செய்யு - 402
கணக்குப் பாக்குறது அறவே விகடுவுக்குப்
பிடிக்கிறதில்லே. அதுல ஒரு வெறுப்பு அவனுக்கு வந்துப் போச்சு. புரோக்கிங் ஆபீஸ்லயும்
கணக்குப் பாக்குறதுங்றது கெடையாது. எல்லாத்தையும் கம்ப்யூட்டரு பைசா துல்லியமா கணக்குப்
போட்டுக் காட்டிடும். கூட்டிக் கழிக்கிறதுல கொஞ்சம் அலுப்புப் படுற ஆளு அவன். எட்டு
ரூவா செலவ பத்து ரூவான்னு எழுதுவாம். அதே போல பன்னெண்டு ரூவா செலவையும் பத்து ரூவான்னுத்தாம்
எழுதுவாம். ஒரு நம்பரெ முழுசாக்கிப்புட்டா கூட்டுறதும், கழிக்குறதும் எளிதுங்றதால இப்பிடி
ஒரு வேலையச் செய்வாம் விகடு. பள்ளியோடத்து வரவு செலவு கணக்கையும் அவனுக்குச் சுப்பு
வாத்தியாருதாம் எழுதிக் கொடுத்தாவணும். இன்னின்ன வரவு, செலவுன்னு வாயிக் கணக்கா சொல்றவனுக்கு
அதெ எழுதுறதுன்னா மொகம் கோணிக்கிட்டுப் போயிடும். அதெ போல காசிய வெச்சிக்கிட்டு,
அதெ எடுத்துக் கொடுத்துட்டு, கணக்கு வெச்சிக்கிறதுன்னா எரிஞ்சி எரிஞ்சி வுழுவாம்.
இதுக்குல்லாம் கணக்குபுள்ள மாதிரிக்கி ஒரு ஆளு அவ்வேம் பக்கத்துல இருந்துக்கணும்.
கலியாணம் ஆவுறதுக்கு மின்னாடி புரோக்கிங்
ஆபீஸ்ல வேலை பாத்த காலம் வரைக்கும் அம்மாக்காரி வெங்குகிட்டெ சம்பளப் பணத்தைக் கொடுத்து
அது அப்பங்காரரான சுப்பு வாத்தியாரு கையில போயிட்டு இருந்தது. வாத்தியாரு வேலைக்கு
வந்த பிற்பாடு அப்பங்காரருக்கும் மவனுக்கும் கொஞ்சம் இளக்கம் வந்த பிற்பாடு சம்பளப்
பணத்தை அப்பங்காரரு கையில கொடுத்துடுவாம். எதாச்சிம் பணம் தேவைன்னா ஆயிரம் ஐநூத்துன்னு
கையில வாங்கிக்குவாம். அதெ அப்பங்காரர்கிட்ட நேரடியா கேக்குறது இல்ல. அம்மாக்காரிக்கிட்ட
சொன்னா அத்து வாங்கி வெச்சு அத்தோட கையால அவங் கையிக்கு வரும். அது செலவாச்சிடுன்னா
திரும்ப ஒரு பத்து ரூவா தேவைன்னாலும், திரும்பவும் ஆயிரம் ஐநூத்துன்னுத்தாம் வாங்குவாம்.
பிசிறடிச்சாப்புல கையில காசை வாங்க மாட்டாம்.
கலியாணத்துக்குப் பின்னாடி சம்பளப் பணத்துல
ரெண்டாயிரத்தெ கையில எடுத்துக்கிட்டு மிச்சத்தெ அப்பங்காரர்கிட்டெ கொடுத்துடுவாம்.
அந்த ரெண்டாயிரத்தெயும் கையில வெச்சிக்காம ஆயி கையில கொடுத்துடுவாம். அதுதாங் அதெ
பர்ஸ்ல வெச்சிக்கிட்டு இவ்வேம் வெளியில கெளம்புறப்ப, போறப்ப பணத்தெ கொடுத்தாவணும்.
ஏதோ ஒரு ஞாபவத்துல புருஷஙகார்ரேம் வெளியில போறதெ ஆயி கவனிக்கமா வுட்டுப்புட்டா, இவனும்
பணம் பையில இல்லங்ற ஞாபவம் இல்லாமலே வெளியில போயிட்டுக் காசில்லாம திரும்பி வந்து,
ஆயிகிட்டெ "வெளியில கெளம்புறப்ப ஞாபவமா காசிய எடுத்துக் கொடுக்குறதில்லையா?"ன்னு
சத்தத்தெ போட்டு வாங்கிட்டுப் போவாம். "இந்தக் கருமத்தெ நாம்ம வெச்சிக்கிறதாலதான
இந்தப் பெரச்சனெ. நீஞ்ஞளே வெச்சிக்கிட்டு வரவு செலவ பண்ணிக்க வேண்டித்தானே! இனுமே சத்தம்
போட்டீங்கன்னா மூஞ்சுல தூக்கி எறிஞ்சிப்புடுவேம்!"ன்னு அவளும் பதிலுக்குச் சத்தம்
வெச்சு அது காதுல விழறதுக்குள்ள வெளியில கெளம்பிடுவாம்.
இதுல இன்னொரு வேடிக்கையும் நடக்கும்.
மாசத்துக்கு ரெண்டாயிரம் காசியக் கொடுத்துப்புட்டு மூவாயிரத்துக்கு மேல காசிய வாங்கியிருப்பாம்
விகடு. அதெ சரியா கணக்குல வெச்சிருப்பா ஆயி. ரெண்டாயிரம் காசியக் கொடுத்தா அத்து ஒரு
மாசத்துக்குள்ள மூவாயிரமா குட்டிப் போடுமான்னு கேட்டா, மிச்ச ஆயிரம் ரூவா காசிங்றது
ஆயியோட சிறுவாடு காசியா இருக்கும். சொந்த பந்தங்கன்னு வூட்டுக்கு வாரவங்க கொடுக்குற
காசி, அப்பங்காரரு வூட்டுக்குப் போயிட்டு வாரப்பா அவுங்க வூட்டுல கொடுக்கு நூத்து,
எரநூத்து காசின்னு சேத்து வெச்சிருக்கிற காசியும் இப்பிடி ஒண்ணு சேர்ந்து விகடுவோட
கையில வந்துடும். "சம்பாதிக்கிற காசிய பொண்டாட்டிக்காரிக்கிட்டெ கொடுக்குறதா
பேரு பண்ணிக்கிட்டு எங்கிட்டெ இருக்குற சிறுவாட்டுக் காசியையும் சேத்துல்லா பிடுங்கிட்டுப்
போயிடுறீங்க! இனுமே ஒங்க காசியோட சங்கநாத்தமே வாணாம். நீஞ்ஞளே காசிய வெச்சிக்கிட்டு
நீஞ்ஞளே காசிய செலவு பண்ணிக்கிடுங்க! கையில ஒத்தக் காசிய தங்க வுடுறீங்களா? இதுல பெருமெ
வேற கையில ஒத்தக் காசிய வெச்சிச் செலவு பண்றதில்லன்னு! கையில நாலு காசிய வெச்சு செலவு
பண்ணத்தானே எவ்வளவு வரவாவுது? செலவாவுதுன்னு தெரியும்!"ன்னு சத்தத்தெ போடுவா.
அத்து என்னவோ பொண்டாட்டிக்காரி என்னத்ததாம்
சத்தத்தெ போட்டாலும் அத்து அவ்வேம் காதுக்கு ஒரைக்காது, மனசுக்கும் போவாது.
"ஒரு மனுஷி சத்தம் போடுறாளேன்னு கொஞ்சமாவது ஒங்களுக்கு மருவாதி இருக்குதா?"
அவளும் சத்தத்தெ போட்டுட்டுத்தாம் இருப்பா. அது காத்துக்குக் கேட்குது, விகடுவோட
காதுக்குக் கேக்காது. இப்பிடி என்னத்தாம் சத்தத்தெ போட்டாலும், மளிகை சாமான் வாங்குறதுன்னாலும்,
வேற பெருஞ்சாமானா வூட்டுக்கு எதாச்சிம் வாங்குறதுன்னாலும் விகடுவோட ஒண்ணு சுப்பு வாத்தியாரு
போயாவணும், இல்லேன்னா பொண்டாட்டிக்காரியான ஆயி போயாவணும். பணத்தெ எண்ணிக் கொடுக்குறதுல
எதாச்சிம் தப்புப் பண்ணிடுவாம். அதால பணத்தெ கையில அவுங்கத்தாம் வெச்சிக்கிட்டு இவ்வேம்
சொல்ற தொகையக் கொடுத்தாவணும். அப்பிடி ஒரு மனப்போக்குல இருக்குற ஆளு விகடு. அதால
பணம் சம்பந்தமா எந்த வெதமான சங்கதிகளையும் தன்னோட கைப்பட வெச்சிக்க மாட்டாம் விகடு.
கையில, கழுத்துல, வெரல்ல பொட்டுத் தங்கம்
கெடையாது. அதெ போட்டுக்கிறதுன்னா அதுல ஒரு பயம் அவனுக்கு. அதுல மனசு தங்காது அவனுக்கு.
அது பாட்டுக்கு எங்காச்சிம் கழண்டு வுழுந்தா அதுக்கு எவன் பதிலச் சொல்றதுன்னு யாரு
எதெ போட்டாலும் அதெ கழட்டி மொதல்ல அம்மாரிக்கிட்டயோ, பொண்டாட்டிக்காரிகிட்டயோ
கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாப்பாம். இப்பிடித்தாம் அவனுக்கு காது குத்துனப்போ போட்டிருந்த
கடுக்கன மறுநாளே திருகாணி எங்கயோ கழண்டு விழ காணடிச்சிட்டாம். ஒத்தக் கடுக்கனோட வூடு
வந்தவனெ வெங்கு திட்டுன திட்டுல, "இனுமே நகை நட்டுன்னு எதுவும் நமக்குப் போடக்
கூடாது!"ன்னு பதிலுக்குத் திட்டிட்டுப் போட்டிருந்த ஒத்த கடுக்கனயும் தூக்கி
எறிஞ்சாம். "இதென்னடா கூத்தா இருக்கு! கடுக்கன் காணாம போனதுக்கு நாம்ம கோவப்படுறதுல
ஒரு அர்த்தம் இருக்கு. கடுக்கன காணாடிச்சிப்புட்டு இந்தப் பயெ படுற கோவத்துக்கு ன்னா
அர்த்தம் இருக்கு? இப்பிடியே கோட்டித்தனமா பண்ணிட்டு இருக்குறதே வேலையா போச்சுன்னு!"
வெங்கு சத்தத்தெ வெச்சு அடங்குனுச்சி. அதுலேந்து ஒரு பொட்டுத் தங்கத்த ஒடம்புல தங்க
வுடுறது இல்ல அவ்வேன். கலியாணத்துல நகை நட்டுன்னு போட்டப்பவும் மொத வேலையா அதெ கழட்டிக்
குடுக்குறதுன்னு நின்னு போட்டவங்க எல்லாத்தையும் வெறுப்பேத்திக்கிட்டு கெடந்தாம்.
"அவ்வேம் அப்பிடித்தாம் வுடுங்க!"ன்னு நக நட்டுன்னு செய்முறை செஞ்சவங்களை
வெங்குத்தாம் அசமடக்கிக்கிட்டுக் கெடந்துச்சு வெங்கு.
வாத்தியார்ரா இருக்கானேன்னு வட்டிக்கு
பணத்தெ கொடுத்தா மாசா மாசத்துக்குச் சரியா கொடுத்துப்புடுவேம்னு இவனெ சைக்கிள நிறுத்தி
நாலு பேரு கேட்டுப் பாத்தாங்க. சாதாரணமா பணத்தெ கொடுத்து வாங்குறதுலயே கூடயும் கொறைச்சலுமா
தப்புத் தப்பா வாங்குற பய வட்டிக்குப் பணத்தெ கொடுத்து வாங்குறதுக்குக் கேட்டா சும்மா
இருப்பானா! வந்தக் கோவத்துக்கு, "அதாங் பணம் கொடுக்குறதுக்கு, வாங்குறதுக்கு,
கடனுக்கு, அடமானத்துக்கு, வட்டிக்கு, மானியத்துக்குன்னு பேங்கு இருக்குல்லா. அங்கப்
போயி வாங்கிக்கிட வேண்டியதானே!" சத்தம் போட்டதுல பணம்னு இவ்வேம் பக்கம் ஒருத்தனும்
வாரதில்லே. மொத்தத்துல பணம்ன்னா அதெ வெச்சி வரவு செலவு பண்றது விகடுவுக்கு ஒத்துக்கிடாத
விசயங்றது ஊரறிஞ்ச விசயம். ஊருல வரிப்பணம், கோயில் பணம்ன்னு வசூல்ன்னு வந்தாலும் இவனெ
மதிச்சு ஒருத்தரும் எதையும் கேக்க மாட்டாங்க. இவ்வேன் வாசல்ல நின்னுகிட்டு இருந்தாலும்
இவனெ ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டாங்க. என்னவோ வூட்டுல இருக்குற சின்னபயலே போல நெனைச்சிக்கிட்டு,
"யம்பீ! அப்பாவ கூப்புடு! கோயில்லு வசூலுக்கு வந்திருக்கோம்!"ன்னு சொல்லுவாங்களே
தவுர கோயிலுக்குன்னு ஒரு ஆயிரத்தெ கொடு, ஐநூத்தக் கொடுன்னு சொல்ல மாட்டாங்க.
இந்தச் சங்கதிக எல்லாம் வீயெம் மாமாவுக்கும்
தெரியும். தெரிஞ்சும் எப்பிடி அத்து கேட்டிச்சுன்னு கோவம் வேற விகடுவுக்கு.
விகடு கோவமா எழுந்திரிச்சிக் கொல்லைப்
பக்கம் வந்த பெற்பாடும் கொஞ்ச நேரம் வீயெம் மாமா நாற்காலியில உக்காந்திருச்சு. அதுக்கு
ஒரு மாதிரியாப் போயிடுச்சு. ஏம்டா இவ்வேங்கிட்டெ கேட்டோம்ன்னு அதுக்கு தோணியிருக்கணும்.
ரொம்ப தளந்து போனாப்புல பெறவு அது எழுந்திரிச்சி வெளியில போனுச்சு.
கோவத்தோட கொல்லைப் பக்கம் வந்தவன் எல்லாரையும்
வெறிச்சிப் பார்ததான். "சின்ன மாமாவோட ரண்டாம் கலியாணத்துக்குத் தாலி, மாலையெல்லாம்
வாங்கிக் கொடுக்கப் போறீங்களா?"ன்னாம் சத்தமா விகடு.
"ஒனக்கென்னடா வந்திச்சு! கட்டுனவளே
கட்டி வைக்கிறேங்றா? யாருடா ன்னாத்த பண்றது? ஒங்கிட்டெ என்னவோ பணத்தெ கேக்கணும்னு
நின்னுட்டு இருந்தாம்!"ன்னுச்சு வெங்கு.
"நம்மகிட்டே ஏது பணம்ங்றது தெரியும்ல
அதுக்கு. தெரிஞ்சும் எப்பிடி சின்ன மாமா நம்மகிட்டே கேக்குது? வெளையாட்டுப் பண்ணிட்டு
இருக்குதா? ன்னா நெனைச்சிக்கிட்டு இருக்குது அத்து? அப்பிடியே எங் கையில பணம் இருந்தாலும்
இந்த மாதிரியான காரியத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டேம்ன்னு தெரியாதா?"ன்னாம் விகடு.
"அத்து இல்லடாம்பீ! ஒங்கிட்டெ சொன்னாக்கா
ஒம் பங்குன்னு அப்பங்காரர்கிட்டெ எதாச்சிம் வாங்கிக் கொடுப்பேன்னு நெனைச்சிக் கேட்டுப்புட்டாம்!
கொடுக்க மனசில்லன்னா வுடு! அதுக்கு ஏம்டா கோவப்படுறே?"ன்னுச்சு வெங்கு.
"ஏம் இந்த பாவ காரியத்துக்கு தொணையா
நிக்குறீங்களேன்னு தெரியலையே?"ன்னாம் விகடு.
"யய்யய்யோ! அவ்வேம் ஒருத்தெம்! இவ்வேங்கிட்டே
வந்து கேப்பானா? கூடவோ கொறைச்சலோ நாமளே பாத்து எதாச்சிம் செஞ்சி வுடுறேம்ன்னா கேக்குறானா?
இப்போ இவ்வேங்கிட்டே வந்து கேட்டுப் புதுப் பெரச்சனையா உண்டாக்கிட்டப் போறாம்! இந்தப்
பயலுக்குக் கலியாணம் ஆயிட்டு, பெரிய மனுஷனா ஆயிட்டான்னுப் போயிக் கேக்குறதா கேட்டுப்புட்டு
நம்மட பிராணத்தெ வாங்கிட்டுப் போறாம்! யாரு இந்தப் பயலா பெரிய மனுஷன்? கலியாணம் ஆயி
கொழந்தைத்தாம் பொறந்திருக்கு. இந்தப் பயலும் கொழந்தை மாதிரித்தாம் இருக்கு. கட்டிட்டு
வந்தோமே, அதாச்சிம் செத்த வெவரமா இருக்கான்னா அத்துவும் கொழந்தை மாதிரித்தாம் இருக்கு.
இத்து மூணையும் கொழந்தெ மாதிரி வெச்சிக்கிட்டு பாத்துக்கிட்டு எம் பிராணம் போறது
அந்த ஆண்டவனுக்குத்தாம் தெரியும்! ஏங்க அவ்வேம் பாட்டுக்குக் கோவத்துல பேசிட்டு நிக்குறாம்!
நீஞ்ஞளா பாத்து எதாச்சிம் சொல்லுங்களே!" அப்பிடிங்கிது வெங்கு சுப்பு வாத்தியாரைப்
பார்த்து.
மாமியாக்காரி புருஷங்காரனைத் திட்டுறதுல
ஒரு சந்தோஷம் ஆயிக்கு. வாயை ஒரு மாதிரியா வெச்சுக்கிட்டு பழிப்புக் காட்டிட்டுச் சிரிச்சிக்கிறா.
அதெ வெங்குப் பாத்துப்புடுது. "இவ்வே ஒருத்தி. அவ்வேம்தாம் கிறுக்குப் பயலா இருக்காம்ன்னா!
கட்டி வெச்சது அதெ தாண்டி கிறுக்கச்சியா இருக்கு! நமக்குன்ன எங்கேருந்துதாம் இப்பிடில்லாம்
வந்துச் சேருதோ!"ன்னு சொல்லிக்கிட்டு அலுத்துக்கிடுச்சு. இப்போ விகடுவுக்குச்
சந்தோஷமா போயி அவ்வேம் ஆயியைப் பாத்துப் பழிப்புக் காட்டுறாம்.
சுப்பு வாத்தியாரு ஒண்ணும் சொல்லாம பேத்தியைத்
தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சிக்கிட்டு இருக்காரு. வெங்குவுக்குக் கோவம் வந்திடுச்சு.
"இந்தாரும்யா! ஒரு ரண்டு வார்த்தெ சொல்லி அவனெ அசமடக்குன்னா இப்பத்தாம் பேத்திய
தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சிக்கிட்டு அழிச்சாட்டியும் பண்ணிக்கிட்டு?"ங்குது
வெங்கு.
இப்போ பேசுனதுதாம் ஒரைச்சாப்புல சுப்பு
வாத்தியாரு, "செரி! செரி! எல்லாம் அவங்கவுங்க வேலையப் பாருங்க! எதா இருந்தாலும்
நாம்ம பாத்திக்கிடறேம்!"ங்றாரு.
"எப்பப் பேசுனாலும் எதெப் பேசுனாலும்
இதாங் பேச்சா?"ங்குது வெங்கு இப்போ.
"நாம்ம அந்த கேடு கெட்ட கலியாணத்துக்குல்லாம்
வர மாட்டேம்!"ங்றாம் விகடு.
"எலே ஒங் கலியாணத்துக்கு மின்ன நின்ன
வேலையப் பாத்தவம்டா. ஒந் தாய் மாமேம்டா! அப்பிடில்லாம் சொல்லப்படாது!"ங்குது
வெங்கு அவசரமா.
"எட்டுக்குடி நாம்ம போனதில்லங்க!
பாத்ததில்லேங்க! போயிட்டு வந்துப்புடுவேம்!"ங்றா ஆயி.
"வர்ற கோவத்துக்கு என்ன பேசுவேம்னு
நமக்கே தெரியாது! ஓடிப் போயிடு!"ங்றாம் விகடு.
"அவுங்க வர மாட்டேங்க போல யத்தே!
அதால நாமளும் வரலே!"ங்றா ஆயி.
"எதாச்சிம் பேசிச் சரி பண்ணுமய்யான்னா,
நாம்ம பாத்துக்கிடறேம் ஒங்க வேலையப் போயி பாருங்கன்னா, இப்பிடித்தாம் ஆவும்! ஒரு கோயிலு
கொளத்துககு நிம்மதியா போவ வுடறான்னா இந்தப் பயெ?"ன்னு அதுக்கு மேல ஒண்ணும் சொல்லாம
சலிச்சிக்கிட்டெ போவுது வெங்கு.
"நாம்ம கடைத்தெருவுக்குப் போறேம்!
காசிய எடுத்துக் கொண்டா!"ங்றாம் விகடு.
"காசியம் கெடையாது, ஒண்ணுங் கெடையாது!
வெறுங்கையோட போயிட்டு வாங்க!"ங்றா ஆயி.
"வாரப்ப ஒமக்கு எதாச்சிம் வாங்கிட்டு
வாரேம்டி!"ங்றா விகடு.
"நமக்கு ஒண்ணும் வாணாம். வெறுங்கையி
வீசுன கையாவே திரும்பி வாங்க. அதாங் எட்டுக்குடி போவலன்னு ஆச்சுல்ல. எட்டுக்குடி முருகனெ
பாத்ததில்லே, போயிப் பாப்பேம்ன்னு கேட்டா பேசுறதெ பாரு. எப்பப் பாத்தாலும் கோயிலுக்குப்
போறதுன்னா அபசகுனமாவே பேசிக்கிட்டு! கோயில்ன்னா வாயில நல்ல வார்த்தையே வாராதுல்ல!"ன்னு
முகத்தெ திருப்பி வெச்சிக்கிட்டு போறா ஆயி.
இது எதுவுமே நடக்காதது போல மறுபடியும்
பேத்தியைத் தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சுறதுலயே கவனமா இருக்காரு சுப்பு வாத்தியாரு.
அந்த நேரத்துலதாம் காலேஜை முடிஞ்சி வூட்டுக்குத் திரும்புறா செய்யு.
"ன்னா வூடே ஒரு மாதிரியா இருக்கு?"ங்றா
செய்யு. வெங்கு விசயத்தெ சொன்னதும், "ஒந் தம்பி வந்துட்டுப் போனாவே வூடு இப்பிடித்தாம்
ஆயிடும். இத்தனெ நாளு வாராமாத்தானே கெடந்தது. இப்போ காசின்ன ஒடனே ஓடியாறது. ஒரு பொண்ணோட
வாழ்க்கைப் போனது பரவால்லன்னு இப்போ இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில வெளையாட நெனைக்குதா
அத்து? அதுக்குப் போயி எதுக்கும்மா யப்பா தாலியெடுத்துக் கொடுத்து மாலைய வாங்கித்
தர்றதா சொல்லிட்டுக் கெடக்குது? யண்ணன் கோவப்படுறதுலயும் தப்பில்லே!"ங்றா செய்யு.
"எட்டுக்குடில்ல கலியாணம் நடக்குதாங்
செய்யு. போனாக்கா எட்டுக்குடி முருகனெ பாத்தது போல இருக்கும்லா செய்யு!"ங்றா
ஆயி.
"நீஞ்ஞ ச்சும்மா கெடங்க யண்ணி. எட்டுக்குடி
போறதுன்னா ஒரு நாளு அண்ணணெ அழைச்சிட்டுப் போயிட்டு வாங்க. இந்தக் கலியாணத்துக்குப்
போறதுல்லலாம் பாக்க வாணாம்!"ங்றா செய்யு எரிச்சலோட.
"செரி! செரி! போயி அவங்கவங்க வேலயப்
பாருங்க! எல்லாத்தையும் நாம்ம பாத்துக்கிடறேம்!"ங்ற சுப்பு வாத்தியாரோட குரலு
கேக்குது கொல்லையிலேந்து சன்னமா.
"யப்பா! ஏம்ப்பா! எப்பவும் இப்படித்தானா?
இப்படித்தாம் எப்பவுமா?"ங்றா செய்யு. இப்பத்தாம் எல்லாரு மூஞ்சிலயும் சிரிப்பாணி
எட்டிப் பாக்குது.
*****
சிறப்பு
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா!
Delete