30 Mar 2020

சக்களத்திச் சண்டை!

செய்யு - 403        

            எட்டுக்குடி முருகன் கோயில்ல வீயெம் மாமாவுக்கு லட்சுமியோட ரெண்டாவது கலியாணம் நடந்த பத்தாவது மாசத்துலயே அழகான பொண் கொழந்தை பொறந்திச்சு. கொழந்தை பொறக்குற வரைக்கும் கோகிலா மாமியும், லட்சுமி மாமியும் அக்காவும் தங்காச்சியுமாத்தாம் இருந்திச்சுங்க. ஓருயிரு ரெண்டு ஒடம்பு போல அப்பிடி ஒரு நெருக்கம் ரெண்டு பேருக்கும் உள்ளார.
            கொழந்தை பொறந்ததுக்குப் பின்னாடித்தாம் எல்லாம் மாற ஆரம்பிச்சது. கோகிலா மாமி கொழந்தைக்கு எப்போ பால் கொடுக்கணும், கொழந்தைக்கு எதையெதைச் சாப்புட கொடுக்கணும், லட்சுமி என்னென்னத்த சாப்புடணும்னு கண்டிஷன் போட ஆரம்பிச்சப் பெறவு ரெண்டு பேருக்கும் லேசா மனத்தாங்கல் உண்டாவ ஆரம்பிச்சிடுச்சு.
            "ஒரு கொழந்தைய எப்படிப் பாத்துக்கணும்னு ஒரு புள்ளையப் பெத்த நமக்குத் தெரியுமா? மலட்டுச் சிறுக்கியா கெடந்தவளுக்குத் தெரியுமா?"ன்னுலட்சுமிக்குக் கோவம்னா கோவம். அதெ வெளியில சொல்ல முடியல. இருந்தாலும் ஒரு குடும்பம்னு ஆச்சேன்னு பொறுத்துக்கிட்டுக் கெடந்துச்சு.
            நாளாவ நாளாவ கோகிலா மாமியோட கண்டிஷன்க அதிகமா ஆரம்பிச்சதும் லட்சுமி மாமிக்கு வெறுத்துப் போச்சு. அத்தோட கோகிலா மாமி கொழந்தைய அந்தாண்ட இந்தாண்ட கூட விடறதுல்ல. லட்சுமி மாமி ஆசையாத் தூக்கிக் கொஞ்சணும்னாலும், பசிக்கு பாலைக் கொடுக்கணும்னாலும் அதுக்குக் கோகிலா மாமியோட அனுமதிய வாங்கிட்டுத்தாம் கொஞ்சணும், பாலு கொடுக்கணுங்ற நெலமை உண்டானப் பிற்பாடுதாம் லட்சுமி மாமிக்கு அறவே வெறுத்துப் போச்சு. "கொழந்தையப் பெத்தவளுக்கு எப்பிடிப் பாத்துக்கிறதுன்னு தெரியாதாக்கா?"ன்னு எதார்த்தமா அது ஒரு நாளு கேக்கப் போவ, கோகிலா மாமி பிடுச்சிக்கிடுச்சு, "அப்ப நாம்ம கொழந்தையப் பெக்காதவ! மலடின்னுத்தான்னே சுட்டிக் காட்டுறே!"ன்னு லாவணிய ஆரம்பிச்சிடுச்சு.
            எல்லாம் பேச்சுத்தாம். பேச்சுலேந்துதாம் எல்லா சண்டையும் உண்டாவுது. சில சண்டைக பேச்சோடு ஆரம்பிச்சு பேச்சோட முடிஞ்சிப் போறது உண்டு. சில சண்டை பேச்சுல ஆரம்பிச்சி சாமாதானமா ஆயிடுறதும் உண்டு. சில சண்டை இருக்கே, பேச்சுல ஆரம்பிச்சி ரத்தம் பாக்குற அளவுக்கு வந்துப்புடும். அதால சாதாராண வாய்ச் சண்டைன்னுல்லாம் எந்தச் சண்டையையும் நெனைச்சிப்புட முடியாது. எந்தச் சண்டையில என்ன நடக்கும்றது நடந்து முடிஞ்சப் பிற்பாடுதாம் தெரியும்.
            இப்பிடித் தெரியாத்தனமா பேசி மாட்டிக்கிட்டோமேன்னு லட்சுமி நெனைச்சு சங்கடபடுறதுக்குள்ளயே, கோகிலா மாமி வுடாம ரவுண்டு கட்டி பேச ஆரம்பிச்சிடுச்சு. "நாம்ம இல்லன்னா நீயி எஞ்ஞ வந்து குடும்பத்தெ நடத்துறது? நமக்கொரு தங்காச்சி இருந்திருந்தா கூட இந்த அளவுக்குப் பாத்திருக்க மாட்டேனே! அந்த அளவுக்குப் பாத்துக்கிட்டேனே! நாயப் பிடிச்சிக் குளிப்பாட்டி நடு வூட்டுல பாயைப் போட்டு உக்கார ‍வெச்சாலும் அத்து வாலைச் சுருட்டிக்கிட்டுப் போற எடத்துக்குத்தானே போவும்பாங்களே! அப்பிடி நன்றிக்கெட்ட நாய்யா போயிட்டாளே! என்னத்தெ இருந்தாலும் ஒரு வயித்துல பொறந்தவ மாரி வருமா? எவ்வளோ ஒருத்தி வயித்துல பொறந்தவதானே! பாம்புக்கு பாலூட்டி வளத்தா அத்து பவ்வியமா இருக்கும்? படத்தெ எடுத்துக்கிட்டுச் சீறத்தானே செய்யும். நன்றி கெட்ட சென்மம். புத்தியக் காட்டுது. எஞ் செருப்பெ எடுத்து எந் தலையிலயே அடிச்சிக்கணும். அந்த மனுஷன் அப்பவே சொன்னாரு, இன்னொரு கலியாணம்லாம் வாணாம். ஒரு கொழந்தைய தத்து எடுத்துக்கிடலாம்னு. நாந்தாம் கேக்கல. ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையக் கொடுத்த மாதிரிக்கி இருக்கும்னு நெனைச்சு செஞ்சா, அந்த ஒண்ட வந்த பிடாரி இப்போ ஊரு பிடாரிய வெரட்டிப்புடும் போலருக்கே!"ன்னு பெரிய பெலாக்கணத்தெ வைக்க ஆரம்பிச்சிடுச்சு.
            "யக்கா! தப்பா நெனைச்சுக்காதீங்க! நீஞ்ஞ நமக்குத் தெய்வம். வாழ்க்கெ தந்த தெய்வம். நீஞ்ஞ அப்பிடில்லாம் பேயக் கூடாது. நீஞ்ஞ வவுறு எரிஞ்சா நாம்ம ந்நல்லா இருக்க முடியா! தப்பா பேசிருந்தா, நடந்திருந்தா மன்னிச்சுக்கோங்க யக்கா!" அப்பிடின்னு இப்போ லட்சுமி சமாதானத்துக்குத்தாம் வந்திருக்கு.
            கோகிலா மாமிக்கு ஆத்திரம் அடங்கல போலருக்கு. "பண்றதையும் பண்ணிப்புட்டு மன்னிப்புன்னா எப்பூடிடி? ந்நல்லாத்தாம்டி கெளம்புறீயோ இந்தக் காலத்துப் பொம்பளையோ! இப்பிடியே நீயி பண்றதெல்லாம் பண்ணிப்புட்டு மன்னிச்சுக்கோ மன்னிச்சுக்கோன்னு சொல்லுவே! நாம்ம வெக்கங் கெட்டுப் போயி நீயி பண்றதையெல்லாம், பேசுறதையெல்லாம் மன்னிச்சிக்கிட்டே இருக்கணும். ந்நல்லா வெவரமாத்தாம்டி இருக்கீயே! அதாங் ஒரு கொழந்தெ போறந்திடுச்சே! இனுமே புருஷங்கார்ரேம் நம்மகிட்டதான படுப்பாம். அவ்வேகிட்டே எஞ்ஞ படுக்கப் போறாம்ங்ற தெனாவெட்டுல கொழுப்பெடுத்து பண்றதுடி இத்து! நமக்கு ன்னா தெரியாதுன்னு நெனைச்சுப்புட்டீயா தேவிடியா சிறுக்கி!"ன்னு சொன்னுச்சுப் பாருங்க கோகிலா மாமி, அந்த எடத்துலத்தாம் லட்சுமி மாமிக்கு அடங்குன கோவம் திரும்பவும் வந்துப்புடுச்சு.
            "யார்ரப் பாத்து தேவிடியா சிறுக்கிங்றீயே?" அப்பிடின்னு கேட்டுச்சு லட்சுமி மாமி.
            "ஒன்னயப் பாத்துதாம்டி! நீயி தேவிடியா சிறுக்கித்தான்னே. ஒருத்தனுக்கா நீயி முந்தானெ விரிச்சே! ஒங்க அப்பம் பாத்துக் கட்டி வெச்சான்னு ஒருத்தனுக்கு முந்தி விரிச்சே. நீயி அதுக்குப் பெறவு எவ்வேம்கிட்டேயெல்லாம் முந்தி விரிச்சியோ. அதெப் பாத்து அவ்வேம் போயிச் சேந்துட்டாம். பெறவு எம் புருஷன மயக்கி அவனுக்கு முந்தி விரிச்சே. எம் புருஷனுக்கு முந்தி விரிச்சிக்கிட்டெ எத்தனெ பேருக்கு முந்தி விரிச்சியோ! பொறந்துருக்குற இந்தக் கொழந்தெ எம் புருஷனுக்குப் பொறந்ததோ? எவனுக்குப் பொறந்ததோ? யாருக்குத் தெரியும்?" அப்பிடின்னு தாறுமாறா கோகிலா மாமி பேச ஆரம்பிக்க, லட்சுமி மாமிக்கு ஒடம்பு வெட்டி வெட்டி இழுக்குறாப்புல ஆயிடுச்சு. அதெப் பாத்தும், "ச்சும்மா நடிக்காதடி! இப்பிடி நடிச்சா ஊருல இருக்குறவ்வேம்லாம் ஒன்னய பத்தினின்னு நெனைச்சிடப் போறாம்னு நெனைச்சீயா? செரித்தாம் போவீயா?"ன்னுச்சு கோகிலா மாமி.
            "எத்தனெ பேருக்கு முந்தானெ விரிச்சதெ நீயிப் பாத்தே? பொய்யிப் பொய்யா சொல்லாதடி. நாக்கு அழுவிடும்."ன்னு கம்முன குரல்ல கத்தினுச்சு லட்சுமி மாமி.

            "யாரு பாத்துடி வாடி, போடிங்றே எடுபட்ட நாயே! குச்சிக்காரிச் சிறுக்கிய கொண்டாந்து வூட்டுல குத்த வெச்சேம்ல! நமக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். இப்பவே ஒங் கொண்டைய அறுத்து மசுரை அந்தாண்ட எறிஞ்சாத்தாம்டி ஆத்திரம் அடங்கும்!"ன்னு கோகிலா மாமி லட்சுமி மாமியே மயிரைப் பிடிச்சு ஒடம்ப ரெண்டு சுத்து சுத்தி முதுகுல ஓங்கி ஒரு குத்துப் போட்டுச்சுப் பாருங்க. அப்படியே குப்புற வுழுந்திடுச்சு லட்சுமி மாமி. அதெ அப்பிடியே மசுரோட பிடிச்சி தரதரன்னு வெளியில தள்ளி திண்ணையிலேந்து பரபரன்னு இழுத்துக்கிட்டு நடுரோட்டுல போட்டுச்சு கோகிலா மாமி. கோகிலா மாமி இருக்குற பேரல் போல ஒடம்புக்கு, கச்சலா இருக்குற லட்சுமி மாமியால முதுகுல வுழுந்த குத்தையும் தாங்க முடியல, பரபரன்னு போட்டு இழுத்துக்கிட்டுப் போறதையும் தடுக்க முடியல. அதுவும் கொழந்தையப் பெத்து மூணு மாசக்காலம் கூட முடியாதப்ப அப்பிடி ஒரு குத்தை முதுகுல வாங்குனா எப்பிடி இருக்கும்? லட்சுமி மாமிக்கு உசுரு போறாப்புல வலி தாங்க முடியல. தரையில போட்டு தரதரன்னு தலைமுடியப் பிடிச்சு இழுத்தா எப்பிடி இருக்கும்? ஒடம்பெல்லாம் சிராய்ச்சிப் போயி தோலெல்லாம் தேய்ஞ்சிப் போயி ரத்தம் எட்டிப் பாக்க ஆரம்பிச்சிடுச்சு. எல்லாம் கண்ணிமைக்கிற நேரம், சொடக்குப் போடற நேரம்ன்னு சொல்லுவாங்க யில்லே. அந்த நேரத்துக்குள்ள சட் சட்டுன்னு நடந்துச்சுப் பாருங்க. நடக்குற கண்ணால பாத்து வெளங்கிக்கிறதுக்கு அந்த நேரம் பத்தாதுங்ற நேரத்துல நடந்து முடிஞ்சிடுச்சு எல்லாம்.
            அந்த வலியில ஒண்ணும் எதுத்துப் பண்ண முடியாத ஏக்கத்துல அதுவும் பேசுனுச்சு. "போடி! மலட்டுக் கூதி! அன்னிக்கு என்னவோ எம் வூட்டுக்கு வந்து கண்ணுக்குள்ளயே நம்மட மொகம் நிக்குறதா கையிலயும் கால்லயும் வுழுந்து ஒம் புருஷனுக்குக் கட்டி வெச்சுப்புட்டு, இன்னிக்கு என்னமா நாடகம் நடிக்கிறே? ஏம் ஒம்மட வவுத்துல ஒரு புழு பூச்சி வைக்கலன்னு இப்பத்தான தெரியுது? வவுத்துல ஒரு புழு பூச்சி வைக்காதப்பவே இந்த ஆட்டம் ஆடுறீயே! ஒரு கொழந்தை மட்டும் ஒனக்குப் பொறந்திருந்தா இந்தப் பூமி தாங்குமா?அந்த ஆகாசம் தாங்குமா? ஆட்டுக்கு வால அளந்துதாம்படி வைப்பாம் ஆண்டவேம்! ஒனக்குல்லாம் ஒண்ணும் பொறக்காதுங்றதை ஒம் பொறப்புலயே எழுதிட்டாம் ஆண்டவேம்!"ன்னு லட்சுமி மாமி சொன்னதும் கோகிலா மாமி குப்புற வுழுந்து கெடந்த லட்சுமி மாமிய சாணியப் போட்டு மிதிக்கிறாப்புல போட்டு மிதிச்சுச்சு.
            அது வரைக்கும் வேடிக்கைப் பாத்துட்டு இருந்த சனங்க, நெலமை விபரீதமா ஆயிடுமோன்னு பயந்துப் போயி கோகிலா மாமிய அந்தாண்ட வெலக்கி விட்டு, லட்சுமி மாமிய தூக்கி உக்கார வெச்சு முதுகெ பிடிச்சித் தடவிக் கொடுத்து, குடிக்க தண்ணிய கொடுத்து ரோட்டோரமா உக்கார வெச்சதுங்க. கோகிலா மாமியா பிடிச்சுக் கொண்டு போயி வூட்டுக்குள்ள உக்கார வெச்சதுங்க. இவ்வளவையும் பக்கத்து வூட்டுல இருந்த குமரு மாமாவோட பொண்டாட்டியான மேகலா மாமி சன்னலைத் தொறந்து வெச்சுக்கிட்டு வேடிக்கைப் பாத்துச்சு, ஓடியாந்து தடுக்கல.
            கொஞ்ச நேரமானதும் சனங்க லட்சுமி மாமிய கொண்டு போயி திண்ணையில உக்கார வெச்சு, கோகிலா மாமிய அசமடக்குறாப்புல, "ஏந் தாயீ! வயசுல மூத்தவெ! இவ்வே சின்னவே! ஒரு தப்பே பண்ணிருந்தாலும் பச்ச ஒடம்புக்காரியல்லோ! இப்பிடியா போட்டு அடிச்சி தரதரன்னு இழுத்து ஒடம்பெல்லாம் ரத்தம் தாங்கல! நீதான்னே தாயீ பாத்துக்கிடணும்!" அப்பிடின்னு சுத்தி நின்ன சனங்க சமாதானம் பேசி வுட்டதுங்க. ஆனா கோகிலா மாமி கேக்கணுமே! "என்னைக்கி அந்த எடுபட்ட சிறுக்கி நம்மள எதுத்துப் பேசுனாளோ! அன்னிலேந்து இந்த வூட்டுல அவளுக்கு வேல யில்ல. எம் புருஷங்கார்ரேம் வரட்டும். இன்னிக்கு இந்த வூட்டுல அவ்வே இருக்குறதா? யில்ல நாம்ம இருக்குறதான்னு முடிவெ பண்ணிடுறேம்!" அப்பிடின்னுச்சு கோகிலா மாமி.
            "தாயீ! ஆத்திரத்துல பேசாதடிம்மா ஆயீ! ஆத்திரத்துல வார்த்தைய வுட்டுப்புட்டா பெறவு அதெ சரிபண்ணல்லாம் முடியாது. இதாங் தாயீ! ஒம்மட வூட்டுக் கொல வெளக்கு. கொஞ்சம் நெதானிச்சிப் பேசு தாயீ! நடந்தது நடந்துப் போச்சு. கொஞ்சம் பாத்து பக்குவமா நடந்துக்கோ தாயீ! இப்பத்தாம் கொலம் தழைக்குது. மொளையிலயே கிள்ளி எறிஞ்சிப்புடாத தாயீ!"ன்னு சுத்தி நின்ன சனங்களும் எந்தப் பக்கமும் பாதிச்சிடக் கூடாதுன்னு பதனமாத்தாம பேசுனுச்சுங்க. கோகிலா மாமியோட கொணததுக்குக் கேக்கணுமே! அதாங் பெரச்சனையாயிடுச்சு.
            "இனுமே இந்த வூட்டுல அவளுக்கு எடமில்லே! அவளெ மொதல்ல திண்ணைய வுட்டு எறங்கி ஓடச் சொல்லுங்கடி! நம்மட வூட்டுத் திண்ணையில உக்காந்து யாருக்குடி பஞ்சாயத்து வைக்குறீங்க? செருப்பால அடிப்பேம்! வெளக்குமாத்துப் பிஞ்சிடும் பாருங்கடி!"ன்னு கோகிலா மாமி பேசுனதும் சுத்தி வெளியில நின்ன சனங்களுக்கு பக்குன்னு ஆயிடுச்சு. வாயால இப்பிடிச் சொன்னவே சொன்னதெ அப்பிடியே கையால செய்யுறதுக்கு எம்மாம் நேரமாவுன்னு அததும் பயந்துப் போயி திண்ணைய விட்டு வெளியில வர ஆரம்பிச்சதுங்க. அப்பத்தாம் லட்சுமி மாமி கேட்டுச்சு, "நாம்ம வூட்ட வுட்டு வெளியில போவணும்னா நாம்ம பெத்த கொழந்தெ மட்டும் ஏம் அஞ்ஞ இருக்கணும். கொண்டாந்து கொடுத்துப்புட்டா நாம்ம வூட்டெ வுட்டு வெளியில போயிடுறேம்!" அப்பிடின்னு சொன்னிச்சு.
            கொழந்தைய ஞாபவத்துக்குக் கொண்டாந்தா ஒரு வேளை கோகிலா மாமியோட மனசு மாறலாம்ங்ற நப்ப ஆசை அப்ப வரைக்கும் அவ்வளவு ரணப்பட்டும் லட்சுமி மாமிக்கு இருக்கத்தாம் செஞ்சுது. கோகிலா மாமி அப்பிடிச் செய்யும்னு லட்சுமி நெனைக்கல, வேகமா தொட்டியில தூங்கிக்கிட்டுக் கெடந்த கொழந்தையத் தூக்கி எடுத்துக்கிட்டு வந்து லட்சுமி மாமி மேல பொதக்கடின்னு போட்டுச்சுப் பாருங்க, சுத்தி நின்ன சனமெல்லாம், "ராட்சசி!"ன்னு சொல்லிப்புட்டு வாயை மூடிக்கிட்டுங்க. கொழந்தை வீல்ன்னு கத்த ஆரம்பிச்சிடுச்சு. சத்தம்னா சத்தம் ஏழு ஊரு கேக்குறாப்புல கீச்சுக் கொரல்ல கொழந்தை அழுவுது.
            "அதாங் கொழந்தையத் தூக்கிப் போட்டுட்டேம்ல! தூக்கிக்கிட்டு வெளியில கெளம்பிடணும்! சொத்துல உப்புப் போட்டுத் திங்குற ரோஷம் இருந்தா வெளியில கெளம்பிடணும். பெலாக்கணம் வெச்சிட்டு நிக்கக் கூடாது."ன்னுச்சு கோகிலா மாமி.
            லட்சுமி மாமி ஒண்ணும் சொல்லாம அழுவுற கொழந்தைய அச மடக்க முடியாம அதெ தூக்கிக்கிட்டு வெளியில வந்து வேலியோரமா தொறப்புப் படலுக்குப் பக்கமா உக்காந்திடுச்சு. கொழந்தை அழுதுகிட்டே இருந்துச்சு. வேலியோரம், தெருவுன்னு எதையும் பாக்காம லட்சுமி மாமி கொழந்தைக்குப் பாலைக் கொடுக்க ஆரம்பிச்சதும்தாம் கொழந்தை அழுவுறத நிறுத்தினுச்சு.
            "கொழந்தையத் தூக்கிக் கொடுத்துப்புட்டா போறேம்ன்னவே மொலைய தொறந்துக் காட்டி கூட்டத்தெ சேக்குறாளாக்கும்! ஏம்டா எடுபட்ட பயலுகளா மொலையப் பாக்கணும்னா போயி ஒம்மட பொண்டாட்டிகளோடத பாக்க வேண்டியத்தானடா! இஞ்ஞ எதுக்குடா இந்தத் தேவிடியாளோட மொலையப் பாத்துட்டு உக்காந்திருக்கீங்க?"ன்னு வுட்டுச்சுப் பாருங்க. சுத்தி நின்ன பொம்பள சனம் உட்பட அதது பாட்டுக்குத் தெறிச்சி ஓடிடுச்சுங்க. இதுக்கு மேல இங்க நின்னா இவ்வே வாயிலேந்து என்னென்ன பொறப்பட்டு வரும்ங்ற பயம் சுத்தி நின்ன அத்தனை சனங்களுக்கும் வந்திடுச்சுப் போலருக்கு. வேலிப் படலோரமா இப்போ ரணமான ஒடம்போட, பாலைக் குடிச்சிக்கிட்டு இருக்குற பச்சைக் கொழந்தையோட லட்சுமி உக்காந்திருக்கு. இந்தச் சம்பவம் நடக்குற வரைக்கும் அதுக்கு ஒரு வூடுன்னு இருந்தது போலவும், இப்போ எதுவுமே இல்லங்ற மாதிரியும் அத்து உக்காந்திருக்கிறதெப் பாக்குறப்ப ரொம்ப பரிதாபமாத்தாம் இருக்கு.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...