28 Nov 2016

மாற்றங்களை மாற்றி விட்டோம்


மாற்றங்களை மாற்றி விட்டோம்
நாம் நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாம்
கண்டபடி அணைகள் கட்டப்படுவதை
மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதை
கட்சிகள் இஷ்டத்திற்குக் கூட்டணிகள் வைப்பதை
மசாலா படங்கள் எடுத்து காசு பார்ப்பதை
ஏமாற்ற மனமில்லாதவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று
எள்ளி நகையாடுவதை
நம்மிடம் லஞ்சம் வாங்கி
நமக்கே டீயும் வடையும் வாங்கிக் கொடுப்பதை
மண்ணையும் நீரையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட
அதிலும் ஆன மட்டும் நமக்கென வாய்த்த தலைவர்கள் சுருட்ட
நாம் நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாம்
நாம் மாற்றிக் கொண்டு விட்டோம்
நம் கைகளில் இருந்த வாக்குச்சீட்டுகளை ரூபாய் நோட்டுகளாக!
*****

அலையும் பாம்புகள்
விஷமுள்ள மனிதப் பாம்புகள்
அலைகின்றன
கொத்துவதற்கு எந்நேரமும்
டாஸ்மாக் மதுவைப் பருகியபடி
டூவீலர் எனும் நாக்கை நீட்டிக் கொண்டு!
*****

நிலைகுத்தும் மனது
ஏற்றங்களுக்குப் பின்னே இறங்குகின்றது
இராட்டினம் போல் வாழ்க்கை!
இறக்கத்திற்குப் பின்னே
ஏற்றமில்லை என்பது போல
நின்று விடும் இராட்டினமாய்
நிலைகுத்தி நிற்கிறது மனது!
மலைகள் உயரமாகவும்
பள்ளத்தாக்குகள் ஆழமாகவும்
இருப்பது குறித்த எந்த உணர்வுமின்றி
ஏறி இறங்குகிறது காற்று,
உச்சியையும், அதள பாதாளத்தையும்
ஒரு சேர சந்தித்து விட்ட
வெறுமையுடன் பெருவெளியில் நிற்பவனின்
இதயத்தை வருடியபடி வீசிச் செல்கிறது
அவன் பெருந்துடிப்பை
உயிர்த்துடிப்பாய் மாற்றியபடி!
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...