28 Mar 2020

மாமனுக்காகப் பண்ண மாட்டீயா?

செய்யு - 401        

            பள்ளியோடம் வுட்டு சைக்கிள்ல வந்து மொகம் கையி காலுகள அலம்பிக்கிட்டு செம்பருத்தித் தண்ணிய குடிச்சிட்டு ஒரு நடை போயிட்டு வருவோம்னு அக்கரைக்குக் கெளம்புனாம் விகடு. செம்பருத்தித் தண்ணிங்றது செம்பருத்திப் பூவுல ரெண்டைப் பறிச்சாந்து, அதெ வெந்நித் தண்ணியில வுட்டு எடுத்தா பூவோட சாயம்லாம் எறங்கி வெளுத்துப் போயிடும். அந்தத் தண்ணியில ரெண்டு ஸ்பூனு தேன வுட்டுக் கலக்குனா டீத்தண்ணியப் போல ஒரு சுவை வந்துப்புடும். காலையிலயும் சாயுங்காலத்துலயும் அந்தத் தண்ணியத்தாம் அவனுக்குப் போட்டுத் தரணும். டீத்தண்ணியோ, காப்பித் தண்ணியோ, ஏம் பாலோ கூட அவ்வேன் குடிக்கிறது இல்ல.
            என்னவோ ரொம்ப சைவமா இருக்கப் போறதா விகடு வூட்டுல அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டுக் கெடந்தாம். அது வூட்டுல ரொம்ப ரகளையா கெடந்த நேரம். அவனோட அம்மாக்காரிக்கு வெங்குவுக்குத்தாம் அதுல ரொம்ப வருத்தம். வாரத்துல ஒரு நாளாவது அசைவத்தச் சாப்பிட்டாத்தாம் ஒடம்பு ஒறுப்பா இருக்குங்றது அதோட நெனைப்பு. இப்பிடிப் பயெ மீனு, கறின்னு எதுவும் சாப்புடாம கெடக்கறது கூட பரவாயில்ல, பால கூட குடிக்க மாட்டேம், மோரு தயிரக் கூட ஊத்திக்க மாட்டேம்னு நிக்குறானேன்னு அதுக்கு ஒரு வருத்தம். சுப்பு வாத்தியாரு மவன் இப்பிடி இருக்குறதெ கண்டுக்கிடல. "ஆமாம்! அவனுக்கு வேற வேல இல்ல. எதாச்சிம் புத்தகத்தெ படிக்கிறது. அதெ கடைப்பிடிக்கிறன்னு மூணு நாளு மாசத்துக்கு நிக்குறது. பெறவு அதெ தூக்கிப் போட்டுகிட்டு வேற ஒண்ணு பிடிச்சிக்கிட்டு நிக்குறது. இதே பொழைப்பா போயிடுச்சு அவனுக்கு. ஒரு பொண்ணு பொறந்து குடும்பத் தாங்குற பயலாவா நடந்துக்கிறாம்? இன்னும் அவனெ ஒரு சின்னபுள்ள கணக்கா பாத்துகிட்டு கெடக்க வேண்டியதா கெடக்கு!"ன்னு சாடையா பேசிட்டுப் போறதோட சரி.
            அந்தச் செம்பருத்தித் தண்ணிய ஆயிப் போட்டுக் கொடுத்தத வாங்கிக் குடிச்சிட்டு அக்கரைக்கு ஒரு நடை காத்ததோட்டமா போயிட்டு வந்தவனெ வாசலுக்கு வாரதுக்குள்ள வெளியில நின்னுகிட்டு இருந்த ஆயி ஓடியாந்து, "சித்தப்பா வந்து ரொம்ப நேரமா ஒங்களுக்காக காத்துக்கிட்டுக் கெடக்காங்க. நீஞ்ஞ இம்மாம் மெதுவா வாறீங்களே!" அப்பிடிங்கிறா.
            விகடு ஒறவுமொறைய வெளங்கிக்க முடியாத ஆளு. "யாருப்பா சித்தப்பா? ஒஞ்ஞ கொல்லம்பட்டியிலேந்து ஆளுக வந்திருக்கா? நாம்ம அங்கிட்டுப் போயி இங்கிட்டு வாரதுக்குள்ள விசுக்குன்னு வாரதுக்கு ன்னா பண்ண முடியும்?"ன்னு விறுவிறுன்னு வூட்டுக்குள்ள வந்துப் பார்த்தா, நடுக்கூடத்துல வீயெம் மாமா உக்காந்திருக்கு. வீயெம் மாமாவும் விகடுவும் ரொம்ப பேசிக்கிற ஆளுக கெடையாது. மாமங்காரரு அந்தப் பக்கம் போனா, விகடு இந்தப் பக்கம் போற ஆளு.
            வூட்டுக்கு வந்த மாமாங்காரன வாங்கன்னு கூட கூப்புடல விகடு. "சித்தப்பாவ வாங்கன்னு கூட சொல்ல மாட்டீங்களா?"ங்றா ஆயி.
            "அவ்வேம் அப்பிடித்தாம்! அவ்வேம் வளப்பு அப்பிடி. அவ்வேம் வளந்தது அப்பிடி. ஒன்னயக் கூட ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சியா? சாப்புட்டீயான்னு கேக்க மாட்டேனே? சித்தம் போக்கு சிவம் போக்குன்னு வளந்தப் பயெ! அது கெடக்கட்டும். இப்பிடி உக்காரு!"ன்னு பக்கத்துல கெடந்த ப்ளாஸ்டிக் நாற்காலியக் காட்டி உக்கார சொன்னிச்சு வீயெம் மாமா.
            "யம்மா! யப்பால்லாம் எஞ்ஞ?"ன்னாம் விகடு.
            "எல்லாம் கொல்லையில இருக்காங்க. அவங்களோடல்லாம் பேசிட்டாங்க. ஒஞ்ஞளோட கொஞ்சம் தனியா பேசணுமாம். அதாங் இஞ்ஞ வந்து உக்காந்திருக்காங்க. நீஞ்ஞ அக்கரைக்கி நடை போயிருக்கிறதெச் சொன்னேம். வர்ற வரைக்கும் உக்காந்திருக்கேம்னு இஞ்ஞத்தாம் உக்காந்திருக்காங்க. தனியா பேசணுங்றதால நாம்ம கெளம்பிடறேம்ப்பா! நீஞ்ஞளும் சித்தப்பாவும் பேசிக்குங்க!"ங்றா ஆயி.‍ சொல்லிட்டு அவளும் கொல்லப் பக்கம் கெளம்பிட்டா.
            இப்பிடியெல்லாம் நம்மகிட்டெ தனியா பேசுறதுக்கு அப்பியென்ன பிரமாதாம பேச்சு இருக்குன்னு புரிபடாம உக்காந்திருக்காம் விகடு. வீயெம் மாமா பேச ஆரம்பிக்கிது.

            "இந்தாருடாம்பீ! ஒமக்கு ஒங்க அப்பம் ஆயி எல்லாம் நல்லா மேல தூக்கி வுடுறாப்புல இருந்தே. நீயி மின்னுக்கு வந்தே. நமக்கு அப்பம் ஆயி எல்லாம் இருந்தும் தூக்கி வுட ஆளு கெடையா. அப்பன் ஆயியே தூக்கி வுடல. பெரியவனத்தாம் அதாங் ஒம்மட பெரிய மாமனத்தாம் தூக்கி வுட்டாங்க. நம்மள தூக்கி வுடல. நாமளே கரணம் போட்டு மேல வந்து ஆளு. பொறந்த நாள்லேந்து இன்னிய வரைக்கும் கஷ்டந்தாம். கஷ்டம் பாட்டுக்கு கஷ்டம், நாம்ம பாட்டுக்கு நாம்மன்னு ஓடிட்டுக் கெடக்கேம். நமக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து எங்கப்பம் அதாங் ஒங்க தாத்தன் நமக்கு ஒரு காலுசட்டையைக் கூட எடுத்துக் கொடுத்ததில்லே. சூத்துல பிஞ்ச பள்ளியோடத்துக் காலுசட்டையப் போட்டுக்கிட்டு அலைஞ்ச ஆளுதாம் நாம்ம. படிக்கிறதுக்குன்னு ஒரு நோட்டு, ஒரு பேனா, ஒரு சிலேட்டுக் குச்சின்னு ஒண்ணுத்தையும் வாங்கிக் கொடுக்காத ஆளு எங்கப்பன். ஒமக்கு அப்பிடியில்ல. நீயி கேக்குறதுக்கு மின்னாடியே ஒங்க அப்பாரு அதாங் எங்கத்தான் வாங்கிக் கொடுத்துடுவாரு. ஒனக்குக் கெடைச்ச மாதிரிக்கி ஒரு அப்பன் நமக்கும் கெடைச்சிருந்தா, நாமளும் படிச்சி ஒரு வேலைக்கிப் போயிருப்பேம். ஒங்கப்பாவலே நீயி படிச்சு வேலைக்கிப் போயிட்டே. இன்னிக்குக் கொழந்தை குட்டின்னும் ஆயிட்டு. நம்மளப் பாத்தியா? இன்னிக்கும் கட்டையடிச்சாத்தாம் சோறு. ஒரு கொழந்தைக் குட்டியில்லே!"ன்னு கண்ணு கலங்குனாப்புல பேசுனுச்சு வீயெம் மாமா.
            இதையெல்லாம் இந்நேரத்துக்கு எதுக்கு நம்மகிட்டெ பேசுதுன்னு கொழப்பமா இருந்துச்சு விகடுவுக்கு. வீயெம் மாமா எப்பவும் இப்படித்தாம், எதையும் ஓப்பனா ஸ்ட்ரெய்ட்டா பேசுறதா சொல்லிக்கிட்டே சுத்தி வளைச்சு வந்து அடிச்சிப் புடிக்குங்றது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விசயம்தானம். ஆனா இப்போ எதுக்காக இப்பிடி சுத்தி வளைக்குதுங்றது விகடுவுக்குப் புரியல. இந்த மாதிரியான சுத்தி வளைச்சு பேச வர்ற விசயங்களப் புரிஞ்சிக்கிற அளவுக்கு அவ்வேன் கெட்டிக்காரத்தனமான ஆளும் கெடையாது. அதால மாமங்காரரு பேசுறதெ பேசட்டும். முடிவா அது சொல்ல வர்றதே சொல்லித்தானே ஆவணும். அப்ப சேத்து ஒட்டுமொத்தமா புரிஞ்சிக்கிடலாம்னு விகடு பச்சக்ன்னு நாற்காலியில உக்காந்தவன் உக்காந்தவன்தாம். மொகத்துல ஒரு சின்ன மாத்தம் கூட இல்லாத அளவுக்குப் பாறாங்கல்லப் போல மொகத்தெ வெச்சிக்கிட்டு உக்காந்துட்டாம். ஒரு சேதிய சொல்ல வாரவங்களுக்கு நம்பிக்கையைத் தர்றாப்புல சேதியக் கேக்குறவங்க மொகத்தெ வெச்சிக்கணும், வார்த்தையெ வுடணும். அந்த ரெண்டையும் செய்யல விகடு.
            விகடுகிட்டேயிருந்து ஒரு பிரதிபலிப்பும் வாரதத புரிஞ்சிக்கிட்டெ வீயெம் மாமா, "ன்னடாம்பீ! ஒண்ணுமே பேச மாட்டேங்றே?"ன்னுச்சு. பதிலுக்குப் பேசுற மாதிரிக்கிப் பேசுனா பதிலா எதாச்சிம் பேசலாம். அதெ வுட்டுப்புட்டு நீ வேலைக்குப் போயிட்டே, நாம்ம வேலைக்குப் போவலன்னு பேசுனா அதுக்காக ஆறுதல் சொல்ற வயசுலயா இருக்காம் விகடு. எதாச்சிம் ஒரு கேள்விய கேட்டாக் கூட அதுக்கு ஒரு பதிலச் சொல்லலாம். எல்லாத்தையும் வெலா வாரியா வெளக்குற மாதிரிப் பேசிப்புட்டு எதாச்சிம் பேசுன்னா எப்பிடி பேசுறதுன்னு விகடுவுக்கு யோசனையா ஓட அந்த யோசனையிலயே அவ்வேம் இன்னும் பேசாம உக்காந்திருந்தாம்.
            வீயெம் மாமாத்தாம் வுடாம மறுக்கா தொடர்ந்து பேசுனுச்சு. "வேல இல்லங்றதெ வுடு. வேலயப் பாத்துச் சம்பாதிச்சிப்பேம். இப்போ நமக்குப் பட்டறை இருக்கு. நாலு பேத்துக்கு நாம்ம வேலயக் கொடுக்குறேம். ஆண்டவேம் நம்மள ஒண்ணும் சும்மா வுடல. ஒமக்குத் தெரியாதது யில்லே. கலியாணம் ஆன நாள்லேந்து இன்னிய நாளு வரைக்கும் நமக்குக் கொழந்தெ யில்லே. நமக்குப் பெறவு கலியாணம் ஆன பல பேத்துக்குக் கொழந்தை ஆயி பள்ளியோடம் போயிட்டுக் கெடக்குதுங்க. ஏம் ஒனக்கும்தாம் கொழந்தையாயிடுச்சு. அதுக்காக ஒம்மட மாமிக்கு நாம்ம பண்ணாத வைத்தியம் இல்லே. அதுக்காக அழிக்காத காசி இல்லே. காசி சீரழிஞ்சதுதாம் மிச்சம். ஊருல வேற நம்மள பொட்டே போட்டேங்ற மாதிரிப் பேசுறாம். அதெப் பாத்து ஒம்மட மாமிக்காரியே அழுதழுது நெஞ்சழிஞ்சிப் போயி நமக்கு இன்னொரு பொண்ண பாத்துக் கலியாணத்தெ பண்ணி வைக்கிறா. அதத்தாம் நீயி வாரதுக்கு மின்னாடி யத்தாம் யக்காக்கிட்டே பேசிட்டு இருந்தேம். அதாங் ஒங்கிட்டேயும் பேசலாமின்னு..." வீயெம் மாமா இழுத்தா, விகடுவுக்குத் தூக்கி வாரிப் போடுது. "இதெ ஏங் நம்மகிட்டே பேசணும். இது மாதிரியான சங்கதிக நமக்குப் பிடிக்காதுங்றது ஊரு ஒலகத்துக்கே தெரியுமே!"ன்னு அவனுக்குள்ள வேகம் வருது. இப்பத்தாம் அவனோட மொகம் மாறிப் போவுது.
            விகடு அவ்வேம் பொண்டாட்டிக்காரி ஆயிகிட்டேயே அவரோட தகப்பங்காரரு சாமிமலே ஆச்சாரி, ரெண்டாம் தாரம் பண்ண விசயத்தெ பத்தி சமயத்துல இழுத்தாப்புல பேசுற ஆளு. "ஏம் ஒங்கப்பங்காரருக்கு புள்ளெ இல்லன்னா ஒம்மட அம்மாக்காரிகிட்டே நீயி நமக்குப் புள்ளே, நாம்ம ஒமக்குப் புள்ளேன்னுல்ல இருந்திருக்கணும். ஏம் புள்ளே! இப்பிடி ரண்டாவதா ஒண்ணு பண்ணி..."ன்னு இழுப்பாம். "ரண்டாவதா எஞ்ஞ யம்மாவ கட்டலன்னா ஒஞ்ஞள ஆரு வந்து கட்டிப்பா? நாமளா இருந்தவாசி ஒஞ்ஞள கட்டிக்கிட்டு சமாளிக்கிறேம். இப்பிடில்லாம் ஆவும்னு தெரிஞ்சித்தாம் ரண்டாவதா கட்டிக்கிட்டு ஒஞ்ஞளு கட்டிக்கிறதுக்கு பொண்ண பெத்து வுட்டுருக்காவோ!" அப்பிடிம்பா விகடுவெ வாயில அடைக்கிறாப்புல.
            அப்படிப்பிட்ட ஆளுகிட்டெ இப்படி வந்துப் பேசுனா அவனுக்கு எப்பிடி இருக்கும். விகடு வேண்டா வெறுப்பா வீயெம் மாமா பேசுறதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காம் ஒண்ணும் சொல்லவும் முடியாம, வீயெம் மாமா சொல்றதெ ஏத்துக்கவும் முடியாம.
            "ன்னடாம்பீ! நாம்ம சொல்ல கேட்டுக்கிட்டே உக்காந்திருக்கீயே தவுர ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்றே? நாம்ம ஒன்னத்தானடாம்பீ மலெ போல நம்பி வந்திருக்கேம். மொத கலியாணம்ன்னா சீரு சனத்தி, நகெ நட்டு, பீரோ கட்டிலுன்னு பொண்ணு வூட்டுக்கார்ரேம் செலவ பண்ணுவாம். இத்து ரண்டாவது கலியாணமில்லே. அதுவும் நம்ம தேவைக்கு நாமளே வலியக்கப் போயி பண்றதால கலியாணச் செலவு அத்தனையும் நம்மளோடது. ஆளுக்கு ஒரு கையக் கொடுத்தாத்தாம்டாம்பீ இதுல நாம்ம தலைதூக்க முடியும். அத்தாம்கிட்டேயும், யம்மாகிட்டேயும் பேசிட்டேம். நீஞ்ஞல்லாம் ஒரே குடும்பமாத்தாம் இருக்கீங்க. இருந்தாலும் அத்தானும் யம்மாவும் மாலைக்கான காசியையும், தாலிக்கான காசியையும் செஞ்சி வுட்டுப்புடறதா சொல்லிட்டாங்க. ஒம் பங்குக்கு நீயி கலியாணத்துக்கு ஒரு அய்யாயிரம் கொடுத்தீன்னா எட்டுக்குடியில வெச்சி கலியாணத்தெ முடிச்சிப்புடுவேம். இதெ பத்தி யத்தாம் யக்காக்கிட்டே பேசிட்டேம். அவ்வேம் கொடுத்தாம்ன்னா வாங்கிக்கோன்னுப்புட்டாங்க. நீயி வாத்தியாரு வேலையில இருக்கே. கை நெறைய சம்பாதிக்கிறே. தாயிமாமானுக்காக இதெ கூட செய்ய மாட்டீயா ன்னாங்ற நம்பிக்கையிலத்தாம்டாம்பீ இதெ பத்திப் பேசிட்டு இருக்கேம்? நமக்காகப் பண்ணி மாட்டீயா ன்னாடாம்பீ?" அப்பிடினிச்சு வீயெம் மாமா.
            "பண்ண மாட்டேம்!"ன்னு மொகத்துல அடிச்சாப்புல பேசிட்டு, எரிச்சலோட கூடத்தெ வுட்டு கொல்லைப் பக்கமா எழுந்திரிச்சிப் போனாம் விகடு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...