29 Aug 2019

கதைகளின் அரசியல்



            எதையும் கதைகள் மூலமாக சொல்லிக் கேட்ட பரம்பரை நாம். பிறகு புத்தகங்கள், இதழ்கள் என்று கதைகளாகப் படித்துத் தெரிந்து கொண்டோம். அதற்கும் பிற்பாடு திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டோம். காலமாற்றம் சீரியல்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வைத்து, இன்று பேஸ்புக் எனும் முகநூல், வாட்ஸப் எனும் புலனம் அல்லது கட்செவி அஞ்சல், டிவிட்டர் எனும் கீச்சி, யூடியுப் எனும் கணொலிகள் மூலம் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
            இந்தத் தெரிந்து கொள்ளுதலுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. மனித மனம் அப்படி. அதற்கு எதையாவது தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். தெரிந்து கொள்வதன் மூலமாக விசாலப்பட்டுப் போய்க் கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் மனித மனம்.
            இப்படி எதை எதையோ தெரிந்து கொள்ள துடிக்கும் அந்த மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள‍ வேண்டும் என்று சைக்காலஜி எனும் உளவியல் தோன்றியதுதான் அதன் உச்சம். அதை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, அதற்கென்றே மருத்துவ விஞ்ஞானம் தோன்றும் அளவுக்கு அந்தத் துறை வளர்ச்சி அடைந்திருப்பதைப் பார்க்கும் போது ஆரம்ப காலத்து சென்னை ஆயுள் காப்பீட்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பார்த்து அதிசயித்து நின்றதுதான் ஞாபகம் வருகிறது.
            இப்போது நாம் வந்த திசையிலிருந்து அப்படியே பின்னோக்கிப் போகும் போது நமது கதைகள் எல்லாம் மனவியலை அடிப்படையாகக் கொண்டிருந்ததை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தாத்தா, பாட்டிச் சொன்ன கதைகள் எல்லாம் மனதை என்னவோ செய்து அவர்களைப் போலவே மனதைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா என்று தெரியவில்லை. இப்போது இருக்கும் பக்குவமற்ற, நிதானமற்ற மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் எல்லாம் தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்காதவர்களோ என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அவர்களெல்லாம் தாத்தா - பாட்டிகளைப் பார்த்தவர்களா என்ற ஐயம் அதை விட தவிர்க்க முடியாதது.
            ஒரு வகையில் இந்தியக் கதைகளின் அடிப்படையே மனோ அமைதிதான். மனதைத்தான் இந்தியக் கதைகள் மிக அதிகமாக அலசுகின்றன. மனதைப் புரிந்து கொள்வதற்காக சந்நியாசம் புகுவதெல்லாம் இந்தத் தேசத்தில்தான் வழமையாக இருந்திருக்கின்றன.
            இந்தத் தேசத்தில் வழங்கிய கதைகள் புராணக் கதைகளாக இருந்த போதிலும் அதில் விமர்சிப்பதற்கான ஓர் இடம் வழங்கப்பட்டிருந்ததே அதன் தனித்தன்மை எனலாம். ஒரு கதை இங்கு இரண்டு விதமாகப் புழங்குவதன் பின்னணியில் அது மனோநிலைக்கேற்ப கதைச் சொல்வதை அனுமதித்திருக்கும் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். கதை என்பதே இங்கு மனநிலையின் ஓட்டம்தான். ஒரே காக்கா - நரி கதையைத் தினம் தினம் சலிக்காமல் கேட்க முடிவதற்கு அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் நின்று சொல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதன் சுதந்திரம்தான் காரணம் என்று நினைத்துப் பார்க்கலாம்.
            ஒரு ஊர்ல... என்று ஆரம்பிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரை, ஒவ்வொரு மனதைக் காட்டிக் கொண்டே செல்கின்றன. ஆரம்பம் ஒன்றாக இருக்கலாம். அது தொட்டுச் செல்லும் பாதை பலதரப்பட்டவை. இங்கு வழங்கப்படும் கதைகள் எல்லாம் கதை சொல்லல் மரபின் தொடர்ச்சிதான். எந்தக் கதையும் இங்கு முடிந்து விடவில்லை. அது சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்னம் பாரதமும், ராமாயணமும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பாரதி பாரதத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து பாஞ்சாலி சபதம் எழுதுகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு புதுமைப்பித்தன் சாப விமோசனம் எழுதினார். இன்னும் எழுதுகிறார்கள். எழுதிக் கொண்டே இருப்பார்கள். அதுதான் நிதர்சனம். கதை சொல்லப்படுவதன் தீர்க்க முடியாத சலிப்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கதை சற்றேறக்குறைய அநேகமாக ஒன்றாக இருக்கலாம். அது ஒவ்வொருவர் வாழ்விலும் புகுந்து புறப்பட்டு வரும் போது வெவ்வேறு விதமாக ஆகி விடுகிறது. ஒரு புது வண்ணத்தைக் கலந்து கட்டிக் கொண்டு சுழித்துக் கொண்டு ஓடுகிறது.
            நாம் கதை சொல்லியாகவும் இருக்கிறோம். கதை கேட்பவர்களாகவும் இருக்கிறோம். அடிப்படையில் அந்தக் கதை நம் கதை. நமக்கான கதையை நாம் நமக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அந்த மரபின் தொடர்ச்சியாகத்தான் நமது திரைப்படங்களாகட்டும், நெடுந்தொடர்களாகட்டும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஒரு போதும் அதன் சுரப்பு தீர்ந்து விடாது. நமது அரசியலையே எடுத்துக் கொள்ளுங்கள். அது நமது கதைச் சொல்லலின் முடிந்து விடாத, முடித்து விட முடியாத ஒரு முடிச்சுதான். அதில் இருக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் எப்போதும் இருக்கும். அது கதையின் முடிச்சுகள் மற்றும் கதைக்கான சிக்கல்கள். அந்த முடிச்சுகள் அவிழ்வது போல அவிழ்ந்து மிண்டும் முடிச்சு கொள்ளும். அதுதான் கதைகளின் அவிழ்க்க முடியாத ரகசியமும் ரசவாதமும். அதுதானே அரசியல். இதைக் கதைகளின் அரசியல் என்று சொன்னாலும் பிழையிருக்காது.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...