8 Sept 2023

உறுதிமொழிகளை உறுதி குழையாமல் உறுதிப்படுத்த…

உறுதிமொழிகளை உறுதி குழையாமல் உறுதிப்படுத்த…

நீங்கள் எந்த உறுதியை எடுத்துக் கொண்டாலும் அது ஒரு மாதத்தில் தோல்வியடைவதற்கு 25 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த ஆறு மாதத்தில் தோல்வியடைவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஓராண்டைக் கடந்து விட்டால் நீங்கள் அதில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

உதாரணமாகத் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது என்ற உறுதிமொழியை நீங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்குள் அந்த உறுதிமொழியைக் கைவிடுவதற்கு 25 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஆறு மாதத்திற்குள் அந்த உறுதிமொழியைக் கைவிடுவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஓராண்டிற்குள் நீங்கள் அந்த உறுதிமொழியைக் கைவிடுவதற்கு 100 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன.

இதே சாத்தியக்கூறுகள் உங்கள் அனைத்து உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதிலும் அடங்கியிருக்கின்றன. புகைப்பிடிப்பதைக் கைவிடுவது, குடிப்பழக்கத்தைக் கைவிடுவது, மாதந்தோறும் வருமானத்தில் 30 சதவீதம் சேமிப்பது, உங்கள் ஆடைகளை நீங்களே துவைத்து அணிவது, மிதிவண்டியைப் பயன்படுத்துவது என்று எத்தகைய உறுதிமொழிக்கும் மேற்படி சாத்தியக்கூறுகள் துல்லியம் பிசகாமல் பொருந்தும்.

உறுதிமொழியைக் கைவிடாமல் தொடர்வதில் உள்ள சூட்சமங்கள் என்னவென்று தெரிந்து கொண்டால் உறுதிமொழியைக் காக்கலாம்.

உறுதிமொழிகள் ஏன் தோல்வியைத் தழுவுகின்றன? உறுதிமொழிகள் நம்முடைய பழக்கங்களாக மாறும் வரை வைராக்கியத்தோடும் விடாப்பிடியான மனநிலையோடும் அவற்றைக் காத்து தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். அவை உங்களது பழக்கங்களாகி விட்டால் நீங்கள் நினைத்தாலும் உங்களால் உங்களது உறுதிமொழியைக் கைவிட முடியாது. இதற்குச் சில வழிமுறைகளும் இருக்கின்றன.

உங்கள் உறுதிமொழிகள் உங்கள் பழக்கங்களாக மாற அதே மாதிரியான பழக்கமுள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பதை விடுவது என்று முடிவெடுத்து விட்டால் புகைபிடிக்கும் நண்பர்களுடன் இருக்கும் தொடர்பைத் துணிந்து துண்டித்து விட்டு, புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் மட்டும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓர் உறுதிமொழியில் வெற்றி பெற அதே போன்ற உறுதிமொழியைக் கடைபிடிக்கும் கூட்டத்தினருடன் சேர்ந்து கொள்வது நல்ல வழியாகும். திருவிழாவுக்குச் செல்ல நீங்கள் வழி தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. திருவிழாவுக்குச் செல்லும் கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டாலே போதுமானது.

உறுதிமொழிகளைக் கடைபிடிக்கும் போது சில நாட்கள் கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். அதற்காக மனம் தளர்ந்திட வேண்டியதில்லை. ஆனால் அந்த இடத்தில் மனம் தளரவே செய்யும். மீண்டும் மீண்டும் உறுதிமொழியைச் செயலில் கொண்டு வர பாருங்கள்.

நடைபயிற்சி செய்வது என்ற உறுதிமொழிக்கேற்ப நீங்கள் சில நாட்கள் நடைபயிற்சி செய்ய முடியாமல் போகலாம். ஆனால் மாற்று வழிகளைக் கண்டுபிடியுங்கள். நடந்து சென்று நான்கு நிறுத்தங்களுக்கு அப்பால் பேருந்து ஏறுங்கள். அலுவலகத்தை அடையும் முன் நான்கு நிறுத்தங்களுக்கு முன்பாக இறங்கி நடந்து செல்லுங்கள். இப்படி உறுதிமொழியை விடாமல் கடைபிடிப்பதற்கான மாற்று வழிகளையும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். மாற்று வழிகள் மூலமாக உறுதிமொழிகளை விடாமல் கடைபிடிக்கலாம்.

ஓர் உறுதிமொழியை நீங்கள் எடுத்து விட்டால் உங்கள் உறுதியைக் குழைப்பதற்கான சூழ்நிலைகளும் சம்பவங்களுமே அதிகம் நடப்பதாக உங்களுக்குத் தோன்றும். அவற்றிற்கு எதிராக ஒரு போதும் உங்களை வெளிக்காட்டாதீர்கள். உங்கள் கவனம் முழுவதும் உறுதியைக் கடைபிடிப்பதில் மட்டும் இருக்கட்டும். உதாரணமாக உங்கள் உறுதிமொழிக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதாக ஒருபோதும் இருக்க வேண்டாம்.

உறுதிமொழியைக் கடைபிடிப்பது என்பது ஒரு விமானத்தைப் பறக்க வைப்பது போன்றதுதான். பறக்க ஆரம்பிக்கும் வரை சிரமங்கள் இருக்கலாம். பறக்க ஆரம்பித்து விட்டால் இறக்க மனம் வராது, தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும்.

விமானம் பறக்க ஆரம்பித்து விட்டது என்பதற்காக விமானத்தின் என்ஜினை நிறுத்தி விட மாட்டார்கள் அல்லவா. அதே போல பழக்கமாகி விட்டது என்பதற்காக உங்கள் உறுதிமொழியில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உறுதிமொழியை உறுதியோடு எப்போதும் நினைத்தும் கொள்ளுங்கள், கடைபிடிப்பதில் உறுதியாக இருங்கள்.

பழக்கம் என்பது பறப்பது போல. பறந்து கொண்டிருக்க உறுதியில் எப்போதும் இடைவிடாத நிறுத்தமில்லாத வைராக்கியம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் உறுதிமொழியை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த வகையில் உங்கள் உறுதிமொழியைக் காப்பது ஒரு விரதம் போன்றதுதான்.

உங்கள் உறுதிமொழியைக் காக்க நான் மேலே சொன்ன வழிமுறைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

ü உறுதிமொழியை உங்களது வைராக்கியமாக அமைத்துக் கொள்ளுதல்,

ü உறுதிமொழியைப் பழக்கமாக்கிக் கொள்ள முயற்சித்தல்,

ü அதே போன்ற பழக்கமுள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல்,

ü உறுதிமொழியைக் கடைபிடிக்க முடியாத சூழ்நிலைகளிலும் மாற்று வழிகள் மூலமலாகக் கடைபிடிக்க முயலுதல்,

ü உறுதிமொழியைக் காப்பதை விரதமாகக் கொள்ளுதல்

மேற்கண்ட வழிமுறைகள் மூலமாக உங்கள் உறுதிமொழியை உறுதி குழையாமல் உறுதியாக உங்களால் கடைபிடிக்க முடியும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...