28 Apr 2020

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து!

செய்யு - 432        

            வேலங்குடி பெரியவரு கலியாண விசயத்துல எறங்கிட்டார்ன்னா சாதகத்தெ எடுத்துக்கிட்டு முடிகொண்டான் ஐயருகிட்டே போயிடுவாரு. சாதகப் பொருத்தத்தெ ரொம்ப வடிகட்டிப் பாப்பாரு. அதுல அவருக்குத் திருப்திப்பட்டாத்தாம் கலியாணம். அவரு சாதகம் சாதகம்ன்னு ரொம்ப வடிகட்டிப் பாத்துட்டு இருந்ததுல அவரோட மூணு பொண்ணுல ஒண்ணான கலா அத்தாச்சிக்கு வயசு ஏறிகிட்டே போயிக்கிட்டு இருந்துச்சு. இவரும் வர்ற சாதகம் ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து கழிச்சிக் கட்டிக்கிட்டுக் கெடந்தாரு. சுப்பு வாத்தியாரும் எடுத்துச் சொல்லிப் பாத்தாரு, "ரொம்ப சாதகத்தப் போட்டு வடிகட்டிட்டுப் பாக்க வாணாம் யத்தாம்! இப்பிடியே பாத்துக்கிட்டெ கெடந்தா கலாவுக்குப் புள்ளெ பொறக்குற வயசுல கலியாணம் ஆவாது. பேரப் புள்ள பொறக்குற வயசுலத்தாம் கலியாணம் ஆவும். சாதகம் கொஞ்சம் பொருந்தி வந்தாலும் சொலிய முடிச்சிப் புடலாம்!"ன்னு.
            பெரியவரு அதுக்கு ஒத்துக்கிட மாட்டேன்னுட்டாரு. "அத்து எப்பிடிம்பீ! காலம் பூரா சேந்து வாழப் போற சோடிங்க. பாத்து நல்ல வெதமா பொருத்தம் இருந்து பண்ணி வுட்டாத்தாம் நல்லது. பொருத்தம் பாத்துச் செஞ்சாத்தாம் சோடிகளுக்குள்ள வருத்தம் இல்லாம காலம் ஓடும். கொஞ்சம் அவசரப்பட்டேம்ன்னா அவுங்க வாழ்க்கெ என்னாவுறது? வாழ்க்கையில புள்ளையோ, பொண்ணோ ஒரு தடவெ பண்றதுதாங் கலியாணம். மூணு முடிச்சிப் போட்ட போட்டதுதாம். அவுத்துல்லாம் மறுமுடிச்சி போட முடியாது. அப்பிடிப் பண்ணி வுட்டா புள்ளைங்க நெறைவாழ்வு வாழணும். யப்பா பாத்துப் பண்ணி வுட்டுச்சு, இப்போ நல்ல வெதமா இருக்குறோம்ன்னு புள்ளைங்க காலத்துக்கும் அதெ நெனைக்கணும். அதால சாதகத்த சாதாரணமா நெனைச்சுப்புடாதீங்க யம்பீ! சாதகந்தாம் எல்லாம். அதுல தெச இல்லன்னா கலியாணப் பேச்சப் பத்தி நெனைச்சுக் கூட பாக்கக் கூடாது. சாதகம் சுத்தப்பட்டு வரலன்னா அந்தப் பக்கம் தல வெச்சுக் கூட படுக்கக் கூடாது!" அப்பிடின்னுட்டாரு. அதுக்கு மேல என்னத்தெ பண்ணுறதுன்னு சுப்பு வாத்தியாரும் விட்டுப்புட்டாரு.
            சாதகத்தை கையில வெச்சிக்கிட்டு அலைஞ்சி வரனெப் புடிக்கிறதுல கொஞ்சம் கூட பெரியவரு அலுத்துக்கிட மாட்டாரு. அவரு பத்தித்தாம் ஒங்களுக்குத் தெரியுமே. கால்நடையா அலையுற ஆளுன்னு. கால்நடைங்கன்னு சொல்ற ஆடும் மாடும் என்னிக்கு நடக்கறதுக்கு அலுத்துக்கிட்டுங்க? அப்பிடித்தாம் பெரியவரும். அப்படியே கால்நடையா அமெரிக்காவுக்குப் போயிட்டு வாங்கன்னாலும் அவரு பாட்டுக்குக், கட்டுச்சோத்த கட்டிக் கையில எடுத்துக்கிட்டுப் போயிட்டு வருவாரு. சாதகப்பொருத்தம் பாக்குறதுக்கு வேலங்குடியிலேந்து திருவாரூ வரைக்கும் நடந்துப் போயி, அங்கேயிருந்து முடிகொண்டான் வரைக்கும் நடந்துப் போயிட்டு வருவாரு. எப்பவாச்சிம் கொஞ்சம் அலுப்பா தோணுனா மட்டுந்தாம் மாயவரம் பஸ்ஸூல ஏறி முடிகொண்டான்ல எறங்குவாரு. "ன்னா பஸ்ஸூக்கும் நடைக்கும் ரண்டு மணி நேரந்தாம் வித்தியாசம்ந்தாம். திருவாரூர்ல ஒரு சிகரெட்ட வாங்கிப் பத்த வேச்சேம்ன்னா முடிகொண்டான்ல போயி நின்னுடுவேம். அங்கனயிருந்து மறு சிகரெட்ட பத்த வெச்சா போதும் திருவாரூர்ல வந்து நின்னுபுடுவேம்! கையும் காலுந்தாம் எல்லாம். கையும் காலும் நல்லா இருந்தா எதெ வேணாலும் சாதிக்கலாம்! நெலாவுக்குக் கூட நடந்தே போவலாம்! நட்சத்திரத்தையும் கையால பிடிக்கலாம்!"பாரு அலட்சியமா.
            கலா அத்தாச்சிக்காக அவரு அலையாத எடம் கெடையாது. நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூரு, பாநாசம், கும்பகோணம், மாயவரம்ன்னு பல ஊரு தண்ணியக் குடிச்சிப் பாத்தாரு. இதுல ஒரு சில எடங்களுக்கு கால்நடையாவே நடந்துப் போயும் திரும்பியிருக்காரு. அவ்வளவு அலைஞ்சும் அவரு காலு எப்பிடி மொழங்காலு வரைக்கும் தேயாம இருந்துச்சுன்ன அவருகிட்டத்தாம் கேக்கணும். அவருக்குத் திருப்திப்பட்டாப்புல சாதகத் தோது அமையல. வேற ஒரு ஆளுன்னா அலைஞ்ச அலைச்சலுக்குப் பொண்ணு கலியாணம் ஆவாமலே வூட்டுலயே இருந்திடட்டும்ன்னு முடிவெ பண்ணிருப்பாம். நூறு எடம் அலைஞ்சா ஒரு எடம் அமையுங்ற கணக்கா, ஒரு நாலு வருஷத் தேடலுக்குப் பெறவு ஆலிவலத்துல ஒரு மாப்புள்ள பையன் அமைஞ்சாரு. அவருதாம் ரவி அத்தான். பத்தரு வூட்டு மாப்புள. மாப்புள்ள பாக்க அம்சமா நல்ல செவப்பு நெறம், ஓங்குதாங்கலான ஒசரம். சாதகப் பொருத்தம் அப்பிடிப் பொருந்திப் போவுது அம்சமா. மாப்புள்ளயோட ஒப்பிடறப்போ கலா அத்தாச்சி மாநிறந்தாம், ஒசரம் குட்டை, ஒடம்பும் அப்போ கொஞ்சம் ஒடிசல்தான். கலா அத்தாச்சிக்கு கட்டுனா ரவி அத்தானத்தைத்தாம் கட்டி வைப்பேம்ன்னு ஒத்தக் கால்ல நிக்குறாரு வேலங்குடி பெரியவரு.
            ரவி அத்தான் குடும்பத்துல ரெண்டே புள்ளைங்கத்தாம். ஒண்ணு ரவி அத்தான். இன்னொண்ணு ரவி அத்தானோட தங்காச்சி தனம் அத்தாச்சி. ரவி அத்தான் அப்போ தங்காச்சிக்குக் கலியாணத்தெ முடிக்காம நாம்ம கலியாணத்த பண்ணிக்க முடியாதுன்னு ஒத்தக் கால்ல நிக்குது. இதாங் வேடிக்கை, வேலங்குடி பெரியவரு ரவி அத்தான கட்டி வைக்கணும்னு ஒத்தக் கால்ல நின்னா, ரவி அத்தான் தங்காச்சியக் கட்டி வைக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்குது. பாத்தாரு பெரியவரு, தன்னோட மவனான சந்தானம் அத்தானோட சாதகத்த எடுத்து தனம் அத்தாச்சியோட சாதகத்தோட முடிகொண்டான் ஐயருகிட்டெப் போயி பொருத்தம் பாத்தாரு. சாதகப் பொருத்தம் அம்சமா பொருந்திப் போச்சுது. பரவாயில்ல மவ்வேன் கலியாணத்துக்கு பொண்ண பாக்க சாதகத்த வெச்சி அலையுற வேலை மிச்சம்ன்னு அடுத்த நிமிஷமே சென்னைப் பட்டணத்துல இருக்குற சந்தானம் அத்தாங்கிட்டெ எல்லாம் கலந்துக்கிடல. "பொண்ணு கொடுத்து பொண்ண எடுக்க சம்மதமா?"ன்னு ரவி அத்தானோட குடும்பத்துல போயிக் கேட்டுப்புட்டாரு.

            ரவி அத்தான் குடும்பத்துல ஒங்க புள்ளையாண்டானுக்குச் சம்மதம்ன்னா எங்களுக்குச் சம்மதம்ன்னு சொல்லிப்புட்டாங்க. அவுங்க அப்பிடிச் சொன்னதுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருந்துச்சு. தனம் அத்தாச்சியோட பல்லு கொஞ்சம் வெளியில எடுப்பா நீட்டிட்டு இருந்துச்சு. அதெ பாத்துட்டு வர்ற மாப்புள்ள பையனெல்லாம் பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டுப் போயிட்டுக் கெடந்தானுவோ. இப்பிடி ஒரு ‍தோது வந்தா ரவி அத்தான் குடும்பத்துல சம்மதம் இல்லன்னா சொல்லுவாங்க? அவுங்க சம்மதம்ன்னு சொன்ன அதுக்குப் பெறவுதான் திருவாரூ போயி எஸ்.டி.டி. பூத்ல சந்தானம் அத்தான் போன் நம்பருக்கு அடிச்சி இந்த மாதிரி சேதின்னு சொல்லி, கலியாணத்தெ பண்ணணும் ஒடனே கெளம்பி வாடான்னுட்டாரு வேலங்குடி பெரியவரு. பெரியவரு இப்பிடிப் பண்றதுல சுப்பு வாத்தியாருக்கு உடன்பாடு இல்லே. பெரியவரோட சண்டை போட்டாரு. "அவ்வேம் வந்து பொண்ணப் பாத்துப் பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லாம, பொண்ணப் பாத்தாச்சி தாலியக் கட்ட வாடான்னா ன்னா அர்த்தம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருங்கம்பீ! ஒரு புள்ள ரெண்டு புள்ளய பெத்து வெச்சிருந்தா அதெல்லாம் கேட்டுக்கிட்டு கெடக்கலாம். மொத்தம் எட்டுக் கெடக்குது. ஒண்ணுக்குத்தாம் கலியாணம் ஆயிருக்கு. இந்தப் பொண்ணுக்கு எல்லாம் தட்டிக்கிட்டுப் போயி இப்பத்தாம் செயமாவுது. இதுல ஒவ்வொருத்தங்கிட்டயா ஒனக்குப் பிடிச்சிருக்கா இல்லையான்னு நாம்ம கேட்டுக்கிட்டு நின்னேம்ன்னா வெச்சுக்கோங்க, இந்தச் சென்மத்துல எட்டுக்கும் கலியாணத்தப் பண்ணி நாம்ம பாக்க முடியாது. சாதகம் பொருந்துதா கட்ட வேண்டியதுதாங் தாலிய. அதுக்குததான யம்பீ அந்தக் காலத்துல சாதகத்தக் கண்டுபிடிச்சி வெச்சாம்! எத்தனெ கலியாணத்தப் பண்ணி வெச்சிருக்கேம்? எத்தனெ கலியாணத்துக்குப் போயி சமைச்சிப் போட்டிருப்பேம்? நம்ம அனுபவத்துல பாக்காததா? சாதகம் பொருந்துனா போதும்பீ! கட்டிக்கிட்ட சோடிங்க நல்லாத்தாம் இருக்குமுங்க!"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
            பெரியவருகிட்டே அதாங் ஒரு கொணம். சாதகம் பொருந்தியிருந்தா போதும், ஏழை வூடு, பணக்கார வூடுன்னுல்லாம் பாக்க மாட்டாரு. பொண்ணு புள்ளையோட மொக வெட்டையும் பாக்க மாட்டாரு. சம்பந்தம் கலந்துக்கிட்டு கலியாணத்தெ முடிச்சிப்புடுவாரு. "சாதகம் ஒத்து வரப்போ ஏழை வூட்டுப் பொண்ண எடுத்தா அத்து குடித்தனம் ஆயி வாரப்போ பணக்கார வூட்டுப் பொண்ணா ஆயிடும்பீ! அதெ போலத்தாம் மாப்புள்ள பையனும் ஏழை பாழையா இருந்தாலும் சாதகம் பொருந்தி நம்ம பொண்ணு குடித்தனம் பண்ணப் போறப்போ அவ்வேம் பணக்காரனா ஆயிடுவாம். அத்தெ வுட்டுப்புட்டு சாதகப் பொருத்தமில்லாம, பணக்கார வூட்டுப் பையனெ கட்டி வெச்சாலும் சரித்தாம், பணக்கார வூட்டுப் பொண்ண கெட்டி வெச்சாலும் சரித்தாம் குடித்தனம் ஆவுறப்போ பஞ்சப் பரதேசியா ஆயி நடுத்தெருவுல நிக்க வேண்டித்தாம்!"ன்னு அதுக்கும் ஒரு வெளக்கத்த கொடுப்பாரு.
            கலியாணத்துக்கு ரெண்டு நாளைக்கு மின்னாடித்தாம் சந்தானம் அத்தான் வேலங்குடிக்கு வந்துச்சு. பொண்ணு அழைப்பு, மாப்புள்ளை அழைப்பு அப்பத்தாம் சந்தானம் அத்தான் பொண்ணையே பாக்குது. அப்போ தனம் அத்தாச்சி ஒடிசலா, கச்சலா பாக்கறதுக்கு பல்லு முன்னாடி நீட்டிக்கிட்டு பார்வைக்கு ஒரு மாதிரியாத்தாம் இருந்துச்சு. சந்தானம் அத்தான் ஒரு வார்த்தைச் சொல்லல. புலிவலம் பெருமாள் கோயில்லத்தாம் ரெண்டு சோடிக்கும் ஒரே நேரத்துல கலியாணம். தாலியக் கட்டிச் சென்னைப் பட்டணத்துக்கு தனம் அத்தாச்சிய அழைச்சிட்டுப் போயிடுச்சு. அழைச்சுட்டுப் போச்சுன்னா தனம் அத்தாச்சிய மட்டுமில்லே, தங்காச்சி கலா அத்தாச்சியோட, மச்சாங்கார்ரேம் ரவி அத்தானையைும் சேர்த்துதாம் சென்னைப் பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போனுச்சு. ஆரம்பத்துல ரவி அத்தானை ஒரு நகைக் கடையில வேலைக்குத் சேத்து வுட்டு, பிற்பாடு அதுக்குச் சின்னதா ஒரு நகைக் கடையையும் வெச்சுக் கொடுத்துச்சு.
            இப்படியா தங்காச்சிக்குக் கலியாணம் ஆவணும்ங்றதுக்காக தனக்குப் பாத்திருக்குற பொண்ணு எப்பிடி இருக்கேன்னே தெரியாம ‍அதோட கழுத்துல தாலியக் கட்டுனதுதாங் சந்தானம் அத்தான். அந்த விசயத்துல எல்லாம் பெரியவருக்கு சந்தானம் அத்தான நெனைச்சி நெனைச்சி ரொம்ப சந்தோஷம். "நம்ம புள்ளியோல்லாம் அப்பிடித்தாம், தாலியக் கட்டுடான்ன சொன்னா கட்டுவானுவோ! கால்ல விழுன்னு சொன்னா விழுவானுவோ! ஏம் எதுக்குன்னுல்லாம் கேக்க மாட்டானுவோ! யப்பங்கார்ரேம் நாம்ம பாத்துச் செஞ்சி வெச்சா மறு வார்த்தே பேச மாட்டானுவோ!"ன்னு ரொம்பப் பெருமையா சொல்லுவாரு வேலங்குடி பெரிய மாமா.
            குடும்ப வழக்குல ரொம்ப கட்டு செட்டான ஆளு பெரியவரு. புள்ளைங்க ஒவ்வொண்ணும் சென்னைப் பட்டணத்துல இருந்தாலும் அங்க என்ன நடக்கணுங்றதெ இங்கயிருந்து சொல்லிச் சொல்லி அதிகாரம் பண்ணுவாரு. எதெது எப்பிடி நடக்கணும்ன்னு சில வழக்கு மொறைகள வெச்சிருப்பாரு. அதுப்படித்தாம் நடக்கணும், நடந்தாவணும் அவருக்கு. மாறி நடந்தா கோவம் வந்துப்புடும். ருத்ர தாண்டவம் ஆடிப் புடுவாரு. அவரு காலம் வரைக்கும் புள்ளைகளோ, மருமவள்களோ அவரு பேச்ச மீறி நடக்க முடியல, மீறி நடக்கவும் வுடல. சென்னைப் பட்டணணுத்துக்கான ரிமோட் கண்ட்ரோல் வேலங்குடியிலத்தாம் பெரியவரு காலம் வரைக்கும் இருந்துச்சன்னா ஒங்களால நம்ப முடியுதா? அப்பிடித்தாம் இருந்துச்சு.
            பிள்ளைக மத்தியில ஒரு குடும்பப் பிரச்சனைன்னா சென்னைப் பட்டணத்துக்குப் போயி ராப்பூரா உக்காந்துப் பேசிச் சரி பண்ணுவாரு. சுப்பு வாத்தியாரு அப்போ சும்மா இருந்தார்ன்னா அவரையும் ட்ரெய்ன்ல தூக்கிப் போட்டுக்கிட்டுக் கொண்டு போயிடுவாரு. பேசன்ஞர் டிரெய்ன்லயே ராப்பூரா சுப்பு வாத்தியார்ர உக்கார வெச்சிக் கொண்டுட்டுப் போயி, பேச வேண்டியதெ பேசி முடிச்சிட்டு, திரும்பவும் ராப்பூரா பேசன்ஞர் டிரெய்ன்லயே உக்கார வெச்சிக் கொண்டாந்து வுட்டுட்டுப் போயிடுவாரு. மாசத்துக்கு ஒரு மொறையோ, ரெண்டு மொறையோ எப்ப வருவாரு, எப்பிடி வருவாருன்னு தெரியாம திட்டைக்குச் சுப்பு வாத்தியாரு வூட்டுக்குக் கால்நடையாவே குறுக்கால பூந்து வந்துட்டுப் பாத்துட்டுப் போயிட்டு இருப்பாரு. குடும்பத்துல இப்பிடி இப்பிடித்தாம் இருக்கணும்னு, நடக்கணும்னு கண்டிஷன் பண்ணிப் பேசுவாரு. அப்பிடியில்லாம் இருந்தவாசித்தாம் எட்டுப் புள்ளைகள வளக்க முடிஞ்சதா ஒரு பெருமூச்சே வுடுவாரு. அப்பிடியில்லாம் இருந்துதாம் ஊருக்கார புள்ளியோ, ஒறவுக்கார புள்ளியோ வரைக்கும் வளத்தாச்சின்னு மறுபடியும் ஒரு பெருமூச்ச வுடுவாரு. ஒவ்வொரு விசயத்தையும் அடுக்கடுக்கா எடுத்து வெச்சி விகடமா அலுக்காம சலிக்காம பேசுறதுல பெரியவரு எப்பவும் கில்லித்தாம்.
            குடும்பத்துக் கில்லியான அவரு எவ்வளவோ விசயங்கள ரொம்ப எதார்ததமா, பதார்த்தமா சொல்லிருக்காரு. அதுல அடிக்கடி சொல்ற மறக்க முடியாத ஒண்ணு. அவரு குடும்ப விசயத்தப் பத்தி அடிக்கடி சொல்ற ஒரு வாசகம் அது, "சிறிசுக பெரிசுக்கு அடங்குனாத்தாம் குடும்பம். யில்லன்னா அலங்கோலம்தாம். அந்தக் குடும்பத்தையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. படிக்குள்ளயா மரக்கா போவும்? மரக்காக்குள்ளத்தாம் படி போவும்!"
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...