30 Apr 2020

வம்பு மேல வம்பு!

செய்யு - 434        

            சுப்பு வாத்தியாரு செருப்பப் பிடிச்சி வெளியில எறிஞ்சா பெரியவரு மருமவ்வேன்னு கூட பாக்காம அடுத்ததா அடிக்கப் பாயுறாரு. பாத்தாரு சுப்பு வாத்தியாரு பெரிய மனுஷன்னுப் பாக்காம பெரியவர்ரப் பிடிச்சித் தள்ளி வுட்டுப்புட்டாரு. பெரியவரு யய்யோ யம்மாடின்னு அந்தாண்டப் போயி வுழுந்தாரு.
            பெரியவரு சுப்பு வாத்தியாருக்குத்தாம் கொஞ்சம் அடங்குவாரு. அதால சுத்தி நின்ன எல்லாத்துக்கும் சுப்பு வாத்தியாரு வந்து தடுத்ததுல மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கு. கீழே வுழுந்து எழுந்த பெரியவரு கோவத்துல பேசுனாரு பாருங்க அடுத்த வார்த்தெ, "யம்பீ! இத்து எங் குடும்ப விசயம்! இத்துல நீஞ்ஞ தலையிடாதீங்க!"ன்னு. இதெ கேட்டதும் மித்த எல்லாருக்கும் பொக்குன்னு ஆயிடுச்சு, சுப்பு வாத்தியாரு வந்து நெலமெ சமாதானம் ஆயிடும்ன்னு பாத்தா அதெ தாண்டித் தறிகெட்டுப் போவுதேன்னு.
            சுப்பு வாத்தியாரு அதுக்குல்லாம் கலங்கல. "செரி யத்தாம்! ஒங் குடும்ப விசயம். நீஞ்ஞப் பாத்துக்கோங்க. யக்கா! அத்து அவரு குடும்ப விசயமாம்! நீயி இனுமே இவரு கூட ஒரு நிமிஷம் இருக்கக் கூடாது. ஒடனெ கெளம்பு நம்ம கூட. ஏன்னா இத்து எங் குடும்பம் விசயம். நம்மட யக்கா குடித்தனம் நடத்தணுமா வேண்டாமாங்றதெ நாம்மத்தாம் முடிவு பண்ணணும். அதெ மாதிரிக்கி அவரு மருமவ்வே குடித்தனம் நடத்துணுமா வேணாங்றதெ அவருத்தாம் அதாங் யத்தாம் முடிவு பண்ணிக்கிடட்டும். அவரு குடும்ப விசயத்தெ அவரு முடிவு பண்ணிகிடட்டும். நம்ம குடும்ப விசயத்தெ நாம்ம முடிவு பண்ணிக்கிடுறேம். அநாவசியமா யாரும் இஞ்ஞ அவுங்கவங்க குடும்ப விசயத்துல மித்தவங்க தலையிடாம இருந்துக்கிடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யம்பீ! நல்லாயில்லே! நாம்ம தொட்டுத் தாலியக் கட்டுன பொண்டாட்டி! மருவாதிக் கெட்டுடும்!"ன்னாரு பெரியவரு. அவரோட வாயித் தழுதழுக்க ஆரம்பிச்சிட்டுது.
            "யத்தாம்! நீஞ்ஞ தொட்டுத் தாலியக் கட்டுறதுக்கு மின்னாடியே நமக்கு அத்து யக்கா. தெரியும்ல. நமக்கு மொதல்ல யக்கா. பெறவுதாம் ஒஞ்ஞளுக்குப் பொண்டாட்டி. ஒம்மட மவன்களுக்கு அத்தென பேத்துக்கும் தாய்மாமேம் நாம்ம. நாம்ம எடுக்குறதுதாங் முடிவு. அப்பிடிப் பாத்தாலும் யத்தாம் ஒஞ்ஞள வுட இஞ்ஞ நாம்மத்தாம் எல்லாம். நீஞ்ஞ ச்சும்மாத்தாம். இந்தாரு யத்தாம்! தாய்மாமனான நமக்கு யில்லாத அக்கறை ன்னா ஒனக்கு? நீயி எந்தப் புள்ளையத் தொட்டுத் தூக்கி வளத்திருக்கே? இஞ்ஞ கெடக்குற அத்தனெ புள்ளையையும் தொட்டுத் தூக்கி வளத்தது நாமளும் எஞ்ஞ யக்காவும்தாம். எந்தப் புள்ளைக்கு நீயி ரவ்வ சோறூட்டி வுட்டுருக்கே? சூத்தலம்பி வுட்டுருக்கே? சொல்லு. இஞ்ஞ கெடக்குற மாடுகளப் பாத்த அளவுக்குக் கூட நீயி மனுஷன பாத்தது கெடையாது. நம்மட யக்காவ கட்டலன்னா நீயில்லாம் ஒரு மனுஷம்ன்னு ஒன்னய எவ்வேம் வேலங்குடியில மதிப்பாம்? இஞ்ஞ முடிவுன்னு ஒண்ணுத்தெ எடுக்கணும்னா அத்துக்கு ஒன்னய விட நமக்குத்தாம் அதிகாரம் சாஸ்தி, உரிமெ சாஸ்தி. நாம்ம நெனைச்சேம்ன்னா ஒன்னய யக்கா கூடவே வாழ வுடாம அடிச்சிப்புடுவேம் பாத்துக்க!"ன்னு சுப்பு வாத்தியாரு. இப்பிடி அவரு ஒருமையில எறங்கி அடிச்சதுதாம் வேலங்குடி பெரியவரு கொஞ்சம் அசமடங்குனாரு.
            இவ்வளவு சம்பவம் நடக்குறதெ குடும்பத்துச் சனங்க அத்தனையும் வேடிக்கைப் பாத்துக்கிட்டு வாயை மூடிக்கிட்டு நிக்குதே தவுர ஒண்ணும் வாயைத் தொறந்து ஒண்ணுத்தையும் பேச மாட்டேங்குது.
            பெரியவரு பச்சக்குன்ன அப்பிடியே தரையில உக்காந்து கையி ரண்டையும் படார் படார்ன்னு தரையில அடிச்சாரு. அடிச்சிக்கிட்டே, "இப்ப என்ன பண்ணணுங்றே? வண்டியில ரண்டு மாடும் ஒரு தெசையில இழுக்கணும். சண்டி மாடு வேறொரு தெசையில இழுத்தா வண்டி ஊரு போயிச் சேராது. குடும்பங்றது வண்டி மாதிரி. எல்லா மாடும் ஒழுங்கா இருந்தாவணும். ஒரு சண்டி மாட்டால மொத்தக் குடும்பமும் சந்தியில நிக்குறாப்புல ஆயிடும்!"ன்னாரு காட்டமா.
            "இப்போ ன்னா நடந்துப் போச்சுன்னு இப்பிடி நடக்குது? சண்டி மாடு, சந்தியில நிக்குறேன்னுகிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் சொல்றேம்! ஒண்ணும் தெரியாத விசயத்துல நீயி ஏம் தலையிடறே?"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
            "நடக்குறது நாகரிகமா இருந்தா நாம்ம ஏம் தலையிடறேம்? நாம்ம தலையிடற அளவுக்கு இஞ்ஞ ஏம் நடக்குது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நேத்தியே படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டேம். பொழுது விடியறதுக்கு மின்னாடி பொம்பளைங்க எழுந்துப்புடணும்னு. பொழுது விடிஞ்ச பிற்பாடும் இழுத்துப் போட்டுக்கிட்டுத் தூங்குனா ன்னா அர்த்தம்? அப்பிடிப் பொம்பளெ தூங்குற குடும்பம் வெளங்குமான்னு கேக்குறேம்?"ன்னாரு பெரியவரு.
            "பொம்பளைங்கன்னா மாசத்துல வூட்டுக்கு வெலக்கு ஆவுற நாள்ல ஒடம்புக்கு முடியாம கொள்ளாமத்தாம் போவும். அப்போ கொஞ்சம் மின்ன பின்னத்தாம் எழுந்திச்சி ஆவணும். அதெல்லாம் அனுசரிச்சுத்தாம் போவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "போவும்! போவும்! அப்பிடியில்லாம் பாத்திருந்தா ஒம்மட யக்கா நம்மடகிட்டெ குடும்பமே நடத்திருக்கவே முடியாது. இஞ்ஞ ஒம்மட யக்கா ஒழைக்கிற ஒழைப்புக்கு இழுத்துச் சுருட்டிக்கிட்டுப் படுத்திருக்கணும். ஒரு நாளு அப்பிடிப் படுத்தது கெடையாது தெரியுமா?"ன்னாரு பெரியவரு.
            "அதாஞ் சொல்லிட்டேன்னே! நம்மட யக்காவால தலைநிமுந்த ஆளு நீயின்னு. நம்ம யக்காவ நீயி மனுஷியாவா நடத்துனே? இஞ்ஞ கெடக்குற இருவது மாடுல்ல இருவத்தோராவது மாடு எஞ்ஞ யக்கா. நமக்கு ன்னா தெரியாதுன்னு நெனைச்சியா? அத்து ன்னா மாடா? மனுஷியா? அந்தப் பாடுத்தானே படுத்துனே? இதுக்காவே சின்ன வயசுல விருத்தியூர்ல தங்க முடியாம, யக்காவுக்கு ஒதவியா இருக்குமேன்னு ஓடியாந்த நாளு எத்தனென்னு நமக்குல்ல தெரியும்? ஒனக்கு மச்சினனான நாமளும் ஒரு மாடு. நம்மளையும் போட்டு வேலைங்ற பேர்ல ன்னா பாடு படுத்துனே. அதெ வுடு. அத்து ஒரு காலம். கஷ்ட காலம். வறுமையில கெடந்த காலம். இப்பவும் அப்பிடின்னா... எல்லாம் எந் யக்காவோட தலையெழுத்து. ஒன்னயும் ஒண்ணும் கேக்க முடியாது. ஒந் நொரைநாட்டியத்தையும் ஒண்ணும் கேக்க முடியாது. நடந்தது நடந்துப் போச்சு. வெரல்ல நோவுன்னா வெரல வெட்டி வீசிப்புட முடியாது. வெரல குணப்படுத்தித்தாம் வெச்சிக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தக் கதையல்லாம் நம்மகிட்ட வாணாம். அப்பிடில்லாம் வெச்சிக்கிட்டவாசித்தாம் இன்னிக்கு குடும்பம்னு தலைநிமுந்து நிக்க முடியுது. பாடுபடாம குடும்பத்தெ நிமுத்த முடியாது. மாடு மாதிரி மனுஷம் பாடுபடணுங்றதுக்காகத்தாம் வூட்டுல மாட்ட வாங்கிக் கட்டுறது. நோகாம கொள்ளாம ஒரு மசுத்தையும் புடுங்கிட முடியாது. நிக்குற ஒவ்வொரு மாடும் கறந்த பாலுதாம் அன்னிக்கு சாப்பாடு. சோத்துக்கு வழியில்லாம கெடந்த நாள்லயும் பாலுக்கும், தயித்துக்கும் பஞ்சமில்லெ. அதக் குடிச்சிட்டுக் கெடந்த நாளு நெறைய. அப்பிடிப்பட்ட மாடுகளுக்கு மாட்டெப் போலவே மனுஷம் பாடுபடறதுல தப்பு ஒண்ணும் யில்ல. இதெல்லாம் பேசிட்டு நிக்காதே. நமக்கொண்ணும் அப்பிடி அவசியமில்ல. என்னவோ வெரலு, நோவு, கொணம்ன்னு சொல்றீயே. அப்பிடி கொணம் பண்ணி வெச்சிக்கிடணும்னு எந்தத் தேவையுமில்ல. வெரலு சரியில்லன்னா வெட்டி வீசிப்புடுவேம். நமக்கு ஒபயோகம் இல்லாத வெரலு நமக்குத் தேவையில்ல. வெரல்ன்னா மோதிரத்தெ போட்டுக்கிட்டு லாத்திக்கிடறதுக்கு மட்டும்ன்னு நெனைச்சியா? பாடுபடணும். ஒடம்புல இருக்குற அத்தனெ உறுப்பும் பாடுபடணும். பாடுபட்டத்தாம் வெச்சிப்பேம். இல்லன்ன நம்ம ஒடம்போட உறுப்பா இருந்தா ன்னா வெட்டி வீச யோசிக்க மாட்டேம். நல்லா சொல்றேம் கேட்டுக்கோ, இந்தப் பொண்ணுக்கு இனுமே இந்த வூட்டுல எடமில்லே!"ன்னாரு பெரியவரு.
            சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வந்திடுச்சு. அப்பிடி இப்பிடின்னு ஒருமையில பேசுனவரு இப்போ நேரடியாவே மருவாதி அது இதுன்னு காட்டமா கேட்டுப்புட்டாரு, "ஒம் மருமவளுக்கு ஓம் வூட்டுல எடமில்லன்னா வேற யாரு வூட்டுல எடம் இருக்கு? வயசுல மூத்ததுன்னா அந்த மருவாதியோட பேசணும்? மருவாதி கெட்டத்தனமா பேயப் படாது! இதல்லாம் பேச்சா? மருவாதிக் கெட்டுப் போயிடும்!"ன்னு.
            "வேணும்ன்னா அப்பிடி அவசியம்ன்னா இதெல்லாம் பேச்சான்னு கேள்வி கேக்குறவங்க அவுங்க வூட்டுல கொண்டு போயி வெச்சிக்கிட வேண்டியதுதாம்!"ன்னாரு பெரியவரு.
            "நமக்கென்ன? நம்மட பொண்ணு மாதிரித்தானே. நம்மட வூட்டுல கொண்டு போயி வெச்சிக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "கொண்டுப் போயி வெச்சிக்கிடறது பெரிசில்ல. நீயி வாத்தியார்ர இருக்கேன்னா பின்னாடி நடக்குற வெளைவையும் யோஜனெ பண்ணிக்கிட்டுப் பேசணும். எத்தன நாளுக்கு வெச்சிப்பே? வெச்சிக்கிறீயாம்ல வெச்சுக்கிறே? சந்தானம் வந்து அழைக்க மாட்டாம். அப்பிடி அழைக்கப் போனாம்ன்னா கால வெட்டி அந்தாண்ட தூக்கிப் போட்டுப்புடுவேம். நீயி ஒம்மட வூட்டுலயே வெச்சிக்கிட வேண்டியதுதாங். அதையெல்லாம் யோஜனெ பண்ணிக்கிட்டு முடிவெடு!"ன்னாரு பெரியவரு.
            "நானும் அதத்தாம் சொல்றேம்! நாளைக்கு எவனாவது மருமவள அழைக்க வர்றேம், பொண்டாட்டிய அழைக்க வர்றேம்ன்னு நம்மட வூட்டு வாசல்ல வந்து நின்னாம்ன்னு வெச்சுக்கோ நாமளும் கால வெட்டி அந்தாண்ட வெச்சிப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் பதிலுக்கு.
            "அம்மாம் கொழுப்பு வெச்சிப் போயிடுச்சா ஒனக்கு? பாப்போம் பாப்போம். நாளைக்கி ன்னா நடக்குதுன்னு?"ன்னாரு பெரியவரு.
            "நாளைக்கி எத்து வேணும்னாலும் நடக்கும்? எத்தனெ பயெ ஒத்த காலோட அலையப் போறாம்ன்னு நாளைக்கி நடந்தாத்தாம் தெரியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்த விருத்தியூரு சனத்துக்கே அழுத்தம் சாஸ்தி. கொழுப்பு கிரிசெ கெட்டுப் போயிக் கெடக்குது. நாம்ம பாக்க வளந்தப் பயெ. நம்ம மின்னாடி ன்னா பேச்சு பேசுறே நீயி?"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
            அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு பெரியவர்ர பாக்க விரும்பல. நீயெல்லாம் ஒரு மனுஷனாங்ற மாதிரி அலட்சியமா அந்தாண்ட திரும்பி சுப்பு வாத்தியாரு தனம் அத்தாச்சியப் பாத்தாரு. "போயி வேற பொடவையக் கட்டிட்டுக் கெளம்பு. நம்மட வூட்டுக்குப் போவோம்! இஞ்ஞ நீயி இருக்க வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "வேற போடவையல்லாம் கட்டிட்டு வார மாட்டேம்.இதே போடவையோடத்தாம் வருவேம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "இன்னா நெஞ்சழுத்ததப் பாத்தீயா? ஒம் பேச்சையாவது கேக்குதா? இதையெல்லாம் ன்னா பாடு படுத்தணும் தெரியுமா? இதெப் போயி அழைச்சிட்டுப் போறேங்கிறீயே?போ போ அழைச்சிட்டுப் போயி பட்டாத்தானே தெரியும் ஒரு குடும்பத்தெ நடத்துறதுன்னா சாமானியமா ன்னான்னு? அழைச்சிட்டுப் போறாராமுல்ல அழைச்சிட்டு? இப்பத்தான பொண்ணு புள்ளைன்னு ஆயிருக்கு. மருமவன்னு ஆனாத்தாம் தெரியும் அதோட சங்கதி!"ன்னாரு பெரியவரு.
            "செரி வா! கெளம்பு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பெரியவர்ர மொறைச்சுப் பாத்துக்கிட்டே தனம் அத்தாச்சிக்கிட்டெ.
            சுப்பு வாத்தியாரு ஒருத்தர்கிட்டெயும் ஒண்ணும் சொல்லாம வாசல்ல கெடந்த டிவியெஸ்ஸ ஸ்டார்ட் பண்ணாரு. நனைஞ்சப் பொடவையோட தனம் அத்தாச்சி வந்து பின்னாடி ஏறி உக்காந்துக்கிடுச்சு. மாமானாருகிட்டேயும் ஒண்ணும் சொல்லல, செலையப் போல நின்ன புருஷங்காரரான சந்தானம் அத்தாங்கிட்டயும் ஒண்ணும் சொல்லல. அது பாட்டுக்கு சுப்பு வாத்தியாரோட டிவியெஸ்ல ஏறி உக்காந்துகிட்டு திட்டைக்கு வந்திடுச்சு.
            சுப்பு வாத்தியாரு கெளம்பிப் போன பிற்பாடு அந்த எடம் கொஞ்சம் அமைதியாவுது. ஆனா, செயா அத்தை அதோட ரணகளத்தை ஆரம்பிச்சிடுச்சு. "ஏந் தம்பித்தானே வந்திருக்காம். எதுக்கு வந்திருக்காம்? என்னத்துக்கு வந்திருக்காம்?ன்னு ஒருத்தராவது கேட்டீயளா? அவ்வேம் பாட்டுக்கு அனாதியா வந்து அனாதியா கெளம்புறாம்? வந்தவனுக்கு ஒரு வாயி டீத்தண்ணிய கொடுக்க வுட்டீங்களா? டீத்தண்ணிக் கெடக்கட்டும், ஒரு வாயி தண்ணியக் கொடுக்க வுட்டியளா? ஒஞ்ஞளுக்கு ஒஞ்ஞ சண்டைத்தாம் முக்கியம். எந் தம்பி முக்கியம் கெடையாது. அவ்வேம் இல்லன்னா இன்னிக்கு இந்தக் குடும்பம் கெடையாது. இஞ்ஞ கெடக்குற ஒவ்வொண்ணுத்தையும் தூக்கி வளத்தவேம் அவ்வேம். ஏம்டா அறிவுகெட்ட கம்முனாட்டிகளா! ஒஞ்ஞ தாய்மாமேம்தானடா அவ்வேம்? இத்தாம் ஒரு தாய்மாமேனுக்கு நீஞ்ஞ தர்ற மருவாதியா? வெளங்காத பயலுவோளா! இனுமே இந்த வூட்டுல எங்கிட்டெ யாரும் பேசக் கூடாது. மீறிப் பேசுனா நடக்குறதே வேற? நாம்ம என்னப் பண்ணுவேம்ன்னு நமக்கே தெரியாது!" அப்பிடினிச்சு செயா அத்தை. சொல்லிப்புட்டு பக்கத்துல கெடந்த நாலு பாத்திரத்த தூக்கி மடார்ன்னு மடார்ன்னு அந்தாண்ட தூக்கி வீசுனுச்சு. அதுக்குப் பெறவு யாரும் ஒண்ணும் பேசிக்கிடல. இன்னிக்குக் காலையில யாரு மொகத்துல முழிச்சோம்? இப்பிடி ஆயிடுச்சேன்னு எல்லாம் தலையில கைய வெச்சிக்கிட்டு உக்காந்துட்டுங்க!
*****


29 Apr 2020

கோவக்கார குருத்து!

செய்யு - 433        

            கலியாணத்துக்குப் பெறவு சந்தானம் அத்தான் தனம் அத்தாச்சிய சென்னைப் பட்டணத்துலேந்து அழைச்சிக்கிட்டு வேலங்குடி வந்தப்போ நடந்த சம்பவத்த சொல்லாத வரைக்கும் வேலங்குடி பெரியவரு குடும்பத்துல எப்பிடி செல்வாக்கான ஆளுங்றதெ புரிஞ்சிக்க முடியாது.    
            சென்னைக்கும் வேலங்குடிக்கும் எப்பிடியும் நானூத்து கிலோ மீட்டருக்கு மேல இருக்கும். வேலங்குடியிலேந்து சென்னை போனாலும் சரித்தாம், சென்னையிலேந்து வேலங்குடி வந்தாலும் சரித்தாம் படுத்தா எழுந்திரிக்க முடியாது. போயிட்டு வந்த பயணக் களைப்புல, ஒடம்பு தாங்க முடியாத அசதியாத்தாம் இருக்கும். ஆனா எந்நேரத்துக்கும் வேலை இருக்குற அசாமிங்க அதெப் பாக்க முடியாது. ஒரு மணி நேரமோ, ரெண்டு மணி நேரமோ கொஞ்சம் கண்ணசந்துட்டு வேலையப் பாக்குறாப்புல ஆயிடும். பொதுவா இந்த மாதிரிப் போயிட்டு வர்ற பயணம் ராப்பயணமாத்தாம் இருக்கும். ராத்திரி கெளம்பிக் காலையில போயிச் சேர்றது. அப்பிடிப் போனாக்கா ராத்திரி நேரம் பயணத்துல கழியுறதால பகல் நேரத்து வேலை பாதிக்காம இருக்கும்ன்னு செஞ்சிக்கிறது. எப்பிடியிருந்தாலும் அன்னிக்குப் பகல்ல தூங்காம வேலைப் பாத்தாலும் ராத்திரிக்கிப் படுத்தா அடிச்சிப் போட்டாப்புல தூக்கம் வரும். அந்த ஒரு ராத்திரி நல்லா தூங்குனாலும் மறுநாளுன்னாலும் காலையில எழுந்திரிக்கக் கொஞ்சம் அசதியாத்தாம் இருக்கும். பெரியவர்ரப் பொருத்த வரைக்கும் பொழுது விடிஞ்சா அவரு பாக்குறாப்புல ஆம்பள, பொம்பள யாரும் படுத்துக் கெடக்கக் கூடாது. ஆம்பளெ படுத்துக் கெடந்தா எட்டி ஒதைப்பாரு. அதுவே பொம்பளப் படுத்துக் கெடந்தா என்ன செய்வார்ங்றதெ தனம் அத்தாச்சிக்கு நேர்ந்த சம்பவத்தெ வெச்சி சொன்னா ஒங்களுக்குத் தெரிஞ்சிடும்.
            கலியாணம் ஆயி சென்னைப் பட்டணம் போயி மொத மொறையா வேலங்குடி வருது தனம் அத்தாச்சி. வேலங்குடியில ஒரு கலியாணக் காரியத்துக்காக சந்தானம் அத்தான் வர வேண்டிய நெலையில அதுக்கும் கலியாணமானதால குடும்பமா போவலாம்ன்னு தனம் அத்தாச்சியையும் கூடவே அழைச்சிட்டு வந்து, அப்பிடியே ரெண்டு மூணு நாளைக்குத் தங்கிட்டுப் போவலாங்ற திட்டத்துல வந்துச்சு.
            வந்த அன்னிக்கே ஒடம்பு முடியாம காலையில ஏழு மணிக்கு வந்த தனம் அத்தாச்சி பாயை எடுத்துப் போட்டுப் படுக்கையப் போட்டது பதினோரு மணி வாக்குலத்தாம் எழுந்திரிச்சி. அதுவும் எப்பிடின்னா பெரியவரு காலைச் சாப்பாட்ட முடிக்கிறதுக்கு மின்னாடியே வயல்கள ஒரு பார்வைப் பாத்துப்புட்டு, வேலை எதாச்சிம் கெடந்தா அதையும் பாத்துப்புட்டு பத்து மணி வாக்குல யில்லன்னா பதினோரு மணி வாக்குல திரும்புவாரு. திரும்புனார்ன்னா வூட்டை, கொல்லைய ஒரு சுத்து சுத்திட்டு கையி கால அலம்பிட்டு வந்து சாப்புட உக்காருவாரு. அப்பிடி வூட்ட ஒரு சுத்து சுத்துறப்போ கூடத்துல பாயைப் போட்டு, போர்வையப் போத்திக்கிட்டு தனம் அத்தாச்சிப் படுத்துக் கெடக்குது.
            வேலங்குடிப் பெரியவரு இதெப் பாக்குறாரு. மனசுக்குள்ள கோவம்ன்னா கோவம். அவருக்குப் படுத்துக் கெடக்குறது தனம் அத்தாச்சிதாங்றது நல்லாவே தெரியுது. இருந்தாலும் சத்தத்தெ எப்பிடிக் கொடுக்குறார்ன்னா, "இத்து ன்னா வூடா சத்திரமா? யாரது தரித்திரம் பிடிச்சாப்புல பத்து மணி வரைக்கும் படுத்துக் கெடக்குறது? இப்பிடி பொம்பளெ படுத்துக் கெடந்தா வூடு வெளங்குமா? வர வர இந்த வூட்டுல வரைமொறை யில்லாம போச்சு. ஏய் செயா யாருப்பிடி பாயில போர்வையப் போத்திட்டுத் தூங்கிக்கிட்டுக் கெடக்குறது? வெளக்கமாத்த எடுத்தாந்து அடிச்சி எழுப்பு!"ன்னு சொன்னாரு பாருங்க, தனம் அத்தாச்சி முழிச்சிக்கிட்டு அலறியடிச்சிக்கிட்டு எழும்புது.
            தனம் அத்தாச்சி எழும்புனவுடனெ பெரியவரு பேசுறாரு பாருங்க, "ஓ! சந்தானம் பொண்டாட்டியா? நாம்ம கூட வேற யாரோன்னு நெனைச்சிட்டேம்? இப்பிடித்தாம் சென்னைப் பட்டணத்துல குடும்பம் நடக்குதோ? ஒரு ஆம்பளெ பாக்க பொம்பள படுத்துக் கெடந்தா என்னத்தெ நீயிக் குடும்பம் நடத்துறே? இத்தாம் நீயி குடித்தனம் பண்ணுற லட்சணமோ? ஒங் கூடத்தாம் ஒம்மட புருஷங்காரனும் வந்தாம். அவ்வேம் எழுந்திரிச்சி வேலையப் பாக்கல. போயிப் பாரு வந்தவேம் எதுத்தாப்புல கெடந்த மாட்டுக் கொட்டகையில தெனசரி பேப்பர்ர விரிச்சிப் போட்டுப் படுத்துக் கெடந்தவேம், ஒரு நல்ல பாயி கூட கெடையாது, காலையில சாணிய எல்லாம் பொறுக்கிப் போட்டுட்டு, மாடுவோள அங்க இங்க அவுத்து விட்டுக்கிட்டு வேலையப் பாத்துக்கிட்டுக் கெடக்குறாம். நீயி என்னான்னா புருஷங்கார்ரேம் வேலையப் பாக்க படுத்துக் கெடக்குறே? இத்தாம் நாம்ம பாக்க கடைசீயா இருக்கணும். மறுக்கா இந்த மாதிரி நடந்துச்சுன்னா ன்னா செய்வேம்ன்னு நமக்கே தெரியாது!"ன்னு சொல்லிட்டு வெடுக்குன்னு வெளியில வந்தவரு, சந்தானம் அத்தானப் பிடிச்சி அவரு பாட்டுக்குப் பாட்டு வுடுறாரு.
            "யிப்பத்தாம் சென்னைப் பட்டணத்துலேந்து வந்துப் போறா. பழக்கமில்லாம இருக்கும். அதாங் கொஞ்சம் ஒடம்பு வலியில படுத்திருப்பான்னு விட்டுப்புட்டேம். யம்மாவும் எழுப்ப வேணாம்னுச்சு. அதாங் விட்டாச்சி. இனுமே செரியா வந்துப்புடுவா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இந்தக் கதெயெல்லாம் நம்மகிட்ட வைக்காது, வைக்கவும் கூடாது. ஆம்பளெ சரியா இருக்குறதுல இருக்கு‍ பொம்பள சரியா குடித்தனம் நடத்துறது. இஞ்ஞ வேலங்குடியில நமக்குச் சோலி ல்லன்னா வெச்சுக்கோ, அஞ்ஞ சென்னைப் பட்டணம் வந்து எப்பிடிக் குடித்தனம் நடத்தணுங்றதெ சொல்லிக் கொடுத்துப்புட்டு வந்துப்புடுவேம் பாத்துகோ. இஞ்ஞ வேலங்குடியில குடித்தனம் எப்பிடி நடக்குதோ, அஞ்ஞ சென்னைப் பட்டணத்துலயும் குடித்தனம் அப்பிடித்தாம் நடக்கணும். குடும்ப வழக்கையெல்லாம் பட்டணம் போயிட்டதால மாத்திக்கிட்டுக் கெடக்காதே. நமக்குக் கெட்டக் கோவம் வந்துப்புடும் பாத்துக்கோ!"ன்னாரு வேலங்குடி பெரியவரு. சந்தானம் அத்தான் அதுக்கு மேல ஒண்ணும் சொல்லல.
            மறுநாளு ஆச்சு. அன்னிக்குக் காலையிலயும் தனம் அத்தாச்சிச் சீக்கிரமா எழுந்திரிக்கில. காலங்காத்தாலயே அஞ்சு அஞ்சரைக்குல்லாம் பால்ல கறந்து டீத்தண்ணியப் போட்டுக் குடிச்சிப்புட்டு வயலப் பாக்க கெளம்புற ஆளாச்சே பெரியவரு. டீத்தண்ணியப் போட்டு எல்லாரையும் எழுப்புனா தனம் அத்தாச்சி மட்டும் எழும்ப மாட்டேங்குது. ஒடம்பு அசதியோ என்னவோ தெரியல. எழுப்ப எழுப்ப சுருண்டு சுருண்டு போர்வைய இழுத்துப் போட்டுத் தூங்குது. பெரியவரு மொகத்துல எள்ளும் கொள்ளுமா வெடிக்குது. ஆத்திரம் வந்துப்புட்டா என்ன பண்ணுவார்ன்னு பெரியவருக்கே தெரியாது. அவ்வளவு மொசமா நடந்துப்பாரு பெரியவரு. "இந்தக் கூறு கெட்ட மனுஷனப் பத்தித் தெரியாம இவ்வே இப்பிடிப் படுத்துத் தூங்குறாளே!"ன்னு நெனைச்சிக்கிட்ட செயா அத்தைப் பாத்துச்சு, "ஒடம்பு கொஞ்சம் சொகமில்ல. ராத்திரியே வவுத்த வலிக்குறதா சொன்னிச்சு. ராத்தூக்கம் கொள்ள நேரமாச்சு. அதாங். நீஞ்ஞ கெளம்புங்க. வயலப் பாக்கப் போங்க. வாரதுக்குள்ள எழும்பினுச்சுன்னா சோலியப் பாக்க ஆரம்பிச்சிடும்!" அப்பிடின்னிச்சு.
            என்ன மாயமோ தெரியல, வந்தக் கோவம் பெரியவருக்கு அடங்கிப் போச்சுது. இப்பிடியெல்லாம் பேசி அடங்குறவரு கெடையாது பெரியவரு. என்னவோ அடங்குனாப்புல, "செரித்தாம்! இப்பிடி மருமவள்களுக்குச் சப்பைக் கட்டுக் கட்டுனா குடித்தனம் வெளங்கிடும். மாமியான்னா மாமியாளா இருக்கணும். மருமவள்ன்னா மருவமளா இருக்கணும். அதாங் குடித்தனம். பாக்குறேம்!"ன்னு சொல்லி வயக்காட்டுப் பக்கம் போனவரு ஏழு மணிக்கெல்லாம் திரும்புவார்ன்னு யாரும் எதிர்பார்க்கல. எப்பிடியும் ஒம்போது மணிக்கு‍ மேலயாவது ஆவும். அப்பிடி இப்பிடின்னு எப்பிடிப் பாத்தாலும் பத்து மணிக்குக் கொறைஞ்சி வார மாட்டாரு. வர முடியாத அளவுக்கு ஒண்ணரை வேலி நெலத்தையும் ஒரு சுத்துச் சுத்தி ஒரு குழி நெலத்த வுடாம பார்வைய வுட்டுப் பாப்பாரு. நேத்துப் பாத்த அதெ நெலம்தான்னாலும் கண்ணுல வெளக்கெண்ணெயை வுட்டுப் பாத்தாத்தாம் அவருக்குத் திருப்தி வரும். அதுவும் சம்பா முடிஞ்சி, உளுந்து பயிறு எடுத்து தரிசா கெடக்குற நெலத்தையும் அப்பிடிப் பாத்தாத்தாம் அவருக்கு மனசு ஒருநெலைப்படும்.  அப்பிடிப் பாக்குறவரு இன்னிக்கு ஒரு திட்டத்தோடத்தாம் காலையில வந்தக் கோவத்தை அடக்கிக்கிட்டு வேணும்னே ஏழு மணிக்குல்லாம் வந்து நிக்குறாரு.
            அங்க வூட்டுல ஏழு மணிக்கு இவரு வந்து நிப்பார்ன்னு யாரு எதிர்பார்த்தா? இவரு தாமசமாத்தாம் வருவரு, அது வரைக்கும் தனம் அத்தாச்சித் தூங்கட்டும், வாரதுக்குக் கொஞ்சம் மின்னாடி எழுப்பி வுட்டுச் சமாளிப்புடலாம்னு, அததுவும் காலைச் சாப்பாட்டுக்கான வேலையப் பாத்துக்கிட்டு, மாடுகளுக்கு கங்காணிப்பப் பண்ணிக்கிட்டு கெடந்ததுல இவரு வந்து நின்னதெ கவனிக்கல. இவருதாம் கெளம்புறப்பவே மருமவ எழும்புலங்றதுல ஒரு கண்ண வெச்சிட்டுப் போனாருல்ல. நேரா கூடத்துக்குத்தாம் போனாரு. கூடத்துல பாயில போர்வையில ஒரு உருவம் சுருண்டு படுத்துக்கிட்டுக் கெடக்கு. பாத்தாரு பெரியவரு. அப்பிடியே சமையக்கட்டுக்குப் போனாரு. அங்க தவளையிலயும் கொடத்துலயும் தண்ணி நெரப்பி இருக்கு. மொதல்ல தவளைப் பானைய தண்ணியோட அப்பிடியே தூக்குனாரு. தூக்கி தண்ணிய அப்பிடியே போர்வைக்குள் படுத்துக் கெடந்த தனம் அத்தாச்சி மேல ஊத்துனாரு. ஊத்துன வேகம் தெரியாம ஒடனே கொடத்துல இருந்த தண்ணியையும் கொண்டாந்து ஊத்துனாரு. ஊத்திட்டு திண்ணைப் பக்கம் வந்தவரு காச் மூச்சுன்னு மனம் போன போக்குல சத்தத்தெப் போடுறாரு. ஆளு ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சிட்டார்ங்றது எல்லாத்துக்கும் தெரிஞ்சிப் போச்சு. அவரு அப்பிடி ஆடுறப்போ யாரும் எடையில பூந்து பேசிட முடியாது, அசமடக்கிட முடியாது. அப்பிடிப் பண்ணா இன்னும் பத்து மடங்கு வேகத்துல ஆட ஆரம்பிச்சிடுவாரு. கோவம் வராத வரைக்கும்தாம் வேலங்குடி பெரியவரு பெரியவர்ரப் போல நடந்துப்பாரு. கோவம் வந்து கோவக்கார குருத்தா ஆயிட்டா ஒரு மிருகத்தெ விட மோசமா நடந்துப்பாரு. அப்போ அந்தக் கோவக்கார குருத்தெ யாராலும் சமாளிக்க முடியாது.
            போர்வையோட ஒடம்பெல்லாம் நனைஞ்சி ஒடம்பெல்லாம் தண்ணி சொட்ட சொட்ட தனம் அத்தாச்சியும் எழுந்து வந்து திண்ணையில வந்து உக்காருது. உக்கார்ருதுன்னா ரொம்ப தெனாவட்டா திண்ணையில இருந்த கட்டையில எல்லாத்தும் பாக்குற மாதிரிக்கி உட்காருது. அது பாட்டுக்கு தனம் அத்தாச்சிப் பேயாம கொல்லைப் பக்கம் போயிருந்தா, இவர்ர ஆட்டத்தெ ஆட வுட்டு எதாச்சிம் பண்ணி சமாளிச்சிப்புடலாம்னு நெனைச்சிட்டு இருந்த எல்லாத்துக்கும் இந்தக் கோலத்த பாத்ததும் கெடி கலங்கிப் போச்சுது. இன்னிக்கு ஏத்தோ விபரீதமா நடக்கப் போவுது, அதெ தடுக்க முடியாதுன்னு ஒண்ணொண்ணுத்துக்கும் நெஞ்சு தாறுமாறா துடிக்கிது.
            பெரியவருக்கு திண்ணையில வந்து உக்காந்த தனம் அத்தாச்சியோட கோலத்தப் பாத்ததும் கோவம்ன்னா கோவம் அடக்க முடியல. "இந்தக் காலத்துப் பயலுவோ என்னத்தெ குடித்தனம் பண்றானுவோன்னு தெரியல. பொட்டச்சி ஏழு மணி வரைக்கும் படுத்துக் கெடக்குறா? அதெ கேக்க ஒரு நாதியு காணும். வூட்டுல இருந்த தண்ணி மொத்தத்தையும் மேல ஊத்திட்டு வந்தா இப்பிடி தலைவிரிக்‍ கோலமா திண்ணையில வந்து உக்காந்தா ன்னா அர்த்தம்? இப்பப் பாரு என்னத்தெ பண்றேம்?"ன்னுவாச மாட்டுல கெடந்த செருப்ப ஒண்ண எடுத்துக்கிட்டு அடிக்கப் பாய்ஞ்சிப் போறாரு வேலங்குடி பெரியவரு.
            தனம் அத்தாச்சியோட நல்ல நேரமா என்னான்னு தெரியல, அந்த நேரம் பாத்து டிவியெஸ் பிப்டியிலல டர்டர்ருன்னு அங்கப் போயி எறங்குறாரு சுப்பு வாத்தியாரு. கொஞ்சம் ஒரு நிமிஷம் தாமசமா போயிருந்தாலும் தனம் அத்தாச்சி செருப்படி வாங்குறதெ யாராலயும், எந்தச் சக்தியாலயும் தடுத்திருக்க முடியாது. வண்டிய ஸ்டாண்டு போட்டுட்டு எறங்குனவரு பெரியவரு செருப்ப எடுத்துட்டுப் போறதெ பாத்து, தனம் அத்தாச்சிய அடிக்கப் போறதுக்குள்ள போயி, செருப்போட அவரு கையப் பிடிச்சி, கையில இருந்த செருப்ப பிடிச்சி வெளியில எறிஞ்சாரு.
            இவ்வளவு சம்பவம் நடக்குறதையும் பாத்துட்டு சந்தானம் அத்தான் அங்க செலையப் போல நிக்குதே தவிர, ஏம்ப்பா இப்பிடி பேசுறீயோன்னோ, ஏம்ப்பா இப்பிடி பண்றீயோன்னு ஒரு வார்த்தெ கேக்கல. பொண்டாட்டிய செருப்பால அடிக்கப் போற அப்பாவ தடுக்காமலத்தாம் மாட்டுக்கொட்டகைக்கு வெளியில வேடிக்கைப் பாத்தாப்புல நிக்குது.
*****

28 Apr 2020

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து!

செய்யு - 432        

            வேலங்குடி பெரியவரு கலியாண விசயத்துல எறங்கிட்டார்ன்னா சாதகத்தெ எடுத்துக்கிட்டு முடிகொண்டான் ஐயருகிட்டே போயிடுவாரு. சாதகப் பொருத்தத்தெ ரொம்ப வடிகட்டிப் பாப்பாரு. அதுல அவருக்குத் திருப்திப்பட்டாத்தாம் கலியாணம். அவரு சாதகம் சாதகம்ன்னு ரொம்ப வடிகட்டிப் பாத்துட்டு இருந்ததுல அவரோட மூணு பொண்ணுல ஒண்ணான கலா அத்தாச்சிக்கு வயசு ஏறிகிட்டே போயிக்கிட்டு இருந்துச்சு. இவரும் வர்ற சாதகம் ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து கழிச்சிக் கட்டிக்கிட்டுக் கெடந்தாரு. சுப்பு வாத்தியாரும் எடுத்துச் சொல்லிப் பாத்தாரு, "ரொம்ப சாதகத்தப் போட்டு வடிகட்டிட்டுப் பாக்க வாணாம் யத்தாம்! இப்பிடியே பாத்துக்கிட்டெ கெடந்தா கலாவுக்குப் புள்ளெ பொறக்குற வயசுல கலியாணம் ஆவாது. பேரப் புள்ள பொறக்குற வயசுலத்தாம் கலியாணம் ஆவும். சாதகம் கொஞ்சம் பொருந்தி வந்தாலும் சொலிய முடிச்சிப் புடலாம்!"ன்னு.
            பெரியவரு அதுக்கு ஒத்துக்கிட மாட்டேன்னுட்டாரு. "அத்து எப்பிடிம்பீ! காலம் பூரா சேந்து வாழப் போற சோடிங்க. பாத்து நல்ல வெதமா பொருத்தம் இருந்து பண்ணி வுட்டாத்தாம் நல்லது. பொருத்தம் பாத்துச் செஞ்சாத்தாம் சோடிகளுக்குள்ள வருத்தம் இல்லாம காலம் ஓடும். கொஞ்சம் அவசரப்பட்டேம்ன்னா அவுங்க வாழ்க்கெ என்னாவுறது? வாழ்க்கையில புள்ளையோ, பொண்ணோ ஒரு தடவெ பண்றதுதாங் கலியாணம். மூணு முடிச்சிப் போட்ட போட்டதுதாம். அவுத்துல்லாம் மறுமுடிச்சி போட முடியாது. அப்பிடிப் பண்ணி வுட்டா புள்ளைங்க நெறைவாழ்வு வாழணும். யப்பா பாத்துப் பண்ணி வுட்டுச்சு, இப்போ நல்ல வெதமா இருக்குறோம்ன்னு புள்ளைங்க காலத்துக்கும் அதெ நெனைக்கணும். அதால சாதகத்த சாதாரணமா நெனைச்சுப்புடாதீங்க யம்பீ! சாதகந்தாம் எல்லாம். அதுல தெச இல்லன்னா கலியாணப் பேச்சப் பத்தி நெனைச்சுக் கூட பாக்கக் கூடாது. சாதகம் சுத்தப்பட்டு வரலன்னா அந்தப் பக்கம் தல வெச்சுக் கூட படுக்கக் கூடாது!" அப்பிடின்னுட்டாரு. அதுக்கு மேல என்னத்தெ பண்ணுறதுன்னு சுப்பு வாத்தியாரும் விட்டுப்புட்டாரு.
            சாதகத்தை கையில வெச்சிக்கிட்டு அலைஞ்சி வரனெப் புடிக்கிறதுல கொஞ்சம் கூட பெரியவரு அலுத்துக்கிட மாட்டாரு. அவரு பத்தித்தாம் ஒங்களுக்குத் தெரியுமே. கால்நடையா அலையுற ஆளுன்னு. கால்நடைங்கன்னு சொல்ற ஆடும் மாடும் என்னிக்கு நடக்கறதுக்கு அலுத்துக்கிட்டுங்க? அப்பிடித்தாம் பெரியவரும். அப்படியே கால்நடையா அமெரிக்காவுக்குப் போயிட்டு வாங்கன்னாலும் அவரு பாட்டுக்குக், கட்டுச்சோத்த கட்டிக் கையில எடுத்துக்கிட்டுப் போயிட்டு வருவாரு. சாதகப்பொருத்தம் பாக்குறதுக்கு வேலங்குடியிலேந்து திருவாரூ வரைக்கும் நடந்துப் போயி, அங்கேயிருந்து முடிகொண்டான் வரைக்கும் நடந்துப் போயிட்டு வருவாரு. எப்பவாச்சிம் கொஞ்சம் அலுப்பா தோணுனா மட்டுந்தாம் மாயவரம் பஸ்ஸூல ஏறி முடிகொண்டான்ல எறங்குவாரு. "ன்னா பஸ்ஸூக்கும் நடைக்கும் ரண்டு மணி நேரந்தாம் வித்தியாசம்ந்தாம். திருவாரூர்ல ஒரு சிகரெட்ட வாங்கிப் பத்த வேச்சேம்ன்னா முடிகொண்டான்ல போயி நின்னுடுவேம். அங்கனயிருந்து மறு சிகரெட்ட பத்த வெச்சா போதும் திருவாரூர்ல வந்து நின்னுபுடுவேம்! கையும் காலுந்தாம் எல்லாம். கையும் காலும் நல்லா இருந்தா எதெ வேணாலும் சாதிக்கலாம்! நெலாவுக்குக் கூட நடந்தே போவலாம்! நட்சத்திரத்தையும் கையால பிடிக்கலாம்!"பாரு அலட்சியமா.
            கலா அத்தாச்சிக்காக அவரு அலையாத எடம் கெடையாது. நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூரு, பாநாசம், கும்பகோணம், மாயவரம்ன்னு பல ஊரு தண்ணியக் குடிச்சிப் பாத்தாரு. இதுல ஒரு சில எடங்களுக்கு கால்நடையாவே நடந்துப் போயும் திரும்பியிருக்காரு. அவ்வளவு அலைஞ்சும் அவரு காலு எப்பிடி மொழங்காலு வரைக்கும் தேயாம இருந்துச்சுன்ன அவருகிட்டத்தாம் கேக்கணும். அவருக்குத் திருப்திப்பட்டாப்புல சாதகத் தோது அமையல. வேற ஒரு ஆளுன்னா அலைஞ்ச அலைச்சலுக்குப் பொண்ணு கலியாணம் ஆவாமலே வூட்டுலயே இருந்திடட்டும்ன்னு முடிவெ பண்ணிருப்பாம். நூறு எடம் அலைஞ்சா ஒரு எடம் அமையுங்ற கணக்கா, ஒரு நாலு வருஷத் தேடலுக்குப் பெறவு ஆலிவலத்துல ஒரு மாப்புள்ள பையன் அமைஞ்சாரு. அவருதாம் ரவி அத்தான். பத்தரு வூட்டு மாப்புள. மாப்புள்ள பாக்க அம்சமா நல்ல செவப்பு நெறம், ஓங்குதாங்கலான ஒசரம். சாதகப் பொருத்தம் அப்பிடிப் பொருந்திப் போவுது அம்சமா. மாப்புள்ளயோட ஒப்பிடறப்போ கலா அத்தாச்சி மாநிறந்தாம், ஒசரம் குட்டை, ஒடம்பும் அப்போ கொஞ்சம் ஒடிசல்தான். கலா அத்தாச்சிக்கு கட்டுனா ரவி அத்தானத்தைத்தாம் கட்டி வைப்பேம்ன்னு ஒத்தக் கால்ல நிக்குறாரு வேலங்குடி பெரியவரு.
            ரவி அத்தான் குடும்பத்துல ரெண்டே புள்ளைங்கத்தாம். ஒண்ணு ரவி அத்தான். இன்னொண்ணு ரவி அத்தானோட தங்காச்சி தனம் அத்தாச்சி. ரவி அத்தான் அப்போ தங்காச்சிக்குக் கலியாணத்தெ முடிக்காம நாம்ம கலியாணத்த பண்ணிக்க முடியாதுன்னு ஒத்தக் கால்ல நிக்குது. இதாங் வேடிக்கை, வேலங்குடி பெரியவரு ரவி அத்தான கட்டி வைக்கணும்னு ஒத்தக் கால்ல நின்னா, ரவி அத்தான் தங்காச்சியக் கட்டி வைக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்குது. பாத்தாரு பெரியவரு, தன்னோட மவனான சந்தானம் அத்தானோட சாதகத்த எடுத்து தனம் அத்தாச்சியோட சாதகத்தோட முடிகொண்டான் ஐயருகிட்டெப் போயி பொருத்தம் பாத்தாரு. சாதகப் பொருத்தம் அம்சமா பொருந்திப் போச்சுது. பரவாயில்ல மவ்வேன் கலியாணத்துக்கு பொண்ண பாக்க சாதகத்த வெச்சி அலையுற வேலை மிச்சம்ன்னு அடுத்த நிமிஷமே சென்னைப் பட்டணத்துல இருக்குற சந்தானம் அத்தாங்கிட்டெ எல்லாம் கலந்துக்கிடல. "பொண்ணு கொடுத்து பொண்ண எடுக்க சம்மதமா?"ன்னு ரவி அத்தானோட குடும்பத்துல போயிக் கேட்டுப்புட்டாரு.

            ரவி அத்தான் குடும்பத்துல ஒங்க புள்ளையாண்டானுக்குச் சம்மதம்ன்னா எங்களுக்குச் சம்மதம்ன்னு சொல்லிப்புட்டாங்க. அவுங்க அப்பிடிச் சொன்னதுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருந்துச்சு. தனம் அத்தாச்சியோட பல்லு கொஞ்சம் வெளியில எடுப்பா நீட்டிட்டு இருந்துச்சு. அதெ பாத்துட்டு வர்ற மாப்புள்ள பையனெல்லாம் பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டுப் போயிட்டுக் கெடந்தானுவோ. இப்பிடி ஒரு ‍தோது வந்தா ரவி அத்தான் குடும்பத்துல சம்மதம் இல்லன்னா சொல்லுவாங்க? அவுங்க சம்மதம்ன்னு சொன்ன அதுக்குப் பெறவுதான் திருவாரூ போயி எஸ்.டி.டி. பூத்ல சந்தானம் அத்தான் போன் நம்பருக்கு அடிச்சி இந்த மாதிரி சேதின்னு சொல்லி, கலியாணத்தெ பண்ணணும் ஒடனே கெளம்பி வாடான்னுட்டாரு வேலங்குடி பெரியவரு. பெரியவரு இப்பிடிப் பண்றதுல சுப்பு வாத்தியாருக்கு உடன்பாடு இல்லே. பெரியவரோட சண்டை போட்டாரு. "அவ்வேம் வந்து பொண்ணப் பாத்துப் பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லாம, பொண்ணப் பாத்தாச்சி தாலியக் கட்ட வாடான்னா ன்னா அர்த்தம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருங்கம்பீ! ஒரு புள்ள ரெண்டு புள்ளய பெத்து வெச்சிருந்தா அதெல்லாம் கேட்டுக்கிட்டு கெடக்கலாம். மொத்தம் எட்டுக் கெடக்குது. ஒண்ணுக்குத்தாம் கலியாணம் ஆயிருக்கு. இந்தப் பொண்ணுக்கு எல்லாம் தட்டிக்கிட்டுப் போயி இப்பத்தாம் செயமாவுது. இதுல ஒவ்வொருத்தங்கிட்டயா ஒனக்குப் பிடிச்சிருக்கா இல்லையான்னு நாம்ம கேட்டுக்கிட்டு நின்னேம்ன்னா வெச்சுக்கோங்க, இந்தச் சென்மத்துல எட்டுக்கும் கலியாணத்தப் பண்ணி நாம்ம பாக்க முடியாது. சாதகம் பொருந்துதா கட்ட வேண்டியதுதாங் தாலிய. அதுக்குததான யம்பீ அந்தக் காலத்துல சாதகத்தக் கண்டுபிடிச்சி வெச்சாம்! எத்தனெ கலியாணத்தப் பண்ணி வெச்சிருக்கேம்? எத்தனெ கலியாணத்துக்குப் போயி சமைச்சிப் போட்டிருப்பேம்? நம்ம அனுபவத்துல பாக்காததா? சாதகம் பொருந்துனா போதும்பீ! கட்டிக்கிட்ட சோடிங்க நல்லாத்தாம் இருக்குமுங்க!"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
            பெரியவருகிட்டே அதாங் ஒரு கொணம். சாதகம் பொருந்தியிருந்தா போதும், ஏழை வூடு, பணக்கார வூடுன்னுல்லாம் பாக்க மாட்டாரு. பொண்ணு புள்ளையோட மொக வெட்டையும் பாக்க மாட்டாரு. சம்பந்தம் கலந்துக்கிட்டு கலியாணத்தெ முடிச்சிப்புடுவாரு. "சாதகம் ஒத்து வரப்போ ஏழை வூட்டுப் பொண்ண எடுத்தா அத்து குடித்தனம் ஆயி வாரப்போ பணக்கார வூட்டுப் பொண்ணா ஆயிடும்பீ! அதெ போலத்தாம் மாப்புள்ள பையனும் ஏழை பாழையா இருந்தாலும் சாதகம் பொருந்தி நம்ம பொண்ணு குடித்தனம் பண்ணப் போறப்போ அவ்வேம் பணக்காரனா ஆயிடுவாம். அத்தெ வுட்டுப்புட்டு சாதகப் பொருத்தமில்லாம, பணக்கார வூட்டுப் பையனெ கட்டி வெச்சாலும் சரித்தாம், பணக்கார வூட்டுப் பொண்ண கெட்டி வெச்சாலும் சரித்தாம் குடித்தனம் ஆவுறப்போ பஞ்சப் பரதேசியா ஆயி நடுத்தெருவுல நிக்க வேண்டித்தாம்!"ன்னு அதுக்கும் ஒரு வெளக்கத்த கொடுப்பாரு.
            கலியாணத்துக்கு ரெண்டு நாளைக்கு மின்னாடித்தாம் சந்தானம் அத்தான் வேலங்குடிக்கு வந்துச்சு. பொண்ணு அழைப்பு, மாப்புள்ளை அழைப்பு அப்பத்தாம் சந்தானம் அத்தான் பொண்ணையே பாக்குது. அப்போ தனம் அத்தாச்சி ஒடிசலா, கச்சலா பாக்கறதுக்கு பல்லு முன்னாடி நீட்டிக்கிட்டு பார்வைக்கு ஒரு மாதிரியாத்தாம் இருந்துச்சு. சந்தானம் அத்தான் ஒரு வார்த்தைச் சொல்லல. புலிவலம் பெருமாள் கோயில்லத்தாம் ரெண்டு சோடிக்கும் ஒரே நேரத்துல கலியாணம். தாலியக் கட்டிச் சென்னைப் பட்டணத்துக்கு தனம் அத்தாச்சிய அழைச்சிட்டுப் போயிடுச்சு. அழைச்சுட்டுப் போச்சுன்னா தனம் அத்தாச்சிய மட்டுமில்லே, தங்காச்சி கலா அத்தாச்சியோட, மச்சாங்கார்ரேம் ரவி அத்தானையைும் சேர்த்துதாம் சென்னைப் பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போனுச்சு. ஆரம்பத்துல ரவி அத்தானை ஒரு நகைக் கடையில வேலைக்குத் சேத்து வுட்டு, பிற்பாடு அதுக்குச் சின்னதா ஒரு நகைக் கடையையும் வெச்சுக் கொடுத்துச்சு.
            இப்படியா தங்காச்சிக்குக் கலியாணம் ஆவணும்ங்றதுக்காக தனக்குப் பாத்திருக்குற பொண்ணு எப்பிடி இருக்கேன்னே தெரியாம ‍அதோட கழுத்துல தாலியக் கட்டுனதுதாங் சந்தானம் அத்தான். அந்த விசயத்துல எல்லாம் பெரியவருக்கு சந்தானம் அத்தான நெனைச்சி நெனைச்சி ரொம்ப சந்தோஷம். "நம்ம புள்ளியோல்லாம் அப்பிடித்தாம், தாலியக் கட்டுடான்ன சொன்னா கட்டுவானுவோ! கால்ல விழுன்னு சொன்னா விழுவானுவோ! ஏம் எதுக்குன்னுல்லாம் கேக்க மாட்டானுவோ! யப்பங்கார்ரேம் நாம்ம பாத்துச் செஞ்சி வெச்சா மறு வார்த்தே பேச மாட்டானுவோ!"ன்னு ரொம்பப் பெருமையா சொல்லுவாரு வேலங்குடி பெரிய மாமா.
            குடும்ப வழக்குல ரொம்ப கட்டு செட்டான ஆளு பெரியவரு. புள்ளைங்க ஒவ்வொண்ணும் சென்னைப் பட்டணத்துல இருந்தாலும் அங்க என்ன நடக்கணுங்றதெ இங்கயிருந்து சொல்லிச் சொல்லி அதிகாரம் பண்ணுவாரு. எதெது எப்பிடி நடக்கணும்ன்னு சில வழக்கு மொறைகள வெச்சிருப்பாரு. அதுப்படித்தாம் நடக்கணும், நடந்தாவணும் அவருக்கு. மாறி நடந்தா கோவம் வந்துப்புடும். ருத்ர தாண்டவம் ஆடிப் புடுவாரு. அவரு காலம் வரைக்கும் புள்ளைகளோ, மருமவள்களோ அவரு பேச்ச மீறி நடக்க முடியல, மீறி நடக்கவும் வுடல. சென்னைப் பட்டணணுத்துக்கான ரிமோட் கண்ட்ரோல் வேலங்குடியிலத்தாம் பெரியவரு காலம் வரைக்கும் இருந்துச்சன்னா ஒங்களால நம்ப முடியுதா? அப்பிடித்தாம் இருந்துச்சு.
            பிள்ளைக மத்தியில ஒரு குடும்பப் பிரச்சனைன்னா சென்னைப் பட்டணத்துக்குப் போயி ராப்பூரா உக்காந்துப் பேசிச் சரி பண்ணுவாரு. சுப்பு வாத்தியாரு அப்போ சும்மா இருந்தார்ன்னா அவரையும் ட்ரெய்ன்ல தூக்கிப் போட்டுக்கிட்டுக் கொண்டு போயிடுவாரு. பேசன்ஞர் டிரெய்ன்லயே ராப்பூரா சுப்பு வாத்தியார்ர உக்கார வெச்சிக் கொண்டுட்டுப் போயி, பேச வேண்டியதெ பேசி முடிச்சிட்டு, திரும்பவும் ராப்பூரா பேசன்ஞர் டிரெய்ன்லயே உக்கார வெச்சிக் கொண்டாந்து வுட்டுட்டுப் போயிடுவாரு. மாசத்துக்கு ஒரு மொறையோ, ரெண்டு மொறையோ எப்ப வருவாரு, எப்பிடி வருவாருன்னு தெரியாம திட்டைக்குச் சுப்பு வாத்தியாரு வூட்டுக்குக் கால்நடையாவே குறுக்கால பூந்து வந்துட்டுப் பாத்துட்டுப் போயிட்டு இருப்பாரு. குடும்பத்துல இப்பிடி இப்பிடித்தாம் இருக்கணும்னு, நடக்கணும்னு கண்டிஷன் பண்ணிப் பேசுவாரு. அப்பிடியில்லாம் இருந்தவாசித்தாம் எட்டுப் புள்ளைகள வளக்க முடிஞ்சதா ஒரு பெருமூச்சே வுடுவாரு. அப்பிடியில்லாம் இருந்துதாம் ஊருக்கார புள்ளியோ, ஒறவுக்கார புள்ளியோ வரைக்கும் வளத்தாச்சின்னு மறுபடியும் ஒரு பெருமூச்ச வுடுவாரு. ஒவ்வொரு விசயத்தையும் அடுக்கடுக்கா எடுத்து வெச்சி விகடமா அலுக்காம சலிக்காம பேசுறதுல பெரியவரு எப்பவும் கில்லித்தாம்.
            குடும்பத்துக் கில்லியான அவரு எவ்வளவோ விசயங்கள ரொம்ப எதார்ததமா, பதார்த்தமா சொல்லிருக்காரு. அதுல அடிக்கடி சொல்ற மறக்க முடியாத ஒண்ணு. அவரு குடும்ப விசயத்தப் பத்தி அடிக்கடி சொல்ற ஒரு வாசகம் அது, "சிறிசுக பெரிசுக்கு அடங்குனாத்தாம் குடும்பம். யில்லன்னா அலங்கோலம்தாம். அந்தக் குடும்பத்தையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. படிக்குள்ளயா மரக்கா போவும்? மரக்காக்குள்ளத்தாம் படி போவும்!"
*****


27 Apr 2020

அப்பன் ஸ்தானத்துல அண்ணங்காரன்!

செய்யு - 431        

            சந்தானம் அத்தான் தம்பிகள அரவணைச்சிக் கொண்டு போறதெ பாக்க வேலங்குடி பெரியவருக்கு மனசு திருப்திப்பட்டுப் போச்சு. தனக்குப் பின்னாடி குடும்பத்தெ நல்ல வெதமா சந்தானம் அத்தான் கொண்டு போயிடுங்ற நம்பிக்கை பெரியவருக்கு உண்டாயிடுச்சு.
            "இனுமே குடும்பத்தெ பத்தி நமக்கு ன்னா கவலேம்பீ? அவ்வேம் பெரியவேம் இருக்காம். யக்காக்காரி குடும்பத்தெ பாத்துக்கிட்டதோட யில்லாம இன்னிக்கு தம்பியோ ஒவ்வொருத்தனையும் நெலைநிறுத்திப்புட்டாம்! மொதல்ல இப்பிடி ஊரச் சுத்திக்கிட்டுக் கெடக்குறானேன்னு ஒரு கவலெத்தாம் அவனெப் பத்தி. எப்பிடி கரையேறப் போறானோன்னு நெனைச்சி கவலெப்படாத நாளு கெடையாது. இப்போ என்னான்னா அவ்வேம் ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் தாங்கிப் பிடிச்சிக்கிட்டு நிக்குறாம். நாம்ம நெனைச்சே பாக்கல யம்பீ! எட்டுப் புள்ளீயோளப் பெத்து அதெ கரை சேக்குறதுன்னா ச்சும்மாவா? பொம்பளப் புள்ளையா? யார்ரோ ஒருத்தெம் தலையில கட்டி வெச்சிட்டோம்னு ஓய்ஞ்சிப் ‍போயி உக்கார்றதுக்கு? ஆம்பளப் பயலுவோ. அவனுவோ தலையெடுத்தாத்தாம் நமக்குப் பெருமெ. குடும்பத்துக்கு மருவாதி. வேலங்குடியான் வமிசம் நல்லா இருக்குன்னு நாலு பேத்து பேசுவாம் யம்பீ! இப்போ அந்த கவலெ யில்லாம பண்ணிப்புட்டாம் சந்தானம். மனசு குளுந்துப் போவுது யம்பீ! எம்மட கண்ணுக்கு மின்னாடியே அவ்வேம் எந் ஸ்தானத்துக்கு வந்துப்புட்டாம் யம்பீ!"ன்னு அதெ வெளிப்படையா சுப்பு வாத்தியாருகிட்டெ பாக்கறப்பல்லாம் மனசு நெறைய சொல்லிச் சந்தோஷப் பட்டாரு பெரியவரு.
            பெரியவரு அப்பிடிச் சொல்ற அளவுக்கு பல சம்பவங்கள்ல சந்தானம் அத்தான் ரொம்ப பக்குவப்பட்ட ஆளு போல வேற நடந்துகிடுச்சு. அதெப் பத்திச் சொல்லணும்ன்னா,
            வேலையில கெட்டிக்காரத்தனமா இருந்தாலும் மாரி அத்தானால ரொம்பக் காலத்துக்குத் தனியா நின்னு தொழில கொண்டு போவ முடியல. ஆனா அதுக்குப் பின்னாடி பொறந்த ராமு அத்தான் பெரமாதமா, சந்தானம் அத்தான வுட தாண்டித் தொழில கொண்டு போனுச்சு. மாரி அத்தானப் பொருத்த வரைக்கும் அத்து தான் உண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்குற ஆளு. அதால நாலு பேர்ர வெச்சி சரியா வேலைய வாங்க முடியல. அது மட்டும் வேலையச் சரியாப் பாத்துச்சு. அதோட வேலைக்கு இருந்தவங்க நெலுப்பிக்கிட்டு ஏமாத்திக்கிட்டு சரியா வேலையச் செய்யாம போனதுல ஒத்துக்கிட்ட வேலையச் சரியான நேரத்துல முடிக்க முடியாமப் போயி, ஒத்துக்கிட்ட காசிய வுட வேலை அதிகக் காசிக்கு இழுத்துட்டுப் போயி பெரச்சனையாயிடுச்சு மாரி அத்தானுக்கு.
            என்ன பண்ணுறதுன்னு தெரியாம மாரி அத்தான் முழி பிதுங்கிப் போயி சந்தானம் அத்தாங்கிட்டதாம் வந்துச்சு. பெறவு சந்தானம் அத்தாம்தாம் போயி அத்து ஒத்துக்கிட்டு வாங்கி வெச்சிருந்த வேலைகள வாங்கி வெச்சி, காசு பணம் கூடுதலா ஆனாலும் பரவாயில்ல, பெரச்சனை யில்லாம போவட்டும்ன்னு செஞ்சிக் கொடுத்து சரி பண்ணி வுட்டுச்சு. அதுலேந்து மாரி அத்தான் சந்தானம் அத்தானோட வேலையாள்ள ஒருத்தர்ர வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. சரிதாம் பெரச்சனை இத்தோட முடிஞ்சிப் போயிட்டுன்னுதான நெனைக்குறீங்க. அதாங் இல்லே.
            இடையில மாரி அத்தான் என்ன நெனைச்சுச்சோ தெரியல. "யண்ணே! நீயி தர்ற கூலி பத்தல!"ன்னு பெரச்சனைப் பண்ணுச்சு. தனியா பாத்துக் கொடுத்த தொழில பண்ண முடியாம, காசுக்குத் தண்டத்தைப் பண்ணி, இப்பிடியும் பெரச்சனையும் பண்ணா யார்ர இருந்தாலும் கோவம்தானே வரும். ஆனா சந்தானம் அத்தான் கோவப்படல. சரிதாங் தம்பிக்கார்ரந்தாம்ன கேக்குறானேன்னு அதுக்கு மட்டும் யாருக்கும் தெரியாம கூலியக் கூட கொடுத்துப் பாத்துச்சு சந்தானம் அத்தான். அதெ வாங்கிக்கிட்டு ஒரு மாசம் வரைக்கும் ஒழுங்கா பெரச்சனை பண்ணாம இருந்த மாரி அத்தான், அடுத்த மாசமே ஒண்ணும் சொல்லாம கொள்ளாம தம்பிக்காரனான ராமு அத்தானோட போயி சேந்துக்கிடுச்சு.
            சொல்லிக்காம கொள்ளாம போனதுல சந்தானம் அத்தானுக்கு வருத்தம்னாலும் அத்து ஒண்ணும் சொல்லல. அதெ பெரிசும் பண்ணிக்கிடல. யாருகிட்டெ போயி வேலைக்குச் சேந்திருக்காம்? தம்பிக்கார்ரேங்கிட்டத்தானேன்னு பெருந்தன்மையா வுட்டுப்புடுச்சு. இப்பிடியா குடும்பத்துக்காக சில விசயங்கள்ல கண்டுக்கிடாம வுடுறதுலயும் குடும்பத்தெ ஒண்ணா அரவணைச்சிட்டுப் போறதுலயும் சந்தானம் அத்தான் பெரியவரு மாதிரியே நடந்துகிடுச்சு.
            இன்னொரு விசயத்தையும் சந்தானம் அத்தானப் பத்திச் சொல்லணும்னா,
            எப்படியோ ஏதோ ஒரு வகையில, எல்லா தம்பிகளையும் சென்னைப் பட்டணத்துல கரை சேத்து வுட்ட சந்தானம் அத்தானுக்கு கடைசி தம்பியான குமரு அத்தான மட்டும் கரை சேத்து வுட முடியல. இயல்புலயே குமாரு அத்தான் ஒடம்பு ரொம்ப நோஞ்சான் ஒடம்பா இருந்துச்சு. எந்த வேலையையும் அதால ரொம்ப நேரதுக்கு மெனக்கெட்டு செய்ய முடியாது. ஒடனே மூச்சு எரைக்க ஆரம்பிச்சிடும். வேலங்குடி பெரியவருக்குக் கடைக்குட்டி புள்ளையான குமரு அத்தான நெனைச்சித்தாம் கவலெ. குமாரு அத்தாம் மேலத்தாம் பெரியவருக்கு பாசமும் அதிகம். அவரு நல்ல வெதமா ஊட்டி வளத்தப் புள்ளைன்னா அத்து குமாரு அத்தாம் மட்டும்தாம். அதுலயும் ஒரு வேடிக்கை என்னான்னா, அவரு ஊட்டி வளக்காத ஒவ்வொரு புள்ளையும் நல்ல வெதமாத்தாம் தெட காத்திரமா வளந்துச்சுங்க. அவரு ஊட்டி வளத்த குமாரு அத்தாம்தாம் தெட காத்திரமா யில்லாம போயிடுச்சு. அதால ரொம்ப காலத்துக்கு வேலங்குடி பெரியவரு குமாரு அத்தான கைக்குள்ளயே வெச்சிருந்தாரு, கங்காரு குட்டிய தன்னோட வயித்துக்குள்ளயே வெச்சிருக்கிறாப்புல.

            சென்னைப் பட்டணத்துலேந்து சந்தானம் அத்தான் எவ்வளவோ சொல்லி குமாரு அத்தான அனுப்பி வுடச் சொல்லியும் பெரியவரு அவ்வளவு சீக்கிரத்துல அனுப்பி வுடல. பள்ளியோடம் சரியாப் போவாம படிப்பும் குமாரு அத்தானுக்கு சரியா வரல. இருவது வயசுக்கு மேல ஆன பிற்பாடுதாம் எதாச்சிம் ஒரு வழியப் பண்ணி வுடணும்னு வேற வழியில்லாம குமாரு அத்தான நேர்ல கொண்டு போயி சந்தானம் அத்தாங்கிட்டெ விட்டுப்புட்டு வந்தாரு பெரியவரு.
            விட்டுப்புட்டு வாரப்பவே பெரியவரு சொன்னாரு கண்ணு கலங்கி, "மித்த தம்பியோ மாதிரி நெனைச்சி வேல ரொம்ப வாங்கிப்புடாதடா! ஒடம்பு முடியாதப் பயெ. ஒடம்புத்தாம் முடியலன்னாலும் கோவம் ரொம்ப வேற வருது. குடும்பத்துல இப்பிடித்தாம் ஒன்னய மாதிரி ஒருத்தம் உச்சத்துக்குப் போவாம். இவ்வேம் மாதிரி ஒருத்தம் முடியாமக் கெடப்பாம். அப்போ உச்சத்துக்குப் போனவெம், முடியாம கெடக்குறவனெ கைத்தாங்கலா வெச்சிக் காபந்து பண்ணணும். அதாங் குடும்பம். நீயி இப்போ உச்சத்துல இருக்குறே. இவனெ நீந்தாம் தாங்கலா வெச்சிப் பாத்துக்கிடணும்."ன்னு சொல்லி வுட்டுப்புட்டுத்தாம் வந்தாரு பெரியவரு.
            பெரியவரு சொன்னதுக்கு ஏத்தாப்புலத்தாம் சந்தானம் அத்தான் குமாரு அத்தான வெச்சிருந்துச்சு. வேல பாக்குற எடத்துக்கு டீ பட்சணம் வாங்கிக் கொடுக்குறது, நேரத்துக்கு சரியா வேலைக்கு வர்றாங்களா, இல்லையான்னு பாத்துட்டு வாரது, பணம் கொடுக்கணும்னா கொடுத்துட்டு வாரது, சாமாஞ் செட்டுக வேணும்ன்னா கொண்டு போயிப் போடுறது இந்த மாதிரியான வேலைதாம் அதுக்கு. சந்தானம் அத்தானுக்கு வேலைன்னா சென்னைப் பட்டணம் முழுமைக்கும் எங்க வேணாலும் இருக்கும். சென்னைப் பட்டணத்துல இப்போ திருவேற்காடு வளர்ற பகுதின்னா அங்க வேலை அதிகமா இருக்கும். முகப்பேறு வளர்ற பகுதின்னா அங்கத்தாம் வேலை அதிகமா இருக்கும். ஆனா வூடும் ஆபீஸூம் அரும்பாக்கத்துல இருக்கும். ஒவ்வொரு நாளும் அரும்பாக்கத்துலேந்து வேலை நடக்குற எடத்துக்குப் போயாவணும்.
            சந்தானம் அத்தான் அப்போ புதுசா ராஜ்தூத் பைக்க வாங்கி வெச்சிக்கிட்டு பட்பட்ன்னு போயிட்டு இருந்துச்சு. குமாரு அத்தானுக்கு எங்கப் போனாலும் சைக்கிள்தாம். அதுக்கு பைக்கோ, வண்டியோ வுட தெரியாது. அதெ கத்துக்கன்னு சொல்லியும் கத்துக்கிட முடியாதுன்னு பிடிவாதமா நின்னுடுச்சு. வண்டி வுடுறதுல அதுக்கு அம்மாம் பயம். எங்காச்சிம் வுழுந்து கையி காலு ஒடைஞ்சு போனா என்னா பண்றதுன்னு ரொம்பவே மெரண்டுச்சு. ஏற்கனவே ஒடம்பும் நோஞ்சலு, இதுல வுழுந்து எழுந்திரிச்சா நம்ம நெலமெ என்னாவுறதுன்னு சைக்கிள்தாம் அத்து எங்க போறதுன்னாலும் போட்டு மிதிச்சிக்கிட்டுப் போவும். பஸ்ல போயிட்டு வரலாம்ன்னா வேலை நடக்குற சைட்டு வரைக்குமா பஸ்ஸூ போவும்? புதுசா வூட்ட வாங்கிக் கட்டுறவேம் எங்க எடம் கெடைக்குதோ அங்கத்தானே வாங்கிக் கட்டுவாம். அவ்வேம் வூடு கட்டுற எடம்தாம் வேலைக்கான சைட்டு. பஸ்ஸூ நிக்குற எடத்துலேந்து வேலை நடக்குற எடம் எப்பவும் ரண்டு கிலோ மீட்டரு, மூணு கிலோ மீட்டருன்னு தூரம் இருக்கும்.
            அத்தோட பஸ்ல போனாலும் சைட்டுக்கு எறங்கிப் போயி நடந்து உயிர வுட்டுக்கிட்டுக் கெடக்கணும். அதெ வுட பஸ்ல போயி பஸ்ல வந்தா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு சைட்டக் கூட பாக்க முடியாது. ஒண்ணு வேலை நடக்குற எடத்துக்கு டூவீலர்ரு வண்டியில போவணும், யில்லே சைக்கிள்லத்தாம் போவணும். வண்டியில போற மாதிரியா சைக்கிளில வேகமா போவ முடியும்? ‍அத்தோட சைக்கிள உசுரக் கொடுத்துதாம் மிதிச்சாவணும். குமாரு அத்தானால ஒரு கட்டத்துக்கு மேல முடியல. இருந்தாலும் குமாரு அத்தான் வைராக்கியமா இங்கயே கெடந்து ஒரு வேலையப் பிடிச்சிக்கிடணும்னு பல்லக் கடிச்சிட்டுத்தாம் கெடந்துப் பாத்துச்சு. சரித்தாம் ஆபீஸ்ல போடலாம்னாலும் அதுக்கு எழுதறதும், கொடுக்கல் வாங்கல நோட்டுல எழுதி கணக்கு வெச்சிக்கிறதும் வாரல. சமயத்துல யாராச்சிம் இங்கிலீஷ்ல யாராச்சிம் பேசிட்டு வந்தா ரொம்பவே அரண்டு போனுச்சு குமாரு அத்தான்.
            ஒரு கட்டத்துக்கு மேல சைக்கிள ரண்டு கிலோ மீட்டருக்குக் கூட மிதிக்க முடியாம குமாரு அத்தானுக்கு ஆஸ்த்மா மாதிரியான பெரச்சனை அதிகமாயிடுச்சு. வைத்தியம்லாம் பண்ணிப் பாத்து சரிபடல. மூச்சு எரைப்பு ஒரு கட்டத்துல தாங்க முடியாத நெலமைக்குப் போனப்போ, கிராமத்துல கொஞ்ச காலத்துக்கு இருந்து பாத்தா நெலமெ சரிபடலாம்ன்னு டாக்கடருங்க சொன்னதெ கேட்டுகிட்டு, சந்தானம் அத்தானே குமாரு அத்தான வேலங்குடி கிராமத்துல கொண்டாந்து விட்டுச்சு. அத்து என்னவோ, என்ன மாயமொ தெரியல, வேலங்குடி கிராமம் வந்த பிற்பாடு குமாரு அத்தானுக்கு இருந்தப் பிரச்சனை, இருந்த எடம் தெரியாம போயிடுச்சு. அதுக்குப் பட்டணம் ஒத்து வரலேங்றதெ சந்தானம் அத்தான் புரிஞ்சிக்கிடுச்சு. பெரியவருக்குத்தாம் மனசுல கவலையா இருந்துச்சு, கடைக்குட்டிப் பயலுக்கு ஒரு வழியக் காட்டி வுடணுமேன்னு.
            பெரியவரு கவலைப்படுறதப் பாத்து சந்தானம் அத்தான் சொன்னிச்சு, "யப்பா! இப்பிடி எல்லாரும் சென்னைப் பட்டணத்துல கெடந்தால ஊருல ஒஞ்ஞ பேர்ர சொல்றாப்புல ஒருத்தரு இருக்கணுமா வேணாமா? குமாரு கெடக்கட்டும் இஞ்ஞ வேலங்குடியில. ஒருத்தெம் இஞ்ஞ இருந்தாத்தாம் சென்னைப் பட்டணத்துலேந்து நாங்களும் இஞ்ஞ வந்துப் போவ கொள்ள ஒரு தோதுபடும். இஞ்ஞ கெடக்குற நெல புலங்களையும் பாத்துக்கிட ஆளு வேணுமில்லே! அவ்வேம் ஒடம்புக்கு கிராமந்தாம் சரிபட்டு வரும். இன்னும் கொஞ்சம் நெலத்த தம்பி பேர்ல வாங்கிப் போடுறேம். அதெ பாத்துக்கிட்டு மிராசா அவ்வேம் இஞ்ஞயே கெடக்கட்டும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். சொன்னபடியே ஒரு வேலி நெலத்த கொஞ்சம் கொஞ்சமா தம்பிக்காரனுக்கு வாங்கிக் கொடுத்துச்சு சந்தானம் அத்தான்.
            ஏற்கனவே பெரியவரு ஒன்றரை வேலி நெலம் வரையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிப் போட்டிருந்தாரு. ரெண்டும் சேந்ததுல ரெண்டரை வேலி நெலம் அதாச்சி அம்பது மா நெலத்துக்கு மிராசா அதுவும் வேலங்குடி கிராமத்துக்குப் பெரிய மிராசா குமாரு அத்தாம்தாம் இப்போ இருக்குது. இப்பிடியா கடைக்குட்டித் தம்பிக்கும் ஒரு கதையெ கட்டி வுட்டுச்சு சந்தானம் அத்தான். பிற்பாடு கலியாணத்தையும் பண்ணி வெச்சி பெரிய மாடி வூட்டையும் தன்னோட கைக்காசுல வேலங்குடியில குமாரு அத்தானுக்காக சந்தானம் அத்தான்தாம் கட்டிக் கொடுத்துச்சு.
            மித்த மித்த ஆளுகளான ராமு அத்தானோ, மாரி அத்தானோ, சுப்புணி அத்தானோ அவங்கவங்க பங்குக்குச் செஞ்சதோட, கடைக்குட்டித் தம்பிக்கார்ரேம் இப்பிடி இருக்கானேன்னு, யாருக்கும் அப்பங்காரரான பெரியவரோட சொத்துலேந்து ஒரு துரும்பு கூட வாணாம்ன்னு முடிவெ பண்ணி, எல்லாம் தம்பிக்காரனான குமாரு அத்தானுக்கே இருக்கட்டும்ன்னு விட்டுக் கொடுத்தாங்க.
            இப்பிடி தம்பிக்காரனுகளுக்கு மட்டும் சந்தானம் உதவிகளப் பண்ணல. ஊருல கெடந்த சேக்காளிப் பயலுகளையும் வேலங்கடி வர்றப்ப, போறப்ப சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயி தனக்கு தொணையா வெச்சிக்கிட்டு கை தூக்கி வுட்டுச்சு.
            இதெ தாண்டியும் சந்தானம் அத்தான் குடும்பத்துக்காக பண்ண இன்னொரு சம்பவத்தெ சொல்லணும்னா,
*****


26 Apr 2020

அண்ணனுடையான் எதற்கும் அஞ்சான்!

செய்யு - 430        

            படிச்சுத்தாம் ஒரு மனுஷன் கோடீஸ்வரனாவனும்னு அவசியமில்லே. படிக்காமலயும் ஒரு மனுஷன் கோடீஸ்வரன் ஆவலாங்றதுக்கு சந்தானம் அத்தான் ஒரு நல்ல உதாரணம். படிக்காமலேயே கோடீஸ்வரனாயி படிச்சவங்க பல பேர்ர தங்கிட்டெ வேலை பாக்க வைக்குற அளவுக்கு சந்தானம் அத்தான் 'ஸ்மார்ட் இன் ஸ்மார்ட்' இன்டீரியர் டெகரேட்டர்ஸ் ஆபீஸ காலப்போக்குல பெரிசா ஒரு நிறுவனத்தப் போல வளத்தக் கொண்டு போனுச்சு. இதெ பத்திச் சொல்றப்போ ரொம்ப வேடிக்கையா சந்தானம் அத்தான்,
            "படிக்கலன்னா கோடீஸ்வரான ஆவலாம். படிச்சா கோடீஸ்வர்ரேங்கிட்டெ வேலையத்தாம் பாக்கலாம்! படிக்காம கூட மின்னேறிப் புடலாம். படிச்சி மின்னேற முடியாது. நம்மகிட்டெ வேல பாக்குற படிச்சப் பயலுகளப் பாக்குறப்போ நமக்கு அப்பிடித்தாம் தோணுது மாமா! என்னத்ததாம் படிச்சானுவோன்னு தெரியல. சின்ன விசயம் கூட தெரிய மாட்டேங்குது. ஒண்ணொண்ணுத்தையும் சொல்லித் தர்ற வேண்டியிருக்கு. அதுலயும் பாத்தீன்னா மாமா, படிக்காதப் பயலுக்கு ஒரு தடவெ சொல்லிக் கொடுத்தா போதும் கப்புன்னு விசயத்தெ பிடிச்சிப்பாம். இந்தப் படிச்ச பயலுவோ இருக்கானுவோளே மாமா, அவனுகளுக்கு ஆயிரம் தடவெ சொல்லிக் கொடு ஒண்ணு கூட மண்டையில ஏறாது மாமா. மண்டெ முழுக்க களிமண்ணா என்னான்னு தெரியல! ஒரு வேள அப்பிடி களிமண்ணா இருந்தாத்தாம் படிக் முடியுமான்னு தெரியல மாமா!"ன்னு ரொம்ப நக்கலா சுப்பு வாத்தியார்கிட்டெ பேசிட்டு இருக்குறப்ப சொல்லும். ஆனா அந்த கோடீஸ்வர எடத்துக்கு வர்றதுக்கு சந்தானம் அத்தான் ரொம்ப பெரிசா பாடுபட்டுச்சு. அந்த நெலைய அது அடைய அடைய தன்னோட தம்பிகளையும் ஒவ்வொருத்தரா கை தூக்கி வுட்டுச்சு சந்தானம் அத்தான். அதாச்சி தாம் மட்டும் வளராம தன்னோட தம்பிகளையும் சென்னைப் பட்டணத்துக்கு அழைச்சி வளர வுட்டுச்சு. அப்பிடி அத்து கடந்து வந்தப் பாதையப் பாத்தோம்ன்னா, அதெ பத்தி சந்தானம் அத்தானெ சில விசயங்கள அடிக்கடிச் சொல்லும்.
            கோவில்பெருமாள்ல சந்தானம் அத்தான் இருந்த காலத்துல நாது மாமாகிட்டெ கத்துக்கிட்ட நுட்பம்தாம் இப்போ ஒதவுறதா அத்து அடிக்கடி சொல்லும். நாது மாமா வேலையில எறங்காதே தவுர, எறங்கிட்டா அதெப் போல வேல பாக்குறதுக்கு ஆளு கெடையாது. அதே போல நாது மாமாகிட்டே இருந்து எப்பிடி வேலை செய்யணும்னு கத்துக்கிட்ட அதே நேரத்துல வெலையில எப்படி இருக்கக் கூடாதுங்றதையும் கவனிச்சிப் புரிஞ்சிக்கிட்டதுதாம் இப்பவும் தனக்கு ஒதவுறதா சொல்லும் சந்தானம் அத்தான்.
            பாடம்ங்றது எந்த மனுஷர்கிட்டேருந்து கத்துக்கிடலாம். அவரு எப்பிடிப்பட்ட மனுஷரா இருந்தாலும் அவர்கிட்டேயிருந்து எப்பிடி இருக்கணும், எப்பிடி இருக்கக் கூடாதுங்ற ரெண்டு பாடமும் இருக்கு. அந்த ரெண்டு பாடத்தையும் ஒரு மனுஷன் கத்துக்கிடணும். ஒரு மோசமான மனுஷங்கிட்டேயிருந்து எப்பிடி இருக்கக் கூடாதுங்ற பாடத்தையும், ஒரு நல்ல மனுஷங்கிட்டேயிருந்து எப்பிடி இருக்கணுங்ற பாடத்தையும் கத்துக்கணும். நல்லதும் கெட்டதும் கலந்து இருக்குற மனுஷங்கிட்டேயிருந்து நல்லவெதமா எப்பிடி இருக்கணுங்றதையும், கெட்டவெதமா எப்பிடி இருக்கக் கூடாதுங்றதையும் ஒரே நேரத்துல கத்துக்கிடணும். மனுஷன் இந்த விசயத்துல பெரும்பாலும் தலைகீழா கத்துப்பாம். எப்படி நல்ல வெதமா இருக்கக் கூடாதுங்றதையும், எப்பிடி கெட்ட வெதமா இருக்கணுங்றதையும் உள்வாங்கிக்கிட்டா பெறவு அதெப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லே. பெரும்பாலான மனுஷங்க அப்பிடித்தாம் கத்துக்கிடுறாங்க. ஒசந்து வாழ்ற மனுஷனோட சின்ன சின்ன அல்பதனங்களையும் எடுத்துக்கிறதையும், எடுத்துக் வேண்டிய ஒசந்த விசயங்களையும் ஒதுக்கித் தள்ளிடுறதையும் ரொம்ப சரியா பண்ணிப்புடுறாங்க செல பேரு. அப்பிடிப் பண்ணிப்புட்டு நடக்குறதெல்லாம் தப்புத் தப்பா நடக்குறதா பொலம்ப ஆரம்பிச்சிடுறாங்க. இதெல்லாம் சந்தானம் அத்தான் சொல்லுற விசயங்க.
            ஆபீஸூ போடுறதுக்கு மின்னாடியே சந்தானம் அத்தானுக்கு வேலையாளுங்க பற்றாக்குறை அதிகம்தாம். ஓவர் டைம், லீவு நாள்ல வேலைன்னு இருக்குற ஆளுங்கள வெச்சி சமாளிச்சிக்கிட்டு இருந்தது. ஒவ்வொரு தம்பிகளா சென்னைப் பட்டணத்துக்கு சந்தானம் அத்தான் அழைச்சிக்க வேண்டியதுக்கு அதுவும் ஒரு காரணமா இருந்துச்சு.
            சந்தானம் அத்தானுக்கு நாலு தம்பிக. மாரி, ராமு, சுப்புணி, குமாருன்னு. மொதல்ல தொணையாவும் கை தூக்கி வுடணுமேன்னு மாரியத்தாம் அழைச்சிக்கிட்டுது. மாரி அத்தான் இயல்புலயே நல்ல வேலைக்காரரு. பொறுமை, நெதானம் எல்லாம் அதிகம். பள்ளியோடம் சரியா போவலைன்னாலும் வேலங்குடியில இருந்த ஆசாரிகப் பின்னாடிப் போயி நல்லா வேலையக் கத்து வெச்சிருந்துச்சு. அதால மாரி அத்தானோட வருகை சந்தானம் அத்தானுக்கு ரொம்ப ஒதவியா இருந்துச்சு. மாரி அத்தானோட தொணையில வேலைகள கொஞ்சம் அதிகம் எடுத்துப் பண்ணிக்கிடுச்சு. கொஞ்ச நாளு போன பிற்பாடு மாரி அத்தானுக்குன்னு வேலைக்கு சில எடங்களப் பிடிச்சி வுட்டு தனியாவும் பாத்துக்க ஏற்பாட்ட பண்ணி வுட்டுச்சு.
            மாரி அத்தான தனியா விட்ட பிற்பாடு அடுத்தத் தம்பியான ராமு அத்தான சென்னைப் பட்டணத்துக்குக் கூப்புட்டுச்சு. மாரி அத்தானப் போல ராமு அத்தான் அந்த அளவுக்கு வேலைக்காரர்ன்னு சொல்ல முடியாது. ஆனா ஆவ வேண்டிய வேலைய எந்தெந்த ஆளுகள வெச்சி எப்பிடி பாக்கணுங்ற வித்தெ அதோட மூளைக்கு அத்துப்படியாயிருந்துச்சு. சந்தானம் அத்தான் பேச்சுல ஆரம்பிச்சா நாளு கணக்குல, வார கணக்குல, மாசக் கணக்குல, ஏம் வருஷ கணக்குல கூட பேசிட்டு இருக்கும். ராமு அத்தாங்கிட்டெ அப்பிடில்லாம் பேச முடியாது. நறுக்குன்னு எதெ பேசணுமோ அதெ மட்டுந்தாம் பேசும். சொன்னது சொன்னபடி இருக்கணுங்றதுல சந்தானம் அத்தான வுட ரொம்ப கவனமா இருக்கும். ஒரு வாரத்துல முடிச்சுத் தர்றதா சொல்ற வேலையே அஞ்சு நாளைக்குள்ளயே முடிச்சி வெச்சிருக்கும். கணக்குப போடுறதல ரொம்ப கன கச்சிதமான ஆளு ராமு அத்தான்.

            சந்தானம் அத்தான் போயி ஆபீஸ் போட்டதுக்குப் பிற்பாடு ஆறெழு வருஷமாவது இருக்கும் ராமதாஸ் அத்தான் சென்னைப் பட்டணத்துல காலடி வெச்சு. இன்னிய நெலையில சந்தானம் அத்தானுக்கும், ராமு அத்தானுக்கும் சொத்துல போட்டி வெச்சா ராமு அத்தாம்தாம் முன்னாடி இருக்கும். காரணம் சதுரிச்சி வுட்டாப்புல சந்தானம் அத்தானுக்குப் பேசத் தெரியாது. அத்து ராமு அத்தானுக்கு நல்லா பேச வரும். யாருகிட்டெ எந்த அளவுக்குப் பேச்சு வெச்சிக்கிடணுமோ, அந்த அளவுக்குத்தாம் வெச்சிக்கும். கூட கொறைச்சலு அதுகிட்டெ பேச்ச எதிர்பார்க்க முடியாது. ராமு அத்தான் தொழில கத்துக்கிட்ட பெறவு அதுக்கும் தனியா வேலையப் பிரிச்சிக் கொடுத்து வுட்டுச்சு சந்தானம் அத்தான்.
            ராமு அத்தானுக்குப் பெறவு மூணாவது தம்பியான சுப்புணி அத்தான அழைச்சிக்கிட்டுது சந்தானம் அத்தான். எல்லாரும் இப்பிடியே படிக்காம இருக்குறதுல ஒரு மனக்கொறை சந்தானம் அத்தானுக்கு. அதால அதுக்கு ஒரு முடிவக் கட்டணும்னு யோசனை வந்து சுப்புணி அத்தான பாதி நேரத்துக்கு வேலைன்னும், மீதி நேரத்துக்கு டுட்டோரியல் காலேஜ்ல படிப்புன்னும் சேத்து வுட்டுப் பாத்துச்சு சந்தானம் அத்தான். சுப்புணி அத்தான் எப்பிடியே பத்தாவது, பன்னெண்டாவது தேறுனதும் அமைஞ்சிக்கரையில ஒரு காலேஜ்ல சேத்து வுட்டுச்சு, தம்பிகள்ல ஒருத்தனாவது டிகிரி படிப்பு படிச்சிருக்கணும்னு. அத்தோட இந்தப் பொழைப்பு அவ்வேம் ஒருத்தனுக்காவது யில்லாம எதாச்சிம் கவர்மெண்டு வேலையில சேத்து வுட்டுப்புடணும்னு.
            சுப்புணி அத்தான் மூணு வருஷம் காலேஜ்ல படிச்சி இருவத்து நாலு அரியர்ஸ் வெச்சிருந்துச்சு.   ஒரு நாளு அங்கங்க நடந்துக்கிட்டு இருக்குற வேலைய மேம்பார்வைப் பாக்க போனப்ப பார்க் ஒண்ணுல உக்காந்துக்கிட்டு சுப்புணி அத்தான் சுண்டல் திங்குறதைப் பாத்துடுச்சு சந்தானம் அத்தான். காலேஜ் நடக்குற நேரத்துல இவனுக்கு இங்க என்ன வேலைங்ற யோசனையிலயே போன அது, அன்னிக்கு ராத்திரியே சுப்புணி அத்தான வர வெச்சு, இங்கிலீஷ் இந்து பேப்பர தம்பிக்கு மின்னாடி எடுத்துப் போட்டு அதெ படிக்கச் சொன்னுது. சுப்புணி தடுமாறி தடுமாறி படிச்சதெப் பாத்து, படிச்சது போதும், படிச்சது என்னான்னு வெளக்கத்த சொல்லுன்னு கேட்டதும் சுப்புணி அத்தான் மலங்க மலங்க விழிச்சிருக்கு.
            சந்தானம் அத்தானுக்கு வந்துச்சே கோவம். "ஏம்டா! நாம்ம பள்ளியோடம் பக்கம் போவாத ஆளு. அப்பிடியே பழக்க வழக்கத்துல நாலு பெரிய ஆளுக தொடர்புலயே இங்கிலீஷ்ல இந்து பேப்பர படிக்கிறேம். படவா நீயி மூணு வருஷம் காலேஜூக்குப் போயி, இந்து பேப்பர்ர படிக்கத் தெரியலன்ன என்னத்தாம்டா படிச்சே?ஒன்னய பிடிச்சி ஒழுங்கா வேலையில போட்டுருந்தாலும் இந்நேரத்துக்கு ஒரு ஆபீஸப் போட்டுக் கொடுத்து ஆளாக்கியிருக்கலாம். இப்பிடிக் காலத்தெ வீணடிச்சி உக்காந்துப்புட்டீயேடா? காலேஜ்ல போய என்னத்ததாம்டா படிச்சே?"ன்னு கேட்டுச்சு சந்தானம் அத்தான்.
            "யில்லண்ணே! படிச்சிட்டுத்தாம் இருக்கேம். தெனமும் பேப்பர் படிக்காததால வர்ற மாட்டேங்குது"ன்னு சமாளிச்சிது சுப்புணி அத்தான். சந்தானம் அத்தானுக்கு வந்துச்சே கோவம். அந்தக் கோவத்துல பளார்ன்னு தம்பின்னு கூட பாக்காம கன்னத்துல ஒண்ணு வெச்சி, "காலேஜூ நேரத்துல பார்க்குல ன்னடா ஒனக்கு வேல?"ன்னு கேள்வியக் கேட்டுச்சு பாருங்க. சுப்புணி அத்தானுக்கு ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு.
            "யண்ணே! ஒனக்கென்ன தெரியும்? புரபஸர்ஸ்லாம் தஸ் புஸ்ன்னு இங்கிலீஷ் பேசுறாங்க யண்ணே! நமக்கும் ஒண்ணும் புரியல. இதுல பொம்பளப் புள்ளைங்க வேற கிண்டலு. பள்ளியோடத்துல படிச்சிட்டு வாரவனே அஞ்ஞ தடுமாறுறாம். நாம்ம டுட்டோரியல் காலேஜ்ல படிச்சிப் பார்டர்ல படிச்சி எப்பிடிண்ணே சமாளிப்பேம்? அதால..."ன்னுச்சு சுப்புணி அத்தான்.
            "அதால, ன்னடா பண்ணே?" அப்பிடினிச்சு சந்தானம் அத்தான்.
            "அதால காலேஜூ போற மாதிரியே போயி எங்காயிச்சும் பார்க்குல உக்காந்து சுண்டல வாங்கித் தின்னுட்டு வந்துப்புடுவேம்ண்ணே!"ன்னுச்சு சுப்புணி அத்தான்.          "ஒடம்பு பொத பொதன்னு போனப்பவே கவனிச்சிக்கணும். ஒருத்தனாச்சிம் படிச்சி பேரு எடுப்பான்னு பாத்தா எல்லாம் நம்ம கேஸாத்தாம் இருக்கும் போலருக்கு. அத்துச் செரி. நாம்ம படிச்சாத்தான்னே நீயி ஏம் படிக்கலேன்னு கேக்க முடியும். நம்மள பள்ளியோடம் அனுப்பிச்ச நாள்ல கொளங் குட்டையில கெடந்து கும்பலா அல்லிக் கெழங்க பொறுக்கித் தின்னுகிட்டுக் கெடந்த ஆளுதானே நாம்மே. நம்ம வழியிலயயே நீயும் இருக்குறே. ஒடம்புல ஓடுற ரத்தத்தெ எவ்வேம் மாத்துறது? சென்னைப் பட்டணத்துல கொளமா? குட்டையா? கூவம் ஆறுதாம். அதுல நாத்தத்தத்தாம் பாக்கலாம். அல்லிக் கெழங்க எங்கப் பாக்குறதுன்னு நீயி பார்க்குல உக்காந்து சுண்டல வாங்கித் தின்னுட்டு கெடந்துருக்கே. சரிடப்பா! நாளையிலேந்து வேலைக்கு வந்துப்புடு சைட்டுக்கு!" அப்பிடினிச்சு சந்தானாம் அத்தான்.
            வேற வழியில்லாம சுப்புணி அத்தான் வேலைக்குப் போவ வேண்டியதா ஆயிடுச்சு. நாலு நாளு வேலைக்குப் போன பிற்பாடு கொஞ்சம் ஒடம்பு வலி கண்டு பிற்பாடு, செருமப்பட்டவாது படிச்சி டிகிரிய வாங்கிப்புடுறேம்ண்ணேன்னு சொல்லிப் பாத்துச்சு சுப்புணி அத்தான். "இந்து பேப்பர படிக்கத் தெரியாம நீயி டிகிரிய வாங்கி நாக்கையா வழிச்சிக்கிடறது? ஒழுங்கப் போவச் சொன்னப்பவே ஒழுங்கா போயி படிச்சிருக்கணும். இப்போ காலத்துக்குக் காலமும் போயி, காசுக்குக் காசும் போயி என்னத்தெ சொல்றது? நாலு நாளுதானே வேலைக்குப் போயிருக்கிறே. இன்னும் நாலு நாளைக்குப் போ. எல்லாஞ் சரியாயிடும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். தெனமும் வேலைக்குப் போறதுக்கு மின்னாடி முட்டுச்சந்துக் கடையில இந்து பேப்பர வாங்கிக்க. படிச்சிப் பாரு. என்னிக்கு நல்லா படிச்சி வெளக்கத்தச் சொல்றீயோ அன்னிக்குப் பாக்கலாம், ஒன்னய தொடந்தாப்புல படிக்க வைக்கலாமான்னு இல்லியான்னு?"ன்னு சொல்லிச்சு சந்தானம் அத்தான்.
            சுப்புணி அத்தான் நாலு நாளைக்கு இந்து பேப்பர வாங்கிட்டுப் போயிப் பாத்துச்சு. இந்துப் பேப்பர்ர படிச்சி புரிஞ்சிக்கிறதெ வுட வேலை சுலுவா போயிட்டா என்னவோ தெரியல, அஞ்சாவது நாள்லேர்ந்து முட்டுச்சந்து கடையில இந்து பேப்பர வாங்குறதெ வுட்டுப்புடுச்சு சுப்புணி அத்தான்.
            பொதுவா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. அதெ அப்படியே மாத்திப் போட்டுச்சு சந்தானம் அத்தான், அண்ணனுடையான் எதுக்கும் அஞ்சான்னு.
*****


வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...