14 Sept 2023

வீடு கட்டி வாடகைக்கு விட்டு லாபம் பார்க்க முடியுமா?

வீடு கட்டி வாடகைக்கு விட்டு லாபம் பார்க்க முடியுமா?

வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டு லாபம் பார்ப்பதை விட அத்தொகையை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக (பிக்ஸட் டெபாசிட்) போட்டாலே நீங்கள் அதிக வருமானம் பார்க்க முடியும்.

நீங்கள் அதிக வாடகை வருமானம் தரும் மும்பை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் வீடு கட்டி வாடகைக்கு விட்டாலும் உங்களால் 3 லிருந்து 4 சதவீதத்திற்கு மேல் வருமானத்தைப் பெற முடியாது. அதாவது இடத்தை வாங்கி வீட்டைக் கட்டச் செலவிட்ட தொகைக்கு 3 லிருந்து 4 சதவீதம் அளவுக்கே வாடகை வருமானம் கிடைக்கும்.

இதே நீங்கள் அதே தொகையை வங்கி அல்லது அஞ்சக நிரந்தர வைப்புத் திட்டத்தில் போட்டிருந்தால் குறைந்தபட்சம் 6 லிருந்து அதிகபட்சம் 8 சதவீத வருமானம் கிடைக்கும். ஒவ்வோராண்டும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி சதவீதம் மாறுபடுவதால் 6லிருந்து 8 வரையிலான சதவீத இடைவெளியைச் சுட்டி நான் குறிப்பிடுகிறேன்.

ஏன் வீட்டு முதலீடு வேண்டாம்?

வீட்டில் முதலீடு செய்வது உயிர்ப்பான முதலீடு ஆகாது. அது உயிர்ப்பற்ற முதலீடே. வாங்கிப் போட்ட இடத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். உயர்கின்ற வீட்டின் மதிப்பு என்பது அந்த விலைக்கு வீட்டை நீங்கள் விற்றால்தான் சாத்தியம்.

பல நேரங்களில் வீட்டை விற்றுப் பணமாக மாற்றுவதைப் போன்ற அவஸ்தையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. நீங்கள் நினைத்த நேரத்தில் வீட்டை விற்று பணத்தை மாற்றுவது அவ்வளவு சுலபமானதல்ல. மொத்தத்தில் அது அவ்வளவு எளிமையான ஒன்றல்ல.

அப்படியானால் வீடு வாங்க வேண்டமா என்றால் நீங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் அதையும் நீங்கள் வாடகை வீடாக அமைத்துக் கொள்வதுதான் நல்லது.

உங்கள் வீடு வாடகை வீடாக அமைந்து விட்டால் பணி மாறுதல், இட மாறுதல் காரணமாக நீங்கள் வீட்டைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய அவசியமில்லை. சொந்த வீட்டை விட்டு விட்டு பணிக்காக இன்னோர் இடத்தில் வாடகைக்குக் குடியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

உங்கள் பிள்ளைகளின் படிப்பு, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் உங்களது தனிப்பட்ட மனமாற்றங்கள் காரணமாக நீங்கள் இடம் பெயர்வதற்கான சூழ்நிலைகள் அதிகம் உருவாகின்றன. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் பணத்தை வீடு வாங்குவதில் கொண்டு போய் முடக்க வேண்டியதில்லை. வீட்டை ஓரிடத்தில் வாங்கிப் போட்டு விட்டு இன்னோர் இடத்தில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதே பணத்தை நீங்கள் சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தைக் கொண்டே நீங்கள் வாடகையைச் செலுத்தி விடலாம். ஒத்தி எனப்படும் ஒத்திகைக்கு வீடு கிடைக்கும் என்றால் நீங்கள் இன்னும் பாக்கியசாலிதான்.

வீட்டு முதலீட்டுக்கான மாற்றுப் பார்வைகள்

பணத்தைப் பெருக்க நினைப்பவர்கள் வீட்டை வாங்கியோ அல்லது வீட்டைக் கட்டியோ அல்லது வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டோ தங்களது நினைப்பைச் சாத்தியமாக்க முடியாது. அவர்கள் வீட்டை முதலீடாகப் பார்ப்பதை நிறுத்தித் தங்கம், கடன் பத்திரங்கள், பங்குகள் சார்ந்து தங்கள் பார்வையைத் திருப்ப வேண்டும்.

மேலும் வீடு என்றால் அதை நீங்கள் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தப் பராமரிப்புக்கே நீங்கள் வீட்டு வாடகை மூலம் பெறும் பெரும்பாலான வருமானத்தைச் செலவிட வேண்டியிருக்கும். வீட்டு வரி, குடிநீர் வரி, வாடகைக்கான வருமான வரி என்று வீட்டைக் கட்டி விட்டு நீங்கள் அதற்கான வரியையும் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் செலுத்துத் தொகைகள் அனைத்தும் உங்கள் வீட்டின் வாடகை வருமானத்தை அவ்வபோது உறிஞ்சிக் கொண்டிருக்கும்.

வீடுதான் வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள்

இதைத் தாண்டியும் உங்களுக்கு வீட்டை வாங்கிப் போட விருப்பம் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நேரத்திலும் அடிமாட்டு விலைக்கு வீடுகள் விற்பனைக்கு வரும். அப்போது வேண்டுமானால் வாங்கிப் போடுங்கள். பிறகு அந்த வீட்டை நீங்கள் எப்போது விற்றாலும் லாபமாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் பேரம் பேசி வீட்டின் விலையைக் குறைக்க முயன்று அது முடியாமல் வீட்டைச் சொன்ன விலைக்கு வாங்கும் நிலை இருக்குமானால் நீங்கள் வீட்டை வாங்காமல் இருப்பதே நல்லது.

அடிமாட்டு விலைக்கு அல்லது அதை விட குறைத்துக்கேட்டாலும் வீட்டை விற்று விட்டுப் போகும் நிலை இருக்கிறதென்றால் வில்லங்கம் உள்ளிட்ட கிரயம் சம்பந்தப்பட்ட அத்தனையையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆராய்ந்து பிறகு வீட்டை வாங்கிப் போடுங்கள். இப்படியும் வீட்டை வாங்குவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. கிரயப் பத்திரங்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டும்.

சிக்கல்களைக் களையும் முதலீட்டுக் கலவை

வீட்டை வாங்குவதில் விற்பதில் சிரமங்கள் இருக்கின்றன. பல நேரங்களில் அது சரியாக அமைவது உங்கள் அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம். உங்கள் ஆசைக்கும் குடும்பத்தினர்களின் ஆசைக்கும் ஒரு வீட்டை மட்டும் நீங்கள் ஒரு முதலீடாக வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் உங்கள் முதலீட்டை ஒரு கலவையாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் பல சிரமங்களையும் சிக்கல்களையும் சுலபமாகக் கடக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

வீட்டைப் போலத் தங்கம் போன்ற முதலீடுகளில் உங்களுக்கு இவ்வளவு சிக்கல்கல்களோ சிரமங்களோ இருக்கப் போவதில்லை. தங்கத்தை விற்றோ அடகு வைத்தோ பணத்தைப் புரட்டுவதோ சிரமமாக அமையப் போவதில்லை. எளிமையாக வாங்கலாம் விற்கலாம்.

வீட்டை வாங்கி விற்பதில் இருக்கும் பிக்கல் பிடுங்கல்கள் நல்லப் பங்குகளாகத் தேர்ந்தெடுத்து வாங்கி விற்பதிலும் இருப்பதில்லை. கடன் பத்திரங்கள் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளிலும் நிரந்தர வைப்புத்தொகைத் திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு இருகரம் கூப்பி நீங்கள் வரவேற்கப் படுவீர்கள்.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து யோசிக்கும் போது உங்கள் முதலீடுகளில் ஒன்றாக அதுவும் அதாவது உங்களின் வசிப்பிடமாக வேண்டுமானால் வீடு இடம் பெறலாம். வீட்டோடு நிரந்தர வைப்புத் தொகை, தங்கம், கடன் பத்திரங்கள், பங்குகள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு கலவையாக உங்கள் முதலீடு இருப்பதுதான் சரியானது. இப்படிச் செய்யும் போது வீட்டைக் கட்டி அதன் மூலம் பெறும் வாடகை வருமானத்தை விட அதிக வருமானத்தையும், அதிகமான முதலீட்டுப் பெருக்கத்தையும் நீங்கள் பெறவும் அடையவும் முடியும்.

ஏன் நீங்கள் இதைப் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது?

பரீட்சித்துப் பார்த்து உங்கள் அனுபவங்களையும் பகிருங்களேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...