முதலிழக்கும் அபாயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள…
அதிக வட்டிக்கு ஆசைபட்டால்
முதலை (Investment) மீட்பது கூட சிரமமாகி விடும். முதலைத் தூக்கி முதலை வாய்க்குள்
கொடுத்தது போலாகி விடும். இது கடன் கொடுப்பதற்கும் பொருந்தும், முதலீடு செய்வதற்கும்
பொருந்தும். ஓர் அளவுக்கு மேல் வட்டியை அதிகரிக்கும் போது கடனைக் கொடுத்தவராக இருந்தாலும்,
அதிக வட்டிக்கு ஆசைபட்டால் முதலீட்டாளராக இருந்தாலும் முதலை இழக்கும்படியான சூழ்நிலை
உண்டாகி விடும். இதனை
“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.” (குறள்,
463)
என்கிறார் திருவள்ளுவர்.
வங்கிகள் கடன் கொடுத்தவருக்குக் கருணை காட்டி வட்டிச் சலுகை வழங்குவது இதனால்தான்.
எல்லாருக்கும் அப்படி ஓர்
ஆசை இருக்கிறது. அது என்ன ஆசை என்றால், ஒரே நாளில் சம்பாதித்து பணக்காரராகி விட வேண்டும்
என்ற ஆசைதான். திரைப்படங்களில் ஓர் ஐந்து நிமிடப் பாடல் முடிவதற்குள் பணக்கரராகி விடும்
கதை நாயர்களைப் போல அதைப் பார்க்கும் மக்களும் ஒரு நாளுக்குள், ஒருவாரத்திற்குள், ஒரு
மாதத்திற்குள், ஓர் ஆண்டிற்குள் பணக்கரராகி விட வேண்டும் என்று எல்லை வகுத்துக் கொள்கிறார்கள்.
அந்தக் கால எல்லையின் வரம்புக்குள் பைத்தியக்காரர்களைப் போல உழல்கிறார்கள்.
பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச்
சேமித்துப் பணக்காரராக ஆவது என்பது மெதுவான நீண்ட கால செயல்முறையாகும். அதற்கேற்ற பொறுமை
பலருக்கு இருப்பதில்லை. சேமிக்க தொடங்கிய உடனே பணக்காரராகி விட மாட்டோமா என்ற ஏக்கம்
ஒவ்வொருவரையும் வாட்டி வதைக்கிறது. எத்தனை நாள்தான் அந்த வாட்டத்தோடு வாழ முடியும்?
வாட்டத்தைப் போக்கிக் கொள்ள
அதிக வட்டி தருவதாகச் சொல்லும் நிறுவனத்தில் கடனை வாங்கி முதலீடு செய்கிறார்கள்.
ஈமு கோழி வளர்த்தால் சில
மாதங்களில் கோடீஸ்வரர்களாகி விடலாம் என்பதை நம்பி ஈமு கோழியை வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்.
சீட்டு கட்டி சீட்டுக்கு
நான்கு பேரைச் சேர்த்து விட்டால் சுலபமாகக் கையில் பார்க்கலாம் என்று நம்பி தாமும்
சீட்டைக் கட்டி உறவுகளையும் நட்புகளையும் உள்ளே இழுத்து கடைசியில் எல்லாரும் ஏமாந்து
போகும்படியான ஒரு நிலைக்கு ஆளாகியும் ஆளாக்கியும் விடுகிறார்கள்.
பங்குச் சந்தையில் முதலீடு
செய்தால் அசங்காமல் கசங்காமல் காசு பார்த்து விடலாம் என்று தின வணிகத்தில் இறங்கி ஊக
வணிகம் (டெரிவேட்டிவ்ஸ்) வரை போய் நிலையழிந்து நிற்கிறார்கள்.
ரம்மி ஆடி நோகாமல் கொள்ளாமல்
பணத்தைச் சம்பாதித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் காசை விட்டு, விட்டக் காசைப்
பிடிக்கிறேனா இல்லையா பார் என்று மீண்டும் மீண்டும் விளையாடி கடைசியில் இழந்து விட்ட
பணத்தை இனி எக்காலத்திலும் மீட்க முடியாது என நினைத்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
இது ஒரு வகை என்றால் விவரம்
அறியாமல் சேமித்த காசை, நம்பிக்கையோடு சொல்கிறார்களே என்று நம்பி, மாதாமாதம் கட்டி
ஏமாந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.
விவரம் அறியாமல் இழந்தாலும்,
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இழந்தாலும் இழந்தது இழந்ததுதான். சென்றதினி மீளாது என்று
அமைதி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கறந்த பால் காம்பு புகாததைப் போலத்தான் இப்படி
விட்ட பணத்தை மீட்க முயற்சிப்பது.
பிதுக்கித் தள்ளிய பேஸ்ட்டை
உள்ளே நுழைப்பது போல இந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை ரொம்ப சொற்பம்.
வயதுகளை ஆண்டுகளைத் தொலைத்து மன அமைதியைத் தொலைத்து காவல் துறைக்கும், நீதித் துறைக்கும்,
நிதி நிர்வாக கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் மனு மேல் மனு போட்டு பணத்தை வாங்குவது
என்பது உயிரை விட்டு விட்டு உயிரை மீட்பது போன்றது. எல்லாருக்கும் சுலபமாக மறுஜென்மம்
கிடைத்துவிடுமா என்ன? அப்படித்தான் பணத்தைத் கட்டி இழந்து விட்டு அதை மீட்பதும்.
சாதாரண மனிதர்களால் பண மோசடிகளைச்
சுலபமாகச் செய்து விட முடியாது. அவர்கள் கௌரவம் பார்ப்பார்கள். பிறத்தியார் வயிறு எரிந்தால்
நிம்மதியாக வாழ முடியாது என்று யோசிப்பார்கள். ஒருத்தரை ஏமாற்றி இன்னொருவர் வாழ்ந்து
விட முடியாது என்ற மனோதர்மத்தைக் கருதுவார்கள். போகிற போது எதை எடுத்துச் செல்ல முடியும்
என்று தத்துவம் பேசுவார்கள்.
பண மோசடியில் துணிந்து இறங்குபவர்கள்
மேலே சொன்னதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்களுக்குக் கௌரவம், வயிற்றெரிச்சல்,
மனோதர்மம், நிலையாமை இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் அதைக் கடந்து, கொன்றால் பாவம்
தின்றால் போய் விடும் என்கிற பதத்தில் யோசிப்பவர்கள் அவர்கள்.
அத்துடன் அவர்களுக்கு அதிகார
மட்டத்திலும், ஆளும் வர்க்கத்திலும் அசைக்க முடியாத தொடர்புகள் இருக்கும். பணமோசடி
வெளியே தெரிந்து மாட்டிக் கொண்டால் எப்படி சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கழுவுகின்ற
நீரில் நழுவுகின்ற மீனாய் வெளியே வருவது என்ற லாவகங்கள் எல்லாம் அத்துபடியாக இருக்கும்.
அபாயத்தில் இருக்கும் போது எந்த அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்க வேண்டும், எங்கே
எப்படி அபயக்குரல் எழுப்ப வேண்டும் என்பதில் எல்லாம் அவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.
காவல் துறையாலும் கண்டிக்க
முடியாத, நீதித்துறையாலும் தண்டிக்க முடியாத அளவுக்கு சமத்துச் சாமர்த்தியங்களைக் கையாளுபவர்களைச்
சாமானியர்கள் என்ன செய்து விட முடியும்? அது போன்றவர்களைச் சமானியார்கள் எதுவும் செய்து
விட முடியாது என்றாலும் சாமானியர்களால் செய்ய முடிகின்ற ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால்
சாமானியர்கள் அது போன்றவர்களிடம் போய் சிக்காமல் இருப்பதுதான்.
பணமோசடிக்காரர்களைக் கட்டுப்படுத்தும்
மட்டுப்படுத்தும் எதுவும் சாமானியர்களிடம் இல்லாத போது தன்னுடைய ஆசைகள், எதிர்பார்ப்புகள்,
கனவுகள் போன்றவற்றை நியாயமாகவும் நேர்மையாகவும் கட்டுபடுத்தி மட்டுப்படுத்தி சேமிப்பையும்
முதலீட்டையும் செய்யக் கூடிய பக்குவமும் நிதானமும் சாமானியர்களின் கைகளில்தான் இருக்கின்றன.
சாமானியர்களுக்கு எதில் முதலீடு
செய்வது என்று தெரியாவிட்டால் அவர்கள் அஞ்சலகத்தையும் தங்கத்தையும் மட்டும் நம்பிச்
செயல்படலாம். இதனால் முதலீட்டுப் பெருக்கத்தின் சதவீத அளவு வேண்டுமானால் குறையலாம்,
முதலீட்டிற்கான பாதுகாப்பு குறையாது. ஏமாற்றத்தையோ இழப்பையோ எதிர்கொள்ள வேண்டிய அவசியமும்
இருக்காது.
நம் முன்னோர்கள் முதலீட்டுக்கான
இரண்டு சுலபமான வழிகளைச் சொல்கிறார்கள். அதில் ஒன்று மண்ணில் போடுவது, மற்றொன்று பொன்னில்
போடுவது. அதாவது நிலத்தை வாங்கச் சொல்கிறார்கள் அல்லது தங்கத்தை வாங்கச் சொல்கிறார்கள்.
மண்ணில் போட்டதெல்லாம் போன் என்றும் சொல்வார்கள். நம்முடைய திருமண உறவுகளின் கொடுக்கல்
வாங்கல் அனைத்தும் மண்ணும் பொன்னுமாக இருப்பதற்கு அவற்றின் நிலையான பாதுகாப்புதான்
முதன்மையான காரணமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த முன்னோர்களின் வகுத்த முறையிலும்
புதிதாக யோசிக்காமல், மாற்றமில்லாமல் அதே மாதிரிப் போய் பார்க்கலாம்.
நீங்கள் இப்படியும் கொஞ்சம்
சுலபமாக யோசித்து நல்ல முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனைகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்
கொள்ளலாம். எதைப் பெற்றுக் கொண்டாலும் அதிக முதிர்வு தொகைக்கு ஆசைப்பட்டு முதலை இழந்து
விடும் காரியத்தை மட்டும் செய்து விடாதீர்கள். முதலை வாயில் போனது திரும்புவதில்லை
என்பார்கள். முதல் என்று சொல்லப்படுகிற முதலை இழந்தாலும் அப்படித்தான். அது முதலையின்
வாயில் போனது போலத்தான்.
எவ்வகை முதிர்வுத்தொகை என்றாலும்
பாதுகாப்பு, நிச்சயம், உத்தரவாதம் ஆகியவற்றை ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முதலீடுகளைச்
செய்யுங்கள். அது முடியாத போது தங்கமாகவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பண வீக்கத்தைத்
தாண்டி வளரும் திராணி தங்கத்திற்கும் இருக்கிறது. உங்கள் கையில் இருக்கும் பணமே தங்கத்தின்
மாற்றுதான் எனும் போது தங்கத்தையே நீங்கள் தங்கமான முதலீடாகவும் கொள்ளலாம். பொன்னை
விரும்பும் பூமியில் நீங்களும் பொன்னையே விரும்பி விட்டுப் போங்களேன்.
*****
No comments:
Post a Comment