28 Aug 2019

கொம்பு வெச்ச செல்போனு!



செய்யு - 190
            கதைக் கேட்குறதுன்னா சின்ன புள்ளைங்களிலேந்து பெரியவங்க வரை ஓர் ஆர்வம் இருக்கத்தான் செய்யுது. அந்தக் கதை நம்ம வாழ்க்கையில நடக்காத வரைக்கும், மத்தவங்க வாழ்க்கையில நடந்துகிட்டு இருக்குற வரைக்கும் கதையைக் கேட்குற சுவாரசியம் போயிடாது. எப்போ அந்தக் கதை நம்ம வாழ்க்கையில நடக்க ஆரம்பிக்குதோ அப்போ நீங்க ஒரு கதைச்சொல்லியா ஆயிடுவீங்க. ஆகித்தான் ஆகணும். ஒங்க மனசு வெடிச்சிடாம இருக்க அந்தக் கதையை நீங்க யாருகிட்டயாவது எறக்கி வெச்சுத்தான் ஆகணும். உலகத்துப் பாரத்தைச் சுமந்துடலாம். ஆனா மனசுல இருக்குற கதையோட பாரத்தைச் சுமக்க முடியாது. நீங்க யாருகிட்டேயும் எதையும் சொல்ல வேணாம்னு நெனைச்சாலும் அது உங்களையறியாமல் உங்ககிட்டேயிருந்து அப்பிடி இப்பிடின்னு யாருகிட்டயாவது பேசிகிட்டு இருக்கிறப்ப அதுவா ஓட்டைப் பானையிலிருந்து ஒழுகிப் போற தண்ணி கணக்கா ஒழுகிப் போயிட்டு இருக்கும்.
            ஒரு கதைன்னா என்ன நினைக்கிறீங்க? இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க அல்லது இப்படியும் மனுஷங்க இருக்காங்களே அப்பிடின்னு நினைக்க வைக்கிற ஒண்ணுதான் அது. கதையில யாரு வேணாலும் எப்பிடி வேணாலும் இருக்கலாம். அது கதையோட சுதந்திரம் கெடையாது. அப்படி கதைக்குள்ள இருக்குற மனுஷங்களோட சுதந்திரம். ஒரு நிஜமான கதை அப்பிடித்தான் இருக்குது.
            இப்படிக் கதையைப் பத்தியே கதை கதையா பேசிக்க வேண்டியிருக்குப் பாருங்க. இதுதான் கதைக்குன்னு இருக்குற கதை. நாமெல்லாம் இப்போ கதைக்குள்ள சிக்கிக்கிட்டோம் ஒரு பெருங்காட்டுல சிக்குன மாதிரி. ஒரு பெருங்காட்டுல வித விதமா இருக்குற மரங்கள், அருவிகள், செடி கொடிகள், விலங்குகள் கணக்கா ஒரு கதைக்குள்ளயும் பாருங்க வித விதமான மனுஷங்க, இடங்க, பழக்க வழக்கங்க, முறைதலைங்க, சம்பவங்க, முடிவுங்க, மனசோட நிலைங்க, குணாதிசயங்கன்னு என்னென்னமோ இருக்கு.
            கொழந்தை ஆறு மாசத்துல அபார்ஷன் ஆச்சுங்ற சேதி துபாய்ல இருக்குற சித்துவீரனுக்குச் சொல்லப்பட்டதும் அடுத்த ரெண்டு மாசத்துல அவ்வேன் அங்க இருக்கப் பிடிக்காம கெளம்பி இங்க நம் நாட்டுக்கு வந்துப்புட்டான். அவனுக்கு இங்க இருக்குற எல்லாத்தி மேலயும் செமத்தியான கோபம். கொஞ்சம் கவனமா இருந்துருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்காதுன்னு நெனைக்கிறான். அதை எல்லார்கிட்டயும் சொல்லிச் சொல்லி எரிஞ்சு வேற விழுவுறான்.
            அவனோட கோபம் யாருக்கு வேணும் சொல்லுங்க. அவ்வேன் அப்படிக் கோபமா இருக்குறதே நல்லதுன்னு நெனைக்குது லாலு மாமா. ஒரு மனுஷன் ரொம்ப யோசிக்கக் கூடாதுன்னு நெனைச்சா அவனைக் கோபப்படுத்தி விட்டுடணும். யோசிக்கிற மனுஷன் ஏன் கோபப்படுறான் சொல்லுங்க? இப்படி அபார்ஷன் ஆகிப் போச்சேங்ற சித்துவீரனோட கோவத்துல நிறைய விசயங்கள் மறைஞ்சுப் போச்சு. இப்படி அபார்ஷன் ஆக விட்டுட்டாங்களே என்கிற ஒரு விசயத்தைத் தவிர வேற எதையும் நினைக்கல சித்துவீரன். இதுக்காக, கண்டுக்காம விட்டுட்டதா முருகு மாமாவையும், நீலு அத்தையையும் போயி பிடிபிடின்னு பிடிக்குறான். எப்படி வாயும் வயிறுமா இருக்குறவள தஞ்சாரூ, திருச்சின்னு அலய விட்டு இப்படி பண்ணி வெச்சிருக்கீங்களேன்னு லாலு மாமாவையும் சகட்டு மேனிக்குப் பேசுறான் சித்துவீரன். அவங்க எல்லாரும் வருத்தமா கேட்டுக்குறது போல கேட்டுகிட்டு மனசுக்குள்ள சிரிச்சுக்கிறாங்க. அதுலயும் லாலு மாமாவோட நமுட்டுச் சிரிப்பு இருக்கே "சுத்த புத்திக்கெட்ட பயலா இருப்பாம் போலருக்கு! கேனக் கிறுக்கன்!" அப்பிடிங்ற கணக்கா இருக்கு. "என்னம்மா ஆட்டம் ஆடி பிரிஞ்சுகிட்டுப் போனான்! கொல்லைக்கு நடுவுல யாரும் இல்லாத நேரத்துல வேலிய வைக்கிறான். வேண்டியதுதான் இந்தப் பயலுக்கு இதெல்லாம்!" என்று நினைக்கிறது முருகு மாமா.
            ஒரு மனுஷன் ஓர் இழப்பைத் தன்னோட இழப்புன்னு நினைச்சா இப்படித்தான் எல்லார்கிட்டயும் கோபப்படுறான். அந்த இழப்புக்கும் தனக்கும் சம்பந்தமோ, தொடர்போ இல்லைன்னு நெனைச்சுட்டான்னு வெச்சுங்க அதெ ஒரு காமெடியா ஆக்கி எல்லார்கிட்டயும் நக்கல் பண்ணிகிட்டு சிரிச்சுகிட்டு இருக்கிறான்.
            சித்துவீரனும், "ஆனது ஆயிப் போச்சு, அதையே நெனைச்சுகிட்டுக் கவலைப்பட்டுக்கிட்டுக் கொண்டிருந்தா காரியும் ஆகுமா? ஆவுற காரியம் வேற ஆவாமல்ல போயிடும்னு நெனைச்சுகிட்டு அடுத்ததா என்ன செய்யலாம்"னு யோசிக்குது.
            இப்படி எல்லா விசயமும் முடி மறைச்சு முடிஞ்சுப் போச்சுன்னு நெனைச்சப்பத்தான் மறுபடியும் அந்த விசயம் வேற ஒரு விதத்துல வந்து தலைதூக்குது.
            தஞ்சாவூருல லாலு மாமாவோட பையன் வேலன் செல்போனு ஒண்ணு வெச்சிருந்ததா சொன்னது ஞாபவம் இருக்கும்னு நெனைக்கிறேன். அது செல்போனு வந்த புதுசு. சோப்பு டப்பால பாதி அளவு இருக்கற செல்போனு. அந்தச் செல்போனு காணாம போன விசயத்தை ஒங்ககிட்ட சொல்லல இல்ல. இந்தச் சுந்தரிப் பொண்ண தஞ்சாவூர்ல கொஞ்ச நாளு வெச்சிருந்து அதைப் பாக்குக்கோட்டை கொண்டு போய் விட்ட நாள்லேர்ந்து அது காணல. லாலு மாமாவும், வேலனும் வீட்டையும், தஞ்சாவூரையும் சல்லடைப் போட்டுத் துளைக்காத குறையா தேடுறாங்க. ஆப்புடல.  வெளியல போறப்ப தவற விட்டுட்டோமா, இல்ல யாராவது ஆட்டையப் போட்டுட்டாங்களா என்ற குழப்பம் ரெண்டு பேருக்கும்.
            லேண்ட்லைன் நம்பர்லேர்ந்து அந்த நம்பருக்குப் போன் பண்ணிப் பாக்கறாங்க. ரிங் போவுது. யாரும் எடுக்க மாட்டேங்றாங்க. இப்படி காணாமப் போன சாயுங்காலத்துல ஆரம்பிச்சு ராத்திரி பத்து மணிக்கு வரைக்கும் போன் பண்ணா ரிங் போயிட்டே இருக்குது. எடுக்கத்தான் மாட்டேங்றாங்க. ஆக அது இங்க எங்கேயோத்தான் இருக்கணும்னு லேண்ட் லைன் நம்பர்லேர்ந்து போனைப் போட்டு ஒரு எடம் விடாம தேடிப் பாக்குறாங்க. பத்து மணிக்கு மேல ரிங் போறது நின்னுப் போயி அதுவும் ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சுப் போல. அதுவும் எவ்வளவு நேரம்தான் சத்தம் போட்டுகிட்டே கிடக்கும். அறுபவது, எழுவது தடவைக்கு மேல அடிச்சா அது சத்தம் போட்டு போட்டே மட்டையாகிடுச்சுப் போலருக்கு.
            தான் போன எடம், வந்த எடம், நண்பருங்க வீடுன்னு ஒரு எடம் வுடாம தன்னோட பைக்கை வெச்சுகிட்டுத் தேடிப் பார்க்கிறான் வேலன். அவன் தேடுறதையும், லாலு மாமா தவிக்குறதையும் பார்த்தா பரிதாபமா இருக்கு. அவுங்க அப்படி நிக்குற நெலமையைப் பார்த்தாலே எவ்வளவு கொடுமையான திருடனா இருந்தாலும் அந்தச் செல்போனை எடுத்திருந்தா கொண்டாந்து கொடுத்துடுவான். எடுக்காட்டியும் அது எங்க, எப்படித் தொலைஞ்சிருந்தாலும் எப்படியாவது கண்டுபிடிச்சிக் கொடுத்துடுவான். கடைசியா வேலனுக்கும், லாலு மாமாவுக்கும் அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாம போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளய்ண்ட்ட கொடுத்துட்டு ஆப்பாயிட்டாங்க. மனசுல வருத்தம் அவ்வளவு சீக்கரம் போகுமா? கொஞ்ச நாளைக்கு அதைப் பத்திப் பேசிட்டு இருந்துகிட்டு விட்டுட்டாங்க.
            அந்தக் காணாம போன செல்போனு சித்துவீரன் வடவாதி வந்ததுக்கு அப்புறம் அவன் வீட்டுல கிடைக்குது பாருங்க. அது எப்படி தஞ்சாவூர்ல காணாம போனது வடவாதியில கெடைக்குதுன்னு சந்தேகமா இருக்கா?
            பொண்டாட்டிக்காரிக்கு அபார்ஷன் ஆயிடுச்சேங்ற விரக்தியில வெளிநாட்டுலேந்து நம்ம நாட்டுக்கு வந்து, வெளியில சுத்திக்கிட்டு வீட்டுக்குள்ள வந்து நகை நெட்டு சாமானுங்க பீரோல்லாம் வெச்சிருக்குற ரூமுக்குள்ள நுழையுறான் சித்துவீரன். நுழைஞ்சா அங்க இருக்குற ப்ளக்பாயிண்ட்ல விநோதமா சின்னதா ஒரு டப்பா போல ஒண்ணு செருகி அதுலேந்து ஒரு ஒயர் போயி அந்த ஒயரு ஒரு போர்வைக்குள்ள மறைஞ்சி அங்க இருக்குற ஸ்டூல் மேல கிடக்கு. ஸ்டூலு மேல கெடக்குற போர்வைய எடுத்துப் பார்த்தா தஞ்சாவூர்ல காணாமப் போச்சுல்ல வேலனோட செல்போனு அதுதான் இது. அதுதாங் சார்ஜ் ஏறிகிட்டு கெடக்குது. இன்னும் வடவாதி பக்கமெல்லாம் அவ்வளவா செல்போனுங்க சகஜமா புழக்கத்துல வரல அப்போ. வடவாதி மில்லுகாரவங்க வூட்டுல ஒண்ணு, திட்டையில ரகுநாதன் வூட்டுல ஒண்ணு, சாமி. தங்கமுத்து வூட்டுல ஒண்ணு, கிள்ளிவளவன்கிட்ட ஒண்ணு அப்பிடின்னு அங்க இங்கன்னுதான் இருக்குது.
            அந்தச் செல்போன பாக்குறதுக்கும், அதெ கையில வாங்கி ஒரு ரண்டு நிமிஷம் வெச்சிக்கிறதுக்கும் இந்த சனங்க அடிச்சிகிட்ட அடி இருக்கே! போற எடமெல்லாம் வெச்சிகிட்டு அதை வெச்சிகிட்டுப் பேசலாங்றத நம்ம சனங்களால நம்ப முடியல. அது எப்பிடிடா ஒரு ஒயரும் இல்ல, மண்ணும் இல்ல, அதுல எப்பிடிடா பேச முடியும்னு அவனவனும் மண்டையில இருக்குற முடிய பிய்ச்சிக்காத கொறையா யோசிச்சுகிட்டுக் கிடக்குறான். சிக்னல் மூலமா செல்போன்ல பேசலாங்றத பல பேரு நம்ப மாட்டேங்றான். பேசுறவங்களோட நம்பரு அதுல வர்றதை ஆச்சரியமா பாக்குறாங்க. இதென்னடா கூத்து... இதை விட பெரிசா இருக்குற டெலிபோன்ல யாரு பேசுறான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு காலர் ஐடில்லாம் வைக்க வேண்டிருக்கு. இது என்னான்னனா பாதி சோப்பு டப்பா கணக்கா இருந்துகிட்டு யாரு பேசுறாங்கற நம்பரையெல்லாம் தெரிஞ்சுக்க முடியுறாப்புல இருக்கு! அத்தோட எந்த நம்பரையும் ஞாபவம் வெச்சிக்க அவசியமில்லா எல்லாத்தோட நம்பரையும் பதிவு பண்ணி வெச்சிக்கிற மாதிரி வசதியெல்லாம் பண்ணி வெச்சிருக்கேன்னு ஆச்சரியம்னா ஆச்சரியம் நம்ம ஆட்களுக்குத் தாங்க முடியல. அந்த நேரத்துல செல்போன வெச்சி கண்காட்சி போட்டிருந்தா ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சிருக்கலாம்னா பாத்துக்குங்க. செல்போன அப்படி ஒரு அதிசய வஸ்தாத்தா பாத்த காலம். இப்போ அதெ அப்படியே படமா எடுத்துப் போட்டா யூடியுப்புல பார்க்க வெச்சி ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சுப்புடலாம்.
            அப்படி இருக்குறப்ப சித்துவீரனுக்கு தன்னோட வூட்டுல செல்போன பார்த்தா எப்பிடி இருக்கும்? அது ஆரம்ப காலத்துல வந்த நோக்கியாவோட ஒத்த பக்கம் கொம்பு வெச்ச மாதிரி இருக்கும் செல்போனு. அவன் இதையெல்லாம் வெளிநாட்டுலதான் பார்த்திருக்கான். அதுல அங்க அவன் பேசியிருக்கான். ஏர்போர்ட்டுல இறங்கி வரப்ப அதுல சில பேரு பேசிகிட்டு நிக்குறதைப் பார்த்து, நாம்ம நாடும் சீக்குரத்துல முன்னேறிடும்னு அசந்துக்கிறான். நம்மூர்லயும் ஒரு சில பேரு அதை வாங்கி வெச்சி உபயோகப்படுத்துறாங்கன்னு கேள்விப் பட்டு சந்தோஷபட்டு இருக்கான்.  அப்படிப்பட்ட செல்போனு எப்படி இங்கன்னு யோசிக்கிறான், யோசிக்கிறான். ஆனா அவனுக்குப் பிடி கிடைக்க மாட்டேங்குது.
            "இங்க நம்ம சொந்த வூட்டுல இந்த செல்போனு சார்ஜ் ஏறுதுன்னா அது நம்ம வூட்டுல உள்ளதாத்தானே இருக்கணும். அதுவும் அது பாட்டுக்கு சும்மா போட்டு சார்ஜ் ஏறுனா என்ன? யாரும் பாக்க முடியாத அளவுக்கு செல்போனை ஸ்டூலு மேல வெச்சு அதுக்கு மேல போர்வையைப் போத்தி விட்டு வெச்சிக்கணும்னு என்ன அவசியம்? வீட்டுல அங்கங்க ப்ளக் பாய்ண்ட்டு இருக்குறப்ப ரூமுக்குள்ள போயி ரகசியமாக ப்ளக் பாய்ண்டுல செருவுற அவசியம் அப்படி என்ன வந்திச்சி" அப்பிடின்னு அவன் மனசு பலவிதமாக யோசிக்குது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...