30 Aug 2019

ஒத்தக் கதவுக்கு ரெட்ட தாழ்ப்பாள்



செய்யு - 192
            ஓர் ரகசியப் பொட்டி போல இருக்கு இப்போ அந்த டாய்லெட்டு. கதவைத் திறந்தா என்னென்னமோ ரகசியங்கள் எல்லாம் வந்து விழுமோ யாருக்குத் தெரியும். கதவைத் திறக்கச் சொல்லியும் திறக்க மாட்டேங்றாளே சுந்தரி, ஓங்கி ஒதைச்சும் அசைஞ்சு கொடுக்க மாட்டேங்றாளே இந்த சுந்தரி அப்படிங்ற கோபம் சித்துவீரனுக்கு இப்போ அதிகமாயிட்டே போவுது.
            "ஏம்டி அவ்சாரி நாயே! உள்ள யாரடி வெச்சிருக்கே? கதவத் தொறடி தே.... சிறுக்கி." அப்பிடின்னு வாய்ல வந்தபடியெல்லாம் அவளுக்கு மட்டும் கேட்குற மாரி பல்ல கடிச்சிகிட்டு சத்தம் போடுறான் சித்துவீரன். சத்தம் அதிகமாயி வெளியில கேட்டு அக்கம் பக்கத்துல யாரும் எழுந்திரிச்சி வந்துட்டா அது வேற மானக்கேடா போயிடுமேன்னு ஒரு யோசனையும் அவங்கிட்ட இருக்கு.
            அதுக்கு ஏத்த மாதிரி "இந்த வூட்டுல நிம்மதியா டாய்லெட்டு போவ முடியுதா? இப்பிடிச் சந்தேகம் பிடிச்ச சனியங்கிட்ட சிக்கி சீக்குப்படணும்னு எம் தலயில எழுதியிருக்கு!" என்று பதிலுக்கு சுந்தரியும் பல்லக் கடிச்சிகிட்டு அவனுக்கு கேட்குற அளவுக்கு அவளும் சத்தம் போடுறா.
            "ஒன்னய என்னத்தாம் நாக்கப் பிடுங்கிகிட்டு நாண்டுக்குற மாரி கேட்டாலும் ஒனக்கெல்லாம் ஒண்ணும் ஏறாது.எல்லாத்தியும் உதுத்துட்ட நாடுமாறிதானே நீயி. ஏய் கண்டார...நீயெல்லாம் எதுக்குடி இந்த நாத்த ஒடம்ப வெச்சிகிட்டு உசுரோட இருக்கே?" என்று அவன் போடும் சத்தம் கொல்லைப் பக்கத்துல ஓடிக் கிடக்குற சாக்கடையை விட அதிகமா நாறுது.
            இவன் போடுற சத்தத்த ஒரு கட்டத்துல சுந்தரியால பொறுக்க முடியல.
            "இந்த நாத்த ஒடம்புக்குதாம்டா நீயி பாக்குக்கோட்டை வந்து நாக்கத் தொங்க போட்டுகிட்டு நின்னே. ஏம்டா பாக்குறதுக்க நாம்ம ஒம்ம பொண்ணு மாரிதாம்டா இருக்கேம்? பொண்ணு மாரி இருக்குற நம்மள அப்பங்காரம் மாரி இருக்கற நீயி கட்டிக்கலாமாடா?" என்கிறது சுந்தரி.
            இப்படிச் சுந்தரி பேசும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல சித்துவீரன். "ஏய் மானங்கெட்ட சிறுக்கி! ஒனக்குத் தனியா வூடு வாங்கிக் கொடுத்து பொங்கித் திங்றதுக்கு சம்பாதிச்சிப் போட்டா... அரிப்பெடுத்துப் போயி ஊரு மேய்ஞ்சிட்டுத் திரிவியாடி சொரி நாயே!" அப்படிங்றான் சித்துவீரன்.
             "போடா பொட்டப் பயலே! நீயென்ன ஒழுங்கா சொகம் பண்ணிருந்தா நாம்ம ஏம்டா இன்னொருத்தங்கிட்டப் போறேம்? ஒரு பத்து செகண்டு ஒன்னால் ஒழுங்கா செய்ய முடியுமாடா புழுத்திப் பயலே! ஊருல வந்து சோன்னேம்னா வெச்சிக்க ஒன்னய ஆம்பளன்னு ஒரு பயலும் மதிக்க மாட்டாம். நீயெல்லாம் ஏம்டா மீசய முறுக்கிகிட்டு ஆம்பளன்னு திரியுறே? போடா புடவையைச் சுத்திகிட்டு எவனையாவது கட்டிகிட்டு சோறு ஆக்கிப் போடுறா ஒம்போது!" அப்படின்னு சுந்தரி சொன்னதும் சித்துவீரனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம் பொங்கிகிட்டு வருது. இப்போ அதுக்கு மேல அவனுக்கு எப்படிப் பேசுறதுன்னு புரியல. இந்த அளவுக்கு எறங்கி அவ்வே பேசுவான்னு அவன் கொஞ்சம் கூட நினைக்கல. ஒடம்பெல்லாம் அப்படியே துடிக்குது. துடிக்குதா? நடுங்குதா?ன்னா அது வேற சரியா புரியல.
            இந்தச் சமூகத்துல ஒரு பொம்பள ஆம்பளய இந்த அளவுக்கு எறங்கிப் பேசிட்டா அவனோட நிலைமை சிரமம்தான். பேர்ல இருக்குற வீரம் இப்போ சித்துவீரனுக்கு வார்த்தையில வர மாட்டேன்னு அடம் பிடிக்கிது. அந்த இயலாமையில வீட்டுக்குள்ள ஓடிப் போயி ஒரு அரிவாள எடுத்து வந்து கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுலாமான்னு நினைக்கிறான். இல்ல கதவத் தொறந்துகிட்டு வெளியில இழுத்துப் போட்டு அந்தப் பயலயும், அவளையும் சாத்து சாத்தலாமான்னும் யோசிக்கிறான். அவனால ஒரு முடிவுக்கு வர முடியல. வர்ற கோபத்துக்கு தரையைப் போட்டு ஓங்கி ஓங்கி உதைக்கிறான். டக்குன்னு டாய்லெட்டோ வெளித்தாழ்ப்பாள போட்டுட்டு, "இருடி எவ்வளவு நேரந்தான் உள்ள இருப்பேன்னு பாக்கிறேம்!" என்று சத்தம் கொடுக்கிறான் சித்துவீரன். அவன் வெளித்தாழ்ப்பாளைப் போடும் கீறிச்சென்ற  சத்தம் உள்ளுக்குள் அவளுக்கும் கேட்கிறது.
            இங்க கிராமங்களில் டாய்லெட்டு கதவுக்கு உள்பக்கம், வெளிப்பக்கம் என ரெண்டு பக்கமும் தாழ்ப்பாள் போட்டு வைத்திருப்பார்கள். டாய்லெட்டுக்கு உள்ளே போனால் டாய்லெட்டை உள்பக்கமாக பூட்டிக் கொள்ள உள்தாழ்ப்பாளும், மற்ற நேரங்களில் திறந்துக் கெடக்கும் டாய்லெட்டுக்குள் நாய் போய் விடக் கூடாது என்பதற்காக வெளித்தாழ்ப்பாளும் போட்டு வைத்திருப்பார்கள். அதாவது மனுஷன் போற டாய்லெட்டுக்குள் நாய் போய் விடக் கூடாதுன்னு அப்படி ஓர் ஏற்பாடு.
            "அடச்சீ! பொட்டச்சி வெளிக்கிப் போறதப் பாக்கணும்னு நெனைக்கிறீயேடா மானங்கெட்டப் பயலே! நீயெல்லாம் ஒரு அப்பனுக்குப் பெறந்தியா? நாலஞ்சு அப்பனுக்குப் பெறந்தியா? யில்ல பீய்க்குப் பொறந்தீயா? இப்பிடி டாய்லெட்டுக்குள்ள வெச்சிப் பூட்டுறீயே நீயெல்லாம் ஆம்பளையாடா?" என்கிறது சுந்தரி.
            "வர்ற ஆத்திரத்துக்கு முண்டச்சி ஒன்னய அப்படியே மண்ணெண்ணெயை ஊத்தி எரிச்சிப் புடுவேம்டி!" என்கிறான் சித்துவீரன்.
            "இப்போ நீயி கதவுத் தாப்பாள தொறந்து விட்டுட்டு வூட்டுக்குள்ளார போவல அப்படியே அம்மணக் கட்டய வெளில வருவேம் பாத்துக்க!" என்கிறது சுந்தரி.
            "வா! அப்பதாம் ஒம் பவுசுக்கட்ட ஊரு ஒலகத்துக்குத் தெரியும்!"
            "கட்டுன பொண்டாட்டிய ஊருக்கெல்லாம் காட்ட நெனைக்கிறீயேடா மாமா பயலே!"
            இப்படி ரண்டு பேரும் மாத்தி மாத்திப் பேசிட்டே இருக்காங்க. இடையில கொஞ்ச நேரம் அமைதி நிலவும். மறுபடியும் பேச்சு ஆரம்பிக்கும். இப்படியே போயிட்டு இருந்ததுல கெழக்குல சூரியன் தலையை எட்டிப் பார்க்கிறான் என்னடா இன்னிக்கு விடியக்காலயலேயே நாராசமா சத்தம் வந்துகிட்டு இருக்குதுன்னு.
            "ச்சீய்! கதவத் தொறடா பொட்ட! இஞ்ஞ நாம்ம தாழ்ப்பாள திறக்கிறேம்!" என்று சுந்தரி உள் தாழ்ப்பாளை விலக்குகிறது.
            "ஊரு மேயுற சிறுக்கிக்குக் கொழப்பப் பாரு! வாடி வெளியில மொதல்ல. நீ வெச்சிருக்குற மொகரக் கட்டைய, அந்தக் கொடுக்க நாமளும் பாக்கணும்!" என்று சித்துவீரனும் வெளித்தாழ்ப்பாளை விலக்குகிறான்.
            கதவைத் திறந்ததும் சித்துவீரனைப் போலவே ஒல்லியான கருப்பான கரிக்கட்டையைப் போன்ற உருவம் டாய்லெட்டை விட்டு வெளியே ஓடி வேலியை லாவகமாக நகர்த்தி வைத்து விட்டு வேக வேகமாக ஓடுகிறது.
            இப்போ சித்துவீரன் சுந்தரியை இழுத்துப் போட்டு அடி அடியென அடிக்கிறான். சுந்தரியைக் கீழே இழுத்துப் போட்டு மிதி மிதியென மதிக்கிறான். கொல்லைப் பக்கத்தில் அடுக்கி வைத்திருக்கும் வெறகுக் கட்டை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு சாத்து சாத்து என சாத்துகிறான். அடிக்க அடிக்க அவனது ஆத்திரம் அதிமாயிட்டே போகுதே தவிர குறைஞ்ச பாடில்ல. ஆத்திரத்தோட குணம் அதுதான். திட்டுனா குறைஞ்சிடும், அடிச்சா குறைஞ்சிடும்னு நெனைச்சு ஆரம்பிச்சா... திட்டத் திட்ட அது இன்னும் அதிகமாவும். அடிக்க அடிக்க சொல்லவே வேணாம், அது கொலை பண்ணுற அளவுக்கு அதிகமாவும். அவன் அடிக்கிற அடியைப் பார்க்கிறப்ப அவனே சுந்தரியை அடிச்சக் கொன்னுடுவான் போலருக்கு. அவ்வளவு அடிக்கும் சுந்தரிகிட்டேயிருந்து ஒரு சின்ன சத்தம் வரணுமே! ம்ஹூம் வரல!
            அடிச்சு அடிச்சு அவனும் கை கால் ஓய்ஞ்சு களைச்சுப் போறான். ஒடம்புலயோ, முகத்துலயோ எந்தக் களைப்பும் தெரியாத அளவுக்கு எழுந்துப் போறா சுந்தரி இப்போ. உடம்பெல்லாம் ரத்தக் காயமா இருக்கு. முகமெல்லாம் ரத்தமா வழியுது. வேற யார இருந்தாலும் இவ்வளவு அடிய வாங்கிட்டு உசுரோட இருக்குறது சிரமந்தான். இதைப் பாக்கிறப்ப சித்துவீரனுக்கு இன்னும் ஆத்திரம் தாங்கல. ஆனா அடிக்கவும் ஒடம்புல தெம்பு இல்ல.
            "இப்டி ஒரு வாழ்க்க வாழுறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்!" என்று  சொல்லிவிட்டு "த்துப்பூ!" என்று காறித் துப்புகிறான் சித்துவீரன்.
            "ஏம் நீயுந்தாம் இப்பிடி ஒண்ண பாத்துப்புட்டு உசுரோட இருக்கே? நீயுந்தாம் நாண்டுகிட்டுச் சாவலாம்டா நாதாரிப் பயலே!" என்று அந்த நிலையிலும் ஒரு மொறைப்பு மொறைச்சுகிட்டு சொல்லிட்டு வூட்டுக்குள்ளப் போவுது சுந்தரி.
            "எப்படி இந்தப் பாவிப்பய மவன் பாக்குக்கோட்டையிலந்து இஞ்ஞ வந்திருப்பாம்! அதுவும் அந்த நேரத்துல!" அப்பிடின்னு இப்போ யோசனை ஓடுது சித்துவீரனுக்கு. வடவாதி என்ன நெனைச்ச நேரத்துல வந்துட்டுப் போறதுக்கு ஏகப்பட்ட பஸ்ஸூ ஓடற டவுனா என்ன! அதெச் சொல்லப் போனா சர்க்கரை ஆலை இருந்த ஊருக்கு இவ்ளோ பஸ்ஸூதான் ஓடுனாச்சுன்னு நீங்க தலயில அடிச்சீப்பீங்க! ஊருதான் சர்க்கரை ஆலை இருந்த ஊரு. இந்த ஊருல அப்போ ஒரு ஹை ஸ்கூலு கிடையாது. அங்கேயிருந்து அஞ்சாறு கிலோ மீட்டரு தள்ளிக் கிழக்கால மணமங்கலத்துலதான் ஹை ஸ்கூலு இருந்துச்சு. இந்த ஊருல ஸ்கூலு கட்டுனா அவனவனும் படிச்சிப்புட்டு சர்க்கரை ஆலையில வேலை பாக்குறதுக்கு ரொம்ப கூலி கேட்பான்னு சர்க்கரையை ஆலையைக் கட்டுனவங்க பள்ளிக்கூடத்தைத் திருவாரூரு டவுன்ல போயி கட்டிக்கிட்டாங்க. இந்த ஊருலேந்து அவனவனும் அடிச்சு பிடிச்சுகிட்டு அங்கப் போயி எப்படிப் படிப்பான்னு அவங்களுக்கு ஒரு நெனைப்பு. அதுக்கு ஏத்த மாதிரி இந்தச் சுத்துப்பட்டியில இருந்தவனுங்களும் கரும்பு வெட்டுறது, அதைக் கட்டு கட்டறது, அதைத் தூக்கிப் போடுறது, பேக்டரியில மூட்டைத் தூக்குறதுன்னு அப்படியே காலத்தை ஓட்டிட்டானுங்க.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...