31 Mar 2020

தெருவோட போனவள்!

செய்யு - 404        

            லட்சுமி மாமியோட கலியாணம் ஆயி வீயெம் மாமா ஒரு தடவ மட்டும் கிடாரங்கொண்டானுக்கு அழைச்சிட்டுப் போனதோட சரி. மாசத்துக்கு ஒரு தபா லட்சுமி மாமி அதெ ஞாபவப்படுத்துனாலும் ஒண்ணு கெடக்க ஒண்ணு உருப்படாத ஒரு காரணத்தைச் சொல்லி அழைச்சிட்டுப் போறதில்ல. கொஞ்சம் லட்சுமி மாமி அழைச்சிட்டுப் போவ நச்சரிச்சா போதும், ஒடனே கோகிலா மாமி, "ஏந் தங்காச்சி ஒன்னய நாம்ம நல்ல வெதமா பாத்துக்கிடலையா?"ன்னு அழுகாச்சிய வைக்கும். ஒடனே லட்சுமி மாமிக்கு மனசு மாறிப் போயிடும். இப்போ வூட்டை விட்டு ஒண்ணுத்துக்கும் நாதியில்லாதது போல வூட்டுக்கு வெளியில உக்காந்திருக்கிறப்போ லட்சுமி மாமிக்கு அதெல்லாம் ஞாபவம் வருது. ஞாபவம் வர்ற வர்ற கண்ணுத்தண்ணி வேற முட்டிக்கிட்டு வருது.
            புள்ளயப் பெக்குறதுக்கு ஒரு எந்திரம் போலத்தாம் திட்டம் போட்டு நம்மள கொண்டாந்திருக்காங்க போலன்னு நெனைக்க நெனைக்க அதுக்கு அழுகாச்சியாப் போவுது. "அத்துச் செரி, ஏதோ ஒரு கோவத்துல நாம்ம பேசுனோம், அடிச்சி வெளியில தொரத்தி வுட்டது பரவாயில்ல, இப்பிடிக் கொழந்தையையுமா தூக்கிக் கொண்டாந்து பொதுக்குடின்னு போட்டுட்டுப் போவா! கொழந்தைய கொடுக்க மாட்டேம்னு கொஞ்சம் பிசாத்துக் காட்டியிருந்தா கூட மனசு ஆறியிருக்குமே!"ன்னு லட்சுமி மாமிக்கு மனசு பல வெதமா ஓடுது. புருஷங்கார்ரேம் வந்தாத்தாம் இதுக்கு ஒரு விடிவு பொறக்கும்ன்னு வேலிப்படலுக்குப் பக்கத்திலேயே உக்காந்திருக்கு லட்சுமி மாமி.
            "அந்த வூட்டுல அவளுக்கு மட்டும்தாம் உரிமையா ன்னா? நமக்கில்லையா? நாமளும் இப்பிடி வெளியில வாராம உள்ளப் போயித்தாம் உக்காந்துக்கிடணும்! இருந்தாலும் அவளுக்கு இருக்குற உடம்புக்கு நம்மல நெட்டித் தள்ளுனா நாலு ஊரு தள்ளிப் போயித்தாம் வுழுவணும். இப்போ கொழந்தை வேற மடியில கெடக்குறதால கொழந்தையோட போயி வுழுந்தா கொழந்தைக்கு என்னாவுறது?"ன்னு யோஜனையப் பண்ணிக்கிட்டு வேலிப்படலுக்குப் பக்கத்திலேயே வீயெம் மாமா வர்றதப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கு.
            இங்க இப்பிடிச் சம்பவம் நடந்துக்கிட்டு இருக்கிறப்பவே வீயெம் மாமாவுக்கு அங்க பட்டறைக்கு அவ்வளவு சங்கதியும் போயிச் சேந்திடுச்சு. பாத்துக்கிட்டு நின்ன சனங்கள்ல ரெண்டு மூணு ஓடிப் போயி எல்லாத்தையும் சொல்லிப்புடுச்சு. வீயெம் மாமா பட்டறையிலயே பட்டறைப் போட்டாப்புல உக்காந்திருக்கே தவுர அசைய மாட்டேங்குது. கடைத்தெருவுல நாலைஞ்சு பேரு வந்து அதெ வூட்டுக்குக் கெளப்பப் பாக்குறாங்க. அத்து கெளம்ப மாட்டேங்குது. பட்டறையோட விட்டத்தெ பாத்துக்கிட்டு ஏதோ யோசனையிலயே இருக்கு.
            பட்டறையிலேந்து ரெண்டு கடை தள்ளியிருக்குற மளிகைக் கடை வெச்சிருக்குற பலசரக்கு யேவாரி மாடக்கண்ணுவும் வந்து சொல்லிப் பாக்குறாரு. "யம்பீ! மொதல்ல வூட்டுக்குக் கெளம்பிப் போங்க. பொம்பளைங்களுக்குள்ள இதல்லாம் சகஜந்தாம். ஒத்தெ பொண்டாட்டிய வெச்சுக்கிட்டே அவனவனும் சமாளிக்க முடியாம தடுமாறுறாம். இதுல நீங்க ஒண்ணுக்கு ரண்டா வூட்டுல வெச்சிக்கிட்டா இப்பிடித்தாம் ஆவும். ஒங்க அத்தாம்லேந்து யாரு சொல்லிக் கேட்டீங்க? ஆனது ஆயிப் போயிடுச்சு. வூட்டுக்குப் போயி மொதல்ல சமாதானத்தெப் பண்ணுங்க. எதா இருந்தாலும் பெறவு பேசிக்கிடலாம். ஒத்து வரலைன்னா இன்னொரு வூட்டப் பிடிச்சி ரண்டையும் ரண்டு எடத்துல வெச்சிப்புடலாம்! சொன்னா கேளுங்க! மொதல்ல வூட்டுக்குக் கெளம்புங்க! ரண்டு பொம்பளைகள்ல எதாச்சிம் ஒண்ணு ஒண்ணு கெடக்க பண்ணிட்டாலும் கெட்டப் பேரு ஒங்களுக்குத்தாம்! சொன்னா கேளுங்க யம்பீ!" அப்பிடின்னு கெளப்பி விடுறாரு.
            எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு ஒரு இளிப்பு இளிக்குது வீயெம் மாமா. உக்காந்த எடத்தெ வுட்டு எழுந்திரிக்கிறாப்புல தெரியல. "என்னாம்பீ! எதெ சொன்னாலும் என்னவோ பெரிய இவுராட்டம் இளிக்குறீங்களே தவுர அசைய கிசைய மாட்டேங்றீங்களே!"ன்னு சொல்லிப்புட்டு, மாடக்கண்ணுவும் இதுக்கு மேல நம்மால ஆகாதுன்னு கெளம்பிட்டாரு. பகல் பதினோரு மணி வாக்குல நடந்த சம்பவத்த கேள்விப்பட்டு பொழுது சாயுற ஆறு மணி வாக்குல வீயெம் மாமா வூட்டுப் பக்கமா வருது. அது வரைக்கும் தெருவுல வர்ற போற சனங்க எல்லாமும் லட்சுமி மாமிய வேடிக்கைப் பாத்துட்டுப் போயிட்டுத்தாம் இருக்குங்க. போற சனங்க வீயெம் மாமாகிட்டே போயி சொல்லியும் பாக்குதுங்க.
            யாரு என்னத்தெ சொன்னா ன்னா ஆறு மணி வாக்குதலத்தாம் கெளம்புவேம்னு நெனைச்சுக்கிட்டு அசால்ட்டா கெளம்பி வருது வீயெம் மாமா. இனுமே என்ன நடக்கப் போவுதோன்னு சனங்க ஒவ்வொண்ணும் அதது வூட்டு சன்னலயும், கதவையும் தொறந்து வெச்சிக்கிட்டு வேடிக்கையப் பாக்குதுங்க.
            வீயெம் மாமா பக்கத்துல வந்ததும் லட்சுமி மாமி கொழந்தையைக் கையில தூக்கிக்கிட்டு ஓன்னு அழுகாச்சிய வைக்குது. அதெ ஒண்ணும் கண்டுக்கிடாத மாதிரி வேலிப்படல தொறந்துக்கிட்டு உள்ளாரப் போவுது வீயெம் மாமா. உள்ள வான்னு ஒரு வார்ததையக் கூட சொல்லல.  அதெ பாக்குறப்ப லட்சுமி மாமிக்கு ஆத்தாமையாப் போவுது. சம்பவம் நடந்து இம்மாம் நேரமாயும் யாராச்சிம் ஒருத்தராவது போயி சொல்லாமலா இருந்திருப்பாவோ! சொல்லித்தாம் இருந்திருப்பாங்க! அப்பக் கூட பாக்க வாரணும்னு தோணல. செரி பாக்கத்தாம் வாரல, பரவாயில்ல. வந்தப்பறவும் கூட வான்னு வார்த்தைச் சொல்ல மனசில்லையே, கொழந்தைய வாங்கிக் தூக்கிக்கணும்னு கூட நெனைப்பில்லையேன்னு நெனைச்சு மனசு புழுங்கிப் போவுது லட்சுமி மாமிக்கு.

            "பாம்பெ கட்டிக்கிட்டு நடுவூட்டுல படுக்க முடியுமா? உண்ட வூட்டுக்கு ரண்டகம் பண்ணிட்டு குடும்ப மானத்தெ காத்துல பறக்க வுடணும்னே தேவிடியா சிறுக்கி வெளியில உக்காந்துகிட்டு பண்றதப் பாத்தியளா? நாமளும் உள்ள வா வான்னு சொல்றேம். மூத்தவெ எம் பேச்சக் கேட்டத்தானே! இந்த வூட்டுல நம்மடப் பேச்சுக்கு ன்னா மருவாதி யிருக்கு? ஒரு கொழந்தையப் பெத்துப்புட்டா அவ்வே பெரிய மசுருன்னு நெனைப்பா? நாம்மப் பாத்துக் கொண்டாந்த நாயித்தானே! நில்லுன்னா நிக்கணும், உக்காருன்னா உக்காரணுமில்லே! ஒரு கொழந்தையப் பெத்ததும் நம்மள மலடின்னு சொல்றாய்யா மனுஷா மனசாட்சியே யில்லாம. இதுக்குத்தாம் ஒனக்கு அவளே கட்டி வெச்சு நமக்கு சக்களத்தியா கொண்டு வந்தேமா? எஞ்ஞ அப்பம் ஆயி நமக்குன்னு போட்ட நக, நட்டையெல்லாம் அவளுக்குப் போட்டு அழகுப் பாத்தேமில்லே! அதுக்கெல்லாம் சேத்துதாம்யா அவ்வே பண்றா அத்தனெ கூத்தையும்! நீந்தாம்யா முடிவு பண்ணணும். இந்த வூட்டுல நாம்ம இருக்கணுமா? யில்லே அவ்வே இருக்கணுமா? ஒமக்கு ஒரு கொழந்தைக்காக மனுஷா பத்துப் பொம்பளைய கட்டி வெச்சு அவளுகளுக்கு சூத்தலம்ப நாம்ம தயாரா இருக்கேம். ஆன்னா இந்த மாதிரிக்கி மானங்கெட்ட மருவாதி கெட்ட பொட்ட சிறுக்கிய வூட்டுல வெச்சிக்கிட்டு ஒரு நிமிஷ நேரம் இருக்க மாட்டேம்!" அப்பிடின்னு பெருஞ்சத்தமா வுட்டுச்சு கோகிலா மாமி.
            அம்மாம் சத்தத்தெ எழுப்பிப்புட்டு, சன்னமா வீயெம் மாமா காதுக்கு மட்டும் கேக்குறாப்புல இன்னொண்ணையும் சொன்னிச்சு கோகிலா மாமி, "அவளே மட்டும் உள்ள வான்னு சொல்லிப் பாரு. இந்த வூடு, அந்தப் பட்டறை, வய நெலம் நீச்சு எல்லாம் நம்மட பேர்லத்தாம் இருக்கு. ஒண்ணுத்தையும் ஒண்ணுமில்லாம அள்ளிப் போட்டுக் குத்திட்டுப் போயிட்டே இருப்பேம்! நாம்ம வெச்சிருக்குற நகைநட்டுல ஒரு குண்டுமணி தங்கத்தெ கூட கொடுக்க மாட்டேம். வூட்ட வுட்டு கெளம்பி போயிட்டே இருப்பேம். நீயும் அவளும் அந்தக் கொழந்தைய வெச்சிக்கிட்டு நடுரோட்டுலத்தாம் நிக்கணும் பாத்துக்கோ. நாம்ம ஒண்ணும் வெவரம் கெட்ட தனமா அவளெ கட்டி வெச்சிப்புட்டேம்னு நெனைக்காதே. இப்பிடில்லாம் நடந்தா ன்னத்தா செய்யுறதுன்னு முங்கூட்டியே யோஜனய பண்ணி வெச்சிக்கிட்டுத்தாம் பண்ணேம். இப்போ நடந்துடுச்சுல்ல. இம்மாம் நாம்ம சொல்லியும் மீறி அவளெ உள்ள கூப்புட்டேன்னு வெச்சுக்கோ நடுராத்திரி தூங்கிட்டு இருக்குறப்போ எல்லாத்தோட கழுத்தையும் நெரிச்சிக் கொன்னுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேம்! இன்னிக்கு நம்மட வாழ்க்கையே போச்ச. எவ்வே உசுரு இருந்தா நமக்கென்ன, யில்லாட்டி நமக்கென்ன?" அப்பிடினுச்சுப் பாருங்க கோகிலா மாமி, அதுல வீயெம் மாமாவுக்கு முழி பெரண்டுப் போச்சு.
            வெளியில நின்னுகிட்டு இருந்த லட்சுமி மாமி, "என்னங்கே! என்னங்கே!"ன்னு நிமிஷத்துக்கு ஒரு மொறைக் கொரலைக் கொடுத்துக்கிட்டே இருந்துச்சு.
            ஒரு பத்து நிமிஷத்துக்கு மேல ஆயிருக்கும். பெறவுதாம் உள்ள போன வீயெம் மாமா வெளியில வந்துச்சு. நம்மள கூப்புடத்தாம் வர்றதா நெனைச்சுச்சு லட்சுமி மாமி. என்னத்த இருந்தாலும் அவரும் மனுஷம்தானே! மொத பொண்டாட்டிய வுட்டுக் கொடுக்க மனசு வாரதுதாம். அதாங் உள்ளப் போயி சமாதானத்தப் பண்ணிப்புட்டு நம்மளயும் வெளியில வந்து கூப்புட்டு சமாதானத்தப் பண்ணி வெச்சிப்புடலாமுன்னு நெனைக்குறாரு போலருக்குன்னு நெனைச்சிக்கிடுச்சு லட்சுமி மாமி. நாம்மள உள்ளாரக் கூப்புட்டா நாம்ம வெவகாரம் எதையும் பண்ணாம, சொன்னதுக்கு எல்லாம் அடங்கி நடக்குறதா சொல்லிப்புட்டு, கால்ல வுழுவச் சொன்னாலும் வுழுந்துப்புட்டு இனுமே ஒத்த வார்த்தைக் கூட பேயாம இருந்துப்புடணும்னு முடிவையும் பண்ணிக்கிடுச்சு லட்சுமி மாமி. இந்த நெலையில இப்பிடி ஒரு கொழந்தையப் பெத்துக்கிட்டுப் பொறந்து வூட்டுக்குப் போனா அதெ தாங்குற மனசு அப்பங்காரருக்கு இருக்கணுமேன்னு அது வேற ஒரு யோசனையா அதுக்கு ஓடுச்சு.
            வெளியில வந்த வீயெம் மாமா வேலிப்படல ஒரு பார்வை பாத்துச்சு. கெழக்காலயும், மேக்காலயும் தெருவ ஒரு பார்வைப் பாத்துச்சு. உள்ளார நம்மள கூப்புடப் போவுதுன்னு லட்சுமி மாமி ரொம்ப ஆசைய வீயெம் மாமாவோட மொகத்தப் பாத்துச்சு. காலையிலயும் சரியா சாப்புடாம, மதியானமும் சாப்புடாம வேலிப்படலோராமாவே கெடந்ததுல அதோட ஒடம்பு மொகம் எல்லாமும் வாடிப் போயிருந்துச்சு. கொழந்தை அதுக்கு மேல தொவண்டுப் போயி அது மேல கெடந்துச்சு. அதெ பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. வீயெம் மாமாவுக்கு எப்பிடி இருந்துச்சோ தெரியல. ஒடனே உள்ளாரப் போயி படார்ன்னு கதவெ அடைச்சிச் சாத்துனுச்சுப் பாருங்க, லட்சுமி மாமிக்கு ச்சீன்னு போயிடுச்சு மனசுக்குள்ள. அதுக்கு இப்ப மேலுக்கு மேல அழுகை அழுகையா வந்திச்சு. அதால அழுகைய நிப்பாட்டிக்க முடியல. அது அழுவுற ஒவ்வொரு சொட்டு கண்ணுத் தண்ணியும் புள்ள மேல வுழுந்த அதோட ஒடம்ப நனைக்குது. "நாட்டுல இப்பிடியும் மனுஷங்க இருப்பாங்களா? நம்மட வவுறு எரியுது? எரியுற நம்மட வவுத்தப் போல இவ்வேம் குடும்பமும் எரிஞ்சி சாம்பலாவும்!"ன்னு சொல்லி ஒரு கையால கொழந்தையப் பிடிச்சிக்கிட்டு, மறுகையால குனிஞ்சி மண்ணை அள்ளி வாரி வீசுனுச்சு.
            வூட்டுக்குள்ள உள்ளார வந்த வீயெம் மாமா கோகிலா மாமியப் பாத்துப் பேசுனுச்சு, "ஏட்டி! இந்தாருடி பாவம்டி! ஒத்தையா கெடந்தவளெ மனசெக் கெடுத்து கட்டிக்கிட்டுக் கொண்டாந்தாச்சு. இப்போ இன்னொரு கொழந்தையாவும் ஆயிடுச்சு. பொம்பள வவுறு எரிஞ்சா அத்து நல்லதுக்கில்லடி! நாம்மப் போயி கூப்புட மாட்டேம்! நீந்தாம் போயி அவளெ கொண்டாரணும்!"
            "பொம்பள வவுறு எரிஞ்சா நல்லதில்லையோ! அப்போ நாம்ம பொம்பளெ யில்ல அப்பிடித்தான்னே! ராத்திரி ராத்திரி அவ்வே கூட படுத்துக் கெடந்து சொகத்தெ கண்டுப்புட்டே யில்லே! நீயி அப்பிடித்தாம் பேசுவே! போ! போ! அவளெ அழைச்சிக்கிட்டு நடுரோட்டுலயே படுத்துக்கோ! ஒன்னயப் பொட்டப் பயலேன்னு ஊரே பேசுனப்போ ஒம்மட பக்கம் நின்னவேம்யா நாம்ம! இன்னிக்கு ஒரு கொழந்தையப் பெத்துப் போட்டுட்டா அவ்வே ஒமக்கு பெரிசா போயிட்டா யில்லே! நாமளும் வவுறு எரிஞ்சா நீயி வெளங்க மாட்டே. ஒந் தலைமொறையே வெளங்காது பாத்துக்கோ! போயிக் கூப்புட்டு வாரணும்லா அப்போ  கூப்புட்டு! ஆன்னா, நீயி இனுமே வெளியில கால வெச்சாலும் சரித்தாம்! நம்மள வெளியில கால வைக்கச் சொன்னாலும் சரித்தாம்! சொத்துல ஒரு பருக்கைய அனுபவிக்க வுடாம நடுத்தெருவுல நின்னு சிங்கி அடிக்கிறாப்புல வுட்டுப்புடுவேம்!"ன்னுச்சு கோகிலா மாமி. அது பேசுறதெப் பாத்துப் பாத்து அரண்டு போயிடுச்சு வீயெம் மாமா.
            "யய்யோ யய்யோ!"ன்னு தலையில அடிச்சிக்கிடுச்சு வீயெம் மாமா. "பச்ச மண்ணுடி! அந்தக் கொழந்தையோட மொகத்துக்காவது கொஞ்சம் யோஜனெ பண்ணுடி!"ன்னு படக்குன்னு கோகிலா மாமி கால்ல விழுந்துச்சு பாருங்க வீயெம் மாமா.
            "ன்னா எங் கால்ல வுழுந்து நாம்மள பாவம் பண்ணவளா ஆக்கப் பாக்கறே யில்லே! பண்றதையெல்லாம் பண்ணிப்புட்டு, நடுராத்திரி அவ்வே ஓதுன தலையண மந்திரத்துக்கு தலைய ஆட்டிப்புட்டு, இப்போ ரண்டு பேருமா சேந்து நாடகமா போடுறீயே! வாரப்பவே பேசி வெச்சிட்டுத்தான வந்தே! நாம்ம உள்ளார போயி இப்பிடியிப்பிடிப் பண்ணுவேம். நீயி பாவப்பட்டவே போல மொகத்த தூக்கி வெச்சிக்கிட்டுக் கூப்புடுறப்ப உள்ள வந்துடுன்னு! ஒம்மட ஒலக மகா நடிப்புல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நெனைச்சியா?" அப்பிடின்னுச்சு அதுக்குக் கோகிலா மாமி.
            வீயெம் மாமா இப்போ கோகிலா மாமியோட காலைப் பிடிச்சிக் கதறுனுச்சு, "நமக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போலருக்குடி. ஒடம்பே அறுந்து வுழுந்துடுப் போலருக்குடி. ஒடம்பெல்லாம் ஒரு மாதிரியா ஆவுதே. வாய மூடுடி. ராட்சசீ!" அப்பிடினுச்சுப் பாருங்க, கோகிலா மாமி அப்பிடியே வீயெம் மாமாவ காலல ஒரு எத்து எத்தி வுட்டு அந்தாண்ட தள்ளி வுட்டுச்சு. வீயெம் மாமாவுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்திடுச்சு. எழுந்து பக்கத்துல கெடந்த சாமாஞ் செட்டுகள, பாத்திரத்தெ தூக்கி படார் படார்ன்னு அங்கயும் இங்கயும் தூக்கி அடிச்சிடுச்சு. வூட்டுக்குள்ள ஒரே சத்தமா இருக்கு. ஆனா, ஒண்ணுத்த கூட கோகிலா மாமி மேல தூக்கி அடிக்கல. அத்து செய்யுறதப் பாத்து சிரிச்சிக்கிடுச்சு கோகிலா மாமி. சிரிச்சிக்கிட்டே கோகிலா மாமி சொன்னிச்சு, "செரி! ரொம்ப ஆட்டத்தெப் போடாதே! போயி அவளெ வாரச் சொல்லு! வந்து நமக்கு அடிமை மாதிரி இருக்கச் சம்மதம்ன்னா வாரச் சொல்லு! நாம்ம சொல்றதுதாங் இஞ்ஞ சட்டம்! அதெ மீறி நீயும் நடக்கக் கூடாது. அவளும் நடக்கக் கூடாது. நடந்தா வூட்டெ வுட்டு வெளியில தள்ள நமக்கு நிமிஷ நேரம் ஆவாது!"ன்னுச்சு.
            வீயெம் மாமா சாமானுங்கள தூக்கி வீசுறதெ வுட்டுப்புட்டு வெளியில கதவெ தொறந்து வேலிப்படலோரமா பாத்துச்சு. அங்க லட்சுமி மாமியக் காணும். வேகமா வெளியில ஓடியாந்து அங்க இங்கன்னு விசாரிச்சா, ஆறரைக்குப் போற எட்டாம் நம்பரு பஸ்ல ஏறி லட்சுமி மாமி கொழந்தையோட போயிட்டாதா சொல்றாங்க தெருவுல நிக்குறவங்க.
*****


30 Mar 2020

சக்களத்திச் சண்டை!

செய்யு - 403        

            எட்டுக்குடி முருகன் கோயில்ல வீயெம் மாமாவுக்கு லட்சுமியோட ரெண்டாவது கலியாணம் நடந்த பத்தாவது மாசத்துலயே அழகான பொண் கொழந்தை பொறந்திச்சு. கொழந்தை பொறக்குற வரைக்கும் கோகிலா மாமியும், லட்சுமி மாமியும் அக்காவும் தங்காச்சியுமாத்தாம் இருந்திச்சுங்க. ஓருயிரு ரெண்டு ஒடம்பு போல அப்பிடி ஒரு நெருக்கம் ரெண்டு பேருக்கும் உள்ளார.
            கொழந்தை பொறந்ததுக்குப் பின்னாடித்தாம் எல்லாம் மாற ஆரம்பிச்சது. கோகிலா மாமி கொழந்தைக்கு எப்போ பால் கொடுக்கணும், கொழந்தைக்கு எதையெதைச் சாப்புட கொடுக்கணும், லட்சுமி என்னென்னத்த சாப்புடணும்னு கண்டிஷன் போட ஆரம்பிச்சப் பெறவு ரெண்டு பேருக்கும் லேசா மனத்தாங்கல் உண்டாவ ஆரம்பிச்சிடுச்சு.
            "ஒரு கொழந்தைய எப்படிப் பாத்துக்கணும்னு ஒரு புள்ளையப் பெத்த நமக்குத் தெரியுமா? மலட்டுச் சிறுக்கியா கெடந்தவளுக்குத் தெரியுமா?"ன்னுலட்சுமிக்குக் கோவம்னா கோவம். அதெ வெளியில சொல்ல முடியல. இருந்தாலும் ஒரு குடும்பம்னு ஆச்சேன்னு பொறுத்துக்கிட்டுக் கெடந்துச்சு.
            நாளாவ நாளாவ கோகிலா மாமியோட கண்டிஷன்க அதிகமா ஆரம்பிச்சதும் லட்சுமி மாமிக்கு வெறுத்துப் போச்சு. அத்தோட கோகிலா மாமி கொழந்தைய அந்தாண்ட இந்தாண்ட கூட விடறதுல்ல. லட்சுமி மாமி ஆசையாத் தூக்கிக் கொஞ்சணும்னாலும், பசிக்கு பாலைக் கொடுக்கணும்னாலும் அதுக்குக் கோகிலா மாமியோட அனுமதிய வாங்கிட்டுத்தாம் கொஞ்சணும், பாலு கொடுக்கணுங்ற நெலமை உண்டானப் பிற்பாடுதாம் லட்சுமி மாமிக்கு அறவே வெறுத்துப் போச்சு. "கொழந்தையப் பெத்தவளுக்கு எப்பிடிப் பாத்துக்கிறதுன்னு தெரியாதாக்கா?"ன்னு எதார்த்தமா அது ஒரு நாளு கேக்கப் போவ, கோகிலா மாமி பிடுச்சிக்கிடுச்சு, "அப்ப நாம்ம கொழந்தையப் பெக்காதவ! மலடின்னுத்தான்னே சுட்டிக் காட்டுறே!"ன்னு லாவணிய ஆரம்பிச்சிடுச்சு.
            எல்லாம் பேச்சுத்தாம். பேச்சுலேந்துதாம் எல்லா சண்டையும் உண்டாவுது. சில சண்டைக பேச்சோடு ஆரம்பிச்சு பேச்சோட முடிஞ்சிப் போறது உண்டு. சில சண்டை பேச்சுல ஆரம்பிச்சி சாமாதானமா ஆயிடுறதும் உண்டு. சில சண்டை இருக்கே, பேச்சுல ஆரம்பிச்சி ரத்தம் பாக்குற அளவுக்கு வந்துப்புடும். அதால சாதாராண வாய்ச் சண்டைன்னுல்லாம் எந்தச் சண்டையையும் நெனைச்சிப்புட முடியாது. எந்தச் சண்டையில என்ன நடக்கும்றது நடந்து முடிஞ்சப் பிற்பாடுதாம் தெரியும்.
            இப்பிடித் தெரியாத்தனமா பேசி மாட்டிக்கிட்டோமேன்னு லட்சுமி நெனைச்சு சங்கடபடுறதுக்குள்ளயே, கோகிலா மாமி வுடாம ரவுண்டு கட்டி பேச ஆரம்பிச்சிடுச்சு. "நாம்ம இல்லன்னா நீயி எஞ்ஞ வந்து குடும்பத்தெ நடத்துறது? நமக்கொரு தங்காச்சி இருந்திருந்தா கூட இந்த அளவுக்குப் பாத்திருக்க மாட்டேனே! அந்த அளவுக்குப் பாத்துக்கிட்டேனே! நாயப் பிடிச்சிக் குளிப்பாட்டி நடு வூட்டுல பாயைப் போட்டு உக்கார ‍வெச்சாலும் அத்து வாலைச் சுருட்டிக்கிட்டுப் போற எடத்துக்குத்தானே போவும்பாங்களே! அப்பிடி நன்றிக்கெட்ட நாய்யா போயிட்டாளே! என்னத்தெ இருந்தாலும் ஒரு வயித்துல பொறந்தவ மாரி வருமா? எவ்வளோ ஒருத்தி வயித்துல பொறந்தவதானே! பாம்புக்கு பாலூட்டி வளத்தா அத்து பவ்வியமா இருக்கும்? படத்தெ எடுத்துக்கிட்டுச் சீறத்தானே செய்யும். நன்றி கெட்ட சென்மம். புத்தியக் காட்டுது. எஞ் செருப்பெ எடுத்து எந் தலையிலயே அடிச்சிக்கணும். அந்த மனுஷன் அப்பவே சொன்னாரு, இன்னொரு கலியாணம்லாம் வாணாம். ஒரு கொழந்தைய தத்து எடுத்துக்கிடலாம்னு. நாந்தாம் கேக்கல. ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையக் கொடுத்த மாதிரிக்கி இருக்கும்னு நெனைச்சு செஞ்சா, அந்த ஒண்ட வந்த பிடாரி இப்போ ஊரு பிடாரிய வெரட்டிப்புடும் போலருக்கே!"ன்னு பெரிய பெலாக்கணத்தெ வைக்க ஆரம்பிச்சிடுச்சு.
            "யக்கா! தப்பா நெனைச்சுக்காதீங்க! நீஞ்ஞ நமக்குத் தெய்வம். வாழ்க்கெ தந்த தெய்வம். நீஞ்ஞ அப்பிடில்லாம் பேயக் கூடாது. நீஞ்ஞ வவுறு எரிஞ்சா நாம்ம ந்நல்லா இருக்க முடியா! தப்பா பேசிருந்தா, நடந்திருந்தா மன்னிச்சுக்கோங்க யக்கா!" அப்பிடின்னு இப்போ லட்சுமி சமாதானத்துக்குத்தாம் வந்திருக்கு.
            கோகிலா மாமிக்கு ஆத்திரம் அடங்கல போலருக்கு. "பண்றதையும் பண்ணிப்புட்டு மன்னிப்புன்னா எப்பூடிடி? ந்நல்லாத்தாம்டி கெளம்புறீயோ இந்தக் காலத்துப் பொம்பளையோ! இப்பிடியே நீயி பண்றதெல்லாம் பண்ணிப்புட்டு மன்னிச்சுக்கோ மன்னிச்சுக்கோன்னு சொல்லுவே! நாம்ம வெக்கங் கெட்டுப் போயி நீயி பண்றதையெல்லாம், பேசுறதையெல்லாம் மன்னிச்சிக்கிட்டே இருக்கணும். ந்நல்லா வெவரமாத்தாம்டி இருக்கீயே! அதாங் ஒரு கொழந்தெ போறந்திடுச்சே! இனுமே புருஷங்கார்ரேம் நம்மகிட்டதான படுப்பாம். அவ்வேகிட்டே எஞ்ஞ படுக்கப் போறாம்ங்ற தெனாவெட்டுல கொழுப்பெடுத்து பண்றதுடி இத்து! நமக்கு ன்னா தெரியாதுன்னு நெனைச்சுப்புட்டீயா தேவிடியா சிறுக்கி!"ன்னு சொன்னுச்சுப் பாருங்க கோகிலா மாமி, அந்த எடத்துலத்தாம் லட்சுமி மாமிக்கு அடங்குன கோவம் திரும்பவும் வந்துப்புடுச்சு.
            "யார்ரப் பாத்து தேவிடியா சிறுக்கிங்றீயே?" அப்பிடின்னு கேட்டுச்சு லட்சுமி மாமி.
            "ஒன்னயப் பாத்துதாம்டி! நீயி தேவிடியா சிறுக்கித்தான்னே. ஒருத்தனுக்கா நீயி முந்தானெ விரிச்சே! ஒங்க அப்பம் பாத்துக் கட்டி வெச்சான்னு ஒருத்தனுக்கு முந்தி விரிச்சே. நீயி அதுக்குப் பெறவு எவ்வேம்கிட்டேயெல்லாம் முந்தி விரிச்சியோ. அதெப் பாத்து அவ்வேம் போயிச் சேந்துட்டாம். பெறவு எம் புருஷன மயக்கி அவனுக்கு முந்தி விரிச்சே. எம் புருஷனுக்கு முந்தி விரிச்சிக்கிட்டெ எத்தனெ பேருக்கு முந்தி விரிச்சியோ! பொறந்துருக்குற இந்தக் கொழந்தெ எம் புருஷனுக்குப் பொறந்ததோ? எவனுக்குப் பொறந்ததோ? யாருக்குத் தெரியும்?" அப்பிடின்னு தாறுமாறா கோகிலா மாமி பேச ஆரம்பிக்க, லட்சுமி மாமிக்கு ஒடம்பு வெட்டி வெட்டி இழுக்குறாப்புல ஆயிடுச்சு. அதெப் பாத்தும், "ச்சும்மா நடிக்காதடி! இப்பிடி நடிச்சா ஊருல இருக்குறவ்வேம்லாம் ஒன்னய பத்தினின்னு நெனைச்சிடப் போறாம்னு நெனைச்சீயா? செரித்தாம் போவீயா?"ன்னுச்சு கோகிலா மாமி.
            "எத்தனெ பேருக்கு முந்தானெ விரிச்சதெ நீயிப் பாத்தே? பொய்யிப் பொய்யா சொல்லாதடி. நாக்கு அழுவிடும்."ன்னு கம்முன குரல்ல கத்தினுச்சு லட்சுமி மாமி.

            "யாரு பாத்துடி வாடி, போடிங்றே எடுபட்ட நாயே! குச்சிக்காரிச் சிறுக்கிய கொண்டாந்து வூட்டுல குத்த வெச்சேம்ல! நமக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். இப்பவே ஒங் கொண்டைய அறுத்து மசுரை அந்தாண்ட எறிஞ்சாத்தாம்டி ஆத்திரம் அடங்கும்!"ன்னு கோகிலா மாமி லட்சுமி மாமியே மயிரைப் பிடிச்சு ஒடம்ப ரெண்டு சுத்து சுத்தி முதுகுல ஓங்கி ஒரு குத்துப் போட்டுச்சுப் பாருங்க. அப்படியே குப்புற வுழுந்திடுச்சு லட்சுமி மாமி. அதெ அப்பிடியே மசுரோட பிடிச்சி தரதரன்னு வெளியில தள்ளி திண்ணையிலேந்து பரபரன்னு இழுத்துக்கிட்டு நடுரோட்டுல போட்டுச்சு கோகிலா மாமி. கோகிலா மாமி இருக்குற பேரல் போல ஒடம்புக்கு, கச்சலா இருக்குற லட்சுமி மாமியால முதுகுல வுழுந்த குத்தையும் தாங்க முடியல, பரபரன்னு போட்டு இழுத்துக்கிட்டுப் போறதையும் தடுக்க முடியல. அதுவும் கொழந்தையப் பெத்து மூணு மாசக்காலம் கூட முடியாதப்ப அப்பிடி ஒரு குத்தை முதுகுல வாங்குனா எப்பிடி இருக்கும்? லட்சுமி மாமிக்கு உசுரு போறாப்புல வலி தாங்க முடியல. தரையில போட்டு தரதரன்னு தலைமுடியப் பிடிச்சு இழுத்தா எப்பிடி இருக்கும்? ஒடம்பெல்லாம் சிராய்ச்சிப் போயி தோலெல்லாம் தேய்ஞ்சிப் போயி ரத்தம் எட்டிப் பாக்க ஆரம்பிச்சிடுச்சு. எல்லாம் கண்ணிமைக்கிற நேரம், சொடக்குப் போடற நேரம்ன்னு சொல்லுவாங்க யில்லே. அந்த நேரத்துக்குள்ள சட் சட்டுன்னு நடந்துச்சுப் பாருங்க. நடக்குற கண்ணால பாத்து வெளங்கிக்கிறதுக்கு அந்த நேரம் பத்தாதுங்ற நேரத்துல நடந்து முடிஞ்சிடுச்சு எல்லாம்.
            அந்த வலியில ஒண்ணும் எதுத்துப் பண்ண முடியாத ஏக்கத்துல அதுவும் பேசுனுச்சு. "போடி! மலட்டுக் கூதி! அன்னிக்கு என்னவோ எம் வூட்டுக்கு வந்து கண்ணுக்குள்ளயே நம்மட மொகம் நிக்குறதா கையிலயும் கால்லயும் வுழுந்து ஒம் புருஷனுக்குக் கட்டி வெச்சுப்புட்டு, இன்னிக்கு என்னமா நாடகம் நடிக்கிறே? ஏம் ஒம்மட வவுத்துல ஒரு புழு பூச்சி வைக்கலன்னு இப்பத்தான தெரியுது? வவுத்துல ஒரு புழு பூச்சி வைக்காதப்பவே இந்த ஆட்டம் ஆடுறீயே! ஒரு கொழந்தை மட்டும் ஒனக்குப் பொறந்திருந்தா இந்தப் பூமி தாங்குமா?அந்த ஆகாசம் தாங்குமா? ஆட்டுக்கு வால அளந்துதாம்படி வைப்பாம் ஆண்டவேம்! ஒனக்குல்லாம் ஒண்ணும் பொறக்காதுங்றதை ஒம் பொறப்புலயே எழுதிட்டாம் ஆண்டவேம்!"ன்னு லட்சுமி மாமி சொன்னதும் கோகிலா மாமி குப்புற வுழுந்து கெடந்த லட்சுமி மாமிய சாணியப் போட்டு மிதிக்கிறாப்புல போட்டு மிதிச்சுச்சு.
            அது வரைக்கும் வேடிக்கைப் பாத்துட்டு இருந்த சனங்க, நெலமை விபரீதமா ஆயிடுமோன்னு பயந்துப் போயி கோகிலா மாமிய அந்தாண்ட வெலக்கி விட்டு, லட்சுமி மாமிய தூக்கி உக்கார வெச்சு முதுகெ பிடிச்சித் தடவிக் கொடுத்து, குடிக்க தண்ணிய கொடுத்து ரோட்டோரமா உக்கார வெச்சதுங்க. கோகிலா மாமியா பிடிச்சுக் கொண்டு போயி வூட்டுக்குள்ள உக்கார வெச்சதுங்க. இவ்வளவையும் பக்கத்து வூட்டுல இருந்த குமரு மாமாவோட பொண்டாட்டியான மேகலா மாமி சன்னலைத் தொறந்து வெச்சுக்கிட்டு வேடிக்கைப் பாத்துச்சு, ஓடியாந்து தடுக்கல.
            கொஞ்ச நேரமானதும் சனங்க லட்சுமி மாமிய கொண்டு போயி திண்ணையில உக்கார வெச்சு, கோகிலா மாமிய அசமடக்குறாப்புல, "ஏந் தாயீ! வயசுல மூத்தவெ! இவ்வே சின்னவே! ஒரு தப்பே பண்ணிருந்தாலும் பச்ச ஒடம்புக்காரியல்லோ! இப்பிடியா போட்டு அடிச்சி தரதரன்னு இழுத்து ஒடம்பெல்லாம் ரத்தம் தாங்கல! நீதான்னே தாயீ பாத்துக்கிடணும்!" அப்பிடின்னு சுத்தி நின்ன சனங்க சமாதானம் பேசி வுட்டதுங்க. ஆனா கோகிலா மாமி கேக்கணுமே! "என்னைக்கி அந்த எடுபட்ட சிறுக்கி நம்மள எதுத்துப் பேசுனாளோ! அன்னிலேந்து இந்த வூட்டுல அவளுக்கு வேல யில்ல. எம் புருஷங்கார்ரேம் வரட்டும். இன்னிக்கு இந்த வூட்டுல அவ்வே இருக்குறதா? யில்ல நாம்ம இருக்குறதான்னு முடிவெ பண்ணிடுறேம்!" அப்பிடின்னுச்சு கோகிலா மாமி.
            "தாயீ! ஆத்திரத்துல பேசாதடிம்மா ஆயீ! ஆத்திரத்துல வார்த்தைய வுட்டுப்புட்டா பெறவு அதெ சரிபண்ணல்லாம் முடியாது. இதாங் தாயீ! ஒம்மட வூட்டுக் கொல வெளக்கு. கொஞ்சம் நெதானிச்சிப் பேசு தாயீ! நடந்தது நடந்துப் போச்சு. கொஞ்சம் பாத்து பக்குவமா நடந்துக்கோ தாயீ! இப்பத்தாம் கொலம் தழைக்குது. மொளையிலயே கிள்ளி எறிஞ்சிப்புடாத தாயீ!"ன்னு சுத்தி நின்ன சனங்களும் எந்தப் பக்கமும் பாதிச்சிடக் கூடாதுன்னு பதனமாத்தாம பேசுனுச்சுங்க. கோகிலா மாமியோட கொணததுக்குக் கேக்கணுமே! அதாங் பெரச்சனையாயிடுச்சு.
            "இனுமே இந்த வூட்டுல அவளுக்கு எடமில்லே! அவளெ மொதல்ல திண்ணைய வுட்டு எறங்கி ஓடச் சொல்லுங்கடி! நம்மட வூட்டுத் திண்ணையில உக்காந்து யாருக்குடி பஞ்சாயத்து வைக்குறீங்க? செருப்பால அடிப்பேம்! வெளக்குமாத்துப் பிஞ்சிடும் பாருங்கடி!"ன்னு கோகிலா மாமி பேசுனதும் சுத்தி வெளியில நின்ன சனங்களுக்கு பக்குன்னு ஆயிடுச்சு. வாயால இப்பிடிச் சொன்னவே சொன்னதெ அப்பிடியே கையால செய்யுறதுக்கு எம்மாம் நேரமாவுன்னு அததும் பயந்துப் போயி திண்ணைய விட்டு வெளியில வர ஆரம்பிச்சதுங்க. அப்பத்தாம் லட்சுமி மாமி கேட்டுச்சு, "நாம்ம வூட்ட வுட்டு வெளியில போவணும்னா நாம்ம பெத்த கொழந்தெ மட்டும் ஏம் அஞ்ஞ இருக்கணும். கொண்டாந்து கொடுத்துப்புட்டா நாம்ம வூட்டெ வுட்டு வெளியில போயிடுறேம்!" அப்பிடின்னு சொன்னிச்சு.
            கொழந்தைய ஞாபவத்துக்குக் கொண்டாந்தா ஒரு வேளை கோகிலா மாமியோட மனசு மாறலாம்ங்ற நப்ப ஆசை அப்ப வரைக்கும் அவ்வளவு ரணப்பட்டும் லட்சுமி மாமிக்கு இருக்கத்தாம் செஞ்சுது. கோகிலா மாமி அப்பிடிச் செய்யும்னு லட்சுமி நெனைக்கல, வேகமா தொட்டியில தூங்கிக்கிட்டுக் கெடந்த கொழந்தையத் தூக்கி எடுத்துக்கிட்டு வந்து லட்சுமி மாமி மேல பொதக்கடின்னு போட்டுச்சுப் பாருங்க, சுத்தி நின்ன சனமெல்லாம், "ராட்சசி!"ன்னு சொல்லிப்புட்டு வாயை மூடிக்கிட்டுங்க. கொழந்தை வீல்ன்னு கத்த ஆரம்பிச்சிடுச்சு. சத்தம்னா சத்தம் ஏழு ஊரு கேக்குறாப்புல கீச்சுக் கொரல்ல கொழந்தை அழுவுது.
            "அதாங் கொழந்தையத் தூக்கிப் போட்டுட்டேம்ல! தூக்கிக்கிட்டு வெளியில கெளம்பிடணும்! சொத்துல உப்புப் போட்டுத் திங்குற ரோஷம் இருந்தா வெளியில கெளம்பிடணும். பெலாக்கணம் வெச்சிட்டு நிக்கக் கூடாது."ன்னுச்சு கோகிலா மாமி.
            லட்சுமி மாமி ஒண்ணும் சொல்லாம அழுவுற கொழந்தைய அச மடக்க முடியாம அதெ தூக்கிக்கிட்டு வெளியில வந்து வேலியோரமா தொறப்புப் படலுக்குப் பக்கமா உக்காந்திடுச்சு. கொழந்தை அழுதுகிட்டே இருந்துச்சு. வேலியோரம், தெருவுன்னு எதையும் பாக்காம லட்சுமி மாமி கொழந்தைக்குப் பாலைக் கொடுக்க ஆரம்பிச்சதும்தாம் கொழந்தை அழுவுறத நிறுத்தினுச்சு.
            "கொழந்தையத் தூக்கிக் கொடுத்துப்புட்டா போறேம்ன்னவே மொலைய தொறந்துக் காட்டி கூட்டத்தெ சேக்குறாளாக்கும்! ஏம்டா எடுபட்ட பயலுகளா மொலையப் பாக்கணும்னா போயி ஒம்மட பொண்டாட்டிகளோடத பாக்க வேண்டியத்தானடா! இஞ்ஞ எதுக்குடா இந்தத் தேவிடியாளோட மொலையப் பாத்துட்டு உக்காந்திருக்கீங்க?"ன்னு வுட்டுச்சுப் பாருங்க. சுத்தி நின்ன பொம்பள சனம் உட்பட அதது பாட்டுக்குத் தெறிச்சி ஓடிடுச்சுங்க. இதுக்கு மேல இங்க நின்னா இவ்வே வாயிலேந்து என்னென்ன பொறப்பட்டு வரும்ங்ற பயம் சுத்தி நின்ன அத்தனை சனங்களுக்கும் வந்திடுச்சுப் போலருக்கு. வேலிப் படலோரமா இப்போ ரணமான ஒடம்போட, பாலைக் குடிச்சிக்கிட்டு இருக்குற பச்சைக் கொழந்தையோட லட்சுமி உக்காந்திருக்கு. இந்தச் சம்பவம் நடக்குற வரைக்கும் அதுக்கு ஒரு வூடுன்னு இருந்தது போலவும், இப்போ எதுவுமே இல்லங்ற மாதிரியும் அத்து உக்காந்திருக்கிறதெப் பாக்குறப்ப ரொம்ப பரிதாபமாத்தாம் இருக்கு.
*****


29 Mar 2020

இப்படித்தாம் எப்பவும்!

செய்யு - 402        

            கணக்குப் பாக்குறது அறவே விகடுவுக்குப் பிடிக்கிறதில்லே. அதுல ஒரு வெறுப்பு அவனுக்கு வந்துப் போச்சு. புரோக்கிங் ஆபீஸ்லயும் கணக்குப் பாக்குறதுங்றது கெடையாது. எல்லாத்தையும் கம்ப்யூட்டரு பைசா துல்லியமா கணக்குப் போட்டுக் காட்டிடும். கூட்டிக் கழிக்கிறதுல கொஞ்சம் அலுப்புப் படுற ஆளு அவன். எட்டு ரூவா செலவ பத்து ரூவான்னு எழுதுவாம். அதே போல பன்னெண்டு ரூவா செலவையும் பத்து ரூவான்னுத்தாம் எழுதுவாம். ஒரு நம்பரெ முழுசாக்கிப்புட்டா கூட்டுறதும், கழிக்குறதும் எளிதுங்றதால இப்பிடி ஒரு வேலையச் செய்வாம் விகடு. பள்ளியோடத்து வரவு செலவு கணக்கையும் அவனுக்குச் சுப்பு வாத்தியாருதாம் எழுதிக் கொடுத்தாவணும். இன்னின்ன வரவு, செலவுன்னு வாயிக் கணக்கா சொல்றவனுக்கு அதெ எழுதுறதுன்னா மொகம் கோணிக்கிட்டுப் போயிடும். அதெ போல காசிய வெச்சிக்கிட்டு, அதெ எடுத்துக் கொடுத்துட்டு, கணக்கு வெச்சிக்கிறதுன்னா எரிஞ்சி எரிஞ்சி வுழுவாம். இதுக்குல்லாம் கணக்குபுள்ள மாதிரிக்கி ஒரு ஆளு அவ்வேம் பக்கத்துல இருந்துக்கணும்.
            கலியாணம் ஆவுறதுக்கு மின்னாடி புரோக்கிங் ஆபீஸ்ல வேலை பாத்த காலம் வரைக்கும் அம்மாக்காரி வெங்குகிட்டெ சம்பளப் பணத்தைக் கொடுத்து அது அப்பங்காரரான சுப்பு வாத்தியாரு கையில போயிட்டு இருந்தது. வாத்தியாரு வேலைக்கு வந்த பிற்பாடு அப்பங்காரருக்கும் மவனுக்கும் கொஞ்சம் இளக்கம் வந்த பிற்பாடு சம்பளப் பணத்தை அப்பங்காரரு கையில கொடுத்துடுவாம். எதாச்சிம் பணம் தேவைன்னா ஆயிரம் ஐநூத்துன்னு கையில வாங்கிக்குவாம். அதெ அப்பங்காரர்கிட்ட நேரடியா கேக்குறது இல்ல. அம்மாக்காரிக்கிட்ட சொன்னா அத்து வாங்கி வெச்சு அத்தோட கையால அவங் கையிக்கு வரும். அது செலவாச்சிடுன்னா திரும்ப ஒரு பத்து ரூவா தேவைன்னாலும், திரும்பவும் ஆயிரம் ஐநூத்துன்னுத்தாம் வாங்குவாம். பிசிறடிச்சாப்புல கையில காசை வாங்க மாட்டாம்.
            கலியாணத்துக்குப் பின்னாடி சம்பளப் பணத்துல ரெண்டாயிரத்தெ கையில எடுத்துக்கிட்டு மிச்சத்தெ அப்பங்காரர்கிட்டெ கொடுத்துடுவாம். அந்த ரெண்டாயிரத்தெயும் கையில வெச்சிக்காம ஆயி கையில கொடுத்துடுவாம். அதுதாங் அதெ பர்ஸ்ல வெச்சிக்கிட்டு இவ்வேம் வெளியில கெளம்புறப்ப, போறப்ப பணத்தெ கொடுத்தாவணும். ஏதோ ஒரு ஞாபவத்துல புருஷஙகார்ரேம் வெளியில போறதெ ஆயி கவனிக்கமா வுட்டுப்புட்டா, இவனும் பணம் பையில இல்லங்ற ஞாபவம் இல்லாமலே வெளியில போயிட்டுக் காசில்லாம திரும்பி வந்து, ஆயிகிட்டெ "வெளியில கெளம்புறப்ப ஞாபவமா காசிய எடுத்துக் கொடுக்குறதில்லையா?"ன்னு சத்தத்தெ போட்டு வாங்கிட்டுப் போவாம். "இந்தக் கருமத்தெ நாம்ம வெச்சிக்கிறதாலதான இந்தப் பெரச்சனெ. நீஞ்ஞளே வெச்சிக்கிட்டு வரவு செலவ பண்ணிக்க வேண்டித்தானே! இனுமே சத்தம் போட்டீங்கன்னா மூஞ்சுல தூக்கி எறிஞ்சிப்புடுவேம்!"ன்னு அவளும் பதிலுக்குச் சத்தம் வெச்சு அது காதுல விழறதுக்குள்ள வெளியில கெளம்பிடுவாம்.
            இதுல இன்னொரு வேடிக்கையும் நடக்கும். மாசத்துக்கு ரெண்டாயிரம் காசியக் கொடுத்துப்புட்டு மூவாயிரத்துக்கு மேல காசிய வாங்கியிருப்பாம் விகடு. அதெ சரியா கணக்குல வெச்சிருப்பா ஆயி. ரெண்டாயிரம் காசியக் கொடுத்தா அத்து ஒரு மாசத்துக்குள்ள மூவாயிரமா குட்டிப் போடுமான்னு கேட்டா, மிச்ச ஆயிரம் ரூவா காசிங்றது ஆயியோட சிறுவாடு காசியா இருக்கும். சொந்த பந்தங்கன்னு வூட்டுக்கு வாரவங்க கொடுக்குற காசி, அப்பங்காரரு வூட்டுக்குப் போயிட்டு வாரப்பா அவுங்க வூட்டுல கொடுக்கு நூத்து, எரநூத்து காசின்னு சேத்து வெச்சிருக்கிற காசியும் இப்பிடி ஒண்ணு சேர்ந்து விகடுவோட கையில வந்துடும். "சம்பாதிக்கிற காசிய பொண்டாட்டிக்காரிக்கிட்டெ கொடுக்குறதா பேரு பண்ணிக்கிட்டு எங்கிட்டெ இருக்குற சிறுவாட்டுக் காசியையும் சேத்துல்லா பிடுங்கிட்டுப் போயிடுறீங்க! இனுமே ஒங்க காசியோட சங்கநாத்தமே வாணாம். நீஞ்ஞளே காசிய வெச்சிக்கிட்டு நீஞ்ஞளே காசிய செலவு பண்ணிக்கிடுங்க! கையில ஒத்தக் காசிய தங்க வுடுறீங்களா? இதுல பெருமெ வேற கையில ஒத்தக் காசிய வெச்சிச் செலவு பண்றதில்லன்னு! கையில நாலு காசிய வெச்சு செலவு பண்ணத்தானே எவ்வளவு வரவாவுது? செலவாவுதுன்னு தெரியும்!"ன்னு சத்தத்தெ போடுவா.
            அத்து என்னவோ பொண்டாட்டிக்காரி என்னத்ததாம் சத்தத்தெ போட்டாலும் அத்து அவ்வேம் காதுக்கு ஒரைக்காது, மனசுக்கும் போவாது. "ஒரு மனுஷி சத்தம் போடுறாளேன்னு கொஞ்சமாவது ஒங்களுக்கு மருவாதி இருக்குதா?" அவளும் சத்தத்தெ போட்டுட்டுத்தாம் இருப்பா. அது காத்துக்குக் கேட்குது, விகடுவோட காதுக்குக் கேக்காது. இப்பிடி என்னத்தாம் சத்தத்தெ போட்டாலும், மளிகை சாமான் வாங்குறதுன்னாலும், வேற பெருஞ்சாமானா வூட்டுக்கு எதாச்சிம் வாங்குறதுன்னாலும் விகடுவோட ஒண்ணு சுப்பு வாத்தியாரு போயாவணும், இல்லேன்னா பொண்டாட்டிக்காரியான ஆயி போயாவணும். பணத்தெ எண்ணிக் கொடுக்குறதுல எதாச்சிம் தப்புப் பண்ணிடுவாம். அதால பணத்தெ கையில அவுங்கத்தாம் வெச்சிக்கிட்டு இவ்வேம் சொல்ற தொகையக் கொடுத்தாவணும். அப்பிடி ஒரு மனப்போக்குல இருக்குற ஆளு விகடு. அதால பணம் சம்பந்தமா எந்த வெதமான சங்கதிகளையும் தன்னோட கைப்பட வெச்சிக்க மாட்டாம் விகடு.
            கையில, கழுத்துல, வெரல்ல பொட்டுத் தங்கம் கெடையாது. அதெ போட்டுக்கிறதுன்னா அதுல ஒரு பயம் அவனுக்கு. அதுல மனசு தங்காது அவனுக்கு. அது பாட்டுக்கு எங்காச்சிம் கழண்டு வுழுந்தா அதுக்கு எவன் பதிலச் சொல்றதுன்னு யாரு எதெ போட்டாலும் அதெ கழட்டி மொதல்ல அம்மாரிக்கிட்டயோ, பொண்டாட்டிக்காரிகிட்டயோ கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாப்பாம். இப்பிடித்தாம் அவனுக்கு காது குத்துனப்போ போட்டிருந்த கடுக்கன மறுநாளே திருகாணி எங்கயோ கழண்டு விழ காணடிச்சிட்டாம். ஒத்தக் கடுக்கனோட வூடு வந்தவனெ வெங்கு திட்டுன திட்டுல, "இனுமே நகை நட்டுன்னு எதுவும் நமக்குப் போடக் கூடாது!"ன்னு பதிலுக்குத் திட்டிட்டுப் போட்டிருந்த ஒத்த கடுக்கனயும் தூக்கி எறிஞ்சாம். "இதென்னடா கூத்தா இருக்கு! கடுக்கன் காணாம போனதுக்கு நாம்ம கோவப்படுறதுல ஒரு அர்த்தம் இருக்கு. கடுக்கன காணாடிச்சிப்புட்டு இந்தப் பயெ படுற கோவத்துக்கு ன்னா அர்த்தம் இருக்கு? இப்பிடியே கோட்டித்தனமா பண்ணிட்டு இருக்குறதே வேலையா போச்சுன்னு!" வெங்கு சத்தத்தெ வெச்சு அடங்குனுச்சி. அதுலேந்து ஒரு பொட்டுத் தங்கத்த ஒடம்புல தங்க வுடுறது இல்ல அவ்வேன். கலியாணத்துல நகை நட்டுன்னு போட்டப்பவும் மொத வேலையா அதெ கழட்டிக் குடுக்குறதுன்னு நின்னு போட்டவங்க எல்லாத்தையும் வெறுப்பேத்திக்கிட்டு கெடந்தாம். "அவ்வேம் அப்பிடித்தாம் வுடுங்க!"ன்னு நக நட்டுன்னு செய்முறை செஞ்சவங்களை வெங்குத்தாம் அசமடக்கிக்கிட்டுக் கெடந்துச்சு வெங்கு.
            வாத்தியார்ரா இருக்கானேன்னு வட்டிக்கு பணத்தெ கொடுத்தா மாசா மாசத்துக்குச் சரியா கொடுத்துப்புடுவேம்னு இவனெ சைக்கிள நிறுத்தி நாலு பேரு கேட்டுப் பாத்தாங்க. சாதாரணமா பணத்தெ கொடுத்து வாங்குறதுலயே கூடயும் கொறைச்சலுமா தப்புத் தப்பா வாங்குற பய வட்டிக்குப் பணத்தெ கொடுத்து வாங்குறதுக்குக் கேட்டா சும்மா இருப்பானா! வந்தக் கோவத்துக்கு, "அதாங் பணம் கொடுக்குறதுக்கு, வாங்குறதுக்கு, கடனுக்கு, அடமானத்துக்கு, வட்டிக்கு, மானியத்துக்குன்னு பேங்கு இருக்குல்லா. அங்கப் போயி வாங்கிக்கிட வேண்டியதானே!" சத்தம் போட்டதுல பணம்னு இவ்வேம் பக்கம் ஒருத்தனும் வாரதில்லே. மொத்தத்துல பணம்ன்னா ‍அதெ வெச்சி வரவு செலவு பண்றது விகடுவுக்கு ஒத்துக்கிடாத விசயங்றது ஊரறிஞ்ச விசயம். ஊருல வரிப்பணம், கோயில் பணம்ன்னு வசூல்ன்னு வந்தாலும் இவனெ மதிச்சு ஒருத்தரும் எதையும் கேக்க மாட்டாங்க. இவ்வேன் வாசல்ல நின்னுகிட்டு இருந்தாலும் இவனெ ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டாங்க. என்னவோ வூட்டுல இருக்குற சின்னபயலே போல நெனைச்சிக்கிட்டு, "யம்பீ! அப்பாவ கூப்புடு! கோயில்லு வசூலுக்கு வந்திருக்கோம்!"ன்னு சொல்லுவாங்களே தவுர கோயிலுக்குன்னு ஒரு ஆயிரத்தெ கொடு, ஐநூத்தக் கொடுன்னு சொல்ல மாட்டாங்க.  
            இந்தச் சங்கதிக எல்லாம் வீயெம் மாமாவுக்கும் தெரியும். தெரிஞ்சும் எப்பிடி அத்து கேட்டிச்சுன்னு கோவம் வேற விகடுவுக்கு.
            விகடு கோவமா எழுந்திரிச்சிக் கொல்லைப் பக்கம் வந்த பெற்பாடும் கொஞ்ச நேரம் வீயெம் மாமா நாற்காலியில உக்காந்திருச்சு. அதுக்கு ஒரு மாதிரியாப் போயிடுச்சு. ஏம்டா இவ்வேங்கிட்டெ கேட்டோம்ன்னு அதுக்கு தோணியிருக்கணும். ரொம்ப தளந்து போனாப்புல பெறவு அது எழுந்திரிச்சி வெளியில போனுச்சு.

            கோவத்தோட கொல்லைப் பக்கம் வந்தவன் எல்லாரையும் வெறிச்சிப் பார்ததான். "சின்ன மாமாவோட ரண்டாம் கலியாணத்துக்குத் தாலி, மாலையெல்லாம் வாங்கிக் கொடுக்கப் போறீங்களா?"ன்னாம் சத்தமா விகடு.
            "ஒனக்கென்னடா வந்திச்சு! கட்டுனவளே கட்டி வைக்கிறேங்றா? யாருடா ன்னாத்த பண்றது? ஒங்கிட்டெ என்னவோ பணத்தெ கேக்கணும்னு நின்னுட்டு இருந்தாம்!"ன்னுச்சு வெங்கு.
            "நம்மகிட்டே ஏது பணம்ங்றது தெரியும்ல அதுக்கு. தெரிஞ்சும் எப்பிடி சின்ன மாமா நம்மகிட்டே கேக்குது? வெளையாட்டுப் பண்ணிட்டு இருக்குதா? ன்னா நெனைச்சிக்கிட்டு இருக்குது அத்து? அப்பிடியே எங் கையில பணம் இருந்தாலும் இந்த மாதிரியான காரியத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டேம்ன்னு தெரியாதா?"ன்னாம் விகடு.
            "அத்து இல்லடாம்பீ! ஒங்கிட்டெ சொன்னாக்கா ஒம் பங்குன்னு அப்பங்காரர்கிட்டெ எதாச்சிம் வாங்கிக் கொடுப்பேன்னு நெனைச்சிக் கேட்டுப்புட்டாம்! கொடுக்க மனசில்லன்னா வுடு! அதுக்கு ஏம்டா கோவப்படுறே?"ன்னுச்சு வெங்கு.
            "ஏம் இந்த பாவ காரியத்துக்கு தொணையா நிக்குறீங்களேன்னு தெரியலையே?"ன்னாம் விகடு.
            "யய்யய்யோ! அவ்வேம் ஒருத்தெம்! இவ்வேங்கிட்டே வந்து கேப்பானா? கூடவோ கொறைச்சலோ நாமளே பாத்து எதாச்சிம் செஞ்சி வுடுறேம்ன்னா கேக்குறானா? இப்போ இவ்வேங்கிட்டே வந்து கேட்டுப் புதுப் பெரச்சனையா உண்டாக்கிட்டப் போறாம்! இந்தப் பயலுக்குக் கலியாணம் ஆயிட்டு, பெரிய மனுஷனா ஆயிட்டான்னுப் போயிக் கேக்குறதா கேட்டுப்புட்டு நம்மட பிராணத்தெ வாங்கிட்டுப் போறாம்! யாரு இந்தப் பயலா பெரிய மனுஷன்? கலியாணம் ஆயி கொழந்தைத்தாம் பொறந்திருக்கு. இந்தப் பயலும் கொழந்தை மாதிரித்தாம் இருக்கு. கட்டிட்டு வந்தோமே, அதாச்சிம் செத்த வெவரமா இருக்கான்னா அத்துவும் கொழந்தை மாதிரித்தாம் இருக்கு. இத்து மூணையும் கொழந்தெ மாதிரி வெச்சிக்கிட்டு பாத்துக்கிட்டு எம் பிராணம் போறது அந்த ஆண்டவனுக்குத்தாம் தெரியும்! ஏங்க அவ்வேம் பாட்டுக்குக் கோவத்துல பேசிட்டு நிக்குறாம்! நீஞ்ஞளா பாத்து எதாச்சிம் சொல்லுங்களே!" அப்பிடிங்கிது வெங்கு சுப்பு வாத்தியாரைப் பார்த்து.
            மாமியாக்காரி புருஷங்காரனைத் திட்டுறதுல ஒரு சந்தோஷம் ஆயிக்கு. வாயை ஒரு மாதிரியா வெச்சுக்கிட்டு பழிப்புக் காட்டிட்டுச் சிரிச்சிக்கிறா. அதெ வெங்குப் பாத்துப்புடுது. "இவ்வே ஒருத்தி. அவ்வேம்தாம் கிறுக்குப் பயலா இருக்காம்ன்னா! கட்டி வெச்சது அதெ தாண்டி கிறுக்கச்சியா இருக்கு! நமக்குன்ன எங்கேருந்துதாம் இப்பிடில்லாம் வந்துச் சேருதோ!"ன்னு சொல்லிக்கிட்டு அலுத்துக்கிடுச்சு. இப்போ விகடுவுக்குச் சந்தோஷமா போயி அவ்வேம் ஆயியைப் பாத்துப் பழிப்புக் காட்டுறாம்.
            சுப்பு வாத்தியாரு ஒண்ணும் சொல்லாம பேத்தியைத் தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சிக்கிட்டு இருக்காரு. வெங்குவுக்குக் கோவம் வந்திடுச்சு. "இந்தாரும்யா! ஒரு ரண்டு வார்த்தெ சொல்லி அவனெ அசமடக்குன்னா இப்பத்தாம் பேத்திய தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சிக்கிட்டு அழிச்சாட்டியும் பண்ணிக்கிட்டு?"ங்குது வெங்கு.
            இப்போ பேசுனதுதாம் ஒரைச்சாப்புல சுப்பு வாத்தியாரு, "செரி! செரி! எல்லாம் அவங்கவுங்க வேலையப் பாருங்க! எதா இருந்தாலும் நாம்ம பாத்திக்கிடறேம்!"ங்றாரு.
            "எப்பப் பேசுனாலும் எதெப் பேசுனாலும் இதாங் பேச்சா?"ங்குது வெங்கு இப்போ.
            "நாம்ம அந்த கேடு கெட்ட கலியாணத்துக்குல்லாம் வர மாட்டேம்!"ங்றாம் விகடு.
            "எலே ஒங் கலியாணத்துக்கு மின்ன நின்ன வேலையப் பாத்தவம்டா. ஒந் தாய் மாமேம்டா! அப்பிடில்லாம் சொல்லப்படாது!"ங்குது வெங்கு அவசரமா.
            "எட்டுக்குடி நாம்ம போனதில்லங்க! பாத்ததில்லேங்க! போயிட்டு வந்துப்புடுவேம்!"ங்றா ஆயி.
            "வர்ற கோவத்துக்கு என்ன பேசுவேம்னு நமக்கே தெரியாது! ஓடிப் போயிடு!"ங்றாம் விகடு.
            "அவுங்க வர மாட்டேங்க போல யத்தே! அதால நாமளும் வரலே!"ங்றா ஆயி.
            "எதாச்சிம் பேசிச் சரி பண்ணுமய்யான்னா, நாம்ம பாத்துக்கிடறேம் ஒங்க வேலையப் போயி பாருங்கன்னா, இப்பிடித்தாம் ஆவும்! ஒரு கோயிலு கொளத்துககு நிம்மதியா போவ வுடறான்னா இந்தப் பயெ?"ன்னு அதுக்கு மேல ஒண்ணும் சொல்லாம சலிச்சிக்கிட்டெ போவுது வெங்கு.
            "நாம்ம கடைத்தெருவுக்குப் போறேம்! காசிய எடுத்துக் கொண்டா!"ங்றாம் விகடு.
            "காசியம் கெடையாது, ஒண்ணுங் கெடையாது! வெறுங்கையோட போயிட்டு வாங்க!"ங்றா ஆயி.
            "வாரப்ப ஒமக்கு எதாச்சிம் வாங்கிட்டு வாரேம்டி!"ங்றா விகடு.
            "நமக்கு ஒண்ணும் வாணாம். வெறுங்கையி வீசுன கையாவே திரும்பி வாங்க. அதாங் எட்டுக்குடி போவலன்னு ஆச்சுல்ல. எட்டுக்குடி முருகனெ பாத்ததில்லே, போயிப் பாப்பேம்ன்னு கேட்டா பேசுறதெ பாரு. எப்பப் பாத்தாலும் கோயிலுக்குப் போறதுன்னா அபசகுனமாவே பேசிக்கிட்டு! கோயில்ன்னா வாயில நல்ல வார்த்தையே வாராதுல்ல!"ன்னு முகத்தெ திருப்பி வெச்சிக்கிட்டு போறா ஆயி.
            இது எதுவுமே நடக்காதது போல மறுபடியும் பேத்தியைத் தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சுறதுலயே கவனமா இருக்காரு சுப்பு வாத்தியாரு. அந்த நேரத்துலதாம் காலேஜை முடிஞ்சி வூட்டுக்குத் திரும்புறா செய்யு.
            "ன்னா வூடே ஒரு மாதிரியா இருக்கு?"ங்றா செய்யு. வெங்கு விசயத்தெ சொன்னதும், "ஒந் தம்பி வந்துட்டுப் போனாவே வூடு இப்பிடித்தாம் ஆயிடும். இத்தனெ நாளு வாராமாத்தானே கெடந்தது. இப்போ காசின்ன ஒடனே ஓடியாறது. ஒரு பொண்ணோட வாழ்க்கைப் போனது பரவால்லன்னு இப்போ இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில வெளையாட நெனைக்குதா அத்து? அதுக்குப் போயி எதுக்கும்மா யப்பா தாலியெடுத்துக் கொடுத்து மாலைய வாங்கித் தர்றதா சொல்லிட்டுக் கெடக்குது? யண்ணன் கோவப்படுறதுலயும் தப்பில்லே!"ங்றா செய்யு.
            "எட்டுக்குடில்ல கலியாணம் நடக்குதாங் செய்யு. போனாக்கா எட்டுக்குடி முருகனெ பாத்தது போல இருக்கும்லா செய்யு!"ங்றா ஆயி.
            "நீஞ்ஞ ச்சும்மா கெடங்க யண்ணி. எட்டுக்குடி போறதுன்னா ஒரு நாளு அண்ணணெ அழைச்சிட்டுப் போயிட்டு வாங்க. இந்தக் கலியாணத்துக்குப் போறதுல்லலாம் பாக்க வாணாம்!"ங்றா செய்யு எரிச்சலோட.
            "செரி! செரி! போயி அவங்கவங்க வேலயப் பாருங்க! எல்லாத்தையும் நாம்ம பாத்துக்கிடறேம்!"ங்ற சுப்பு வாத்தியாரோட குரலு கேக்குது கொல்லையிலேந்து சன்னமா.
            "யப்பா! ஏம்ப்பா! எப்பவும் இப்படித்தானா? இப்படித்தாம் எப்பவுமா?"ங்றா செய்யு. இப்பத்தாம் எல்லாரு மூஞ்சிலயும் சிரிப்பாணி எட்டிப் பாக்குது.
*****


28 Mar 2020

மாமனுக்காகப் பண்ண மாட்டீயா?

செய்யு - 401        

            பள்ளியோடம் வுட்டு சைக்கிள்ல வந்து மொகம் கையி காலுகள அலம்பிக்கிட்டு செம்பருத்தித் தண்ணிய குடிச்சிட்டு ஒரு நடை போயிட்டு வருவோம்னு அக்கரைக்குக் கெளம்புனாம் விகடு. செம்பருத்தித் தண்ணிங்றது செம்பருத்திப் பூவுல ரெண்டைப் பறிச்சாந்து, அதெ வெந்நித் தண்ணியில வுட்டு எடுத்தா பூவோட சாயம்லாம் எறங்கி வெளுத்துப் போயிடும். அந்தத் தண்ணியில ரெண்டு ஸ்பூனு தேன வுட்டுக் கலக்குனா டீத்தண்ணியப் போல ஒரு சுவை வந்துப்புடும். காலையிலயும் சாயுங்காலத்துலயும் அந்தத் தண்ணியத்தாம் அவனுக்குப் போட்டுத் தரணும். டீத்தண்ணியோ, காப்பித் தண்ணியோ, ஏம் பாலோ கூட அவ்வேன் குடிக்கிறது இல்ல.
            என்னவோ ரொம்ப சைவமா இருக்கப் போறதா விகடு வூட்டுல அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டுக் கெடந்தாம். அது வூட்டுல ரொம்ப ரகளையா கெடந்த நேரம். அவனோட அம்மாக்காரிக்கு வெங்குவுக்குத்தாம் அதுல ரொம்ப வருத்தம். வாரத்துல ஒரு நாளாவது அசைவத்தச் சாப்பிட்டாத்தாம் ஒடம்பு ஒறுப்பா இருக்குங்றது அதோட நெனைப்பு. இப்பிடிப் பயெ மீனு, கறின்னு எதுவும் சாப்புடாம கெடக்கறது கூட பரவாயில்ல, பால கூட குடிக்க மாட்டேம், மோரு தயிரக் கூட ஊத்திக்க மாட்டேம்னு நிக்குறானேன்னு அதுக்கு ஒரு வருத்தம். சுப்பு வாத்தியாரு மவன் இப்பிடி இருக்குறதெ கண்டுக்கிடல. "ஆமாம்! அவனுக்கு வேற வேல இல்ல. எதாச்சிம் புத்தகத்தெ படிக்கிறது. அதெ கடைப்பிடிக்கிறன்னு மூணு நாளு மாசத்துக்கு நிக்குறது. பெறவு அதெ தூக்கிப் போட்டுகிட்டு வேற ஒண்ணு பிடிச்சிக்கிட்டு நிக்குறது. இதே பொழைப்பா போயிடுச்சு அவனுக்கு. ஒரு பொண்ணு பொறந்து குடும்பத் தாங்குற பயலாவா நடந்துக்கிறாம்? இன்னும் அவனெ ஒரு சின்னபுள்ள கணக்கா பாத்துகிட்டு கெடக்க வேண்டியதா கெடக்கு!"ன்னு சாடையா பேசிட்டுப் போறதோட சரி.
            அந்தச் செம்பருத்தித் தண்ணிய ஆயிப் போட்டுக் கொடுத்தத வாங்கிக் குடிச்சிட்டு அக்கரைக்கு ஒரு நடை காத்ததோட்டமா போயிட்டு வந்தவனெ வாசலுக்கு வாரதுக்குள்ள வெளியில நின்னுகிட்டு இருந்த ஆயி ஓடியாந்து, "சித்தப்பா வந்து ரொம்ப நேரமா ஒங்களுக்காக காத்துக்கிட்டுக் கெடக்காங்க. நீஞ்ஞ இம்மாம் மெதுவா வாறீங்களே!" அப்பிடிங்கிறா.
            விகடு ஒறவுமொறைய வெளங்கிக்க முடியாத ஆளு. "யாருப்பா சித்தப்பா? ஒஞ்ஞ கொல்லம்பட்டியிலேந்து ஆளுக வந்திருக்கா? நாம்ம அங்கிட்டுப் போயி இங்கிட்டு வாரதுக்குள்ள விசுக்குன்னு வாரதுக்கு ன்னா பண்ண முடியும்?"ன்னு விறுவிறுன்னு வூட்டுக்குள்ள வந்துப் பார்த்தா, நடுக்கூடத்துல வீயெம் மாமா உக்காந்திருக்கு. வீயெம் மாமாவும் விகடுவும் ரொம்ப பேசிக்கிற ஆளுக கெடையாது. மாமங்காரரு அந்தப் பக்கம் போனா, விகடு இந்தப் பக்கம் போற ஆளு.
            வூட்டுக்கு வந்த மாமாங்காரன வாங்கன்னு கூட கூப்புடல விகடு. "சித்தப்பாவ வாங்கன்னு கூட சொல்ல மாட்டீங்களா?"ங்றா ஆயி.
            "அவ்வேம் அப்பிடித்தாம்! அவ்வேம் வளப்பு அப்பிடி. அவ்வேம் வளந்தது அப்பிடி. ஒன்னயக் கூட ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சியா? சாப்புட்டீயான்னு கேக்க மாட்டேனே? சித்தம் போக்கு சிவம் போக்குன்னு வளந்தப் பயெ! அது கெடக்கட்டும். இப்பிடி உக்காரு!"ன்னு பக்கத்துல கெடந்த ப்ளாஸ்டிக் நாற்காலியக் காட்டி உக்கார சொன்னிச்சு வீயெம் மாமா.
            "யம்மா! யப்பால்லாம் எஞ்ஞ?"ன்னாம் விகடு.
            "எல்லாம் கொல்லையில இருக்காங்க. அவங்களோடல்லாம் பேசிட்டாங்க. ஒஞ்ஞளோட கொஞ்சம் தனியா பேசணுமாம். அதாங் இஞ்ஞ வந்து உக்காந்திருக்காங்க. நீஞ்ஞ அக்கரைக்கி நடை போயிருக்கிறதெச் சொன்னேம். வர்ற வரைக்கும் உக்காந்திருக்கேம்னு இஞ்ஞத்தாம் உக்காந்திருக்காங்க. தனியா பேசணுங்றதால நாம்ம கெளம்பிடறேம்ப்பா! நீஞ்ஞளும் சித்தப்பாவும் பேசிக்குங்க!"ங்றா ஆயி.‍ சொல்லிட்டு அவளும் கொல்லப் பக்கம் கெளம்பிட்டா.
            இப்பிடியெல்லாம் நம்மகிட்டெ தனியா பேசுறதுக்கு அப்பியென்ன பிரமாதாம பேச்சு இருக்குன்னு புரிபடாம உக்காந்திருக்காம் விகடு. வீயெம் மாமா பேச ஆரம்பிக்கிது.

            "இந்தாருடாம்பீ! ஒமக்கு ஒங்க அப்பம் ஆயி எல்லாம் நல்லா மேல தூக்கி வுடுறாப்புல இருந்தே. நீயி மின்னுக்கு வந்தே. நமக்கு அப்பம் ஆயி எல்லாம் இருந்தும் தூக்கி வுட ஆளு கெடையா. அப்பன் ஆயியே தூக்கி வுடல. பெரியவனத்தாம் அதாங் ஒம்மட பெரிய மாமனத்தாம் தூக்கி வுட்டாங்க. நம்மள தூக்கி வுடல. நாமளே கரணம் போட்டு மேல வந்து ஆளு. பொறந்த நாள்லேந்து இன்னிய வரைக்கும் கஷ்டந்தாம். கஷ்டம் பாட்டுக்கு கஷ்டம், நாம்ம பாட்டுக்கு நாம்மன்னு ஓடிட்டுக் கெடக்கேம். நமக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து எங்கப்பம் அதாங் ஒங்க தாத்தன் நமக்கு ஒரு காலுசட்டையைக் கூட எடுத்துக் கொடுத்ததில்லே. சூத்துல பிஞ்ச பள்ளியோடத்துக் காலுசட்டையப் போட்டுக்கிட்டு அலைஞ்ச ஆளுதாம் நாம்ம. படிக்கிறதுக்குன்னு ஒரு நோட்டு, ஒரு பேனா, ஒரு சிலேட்டுக் குச்சின்னு ஒண்ணுத்தையும் வாங்கிக் கொடுக்காத ஆளு எங்கப்பன். ஒமக்கு அப்பிடியில்ல. நீயி கேக்குறதுக்கு மின்னாடியே ஒங்க அப்பாரு அதாங் எங்கத்தான் வாங்கிக் கொடுத்துடுவாரு. ஒனக்குக் கெடைச்ச மாதிரிக்கி ஒரு அப்பன் நமக்கும் கெடைச்சிருந்தா, நாமளும் படிச்சி ஒரு வேலைக்கிப் போயிருப்பேம். ஒங்கப்பாவலே நீயி படிச்சு வேலைக்கிப் போயிட்டே. இன்னிக்குக் கொழந்தை குட்டின்னும் ஆயிட்டு. நம்மளப் பாத்தியா? இன்னிக்கும் கட்டையடிச்சாத்தாம் சோறு. ஒரு கொழந்தைக் குட்டியில்லே!"ன்னு கண்ணு கலங்குனாப்புல பேசுனுச்சு வீயெம் மாமா.
            இதையெல்லாம் இந்நேரத்துக்கு எதுக்கு நம்மகிட்டெ பேசுதுன்னு கொழப்பமா இருந்துச்சு விகடுவுக்கு. வீயெம் மாமா எப்பவும் இப்படித்தாம், எதையும் ஓப்பனா ஸ்ட்ரெய்ட்டா பேசுறதா சொல்லிக்கிட்டே சுத்தி வளைச்சு வந்து அடிச்சிப் புடிக்குங்றது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விசயம்தானம். ஆனா இப்போ எதுக்காக இப்பிடி சுத்தி வளைக்குதுங்றது விகடுவுக்குப் புரியல. இந்த மாதிரியான சுத்தி வளைச்சு பேச வர்ற விசயங்களப் புரிஞ்சிக்கிற அளவுக்கு அவ்வேன் கெட்டிக்காரத்தனமான ஆளும் கெடையாது. அதால மாமங்காரரு பேசுறதெ பேசட்டும். முடிவா அது சொல்ல வர்றதே சொல்லித்தானே ஆவணும். அப்ப சேத்து ஒட்டுமொத்தமா புரிஞ்சிக்கிடலாம்னு விகடு பச்சக்ன்னு நாற்காலியில உக்காந்தவன் உக்காந்தவன்தாம். மொகத்துல ஒரு சின்ன மாத்தம் கூட இல்லாத அளவுக்குப் பாறாங்கல்லப் போல மொகத்தெ வெச்சிக்கிட்டு உக்காந்துட்டாம். ஒரு சேதிய சொல்ல வாரவங்களுக்கு நம்பிக்கையைத் தர்றாப்புல சேதியக் கேக்குறவங்க மொகத்தெ வெச்சிக்கணும், வார்த்தையெ வுடணும். அந்த ரெண்டையும் செய்யல விகடு.
            விகடுகிட்டேயிருந்து ஒரு பிரதிபலிப்பும் வாரதத புரிஞ்சிக்கிட்டெ வீயெம் மாமா, "ன்னடாம்பீ! ஒண்ணுமே பேச மாட்டேங்றே?"ன்னுச்சு. பதிலுக்குப் பேசுற மாதிரிக்கிப் பேசுனா பதிலா எதாச்சிம் பேசலாம். அதெ வுட்டுப்புட்டு நீ வேலைக்குப் போயிட்டே, நாம்ம வேலைக்குப் போவலன்னு பேசுனா அதுக்காக ஆறுதல் சொல்ற வயசுலயா இருக்காம் விகடு. எதாச்சிம் ஒரு கேள்விய கேட்டாக் கூட அதுக்கு ஒரு பதிலச் சொல்லலாம். எல்லாத்தையும் வெலா வாரியா வெளக்குற மாதிரிப் பேசிப்புட்டு எதாச்சிம் பேசுன்னா எப்பிடி பேசுறதுன்னு விகடுவுக்கு யோசனையா ஓட அந்த யோசனையிலயே அவ்வேம் இன்னும் பேசாம உக்காந்திருந்தாம்.
            வீயெம் மாமாத்தாம் வுடாம மறுக்கா தொடர்ந்து பேசுனுச்சு. "வேல இல்லங்றதெ வுடு. வேலயப் பாத்துச் சம்பாதிச்சிப்பேம். இப்போ நமக்குப் பட்டறை இருக்கு. நாலு பேத்துக்கு நாம்ம வேலயக் கொடுக்குறேம். ஆண்டவேம் நம்மள ஒண்ணும் சும்மா வுடல. ஒமக்குத் தெரியாதது யில்லே. கலியாணம் ஆன நாள்லேந்து இன்னிய நாளு வரைக்கும் நமக்குக் கொழந்தெ யில்லே. நமக்குப் பெறவு கலியாணம் ஆன பல பேத்துக்குக் கொழந்தை ஆயி பள்ளியோடம் போயிட்டுக் கெடக்குதுங்க. ஏம் ஒனக்கும்தாம் கொழந்தையாயிடுச்சு. அதுக்காக ஒம்மட மாமிக்கு நாம்ம பண்ணாத வைத்தியம் இல்லே. அதுக்காக அழிக்காத காசி இல்லே. காசி சீரழிஞ்சதுதாம் மிச்சம். ஊருல வேற நம்மள பொட்டே போட்டேங்ற மாதிரிப் பேசுறாம். அதெப் பாத்து ஒம்மட மாமிக்காரியே அழுதழுது நெஞ்சழிஞ்சிப் போயி நமக்கு இன்னொரு பொண்ண பாத்துக் கலியாணத்தெ பண்ணி வைக்கிறா. அதத்தாம் நீயி வாரதுக்கு மின்னாடி யத்தாம் யக்காக்கிட்டே பேசிட்டு இருந்தேம். அதாங் ஒங்கிட்டேயும் பேசலாமின்னு..." வீயெம் மாமா இழுத்தா, விகடுவுக்குத் தூக்கி வாரிப் போடுது. "இதெ ஏங் நம்மகிட்டே பேசணும். இது மாதிரியான சங்கதிக நமக்குப் பிடிக்காதுங்றது ஊரு ஒலகத்துக்கே தெரியுமே!"ன்னு அவனுக்குள்ள வேகம் வருது. இப்பத்தாம் அவனோட மொகம் மாறிப் போவுது.
            விகடு அவ்வேம் பொண்டாட்டிக்காரி ஆயிகிட்டேயே அவரோட தகப்பங்காரரு சாமிமலே ஆச்சாரி, ரெண்டாம் தாரம் பண்ண விசயத்தெ பத்தி சமயத்துல இழுத்தாப்புல பேசுற ஆளு. "ஏம் ஒங்கப்பங்காரருக்கு புள்ளெ இல்லன்னா ஒம்மட அம்மாக்காரிகிட்டே நீயி நமக்குப் புள்ளே, நாம்ம ஒமக்குப் புள்ளேன்னுல்ல இருந்திருக்கணும். ஏம் புள்ளே! இப்பிடி ரண்டாவதா ஒண்ணு பண்ணி..."ன்னு இழுப்பாம். "ரண்டாவதா எஞ்ஞ யம்மாவ கட்டலன்னா ஒஞ்ஞள ஆரு வந்து கட்டிப்பா? நாமளா இருந்தவாசி ஒஞ்ஞள கட்டிக்கிட்டு சமாளிக்கிறேம். இப்பிடில்லாம் ஆவும்னு தெரிஞ்சித்தாம் ரண்டாவதா கட்டிக்கிட்டு ஒஞ்ஞளு கட்டிக்கிறதுக்கு பொண்ண பெத்து வுட்டுருக்காவோ!" அப்பிடிம்பா விகடுவெ வாயில அடைக்கிறாப்புல.
            அப்படிப்பிட்ட ஆளுகிட்டெ இப்படி வந்துப் பேசுனா அவனுக்கு எப்பிடி இருக்கும். விகடு வேண்டா வெறுப்பா வீயெம் மாமா பேசுறதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காம் ஒண்ணும் சொல்லவும் முடியாம, வீயெம் மாமா சொல்றதெ ஏத்துக்கவும் முடியாம.
            "ன்னடாம்பீ! நாம்ம சொல்ல கேட்டுக்கிட்டே உக்காந்திருக்கீயே தவுர ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்றே? நாம்ம ஒன்னத்தானடாம்பீ மலெ போல நம்பி வந்திருக்கேம். மொத கலியாணம்ன்னா சீரு சனத்தி, நகெ நட்டு, பீரோ கட்டிலுன்னு பொண்ணு வூட்டுக்கார்ரேம் செலவ பண்ணுவாம். இத்து ரண்டாவது கலியாணமில்லே. அதுவும் நம்ம தேவைக்கு நாமளே வலியக்கப் போயி பண்றதால கலியாணச் செலவு அத்தனையும் நம்மளோடது. ஆளுக்கு ஒரு கையக் கொடுத்தாத்தாம்டாம்பீ இதுல நாம்ம தலைதூக்க முடியும். அத்தாம்கிட்டேயும், யம்மாகிட்டேயும் பேசிட்டேம். நீஞ்ஞல்லாம் ஒரே குடும்பமாத்தாம் இருக்கீங்க. இருந்தாலும் அத்தானும் யம்மாவும் மாலைக்கான காசியையும், தாலிக்கான காசியையும் செஞ்சி வுட்டுப்புடறதா சொல்லிட்டாங்க. ஒம் பங்குக்கு நீயி கலியாணத்துக்கு ஒரு அய்யாயிரம் கொடுத்தீன்னா எட்டுக்குடியில வெச்சி கலியாணத்தெ முடிச்சிப்புடுவேம். இதெ பத்தி யத்தாம் யக்காக்கிட்டே பேசிட்டேம். அவ்வேம் கொடுத்தாம்ன்னா வாங்கிக்கோன்னுப்புட்டாங்க. நீயி வாத்தியாரு வேலையில இருக்கே. கை நெறைய சம்பாதிக்கிறே. தாயிமாமானுக்காக இதெ கூட செய்ய மாட்டீயா ன்னாங்ற நம்பிக்கையிலத்தாம்டாம்பீ இதெ பத்திப் பேசிட்டு இருக்கேம்? நமக்காகப் பண்ணி மாட்டீயா ன்னாடாம்பீ?" அப்பிடினிச்சு வீயெம் மாமா.
            "பண்ண மாட்டேம்!"ன்னு மொகத்துல அடிச்சாப்புல பேசிட்டு, எரிச்சலோட கூடத்தெ வுட்டு கொல்லைப் பக்கமா எழுந்திரிச்சிப் போனாம் விகடு.
*****


27 Mar 2020

கண்ணுக்குள்ள நீதாம் நிக்குறே!

செய்யு - 400        

            லட்சுமிப் பொண்ணு பாக்குறதுக்கு ஆளு கச்சலாத்தாம் இருக்கு. ஒடிசலான ஒடம்பு. நெறம் மாநிறம். மொகம் நல்லா களையா இருக்கு. ஒரு புள்ளையப் பெத்த மாதிரிக்கி இல்லாம பாக்குறதுக்குப் புதுப்பொண்ணு கணக்காத்தாம் இருக்கு. ஆளு நல்லா விடுவிடுன்னும் இருக்கு. சித்தெ நேரம் சும்மா இருக்குற ஆளு கெடையாதுங்றது பாக்குறப்பவே தெரியுது. வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் பொண்ணப் பாத்துச்சுங்க. அவுங்கப் பாக்குறப்ப நல்ல வெதமா தெரியணுமேன்னு சங்கரி வேற மெனக்கெட்டு வூட்டுலேந்து தன்னோட சேலைகள்ல நல்லதா ஒண்ணு எடுத்தாந்து கட்டி வுட்டுத்தாம் இவுங்க மின்னாடி கொண்டாந்து நிறுத்துனுச்சு. அப்படி வாரப்பவே கொஞ்சம் ஸ்வீட்டு, காரம், கடையில ஒரு பாக்கெட்டு பாலு, சீனி, புரூ காப்பித் தூளு பொட்டணும்னு வகையாத்தாம் எடுத்தாந்துச்சு. பொண்ணு வூட்டுக்கு எந்த வேலையும் இல்லாம சங்கரியே அத்தனையையும் கவனிக்குறாப்புல ஒரு ஏற்பாடோட வந்திச்சு. எப்படியாச்சும் இந்தக் காரியம் முடிஞ்சா ரண்டு குடும்பத்துக்கும் நல்லதுன்னு அது நெனைச்சது. அதுக்காகக் கொஞ்சம் இப்பிடி கூடுதலா மெனக்கெடுறது தப்புல்லன்னு ஒரு நெனைப்பு அதுக்கு.
            பொண்ண நல்லா பாத்துச்சுங்களே தவுர, வீயெம் மாமாவும் கோகிலா மாமியும் அதெப் பத்தி ஒண்ணுஞ் சொல்லல. பேசாம வந்து உக்காந்தது போலவே பேசாம எழுந்திரிச்சி வந்துட்டுதுங்க. சங்கரிக்கு என்ன பண்றதுன்னு புரியல. அதுவும் மாமாவோடயும், மாமியோடயும் வெளியில வந்து கேட்டுச்சு. "ஒரு பயெ இருக்கான்னேன்னு பாக்க வேண்டிதா இருக்கு. இல்லன்னா இதாங் பொண்ணு. இன்னிக்கே தாலியத் தூக்கிக் கட்டுய்யா மனுஷான்னு கொடுத்திடுவேம்!" அப்பிடினிச்சு கோகிலா மாமி.
            "என்னத்தெ பண்றது மாமி! அத்தோட தலயெழுத்து அப்பிடி இருக்குது. புள்ளய வாணாம், நீயி மட்டும் வான்னா பெத்தத் தாயோட மனசு அதுக்கு எடம் கொடுக்கணுமே! நாமளும் மாமாவுக்காக அங்கன இங்கனன்னு விசாரிக்காதெ எடம் கெடையாது. காத்துப் பூரா இந்தச் சங்கதியத்தாம் சொல்லி வெச்சிருக்கேம். மித்த மித்த சின்னமாவுலேந்து, எந் தங்காச்சி வரைக்கும் இப்பிடி ஒரு பொண்ணு வேணும்னு கேட்டு மூக்கு ஒடைஞ்சா கதையாத்தாம் சொல்றாங்க. அதால நாமளும் மேம்போக்கா விஜாரிக்கிறதோட செரி. ஆன்னா இந்த எடமுன்னா நாமளே பேசி முடிச்சிடுவேம். நீஞ்ஞ சொல்றாப்பு பய ஒருத்தெம் இருக்காங்றதுதாங் கொறை. மித்தபடி பொண்ணு குடும்ப வேலைய அத்தனையையும் ஒத்த ஆளா நின்னு பாக்கும். இந்த விசயத்துல யாரயும் கட்டாயப்படுத்த மிடியாது பாருங்க! யோஜிச்சுக்குங்க!" அப்பிடின்னு மாமாவையும், மாமியையும் வூடு வரைக்கும் ‍அழைச்சாந்து வழியனுப்புனுச்சு சங்கரி.
            அவுங்க எல்லாம் போன பிற்பாடு சங்கரி யக்கா வூட்டுக்கு கிட்டான் ஆச்சாரியும் வந்து விசாரிச்சாரு. நெலமெ இதுன்னதும், "அவுங்க சொல்றதும் வாஸ்தவம்தாம். சிங்கக்குட்டிய ஒண்ணுத்த பெத்தெடுக்கலன்னா தங்கக் குட்டியாட்டம் இந்நேரத்துக்குக் காரியம் முடிஞ்சிருக்கும். அதது விதிப்பாடு எப்பிடி இருக்கோ அப்பிடித்தாம் இருக்கும்!"ன்னு பேசிட்டுப் போனவரு, அவரு பங்குக்கு மூத்தப் பொண்ணு, ரெண்டாவது பொண்ணுகிட்டேயும் சங்கதி இன்ன மாதிரின்ன ஒடனே பஸ்ஸூ வண்டியப் பிடிச்சு போயிக் கலந்துகிட்டாரு.
            அதுகளும் சேதிய கேள்விப்பட்டு, சங்கதி இப்பிடின்னா அந்தப் புள்ளையத் தூக்கியாந்து ஒருத்தரு மாத்தி ஒருத்தரு ஆளாவுற வரைக்கும் வளக்குறதாவும், ஆளான பிற்பாடு ஒரு வேலைக்கி ஏற்பாடு பண்ணி எதாச்சிம் பண்ணி வுடறதாவும் உத்திரவாதம் பண்ணிச்சுங்க. அதுக்குக் கிட்டான் ஆச்சாரி உறுதியா ஒரு விசயத்தெ சொன்னாரு, "நாம்ம உசுரோட இருக்குற வரைக்கும் சிங்கக் குட்டியே பாத்துப்பேம். நாம்ம கதையக் கட்டிட்டு சுடுகாடு போன பிற்பாடு நீஞ்ஞ பாத்துகிட்டா போதும். ச்சும்மால்லாம் பாத்துக்கிட வாணாம். வூட்ட வுத்து அவ்வேம் பேர்ல காசியப் போட்டுடறேம். அதுல வர்ற வட்டிக் காசிய வெச்சிப் பாத்துக்கிட்டா போதும். அப்பியில்லன்னா யாரு சிங்கக்குட்டியப் பாத்துக்கிடறீங்களோ அவுங்க வூட்டோ வந்துத் தங்கிக்குங்க!" அப்பிடின்னிருக்காரு.
            அதுக்கும் அக்காக்காரிக ரண்டு பேரும் வுட்டுக் கொடுக்காமத்தாம் பேசுனாங்க, "யப்பா! ரண்டு பேரும் அன்னாடம் ஒழைச்சித் தேஞ்சுத்தாம் குடித்தனம் பண்றோம். அதுக்காக தங்காச்சிக்காரிக்கு ஒரு நல்லதுன்னா கொஞ்சம் செருமத்தெ தாங்குறதுக்குல்லாம் யோஜனைய பண்ண மாட்டோம். ஆம்பளப் பயதானே. ரெண்டு சோத்தப் போட்டு பள்ளியோடத்துக்கு ஓடுன்னா ஓடப் போறாம். சனி ஞாயித்து நாள்ல ஒரு வேல அது இதுன்னா கூட மாட ஒத்தாசையா இருக்கப் போறாம். இவனுக்காகவா சமைச்சுக்கிட்டுக் கெடக்கப் போறேம்? சமைக்குறதுல அவனுக்குக் கொஞ்சம். புள்ளை குட்டிங்க ஒண்ணுக்கு ரெண்டா ஒத்தாசைய கெடக்கப் போவுதுங்க. அம்மாம்தாம் இதுல வெவகாரம். பாத்துக்கிட்டாப் போச்சு!" அப்பிடின்னுத்தாம் பேசுனதுங்க. இதெ கேட்டதுல கிட்டான் ஆச்சாரிக்கு மனசுக்குள்ள சந்தோஷம். இந்தச் சங்கதிகள நேர்லயே மாப்புள்ளப் பையேம் வூட்டுல எடுத்துச் சொல்லி சம்மதத்தெ வாங்கிப்புடணும்னு நெனைச்சாரு. நல்ல காலம் வாரப்ப அதெ தாமசம் பண்ணாம முடிச்சிப்புடணும்னும், இல்லாட்டி அந்த நல்ல காலம் வேற ஒருத்தருகிட்டெ நழுவிப் போயிடும்னு அன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா சங்கரியோட வூட்டுக்குப் போயி மறுநாளுப் போயி பாத்துப் பேசிப்புடுவோம்னு பேசி வெச்சிக்கிட்டாரு.
            மறுநாளு காலங்காத்தால கெளம்பி சங்கரிய கெளப்பிக்கிட்டுப் போய்ட்டு வந்துப்புடணும்னு நெனைச்சிக்கிட்டு இருட்டு கலையுற நேரத்துல எழுந்திரிச்சி வெளியில வந்தவருக்கு கண்ணுல ஆச்சரியம் காத்திருக்குப் பாருங்க. 
            வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் பழைய டிவியெஸ்ஸூ சாம்புல வூட்டுக்கு மின்னாடி வந்து டுர் டுர்ருன்னுகிட்டு நிக்குதுங்க. அதெப் பாத்ததும் கிட்டான் ஆச்சாரிக்கு கையும் ஓடல, காலும் ஓடல. அந்த விடியக்கருக்கால்ல வூட்டுல தூங்கிட்டுக் கெடந்த பொண்ணையும், பேரப் பயலையும் எழுப்பி வுட்டுப்புட்டு, ஒரு தூக்குவாளியத் தூக்கிட்டு டீத்தண்ணிய வாங்கிட்டு வாரணும்னு ஓட்டமா ஓடுறாரு. அப்பிடி ஓடுனவரு சங்கரி வூட்டாண்ட பக்கமும் ஒரு எட்ட வெச்சி அங்கயும் சங்கதியச் சொல்லிப்புட்டு, "ஆயி! நீ பாட்டுக்கு டீத்தண்ணிய போட்டுப் புடாத. நம்மட வூட்டுக்கும் சேத்து வாங்கியாந்திடறேம்!"ன்னு சத்தத்தெ கொடுத்துப்புட்டு டீக்கடை பக்கமா ஓடுறாரு. அவரு ஓடியாறதுக்குள்ள கோகிலா மாமி பொண்ண அழைச்சாந்து வெச்சிக்கிட்டுப் பேசிகிட்டு இருக்குப் பாருங்க.

            "யே யம்மாடி லச்சுமி! ஒன்னயப் பாத்துட்டு வூட்டுக்குப் போனா கண்ணுல தூக்கமே யில்ல. கண்ணுக்குள்ள நீந்தாம் நிக்குறே. என்னவோ போன சென்மத்துல நீயும் நானும் அக்காவும் தங்காச்சியுமா நிக்குறாப்புல ஒரு நெனைப்பு. பேரு வேற லட்சுமின்னு எம்மாம் பொருத்தமா இருக்கு. எம்மட வூட்டுக்கே அந்த லட்சுமியே வாராப்புல. கொண்டாந்தா ஒன்னையத்தாம் கொண்டாரணும்னு மனசுக்குள்ள அப்பிடி ஒரு நெனைப்பு. நம்மாள ஒறங்கவும் முடியல, ஒண்ணும் முடியல. உக்காரவும் முடியல, நிக்கவும் முடியல. ஒரே தவிப்பா போச்சுது. அதாங் விடியாட்டியும் பரவால்லன்னு இவருகிட்டே சொல்லி வண்டிய எடுக்கச் சொல்லி வந்துட்டேம். வந்த நாஞ்ஞ இவரோட யக்கா மவ்வே வூட்டுக்குக் கூட போவல. நேரா வந்து ஒம்மட மொகத்தப் பாத்துட்டுத்தாம் அஞ்ஞப் போயி முழிக்கணும்னு இஞ்ஞயே நின்னுப்புட்டோம்!" அப்பிடினுச்சு கோகிலா மாமி.
            சங்கதியக் கேள்விப்புட்டு வூட்டுக்கு மின்னாடி நேத்தி சாயுங்காலமே கேரி பேக்குல வூட்டோராமா மாடுக உள்ள நாலு வூடுகளா பாத்து அலைஞ்சித் திரிஞ்சி வாங்கி வெச்சிருந்த சாணியத் தண்ணியில கரைச்சி அவசர அவசரமா வாசலுக்குத் தெளிச்சிக் கூட்டிட்டு சங்கரி ஓடியாறப்ப இந்தப் பேச்செல்லாம் அதோட காதுக்குள்ள கேக்குது. அதெ கேக்க கேக்க அப்பாடா ஒரு காரியம் கனிஞ்சிடுச்சுன்னு மனசுக்குள்ள அதுக்கு ஒரு சந்தோஷம். அதுக்குள்ள கால்ல சக்கரத்தெ கட்டிட்டுப் போனாரோ, யில்ல றெக்கைய கட்டிட்டுப் போனாரோ கிட்டான் ஆச்சாரி சுட சுட டீத்தண்ணியோட வந்து நிக்குறாரு. சங்கரித்தாம் அந்த வாளிய சட்டுப்புட்டுன்னு வாங்க தம்பளர்ல ஊத்தி ஆளாளுக்குக் கொடுக்குது. இப்பிடி திடுதிடுப்புன்னு வந்து தன்னக் கூப்பிட்டு உக்கார வெச்சு கோகிலா மாமி கதையளந்ததுல லட்சுமிப் பொண்ணுக்கு ரொம்ப வெக்கமா போச்சுது. அதால ஒண்ணுஞ் சொல்லவும் முடியாம, பேசவும் முடியாம உக்காந்திடுச்சு.
            "ஆயி அவசரமில்லாம நெதானமாவே ஊத்திக் கொடு. வாரப்பவே டீத்தண்ணியில கொஞ்சம் வூட்டுல ஊத்திக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கேம். ஒம்மட மாமனாரு மாமியாரு புள்ளீயோ குட்டிக குடிச்சிப்பிட்டுத்தாம் உக்காந்திருக்கும்!" அப்பிடிங்கிறாரு கிட்டான் ஆச்சாரி.
            "அதுக்கென்ன மாமா! அதாங் வூட்டுல மாமியாக்காரி இருக்குல்ல குத்துக்கல்லாட்டம். இந்நேரத்துக்கு பிரிட்ஜிலேந்து எடுத்து பால் பாக்கெட்டுல போட்டுக் கொடுத்து கதைய முடிச்சிருக்கும். அதெ பத்தி நமக்கென்ன கவலே? நமக்கு ஒரே கவலே லட்சுமிப் பொண்ணப் பத்தி மட்டுந்தாம்!"ங்குது சங்கரி.
            "அதெ வுடு ஆயி! அந்த விசயத்தெ என்னிக்கு ஒங் கையில எடுத்தியோ அன்னிக்கே சோலி முடிஞ்சிப் போச்சு. நீயி கைய வெச்சு தொட்டுத் தொலங்கி இஞ்ஞ எத்தனெ பேரு நல்ல வெதமா இருக்குதுங்க. அதெ மாதிரிக்கி நம்மட பொண்ணும் இல்லாமல போயிடும்? அதல்லாம் நல்லாத்தாம் வரும் போ!" அப்பிடின்னாரு கிட்டான் ஆச்சாரி.
            வீயெம் மாமா இப்போ மெல்ல பேச்செடுத்துச்சு. "இந்தாருங்க பெரியவரே! நமக்கு சுத்தி வளைச்சல்லாம் பேசத் தெரியாது. வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு பேசுவேம். அதாலயே கொஞ்சம் மோடிமுட்டின்னு ஊருக்குள்ள சொல்லுவாங்க. மித்தபடி மனசுக்குள்ள எதுவுங் கெடையாது. மனசுல பட்டதெ பட்டுன்னு பேசிப்புடுவேம். அத்து மத்தவங்க மனசெ காயப்படுத்துமே, கஷ்டப்படுத்தேமேன்னுல்லாம் நமக்கு யோஜிக்க வாராது. அது ஒண்ணுதாங் நம்மகிட்டெ கொறை. ஒஞ்ஞப் பொண்ண நம்மட மொத தாரத்துக்குகாரிக்குப் பிடிச்சிப் போயிடுச்சு. நகெ நட்டுன்னு ஒரு குண்டுமணி தங்கத்தெ பண்ண வாணாம். சீர் சனத்தின்னு ஒண்ணுத்தெ கொடுக்க வாணாம். எம்மட மொத தாரத்துக்கு இருக்குற அத்தனெ நகை நட்டையும் போட்டுக் கட்டிக்கிட்டுப் போறேம். அத்தோட அவ்வே பேர்ல இருக்குற லச்ச ரூவாய ஒஞ்ஞ பொண்ணு பேர்ல டிபாசிட்டுப் பண்ணிக் கட்டிட்டுப் போறேம். கலியாணச் செலவு அது இது லொட்டு லொசுக்குன்னு அத்தனையைும் பாத்துக்கிடறேம். ஒரே ஒரு விசயந்தாம் குறுக்கால நிக்கிது. அந்தப் பையேம் வெவகாரம்தான். அதெ பேசித் தீத்துப்புட்டா நாளு நட்சத்திரம் கூட பாக்க மாட்டேம். அடுத்த நொடியே கலியாணத்தெ பண்ணிக் கூட்டிட்டுப் போயிடுறேம்!" அப்பிடின்னுச்சு வீயெம் மாமா.
            "அதாம்ங்க! அந்த ஒண்ணுத்தெ மட்டும் பேசித் தீத்து வுட்டுப்புட்டீங்கன்னா காரியம் முடிஞ்சாப்புல. ஏன்னா நாள பின்னக்கி அத்து ஒரு பேச்சா வளரப்புடாது பாருங்க. முன்கூட்டியே அதெ பத்திப் பேசித் தீத்துப்புடணும். கதெ இன்னதுன்னுத்தாம் அறுத்து விட்டுப்புடணும். நல்லதோ கெட்டதோ பேசித் தீத்துக்குறதலான பின்னாடி ஒரு பெரச்சனை வராம இருக்கும்!" அப்பிடின்னு கோகிலா மாமியும் ஊடால எடுத்து விட்டுச்சு.
            "நீஞ்ஞ பேசுற மொறைய வெச்சுப் பாக்குறப்பவே நீஞ்ஞ சரியான ஆளுங்கங்றது புரியுது. மித்தவங்கன்னா கலியாணத்து ஆசெ காட்டிப் பண்ணிப்புட்டு பின்னாடி கண்டிஷம்களா போடுவாங்க. நீஞ்ஞ அப்பிடில்லா. இதாங் கண்டிஷம். இதுக்கு ஒத்து வந்தா சரின்னு நெலையால்லா நிக்குறீங்க. அதால நமக்குச் சந்தோஷம்தாமுங்க. இதெ பத்தி நேத்திக்கே நாம்ம நம்மட மித்த ரண்டு பொண்ணுககிட்டேயும் ஒடனே வண்டியப் பிடிச்சி இதாங் சங்கதின்னு சொல்லிக் கலந்துக்கிட்டேம். நாம்ம உசுரோட இருக்குற காலத்துக்குப் பயல நாம்ம பாத்துக்கிடறதுங்க. பெறவு நம்மட பொண்ணுக ரண்டும் ஆளுக்கொருத்தியா பாத்துக்கிடறதா சொல்லிப்புட்டுங்க. அதால பயலப் பத்தின கவலெ ஒஞ்ஞளுக்கு வேண்டியதிலே. எம்மட பொண்ண மட்டும் கட்டிக்கிட்டு நீஞ்ஞ போவலாம். பெற்பாடு எம்மட இந்தப் பேரப் பயலாள ஒஞ்ஞளுக்கு எந்த சங்கட்டமும் வந்துப்புடாது. அவனுக்கும் ஒஞ்ஞளுக்கும் எந்த சம்பந்ததும் இல்ல. அவ்வே அவனெ பெத்த தாயினாலும் அவளுக்கும் மவனுக்கும் கூட சம்பந்தமில்லே. ஒரு பத்திரத்தெ வாங்கிக் கையெழுத்த போட்டுத் தர்றதுன்னாலும் அதெயும் செஞ்சித் தார்றேம்!" அப்பிடின்னாரு கிட்டான் ஆச்சாரி.
            காரியம் இவ்வளவு வேகத்துல முடியும்னு வீயெம் மாமாவோ, கோகிலா மாமியோ எதிர்பார்க்கல. ஒரு முடிச்சு, ஒரு சிக்கலு இம்மாம் வேகத்துல அவிழும்னு சங்கரியும் நெனைக்கல.
            அப்பத்தாம் லட்சுமிப் பொண்ணு ஒரு வார்த்தைப் பேசுனுச்சுப் பாருங்க, "மாசத்து ஒரு தபாவாது நாம்ம எம்மட புள்ளைய வந்துப் பாக்கணும். அதுக்குச் சம்மதம்ன்னாத்தாம் நாம்ம இந்தக் கலியாணத்துக்குச் சம்மதிக்க முடியும். அதுக்கும் புள்ளையோட ஒட்டுமில்ல, ஒறவுமில்லன்னா நமக்கு இந்தக் கலியாணமும் வாணாம். ஒண்ணும் வாணாம். நாம்ம ன்னா அப்பிடி ஒங்களுக்குப் பாராமாவா போயிட்டேம் யப்பா!" அப்பிடின்னுக் கேவிக்கிட்டே அழுதுச்சு. இதெ கேட்டதும் எல்லாத்துக்கும் மனசு ஒரு மாதிரியா போச்சுது.
            ஒரு பெரிய மவுனம் பாறாங்கல்ல போல அங்ஙன வந்து உக்காந்திச்சு.
            அப்போ கோகிலா மாமிதாம் பேச்சு பேசுனுச்சு. "ஆயியையும் மவனையும் பிரிச்சி வெச்ச பாவம் எஞ்ஞளுக்கு வந்துப்புடக் கூடாது. ஒம்மட வூட்டுக்காரரே மாசத்துக்கு ஒரு தபா இந்த வண்டியில அழைச்சாந்து அப்பாவையும் மவனையும் காட்டிட்டா போச்சு. அப்பிடியே சோடியா வர்றப்ப நீஞ்ஞ வண்டியில வாங்க, நாம்ம பஸ்ஸூல வர்றேம்னு நாமளும் வந்துப் பாத்துட்டுப் போறேம்!" அப்பிடின்னு வகையா வார்த்தை‍யே கொத்துப் போட்டு மனசெ அடிக்குறாப்புல சொன்னிச்சுப் பாருங்க, அதெ கேட்டதும் எல்லாத்தோட மொகத்துலயும் இருக்குற கண்ணுலேந்து தண்ணி தண்ணியா ஊத்துது.
            "அடிப் போடி கோட்டிச் சிறுக்கி! அதாங் நாம்ம இஞ்ஞத்தாம்னே இருக்கேம். நாலு புள்ளையோட அஞ்சாவது புள்ளையா ஒம் புள்ளைய வெச்சிக்கிட்டு, மாமாவ பாத்துக்கிட மாட்டேம்னு நெனைச்சீயா?" அப்பிடின்னு சங்கரியும் பதிலுக்கு எடுத்து விட்டதுல லட்சுமிப் பொண்ணு மொகத்துல கலியாணப் பொண்ணுக்குள்ள வெக்கம் வந்துடுச்சு.
*****


மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...