29 Nov 2016

கணக்கில் வராத கவலைகள்!


கணக்கில் வராத கவலைகள்!
கருப்புப் பணம் வெளியேறுவதற்கு முன்
சாமான்ய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி விடக் கூடாது
பிணங்களாகவும், அகதிகளாகவும்.
பணம் எடுப்பதில் கட்டுபாடு என்பது நல்ல விசயம்தான் என்பவர்கள்
விலைவாசி கட்டுபாட்டில் இல்லாமல் இருப்பது
மோசமான விசயம் என்பதை செலக்டிவ் அம்னீசியாவாக மறந்து போனவர்கள்.
நோட்டுகளை மாற்றவதிலும், நோட்டுகளைப் பெறுவதிலும்
வழிந்தோடும் உழைப்பின் வியர்வை
உற்பத்தியின் பக்கம் வற்றிப் போய் கிடக்கிறது
கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததால் வறண்டு போன காவிரி போல.
இப்போது பதுக்கல்காரர்கள் ஒழிந்து விட்டார்கள் என்ற சொல்ல முடியாது
அவர்கள் நூறு ரூபாய் நோட்டுகளை பதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் தேடுபவர்களைப் போல.
என் பணம் உன் பணம் என்று கொடுத்த வங்கி
உன் பணம் என் பணம் என்று வாங்கிக் கொண்ட பின்
பாக்கெட்டில் இருப்பது காலிப் பர்சும், ஆதங்கங்களும்
அதில் மகள் கேட்ட அன்புப்பரிசை வாங்கிக் கொடுக்க முடியாமல் போய்
பெற முடியாமல் போன வற்றிப் போன முத்தங்களின் சுவடுகளும்தான்.
மாதம் பிறந்தால் கொடுக்க வேண்டிய
வீட்டு வாடகையும்
மளிகைக் கடை கணக்கும்
பள்ளிக் கட்டணமும்
பால், காய்கறிக் கணக்கும்
மருத்துவச் செலவும்
இதரச் செலவினங்களும்
கையில் மாற்றிய நோட்டின் அளவுக்கு வந்தால் நல்லது
கை மீறிப் போனால்... என்ன செய்வதோ என்ற பயம்
ஏரிக்கடையுடைத்து சென்னை மாநகரில் புகுந்த
வெள்ளம் போல் மனதில் தினம் தினம் உள்ளது
*****

சமத்து சம்புலிங்கம் பாடுகிறார்!
ஒரு கட்சிக்காரன்கிட்ட மட்டும்
இரண்டாயிரம் நோட்டு கட்டுக் கட்டா இருக்குது!
மற்ற கட்சிக்காரன்கிட்ட எல்லாம்
இருந்த நோட்டு செல்லா நோட்டு ஆகுது!

நாளுக்கு இவ்வளவு பணம் எடுக்கலாம்
வாரத்துக்கு இவ்வளவு பணம் எடுக்கலாம்
கட்டுபாடுகள் அத்தனையும் சாமான்ய மக்களுக்குதான்!
கட்டுக்கட்டாய்ப் பணம் கட்சிக்காரன் கையில்தான்!

பணக்காரன் பணத்தை மாற்ற
வங்கிகளே நெட்டில் கணக்குத் தொடங்குது!
இது புரியாத ஏழை பாழைகள்
வங்கியில் வரிசையில் கால்கடுக்க நிற்குது!

ஓட்டுக்குக் கொடுக்கும் பணம் முழுதும்
ஒரு கட்சிகிட்டே சேருது!
மத்த கட்சிகளெல்லாம் திவால் ஆகுது!
சீக்கிரமே ஒரு கட்சி ஆட்சியாகப் போகுது!

அடிமாடாக போகும் மாடுகளை
வரிசை வரிசையாக வண்டியிலே ஏத்துறாங்க!
அவங்க போற வழியிலே சனங்களை
வரிசை வரிசையாக வங்கியிலே பார்க்குறாங்க!

இரண்டாயிரம் வந்தும் மாறவில்லை
சம்பளம் வாங்காம உழைக்கிறாங்க!
இரண்டு கைகள் இருப்பதாலே, நல்லவேளை
கையேந்திப் பொழைக்கிறாங்க!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...