29 Aug 2019

திறக்காத கதவுகள்



செய்யு - 191
            இந்தச் செல்போன்ல ஒரு சிக்கல் என்னான்ன நாம யாருக்குப் போன் பண்ணோம், யாரு நமக்குப் போன் பண்ணா அப்படிங்கற எல்லா விவரத்தையும் அதுலேந்து எடுக்க முடியறதுதாம். டெலிபோன்ல இந்தச் சிக்கல்லாம் இல்ல. அதுல லாஸ்ட் டயலத் தவிர அப்போ வேற ஆப்ஷன் கெடையாது பாருங்க.
            சித்துவீரன் வெளிநாடுல்லாம் போயி அங்க செல்போனையெல்லாம் பார்த்து, பயன்படுத்திகிட்ட இருந்த காரணத்தால அதுல பூந்து விளையாடுறான். அதை நோண்டி நோண்டிப் பார்க்கிறான். வெளிநாட்டுலேர்ந்து ஊருக்கு வர்றப்ப ஒரு செல்போனு வாங்கிட்டு வரணும்னு வேற நெனைச்சிருந்தான். அதுக்குள்ள அபார்ஷன் ஆயிடுச்சிங்ற துரதிர்ஷ்டமான சேதி வந்ததுல எப்படியோ ஊரு போயிச் சேர்ந்து சுந்தரிய பார்த்தா போதும்னு குழம்பிப் போயி ஊரு வந்து சேர்ந்துட்டான். 
            இந்தச் செல்போனு பரவலான காலத்துல அதுல ஒருத்தரோட நம்பர எடுக்குறதுக்கும், அந்த நம்பருக்குப் போன் பண்றதுக்கும் நம்ம ஆளுங்க பட்ட கஷ்டம் இருக்கே! அதெ வெளியில சொல்ல முடியாது. ஒரு காலம் வரைக்கும் பாத்தீங்கன்னா... இதுக்குன்னே செல்போன்ல நல்லா போன் பண்ண தெரிஞ்சா ஆளா பாத்து வெச்சிகிட்டு அவனெ தாஜா பண்ணிகிட்டு அலைஞ்சதுங்க நம்ம கிராமத்து சனங்க. சித்துவீரனுக்கு அந்தக் கஷ்டம் இல்லாமப் போயிடுச்சி. சித்துவீரன் அந்தச் செல்போன போட்டு நோண்டி அதுல போன் போன நம்பரு, போன் வந்த நம்பருன்னு  இருந்த நம்பரையெல்லாம் குறிச்சிக்கிறான். குறிச்சிட்டுப் பார்த்தா எல்லா நம்பரும் ஒரே நம்பருதான். அதுலேந்து போன் போன நம்பர், அந்தச் செல்போனுக்கு போன் வந்த நம்பர் எல்லாம் ஒரே நம்பரா இருக்குது. அந்த நம்பர் யாரோட நம்பரா இருக்குங்ற யோசனை அவனோட மண்டையைப் போட்டுக் குழப்புது. எதுவும் தெரியாத மாதிரி எல்லாம் எப்படி இருந்துச்சோ அப்படியே வெச்சிட்டு சித்துவீரன் அந்த நம்பரோட போறான். அது யாரோட நம்பர்னு அவனுக்குத் தெரிஞ்ச ஆளுங்கள வெச்சி விசாரிச்சுப் பார்க்குறான். இதுக்குன்னு ரெண்டு நாளு திருவாரூருக்கும், தஞ்சாவூருக்கும் யாருக்கும் தெரியாம அலையா அலைஞ்சி ஆளுங்களப் பிடிச்சிக் கண்டுபிடிக்கிறான். அந்த நம்பர் பாக்குக்கோட்டை ஆதிகேசவனோட நம்பருன்னு தெரிய வருது. யாரு இந்த பாக்குக்கோட்டை ஆதிகேசவன்னு இப்போ அவனுக்கு யோசனைப் போவுது! யாருக்கும் தெரியாம பாக்குக்கோட்டைப் போயி அதையும் விசாரிச்சுப்புடணும்னு மனசுல ஒரு முடிவு பண்ணிக்கிறான்.
            இப்போ சித்துவீரன் வீட்டை விட்டுட்டு எங்கயேும் போறதில்ல. எந்நேரமும் வீட்டுலதான் படுக்கை. எப்போ பார்த்தாலும் பாயையும் தலையணையையும் எடுத்துப் போட்டுகிட்டு தூங்குற மாதிரி ஆக்சன் விட்டுகிட்டு இருக்கான். இது சரியா தெரியாம சுந்தரி ஒரு மத்தியானத்துல ஆதிகேசவனுக்குப் போனைப் போட்டு ராத்திரி மூணு மணி வாக்குல வான்னு ரூமுக்குள்ள இருந்து போன்ல பேசுறது தூங்குற மாதிரி நடிச்சிகிட்டு இருந்த சித்துவீரனோட காதுக்குள்ள கேட்டுடுது. ஏதோ தப்பு நடந்திருக்கு, அது இப்பயும் நடந்துகிட்டு இருக்குங்ற விசயம் அவனுக்குப் புரிய ஆரம்பிக்குது. இன்னிக்கு ராத்திரி முழுக்க தூங்கக் கூடாதுன்னு அவன் முடிவு பண்ணிக்கிறான். அவனுக்கு சுந்தரி மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு.
            ராத்திரி தூங்குற மாதிரி இவன் படுத்துருக்கான். இவனுக்குப் பக்கத்துல சுந்தரி தூங்கிகிட்டு இருக்கு. திடீர் திடீர்னு எழுந்திருச்சி சுந்தரிய பார்க்குறான். அது நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கு. உண்மையில அதுவும் தூங்காமத்தான் படுத்திருக்கு. தூங்குறது போல நடிக்கிறதுல அது இவனெ விட கெட்டிக்காரியா இருக்குது. புருஷங்காரன் திடீர் திடீர்னு இப்படி எழுந்திரிச்சிப் பார்க்கிறானேன்னு அதுக்கும் யோசனையா இருக்குது. இப்படில்லாம் எழுந்திருக்கிற ஆளு அவன் கிடையாது. படுத்தான்னா அப்படியே புளி மூட்டைக் கணக்கா தூங்குவான் சித்துவீரன். இடியே விழுந்தாலும் அவனுக்குத் தெரியாது. அவனா இப்படி முழிப்புத் தட்டி அடிக்கடி எழுந்திரிச்சிப் பாக்கிறாங்ற யோசனைதான் சுந்தரிக்கு. இப்படி ஒருத்தர் மாத்தி யோசனை பண்ணிகிட்டே ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் அசந்து தூங்கிடுறாங்க. ராத்திரி ஒரு மணிக்கு மேல வர்ற தூக்கம் இருக்குப் பாருங்க அது மனுஷன் தன்னை மறந்து தூங்குற தூக்கம். எழுப்புனாலும் எழுந்திரிக்க முடியாது. அதுதான் மனுஷன் தூங்குறதுலயே நல்ல தூக்கம். அந்தத் தூக்கம் அப்படியே அதிகாலை நாலு, அஞ்சு மணி வரைக்கும் நீடிக்கும். ஒரு வீடு ஏறிக் குதிச்சி கள்ளத்தனம் பண்றதுக்கு அதுதான் தோதான நேரம். கள்ளத்தனம்ங்றது மனுஷன ஏமாத்திப் பண்ற வேலைதானே. அதை மனுஷன் நல்லா முழிச்சிகிட்டு இருக்கிறப்பவா செய்ய முடியும்? மனுஷன் அசந்து இருக்குற நேரந்தான் அதுக்குத் தோது.
            ராத்திரி ரெண்டு மணிக்கு மேல சுந்தரிக்கு முழிப்புத் தட்டுது. வீட்டுல மாடு கண்ணு வெச்சிருக்கவங்களுக்கு அப்படி முழிப்புத் தட்டுறது உண்டு. மாடுகள எழுந்திரிச்சிப் பார்க்கணுமேன்னு அது பழக்கத்துல அப்படியே வந்திடும். இங்க சீத்துவீரன் வீட்டுல எங்க மாடு இருக்கு? மாடு இல்லாட்டியும் அந்த நேரத்துல சுந்தரி முழிச்சி பழக்கமா இருக்குறதால அதால சரியா எழுந்திரிக்க முடியுது. அப்படியே எழுந்திரிச்சி அது சித்துவீரனப் பார்க்குது. அவன் நல்லா கொறட்டை வுட்டுத் தூங்குறான். "நல்லா தூங்குடா ராசா தூங்குன்னு!" மனசுக்குள்ள நெனைச்சிகிட்டு சுந்தரி எழுந்திரிச்சி கொல்லைப் பக்கத்து வெளி லைட்டைப் போட்டு விட்டுகிட்டுக் கொல்லைப் பக்கமா வருது. வந்து திறந்த கதவைச் சாத்தி அந்தக் கதவுல அடிச்சி வெச்சி ஆணியில கட்டி வெச்சிருக்குற சின்ன நைலான் கயிறை இழுத்து அப்படியே நிலை மேல இருக்குற ஆணியில ஒரு சின்னக் கட்டா போட்டு மாட்டுது. டக்குன்னு கதவை யாரும் திறந்துட்டு வர முடியாத அளவுக்கு அது ஒரு சின்ன ஏற்பாடு. அப்படியே பக்கத்துல உடைஞ்ச ப்ளாஸ்டிக் வாளிய ஒண்ண தூக்கி வைக்குது.

            பொதுவா கொல்லைப் பக்கத்துக் கதவுக்கு உள் தாழ்ப்பாள்தான் போடுவாங்க. அதுக்கு வெளிப்பக்கத் தாழ்ப்பாளோ, பூட்டு மாட்டுற பேட்லாக்கோ போட மாட்டாங்க. வீட்டைப் பூட்டிட்டுக் கிளம்புறப்ப கொல்லைக் கதவ உள்பக்கத்துல தாழ்ப்பாள் போட்டுட்டா போதாதா? கொல்லைக் கதவை வீட்டுக்குள்ளேர்ந்து திறந்துகிட்டுப் போய்தானே திறக்கப் போறோம்னு அப்படி ஓர் ஏற்பாடு. அதால கொல்லைக் கதவை உள்பக்கத்துக்குச் சாத்தி வைக்கலாமே தவிர அதுக்கு வெளிப்பக்கத்திலேந்து தாழ்ப்பாள் போடுறதோ, பூட்டுப் போடுறதோ முடியாது. அது ஓட்டு வீடுங்றதால தெருப்பக்கத்துக்கும், கொல்லைப் பக்கத்துக்கு ஒத்த கதவா அந்தக் காலத்து முறையில செஞ்சு மாட்டியிருக்காங்க. அந்தக் கதவுகளை எல்லாம் உள்பக்கமாத்தான் திறக்கலாம். பொதுவா நிலையோட இருக்குற கதவுகள் எல்லாம் அப்படித்தான். உள்பக்கமா திறக்கலாம். ஜன்னல் கதவுகளைத்தான் வெளிப்பக்கமா திறக்குற மாதிரி வைப்பாங்க. அதுவும் வூட்டுக்கு முன்னாடி வைக்கிற ஜன்னல் கதவை உள் பக்கம்மா திறக்குற மாதிரி வெச்சிப்பாங்க. அந்தக் காலத்து ஓட்டு வீடுங்க எல்லாம் அப்படித்தான் கதவு திறப்பு இருக்கும். கதவைப் பொருத்த மட்டுல ஒத்தக் கதவாத்தான் இருக்கும். ரெட்டைக் கதவா இருக்காது.
            இப்போ அந்த ஒத்தக் கதவுக்கு வெளியில உடைஞ்ச பிளாஸ்டிக் வாளி ஒண்ணு இருக்குல்ல சட்டுன்னு திறந்துட்டு வெளியில வர்றவங்க காலுல பட்டு தடுமாறி விழுற அளவுக்கு. கதவையும் சட்டுன்னு திறக்க முடியாத அளவுக்கு கதவுக்கும் நிலைக்கும் ஆணி போட்டு நைலான் கயிறு போட்டு கட்டியிருக்கு. சட்டுன்னுக் கதவைத் திறக்க முடியாதே தவிர கொஞ்சம் வேகமாக திறந்தா கொல்லைக் கதவு திறந்துக்கும். அப்படித் திறந்துட்டு ஒரு வேகத்துல வர்றப்ப ப்ளாஸ்டிக் வாளி வாசல்படியிலேர்ந்து உருண்டு கீழே விழுந்துடும். அப்படி விழுறப்ப ஒரு சத்தம் வருமுல்ல. அது ஒரு முன்னெச்சரிக்கைக் குறிப்பா உதவும்னுதான் சுந்தரி அந்த ஏற்பாட்டைப் பண்ணி வெச்சிருக்கு.
            அந்தக் காலத்து ஓட்டு வீடுங்களோட அமைப்பு தரை மட்டத்திலேந்து எப்படியும் ரெண்டு மூணு அடி மேலதான் இருக்கும். வீட்டுக்குள்ள தெரு வாசல்படி வழியா போகணும்னாலும், கொல்லை வாசல் படி வழியா எறங்குணும்னாலும் ரெண்டு படி அல்லது நாலு படி அல்லது ஆறு படின்னு ரெட்டைப் படையிலதான் உசரத்துக்குத் தகுந்தபடி படி வெச்சி கட்டியிருப்பாங்க. அது ஒரு கணக்கு. படி ஏறுறப்ப ஒவ்வொரு படிக்கும் லாபம், நட்டம், லாபம், நட்டம்னு மாத்தி மாத்திச் சொல்லி ஏறுனா கடைசியில வீட்டுக்குள்ள அடி எடுத்து வைக்கிறப்ப லாபம்னு சொல்ற மாதிரி அடி வைக்கணும்னு ஒரு கணக்கு. அந்தக் கணக்குக்கு ரெட்டைப் படையில படி வெச்சத்தான் சரியா இருக்கும். அதால படிகளை ரெட்டைப் படையிலதான் வைப்பாங்க. ஒத்தைப் படையில வைக்க மாட்டாங்க.
            சித்துவீரனோட வாசல்படியும், கொல்லைப்படியும் நாலு படி எண்ணிக்கையில உள்ளது. ஏறுறதா இருந்தாலும், எறங்குறதா இருந்தாலும் நாலு படி ஏறி இறங்கியாகணும்.
            கொல்லைக் கதவுக்கு ஓரளவுக்கு சட்டுன்னு திறக்க முடியாத அளவுக்கு நைலான் கயித்துக் கட்டப் போட்டு வெச்சப் பிறகு சுந்தரி டாய்லெட்டுக்குள்ள நுழையுது.
            வீட்டுக்குள்ள அசந்து தூங்கிகிட்டு இருக்குற சித்துவீரனுக்கு மூணரை மணி வாக்குல மூத்திரம் முட்டிகிட்டு வந்து தூக்கம் கலையுது. தூக்கம் கலைஞ்சுப் பக்கத்துலப் பார்த்தா சுந்தரியக் காணும். ஆகா இவளக் கண்காணிக்கணும்னு முழிச்சிகிட்டு இருக்கணும்னு நெனைச்சு இப்படித் தூங்கிகிட்டேன்னு அவன் தனக்குத் தானே தலையில ரெண்டு அடி அடிச்சுக்கிறான். வேக வேகமா எழுந்திரிச்சி வந்துப் பார்த்தா... கொல்லை லைட்டு எரியுற வெளிச்சம் வீட்டுக்குள்ளேயிருந்து தெரியுது. கொல்லைக் கதவைத் திறக்கப் பார்க்குறான். ஏதோ கொல்லைக் கதவைத் தடுக்குற மாதிரி இருக்கு. அவனுக்கு வர்ற கோபத்துல கதவையே உடைச்சிட்டு வெளியில போவலாமான்னு இருக்கு. அந்த ஆத்திரத்திலயே கதவை பலங் கொண்ட மட்டும் இழுத்துத் திறக்குறான். அவன் இழுத்த இழுப்புல கயிறு படார்னு அறுந்து திறந்துக்குது. அதே ஆத்திரத்தோட வேக வேகமா கொல்லைப் படிகட்டுல போனவனோட காலு பட்டு ப்ளாஸ்டிக் வாளி தட தடன்னு உருண்டு நாலு படியைக் கடந்து விழுவுது. அது ஒரு சின்ன கொல்லைதான். கொல்லையைச் சுத்தி அங்கயும் இங்கயும் பாக்குறான். மூத்திரம் வேற இவனுக்கு முட்டிகிட்டு வருது. வேக வேகமா டாய்லெட்டுப் பக்கம் வந்து பாக்குறான். டாய்லெட்டு உள்பக்கமா தாழ்ப்பாள் போட்டிருக்கு.
            டாய்லெட்டுக் கதவைப் போட்டு படார் படார்னு அடிக்குறான் சித்துவீரன். "யாரு உள்ளே அங்க?" அப்பிடின்னு சத்தம் போடுறான்.
            "ஏம் இப்பிடிப் போட்டு அடிக்கிறீங்க? நாந்தாம்! வவுத்துப் போக்கா இருக்கு. அதாங் உள்ளே உக்காந்திருக்கேம். என்ன வேணும் ஒங்களுக்கு?" அப்பிடிங்குது சுந்தரி.
            "ஒண்ணுக்கு முட்டிகிட்டு வருதுடி! கதவெத் திறந்துட்டு வெளியில வாடி!" அப்பிடிங்றான் சித்துவீரன்.
            "அப்டி ஓரமா போயித் தொலைங்க. இப்பைக்கு வார முடியாது. கொஞ்ச நேரமாகும்!" அப்படிங்குது சுந்தரி.
            "தொலைச்சுக் கட்டிப்புடுவேன் ஒண்ணய. மருவாதியா கதவெத் தெற!" அப்பிடிங்றான் சித்துவீரன்.
            "செத்த நேரம் ச்சும்மா கெடய்யா பேதியில போவ்வே! சொல்றேம்ல!" அப்பிடிங்குது சுந்தரி.
            வர்ற கோபத்துல என்ன செய்யறதுன்னு புரியாம சித்துவீரன் டாய்லெட்டோ கதவ ஓங்கி ஒரு உதை உதைக்கிறான். டாய்லெட்டோட தகரக் கதவுல அவனோட ஒதைப்பட்டு படார்னு சத்தம் கெளம்புது. இன்னொரு ஒதை ஒதைச்சா கதவு கழண்டுகிட்டு விழுந்துடும் போல இருக்கு நெலைமை.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...