம்ப நெருங்குன சொந்தப் பந்தங்களுக்கு மட்டுந்தாம் டாக்கடரு மச்சங்கார்ரேன் ஒரு அடிமையப் போல ஏம் கட்டெ அடிக்கிற மச்சாங்கார்ரேம் மின்னாடி இப்பிடியெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு நிக்குறாங்றது தெரியும்.
            கொஞ்சம் ஒடம்பு கனக்காம மட்டும் இருந்திருந்தா பிந்துவையும் தனக்குக் கட்டி வையின்னு சித்துவீரன் சொல்லிருந்தாலும் ஆச்சரியப்பட்டு இருக்குறதுக்கு எடமில்லே. ஒடம்பு கனமோ, தன்னோட இயலாதத்தனமோ சித்துவீரனுக்கு பிந்துவ பிடிக்காம போயிடுச்சு. அந்த வகையில குண்டா இருந்தது பிந்துவுக்குச் சவுகரியமா போயிடுச்சு. கலியாணம் ஆவாம இருக்குறத மட்டுந்தாம் அசெளகரியமா போயிடுச்சு.
            சித்துவீரனோட இயலாத தன்மைன்னா நடமாட்டத்துக்கான ஒடம்பும் முடியாத ஒடம்பு, படுக்கையிலயும் முடியாத ஒடம்பு. வெளிநாட்டுல இருந்தப்பவே அவனவனும் ரகசியமா தொடுப்ப வெச்சிக்கிட்டு அலைஞ்சப்போ அப்பிடி அலைஞ்சு கெத்து முடியாத ஏக்கம் சித்துவீரனுக்கு. எந்தக் கதையா இருந்தாலும் அதெ வெளியில சொல்லிப்புடலாம். இந்தக் கதையெ எப்பிடி வெளியில சொல்ல முடியும்? அதால தானொரு சுத்தமான  ஒழுக்கமுள்ள மனுஷன்னும், கலியாணம் கட்டிட்டுப் போற பொண்டாட்டி ஒருத்தியைத்தாம் கையால தொடுவேம்ன்னு கித்தாப்புப் பேசிட்டுத் திரிஞ்ச ஆளு. ஒருத்தனுக்கு ஒருத்திங்றதுதாங் தன்னோட கொள்கைன்னு அந்தக் கொள்கைக்குக் கொள்கைப் பிரச்சார ஆளாவும் இருந்துச்சு சித்துவீரன். அத்தோட நேரம் அந்தக் கொள்கைப்படி அத்து அப்பிடி இருந்தாலும், அத்துக் கட்டிட்டு வந்த சுந்தரியால அப்பிடி அந்தக் கொள்கைப்படி இருக்க முடியாதது ஒரு பெருஞ் சோகம்.
            ஒல்லியான ஆளுக்கு மட்டும் சுகர்ரோ, பிரஷரோ வாரக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி வந்தாலும் நாப்பது வயசுக்குள்ளார வாரக் கூடாதுன்னும் சொல்லுவாங்க. சித்துவீரனுக்கு ரண்டுமே நாப்பது வயசுக்குள்ள வந்துடுச்சு. படுக்கையில படுத்தா என்னிக்காவதுதாம் தண்டு கெளம்புது. மித்த நாள்கள்ல சுருண்டுக்கிடுது. தண்டு கெளம்புற நாளு சுந்தரிக்கு மூணு நாளுக்கான வெலக்கா இருக்கும். சித்துவீரனுக்குக் கலியாணம் ஆவுறதுக்கு மின்னாடியே அப்பிடித்தாம் இருந்துச்சு. அதெ யோசனையா கெடந்து வெளியில பொண்ணு கட்டி மானம் போயிடக் கூடாது, ‍அதெ நேரத்துல கொஞ்சம் வசதியான எடத்துல பொண்ண எடுத்து விசயம் வெளியில கசிஞ்சிடக் கூடாதுன்னு கனகச்சிதமா கணக்குப் பண்ணித்தாம் சுந்தரியக் கட்டுனது சித்துவீரன். அத்து பாக்குக்கோட்டை குடும்பத்துக்கும் அப்போ வசதியா போச்சுது, சித்துவீரனுக்கும் ஒரு வசதியாப் போச்சுது. அதுல சித்துவீரன் எதிர்பாக்காம நடந்ததுன்னா சுந்தரிக்கு ஆதிகேசவனோட இருந்த காதல்தாம். காதல்ல என்னா நல்லக் காதல், கள்ளக் காதல்ன்னு ரண்டு புள்ளைகளப் பெத்த பெற்பாடும் இன்னும் அந்தக் காதல காபந்து பண்ணி வெச்சிட்டு இருக்கு சுந்தரிங்றது ஊரு ஒலகத்துல ஒரு சிலருக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அந்த விசயத்துல சுந்தரியப் பொருத்தமட்டுல காதல்ங்றது அழியுறதில்ல, அத்தோட அத்து யாரு நெனைச்சாலும் அழிக்க முடியாத ஒண்ணுத்தாம்.
            நெலமெ இப்பிடி இருந்தப்போ சுந்தரி தன்னோட தங்காச்சிக்காகக் கண்ண கசக்கிட்டு இருந்தப்போ சித்துவீரனுக்கு அத்து ஒரு நல்ல சந்தர்ப்பமா பட்டுச்சு. இந்த நேரத்துல பொண்டாட்டிய இந்த விசயத்துல திருப்தி பண்ணா சரியா வந்துப்புடுவான்னு ஒரு கணக்கெ போட்டுச்சு. கொட்டாப்புலியூர்ல பீரோ வாங்கப் போறப்போ தொடர்பு உண்டான சலபதிராசனெ சித்துவீரனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. சித்துவீரன் சலபதிராசனப் பாத்தா போதும், ஒடனே சலபதிராசன் சித்துவீரனெ கடைக்கு அழைச்சிட்டுப் போயி டீத்தண்ணியையும், போண்டாவையும் வாங்கிக் கொடுக்குறாப்புல டாஸ்மாக்குக்கு அழைச்சிட்டுப் போயி குவார்ட்டரையும், சிக்கன் பகோடாவையும் வாங்கிக் கொடுக்குறதுதாங் வேல. சலபதிராசனுக்கு திருவாரூரு விளமல்ல வூடு, ப்ளாட்டுப் பாத்துக் கொடுக்குறதோடு, கலியாணத்துக்கு வேண்டிய பீரோ, கட்டிலு, சாப்பாட்டு மேசைன்னு வாங்கிக் கொடுக்குற வேல. தரகு வேலைன்னாலும் சடசடன்னு அதுல முன்னுக்கு வந்த ஆளு. யாரு எந்த வெலைக்குக் கேட்டாலும் அந்த வெலைக்கு எடமோ, பொருளோ சலபதிராசங்கிட்டெ தயாரு நெலையில இருக்கும். அதுதாங் சலபதிராசனோட சிறப்பே.

            சித்துவீரன் சமயத்துல பாக்குக்கோட்டையிலேந்து வாங்கி வந்து தாஞ் செஞ்சு வைச்சாப்புல வெச்சிருக்குற பீரோலு கட்டிலு வெலைக்குப் போவலைன்னா சலபதிராசனத்தாம் பிடிக்குறது. சித்துவீரன் சொன்ன வெலைக்கு பீரோலையும் கட்டிலையும் வாங்கிகிட்டு அதெ வுட கூட விக்குறது சலபதிராசனுக்கு கை வந்த கலை. பொதுவா கட்டிலு பீரோங்றது கெராமத்துல ஒரு வெலைக்கு விக்கும்ன்னா டவுன்ல வேற ஒரு ‍வெலைக்கு விக்கும். ஆளு பாத்து விக்குறதுல இருக்கு சூட்சமம். கவர்மெண்ட் வேலை பாக்குற அசாமியோ, யேவாரத்துல இருக்குற அசாமியோன்னா காசு கூட போனாலும் பரவாயில்ல, வேல தரமா இருக்கணும்பாம். சாதா ஆசாமின்னா சரக்குத் தரமா இல்லாட்டியும் பரவாயில்ல காசுக்கு கட்டுபடியா ஆன போதும்பாம்.
            சலபதிராசங்கிட்டெ வாடிக்கை பண்ணுற ஆளுங்க பலரும் கவர்மெண்டு வேலையிலயும், யேவாரத்துலயும் இருக்குற அசாமிங்க. அவங்களோட கொணப்பாடு அறிஞ்சு பேசிப்புட்டா போதும் ஆயுசுக்கும் அந்த ஆளுகிட்டெ சாமாஞ் செட்ட வாங்குனாத்தாம் திருப்திபடும் அவங்களுக்கு. அத்தோட யாருகிட்டெ சாமாஞ் செட்டோ பொருளோ வாங்குறோமோ அவுங்களோட ராசிக் கணக்கையும் பாக்குமுங்க அந்த மாதிரி ஆளுங்க. அந்த வெதத்துலயும் சலபதிராசனுக்கு யோகந்தாம். சலபதிராசனங்கிட்டெ எடமும், பொருளும் தரகு பண்ணி வாங்குன ஆளுங்க எல்லாம ஏறுமுகத்துல கொழிச்சதுங்க. அதால எந்தப் பொருளையும் தள்ளி வுடுறதுல செருமமெ கெடையாது சலபதிராசனுக்கு. செருமம்ன்னா பொருளு பத்தலைங்றதுதாம்.
            சமயத்துல சித்துவீரன் சலபதிராசங்கிட்டெ சல்லிசா பீரோ, கட்டில வாங்கியாந்து வித்துப்புட்டு பெறவு நெதானமா பணத்தெ கொடுத்திருக்கு. முப்பதினாயிரம்ன்னு ஒத்துக்கிட்டு வாங்கிட்டுப் போன பொருளுக்கு இருபத்து எட்டுனத்தாயிரத்தக் கொடுத்தாலும் சலபதிராசன் ஒண்ணும் சொல்லுறதில்ல. இவ்வளவு அநியாயத்துக்கு நல்லவனா இருக்குற ஒருத்தனெ தன்னோட வாழ்நாள்ல பாக்கவே இல்லேங்றது சித்துவீரனோட நெனைப்பு. இப்படிப்பட்ட ஒருத்தன் மச்சாங்கார்ரான வந்தா பலவெதத்துல ஒதவியா இருக்கும்ற நெனைப்புல சித்துவீரன் சலபதிராசனெ தன்னோட கொழுந்தியா பிந்துவுக்குக் கோத்து விடப் பாத்துச்சு.
            அதுக்கு சலபதிராசன் ஒத்துக்கிடறாப்புல ஒரு சூழ்நெலையும் அமைஞ்சுச்சு. சலபதிராசன் கண்டபடிக்கு பைக்குல அலைஞ்சதுல மூலநோயி வந்துப் போச்சு. அத்து என்னவோ யாருகிட்டெ சிசிச்சை பண்ணியும் சரியாவாம போனதுல இந்த சேதி தெரிஞ்ச சித்துவீரன் சலபதிராசனெ பாக்குக்கோட்டை பாலாமணி கிளினிக்குக்குக் கொண்டு போச்சுது. பாலாமணி பாத்த வைத்தியத்துல இருவது நாள்ல கொணம் கண்டுச்சு சலபதிராசனுக்கு. அத்தோட சலபதிராசனுக்கு பைக்குலயே அலையுறதால இடுப்பு டிஸ்க்கு கொஞ்சம் நகர்ந்து இருந்ததாவும் அதெ ஆபரேஷன் பண்ணணும்னு இங்கிலீஷ் டாக்கடருங்க சொன்னதையும் அந்த நேரத்துல எடுத்து விட்டுச்சு சலபதிராசன். அதுக்கு எதுக்கு ஆபரேஷன்னு பாலாமணி அதையும் ஆயுர்வேத மருந்துலயும், எண்ணெய்லயும் ஆறு மாசத்துல கொணம் பண்ணி வுட்டுச்சு. என்னா ஒண்ணு காசியத்தாம் ஒண்ணுக்கு நூத்தா கறந்து எடுத்துப்புடுச்சு பாலாமணி. பணத்தெ கறந்து எடுத்தாலும் கொணம் கண்டதுல சலபதிராசனுக்கு சந்தோஷம் தாங்கல. அத்தோட சலபதிராசனோட அப்பங்காரரு, அம்மாக்காரின்னு ஆளுக்கொரு வெயாதி கழுத்துவலி, முதுகுவலின்னு. அதுக்கும் பாலாமணிதாம் வைத்தியம்.
            இப்படிப்பட்ட நெலையிலத்தாம் சித்துவீரன் சலபதிராசனெ பிடிச்சுப் போட்டுச்சு. சலபதிராசனுக்கும் பாலாமணி மச்சாங்காரனா வாரதால மிச்சமாவப் போற வைத்தியக் கணக்குல கவனம் போச்சுது. இப்பயும் பாலாமணிகிட்டெ மருந்து வாங்கிச் சாப்புடலன்னா சலபதிராசனுக்கு இடுப்பு வலியோ, முதுகுவலியோ கண்டுடுது. அதுக்கே மாசத்துக்கு மூவாயிரத்துச் சில்லரை செலவானுச்சு. மொத்தக் குடும்பத்துக்கும் பாத்தா மருந்துக்கு ஆவுற பத்தாயிரம் சில்லரை மிச்சமான்னா வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருவதினாயிரம்லா மிச்சமாவுதுன்னு பிந்துவ கட்டிக்கிட சம்மதிச்சிது சலபதிராசன்.
            சித்துவீரன், "பொண்ணுதாங் கொஞ்சம் குண்டு!"ன்னு சொன்னப்ப கூட, "இப்போ இருக்குற பொண்ணுங்க கலியாணம் ஆன பெற்பாடு குண்டாத்தானே ஆவப் போவுதுங்க. அதெ யாரு தடுக்க முடியும் சொல்லு? ன்னா ஒண்ணு கலியாணம் ஆயி குண்டு ஆவுறதுக்கு மின்னாடி குண்டே ஆயியே கலியாணம் கட்டிட்டு வாரப் போவுது. அம்மாம்தானே வித்தியாசம்!"ன்னுச்சு சலபதிராசன். அந்தப் பதிலெ கேட்டதும் சித்துவீரன்குச் சந்தோஷம்ன்னா சந்தோஷம். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கா கொறைதாம்.
            இதெ பத்தி சித்துவீரன் மொதல்ல சுந்தரிக்கிட்ட சொன்னப்போ சுந்தரிக்கும் தாங்க முடியாத சந்தோஷம். சுந்தரி இந்த விசயத்தப் பத்தி சரசு ஆத்தாகிட்டெ சொன்னப்போ சரசு ஆத்தாவுக்கும் தாங்க முடியாத சந்தோஷம். சரசு ஆத்தா இந்த விசயத்தப் பத்தி ராசாமணி தாத்தாகிட்டெ சொன்னப்போ அதுக்கும் தாங்க முடியாத சந்தோஷம். ராசாமணி தாத்தா இந்த விசயத்தப் பத்தி பாலாமணிகிட்டெ சொன்னப்போ பெரிசா சந்தோஷம் ஏதுமில்லன்னாலும் எப்படியோ கலியாணம் ஆயி தங்காச்சி போன செரித்தாம்ன்னு ஒரு நெனைப்பு. அத்தோட தங்காச்சிக்கு மாப்புள்ளகார்ரேம்ங்றவெம் சித்துவீரன் சொல்லி வுட்டதுங்ற சேதி தெரிஞ்சதுமே யாரும் மறுப்பு ஏதும் சொல்லல.
            சலபதிராசன் வூட்டுலேந்தும் பாக்குக்கோட்டை சிங்கப்பூரு காலனிக்குப் போயி பொண்ணப் பாத்தாங்க. திருப்திதாம் அவுங்களுக்கு. பாக்குக்கோட்டையிலேந்தும் சனங்க சலபதிராசன் வூட்டுக்குப் போயி பாத்தாங்க. பாக்குக்கோட்டை சனங்களுக்கும் திருப்தித்தாம். பின்னெ இருக்காதே என்னா! கீழே ஒரு வூடு, மேல மாடியில ரண்டு வூடு வாடகைக்குன்னு வூடு இருக்கு. வூட்டைச் சுத்தி இன்னும் நாலு வூட்டக் கட்டிப் போடலாங்ற அளவுக்கு எடம் வேற. ப்ளாட்டு வாங்கி விக்குறதலயும், சாமாஞ் செட்டுகள வாங்கி விக்குறதுலயும் சலபதிராசனுக்கு கை நெறைய காசு பொரளுதுன்னு தெரிஞ்ச ஒடனேயே ராசாமணி தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லாச்சு. அத்தோட சலபதிராசன் ஒத்தப் புள்ளெ. மாமானாரு மாமியாரு ஒடம்புக்கு வேற முடியாம இன்னிக்கோ நாளைக்கோன்னு கெடக்குறாங்க. நாளைக்கே போயிச் சேந்தாலும் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே. ஒடம்பு முடியாத மாமானாரு மாமியாருங்றதால மாமியாரு தொல்லைங்றது அறவே இருக்காதுன்னு பல வெதத்துல சலபதிராசன் மாப்புள்ளையா வாரது பாக்குக்கோட்டை சனங்களுக்குத் திருப்திப்பட்டுப் போச்சு. ராசாமணி தாத்தா தனக்குத் தெரிஞ்ச வகையில அரையும் கொறையுமா சாதகத்தெ பாத்ததுல பொருத்தமும் திருபதிப்பாடா இருந்துச்சு. மாப்புள்ளையப் பாத்த அன்னிக்கு ஒரு தேதிய நிச்சயம் பண்ணி முகூர்த்தஓலைக்கு ஏற்பாடு ஆயிடுச்சு.
            முகூர்த்த ஓலை பாக்குக்கோட்டையில சிங்கப்பூரு காலனி வூட்டுலயே பண்ணிப்புடலாமுன்னு ஏற்பாடெல்லாம் பெரமாதமா பண்ணி வூட்டுக்கு மின்னாடி பெரிய பந்தல்லாம் போட்டு சகசோதியா வேலை நடந்துகிட்டு இருந்துச்சு. சித்துவீரன்தான் எல்லா வேலையையும் மின்னாடி நின்னுப் பாத்துச்சு. பந்தல் போடுறதிலேந்து, சமையலுக்கு ஆளுகள வடவாதியிலேந்து அழைச்சாந்துப் போனது வரைக்கும் எல்லாம் சித்துவீரனோட ஏற்பாடு.
            "நாம்ம ஒரு ஆளு மூத்த மருமவ்வேன்னு இஞ்ஞ இல்லன்னா இந்தக் குடும்பம் என்ன கதிக்கு ஆளாவுறது? அவ்வேம் மச்சாங்காரனெ டாக்கடருக்குப் படிக்க வெச்சு ஆளாக்கி, இப்போ கொழுந்தியாளுக்குத் தாட்டிட்டுப் போன கலியாணத்தெ முகூர்த்தோல வரைக்கும் கொண்டாந்து நிப்பாட்டி, யப்பப்பா இந்தக் குடும்பத்துக்கு ஒழைச்ச ஒழைப்பென்ன? பட்ட பாடென்ன?"ன்னு சித்துவீரன் பாட்டுக்கு அவித்து விட்டுக்கிட்டு இருந்துச்சு.
            முகூர்த்தோலைக்கு லாலு மாமா, முருகு மாமா, சங்கு, ஆனந்தன் வரைக்கும் எல்லாரும் ஆஜரு. பக்கத்துப் பக்கத்து வூட்டு சனங்களும் வந்து குமிஞ்சிட்டுங்க. நேரம் வேற நெருங்கிட்டு இருந்துச்சு. சரியான நேரத்துக்கு வார வேண்டிய மாப்புள்ள வூட்டுச் சனங்க மட்டும் வாரல.
            "ன்னடா இத்து நேரம் கடந்துட்டுப் போவுது? எலே சித்துவீரா மாப்புள்ள வூட்டுச் சனங்களுக்கு போன போட்டுக் கேளுடா?"ன்னு உசுப்பி வுட்டுச்சு லாலு மாமா. சரித்தாம்ன்னு சித்துவீரன் தங்கிட்டெ இருந்த செல்போன்ல அழைச்சிக் கேட்டாக்கா செல்போன்ல அழுகைச் சத்தந்தாம் கேக்குது. ஒரு வழியா அழுகைச் சத்தம் நின்னு சேதியச் சொன்னதுல, வேன்ல கெளம்பி வர வழியில சலபதிராசனுக்கு மாரடைப்பு வந்து உசுரு பிரிஞ்சிப் போச்சுங்றது தெரிஞ்சிது. முகூர்த்‍தோலைக்குப் பண்ணுன சாப்பாடெல்லாம் ஆறிப் போயி வீணாப் போறதுக்குள்ள எதாச்சிம் காப்பகமா பாத்துக் கொடுத்துப்புடுவோம்ன்னு கொண்டு போயி அதெ கொடுத்துப்புட்டு, சித்துவீரனும், பாலாமணியும் சலபதிராசனோட சாவுக் காரியத்துக்குப் போயிட்டு வந்ததோட செரி. இந்தத் தகவல் வேற ஊரு ஒலகத்துக்குத் தெரிஞ்சிப் போயி பிந்துவ வந்துப் பாத்துட்டு பொண்ண பிடிக்கலைன்னு சொன்ன நெலமெ மாறி, வந்துப் பாக்காமலே பொண்ணு வாணாம்ன்னு பாக்குற மாப்புள்ள பயக்காரனெல்லாம்‍ சொல்ல ஆரம்பிச்சிட்டாம்.
            இப்பிடித்தாம் ஆளாளுக்கு பிந்துவுக்கு மாப்புள்ள பாத்து அலுத்துப் போயிருந்ததுங்க சனங்க ஒவ்வொண்ணும்.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...