7 Sept 2023

கடனுக்கு குட்பை சொல்வது எப்படி?

கடனுக்கு குட்பை சொல்வது எப்படி?

கடன் எதற்கு?

‘கடன் வாங்காத வறியவர்கள்தான் செல்வந்தர்கள்’ என்கிறார் ஔவையார்.

கடன் என்பது கையில் இல்லாத காசு.

கையில் இல்லாத காசை இன்னொருவரிடமிருந்து வாங்கும் போது நமக்கு நாமே ஒரு சுமையைத் தோளில் ஏற்றிக் கொள்கிறோம். விக்கிரமாதித்யன் தோளில் தொங்குகின்ற வேதாளம் போன்ற அது வட்டியைக் கட்டிக் கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நம்மைக் கொண்டு சென்று கொண்டிருக்கும்.

நாம் சம்பாதிக்காத பணத்தை சம்பாத்தியத்தின் மூலம் பெற்று வருங்காலத்தில் சரி செய்து விட முடியும் என்ற நம்பிக்கையில்தான் கடன்கள் வாங்கப்படுகின்றன. ஒருவேளை வருங்காலத்தில் சம்பாத்தியம் கடனுக்கு ஈடாக ஆகவில்லை என்றால் வாங்காத கடன் தொகையை அதாவது வட்டியை அதற்காகச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டிருக்கும்.

இன்று மாதாந்திர தவணைத் தொகை எனும் இ.எம்.ஐ. கட்டாதோரை விரல் விட்டு எண்ணி விடலாம். டாஸ்மாக் குடியர்களாலும் இ.எம்.ஐ. வெறியர்களாலும் நிரம்பிக் கொண்டிருக்கின்றது நமது சமூகம்.

நிச்சய மாத வருமானத்தை நம்பி கடனை வாங்குவோர் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டு போகின்றனர். நிச்சய மாத வருமானத்தில் ஏதாவது பிரச்சனை வருமானால் கடன் தன்னுடைய கோர முகத்தை வட்டி எனும் வடிவில் காட்டத் தொடங்கி விடும். ஆகவேத்தான் கடனின்று விலகியே நில்லுங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

அரசாங்கப் பணிகளைத் தவிர பெரும்பாலான பணிகள் வேலையிழப்பு அபாயத்துக்கு உட்பட்டதாக உள்ளன. தொழிற்சாலைகள் மூடப்படும் போது ஒரு தொழிலாளி வேலையிழக்க வாய்ப்பு உள்ளது. நிறுவனங்களின் நிதி நெருக்கடி அதிகரிக்கும் போது பணியாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. கடைகள் மூடப்படும் போது ஊழியர்கள் வெலையை இழக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசாங்கங்களின் மற்றும் நிறுவனங்களின் அவசர கால நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி மாத ஊதியத்தைக் குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இருப்போர் மாத ஊதியத்தை நம்பி கடனை வாங்கியிருந்தால் அவர்களின் மாதாந்திரத் தவணைத் தொகை கட்டுவது பாதிக்கப்பட்டு அவர்களின் கடனைக் கட்டும் காலம் நீளலாம் அல்லது கடனைக் கட்ட முடியாத நிலையும் ஏற்படலாம்.

கடன்படாமல் எப்படி பொருளை வாங்குவது, வீட்டை வாங்குவது, ஒரு தேவையைச் செய்வது என்றால் அதற்கான தொகையை முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கி அதிலிருந்து வாங்குவதும் செய்வதும்தான் இதிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறை. இதனால் கடன் பிரச்சனை உங்களைச் சூழாது, வட்டி எனும் சிக்கல் உங்களை ஆக்கிரமிக்காது.

கடனுக்குள் சிக்காமல் இருப்பதற்கு முதலில் தேவையானது அவசரம் காட்டாமல் இருக்கும் பண்புதான். மற்றவர்கள் ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வாங்கி விடுவது உங்களையும் அவசர அவசரமாக அந்தப் பொருளை வாங்கத் தூண்டலாம். உங்கள் நண்பர் ஒரு வீட்டைக் கட்டி விடுவது உங்களையும் விரைவாக ஒரு வீட்டைக் கட்டி விடத் தூண்டலாம். “அட இன்னுமா வீடு கட்டாமல் இருக்கிறீர்கள்?” என்று ஒருவர் சாதாரணமாக உங்களிடம் பேசுவது உங்களை அவசரமாக உசுப்பி விடலாம். இந்த அவசரத்திற்கு உங்களைப் பலி கொடுத்தால் உங்களை நீங்களே நெருக்கடி எனும் புதைகுழிக்குள் தள்ளி விட்டுக் கொள்கிறீர்கள். கடன் வழங்குவோர் சுகபோகமாக வாழவும் நீங்கள் சோகலோகமாக வாழவும் வழியேற்படுத்தி விடுகிறீர்கள்.

எந்தப் பொருளையும் வீடு உட்பட வாங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள். அந்தப் பொருளை வாங்க அல்லது வீட்டைக் கட்ட எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என்பதைத் திட்டமிடுங்கள். விலையைப் பல இடங்களில் விசாரியுங்கள். பிறகு அந்தத் தொகையைக் கொஞ்சம் கொஞ்சாகச் சேமிக்கத் தொடங்குங்கள். அதாவது மாதாந்திரத் தவணைத் தொகைச் செலுத்துவதைப் போல நினைத்துக் கொண்டு தொடர்வைப்பில் (ஆர்.டி.) சேமியுங்கள்.

பொருளுக்கான தொகை சேர்ந்ததும் அந்தப் பொருளைப் பேரம் பேசி வாங்குங்கள். மொத்தத் தொகையும் உங்கள் கையில் இருப்பதால் இந்தக் கடையில் பேரம் படியாவிட்டால் இன்னொரு கடையில் பேரத்தைத் துவக்குங்கள். அப்பேரத்தில் பத்து ரூபாய் மிச்சமானாலும் அது நீங்கள் சம்பாதித்ததற்குச் சமம்.

கையில் உரிய தொகை சேராமல் எந்தப் பொருளாதார நடவடிக்கையையும் தொடங்க மாட்டேன் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் நீங்கள் கடன்பட வாய்ப்பே இல்லை. கையில் உரிய தொகை இல்லாத நிலையில் ஒரு பொருளை வாங்க நினைக்கும் போதுதான் அல்லது ஒரு தேவையைச் செய்ய நினைக்கும் போதுதான் கடன்பட நேரிடுகிறது.

கடனை நெருங்காமல் இருப்பதுதான் மனஅமைதிக்கான வழிமுறையாகும். நீங்கள் எவ்வளவு பணத்தை ஈட்டினாலும் அது மன அமைதிக்கு ஒருபோதும் ஈடாகாது என்பதால் மன அமைதியைத் தரும் கடனின்மையை விரும்புங்கள்.

கடன்கள் சில நேரங்களில் உயிரைப் பறித்துக் கொள்ளும் அளவுக்கு தீவிர உணர்வுகளைத் தூண்ட வல்லது என்பதால் கடன் வாங்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் உங்கள் உயிருக்கும் உங்கள் குடும்பத்தின் உயிருக்கும் மேம்பட்ட பாதுகாப்பை அளிக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

கடனுக்கான வட்டி ஒருபோதும் தூங்குவதில்லை என்பார்கள். அது பெருகிக் கொண்டே இருக்கும். தூங்காத வட்டி உங்களையும் தூங்க விடாது. நீங்கள் நிம்மதியாக தூங்க கடனில்லாமல் இருந்தால் உங்களது தூக்க மாத்திரை செலவும் இல்லாமல் போகிறது.

நீங்கள் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். அதனால் எந்தப் பிரச்சனையோ தொந்தரவோ ஏற்படப் போவதில்லை. கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்தால் அதனால் எல்லாவிதமான பிரச்சனைகளும் தொந்தரவுகளும் ஏற்படப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கடனின்று இருப்பதற்கே முயற்சி செய்யுங்கள். அதற்குப் பணம் கையில் சேர்ந்தவுடன்தான் பொருளை வாங்குவது, ஒரு தேவையைச் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...