31 Aug 2019

பாக்கியவான்கள் எதையும் செய்ய வேண்டாம்!


            மனநிலையைத் திருப்திப் பண்ண வேண்டியதில்லை. அது ஒரு நிலை அவ்வளவுதான். திருப்திப் பண்ண மனநிலை அப்படியே மாறாமல் இன்னொரு நேரத்தில் இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அது ஒவ்வொரு நேரத்திலும் ஒரு நிலை. மனநிலைகளைத் திருப்தி பண்ண முயற்சி செய்தால் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மனநிலையைத் திருப்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒரு முடிவு இருக்காது. பிறகு ஏன் திருப்தியான மனநிலை தேவைப்படுகிறது? என்ற கேள்வி சுவாரசியமாக இருக்கலாம். இந்தச் சுவாரசியமான கேள்வியின் பின்னணி அப்படியொரு மனநிலை என்பது இல்லை என்பதால் அதை விரும்பும் மனநிலைதான் அது என்பதுதான்.
            மனதே மனநிலையை உருவாக்குகிறது. அப்படி உருவாக்கிய மனநிலை அதற்கே பிடித்தம் இல்லாமல் தோன்றும் போது அப்படி ஒரு மனநிலையை உருவாக்கி அதுவே அப்படி எதிர்பார்க்கிறது. அப்படி ஒரு மனநிலையை அது கற்பிதம் செய்து கொண்டால் அதை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. ஒரு கனவு போதும் அதற்கு அதை உருவாக்கிக் கொள்வதற்கு. அதை விட வேடிக்கையான ஒன்று என்னவென்றால் அப்படி ஒரு மனநிலையை அது கற்பித்த விட்ட உடனே அது அப்படியான மனநிலையை உருவாக்கிக் கொண்டு விட்டது என்பதுதான். ஒரு சூட்சமமான உண்மை அதுதான். மழையில் கடும்கோடையை உணர்வதும், கோடையும் பனிமழையையும் உருவாக்கிக் கொண்டு அதனால் உணரவும் முடியும். அதனை அதன் போக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போவதில் இருக்கிறது மனதைக் கையாள்வதன் புத்திசாலித்தனம்.
            மாறாக மனதிற்கு அப்படி ஒன்றை உருவாக்கித் தரப் போகிறேன் என்ற மனநிலையை உருவாக்கிக் கொண்டு உள்ளே புகுந்தவர்கள் தொலைந்தார்கள். அதுவோ நிமிடத்திற்கு நிமிடம் மனநிலையை மாற்றிக் கொண்டே போகும். நீங்கள் நினைக்கும் வடிவத்தை அதை மாற்றிக் கொண்ட பிறகு அதை நீங்கள் உருவாக்கிக் கொடுத்து ஏமாந்து போவீர்கள். இப்போது உங்களுக்கு அடுத்தப் பிரச்சனை ஆரம்பிக்கும். மனம் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டே போவதால்தான் அதை திருப்தி படுத்த முடியவில்லை என்று நினைப்பீர்கள். நினைத்து அடுத்து என்ன செய்வீர்கள்? வழக்கமாக மனதை ஒரு நிலைபடுத்த வேண்டும் என்ற வேலையில் இறங்கி ஒருநிலைப்படாத மனம் என்ற புதிய சிக்கலை உருவாக்கிக் கொள்வீர்கள்.
            மனதை கவனித்துக் கொள்வதில்தான் இருக்கிறது எல்லாமும். அது வெறுமனே ஒரு கவனிப்புதான். அதற்காக எதையும் செய்யும் கவனிப்பு அல்ல அது. எதையாவது கவனிப்பதற்காக செய்ய ஆரம்பித்தால் செய்ய வேண்டியவைகளுக்கு எல்லை இருக்காது. அதன் அமைப்பு அப்படித்தான். அது பலதரப்பட்டதாக ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்க பழக்கப்பட்டது.
            மனதுக்காக எதையாவது செய்யும் அபத்ததில் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீளவே முடியாது. மனம் எதையாவது செய்ய வேண்டும் என்று மனதிருப்திக்காக எதிர்பார்க்கும். அது ஒரு மது அருந்ததலாகவோ, புகைப் பிடித்தலாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைச் செய்ய ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவு இருக்காது.
            அப்படியானால் இதில் செய்ய என்ன இருக்கிறது என்றால் எதுவுமே இல்லை. எப்படி அமைதியான மனநிலையிலிருந்து அது அமைதியற்ற மனநிலைக்கு மாறியதோ, அப்படியே அது அமைதியற்ற மனநிலையிலிருந்து அமைதியான மனநிலைக்கும் மாறும். ஏனென்றால் அதனால் நிலையாக இருக்க முடியாது. எந்த ஒன்றிலும் நிலையாக இருக்க முடியாத அதன் தன்மையால்தான் இருமைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு செல்வதை ஆன்மீகம் வற்புறுத்துகிறது. அப்படிப் பழகி அதுவும் ஒரு பழக்கமாகி விடலாம் என்பதால் வெறுமனே இருப்பதே இதில் ஆகச் சிறந்ததாக ஆகிறது. வெறுமனே இருப்பதும் ஒரு பழக்கமன்று, ஒரு செயலுமன்று என்பதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது முக்கியம்.
            எதாவது இதில் செய்துதான் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இதில் ஆக்கப்பூர்வமாகச் சொல்லப்பட்டதுதான் தியானம். இதை புரிந்து உள்வாங்கிக் கொண்டவர்கள் அதையும் செய்ய வேண்டியதில்லை. புரிந்த உள்வாங்குவதற்கு தியானம் உதவலாம். அதுவும் அதற்கான செயலோ, பழக்க முறையோ இல்லை புரிந்து கொள்வது முக்கியம். இல்லாது போனால் தியானத்தை நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்கும் ஒரு முடிவு இருக்காது. ஒரு யோகி என்பவர் அந்த தியானத்தை நிறுத்திக் கொண்டவர்தான் என்று புரிய இதனால் உங்களுக்கு நாளாகி விடும்.
            மேலும் இது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவோ, புரிதலோ தேவையிருப்பின் இது சார்ந்து இதே வலைப்பூவில் முன்பு எழுதியிருக்கும் பதிவுகள் உதவலாம். அவைகள் ஒரு உதவிக்கான வரைபடமே தவிர அதுவே உதவி அன்று. உங்களுக்கான உதவியை இந்த விசயத்தில் நீங்கள்தான் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அது என்ன உதவி என்றால் உங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை என்பதும், உங்கள் மனதிருப்திக்காக நீங்களோ, மற்றவர்களோ எதையும் செய்ய வேண்டியதில்லை என்பதுமே. எதையும் செய்ய வேண்டாம் என்ற இந்த உபதேசம் எவ்வளவு இனிமையானது என்றால் அதைச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை உணரும் போதுதான் புரியும். எதையும் செய்து பழக்கப்பட்ட மனநிலைக்கு எதையாவது செய்யாமல் இருப்பது என்பதும் செய்து பழக்கப்பட வேண்டியதோ என்று விளங்கிக் கொள்வதுதாம் அதன் வினோதம். இந்த வினோதங்களைத் கடந்துதாம் நீங்கள் அந்த வினோதத்தை அடைய முடியும். ஒரு சிலருக்கு நொடியில் நிகழ்ந்து விடும் இந்த வினோதம், ஒரு சிலருக்கு வருடக் கணக்கை எடுத்துக் கொள்ளும். எப்படியாயினும் இதை உணர்ந்த பின்னே உங்கள் மரணம் நிகழும். மரணத்திற்கு முன்பே இதை உணர்ந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...