செய்யு - 193
வடவாதிக்கு திருவாரூர்லேந்து ஒரு பஸ்ஸூ!
அது எட்டாம் நம்பரு பஸ்ஸூ. அதெப் பத்தி நாம்ம முன்னாடியே பாத்தாச்சு. பயணமும் போயாச்சு.
அது ஒண்ணா. இன்னொன்னு மன்னார்குடியிலேந்து வர்ற ரண்டாம் நம்பரு பஸ்ஸூ. அதுவும் அப்பைக்கப்போ
நம்ம கதையில வந்துப் யோயிருக்கு. மூணாவது கும்பகோணத்துலேந்து ஒரு பஸ்ஸூ. மெயிலுன்னு
அதுக்குப் பேரு. காலையில எட்டு மணி வாக்குல ஒரு தடவயும், சாயுங்காலம் நாலு மணி வாக்குல
ஒரு தடவையும் அது வரும், போவும். அதுல மனுஷங்க வர்றது கம்மி. இந்த ஊருக்கு ஆளுங்க
வராம டிரைவரும், கண்டக்கரும் மட்டும் பயணம் பண்ணி வர்ற பஸ்ஸூன்னா அது ஒண்ணுதாம். வடவாதி
போஸ்ட்டு ஆபீஸ்க்கு வர வேண்டிய கடுதாசிகளை எல்லாத்தையும் அந்த பஸ்ஸூதான் எடுத்துகிட்டு
வரும். அதால அதுக்குப் பேரு மெயிலு. சாயுங்காலம் போறப்ப இங்க சேந்துருக்குற கடுதாசிகளையெல்லாம்
எடுத்துகிட்டுப் போவும். அந்த வேலையை அது கர்ம சிரத்தையா செஞ்சிகிட்டு இருக்கு.
இப்போ யாரு கடுதாசில்லாம் எழுதுறான்னு
கேட்கக் கூடாது. யாரும் பெரிசா கடுதாசி எழுதாட்டியும் பேங்குக்காரன் போடுற கடுதாசி
வகையறா இருக்கே - ஏ.டி.எம். அட்டைக வர்ற கடுதாசி, கடனைக் கட்டச் சொல்லி வர்ற கடுதாசி,
வெச்ச நகையை மீட்கச் சொல்லி வர்ற கடுதாசி, ஆதார் கார்டு வர்ற கடுதாசி, அக்கெளண்ட்ல
பேன் நம்பர இணைங்க, ஆதார் நம்பர இணைங்கன்னு சொல்லி வர்ற கடுதாசி, ஊர்ல யாருக்காவது
தீவிர இலக்கிய இதழ்களா வர்ற கடுதாசி, மாசக் கூட்டம் போடுறவங்க அனுப்புற மஞ்சகார்டு
கடுதாசி, நாலு பக்கத்தியும் மஞ்சள தடவிகிட்டு
வர்ற கல்யாண கடுதாசி, ஓரத்துல கருப்ப தடவிகிட்டு வர்ற கருமாதி கடுதாசி இதெல்லாம் அந்த
மெயிலு பஸ்ல பயணம் பண்ணித்தான் வடவாதிக்கு வருதுங்க. அதுல மக்கள் பயணம் பண்ணி வர்றது
கம்மினாலும், பயணம் பண்ணி வர்ற கடுதாசிக்குக் கொறைச்சல் இருக்காது. ஆமாம் அதுல காலையில
எட்டு மணிக்கு ஏறி உட்கார்ந்தா அது ஆடி அசைஞ்சு புதுப் பொண்ணு கணக்கா கும்பகோணம்
போயிச் சேர்றதுக்கு பதினோரு மணி ஆயிடும்.
கும்பகோணத்துல கல்யாணத்துக்குன்னு அதுல
போறவங்க தாலி கட்டுறத பாக்க முடியாம பதினோரு மணிக்கு கும்பகோணத்து பஸ் ஸ்டாண்டுல
எறங்கி, அடிச்சுப் பிடிச்சு ஓடிப் போயி மண்டபத்த அடைஞ்சு மதியான சாப்பாட்ட மட்டும்
சாப்பிட்டுட்டு மொய் எழுதிட்டு வந்த கதையெல்லாம் இங்க நெறைய இருக்கு. சாவு காரியம்னு
இந்த பஸ்ல போனவங்க முகத்தைப் பார்க்க முடியாம சுடலையில எறியுறத பாத்துட்ட வந்த கதையும்
நெறைய இருக்கு. ரொம்ப நிதானமான பஸ்ஸூ அது. அது போற ரோடே ரண்டா பிளந்து கிடந்தாலும்
எந்தப் பக்கமும் கவுந்துடாமா கும்பகோணத்துல கொண்டு போயி எறக்கிடும். அவ்வளவு நிதானம்,
பொறுமை, அமைதி அப்பிடின்னு எந்த வார்த்தையைப் போட்டு சொன்னாலும் அது அந்த பஸ்ஸூக்குப்
பொருந்தும். யாருக்காவது மனசு சரியில்லன்னா மெயில்ல ஏறி உட்கார்ந்து கும்பகோணம் போயி
திரும்பி வந்தா போதும் அது போற வேகத்துல மனசு வெறுத்துப் போயி, ஏற்கனவே சரியில்லாத
மனசும், இப்போ உண்டான வெறுப்பும் ஒண்ணா சேந்துகிட்டு மைனசும் மைனசும் சேர்ந்து பிளஸ்
ஆவுற கணக்கா மனசு சரியாயிடும். வாழ்க்கையில நிதானத்தைக் கத்துக்க விரும்புற மனுஷங்க
இந்த பஸ்ஸைப் பார்த்துதான் கத்துக்கணும். அதுல ஒரு வாட்டியாவது பயணம் போயி ஆகணும்.
நாலாவதா வடவாதிக்கு வர்ற பஸ்ஸூதான் எம்.எல்.ஏ.
பஸ்ஸூ. எங்க சுத்துப்பட்டி ஊருக்கு இந்தச் சனங்க ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.
வராறோ இல்லையோ, இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூ நாள் தவறாம சரியான நேரத்துக்கு வந்துடும்.
அதால இந்த ஊரயெல்லாம் எம்.எல்.ஏ. வந்துப் பாக்காத ஊருன்னு சொல்ல முடியாது. அது திருச்சி
பஸ்ஸூ. அந்த பஸ்ஸூ திருச்சிலேந்து நடுராத்திரி ரெண்டே முக்காலு வாக்குல வடவாதிக்கு
வரும். வந்து அப்படியே ஹால்ட் ஆயி காலையில ஆறே காலுக்கு எடுப்பாங்க. எடுத்தா டான்னு
ஒன்பதே முக்காலுக்கு திருச்சியில கொண்டு போயி விட்டுடுவாங்க. திருச்சிக்குப் போன
அந்தப் பஸ்ஸூ திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் சுத்திகிட்டு இருந்துகிட்டு மத்தியானம்
ரண்டே முக்காலுக்கு மறுபடியும் வடவாதி வரும். வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு மூணே
காலுக்குக் கிளம்பிடும் திருச்சியப் பார்க்க. இந்த வடவாதிக்கு வர்ற ஒரே நல்ல பஸ்ஸூ
இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூதான். இந்தப் பஸ்ஸப் பத்தியும் ஒரு கதை சொல்லுவாங்க. இந்த ஊரு
பய மக்களுக்கு கதை கதையா சொல்றதுன்னா அலுக்காதுன்னு இந்நேரம் ஒங்களுக்குப் புரிஞ்சுப்
போயிருக்கும். அந்தக் கதையையும் கொஞ்சம் கேட்டுப்புடுவோம். சுருக்கமான கதைதான்.
இந்த ஊரு கதைக்குள்ள பஸ்ஸூ ஓடுறது மட்டுமா, பஸ்ஸூக்குள்ளயும் கதை ஓடும். அப்படி இந்த
ஊரு கதையும், பஸ்ஸூம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்தது.
இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸோட சொந்தக்காரங்க
இருக்காங்களே! அவுங்க மொத மொதல்ல வுட்ட பஸ்ஸூ திருச்சிக்கும் வடவாதிக்கும் வுட்ட
இந்த பஸ்ஸூதான். அவங்களோட குல தெய்வம் மலையப்பன் சாமி. அந்த மலையப்பன சுருக்கி எம்.எல்.ஏ.
ஆக்கிப்புட்டாங்க. அதால அவுங்க வுட்ட பஸ்ஸூக்கு எம்.எல்.ஏ. டிரான்ஸ்போர்ட்ஸ்னு பேரு
வெச்சிப்புட்டாங்க. இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸ வுட்டாரு இல்லீங்களா அவரு யாருன்னு கேட்டீங்கன்னா...
ஜி.டி.நாயுடு இருக்கார்ல... அவரு பஸ்ஸூ வுட்டப்ப அவருகிட்ட பஸ்ஸூ ஒட்டிகிட்டு இருந்துகிட்டு
தொழிலு கத்துகிட்டவரு. நெறைய பேருக்கு ஜி.டி. நாயுடுவ விஞ்ஞானியத்தான் தெரியும். அவரு
பஸ்ஸூ வுட்டு ஓட்டன கதையெல்லாம் அவ்வளவா தெரியாம இருக்கலாம். ஜி.டி.நாயுடு இருக்காரே,
அவரு விஞ்ஞானியா மட்டும் கில்லாடியில்ல, பஸ்ஸை பக்காவா வெச்சிக்கிறதலயும், பஸ்லேந்து
சம்பாதிக்கிறதுலயும் கில்லாடி. அவருகிட்ட தொழிலு கத்துகிட்டவரு பஸ்ஸூ விட்டா எப்பிடி
இருக்கும்!
இந்த ஒரு பஸ்ஸூலேந்து சம்பாதிச்ச சம்பாத்தியத்துல
அவுங்க ஏகப்பட்ட பஸ்ஸூ வாங்கி தஞ்சாவூர்லேந்து புதுக்கோட்டை, பாக்குக்கோட்டை, வேளாங்கண்ணி,
மாயவரம், கும்பகோணம்னு கும்பகோணம் கோட்டத்துல கவர்மெண்டுக்குப் பஸ்ஸூ ஓடுதுல்ல அந்த
அளவுக்கு இப்போ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. அவுங்க தஞ்சாவூர்லேந்து எத்தனை ரூட்டுக்கு
எத்தனை பஸ்ஸூ வுட்டாலும் அவங்கள தூக்கி விட்டது வடவாதிக்கு வுட்ட இந்த மொத பஸ்ஸூதானே.
அதால அவங்க எப்போ மொத பஸ்ஸூ வாங்குனாலும் அது இந்த ரூட்டுல கொஞ்ச நாளைக்கு வுட்டுதான்
பெறவு அதை மத்த ரூட்டுக்கு விடுவாங்களாம். அதாலதான் இந்த வடவாதி ரூட்டுல ஓடுற எம்.எல்.ஏ.
பஸ்ஸூ மட்டும் எப்பவும் புதுசா இருக்கும். இந்த ரூட்டுல வுட்டு மத்த ரூட்டுல வுட்டாத்தான்
அந்த பஸ்ஸூ ஆக்சிடென்ட் ஆவாம நல்ல விதமா ஓடுமுன்னு அவுங்களுக்கு ஒரு நம்பிக்கை. ஒரு
தடவெ அப்படித்தான் தெரியாத்தனமா புதுசா வாங்குன பஸ்ஸை வடவாதிக்கு விடாம பாக்குக்கோட்டைக்கு
விட்டு அது ஆக்சிடென்ட் ஆயி பஸ்ல போனவங்கள்ல நாலு பேரு ஸ்பாட்டு அவுட். பல பேருக்கு
பலத்த காயங்களாப் போயிடுச்சி. அதுலேந்து முத பஸ்ஸூன்னா அது வடவாதிக்குதான். இந்த வடவாதி
ரூட்டுல ஓடுன பிற்பாடுதான் எந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூம் மத்த ரூட்டுகளுக்கு மாத்தி ஓடும்.
அதால இந்த வடவாதி ரூட்டுல ரோடு சரியில்லாட்டியும், குண்டும் குழியுமா இருந்தாலும்,
அதுல ஓடுற எம்.எல்.ஏ. பஸ்ஸூ மட்டும் எம்.எல்.ஏ. எப்படி வெள்ளை சொள்ளையுமா கஞ்சிப்
போட்ட வேட்டிச் சட்டையில பொலிசா வர்றாரே அப்படித்தான் எம்.எல்.ஏ. பஸ்ஸூலாம் எப்பயம்
பொலிசா வரும்.
ஊர்ல நாலு பஸ்ஸூ ஓடுனாலும் நம்ம ஊரு பய
மக்கள் இந்த ஒரு பஸ்ல அள்ளிகிட்டு ஏறும். கவர்மெண்டு பஸ்ல ஒரு கண்டக்டர்னா இந்த எம்.எல்.ஏ.
பஸ்ஸூல மூணு கண்டக்டர்னா நம்புவீங்களா? மூணு பேரு இருந்தாத்தான் ஏறுற கூட்டத்துக்கு
டிக்கெட்டுப் போட முடியும். எவ்வளவு கூட்டம் ஏறுனா என்னா அடுத்த ஸ்டாப்பிங் போறதுக்குள்ள
அந்த கண்டக்கடரு ஆளுங்க டிக்கெட்ட போட்டு பைசாவ வாங்கிப் பையில போட்டுடுங்க. எல்லாம்
அந்த பஸ்ஸூ நிர்வாகத்துல கொடுத்தப் பயிற்சி. ஜி.டி.நாயுடுகிட்ட தொழிலு கத்துகிட்டவாங்களாச்சே.
அந்த பஸ்ஸோட டிரைவரு, கண்டக்கருங்க எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருப்பாங்க. சரியான
நேரத்துக்கு வண்டி எடுக்குறதிலேந்து, வண்டிய சுத்தமா வெச்சிக்கிறதிலேந்து எல்லாத்திலயும்
தனி மார்க்கம்தான். வடவாதியில இந்த பஸ்ஸ ஆறே காலுக்கு எடுத்தா ஒவ்வொரு ஸ்டாப்பிங்குக்கும்
எந்த நேரத்துல வருங்றது நொடி பிசகாம சொல்லலாம். அந்த அளவுக்கு கணக்குப் பண்ணிகிட்டு
டிரைவரு ஓட்டுவாரு. ஒவ்வொரு ஸ்டாப்பிங்கலயும் எவ்வளவு நேரம் நிப்பாட்டி சனங்கள எறக்கி
ஏத்தணுங்றதுக்குக் கூட கணக்கு வெச்சிக்கிட்டு கண்டக்கடருங்க பிகிலு ஊதுவாங்குன்னா பாத்துக்கோங்க.
நடுராத்திரிக்கு மேல அகாலத்துல இந்த பஸ்ஸூ
திருச்சிலேந்து கிளம்பி ரெண்டே முக்காலுக்கு வருன்னு சொன்னோம்ல. அதுலயாவது கூட்டம்
கம்மியா இருக்கும்னு நெனைச்சீங்களா! அதுலயும் தூங்கிக்கிட்டு, வழிஞ்சிகிட்டு முப்பது
நாப்பது பேருக்கு மேல வந்து வடவாதியில எறங்கும். அதுலதான் வடவாதிக்கு வர வேண்டிய நியூஸ்
பேப்பரு, பார்சல்கள், பால் பாக்கெட்டுகள், பூ கட்டுறவங்களுக்கான பூவு எல்லாம் வந்து
சேரும்.
இப்போ எதுக்கு குறுக்கே இந்த எம்.எல்.ஏ.
பஸ்ஸை ஓட்டுறோம்னு கேட்குறீங்களா? ராத்திரி ரெண்டே முக்காலுக்கு வர்ற இந்த பஸ்ஸூலதான்
பாக்குக்கோட்டையிலேந்து வர்ற ஆதிகேசவன் தஞ்சாவூருக்குப் போயி, தஞ்சாவூர்ல இந்தப்
பஸ்ஸைப் பிடிச்சி வடவாதிக்கு வந்து எறங்கியிருக்கிறான், போயிருக்கிறான். அவனுக்குத்
தோதா பஸ்ஸூ அமைஞ்சுப் போச்சு. ராத்திரி ரண்டே முக்காலுக்கு வந்து எறங்குனா, காலையில
ஆறே காலுக்குத் திரும்பிப் போறதுக்கு அந்த பஸ்ஸூ ரொம்பவே அவனுக்கு வசதியா இருந்துருக்கு.
சித்துவீரனுக்கு யோசிக்க யோசிக்க விசயம்
இப்போ கொஞ்சம் கொஞ்சமா புரிபடுது.
*****