30 Nov 2016

வளைய வரும் திருடர்கள்


வளைய வரும் திருடர்கள்
மிக எளிதாக
ஒரு போலீஸ் கதையை
எழுதி விட முடிகிறது!
திருடன் கதைதான்
சிக்கலாக இருக்கிறது
பரபர திருப்பங்களோடு
எந்தப் புள்ளியில்
திருடனாக மாறினான்
அந்தக் காவலன் என்று!
*****

பிரிவு எனும் பெருவலி
நீ விரும்புவாய் எனத் தெரியும்!
அதனால்தான் என்னவோ காத்திருந்தேன்.
அநேகமாக நாம் சந்தித்ததே போதும் என்று
நினைத்ததோ என்னவோ,
நீயும் நானும் இணையும் புள்ளியில்
எப்படியோ உன்னைத் தூக்கிச் சென்று விட்ட மரணம்!
அதன் பின் நம்பிக்கை ஒன்றில்
மிஞ்சியிருக்கும் மனது காத்திருக்கிறது
பிசாசாய் நீ வரும் பொழுதிற்காய் தினம் தினம்!
*****

நாள்களின் பின்னே...
ஒரு ஞாயிற்றுக் கிழமை போதும்
நம் காதலைப் புதுப்பித்துக் கொள்ள!
மீதி ஆறு நாள்கள் வேண்டியதாக இருக்கிறது
நம் காதலைப் பழையதாக்கிக் கொள்ள!
*****

முகமூடி
ஒவ்வொரு வெற்றியின் போதும்
முகமூடி மாட்டிக் கொள்பவன்
கிழித்து எறிந்து விடுகிறான்
ஒவ்வொரு தோல்வியின் போதும்!
அழவும், கண்ணீர் சிந்தவும்
எப்போதும் உகந்ததாக இருக்கிறது
சொந்த முகம்!
கழட்டி விட்டான்  என தெரிந்த பின்
எப்படியோ ஒரு வெற்றி வந்து சேர்கிறது
மீண்டும் முகமூடியை மாட்டிக் கொள்ள!
*****

வாசகம்
மணல் லாரி
சுமந்து செல்லும் வாசகம்
"மண்வளம் காப்போம்!"
*****

ஏலியன்


சகிப்புத்தன்மை
"நாட்டுல சகிப்புத் தன்மையே யாருக்கும் இல்ல!" வந்த கோபத்தில் நியூஸ் பேப்பரை கசக்கித் தூக்கி எறிந்தார் சாந்தமூர்த்தி.
*****
தலைவன் இருக்கிறான்!
"அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கலந்து ஆலோசித்தப் பிறகே, இந்த ஊழல் ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்படும்!" என்றார் தலைவர்.
*****
ஏலியன்
"அதோ ஏலியன்!" என்றார் செவ்வாய் கிரகத்திற்கு ஏலியனாய் சென்று இறங்கிய சுந்தர் சுப்புராமன்.
*****
பலி
மர்ம காய்ச்சலுக்குப் பலியானான் தூக்குத் தண்டனை கைதி துலுக்கானம்.
*****
சரண்டர்
மனைவி இறந்த மறுநாளே தனக்கான பாலிஸியை சரண்டர் செய்யுமாறு இன்ஷ்யூரன்ஸ் ஆபிஸில் நின்றார் இராமநாதன்.
*****

29 Nov 2016

லோன்


லோன்
"ஹவுசிங் லோன் அடையே மாட்டேங்குது!" என்றான் கிண்டியில் நான்காவது வீடு கட்டிக் கொண்டிருந்த பீதாம்பரம்.
*****
வருத்தம்
"ச்சே! போலீஸ் பிடிக்க மாட்டேங்குதே! வாங்குன ஹெல்மெட் இப்படி தண்டமா போகுதே!" வருத்தத்தோடு சென்று கொண்டிருந்தான் கிருபாகரன் ஹெல்மெட் லாக்கில் இருந்த ஹெல்மெட்டோடு.
*****
1000 மும் 2000 மும்
"ஆயிரம் கொடுங்க! காரியத்தைக் கச்சிதமா முடிச்சிடுவோம்!" என்றார் அதிகாரி. "ரெண்டாயிரம் கொடுங்க! வசமா சிக்க வெச்சிடுவோம்!" என்றார் லஞ்ச ஒழிப்பு அதிகாரி.
*****
அப்ளை
"கார் லோன் அப்ளை பண்ணியிருக்கேன்!" என்றான் ஹவுசிங் லோன் ரிஜெக்ட் ஆன பிரகதீஷ்.
*****
கண்
"ஆயிரம் கண்ணுடையாள்! ஒரு கண்ணாலாவது பார்த்திருக்கலாம்!" என்று துடித்தாள் ஆலயத்திற்கு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவள்.
*****

கணக்கில் வராத கவலைகள்!


கணக்கில் வராத கவலைகள்!
கருப்புப் பணம் வெளியேறுவதற்கு முன்
சாமான்ய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி விடக் கூடாது
பிணங்களாகவும், அகதிகளாகவும்.
பணம் எடுப்பதில் கட்டுபாடு என்பது நல்ல விசயம்தான் என்பவர்கள்
விலைவாசி கட்டுபாட்டில் இல்லாமல் இருப்பது
மோசமான விசயம் என்பதை செலக்டிவ் அம்னீசியாவாக மறந்து போனவர்கள்.
நோட்டுகளை மாற்றவதிலும், நோட்டுகளைப் பெறுவதிலும்
வழிந்தோடும் உழைப்பின் வியர்வை
உற்பத்தியின் பக்கம் வற்றிப் போய் கிடக்கிறது
கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததால் வறண்டு போன காவிரி போல.
இப்போது பதுக்கல்காரர்கள் ஒழிந்து விட்டார்கள் என்ற சொல்ல முடியாது
அவர்கள் நூறு ரூபாய் நோட்டுகளை பதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் தேடுபவர்களைப் போல.
என் பணம் உன் பணம் என்று கொடுத்த வங்கி
உன் பணம் என் பணம் என்று வாங்கிக் கொண்ட பின்
பாக்கெட்டில் இருப்பது காலிப் பர்சும், ஆதங்கங்களும்
அதில் மகள் கேட்ட அன்புப்பரிசை வாங்கிக் கொடுக்க முடியாமல் போய்
பெற முடியாமல் போன வற்றிப் போன முத்தங்களின் சுவடுகளும்தான்.
மாதம் பிறந்தால் கொடுக்க வேண்டிய
வீட்டு வாடகையும்
மளிகைக் கடை கணக்கும்
பள்ளிக் கட்டணமும்
பால், காய்கறிக் கணக்கும்
மருத்துவச் செலவும்
இதரச் செலவினங்களும்
கையில் மாற்றிய நோட்டின் அளவுக்கு வந்தால் நல்லது
கை மீறிப் போனால்... என்ன செய்வதோ என்ற பயம்
ஏரிக்கடையுடைத்து சென்னை மாநகரில் புகுந்த
வெள்ளம் போல் மனதில் தினம் தினம் உள்ளது
*****

சமத்து சம்புலிங்கம் பாடுகிறார்!
ஒரு கட்சிக்காரன்கிட்ட மட்டும்
இரண்டாயிரம் நோட்டு கட்டுக் கட்டா இருக்குது!
மற்ற கட்சிக்காரன்கிட்ட எல்லாம்
இருந்த நோட்டு செல்லா நோட்டு ஆகுது!

நாளுக்கு இவ்வளவு பணம் எடுக்கலாம்
வாரத்துக்கு இவ்வளவு பணம் எடுக்கலாம்
கட்டுபாடுகள் அத்தனையும் சாமான்ய மக்களுக்குதான்!
கட்டுக்கட்டாய்ப் பணம் கட்சிக்காரன் கையில்தான்!

பணக்காரன் பணத்தை மாற்ற
வங்கிகளே நெட்டில் கணக்குத் தொடங்குது!
இது புரியாத ஏழை பாழைகள்
வங்கியில் வரிசையில் கால்கடுக்க நிற்குது!

ஓட்டுக்குக் கொடுக்கும் பணம் முழுதும்
ஒரு கட்சிகிட்டே சேருது!
மத்த கட்சிகளெல்லாம் திவால் ஆகுது!
சீக்கிரமே ஒரு கட்சி ஆட்சியாகப் போகுது!

அடிமாடாக போகும் மாடுகளை
வரிசை வரிசையாக வண்டியிலே ஏத்துறாங்க!
அவங்க போற வழியிலே சனங்களை
வரிசை வரிசையாக வங்கியிலே பார்க்குறாங்க!

இரண்டாயிரம் வந்தும் மாறவில்லை
சம்பளம் வாங்காம உழைக்கிறாங்க!
இரண்டு கைகள் இருப்பதாலே, நல்லவேளை
கையேந்திப் பொழைக்கிறாங்க!
*****

28 Nov 2016

மாற்றங்களை மாற்றி விட்டோம்


மாற்றங்களை மாற்றி விட்டோம்
நாம் நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாம்
கண்டபடி அணைகள் கட்டப்படுவதை
மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதை
கட்சிகள் இஷ்டத்திற்குக் கூட்டணிகள் வைப்பதை
மசாலா படங்கள் எடுத்து காசு பார்ப்பதை
ஏமாற்ற மனமில்லாதவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று
எள்ளி நகையாடுவதை
நம்மிடம் லஞ்சம் வாங்கி
நமக்கே டீயும் வடையும் வாங்கிக் கொடுப்பதை
மண்ணையும் நீரையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட
அதிலும் ஆன மட்டும் நமக்கென வாய்த்த தலைவர்கள் சுருட்ட
நாம் நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாம்
நாம் மாற்றிக் கொண்டு விட்டோம்
நம் கைகளில் இருந்த வாக்குச்சீட்டுகளை ரூபாய் நோட்டுகளாக!
*****

அலையும் பாம்புகள்
விஷமுள்ள மனிதப் பாம்புகள்
அலைகின்றன
கொத்துவதற்கு எந்நேரமும்
டாஸ்மாக் மதுவைப் பருகியபடி
டூவீலர் எனும் நாக்கை நீட்டிக் கொண்டு!
*****

நிலைகுத்தும் மனது
ஏற்றங்களுக்குப் பின்னே இறங்குகின்றது
இராட்டினம் போல் வாழ்க்கை!
இறக்கத்திற்குப் பின்னே
ஏற்றமில்லை என்பது போல
நின்று விடும் இராட்டினமாய்
நிலைகுத்தி நிற்கிறது மனது!
மலைகள் உயரமாகவும்
பள்ளத்தாக்குகள் ஆழமாகவும்
இருப்பது குறித்த எந்த உணர்வுமின்றி
ஏறி இறங்குகிறது காற்று,
உச்சியையும், அதள பாதாளத்தையும்
ஒரு சேர சந்தித்து விட்ட
வெறுமையுடன் பெருவெளியில் நிற்பவனின்
இதயத்தை வருடியபடி வீசிச் செல்கிறது
அவன் பெருந்துடிப்பை
உயிர்த்துடிப்பாய் மாற்றியபடி!
*****

வைரஸ்


வைரஸ்
"சிஸ்டம் புல்லா வைரஸ்!" என்றான் டெங்குக் காய்ச்சலில் படுத்திருந்த மகுடேஸ்வரன்.
*****
மொபைல்
டச் மொபைல் வாங்கிக் கொடுத்த அப்பாவின் கையில் கீபேட் மொபைல்.
*****
ஏன்?
"அப்பா மட்டும் குடிக்காம இருந்திருந்தா, நீ ஏன்மா குடிப்பழக்கத்துக்கு ஆளாகி இருக்கப் போறே?" என்றான் மகன் விஷால் ஆறுதலாக.
*****
சங்கு
"இன்னொரு தடவை மாட்டுனே சங்குதான்!" என்ற இன்ஸ்பெக்டரிடம், "தேங்ஸ் சார்! இந்த ஒரு தடவை தப்பிக்க விட்டதுக்கு!" என்றான் சங்கர்.
*****
வரம்
வெட்டிய கோடரியைப் பறிகொடுத்த விறகுவெட்டியிடம் தேவதை தந்தது ஒரு மரக்கன்றை.
*****

27 Nov 2016

நிவாரணம்


புதுசு
"டாடி! புது ரைம்ஸ் சொல்லிக் கொடுங்க!" என்ற அம்முக்குட்டியிடம், ரைம்ஸ் சி.டி.யை எடுத்துக் கொடுத்தான் மகேஷ்.
*****
போச்சு
"தண்ணி சீக்கிரமே வடிஞ்சிடுச்சு!" ரங்கநாதன் சொல்ல, "நல்லதாப் போச்சு!" என்றார் சிவசாமி. "ம்ஹூம்! நிவாரணம் போச்சு!" சலித்துக் கொண்டார் ரங்கநாதன்.
*****
தீர்வு
"ஏரி உடைச்சிகிடுச்சு!" என்ற தகவல் வந்ததும், எம்.எல்.. சொன்னார், "அதுக்குதான் அப்பவே சொன்னேன் அதை ப்ளாட் போட்டு வித்துடலாம்னு!"
*****
நிவாரணம்
வெள்ளம் வடிந்த பின், இறந்துப் போன தாத்தாவுக்காக தலையில் அடித்துக் கொண்டு அழுதான் பரமன், "நாலு லட்சம் நிவாரணம் போச்சே!"
*****
புலம்பல்
ஊரில் ஒருத்தர் பாக்கியில்லாமல் புலம்பிக் கொண்டிருந்தார் சத்தியமூர்த்தி, "ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கணும்னு ஆயிரம் முறை மனு கொடுத்தாச்சு! வந்தபாடில்ல! அது எப்படிடா? வாய் வார்த்தையா கூட சொல்லல, டாஸ்மாக் வந்திடுச்சே?"
*****

கரியும் நிலக்கரியும், தேனும் மீத்தேனும் சார்ந்த இடம் குறித்த கவிதைகள்


பெருந்தன்மை
கருப்பை வெளியே தள்ளியதை
அனாதையாக்காமல்
ஏற்றுக் கொள்ளும்
குப்பைத் தொட்டிகள்!
*****

கரியும் நிலக்கரியும், தேனும் மீத்தேனும் சார்ந்த இடம் குறித்த கவிதைகள்
நதியின் ஆன்மா
காணாமல் போன பின்
புலம்புவோம்
பாலைநிலத்திடம்!
*****
செவ்வாய் கிரக ஆராய்ச்சி போல
நதியோடி சுவடுகளை
வருங்கால வரலாற்றில் ‍தேடுவோம்!
*****
இங்கே நிலக்கரி எடுத்தார்கள்
அங்கே மீத்தேன் எடுத்தார்கள்
அதை விட ஆழமாய்
இங்கே நீர் எடுக்கிறார்கள்
என்போம் நிகழ்காலத்திடம்!
*****
மிதமிஞ்சி பொழிந்த போதெல்லாம்
அழிவு என்று சொல்லி
ஆழ்குழாய் போட்டு எடுக்கும் அந்நீரை
வளம் என சொல்லிச் சொல்லி மாய்வோம்!
*****
நிலக்கரியும், மீத்தேனும் எடுக்க வந்தவர்கள்
நமது நீரை நமக்கே இல்லாமல் ஆக்கி
நமது நீரை எடுத்து நமக்கு விற்பதை
காசு கொடுத்து வாங்கிப் பருகுவோம்!
*****
நிலக்கரியையும், மீத்தேனையும்
தோண்டித் தோண்டி தீர்த்த பின்
நமது நீரை சொட்டுச் சொட்டாய்
கண்ணீர் விட்டபடி
தேடிக் கொண்டிருப்போம் நாம்!
*****

ஓட்டம்
கட்டுமானத்தில் வாங்கிய
உயிர்ப்பலிகளை மறந்து விட்டு
உற்சாகமாக ஓடும்
மெட்ரோ ரயில்!
*****

26 Nov 2016

ஆயிரமாயிரம் கோபங்கள்


நன்றியறிதல்
பழம் தந்த மரத்திற்குப்
பாடலைப் பாடிச் செல்கிறது
பறவை!
*****

நடப்பன
நடப்பதிலிருந்து
சைக்கிளுக்கு மாறியவன்
சைக்கிளிலிருந்து
பைக்கிற்கு மாறியவன்
பைக்கிலிருந்து
காருக்கு மாறியவன்
சுகரும் கொலஸ்ட்ராலும் சேர,
டிராயரும் டீ சர்ட்டுமாக
இப்போது
நடப்பதற்கு
மாறி விட்டான்!
*****

முத்தத்தின் ஒலி
முத்தமிடுவது போலவே
இருக்கிறது
உன்னிடமிருந்து
பீப் பீப் என்று
ஒலியோடு
வந்து விழும்
குறுஞ்செய்தி!
*****

ஆயிரமாயிரம் கோபங்கள்
ஒன்றுமில்லை என்று
வரும்
குறுஞ்செய்தி
ஆயிரமாயிரம் கோபங்களை
அடக்கிக் கொண்டிருக்கிறது!
*****

வாசகங்கள்
கழிப்பார்கள்
என்று தெரிந்தும்
எழுதி வைக்கப்படுகின்றன
"சிறுநீர்க் கழிக்காதீர்கள்!"
*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...