18 Dec 2025

வாழ்க்கையை எது சலிப்பூட்டுகிறது?

வாழ்க்கையை எது சலிப்பூட்டுகிறது?

அம்மா இட்டிலிக்கும் தோசைக்கும் மாவரைத்தக் காலத்தில் எப்படியும் மாவரைத்து முடிக்க ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகும். அவர்கள் யாரும் சலிப்புற்றோ, எரிச்சலுற்றோ பார்த்ததில்லை. மாறாக அவர்களுக்கு இருந்த கவலையெல்லாம் இப்படி அமாவசைக்கு அமாவசைக்குத்தான் மாவரைக்க உளுந்து இருக்கிறதே என்பதுதான். இன்று உளுந்து பற்றாக்குறையும் இல்லை, மாவரைக்கும் கஷ்டமும் இல்லை. மாவரைக்கும் இயந்திரத்தில் போட்டால் அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள் வேலை முடிந்து விடுகிறது. அதையும் மாவைப் போட்டு விட்டு அப்படியே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. இருந்தாலும் இந்த வேலை சலிப்பூட்டுகிறது, பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

நடந்தே சென்ற கால கட்டங்களிலும், மிதிவண்டியில் சென்ற கால கட்டங்களிலும் அவைச் சோர்வையோ, சலிப்பையோ தந்ததில்லை. வேற்றூருக்குச் செல்கிறோம், விழாவுக்குச் செல்கிறோம் என்கிற சந்தோசத்தைத் தந்தது. கால் வலி பின்னி எடுக்க நடந்தோ அல்லது மிதிவண்டி மிதித்தோ செல்வதாக இருந்தாலும் எப்படா வீட்டை விட்டு வெளியே கிளம்புவோம் என்று இருக்கும். இன்று சோகுசாகப் பேருந்துகளில், இரு சக்கர வாகனங்களில், மகிழ்வுந்துகளில், விமானங்களில் செல்கிறோம். உடல் அலுப்பு ஏற்படாத வகையில் சொகுசான பயண வசதிகள் எத்தனையோ இருக்கின்றன. இருந்தாலும் பயணங்களில் எரிச்சலும், இன்னும் சீக்கிரம் போக முடியாதா என்ற விரக்தியும்தான் உண்டாகின்றன.

கடிதங்களில் தகவல் பரிமாற்றம் நடந்த காலங்களில் ஒரு தபால் போய் மறுதபால் வர ஒரு வாரத்திற்கு மேலாகும். அப்படி பதில் தபால் வரும் அந்த நாளானது அந்த நாளையே சொர்க்கபுரியாக மாற்றி விடும். கடிதத்தைத் திரும்ப திரும்ப படித்து, அதிலுள்ள வரிகளைத் திரும்ப திரும்ப சிலாகித்து, அக்கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துப் பாதுகாத்த கடிதம் தந்த குதூகலம் மறக்க முடியாது. இன்று வாட்ஸ்அப்பில், மின்னஞ்சலில் செய்தி அனுப்பி அடுத்த சில நிமிடங்களுக்குள் பதில் வந்து விடுகிறது. என்றாலும் அந்தப் பதிலோ சிலாகிப்போ, சந்தோசத்தேயோ தருவதற்குப் பதிலாக, மீண்டும் அடுத்த செய்தி, அடுத்த பதில் என்று சங்கிலித் தொடர் போலத் தொடர்ந்து கொண்டு இருக்கிறதே தவிர, சின்ன சிலிர்ப்பைக் கூட தருவதில்லை. சிலபல நேரங்களில் பதில் வரவில்லை என்றால் அலைபேசியையே தூக்கி உடைத்து விடும் அளவுக்குப் பொறுமையற்றவர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

என்னதான் நேர்ந்து கொண்டிருக்கிறது இந்த வாழ்க்கையில்? என்னதான் ஆகி விட்டது இந்த வாழ்க்கைக்கு? வாழ்க்கை வேகமாகப் போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, நாம் நிதானமாக வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம், பொறுமையோடு காத்திருப்பதைக் கேவலமாக நினைக்கிறோம்.

நிஜமாக வாழ்க்கைக்கு எதாவது ஆகி விட்டதா என்றால் அப்படியும் இல்லை. அது அதுவாகத்தான் இருக்கிறது. அதைப் பார்க்கும் மனதுதான் வேகமான தொனிக்குப் போய் விட்டது. அதை நிதானப்படுத்திக் கொள்வதும், பொறுமையாகப் போகப் பயிற்றுவித்துக் கொள்வதும் நம் கைகளில்தான் இருக்கிறது. வண்டியைச் செலுத்தும் போது லக்கான் அல்லது கட்டுபாடு நம் கைகளில்தான் இருக்கும். ஆம், அதை மனதின் போக்கிற்குச் செலுத்தாமல், பயணத்தின் நோக்கையும் சாலையின் போக்கையும் கொண்டு செலுத்துவது நம் கைகளில் நமது பொறுப்பில்தான் இருக்கிறது.

*****

1 comment: