29 Apr 2020

கோவக்கார குருத்து!

செய்யு - 433        

            கலியாணத்துக்குப் பெறவு சந்தானம் அத்தான் தனம் அத்தாச்சிய சென்னைப் பட்டணத்துலேந்து அழைச்சிக்கிட்டு வேலங்குடி வந்தப்போ நடந்த சம்பவத்த சொல்லாத வரைக்கும் வேலங்குடி பெரியவரு குடும்பத்துல எப்பிடி செல்வாக்கான ஆளுங்றதெ புரிஞ்சிக்க முடியாது.    
            சென்னைக்கும் வேலங்குடிக்கும் எப்பிடியும் நானூத்து கிலோ மீட்டருக்கு மேல இருக்கும். வேலங்குடியிலேந்து சென்னை போனாலும் சரித்தாம், சென்னையிலேந்து வேலங்குடி வந்தாலும் சரித்தாம் படுத்தா எழுந்திரிக்க முடியாது. போயிட்டு வந்த பயணக் களைப்புல, ஒடம்பு தாங்க முடியாத அசதியாத்தாம் இருக்கும். ஆனா எந்நேரத்துக்கும் வேலை இருக்குற அசாமிங்க அதெப் பாக்க முடியாது. ஒரு மணி நேரமோ, ரெண்டு மணி நேரமோ கொஞ்சம் கண்ணசந்துட்டு வேலையப் பாக்குறாப்புல ஆயிடும். பொதுவா இந்த மாதிரிப் போயிட்டு வர்ற பயணம் ராப்பயணமாத்தாம் இருக்கும். ராத்திரி கெளம்பிக் காலையில போயிச் சேர்றது. அப்பிடிப் போனாக்கா ராத்திரி நேரம் பயணத்துல கழியுறதால பகல் நேரத்து வேலை பாதிக்காம இருக்கும்ன்னு செஞ்சிக்கிறது. எப்பிடியிருந்தாலும் அன்னிக்குப் பகல்ல தூங்காம வேலைப் பாத்தாலும் ராத்திரிக்கிப் படுத்தா அடிச்சிப் போட்டாப்புல தூக்கம் வரும். அந்த ஒரு ராத்திரி நல்லா தூங்குனாலும் மறுநாளுன்னாலும் காலையில எழுந்திரிக்கக் கொஞ்சம் அசதியாத்தாம் இருக்கும். பெரியவர்ரப் பொருத்த வரைக்கும் பொழுது விடிஞ்சா அவரு பாக்குறாப்புல ஆம்பள, பொம்பள யாரும் படுத்துக் கெடக்கக் கூடாது. ஆம்பளெ படுத்துக் கெடந்தா எட்டி ஒதைப்பாரு. அதுவே பொம்பளப் படுத்துக் கெடந்தா என்ன செய்வார்ங்றதெ தனம் அத்தாச்சிக்கு நேர்ந்த சம்பவத்தெ வெச்சி சொன்னா ஒங்களுக்குத் தெரிஞ்சிடும்.
            கலியாணம் ஆயி சென்னைப் பட்டணம் போயி மொத மொறையா வேலங்குடி வருது தனம் அத்தாச்சி. வேலங்குடியில ஒரு கலியாணக் காரியத்துக்காக சந்தானம் அத்தான் வர வேண்டிய நெலையில அதுக்கும் கலியாணமானதால குடும்பமா போவலாம்ன்னு தனம் அத்தாச்சியையும் கூடவே அழைச்சிட்டு வந்து, அப்பிடியே ரெண்டு மூணு நாளைக்குத் தங்கிட்டுப் போவலாங்ற திட்டத்துல வந்துச்சு.
            வந்த அன்னிக்கே ஒடம்பு முடியாம காலையில ஏழு மணிக்கு வந்த தனம் அத்தாச்சி பாயை எடுத்துப் போட்டுப் படுக்கையப் போட்டது பதினோரு மணி வாக்குலத்தாம் எழுந்திரிச்சி. அதுவும் எப்பிடின்னா பெரியவரு காலைச் சாப்பாட்ட முடிக்கிறதுக்கு மின்னாடியே வயல்கள ஒரு பார்வைப் பாத்துப்புட்டு, வேலை எதாச்சிம் கெடந்தா அதையும் பாத்துப்புட்டு பத்து மணி வாக்குல யில்லன்னா பதினோரு மணி வாக்குல திரும்புவாரு. திரும்புனார்ன்னா வூட்டை, கொல்லைய ஒரு சுத்து சுத்திட்டு கையி கால அலம்பிட்டு வந்து சாப்புட உக்காருவாரு. அப்பிடி வூட்ட ஒரு சுத்து சுத்துறப்போ கூடத்துல பாயைப் போட்டு, போர்வையப் போத்திக்கிட்டு தனம் அத்தாச்சிப் படுத்துக் கெடக்குது.
            வேலங்குடிப் பெரியவரு இதெப் பாக்குறாரு. மனசுக்குள்ள கோவம்ன்னா கோவம். அவருக்குப் படுத்துக் கெடக்குறது தனம் அத்தாச்சிதாங்றது நல்லாவே தெரியுது. இருந்தாலும் சத்தத்தெ எப்பிடிக் கொடுக்குறார்ன்னா, "இத்து ன்னா வூடா சத்திரமா? யாரது தரித்திரம் பிடிச்சாப்புல பத்து மணி வரைக்கும் படுத்துக் கெடக்குறது? இப்பிடி பொம்பளெ படுத்துக் கெடந்தா வூடு வெளங்குமா? வர வர இந்த வூட்டுல வரைமொறை யில்லாம போச்சு. ஏய் செயா யாருப்பிடி பாயில போர்வையப் போத்திட்டுத் தூங்கிக்கிட்டுக் கெடக்குறது? வெளக்கமாத்த எடுத்தாந்து அடிச்சி எழுப்பு!"ன்னு சொன்னாரு பாருங்க, தனம் அத்தாச்சி முழிச்சிக்கிட்டு அலறியடிச்சிக்கிட்டு எழும்புது.
            தனம் அத்தாச்சி எழும்புனவுடனெ பெரியவரு பேசுறாரு பாருங்க, "ஓ! சந்தானம் பொண்டாட்டியா? நாம்ம கூட வேற யாரோன்னு நெனைச்சிட்டேம்? இப்பிடித்தாம் சென்னைப் பட்டணத்துல குடும்பம் நடக்குதோ? ஒரு ஆம்பளெ பாக்க பொம்பள படுத்துக் கெடந்தா என்னத்தெ நீயிக் குடும்பம் நடத்துறே? இத்தாம் நீயி குடித்தனம் பண்ணுற லட்சணமோ? ஒங் கூடத்தாம் ஒம்மட புருஷங்காரனும் வந்தாம். அவ்வேம் எழுந்திரிச்சி வேலையப் பாக்கல. போயிப் பாரு வந்தவேம் எதுத்தாப்புல கெடந்த மாட்டுக் கொட்டகையில தெனசரி பேப்பர்ர விரிச்சிப் போட்டுப் படுத்துக் கெடந்தவேம், ஒரு நல்ல பாயி கூட கெடையாது, காலையில சாணிய எல்லாம் பொறுக்கிப் போட்டுட்டு, மாடுவோள அங்க இங்க அவுத்து விட்டுக்கிட்டு வேலையப் பாத்துக்கிட்டுக் கெடக்குறாம். நீயி என்னான்னா புருஷங்கார்ரேம் வேலையப் பாக்க படுத்துக் கெடக்குறே? இத்தாம் நாம்ம பாக்க கடைசீயா இருக்கணும். மறுக்கா இந்த மாதிரி நடந்துச்சுன்னா ன்னா செய்வேம்ன்னு நமக்கே தெரியாது!"ன்னு சொல்லிட்டு வெடுக்குன்னு வெளியில வந்தவரு, சந்தானம் அத்தானப் பிடிச்சி அவரு பாட்டுக்குப் பாட்டு வுடுறாரு.
            "யிப்பத்தாம் சென்னைப் பட்டணத்துலேந்து வந்துப் போறா. பழக்கமில்லாம இருக்கும். அதாங் கொஞ்சம் ஒடம்பு வலியில படுத்திருப்பான்னு விட்டுப்புட்டேம். யம்மாவும் எழுப்ப வேணாம்னுச்சு. அதாங் விட்டாச்சி. இனுமே செரியா வந்துப்புடுவா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "இந்தக் கதெயெல்லாம் நம்மகிட்ட வைக்காது, வைக்கவும் கூடாது. ஆம்பளெ சரியா இருக்குறதுல இருக்கு‍ பொம்பள சரியா குடித்தனம் நடத்துறது. இஞ்ஞ வேலங்குடியில நமக்குச் சோலி ல்லன்னா வெச்சுக்கோ, அஞ்ஞ சென்னைப் பட்டணம் வந்து எப்பிடிக் குடித்தனம் நடத்தணுங்றதெ சொல்லிக் கொடுத்துப்புட்டு வந்துப்புடுவேம் பாத்துகோ. இஞ்ஞ வேலங்குடியில குடித்தனம் எப்பிடி நடக்குதோ, அஞ்ஞ சென்னைப் பட்டணத்துலயும் குடித்தனம் அப்பிடித்தாம் நடக்கணும். குடும்ப வழக்கையெல்லாம் பட்டணம் போயிட்டதால மாத்திக்கிட்டுக் கெடக்காதே. நமக்குக் கெட்டக் கோவம் வந்துப்புடும் பாத்துக்கோ!"ன்னாரு வேலங்குடி பெரியவரு. சந்தானம் அத்தான் அதுக்கு மேல ஒண்ணும் சொல்லல.
            மறுநாளு ஆச்சு. அன்னிக்குக் காலையிலயும் தனம் அத்தாச்சிச் சீக்கிரமா எழுந்திரிக்கில. காலங்காத்தாலயே அஞ்சு அஞ்சரைக்குல்லாம் பால்ல கறந்து டீத்தண்ணியப் போட்டுக் குடிச்சிப்புட்டு வயலப் பாக்க கெளம்புற ஆளாச்சே பெரியவரு. டீத்தண்ணியப் போட்டு எல்லாரையும் எழுப்புனா தனம் அத்தாச்சி மட்டும் எழும்ப மாட்டேங்குது. ஒடம்பு அசதியோ என்னவோ தெரியல. எழுப்ப எழுப்ப சுருண்டு சுருண்டு போர்வைய இழுத்துப் போட்டுத் தூங்குது. பெரியவரு மொகத்துல எள்ளும் கொள்ளுமா வெடிக்குது. ஆத்திரம் வந்துப்புட்டா என்ன பண்ணுவார்ன்னு பெரியவருக்கே தெரியாது. அவ்வளவு மொசமா நடந்துப்பாரு பெரியவரு. "இந்தக் கூறு கெட்ட மனுஷனப் பத்தித் தெரியாம இவ்வே இப்பிடிப் படுத்துத் தூங்குறாளே!"ன்னு நெனைச்சிக்கிட்ட செயா அத்தைப் பாத்துச்சு, "ஒடம்பு கொஞ்சம் சொகமில்ல. ராத்திரியே வவுத்த வலிக்குறதா சொன்னிச்சு. ராத்தூக்கம் கொள்ள நேரமாச்சு. அதாங். நீஞ்ஞ கெளம்புங்க. வயலப் பாக்கப் போங்க. வாரதுக்குள்ள எழும்பினுச்சுன்னா சோலியப் பாக்க ஆரம்பிச்சிடும்!" அப்பிடின்னிச்சு.
            என்ன மாயமோ தெரியல, வந்தக் கோவம் பெரியவருக்கு அடங்கிப் போச்சுது. இப்பிடியெல்லாம் பேசி அடங்குறவரு கெடையாது பெரியவரு. என்னவோ அடங்குனாப்புல, "செரித்தாம்! இப்பிடி மருமவள்களுக்குச் சப்பைக் கட்டுக் கட்டுனா குடித்தனம் வெளங்கிடும். மாமியான்னா மாமியாளா இருக்கணும். மருமவள்ன்னா மருவமளா இருக்கணும். அதாங் குடித்தனம். பாக்குறேம்!"ன்னு சொல்லி வயக்காட்டுப் பக்கம் போனவரு ஏழு மணிக்கெல்லாம் திரும்புவார்ன்னு யாரும் எதிர்பார்க்கல. எப்பிடியும் ஒம்போது மணிக்கு‍ மேலயாவது ஆவும். அப்பிடி இப்பிடின்னு எப்பிடிப் பாத்தாலும் பத்து மணிக்குக் கொறைஞ்சி வார மாட்டாரு. வர முடியாத அளவுக்கு ஒண்ணரை வேலி நெலத்தையும் ஒரு சுத்துச் சுத்தி ஒரு குழி நெலத்த வுடாம பார்வைய வுட்டுப் பாப்பாரு. நேத்துப் பாத்த அதெ நெலம்தான்னாலும் கண்ணுல வெளக்கெண்ணெயை வுட்டுப் பாத்தாத்தாம் அவருக்குத் திருப்தி வரும். அதுவும் சம்பா முடிஞ்சி, உளுந்து பயிறு எடுத்து தரிசா கெடக்குற நெலத்தையும் அப்பிடிப் பாத்தாத்தாம் அவருக்கு மனசு ஒருநெலைப்படும்.  அப்பிடிப் பாக்குறவரு இன்னிக்கு ஒரு திட்டத்தோடத்தாம் காலையில வந்தக் கோவத்தை அடக்கிக்கிட்டு வேணும்னே ஏழு மணிக்குல்லாம் வந்து நிக்குறாரு.
            அங்க வூட்டுல ஏழு மணிக்கு இவரு வந்து நிப்பார்ன்னு யாரு எதிர்பார்த்தா? இவரு தாமசமாத்தாம் வருவரு, அது வரைக்கும் தனம் அத்தாச்சித் தூங்கட்டும், வாரதுக்குக் கொஞ்சம் மின்னாடி எழுப்பி வுட்டுச் சமாளிப்புடலாம்னு, அததுவும் காலைச் சாப்பாட்டுக்கான வேலையப் பாத்துக்கிட்டு, மாடுகளுக்கு கங்காணிப்பப் பண்ணிக்கிட்டு கெடந்ததுல இவரு வந்து நின்னதெ கவனிக்கல. இவருதாம் கெளம்புறப்பவே மருமவ எழும்புலங்றதுல ஒரு கண்ண வெச்சிட்டுப் போனாருல்ல. நேரா கூடத்துக்குத்தாம் போனாரு. கூடத்துல பாயில போர்வையில ஒரு உருவம் சுருண்டு படுத்துக்கிட்டுக் கெடக்கு. பாத்தாரு பெரியவரு. அப்பிடியே சமையக்கட்டுக்குப் போனாரு. அங்க தவளையிலயும் கொடத்துலயும் தண்ணி நெரப்பி இருக்கு. மொதல்ல தவளைப் பானைய தண்ணியோட அப்பிடியே தூக்குனாரு. தூக்கி தண்ணிய அப்பிடியே போர்வைக்குள் படுத்துக் கெடந்த தனம் அத்தாச்சி மேல ஊத்துனாரு. ஊத்துன வேகம் தெரியாம ஒடனே கொடத்துல இருந்த தண்ணியையும் கொண்டாந்து ஊத்துனாரு. ஊத்திட்டு திண்ணைப் பக்கம் வந்தவரு காச் மூச்சுன்னு மனம் போன போக்குல சத்தத்தெப் போடுறாரு. ஆளு ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சிட்டார்ங்றது எல்லாத்துக்கும் தெரிஞ்சிப் போச்சு. அவரு அப்பிடி ஆடுறப்போ யாரும் எடையில பூந்து பேசிட முடியாது, அசமடக்கிட முடியாது. அப்பிடிப் பண்ணா இன்னும் பத்து மடங்கு வேகத்துல ஆட ஆரம்பிச்சிடுவாரு. கோவம் வராத வரைக்கும்தாம் வேலங்குடி பெரியவரு பெரியவர்ரப் போல நடந்துப்பாரு. கோவம் வந்து கோவக்கார குருத்தா ஆயிட்டா ஒரு மிருகத்தெ விட மோசமா நடந்துப்பாரு. அப்போ அந்தக் கோவக்கார குருத்தெ யாராலும் சமாளிக்க முடியாது.
            போர்வையோட ஒடம்பெல்லாம் நனைஞ்சி ஒடம்பெல்லாம் தண்ணி சொட்ட சொட்ட தனம் அத்தாச்சியும் எழுந்து வந்து திண்ணையில வந்து உக்காருது. உக்கார்ருதுன்னா ரொம்ப தெனாவட்டா திண்ணையில இருந்த கட்டையில எல்லாத்தும் பாக்குற மாதிரிக்கி உட்காருது. அது பாட்டுக்கு தனம் அத்தாச்சிப் பேயாம கொல்லைப் பக்கம் போயிருந்தா, இவர்ர ஆட்டத்தெ ஆட வுட்டு எதாச்சிம் பண்ணி சமாளிச்சிப்புடலாம்னு நெனைச்சிட்டு இருந்த எல்லாத்துக்கும் இந்தக் கோலத்த பாத்ததும் கெடி கலங்கிப் போச்சுது. இன்னிக்கு ஏத்தோ விபரீதமா நடக்கப் போவுது, அதெ தடுக்க முடியாதுன்னு ஒண்ணொண்ணுத்துக்கும் நெஞ்சு தாறுமாறா துடிக்கிது.
            பெரியவருக்கு திண்ணையில வந்து உக்காந்த தனம் அத்தாச்சியோட கோலத்தப் பாத்ததும் கோவம்ன்னா கோவம் அடக்க முடியல. "இந்தக் காலத்துப் பயலுவோ என்னத்தெ குடித்தனம் பண்றானுவோன்னு தெரியல. பொட்டச்சி ஏழு மணி வரைக்கும் படுத்துக் கெடக்குறா? அதெ கேக்க ஒரு நாதியு காணும். வூட்டுல இருந்த தண்ணி மொத்தத்தையும் மேல ஊத்திட்டு வந்தா இப்பிடி தலைவிரிக்‍ கோலமா திண்ணையில வந்து உக்காந்தா ன்னா அர்த்தம்? இப்பப் பாரு என்னத்தெ பண்றேம்?"ன்னுவாச மாட்டுல கெடந்த செருப்ப ஒண்ண எடுத்துக்கிட்டு அடிக்கப் பாய்ஞ்சிப் போறாரு வேலங்குடி பெரியவரு.
            தனம் அத்தாச்சியோட நல்ல நேரமா என்னான்னு தெரியல, அந்த நேரம் பாத்து டிவியெஸ் பிப்டியிலல டர்டர்ருன்னு அங்கப் போயி எறங்குறாரு சுப்பு வாத்தியாரு. கொஞ்சம் ஒரு நிமிஷம் தாமசமா போயிருந்தாலும் தனம் அத்தாச்சி செருப்படி வாங்குறதெ யாராலயும், எந்தச் சக்தியாலயும் தடுத்திருக்க முடியாது. வண்டிய ஸ்டாண்டு போட்டுட்டு எறங்குனவரு பெரியவரு செருப்ப எடுத்துட்டுப் போறதெ பாத்து, தனம் அத்தாச்சிய அடிக்கப் போறதுக்குள்ள போயி, செருப்போட அவரு கையப் பிடிச்சி, கையில இருந்த செருப்ப பிடிச்சி வெளியில எறிஞ்சாரு.
            இவ்வளவு சம்பவம் நடக்குறதையும் பாத்துட்டு சந்தானம் அத்தான் அங்க செலையப் போல நிக்குதே தவிர, ஏம்ப்பா இப்பிடி பேசுறீயோன்னோ, ஏம்ப்பா இப்பிடி பண்றீயோன்னு ஒரு வார்த்தெ கேக்கல. பொண்டாட்டிய செருப்பால அடிக்கப் போற அப்பாவ தடுக்காமலத்தாம் மாட்டுக்கொட்டகைக்கு வெளியில வேடிக்கைப் பாத்தாப்புல நிக்குது.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...