31 Mar 2020

தெருவோட போனவள்!

செய்யு - 404        

            லட்சுமி மாமியோட கலியாணம் ஆயி வீயெம் மாமா ஒரு தடவ மட்டும் கிடாரங்கொண்டானுக்கு அழைச்சிட்டுப் போனதோட சரி. மாசத்துக்கு ஒரு தபா லட்சுமி மாமி அதெ ஞாபவப்படுத்துனாலும் ஒண்ணு கெடக்க ஒண்ணு உருப்படாத ஒரு காரணத்தைச் சொல்லி அழைச்சிட்டுப் போறதில்ல. கொஞ்சம் லட்சுமி மாமி அழைச்சிட்டுப் போவ நச்சரிச்சா போதும், ஒடனே கோகிலா மாமி, "ஏந் தங்காச்சி ஒன்னய நாம்ம நல்ல வெதமா பாத்துக்கிடலையா?"ன்னு அழுகாச்சிய வைக்கும். ஒடனே லட்சுமி மாமிக்கு மனசு மாறிப் போயிடும். இப்போ வூட்டை விட்டு ஒண்ணுத்துக்கும் நாதியில்லாதது போல வூட்டுக்கு வெளியில உக்காந்திருக்கிறப்போ லட்சுமி மாமிக்கு அதெல்லாம் ஞாபவம் வருது. ஞாபவம் வர்ற வர்ற கண்ணுத்தண்ணி வேற முட்டிக்கிட்டு வருது.
            புள்ளயப் பெக்குறதுக்கு ஒரு எந்திரம் போலத்தாம் திட்டம் போட்டு நம்மள கொண்டாந்திருக்காங்க போலன்னு நெனைக்க நெனைக்க அதுக்கு அழுகாச்சியாப் போவுது. "அத்துச் செரி, ஏதோ ஒரு கோவத்துல நாம்ம பேசுனோம், அடிச்சி வெளியில தொரத்தி வுட்டது பரவாயில்ல, இப்பிடிக் கொழந்தையையுமா தூக்கிக் கொண்டாந்து பொதுக்குடின்னு போட்டுட்டுப் போவா! கொழந்தைய கொடுக்க மாட்டேம்னு கொஞ்சம் பிசாத்துக் காட்டியிருந்தா கூட மனசு ஆறியிருக்குமே!"ன்னு லட்சுமி மாமிக்கு மனசு பல வெதமா ஓடுது. புருஷங்கார்ரேம் வந்தாத்தாம் இதுக்கு ஒரு விடிவு பொறக்கும்ன்னு வேலிப்படலுக்குப் பக்கத்திலேயே உக்காந்திருக்கு லட்சுமி மாமி.
            "அந்த வூட்டுல அவளுக்கு மட்டும்தாம் உரிமையா ன்னா? நமக்கில்லையா? நாமளும் இப்பிடி வெளியில வாராம உள்ளப் போயித்தாம் உக்காந்துக்கிடணும்! இருந்தாலும் அவளுக்கு இருக்குற உடம்புக்கு நம்மல நெட்டித் தள்ளுனா நாலு ஊரு தள்ளிப் போயித்தாம் வுழுவணும். இப்போ கொழந்தை வேற மடியில கெடக்குறதால கொழந்தையோட போயி வுழுந்தா கொழந்தைக்கு என்னாவுறது?"ன்னு யோஜனையப் பண்ணிக்கிட்டு வேலிப்படலுக்குப் பக்கத்திலேயே வீயெம் மாமா வர்றதப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கு.
            இங்க இப்பிடிச் சம்பவம் நடந்துக்கிட்டு இருக்கிறப்பவே வீயெம் மாமாவுக்கு அங்க பட்டறைக்கு அவ்வளவு சங்கதியும் போயிச் சேந்திடுச்சு. பாத்துக்கிட்டு நின்ன சனங்கள்ல ரெண்டு மூணு ஓடிப் போயி எல்லாத்தையும் சொல்லிப்புடுச்சு. வீயெம் மாமா பட்டறையிலயே பட்டறைப் போட்டாப்புல உக்காந்திருக்கே தவுர அசைய மாட்டேங்குது. கடைத்தெருவுல நாலைஞ்சு பேரு வந்து அதெ வூட்டுக்குக் கெளப்பப் பாக்குறாங்க. அத்து கெளம்ப மாட்டேங்குது. பட்டறையோட விட்டத்தெ பாத்துக்கிட்டு ஏதோ யோசனையிலயே இருக்கு.
            பட்டறையிலேந்து ரெண்டு கடை தள்ளியிருக்குற மளிகைக் கடை வெச்சிருக்குற பலசரக்கு யேவாரி மாடக்கண்ணுவும் வந்து சொல்லிப் பாக்குறாரு. "யம்பீ! மொதல்ல வூட்டுக்குக் கெளம்பிப் போங்க. பொம்பளைங்களுக்குள்ள இதல்லாம் சகஜந்தாம். ஒத்தெ பொண்டாட்டிய வெச்சுக்கிட்டே அவனவனும் சமாளிக்க முடியாம தடுமாறுறாம். இதுல நீங்க ஒண்ணுக்கு ரண்டா வூட்டுல வெச்சிக்கிட்டா இப்பிடித்தாம் ஆவும். ஒங்க அத்தாம்லேந்து யாரு சொல்லிக் கேட்டீங்க? ஆனது ஆயிப் போயிடுச்சு. வூட்டுக்குப் போயி மொதல்ல சமாதானத்தெப் பண்ணுங்க. எதா இருந்தாலும் பெறவு பேசிக்கிடலாம். ஒத்து வரலைன்னா இன்னொரு வூட்டப் பிடிச்சி ரண்டையும் ரண்டு எடத்துல வெச்சிப்புடலாம்! சொன்னா கேளுங்க! மொதல்ல வூட்டுக்குக் கெளம்புங்க! ரண்டு பொம்பளைகள்ல எதாச்சிம் ஒண்ணு ஒண்ணு கெடக்க பண்ணிட்டாலும் கெட்டப் பேரு ஒங்களுக்குத்தாம்! சொன்னா கேளுங்க யம்பீ!" அப்பிடின்னு கெளப்பி விடுறாரு.
            எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு ஒரு இளிப்பு இளிக்குது வீயெம் மாமா. உக்காந்த எடத்தெ வுட்டு எழுந்திரிக்கிறாப்புல தெரியல. "என்னாம்பீ! எதெ சொன்னாலும் என்னவோ பெரிய இவுராட்டம் இளிக்குறீங்களே தவுர அசைய கிசைய மாட்டேங்றீங்களே!"ன்னு சொல்லிப்புட்டு, மாடக்கண்ணுவும் இதுக்கு மேல நம்மால ஆகாதுன்னு கெளம்பிட்டாரு. பகல் பதினோரு மணி வாக்குல நடந்த சம்பவத்த கேள்விப்பட்டு பொழுது சாயுற ஆறு மணி வாக்குல வீயெம் மாமா வூட்டுப் பக்கமா வருது. அது வரைக்கும் தெருவுல வர்ற போற சனங்க எல்லாமும் லட்சுமி மாமிய வேடிக்கைப் பாத்துட்டுப் போயிட்டுத்தாம் இருக்குங்க. போற சனங்க வீயெம் மாமாகிட்டே போயி சொல்லியும் பாக்குதுங்க.
            யாரு என்னத்தெ சொன்னா ன்னா ஆறு மணி வாக்குதலத்தாம் கெளம்புவேம்னு நெனைச்சுக்கிட்டு அசால்ட்டா கெளம்பி வருது வீயெம் மாமா. இனுமே என்ன நடக்கப் போவுதோன்னு சனங்க ஒவ்வொண்ணும் அதது வூட்டு சன்னலயும், கதவையும் தொறந்து வெச்சிக்கிட்டு வேடிக்கையப் பாக்குதுங்க.
            வீயெம் மாமா பக்கத்துல வந்ததும் லட்சுமி மாமி கொழந்தையைக் கையில தூக்கிக்கிட்டு ஓன்னு அழுகாச்சிய வைக்குது. அதெ ஒண்ணும் கண்டுக்கிடாத மாதிரி வேலிப்படல தொறந்துக்கிட்டு உள்ளாரப் போவுது வீயெம் மாமா. உள்ள வான்னு ஒரு வார்ததையக் கூட சொல்லல.  அதெ பாக்குறப்ப லட்சுமி மாமிக்கு ஆத்தாமையாப் போவுது. சம்பவம் நடந்து இம்மாம் நேரமாயும் யாராச்சிம் ஒருத்தராவது போயி சொல்லாமலா இருந்திருப்பாவோ! சொல்லித்தாம் இருந்திருப்பாங்க! அப்பக் கூட பாக்க வாரணும்னு தோணல. செரி பாக்கத்தாம் வாரல, பரவாயில்ல. வந்தப்பறவும் கூட வான்னு வார்த்தைச் சொல்ல மனசில்லையே, கொழந்தைய வாங்கிக் தூக்கிக்கணும்னு கூட நெனைப்பில்லையேன்னு நெனைச்சு மனசு புழுங்கிப் போவுது லட்சுமி மாமிக்கு.

            "பாம்பெ கட்டிக்கிட்டு நடுவூட்டுல படுக்க முடியுமா? உண்ட வூட்டுக்கு ரண்டகம் பண்ணிட்டு குடும்ப மானத்தெ காத்துல பறக்க வுடணும்னே தேவிடியா சிறுக்கி வெளியில உக்காந்துகிட்டு பண்றதப் பாத்தியளா? நாமளும் உள்ள வா வான்னு சொல்றேம். மூத்தவெ எம் பேச்சக் கேட்டத்தானே! இந்த வூட்டுல நம்மடப் பேச்சுக்கு ன்னா மருவாதி யிருக்கு? ஒரு கொழந்தையப் பெத்துப்புட்டா அவ்வே பெரிய மசுருன்னு நெனைப்பா? நாம்மப் பாத்துக் கொண்டாந்த நாயித்தானே! நில்லுன்னா நிக்கணும், உக்காருன்னா உக்காரணுமில்லே! ஒரு கொழந்தையப் பெத்ததும் நம்மள மலடின்னு சொல்றாய்யா மனுஷா மனசாட்சியே யில்லாம. இதுக்குத்தாம் ஒனக்கு அவளே கட்டி வெச்சு நமக்கு சக்களத்தியா கொண்டு வந்தேமா? எஞ்ஞ அப்பம் ஆயி நமக்குன்னு போட்ட நக, நட்டையெல்லாம் அவளுக்குப் போட்டு அழகுப் பாத்தேமில்லே! அதுக்கெல்லாம் சேத்துதாம்யா அவ்வே பண்றா அத்தனெ கூத்தையும்! நீந்தாம்யா முடிவு பண்ணணும். இந்த வூட்டுல நாம்ம இருக்கணுமா? யில்லே அவ்வே இருக்கணுமா? ஒமக்கு ஒரு கொழந்தைக்காக மனுஷா பத்துப் பொம்பளைய கட்டி வெச்சு அவளுகளுக்கு சூத்தலம்ப நாம்ம தயாரா இருக்கேம். ஆன்னா இந்த மாதிரிக்கி மானங்கெட்ட மருவாதி கெட்ட பொட்ட சிறுக்கிய வூட்டுல வெச்சிக்கிட்டு ஒரு நிமிஷ நேரம் இருக்க மாட்டேம்!" அப்பிடின்னு பெருஞ்சத்தமா வுட்டுச்சு கோகிலா மாமி.
            அம்மாம் சத்தத்தெ எழுப்பிப்புட்டு, சன்னமா வீயெம் மாமா காதுக்கு மட்டும் கேக்குறாப்புல இன்னொண்ணையும் சொன்னிச்சு கோகிலா மாமி, "அவளே மட்டும் உள்ள வான்னு சொல்லிப் பாரு. இந்த வூடு, அந்தப் பட்டறை, வய நெலம் நீச்சு எல்லாம் நம்மட பேர்லத்தாம் இருக்கு. ஒண்ணுத்தையும் ஒண்ணுமில்லாம அள்ளிப் போட்டுக் குத்திட்டுப் போயிட்டே இருப்பேம்! நாம்ம வெச்சிருக்குற நகைநட்டுல ஒரு குண்டுமணி தங்கத்தெ கூட கொடுக்க மாட்டேம். வூட்ட வுட்டு கெளம்பி போயிட்டே இருப்பேம். நீயும் அவளும் அந்தக் கொழந்தைய வெச்சிக்கிட்டு நடுரோட்டுலத்தாம் நிக்கணும் பாத்துக்கோ. நாம்ம ஒண்ணும் வெவரம் கெட்ட தனமா அவளெ கட்டி வெச்சிப்புட்டேம்னு நெனைக்காதே. இப்பிடில்லாம் நடந்தா ன்னத்தா செய்யுறதுன்னு முங்கூட்டியே யோஜனய பண்ணி வெச்சிக்கிட்டுத்தாம் பண்ணேம். இப்போ நடந்துடுச்சுல்ல. இம்மாம் நாம்ம சொல்லியும் மீறி அவளெ உள்ள கூப்புட்டேன்னு வெச்சுக்கோ நடுராத்திரி தூங்கிட்டு இருக்குறப்போ எல்லாத்தோட கழுத்தையும் நெரிச்சிக் கொன்னுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேம்! இன்னிக்கு நம்மட வாழ்க்கையே போச்ச. எவ்வே உசுரு இருந்தா நமக்கென்ன, யில்லாட்டி நமக்கென்ன?" அப்பிடினுச்சுப் பாருங்க கோகிலா மாமி, அதுல வீயெம் மாமாவுக்கு முழி பெரண்டுப் போச்சு.
            வெளியில நின்னுகிட்டு இருந்த லட்சுமி மாமி, "என்னங்கே! என்னங்கே!"ன்னு நிமிஷத்துக்கு ஒரு மொறைக் கொரலைக் கொடுத்துக்கிட்டே இருந்துச்சு.
            ஒரு பத்து நிமிஷத்துக்கு மேல ஆயிருக்கும். பெறவுதாம் உள்ள போன வீயெம் மாமா வெளியில வந்துச்சு. நம்மள கூப்புடத்தாம் வர்றதா நெனைச்சுச்சு லட்சுமி மாமி. என்னத்த இருந்தாலும் அவரும் மனுஷம்தானே! மொத பொண்டாட்டிய வுட்டுக் கொடுக்க மனசு வாரதுதாம். அதாங் உள்ளப் போயி சமாதானத்தப் பண்ணிப்புட்டு நம்மளயும் வெளியில வந்து கூப்புட்டு சமாதானத்தப் பண்ணி வெச்சிப்புடலாமுன்னு நெனைக்குறாரு போலருக்குன்னு நெனைச்சிக்கிடுச்சு லட்சுமி மாமி. நாம்மள உள்ளாரக் கூப்புட்டா நாம்ம வெவகாரம் எதையும் பண்ணாம, சொன்னதுக்கு எல்லாம் அடங்கி நடக்குறதா சொல்லிப்புட்டு, கால்ல வுழுவச் சொன்னாலும் வுழுந்துப்புட்டு இனுமே ஒத்த வார்த்தைக் கூட பேயாம இருந்துப்புடணும்னு முடிவையும் பண்ணிக்கிடுச்சு லட்சுமி மாமி. இந்த நெலையில இப்பிடி ஒரு கொழந்தையப் பெத்துக்கிட்டுப் பொறந்து வூட்டுக்குப் போனா அதெ தாங்குற மனசு அப்பங்காரருக்கு இருக்கணுமேன்னு அது வேற ஒரு யோசனையா அதுக்கு ஓடுச்சு.
            வெளியில வந்த வீயெம் மாமா வேலிப்படல ஒரு பார்வை பாத்துச்சு. கெழக்காலயும், மேக்காலயும் தெருவ ஒரு பார்வைப் பாத்துச்சு. உள்ளார நம்மள கூப்புடப் போவுதுன்னு லட்சுமி மாமி ரொம்ப ஆசைய வீயெம் மாமாவோட மொகத்தப் பாத்துச்சு. காலையிலயும் சரியா சாப்புடாம, மதியானமும் சாப்புடாம வேலிப்படலோராமாவே கெடந்ததுல அதோட ஒடம்பு மொகம் எல்லாமும் வாடிப் போயிருந்துச்சு. கொழந்தை அதுக்கு மேல தொவண்டுப் போயி அது மேல கெடந்துச்சு. அதெ பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. வீயெம் மாமாவுக்கு எப்பிடி இருந்துச்சோ தெரியல. ஒடனே உள்ளாரப் போயி படார்ன்னு கதவெ அடைச்சிச் சாத்துனுச்சுப் பாருங்க, லட்சுமி மாமிக்கு ச்சீன்னு போயிடுச்சு மனசுக்குள்ள. அதுக்கு இப்ப மேலுக்கு மேல அழுகை அழுகையா வந்திச்சு. அதால அழுகைய நிப்பாட்டிக்க முடியல. அது அழுவுற ஒவ்வொரு சொட்டு கண்ணுத் தண்ணியும் புள்ள மேல வுழுந்த அதோட ஒடம்ப நனைக்குது. "நாட்டுல இப்பிடியும் மனுஷங்க இருப்பாங்களா? நம்மட வவுறு எரியுது? எரியுற நம்மட வவுத்தப் போல இவ்வேம் குடும்பமும் எரிஞ்சி சாம்பலாவும்!"ன்னு சொல்லி ஒரு கையால கொழந்தையப் பிடிச்சிக்கிட்டு, மறுகையால குனிஞ்சி மண்ணை அள்ளி வாரி வீசுனுச்சு.
            வூட்டுக்குள்ள உள்ளார வந்த வீயெம் மாமா கோகிலா மாமியப் பாத்துப் பேசுனுச்சு, "ஏட்டி! இந்தாருடி பாவம்டி! ஒத்தையா கெடந்தவளெ மனசெக் கெடுத்து கட்டிக்கிட்டுக் கொண்டாந்தாச்சு. இப்போ இன்னொரு கொழந்தையாவும் ஆயிடுச்சு. பொம்பள வவுறு எரிஞ்சா அத்து நல்லதுக்கில்லடி! நாம்மப் போயி கூப்புட மாட்டேம்! நீந்தாம் போயி அவளெ கொண்டாரணும்!"
            "பொம்பள வவுறு எரிஞ்சா நல்லதில்லையோ! அப்போ நாம்ம பொம்பளெ யில்ல அப்பிடித்தான்னே! ராத்திரி ராத்திரி அவ்வே கூட படுத்துக் கெடந்து சொகத்தெ கண்டுப்புட்டே யில்லே! நீயி அப்பிடித்தாம் பேசுவே! போ! போ! அவளெ அழைச்சிக்கிட்டு நடுரோட்டுலயே படுத்துக்கோ! ஒன்னயப் பொட்டப் பயலேன்னு ஊரே பேசுனப்போ ஒம்மட பக்கம் நின்னவேம்யா நாம்ம! இன்னிக்கு ஒரு கொழந்தையப் பெத்துப் போட்டுட்டா அவ்வே ஒமக்கு பெரிசா போயிட்டா யில்லே! நாமளும் வவுறு எரிஞ்சா நீயி வெளங்க மாட்டே. ஒந் தலைமொறையே வெளங்காது பாத்துக்கோ! போயிக் கூப்புட்டு வாரணும்லா அப்போ  கூப்புட்டு! ஆன்னா, நீயி இனுமே வெளியில கால வெச்சாலும் சரித்தாம்! நம்மள வெளியில கால வைக்கச் சொன்னாலும் சரித்தாம்! சொத்துல ஒரு பருக்கைய அனுபவிக்க வுடாம நடுத்தெருவுல நின்னு சிங்கி அடிக்கிறாப்புல வுட்டுப்புடுவேம்!"ன்னுச்சு கோகிலா மாமி. அது பேசுறதெப் பாத்துப் பாத்து அரண்டு போயிடுச்சு வீயெம் மாமா.
            "யய்யோ யய்யோ!"ன்னு தலையில அடிச்சிக்கிடுச்சு வீயெம் மாமா. "பச்ச மண்ணுடி! அந்தக் கொழந்தையோட மொகத்துக்காவது கொஞ்சம் யோஜனெ பண்ணுடி!"ன்னு படக்குன்னு கோகிலா மாமி கால்ல விழுந்துச்சு பாருங்க வீயெம் மாமா.
            "ன்னா எங் கால்ல வுழுந்து நாம்மள பாவம் பண்ணவளா ஆக்கப் பாக்கறே யில்லே! பண்றதையெல்லாம் பண்ணிப்புட்டு, நடுராத்திரி அவ்வே ஓதுன தலையண மந்திரத்துக்கு தலைய ஆட்டிப்புட்டு, இப்போ ரண்டு பேருமா சேந்து நாடகமா போடுறீயே! வாரப்பவே பேசி வெச்சிட்டுத்தான வந்தே! நாம்ம உள்ளார போயி இப்பிடியிப்பிடிப் பண்ணுவேம். நீயி பாவப்பட்டவே போல மொகத்த தூக்கி வெச்சிக்கிட்டுக் கூப்புடுறப்ப உள்ள வந்துடுன்னு! ஒம்மட ஒலக மகா நடிப்புல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நெனைச்சியா?" அப்பிடின்னுச்சு அதுக்குக் கோகிலா மாமி.
            வீயெம் மாமா இப்போ கோகிலா மாமியோட காலைப் பிடிச்சிக் கதறுனுச்சு, "நமக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போலருக்குடி. ஒடம்பே அறுந்து வுழுந்துடுப் போலருக்குடி. ஒடம்பெல்லாம் ஒரு மாதிரியா ஆவுதே. வாய மூடுடி. ராட்சசீ!" அப்பிடினுச்சுப் பாருங்க, கோகிலா மாமி அப்பிடியே வீயெம் மாமாவ காலல ஒரு எத்து எத்தி வுட்டு அந்தாண்ட தள்ளி வுட்டுச்சு. வீயெம் மாமாவுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்திடுச்சு. எழுந்து பக்கத்துல கெடந்த சாமாஞ் செட்டுகள, பாத்திரத்தெ தூக்கி படார் படார்ன்னு அங்கயும் இங்கயும் தூக்கி அடிச்சிடுச்சு. வூட்டுக்குள்ள ஒரே சத்தமா இருக்கு. ஆனா, ஒண்ணுத்த கூட கோகிலா மாமி மேல தூக்கி அடிக்கல. அத்து செய்யுறதப் பாத்து சிரிச்சிக்கிடுச்சு கோகிலா மாமி. சிரிச்சிக்கிட்டே கோகிலா மாமி சொன்னிச்சு, "செரி! ரொம்ப ஆட்டத்தெப் போடாதே! போயி அவளெ வாரச் சொல்லு! வந்து நமக்கு அடிமை மாதிரி இருக்கச் சம்மதம்ன்னா வாரச் சொல்லு! நாம்ம சொல்றதுதாங் இஞ்ஞ சட்டம்! அதெ மீறி நீயும் நடக்கக் கூடாது. அவளும் நடக்கக் கூடாது. நடந்தா வூட்டெ வுட்டு வெளியில தள்ள நமக்கு நிமிஷ நேரம் ஆவாது!"ன்னுச்சு.
            வீயெம் மாமா சாமானுங்கள தூக்கி வீசுறதெ வுட்டுப்புட்டு வெளியில கதவெ தொறந்து வேலிப்படலோரமா பாத்துச்சு. அங்க லட்சுமி மாமியக் காணும். வேகமா வெளியில ஓடியாந்து அங்க இங்கன்னு விசாரிச்சா, ஆறரைக்குப் போற எட்டாம் நம்பரு பஸ்ல ஏறி லட்சுமி மாமி கொழந்தையோட போயிட்டாதா சொல்றாங்க தெருவுல நிக்குறவங்க.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...