27 Mar 2020

கண்ணுக்குள்ள நீதாம் நிக்குறே!

செய்யு - 400        

            லட்சுமிப் பொண்ணு பாக்குறதுக்கு ஆளு கச்சலாத்தாம் இருக்கு. ஒடிசலான ஒடம்பு. நெறம் மாநிறம். மொகம் நல்லா களையா இருக்கு. ஒரு புள்ளையப் பெத்த மாதிரிக்கி இல்லாம பாக்குறதுக்குப் புதுப்பொண்ணு கணக்காத்தாம் இருக்கு. ஆளு நல்லா விடுவிடுன்னும் இருக்கு. சித்தெ நேரம் சும்மா இருக்குற ஆளு கெடையாதுங்றது பாக்குறப்பவே தெரியுது. வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் பொண்ணப் பாத்துச்சுங்க. அவுங்கப் பாக்குறப்ப நல்ல வெதமா தெரியணுமேன்னு சங்கரி வேற மெனக்கெட்டு வூட்டுலேந்து தன்னோட சேலைகள்ல நல்லதா ஒண்ணு எடுத்தாந்து கட்டி வுட்டுத்தாம் இவுங்க மின்னாடி கொண்டாந்து நிறுத்துனுச்சு. அப்படி வாரப்பவே கொஞ்சம் ஸ்வீட்டு, காரம், கடையில ஒரு பாக்கெட்டு பாலு, சீனி, புரூ காப்பித் தூளு பொட்டணும்னு வகையாத்தாம் எடுத்தாந்துச்சு. பொண்ணு வூட்டுக்கு எந்த வேலையும் இல்லாம சங்கரியே அத்தனையையும் கவனிக்குறாப்புல ஒரு ஏற்பாடோட வந்திச்சு. எப்படியாச்சும் இந்தக் காரியம் முடிஞ்சா ரண்டு குடும்பத்துக்கும் நல்லதுன்னு அது நெனைச்சது. அதுக்காகக் கொஞ்சம் இப்பிடி கூடுதலா மெனக்கெடுறது தப்புல்லன்னு ஒரு நெனைப்பு அதுக்கு.
            பொண்ண நல்லா பாத்துச்சுங்களே தவுர, வீயெம் மாமாவும் கோகிலா மாமியும் அதெப் பத்தி ஒண்ணுஞ் சொல்லல. பேசாம வந்து உக்காந்தது போலவே பேசாம எழுந்திரிச்சி வந்துட்டுதுங்க. சங்கரிக்கு என்ன பண்றதுன்னு புரியல. அதுவும் மாமாவோடயும், மாமியோடயும் வெளியில வந்து கேட்டுச்சு. "ஒரு பயெ இருக்கான்னேன்னு பாக்க வேண்டிதா இருக்கு. இல்லன்னா இதாங் பொண்ணு. இன்னிக்கே தாலியத் தூக்கிக் கட்டுய்யா மனுஷான்னு கொடுத்திடுவேம்!" அப்பிடினிச்சு கோகிலா மாமி.
            "என்னத்தெ பண்றது மாமி! அத்தோட தலயெழுத்து அப்பிடி இருக்குது. புள்ளய வாணாம், நீயி மட்டும் வான்னா பெத்தத் தாயோட மனசு அதுக்கு எடம் கொடுக்கணுமே! நாமளும் மாமாவுக்காக அங்கன இங்கனன்னு விசாரிக்காதெ எடம் கெடையாது. காத்துப் பூரா இந்தச் சங்கதியத்தாம் சொல்லி வெச்சிருக்கேம். மித்த மித்த சின்னமாவுலேந்து, எந் தங்காச்சி வரைக்கும் இப்பிடி ஒரு பொண்ணு வேணும்னு கேட்டு மூக்கு ஒடைஞ்சா கதையாத்தாம் சொல்றாங்க. அதால நாமளும் மேம்போக்கா விஜாரிக்கிறதோட செரி. ஆன்னா இந்த எடமுன்னா நாமளே பேசி முடிச்சிடுவேம். நீஞ்ஞ சொல்றாப்பு பய ஒருத்தெம் இருக்காங்றதுதாங் கொறை. மித்தபடி பொண்ணு குடும்ப வேலைய அத்தனையையும் ஒத்த ஆளா நின்னு பாக்கும். இந்த விசயத்துல யாரயும் கட்டாயப்படுத்த மிடியாது பாருங்க! யோஜிச்சுக்குங்க!" அப்பிடின்னு மாமாவையும், மாமியையும் வூடு வரைக்கும் ‍அழைச்சாந்து வழியனுப்புனுச்சு சங்கரி.
            அவுங்க எல்லாம் போன பிற்பாடு சங்கரி யக்கா வூட்டுக்கு கிட்டான் ஆச்சாரியும் வந்து விசாரிச்சாரு. நெலமெ இதுன்னதும், "அவுங்க சொல்றதும் வாஸ்தவம்தாம். சிங்கக்குட்டிய ஒண்ணுத்த பெத்தெடுக்கலன்னா தங்கக் குட்டியாட்டம் இந்நேரத்துக்குக் காரியம் முடிஞ்சிருக்கும். அதது விதிப்பாடு எப்பிடி இருக்கோ அப்பிடித்தாம் இருக்கும்!"ன்னு பேசிட்டுப் போனவரு, அவரு பங்குக்கு மூத்தப் பொண்ணு, ரெண்டாவது பொண்ணுகிட்டேயும் சங்கதி இன்ன மாதிரின்ன ஒடனே பஸ்ஸூ வண்டியப் பிடிச்சு போயிக் கலந்துகிட்டாரு.
            அதுகளும் சேதிய கேள்விப்பட்டு, சங்கதி இப்பிடின்னா அந்தப் புள்ளையத் தூக்கியாந்து ஒருத்தரு மாத்தி ஒருத்தரு ஆளாவுற வரைக்கும் வளக்குறதாவும், ஆளான பிற்பாடு ஒரு வேலைக்கி ஏற்பாடு பண்ணி எதாச்சிம் பண்ணி வுடறதாவும் உத்திரவாதம் பண்ணிச்சுங்க. அதுக்குக் கிட்டான் ஆச்சாரி உறுதியா ஒரு விசயத்தெ சொன்னாரு, "நாம்ம உசுரோட இருக்குற வரைக்கும் சிங்கக் குட்டியே பாத்துப்பேம். நாம்ம கதையக் கட்டிட்டு சுடுகாடு போன பிற்பாடு நீஞ்ஞ பாத்துகிட்டா போதும். ச்சும்மால்லாம் பாத்துக்கிட வாணாம். வூட்ட வுத்து அவ்வேம் பேர்ல காசியப் போட்டுடறேம். அதுல வர்ற வட்டிக் காசிய வெச்சிப் பாத்துக்கிட்டா போதும். அப்பியில்லன்னா யாரு சிங்கக்குட்டியப் பாத்துக்கிடறீங்களோ அவுங்க வூட்டோ வந்துத் தங்கிக்குங்க!" அப்பிடின்னிருக்காரு.
            அதுக்கும் அக்காக்காரிக ரண்டு பேரும் வுட்டுக் கொடுக்காமத்தாம் பேசுனாங்க, "யப்பா! ரண்டு பேரும் அன்னாடம் ஒழைச்சித் தேஞ்சுத்தாம் குடித்தனம் பண்றோம். அதுக்காக தங்காச்சிக்காரிக்கு ஒரு நல்லதுன்னா கொஞ்சம் செருமத்தெ தாங்குறதுக்குல்லாம் யோஜனைய பண்ண மாட்டோம். ஆம்பளப் பயதானே. ரெண்டு சோத்தப் போட்டு பள்ளியோடத்துக்கு ஓடுன்னா ஓடப் போறாம். சனி ஞாயித்து நாள்ல ஒரு வேல அது இதுன்னா கூட மாட ஒத்தாசையா இருக்கப் போறாம். இவனுக்காகவா சமைச்சுக்கிட்டுக் கெடக்கப் போறேம்? சமைக்குறதுல அவனுக்குக் கொஞ்சம். புள்ளை குட்டிங்க ஒண்ணுக்கு ரெண்டா ஒத்தாசைய கெடக்கப் போவுதுங்க. அம்மாம்தாம் இதுல வெவகாரம். பாத்துக்கிட்டாப் போச்சு!" அப்பிடின்னுத்தாம் பேசுனதுங்க. இதெ கேட்டதுல கிட்டான் ஆச்சாரிக்கு மனசுக்குள்ள சந்தோஷம். இந்தச் சங்கதிகள நேர்லயே மாப்புள்ளப் பையேம் வூட்டுல எடுத்துச் சொல்லி சம்மதத்தெ வாங்கிப்புடணும்னு நெனைச்சாரு. நல்ல காலம் வாரப்ப அதெ தாமசம் பண்ணாம முடிச்சிப்புடணும்னும், இல்லாட்டி அந்த நல்ல காலம் வேற ஒருத்தருகிட்டெ நழுவிப் போயிடும்னு அன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா சங்கரியோட வூட்டுக்குப் போயி மறுநாளுப் போயி பாத்துப் பேசிப்புடுவோம்னு பேசி வெச்சிக்கிட்டாரு.
            மறுநாளு காலங்காத்தால கெளம்பி சங்கரிய கெளப்பிக்கிட்டுப் போய்ட்டு வந்துப்புடணும்னு நெனைச்சிக்கிட்டு இருட்டு கலையுற நேரத்துல எழுந்திரிச்சி வெளியில வந்தவருக்கு கண்ணுல ஆச்சரியம் காத்திருக்குப் பாருங்க. 
            வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் பழைய டிவியெஸ்ஸூ சாம்புல வூட்டுக்கு மின்னாடி வந்து டுர் டுர்ருன்னுகிட்டு நிக்குதுங்க. அதெப் பாத்ததும் கிட்டான் ஆச்சாரிக்கு கையும் ஓடல, காலும் ஓடல. அந்த விடியக்கருக்கால்ல வூட்டுல தூங்கிட்டுக் கெடந்த பொண்ணையும், பேரப் பயலையும் எழுப்பி வுட்டுப்புட்டு, ஒரு தூக்குவாளியத் தூக்கிட்டு டீத்தண்ணிய வாங்கிட்டு வாரணும்னு ஓட்டமா ஓடுறாரு. அப்பிடி ஓடுனவரு சங்கரி வூட்டாண்ட பக்கமும் ஒரு எட்ட வெச்சி அங்கயும் சங்கதியச் சொல்லிப்புட்டு, "ஆயி! நீ பாட்டுக்கு டீத்தண்ணிய போட்டுப் புடாத. நம்மட வூட்டுக்கும் சேத்து வாங்கியாந்திடறேம்!"ன்னு சத்தத்தெ கொடுத்துப்புட்டு டீக்கடை பக்கமா ஓடுறாரு. அவரு ஓடியாறதுக்குள்ள கோகிலா மாமி பொண்ண அழைச்சாந்து வெச்சிக்கிட்டுப் பேசிகிட்டு இருக்குப் பாருங்க.

            "யே யம்மாடி லச்சுமி! ஒன்னயப் பாத்துட்டு வூட்டுக்குப் போனா கண்ணுல தூக்கமே யில்ல. கண்ணுக்குள்ள நீந்தாம் நிக்குறே. என்னவோ போன சென்மத்துல நீயும் நானும் அக்காவும் தங்காச்சியுமா நிக்குறாப்புல ஒரு நெனைப்பு. பேரு வேற லட்சுமின்னு எம்மாம் பொருத்தமா இருக்கு. எம்மட வூட்டுக்கே அந்த லட்சுமியே வாராப்புல. கொண்டாந்தா ஒன்னையத்தாம் கொண்டாரணும்னு மனசுக்குள்ள அப்பிடி ஒரு நெனைப்பு. நம்மாள ஒறங்கவும் முடியல, ஒண்ணும் முடியல. உக்காரவும் முடியல, நிக்கவும் முடியல. ஒரே தவிப்பா போச்சுது. அதாங் விடியாட்டியும் பரவால்லன்னு இவருகிட்டே சொல்லி வண்டிய எடுக்கச் சொல்லி வந்துட்டேம். வந்த நாஞ்ஞ இவரோட யக்கா மவ்வே வூட்டுக்குக் கூட போவல. நேரா வந்து ஒம்மட மொகத்தப் பாத்துட்டுத்தாம் அஞ்ஞப் போயி முழிக்கணும்னு இஞ்ஞயே நின்னுப்புட்டோம்!" அப்பிடினுச்சு கோகிலா மாமி.
            சங்கதியக் கேள்விப்புட்டு வூட்டுக்கு மின்னாடி நேத்தி சாயுங்காலமே கேரி பேக்குல வூட்டோராமா மாடுக உள்ள நாலு வூடுகளா பாத்து அலைஞ்சித் திரிஞ்சி வாங்கி வெச்சிருந்த சாணியத் தண்ணியில கரைச்சி அவசர அவசரமா வாசலுக்குத் தெளிச்சிக் கூட்டிட்டு சங்கரி ஓடியாறப்ப இந்தப் பேச்செல்லாம் அதோட காதுக்குள்ள கேக்குது. அதெ கேக்க கேக்க அப்பாடா ஒரு காரியம் கனிஞ்சிடுச்சுன்னு மனசுக்குள்ள அதுக்கு ஒரு சந்தோஷம். அதுக்குள்ள கால்ல சக்கரத்தெ கட்டிட்டுப் போனாரோ, யில்ல றெக்கைய கட்டிட்டுப் போனாரோ கிட்டான் ஆச்சாரி சுட சுட டீத்தண்ணியோட வந்து நிக்குறாரு. சங்கரித்தாம் அந்த வாளிய சட்டுப்புட்டுன்னு வாங்க தம்பளர்ல ஊத்தி ஆளாளுக்குக் கொடுக்குது. இப்பிடி திடுதிடுப்புன்னு வந்து தன்னக் கூப்பிட்டு உக்கார வெச்சு கோகிலா மாமி கதையளந்ததுல லட்சுமிப் பொண்ணுக்கு ரொம்ப வெக்கமா போச்சுது. அதால ஒண்ணுஞ் சொல்லவும் முடியாம, பேசவும் முடியாம உக்காந்திடுச்சு.
            "ஆயி அவசரமில்லாம நெதானமாவே ஊத்திக் கொடு. வாரப்பவே டீத்தண்ணியில கொஞ்சம் வூட்டுல ஊத்திக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கேம். ஒம்மட மாமனாரு மாமியாரு புள்ளீயோ குட்டிக குடிச்சிப்பிட்டுத்தாம் உக்காந்திருக்கும்!" அப்பிடிங்கிறாரு கிட்டான் ஆச்சாரி.
            "அதுக்கென்ன மாமா! அதாங் வூட்டுல மாமியாக்காரி இருக்குல்ல குத்துக்கல்லாட்டம். இந்நேரத்துக்கு பிரிட்ஜிலேந்து எடுத்து பால் பாக்கெட்டுல போட்டுக் கொடுத்து கதைய முடிச்சிருக்கும். அதெ பத்தி நமக்கென்ன கவலே? நமக்கு ஒரே கவலே லட்சுமிப் பொண்ணப் பத்தி மட்டுந்தாம்!"ங்குது சங்கரி.
            "அதெ வுடு ஆயி! அந்த விசயத்தெ என்னிக்கு ஒங் கையில எடுத்தியோ அன்னிக்கே சோலி முடிஞ்சிப் போச்சு. நீயி கைய வெச்சு தொட்டுத் தொலங்கி இஞ்ஞ எத்தனெ பேரு நல்ல வெதமா இருக்குதுங்க. அதெ மாதிரிக்கி நம்மட பொண்ணும் இல்லாமல போயிடும்? அதல்லாம் நல்லாத்தாம் வரும் போ!" அப்பிடின்னாரு கிட்டான் ஆச்சாரி.
            வீயெம் மாமா இப்போ மெல்ல பேச்செடுத்துச்சு. "இந்தாருங்க பெரியவரே! நமக்கு சுத்தி வளைச்சல்லாம் பேசத் தெரியாது. வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு பேசுவேம். அதாலயே கொஞ்சம் மோடிமுட்டின்னு ஊருக்குள்ள சொல்லுவாங்க. மித்தபடி மனசுக்குள்ள எதுவுங் கெடையாது. மனசுல பட்டதெ பட்டுன்னு பேசிப்புடுவேம். அத்து மத்தவங்க மனசெ காயப்படுத்துமே, கஷ்டப்படுத்தேமேன்னுல்லாம் நமக்கு யோஜிக்க வாராது. அது ஒண்ணுதாங் நம்மகிட்டெ கொறை. ஒஞ்ஞப் பொண்ண நம்மட மொத தாரத்துக்குகாரிக்குப் பிடிச்சிப் போயிடுச்சு. நகெ நட்டுன்னு ஒரு குண்டுமணி தங்கத்தெ பண்ண வாணாம். சீர் சனத்தின்னு ஒண்ணுத்தெ கொடுக்க வாணாம். எம்மட மொத தாரத்துக்கு இருக்குற அத்தனெ நகை நட்டையும் போட்டுக் கட்டிக்கிட்டுப் போறேம். அத்தோட அவ்வே பேர்ல இருக்குற லச்ச ரூவாய ஒஞ்ஞ பொண்ணு பேர்ல டிபாசிட்டுப் பண்ணிக் கட்டிட்டுப் போறேம். கலியாணச் செலவு அது இது லொட்டு லொசுக்குன்னு அத்தனையைும் பாத்துக்கிடறேம். ஒரே ஒரு விசயந்தாம் குறுக்கால நிக்கிது. அந்தப் பையேம் வெவகாரம்தான். அதெ பேசித் தீத்துப்புட்டா நாளு நட்சத்திரம் கூட பாக்க மாட்டேம். அடுத்த நொடியே கலியாணத்தெ பண்ணிக் கூட்டிட்டுப் போயிடுறேம்!" அப்பிடின்னுச்சு வீயெம் மாமா.
            "அதாம்ங்க! அந்த ஒண்ணுத்தெ மட்டும் பேசித் தீத்து வுட்டுப்புட்டீங்கன்னா காரியம் முடிஞ்சாப்புல. ஏன்னா நாள பின்னக்கி அத்து ஒரு பேச்சா வளரப்புடாது பாருங்க. முன்கூட்டியே அதெ பத்திப் பேசித் தீத்துப்புடணும். கதெ இன்னதுன்னுத்தாம் அறுத்து விட்டுப்புடணும். நல்லதோ கெட்டதோ பேசித் தீத்துக்குறதலான பின்னாடி ஒரு பெரச்சனை வராம இருக்கும்!" அப்பிடின்னு கோகிலா மாமியும் ஊடால எடுத்து விட்டுச்சு.
            "நீஞ்ஞ பேசுற மொறைய வெச்சுப் பாக்குறப்பவே நீஞ்ஞ சரியான ஆளுங்கங்றது புரியுது. மித்தவங்கன்னா கலியாணத்து ஆசெ காட்டிப் பண்ணிப்புட்டு பின்னாடி கண்டிஷம்களா போடுவாங்க. நீஞ்ஞ அப்பிடில்லா. இதாங் கண்டிஷம். இதுக்கு ஒத்து வந்தா சரின்னு நெலையால்லா நிக்குறீங்க. அதால நமக்குச் சந்தோஷம்தாமுங்க. இதெ பத்தி நேத்திக்கே நாம்ம நம்மட மித்த ரண்டு பொண்ணுககிட்டேயும் ஒடனே வண்டியப் பிடிச்சி இதாங் சங்கதின்னு சொல்லிக் கலந்துக்கிட்டேம். நாம்ம உசுரோட இருக்குற காலத்துக்குப் பயல நாம்ம பாத்துக்கிடறதுங்க. பெறவு நம்மட பொண்ணுக ரண்டும் ஆளுக்கொருத்தியா பாத்துக்கிடறதா சொல்லிப்புட்டுங்க. அதால பயலப் பத்தின கவலெ ஒஞ்ஞளுக்கு வேண்டியதிலே. எம்மட பொண்ண மட்டும் கட்டிக்கிட்டு நீஞ்ஞ போவலாம். பெற்பாடு எம்மட இந்தப் பேரப் பயலாள ஒஞ்ஞளுக்கு எந்த சங்கட்டமும் வந்துப்புடாது. அவனுக்கும் ஒஞ்ஞளுக்கும் எந்த சம்பந்ததும் இல்ல. அவ்வே அவனெ பெத்த தாயினாலும் அவளுக்கும் மவனுக்கும் கூட சம்பந்தமில்லே. ஒரு பத்திரத்தெ வாங்கிக் கையெழுத்த போட்டுத் தர்றதுன்னாலும் அதெயும் செஞ்சித் தார்றேம்!" அப்பிடின்னாரு கிட்டான் ஆச்சாரி.
            காரியம் இவ்வளவு வேகத்துல முடியும்னு வீயெம் மாமாவோ, கோகிலா மாமியோ எதிர்பார்க்கல. ஒரு முடிச்சு, ஒரு சிக்கலு இம்மாம் வேகத்துல அவிழும்னு சங்கரியும் நெனைக்கல.
            அப்பத்தாம் லட்சுமிப் பொண்ணு ஒரு வார்த்தைப் பேசுனுச்சுப் பாருங்க, "மாசத்து ஒரு தபாவாது நாம்ம எம்மட புள்ளைய வந்துப் பாக்கணும். அதுக்குச் சம்மதம்ன்னாத்தாம் நாம்ம இந்தக் கலியாணத்துக்குச் சம்மதிக்க முடியும். அதுக்கும் புள்ளையோட ஒட்டுமில்ல, ஒறவுமில்லன்னா நமக்கு இந்தக் கலியாணமும் வாணாம். ஒண்ணும் வாணாம். நாம்ம ன்னா அப்பிடி ஒங்களுக்குப் பாராமாவா போயிட்டேம் யப்பா!" அப்பிடின்னுக் கேவிக்கிட்டே அழுதுச்சு. இதெ கேட்டதும் எல்லாத்துக்கும் மனசு ஒரு மாதிரியா போச்சுது.
            ஒரு பெரிய மவுனம் பாறாங்கல்ல போல அங்ஙன வந்து உக்காந்திச்சு.
            அப்போ கோகிலா மாமிதாம் பேச்சு பேசுனுச்சு. "ஆயியையும் மவனையும் பிரிச்சி வெச்ச பாவம் எஞ்ஞளுக்கு வந்துப்புடக் கூடாது. ஒம்மட வூட்டுக்காரரே மாசத்துக்கு ஒரு தபா இந்த வண்டியில அழைச்சாந்து அப்பாவையும் மவனையும் காட்டிட்டா போச்சு. அப்பிடியே சோடியா வர்றப்ப நீஞ்ஞ வண்டியில வாங்க, நாம்ம பஸ்ஸூல வர்றேம்னு நாமளும் வந்துப் பாத்துட்டுப் போறேம்!" அப்பிடின்னு வகையா வார்த்தை‍யே கொத்துப் போட்டு மனசெ அடிக்குறாப்புல சொன்னிச்சுப் பாருங்க, அதெ கேட்டதும் எல்லாத்தோட மொகத்துலயும் இருக்குற கண்ணுலேந்து தண்ணி தண்ணியா ஊத்துது.
            "அடிப் போடி கோட்டிச் சிறுக்கி! அதாங் நாம்ம இஞ்ஞத்தாம்னே இருக்கேம். நாலு புள்ளையோட அஞ்சாவது புள்ளையா ஒம் புள்ளைய வெச்சிக்கிட்டு, மாமாவ பாத்துக்கிட மாட்டேம்னு நெனைச்சீயா?" அப்பிடின்னு சங்கரியும் பதிலுக்கு எடுத்து விட்டதுல லட்சுமிப் பொண்ணு மொகத்துல கலியாணப் பொண்ணுக்குள்ள வெக்கம் வந்துடுச்சு.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...