பணச் சேதத்தை / பண விபத்தை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்!
இந்தப் பத்தியானது உங்களுக்கு
முதலீட்டுத் தகவல்கள் குறித்த சாதாரணத் தகல்களைக் கொண்ட பத்தியாகத் தெரியலாம்? இந்த
விவரங்கள் எல்லாம் தெரிந்தவைதானே என்று சொல்லலாம். பிறகெப்படி பலர் ஏமாற்று முதலீட்டுத்
திட்டங்களில் முதலீடு செய்து அலமலந்து போகிறார்கள்? தங்களுக்குத் தாங்களே பணச் சேதத்தை
உருவாக்கிக் கொள்கிறார்கள்? பண விபத்தில் சிக்கி விட்டதாகச் சுய மரணத்தைத் தேடிக் கொள்கிறார்கள்?
இந்தப் பத்தியில் சொல்லப்படும்
விவரங்கள் உங்களுக்குத் தெரிந்தவையாக இருந்தாலும் அந்தத் தகவல்களின்படிதான் நீங்கள்
செயல்படுகிறீர்களா என்ற கேள்வி முக்கியமானது. அப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ளவும்
அந்தக் கேள்விக்கு நேர்மையான விடை காணவும் இந்தப் பத்தி உங்களுக்கு உதவும் என்பதால்
இந்தப் பத்தியைப் பயனற்ற பத்தியாக நூறு சதவீதம் கருதி விட வேண்டியதில்லை. ஏதோ ஒரு சில
சதவீதமாவது இந்தப் பத்தி ஏதோ ஒரு சில விதங்களில் உங்களுக்கு உதவவே கூடும்.
உங்கள் பணத்தை மாதா மாதம்
சேமிக்கவும் அல்லது மொத்தமாக முதலீடு செய்யவும் பாதுகாப்பான எத்தனையோ சரியான முறையான
ஏற்பாடுகள் இருக்கின்றன. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறைபடுத்தப்பட்ட திட்டங்கள்
இருக்கின்றன. அத்திட்டங்களில் அறிவிக்கப்படும் உத்தரவாதமான முதிர்வுத் தொகைக்கு அரசாங்கமும்
பொறுப்பேற்கிறது.
முறையான முதலீட்டு
முறைக்கான பட்டியல்
ஒரு பட்டியலிட்டால்,
ü அஞ்சலகங்களின் சேமிப்பு மற்றும்
முதலீட்டுத் திட்டங்கள்
ü வங்கிகளின் சேமிப்பு மற்றும்
முதலீட்டுத் திட்டங்கள்
ü மத்திய வங்கியின் (ரிசர்வ்
பேங்க்) கருவூலப் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் (ரிடெயில் டேரக்ட் மூலமாக இணையதளத்தில்
நீங்களே வாங்கக் கூடியது)
ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இப்படி மூன்று விதமான வாய்ப்புகள்
அணுக்கமாகவும் சுலபமாகவும் எளிதாகவும் முதலீட்டுத் தொகைக்கு முழு பாதுகாப்பாகவும் இருக்கின்றன.
இதைத் தாண்டி இதை விடவும்
பாதுகாப்பாகத் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
வேறு சில முறையான
வாய்ப்புகள்
முதலீட்டு அபாயங்களை எதிர்கொள்ளும்
பண வலுவும் மன வலுவும் இருக்குமானால் நீங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி நீண்ட
காலம் வைத்திருந்து லாபம் பண்ணவும் முடியும். கூடுதல் லாபத்தைப் பார்க்க வேண்டுமானால்
வேறெந்த அபாயரமான முதலீட்டு முறைகளில் ஈடுபடுவதை விட பங்குச் சந்தை பாதுகாப்பானது என்றே
சொல்லலாம்.
பங்குச்சந்தை அரசாங்கத்தாலும்
அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் செபி போன்ற அமைப்புகளாலும் கண்காணிக்கப்படுகிறது.
கலவையான நீண்ட கால அளவில் செய்யப்படும் பங்கு முதலீடுகள் முதலீட்டாளர்களுக்குக் கூடுதல்
லாபத்தையே வழங்கியிருக்கின்றன.
இப்படி முறைபடுத்தப்பட்ட
பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது முதலீட்டாளர்கள்
ஏன் நிச்சயமில்லாத நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழக்க வேண்டும்?
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள்
உங்களுக்குப் புரியாவிட்டால் நீங்கள் பரஸ்பர நிதியிலும் மாதா மாதம் ஒரு தொகையை தொடர்
வைப்பில் (ஆர்.டி.) கட்டுவதைப் போலக் கட்டி வரலாம். நீண்ட கால அளவில் இவ்வகை முதலீடும் அதிக லாபம் தருவதாகவே
இருக்கிறது.
இவ்வகை முதலீட்டு முறைகள்
அனைத்தும் முறைபடுத்தப்பட்டவை, அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவை,
விதிமீறல்கள் நடைபெற்றால் விசாரணைக்கு உள்ளாகுபவை. இவற்றில் முதலீடு செய்வதுதான் புத்திசாலிதனமாக
இருக்கும்.
ஆனால் ஆசை யாரை விட்டது?
அதிக வட்டி ஆசை காட்டும்
மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க்) அனுமதி பெறாத அங்கீகாரமற்ற சிட் பண்டுகளும், நகைக்கடைகளின்
மாதாந்திர திட்டங்களும், உங்களுக்குப் பதிலாக பங்கு மற்றும் குறியீட்டுப் பணமுதலீட்டில்
(கிரிப்டோவில்) முதலீடு செய்து அதிக லாபம் தருவதாகச் சொல்லும் நிறுவனங்களும் மக்களை
ஈர்த்தபடியே இருக்கின்றன.
அங்கீகாரமற்ற
நிதி நிறுவன மோசடிகள்
முதலில் மத்திய வங்கியின்
அனுமதி பெறாத அங்கீகாரமற்ற சிட் பண்டுகளை எடுத்துக் கொள்வோம். நிதி திரட்டுவதற்கு சட்ட
நெறிமுறைகள், அனுமதி பெறுவதற்கான வரம்பு முறைகள் இருக்கின்றன. நிறுவனச் சட்டங்களுக்கு
உட்பட்டும் மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க்) அனுமதி பெற்றும்தான் நிதி திரட்டும்
பணிகளில் ஈடுபட முடியும். அப்படி திரட்டப்படும் நிதிகளுக்கே சட்டப்பூர்வ பாதுகாப்பும்
முதலீடு செய்த நிதியைப் பாதுகாப்பாகப் பெறுவதற்கான உத்திரவாதமும் இருக்கின்றன.
உங்களிடமிருந்து திரட்டிய
நிதியை வீட்டு மனைகளில் முதலீடு செய்து அதிக லாபம் தருவோம், ஹோட்டல்கள் கட்டி சம்பாதித்து
அதிக லாபம் தருவோம், தேக்கு மரங்களை வளர்த்து லாபம் தருவோம், பங்குகளில் முதலீடு செய்து
மாதம் இரண்டு சதவீதம் என்று வைத்துக் கொண்டாலே வருடத்துக்கு 24 சதவீதம் லாபத் தொகை
தருவோம் என்று விதவிதமாக எப்படிச் சொன்னாலும் நீங்கள் நம்புவதற்கு என்ன இருக்கிறது?
ஏன் நீங்களே அவற்றை அப்படிச்
செய்து பார்க்கலாமே? அது சாத்தியமா என்ன? அப்படியெல்லாம் அவர்கள் சொல்லும் அளவுக்கு
அதிக லாபம் தரும் எந்தத் தொழில்களும் இந்த உலகில் இல்லை. எந்த ஒரு தொழிலும் எப்போது
சில முறை அப்படி லாபம் வரலாம் என்றாலும் தொடர்ச்சியாக எல்லா ஆண்டுகளிலும் அப்படி லாபம்
தந்து விட முடியாது.
மாதாந்திர திட்ட
மோசடிகள்
அடுத்து நகைக்கடைகளின் மாதாந்திர
சேமிப்புத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். கண்ணுக்குத் தெரிகின்ற அபாயகரமான முதலீட்டுத்
திட்டங்களில் இதுவும் ஒன்று. நகைக்கடைகள் தங்களுடைய பெயரில் இருக்கும் நம்பிக்கையையும்
கைராசி என்ற விளம்பர உருவாக்கத்தையும் மையமாக வைத்து இது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன.
அஞ்சலகம் மற்றும் வங்கிகளில்
மாதாந்திரம் செலுத்தப்படும் தொகையை விட இத்திட்டங்களில் அதிக லாபம் இருப்பதாகச் சொல்லி
நகைக்கடைகள் இது போன்ற திட்டங்களில் ஆசை காட்டுகின்றன. பெயர் மேல் உள்ள நம்பிக்கையை
மட்டும் எப்போதும் நம்பாதீர்கள். அது போன்ற திட்டங்களுக்கான அரசாங்க அனுமதிகள், உரிமங்கள்
இருக்கிறதா என்று பாருங்கள்.
அவர்கள் வியாபாரிகள் என்பதை
முதலில் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரம் என்றால் முறையான ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
உங்களிடம் மாதா மாதம் பணத்தை வசூலிக்க என்னவிதமான அரசாங்கத்தால் முறைபடுத்தப்பட்ட ஒப்பந்தத்தை
அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று பாருங்கள். எதுவும் இருக்காது. குறைந்தபட்சம் ஓர்
இருபது ரூபாய் பத்திரத்தில் ஏதாவது உத்திரவாதம் தருகிறார்களா என்று பாருங்களேன்.
இன்னொன்றையும் இப்படி யோசித்துப்
பாருங்கள். நீங்கள் மாதா மாதம் பணம் செலுத்தும் நகைக்கடை திவாலாகாது என்பதற்கு என்ன
நிச்சயம் இருக்கிறது என்று சொல்லுங்கள். அதுவும் அமெரிக்க வங்கிகளே திவாலாகும் இந்தக்
கால கட்டத்தில். வங்கிகள் பண பரிவர்த்தனைகள்தானே செய்கின்றன.
பண பரிவர்த்தனை செய்கின்ற
வங்கிகளுக்கே திவால் நிலைமை என்றால் தங்க வியாபாரம் செய்ய வேண்டிய இவர்கள் தங்கத்தை
பணமாக மாற்றுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்றால் யோசித்துப் பாருங்கள். பணத்தின்
மதிப்பு வீழும், எழும். தங்கத்தின் மதிப்பு அப்படிப்பட்டதல்ல. பணத்தைவிட வலிமையானது
தங்கம்தான். அப்படிப்பட்ட த ங்கத்தை வைத்திருக்கும் இவர்கள் ஏன் தங்கத்தைப் பணமாக மாற்ற
நினைக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
நகைக்கடைகள் திவாலாவது ஒரு
பக்கம் என்றால் அதற்கு இன்னொரு மோசமான மறுபக்கமும் இருக்கிறது. திரட்டிய பணத்தைச் சுருட்டிக்
கொண்டு ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்? பணத்தை மாதா மாதம் சேமிப்பதற்கு அஞ்சலகங்களிலும்
வங்கிகளிலும் தொடர் வைப்பு (ஆர்.டி.) எனும் முறை இருக்கும் போது இவர்களை நம்பி ஏன்
நீங்கள் மாதா மாதம் பணத்தைக் கட்டி ஏமாற வேண்டும்?
அப்படியே மாதா மாதம் நீங்கள்
பணத்தைத் தங்கத்திற்காகக் கட்ட விரும்பினால் நீங்கள் ஏன் தங்கப் பத்திரங்களையோ, கோல்ட்
பீஸ் போன்ற பங்குகளையோ வாங்கிப் போடக் கூடாது? இதெல்லாம் உங்களுக்குச் சிரமமாகத் தோன்றினால்
நீங்கள் கிராம் கணக்கில் கூட தங்க நாணயங்களாக வாங்கிக் கொண்டு பிறகு உங்களுக்கு விருப்பமான
நகையை நீங்கள் வாங்கிய தங்க நாணயங்களை விற்று கூட வாங்கிக் கொள்ளலாம்.
சில நகைக்கடைகள் அவர்களின்
கடையிலேயே தங்க நாணயங்களை வாங்கி அவர்களின் கடையிலேயே நகைகளை எடுக்கும் போது எவ்வித
சேதாரம், செய்கூலி போன்ற பிக்கல் பிடுங்கல்கள் இல்லாமல் அல்லது இயன்ற அளவு குறைத்துக்
கொண்டு தங்க நாணயங்களுக்கு ஈடாக நகைகளை வழங்கவும் செய்கின்றன. இந்தப் பாதுகாப்பான வாய்ப்பை
நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?
உங்களுக்குப்
பதில் நாங்கள் எனும் மோசடிகள்
மூன்றாவதாக நீங்கள் முதலீடு
செய்தால் உங்களுக்குப் பதிலாக பங்குகளிலும் கிரிப்டோவிலும் வீட்டுமனைகளிலும் இன்னும்
ஏதேதோ பலவற்றில் ஈடுபட்டு லாபம் சம்பாதித்து தருவதாகச் சொல்லும் நிறுவனங்களை எடுத்துக்
கொள்வோம். இதற்கென அரசாங்கமே அங்கீகரிக்கப்பட்ட சட்ட முறைகளின்படி பரஸ்பர நிதி நிறுவனங்கள்
மற்றும் நிறுவனச் சட்டங்களுக்கு உட்பட்ட நிறுவனங்கள் இருக்கும் போது நீங்கள் ஏன் அங்கீகாரமற்ற
அது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து யோசிக்க வேண்டும்?
மேலும் இன்னும் சில விசயங்களும்
இவற்றில் இருக்கின்றன. பங்கோ, கிரிப்டோவோ லாபம் பார்க்க, அதில் இருப்பவர்களுக்குத்தான்
தெரியும், எப்போது எந்த விலையில் வாங்க வேண்டும், எவ்வளவு நீண்ட காலம் காத்திருக்க
வேண்டும் என்பது. ஒருவரின் அவசரத்திற்கெல்லாம் அல்லது ஒருவரின் கணக்கீட்டிற்கு எல்லாம்
லாபத்தை அள்ளிக் கொட்டி விடாது பங்குகளும் கிரிப்டோக்களும்.
இவற்றில் செய்யப்படும் முதலீடுகள்
ஏறலாம் என்பது போல இறங்கவும் செய்யலாம் மேளத்திற்கு இரண்டு பக்கமும் அடி உண்டு என்பது
போல. மதில் மேல் செல்லும் பூனையையொத்த முதலீடுகள் இவை. பூனை எந்தப் பக்கம் தாவும் என்பது
உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் நினைக்கின்ற பக்கத்திலும் தாவலாம் அதற்கு மாறான
பக்கத்திலும் தாவலாம். பங்கு மற்றும் கிரிப்டோ முதலீடுகள் ஏறவும் செய்யலாம், இறங்கவும்
செய்யலாம். இந்தப் பக்கம் பூனையைப் போலப் பாயப் போகிறது சில நேரங்களில் நீங்கள் நினைத்தபடி
நடக்கலாம், பல நேரங்களில் அதற்கு மாறாகவும் நடக்கலாம்.
பங்குச்சந்தை நிறுவனங்கள்
திவாலானால் அதில் போட்டுள்ள முதலீட்டுக்கு யாரும் எந்த விதத்தில் பொறுப்பேற்க முடியாது.
கிரிப்டோ முதலீடுகளுக்கும் நம் நாட்டுச் சட்டத்தில் இதுவரை எந்த விதமான பாதுகாப்பும்
வழங்கப்படவில்லை. இவை இரண்டையும் கருத்தில் கொள்ளுங்கள்.
அத்துடன் சந்தை அபாயங்களுக்கு
உட்பட்டுதான் அரசாங்கமே பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கான அனுமதியை அளிக்கின்றன. அத்துடன்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் திட்டத்தை விளம்பரம் செய்யும் போது இந்தச்
‘சந்தை அபாயம்’ என்ற சொல் இடம் பெறாமல் விளம்பரங்களைச் செய்யவும் முடியாது.
நீங்கள் சிக்கிக்
கொள்வதற்கு நீங்களே முடிவெடுக்கிறீர்கள்
நிலைமைகள் இப்படி இருக்க
நீங்கள் பாதுகாப்பாற்ற அதிக லாபம் தருவதாகச் சொல்லும் முதலீட்டுத் திட்டங்களை நோக்கிச்
செல்வது எந்த வகையில் அறிவுப்பூர்வமானதாக இருக்கும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்?
மேலும் நீங்கள் இன்னொன்றையும்
கருத்தில் கொள்ள வேண்டும். சேமிக்கிறீர்கள் அல்லது முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில்
ஏதேனும் குறைபாடுகள், பிரச்சனைகள் நேரிடும் போது புகார் செய்வதற்கான அமைப்புகள் இருக்கின்றனவா
என்று பார்க்க வேண்டும்தானே.
குறைபாடுகளைக்
களைவதற்கான அமைப்புகள்
உதாரணமாக வங்கிக் குறைபாடுகளை
நீங்கள் ஓம்புட்ஸ்மேன் (Ombudsman) என்ற அமைப்பில் புகார் செய்யலாம்.
பங்கு முதலீடு தொடர்பான குறைபாடுகளுக்கென
செபி (SEBI) மற்றும் ஸ்கோர்ஸ் (SCORES) போன்றவை இருக்கின்றன.
சட்டப்பூர்வமான நிறுவன முதலீடுகள்
என்றால் சட்டங்களுக்கு உட்பட்டு நீதிமன்றத்தின் மூலமாகத் தீர்வு காண வழியிருக்கிறது.
அங்கீகாரமற்ற சிட் பண்டுகள்,
நகைக்கடை மாதாந்திர சேமிப்புகள், உங்களுக்குப் பதிலாக உங்கள் முதலீட்டைப் பெருக்குவதாகச்
சொல்லும் திட்டங்களில் நீங்கள் யாரிடம் புகார் அளிக்க முடியும்?
நீங்கள் பணத்தை இழந்தால்
காவல் துறையில் புகார் அளிக்கலாம். நீதிமன்றத்தை நாடலாம். அதற்கு முன்பு அந்த நிறுவனங்கள்
அதற்குள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கும் அல்லது வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும்.
அப்போது உங்களால் என்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள்.
ஆகவே உங்கள் அவசரத்திற்காகப்
பூட்டியிருக்கும் தொடர்வண்டிக் கதவுகளைக் (லெவல் கிராஸிங்) கடக்க முயலாதீர்கள். உங்கள்
அவசர வேகத்திற்குப் பணத்தைப் பெருக்க ஆசைப்பட்டு ஏமாற்றுகாரர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
வேகமான பயணத்தை
விடவும் பாதுகாப்பான பயணம் முக்கியம்
அதிக லாபம் தருவதாகச் சொல்லும்
ஒவ்வொரு திட்டத்திலும் அதீத ஆபத்தும் இருக்கிறது. ஆபத்தைப் பொருட்படுத்தாமல் நீங்கள்
அதைக் கடக்க நினைப்பது பூட்டியிருக்கும் தொடர்வண்டி கதவுகளைப் புறக்கணித்து விட்டு
அதைக் கடக்க நினைப்பது போலத்தான். ஒருவேளை நீங்கள் தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு
இருக்கிறது. அதற்கு மாறாகவும் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் அதிலிருந்து
பாடம் கற்க நீங்கள் இந்தப் பூமியில் இருக்க மாட்டீர்கள். இந்த எச்சரிக்கை அதிக லாபம்
தருவதாகச் சொல்லும் இந்த ஏமாற்றுத் திட்டங்களுக்கும் அப்படியே பொருந்தும்.
பணத்தை இழந்து விட்டதற்காகத்
தற்கொலை செய்து கொண்டவர்கள் உங்கள் கண்ணுக்குத் தெரிந்தே நிறைய பேர் இருப்பார்கள் என்பதை
எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள். பொறுமையாகப் பணத்தைப் பெருக்கவே
நினையுங்கள். வேகமான பயணத்தை விட பாதுகாப்பான பயணம் முக்கியம் என்பதைக் கல்வெட்டைப்
போல எழுதி மனதில் வைத்துக் கொள்ளுங்கள். முதலீட்டுப் பயணத்தக்கு இந்தக் கல்வெட்டு வாசகம்
எப்போதும் உங்களுக்கு வழிகாட்டும்.
*****
No comments:
Post a Comment