13 Sept 2023

முதுமை காலம் குறித்துச் சிந்திக்க வேண்டிய இளமைக் காலம்

முதுமை காலம் குறித்துச் சிந்திக்க வேண்டிய இளமைக் காலம்

சேர்ந்து வாழ்பவர்களுக்கு தனிமை குறித்த பயம் இருப்பதில்லை, வருங்காலம் குறித்த எண்ணங்களும் இருப்பதில்லை. அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வை மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறார்கள். இணைந்திருப்பதின் அனுகூலம் அது. அப்படியே இருந்து விட்டால் நீங்கள் எதைக் குறித்தும் யோசிக்க வேண்டியதில்லை. இந்த அடிப்படையில்தான் கூட்டுக்குடும்பங்கள் சிதையாமல் இருந்தன.

இனி வரும் காலங்களில் கூட்டுக் குடும்பங்களைப் பார்ப்பது அபூர்வமாகப் போகின்றன. தனிக்குடும்பங்களே எஞ்சி நிற்கப் போகின்றன. தனிக்குடும்பங்களிலும் விலக்கப்பட்டவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், விலகி நிற்பவர்கள், விலகிச் செல்பவர்கள் அதிகமாக இருக்கப் போகிறார்கள். மனிதர்கள் தனித்தனி தீவாக ஒரு சமூக வாழ்க்கைக்குள் வாழக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகப் போகின்றன.

கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகச் சிதைந்தாலும் மனிதர்கள் தனித்துச் சென்று வாழ முடியாத அளவுக்கு எங்கும் நீக்கமற மனிதர்கள் இந்த பூலோகம் முழுவதும் நிறைந்திருப்பார்கள். தனிக்குடும்பங்களிலிருந்து மனிதர்கள் தனித்துச் சென்றாலும் இனி வரும் காலங்களில் ஏதோ ஒரு வகையில் மனிதர்களோடு தொடர்பு இல்லாமல் மனிதர்களும் வாழ முடியாது. இப்படி ஒரு பிணைப்பைத் தவிர மனிதர்களுக்கான மனிதத் தொடர்பு வேறு வகையில் இருக்கப் போவதில்லை. இதைத் தவிர இன்னொரு வகையிலான தொடர்பும் இருக்கப் போகிறது. அதைத்தான் இனி விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

மனிதர்கள் மனிதர்களோடு தொடர்பு கொள்வதற்கான கருவியாக அண்மைக் காலமாகப் பணத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்பொரு காலத்தில் இதற்கான சாதனமாக மொழியும் இதமான அணுகுமுறைகளும் கனிவான நோக்குகளும் இவற்றுக்கு எல்லாம் அடிப்படையைக் கட்டமைக்கும் உறவுகளும் நட்புகளும் இருந்தன. அந்த நிலை இப்போது மாறிக் கொண்டிருக்கிறது மற்றும் மாறி விட்டது.

கையில் பணமிருந்தால் மனிதர்களை அடிபணிந்து சேவை செய்ய வைக்க முடியும் என்ற கருத்து மனிதர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது. பணமிருந்தால் மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நோக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் பணத்தை மையப்படுத்திப் பார்க்கும் பார்வையும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

குடும்பத்திலிருந்து துரத்தி விட்டால் என்ன அல்லது விலக்கி வைத்தால் என்ன? கையில் பணமிருந்தால் தான் விரும்பும் வகையில் சொகுசு வாழ்க்கையோ அல்லது ஆதரவற்றோர் இல்லங்களிலோ அல்லது முதியோர் இல்லங்களிலோ சர்ந்து கொண்டு காலத்தை ஓட்டி விடலாம் என்கிற புதிய பார்வைக்கு மனிதர்கள் வந்து விட்டார்கள்.

இப்படிப் பார்வைகளும் மனப்பான்மைகளும் வளர்ந்து விட்ட நிலையில் பணம் இல்லாவிட்டால் நிலைமை கஷ்டம்தான். பணத்தை நம்பிப் பணத்திற்காகக் கூட்டுக் குடும்பத்தை கைவிட்ட மனிதர்கள் கடைசியில் அந்தப் பணத்தை எதிர்பார்க்கும் அளவுக்குச் சேர்க்க முடியுமா என்ற சந்தேகத்திலும் சேர்க்க முடியாத ஆற்றாமையிலும் பணத்தால் ஏற்படும் நிறைவின்மையைச் சகிக்க முடியாமல் அந்நியப்பட்டும் அந்த அந்நியத்தை எதிர்கொள்ள முடியாமல் சுயமாக மரணித்தும் போகிறார்கள் என்பது தத்துவார்த்தம் காட்டும் நிதர்சனம். அதைப் பற்றிப் பேசி அதைப் பெரிதுபடுத்தினால் நாம் மேற்கொண்டு பேசுவதற்கு எதுவும் இல்லை. அதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு எதார்த்தத்திற்கு அணுக்கமாகப் பேச வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இதுவரை நாம் பார்த்த பார்வைகள் மற்றும் நோக்குகளின் அடிப்படையில் இறுதிக்காலம் நிம்மதியாக அமைய இப்போது ஓய்வூதியம் அவசியம் தேவைப்படுகிறது என்பதை இலைமறைக் காயாகப் புரிந்து கொள்ளலாம். பெண்ணும் சன்னும் (மகனும்) காப்பாற்றாவிட்டாலும் பென்சன் காப்பாற்றும் என்ற சொலவம் ஓய்வூதியத்தைப் பற்றி வழக்கில் உண்டு.

கதை சொல்வது போலச் சொன்னால் முன்பொரு காலத்தில் ஓய்வூதியம் தேவைப்படாத அளவுக்கு முதியோர்களைக் குடும்பங்களே ‘கூட்டுக் குடும்பம்’ என்ற வடிவில் தாங்கிக் கொண்டிருந்தன. முதியோர்களுக்கு உரிய மரியாதையோடும் கௌரவத்தோடும் அவர்களை மதித்துப் போற்றிய சமூகம் அவர்களைச் சமீப காலமாகத் தேவையற்ற பாரங்களாகப் பார்க்கின்றன. முதியோர்கள் சுமைகளாகிக் கொண்டிருப்பதாக இன்றையச் சமூகங்கள் கருதத் தொடங்கி விட்டன.

வயதான காலத்தில் தங்களுக்கான கௌரவத்தை, மரியாதையைப் பணமிருந்திருந்தால் மீட்டிருக்கலாம் என்று நினைக்கும் நிலைக்கு மனிதர்களின் எண்ணப்பாடு மாறிக் கொண்டிருக்கிறது. இது சற்று மிகைப்படுத்தப்பட்ட பார்வை போலத் தோன்றினாலும் எதார்த்தமும் அப்படித்தான் சற்றேறக்குறைய இருக்கிறது.

அரசுப் பணிகளில் முன்பொரு காலத்தில் உத்திரவாதமாயிருந்த ஓய்வூதியம் தற்போது உத்திரவாதம் இழந்து நிற்கிறது. அரசுப் பணிகள் பலவும் நிரந்தர பணிகள் என்ற நிலையிலிருந்து மாறி தற்காலிகப் பணிகள், ஒப்பந்தப் பணிகள் என்ற நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன.

பணிகளே நிரந்தரம் இல்லாத போது ஓய்வூதியம் பற்றிய பேச என்ன இருக்கிறது? அப்படியானால் நாம் ஓய்வூதியம் பற்றி எதற்குப் பேச வேண்டும்? விடுபட்டுப் போகும் ஓய்வூதியக் கண்ணியிலிருந்துதான் நாம் அதைப் பற்றிக் கொண்டு அதன் அடுத்தக் கண்ணியைப் பற்றிக் கொண்டு ஒரு வழியைத் தேட வேண்டியிருக்கிறது. அதாவது அவரவர்க்கான ஓய்வூதியங்களை அவர்களே உருவாக்கிக் கொண்டால் என்ன?

வேலையில் இருக்கும் காலம் வரை குடும்பத்தை நடத்தவே தடுமாறும் ஊதியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் ஓய்வூதிய உருவாக்கம் என்பது மாய எதார்த்தத்தைச் சார்ந்தது என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் வருங்கால எதார்த்தம்தான் என்ன? பணி ஓய்வுக்குப் பிறகான செலவினங்களுக்கு யாரையும் நம்பி இருக்க முடியாத சூழ்நிலைதான் வருங்காலங்களில் நிலவப் போகிறது. பிள்ளைகள் அவர்களுக்கான வயிற்றுப்பாட்டிற்கான சம்பளத்தோடு இருக்கும் போது அவர்களை நம்பியும் முதுமைக்கான காலத்தை ஓட்ட முடியாது. அவரவர் முதுமை அவரவர் பாரம் என்று ஆகும் போது ஓய்வுக்குப் பிறகான ஓர் ஊதியம் இல்லாமல் முதுமை எனும் பாரத்தைச் சுமக்க முடியாது.

இந்தப் பாரத்தைச் சுமப்பது எப்படி? அதுவும் பாரத்தைச் சுமக்க திராணியில்லாத முதுமைக் காலத்தில் எப்படிச் சுமப்பது? முதுமையில் உயிர் பிரிகிற வரையில் வாழ்க்கையை ஓட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் அதற்கான திட்டமிடலைப் பணியில் இருக்கும் காலத்தே யோசித்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியிருக்கிறதா என்ன?

அதற்கு முன்பு ஒருவரின் பணிக்காலம் தற்போதைய நிலையில் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பணிக்காலம் ஒவ்வொருவருக்கும் எப்படி ஓடுகிறதென்றால் ஒரு வீட்டைக் கட்டுவதற்காகக் கடனை வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடன் அடைந்த அடுத்த வினாடியே பிள்ளைகளின் எதிர்காலம், திருமணம் என்று அடுத்தக் கட்டத்திற்கான கடன்கள் துவங்கி அவற்றை அடைப்பதற்குள் ஓய்வுக்காலம் டாட்டா, பை பை சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகிறது.

பணிக்கு இடைபட்ட காலத்தில் பணிக்குப் பின்னான ஓய்வுக்காலத்தை எப்படி ஓட்டுவது என்று சிந்திப்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. நேரம் இருந்து சிந்தித்தாலும் ஓய்வுக்காலத்திற்கான பணத்தேவைக்கு எப்படி பணத்தை ஒதுக்கி அந்தப் பணத்தை என்ன செய்வதென்று புரிவதில்லை.

இந்தக் குழப்பங்களுக்கும் மயக்கங்களுக்கும் நீங்கள் ஒரு சில தீர்வுகளை நாடலாம். அவற்றை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

ü மாதா மாதம் நீங்கள் ஒரு தொடர் வைப்பை (ஆர்.டி.) கட்டி வரலாம்.

ü உங்கள் பெயரிலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் நிரந்தர வைப்புத் தொகையை உங்கள் வருமனாத்துக்கு ஏற்ப சில லட்சங்களாவது பராமரிக்கலாம். பத்தாயிரம் வருமானம் உள்ள ஒருவர் தன் வருமானத்தின் மூன்று மடங்கான முப்பதாயிரத்தையாவது நிரந்தர வைப்புத்தொகையில் இட்டிருக்க வேண்டும் என்பதை இதற்கான கட்டாயமாகக் கொள்ளலாம்.

ü வருடந்தோறும் தங்கம் வாங்குவதைப் பழக்கமாக்கிக் கொள்ளலாம். அப்படித்தான் உண்டானதோ இந்த அட்சய திருதியைகள். அப்படி இருந்தால் இந்த அட்சய திருதியைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படியாவது தங்கம் வாங்குவதற்கான ஒரு வாய்ப்பைத்தான் நான் காட்டுகிறேனே தவிர எவ்வித சடங்குகளுக்கும் ஆதரவாக நின்று நான் பேசுவதாக இதைக் கருதிக் கொள்ள வேண்டாம்.

ü பரஸ்பர நிதியில் மாதந்தோறுமோ அல்லது நேரடியாகப் பங்குகளிலோ மாத அல்லது வருடக் கணக்கில் குறிப்பிட்ட அளவுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

ü அவசரப்பட்டு வீடு வாங்குவதோ, கார் வாங்குவதோ, இன்னபிற தனிநபர் கடன்களை வாங்குவதோ செய்யாமல் பணத்தை முதலிட்டுப் பெருக்கும் முறைகளில் கவனம் செலுத்தலாம்.

ü பெருகிக் கொண்டிருக்கும் பணத்திலிருந்து கிடைக்கும் உபரித்தொகையை எடுத்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இப்போது மீண்டும் நாம் பணி ஓய்வுக்குப் பின் எப்படி நடக்கப் போகிறோம் என்பதற்கு வந்து விடுவோம்.

மனிதர்களுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, உறைவிடம்தான். உங்கள் உணவை நீங்களே தயாரிக்க முடியுமானால், எளிமையான சராசரியான உடைகளே உங்களுக்குப் போதுமென்றால், அலைச்சல் இல்லாமல் அருகிலேயே ஒரு வாடகை வீடே ஏற்படையதென்றால் உங்களுக்கு வரும் வருமானம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அது ஒரு பிரச்சனையே இல்லை. அப்படி ஒரு வருமானத்தை முதுமையிலும் தேடிக் கொள்ள இயலும்.

ஆனாலும் மழைக்காலத்திற்காக எறும்பு உணவைச் சேமித்து வைப்பதைப் போல நீங்கள் முதுமை காலத்திற்காக வருமானம் தரும் முதலீடுகளை நீங்கள் நன்றாகச் சம்பாதிக்கும் காலத்தில் செய்து வைக்கலாம்.

பணிக்காலத்தில் எவ்வளவு குறைந்த வருமானத்திலும் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுதான் பணம் குறித்த சாமர்த்தியம் எனப்படுகிறது. அநாவசிய செலவுகளை விலக்கத் தெரிந்தால் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் பணம் தானாகவே மிச்சமாகும். மிச்சப்படுத்திய பணத்தை நீங்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் முதலீடு செய்யலாம்.

தொடர்ந்து செய்யப்படும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான முதலீடுகள் சில பல ஆண்டுகளைக் கடக்கும் போது உங்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுக்கும். வட்டித்தொகை, ஈவுத்தொகை போன்ற வருமானங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும். அப்போது நீங்கள் முதுமையை நெருங்கியிருப்பீர்கள். ஓய்வூதியம் போல உங்களது முதலீடு உபரி வருமானத்தைத் தந்து கொண்டிருக்கும்.

இதற்கெல்லாம் நீங்கள் இளமைக் காலத்திலேயே யோசித்திருக்க வேண்டும். அதற்கான செயல்முறைகளில் இறங்கியிருக்க வேண்டும். வயது அடிப்படையில் சொன்னால் நீங்கள் இருபத்தைந்து வயதானவர் என்றால் இது குறித்துச் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வயதில் உங்களுக்குத் திருமணம் ஆகாமல் இருக்கலாம். குழந்தைகளும் பிறக்காமல் இருக்கலாம். அந்த வயதுதான் சிந்திப்பதற்கும் சிந்தித்ததைச் செயல்முறைக்குக் கொண்டு வருவதற்கும் ஏற்ற வயது. எனவேதான் சொல்கிறேன் முதுமையைப் பற்றி இளமையிலேயேச் சிந்தியுங்கள் என்று.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...